Wednesday, April 15, 2015

எல்லாம் எண்ணத்தின் உருவாக்கமே!

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage

நேர்மறை எண்ணம் எது? அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதே போல எதிர்மறை எண்ணம் வருகிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

மிக எளிய வழி ஒன்று உள்ளது. எண்ணத்தைக் கண்காணிப்பதைவிட உணர்ச்சியைக் கண்காணிப்பது சுலபம். நேர்மறை உணர்வுகள் நேர்மறை எண்ணங்களின் விளைவு. எதிர்மறை உணர்வுகள் எதிர்மறை எண்ணங்களின் விளைவு.

பதற்றமும் உற்சாகமும்

மேடைப் பேச்சுக்குத் தயார் செய்கிறார் ஓர் இளைஞர். அவர் மனம் படபடப்பாக இருக்கிறது. “என்னால் மேடையில் பேச முடியுமா? சொதப்பினா கேவலமாயிடும்” என்ற எண்ணம் பின்னணியில் படபடப்பை இயக்குகிறது.

அதே மேடைப் பேச்சுக்கு இன்னோர் இளைஞரும் தயார் செய்கிறார். அவர் மனம் உற்சாகமாக இருக்கிறது. “கடைசியில் அந்த ஜோக்கைச் சொல்லி ஒரு பெரிய அப்ளாஸ் வாங்கணும்” என்று எண்ணுகிறார். அந்த எண்ணம் அவருக்கு உற்சாகம் தருகிறது.

“ஏற்கெனவே ஒரு தோல்வியை அடைந்திருந்தால் எதிர்மறை எண்ணம் தானே வரும்? நிறைய ஜெயித்தால் நேர்மறை எண்ணம் தானாக வரும்” என்று நீங்கள் வாதிடலாம். அப்படியானால் எண்ணங்களும் உணர்வுகளும் நம் செயல்களின் விளைவுகளா?

இது பாதி நிஜம்.

எண்ணம் - உணர்வு - செயல்

எண்ணம் - உணர்வு - செயல் மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கக் கூடியவை. “என்னால் முடியாது” என்ற எண்ணம் பதற்றம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. பதற்றம் என்ற உணர்வு வாய் குழறுதல் என்ற செயலை நிகழ்த்துகிறது.

அதே போல வாய் குழறும் போது பதற்றம் வரும். பதற்றம் வந்தால் ‘நம்மால் முடியாது’ என்ற எண்ணம் வருகிறது.இதே போல நேர்மறையாகவும் நடக்கலாம். “என்னால் முடியும்” என்ற எண்ணம் நிதானம் என்ற உணர்வைக் கொடுக்கிறது. நிதானம் கணீரென்ற குரலில் பேச வைக்கும்.

அதே போலக் கணீரென்று பேசும் போது நிதானம் வரும். நிதானம் நம்மால் முடியும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். இந்த எண்ணம் - உணர்வு - செயல் என ஒரு வளையம் போலச் சுற்றிச் சுற்றி வருவதுதான் நம் வாழ்க்கையில் அனைத்தையும் நிகழ்த்துகிறது.

உங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் இந்த மூன்று விஷயங்களையும் அலசுங்கள். எது அதிகம் பாதித்தது என்று யோசியுங்கள். பெரும்பாலும் எண்ணம்தான் பிரதான காரணமாக இருக்கும்.

எண்ணத்தின் உருவாக்கமே

உலகில் உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் முதலில் யாரோ ஒருவர் தன் உள்ளத்தில் உருவாக்கியதே. நாடுகள், எல்லைகள், கட்சிகள், கட்டிடங்கள், கொள்கைகள், பதவிகள், சாதிகள், குற்றங்கள் என அனைத்தும் யார் எண்ணத்திலோ தோன்றியவை தான்.

நம் செயல்கள் அனைத்துக்கும் நம் எண்ணங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொள்வதில் நம்மில் பலருக்குச் சிக்கல் இருக்கிறது. நம் முடிவுகளும் செயல்களும் தானே வாழ்க்கை? அப்படியானால் நம் வாழ்க்கையைப் பெரிதும் நிர்ணயிப்பது நம் எண்ணங்கள் தானே?

“என் வாழ்க்கை இப்படி இருக்க என் எண்ணங்கள் தான் காரணமா?” என்று நம்ப முடியாமல் கேட்பவர்களுக்கு என் பதில்: ஆம்.

எந்த மனநிலை?

எண்ணம் போலத் தான் எல்லாம் நடக்கும் என்று பெரியவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி என்றால் தோல்வி அடைபவர்கள் தோல்வி வேண்டும் என்றா எண்ணுகிறார்கள்? அவர்கள் தோல்வி வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆனால் தோற்கக்கூடாது என்ற எண்ணத்தில் தோல்வியின் விளைவுகள் பற்றி அதிகம் யோசித்திருப்பார்கள். வெற்றி பற்றி யோசிப்பதை விடத் தோல்வி அடையக்கூடாது என்று அதிகம் யோசித்திருப்பார்கள். நம் மனம் எந்த மன நிலையில் இருக்கிறதோ அதற்கேற்ற நிகழ்வுகள்தான் நம்மைத் தொடரும்.

அப்பாவும் மகனும்

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். அப்பாவுக்குத் தன் மகனின் திறமை மேல் நம்பிக்கை இல்லை. பொறுப்பில்லாதவன் என்ற எண்ணம். நண்பரிடம் குறைபடுகிறார். “ஒரு வேலையைக் கூடச் சரியா செய்ய மாட்டான்!” கடைக்குப் போகும் வேலை வருகிறது. “நீங்க வேணா பாருங்க, எப்படி சொதப்புவான்னு” என்று மகனின் முன்பாகவே சொல்லி நூறு ரூபாய் கொடுத்துச் சில பொருட்கள் வாங்கி வரச்சொல்கிறார்.

அப்பாவின் எண்ணமும் மனப்பான்மையும் மகனின் தன்னம் பிக்கையைக் குறைக்கிறது. பயம் வருகிறது. சொதப்பக்கூடாது என்ற எண்ணம் வலுவடைகிறது. எரிச்சலும் வருகிறது. பயந்தது போலவே மீதம் தரப்பட்ட சில்லறையில் ஒரு ரூபாயைக் குறைத்து வாங்கி வருகிறான். எண்ணிப்பார்த்த அப்பா தன் நண்பரிடம், “ நான் சொன்னேன்ல சொதப்புவான்னு. சரியாத்தானே சொன்னேன். பாருங்க ஒரு சில்லறையைக்கூட சரியா எண்ணி வாங்க முடியலை! இவன் எல்லாம் என்ன பண்ணப் போறானோ?”

இப்பொழுது அப்பாவுக்கு இருக்கிற தன் மகன் பற்றிய எண்ணம் சான்றோடு ஊர்ஜிதப்படுகிறது. மகனும் அதை மெல்ல நம்ப ஆரம்பிக்கிறான். “சரி தான். நான் மற்றவர்கள் போலச் சாமர்த்தியம் குறைவு தான்!”

பெரும் பிரச்சினை

முன்கூட்டியே தீர்மானிக்கும் எண்ணங்கள் நாம் நம்பும் விளைவுகளைத் தந்து அந்த எண்ணங்களை வலுப்படுத்தும். காலப்போக்கில் அந்த எண்ணங்கள் அனுபவத்தால் வந்தால் அபிப்பிராயங் களாய் மனம் பதிவு செய்து கொள்ளும். இது தான் மனம் செய்யும் தந்திரம்.

நம் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் இது தான் நடக்கிறது. ஆங்கிலத்தில் Self Fulfilling Prophecy என்று ஒன்று உண்டு. அதை விரிவாக விவாதிப்பதற்குள் உங்கள் வாழ்க்கையின் பெரும் பிரச்சினை எது என்று யோசியுங்கள் . அது பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். அவற்றில் ஏதாவது pattern (முறை) தெரிகிறதா என்று பாருங்கள்.

உங்கள் வாழ்வைத் திருப்பிப் போடும் விசையில் நீங்கள் கை வைத்து விட்டீர்கள்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

எல்லோருக்கும் நண்பராக முடியுமா?

Return to frontpage

ஷங்கர்பாபு


நல்ல டைப் என்று சொல்லத்தக்க ஒருவரிடம் கொஞ்ச காலம் வேலை செய்தேன். அதிர்ந்து பேச மாட்டார். கடிந்து பேச மாட்டார். மதிப்புக் குறைவாகப் பேச மாட்டார். பேச மாட்டார் என்றே சொல்லக்கூடாது. அது அவருக்கு தெரியவே தெரியாது. 24 மணி நேர ஏஸி மனிதர்.

அடுத்தவரைப் புண்படுத்துவதைத் தவமாகப் பயின்றவர்கள்தான் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களால் நிறையப் பேருக்கு வார்த்தைக் காயங்கள் கிடைக்கின்றன. அதனால்தான் வார்த்தை ஒத்தடங்கள் தருகிற மேலே சொன்ன நபரைப் போன்றவர்களை மக்கள் விரும்புகிறார்கள்.

வசையே மேல்

அவர் எல்லோருக்கும் நண்பர்.அவரது உலகில் எங்கெங்கு காணினும் நண்பர்களடா. ஆனால் இத்தகையவர்கள் உண்மையிலேயே நல்ல டைப்தானா? அவர்களது இன்சொற்கள் நமக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும்? இப்படித் தேன் தடவிய வார்த்தைகளை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள முடியுமா? தலைவா, பாஸ், ஜீ, தோழரே, மேடம், சார், அண்ணாச்சி போன்ற வார்த்தைகளில் தவறு இல்லை. ஆனால் அவை எல்லோரிடமும் சொல்லப்படுமானால் அவை பெரும்பாலும் பாசாங்கு வார்த்தைகளாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அவை ஆயத்த ஆடைகள்போல. உங்களுக்கானவை அல்ல.

சம்பிரதாயமான, உண்மையான அக்கறையில்லாமல் சொல்லப்படுகிற இனிமையான சொற்களைவிட உங்களுக்காகவே தயாரிக்கப்பட்ட வசைச் சொற்களான ‘கோமாளி, முட்டாளே’வில் நேர்மை இருக்கிறது அல்லவா?

எப்போதும் இன்சொற்களைப் பேசுவது நல்ல குணம்தானா? அடுத்தவரை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே பேசப்படும் வார்த்தைகள் ஆபத்தானவை அல்லவா? அவற்றைப் பேசுபவரும் ஆபத்தானவர் என்று சொல்லலாம் அல்லவா?.

எந்த முகம்?

ஆனால் துரதிருஷ்டம், அத்தகையோரின் வார்த்தை மஸாஜ்களைத்தான் பலரும் விரும்புகிறார்கள். அவர்கள் எல்லோரும் வில்லன்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்களில் பலரது சுபாவம் அவர்களது சொற்களைப் போலவே இருந்துவிடுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காரணம், எல்லா நேரங்களிலும் இன்முகம் காட்டி இன்சொல் பேசுவது இயற்கைக்கு முரணானது.

எதற்கு வம்பு? அவரை ஏன் கஷ்டப்படுத்தணும்? நம்முடைய நல்ல பெயர் போய்விடுமோ என்கிற தற்காப்பு பலரது இன்சொல்லின் அடிப்படையாக இருக்கக்கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஒருவர் எல்லோரையும் எப்படித் திருப்தி செய்ய முடியும்? கத்தியின் நண்பர்கள் கோழியின் கழுத்துக்கும் எப்படி நண்பராக முடியும்? எல்லோருக்கும் நண்பராய் இருப்பவருக்குச் சொந்த முகம் என்ற ஒன்று இருக்குமா? அதை யாராவது பார்த்திருக்கிறார்களா?

விலாங்கு மீன்கள்

அப்படியானால் ‘உலகையே உறவின’ராகத் தழுவும் கணியன் பூங்குன்றனார் மனதுக்காரர்கள் யாரும் இல்லையா? ‘எல்லோரும் இன்புற்றிருக்க’ எனப் பராபரத்தை இறைஞ்சும் ஆன்மிகர்கள்’ இல்லையா? சக மனிதன் சுரண்டப்படுவதை சகிக்காத ‘நீயும் என் தோழனே’ என்கிற பேரன்புக்காரர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர்?

தனக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இன்சொல் பொழிந்தவாறு நிறைய விலாங்கு மீன்கள்தான் நழுவிக்கொண்டிருக்கின்றன.

மனச்சாட்சியின் குரல்?

எனது நண்பர், அ.தி.மு.க.வினரிடம் “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. அடுத்தும் நீங்கதான்” என்பார். தி.மு.க.காரரிடம், “ஆட்சியா நடத்துறாங்க இவங்க” என்பார். பிரதமர் மோடியின் வேட்டி அணிந்து பாஜக பிரச்சாரம் செய்வார். பா.ம.க., த.மா.க., கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., தே.மு.தி.க. என எல்லோரையும் ஒரு ரவுண்டு திருப்தி செய்வார். கடைசியாக ஆம்ஆத்மிக்கும் “ஒரு வாய்ப்பு இருக்கு” என்பார்.

நாளை யார் வந்தாலும் “நான் அப்பவே சொன்னேனே?” என்பார். இவரிடம் வெளிப்பட்ட பல குரல்களில் எது மனச்சாட்சியின் குரல்?

எனக்கு மட்டும் ஏன்?

இத்தகைய இன்சொல் வேந்தர்கள் தங்கள் நல்லவன் இமேஜைத் தக்க வைக்க எதையும் செய்வார்கள். அதற்கு ஆபத்து வரும்போது அவர்களை நம்பி இருப்பவர்களில் உள்ளதிலேயே பலவீனமானவரைப் பலிபீடம் ஏற்றுவார்கள்.எம்.ஜி.ஆர். படத்தில் வருவதுபோலத்தான் வில்லன்கள் இருப்பார்கள் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என உணர்வதற்குள் தலை இழந்தவர்கள்தான் அதிகம்.

அப்போதுதான் எ.ம.ஏ.இ. ( எனக்கு மட்டும் ஏன் இப்படி ) நடக்குது ? என்று நாம் புலம்புவோம். நண்பர்களை நம்புங்கள். எல்லோருக்கும் நண்பர்களை நம்புவதைப் பற்றி நன்றாக யோசியுங்கள்.

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டம்



ஏழை மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கும் தமிழக அரசின் சிறந்த திட்டத்துக்கு பல கல்லூரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக ஏழை மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அரிய வாய்ப்பு மறுக்கப்படுவதாக பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வரும் 2015-16 கல்வியாண்டுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி முடிவடைந்துவிட்ட போதும், 40-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகள் இன்னும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மிகுந்த வசதி படைத்த மாணவர்கள் மேற்படிப்புகளை, வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதைப்போல, வசதி இல்லாத ஏழை மாணவ, மாணவிகள் வெளிநாடு சென்று படித்து வரும் வகையில் சிறந்த திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

அதாவது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் ஒரு பருவம் (6 மாதம்) பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழகங்களில் முழுவதும் அரசு செலவில் படிக்க வைக்கும் திட்டம்தான் இது. ஆண்டுக்கு 25 மாணவர்கள் அனுப்பப்படுகின்றனர். இவர்களுடன் 5 பேராசிரியர்கள், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்படுகின்றனர்.

தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பொதுவாக மார்ச் மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்படும்.

கல்லூரிகள், படிப்பில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, விண்ணப்பங்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு முதுகலை பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் அவர்கள் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இவர்கள் முதல் கட்டமாக கல்லூரி அளவில் நடத்தப்படும் தேர்வில் தகுதி பெற வேண்டும். பின்னர் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழித் திறன் தேர்வு (ஐஇஎல்டிஎஸ்), பேச்சுத் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள்தான் பிரட்டனுக்கு அனுப்பப்படுவர்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்கள் பிரிட்டனின் கலை, கலாசாரம், கல்வித் திட்டங்களை அறிந்து கொள்வதோடு, உலக அறிவையும் பெற முடிகிறது.

ஆனால், இந்தச் சிறந்த திட்டத்தின் மீது பல அரசு கல்லூரிகள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் இப்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர் கல்விமன்ற நிர்வாகிகள் கூறியது:

கடந்த 2013-14, 2014-15 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 ஏழை மாணவர்களும், 10 பேராசிரியர்களும் வெளிநாடு சென்று படித்து வந்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 15 லட்சத்தை தமிழக அரசு செலவிடுகிறது.

இப்போது 2015-16 கல்வியாண்டுக்கு இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முயற்சியை தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான சுற்றறிக்கை 62 அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் கடந்த மாதம் அனுப்பப்பட்டுவிட்டது.

கல்லூரிகள் மாணவர்களைத் தேர்வு செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 11 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடைசித் தேதி முடிந்துவிட்ட நிலையில் 20 கல்லூரிகளிலிருந்து 100 விண்ணப்பங்கள் வரை மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. மீதமுள்ள 42 கல்லூரிகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை.

அதோடு, இந்தத் திட்டம் குறித்து மாணவர்களிடம் போதிய விளம்பரமோ, கல்லூரி அறிவிப்புப் பலகையில் அறிவிப்போ இதுவரை செய்யவில்லை என சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகள் அடுத்த ஓரிரு நாள்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத கல்லூரிகள் குறித்து அரசிடம் புகார் அளிக்கப்படும் என்றனர்.

திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாண்டில் அரசுக் கல்லூரிகளிலிருந்து 250 விண்ணப்பங்களும், இரண்டாம் ஆண்டில் 400 விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேவை சமநிலை இணைய சேவை!

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) இந்தியாவின் தனியார் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு 20 கேள்விகள் கொண்ட ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. இந்தக் கேள்விகளின் உள்ளடக்கம் இதுதான்: சமநிலை இணைய சேவை (நெட் நியூட்ராலிட்டி) குறித்த உங்கள் கருத்துகள், இதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இதற்கு தாங்கள் கருதும் தீர்வுகள் யாவை?

அலைக்கற்றை ஏலத்தை மார்ச் மாதம் நடத்தி முடித்து, இந்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் பெற்ற அடுத்த கணமே இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டதற்கு காரணம் உள்ளது. 2014ஆம் ஆண்டில் வெறும் ரூ.62,162 கோடி ஏலம் போன அலைக்கற்றை, தற்போது இரட்டிப்பு வருவாயைத் தந்திருப்பதால், ஏலம் எடுத்தவர்களுக்கு அரசும் பதிலுக்கு ஏதாவது நன்மை செய்தாக வேண்டும். ஆகவே, இத்தகைய கேள்விகளை டிராய் தானாகவே கேட்க முனைந்தது.

சமநிலை இணைய சேவை வேண்டும் என்பது உலகம் முழுவதிலும் இணையப் பயன்பாட்டில் இருப்போர் வலியுறுத்தும் கருத்து. இணையத்தைப் பயன்படுத்தும் நபர் எதை வேண்டுமானாலும் பார்க்க, எந்த இணைய சேவை நிறுவனத்தின் தகவல் களஞ்சியத்துக்குள்ளும் நுழைந்து பார்க்க, எந்தவோர் இணைய வணிக நிறுவனத்துடனும் இ-வர்த்தகம் செய்யத் தடையில்லாத நிலைமைதான் சமநிலை இணைய சேவை என்பது.

யூ டியூப்பில் படம் பார்க்கலாம், பதிவேற்றம் செய்யலாம், ஃபேஸ்புக், லிங்க்டுஇன் கணக்கு தொடங்கலாம், கூகுள், யாகூ எதில் வேண்டுமானாலும் எதையும் தேடலாம். ஃபிலிப்கார்ட், அமேசான் என எந்தவோர் இணைய வணிகர்களிடமும் பொருள் வாங்கலாம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யலாம். மின் கட்டணம் செலுத்தலாம், நெட் பேங்கிங் செய்யலாம், இவை அனைத்துக்கும் தேவை நீங்கள் இணையத்துக்கான இணைப்பு (நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக) பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

ஆனால், சேவைகளைக் கட்டுப்படுத்துதல், சேவைகளுக்குக் கட்டணம் விதித்தல், சேவைகளைத் தரவரிசைப்படுத்துதல், சில சேவைகளுக்கு அதிவேகம் நிர்ணயித்தல் ஆகிய உரிமைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோருகின்றன. இதில் எதை அனுமதித்தாலும் அது இணையப் பயன்பாட்டாளருக்கு எதிராகத்தான் முடியும். ஆகவேதான் சமநிலை இணைய சேவைக்கு மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. டிராய் அமைப்புக்கு இதுவரை சுமார் 3 லட்சம் பேர் மின்அஞ்சல் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இதே கோரிக்கை தொடர்பாக அமெரிக்காவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் (ஓபன் இன்டர்நெட் ஆர்டர்) இணையப் பயன்பாட்டாளருக்கு 1. எதையும் தடை செய்யக் கூடாது, 2. தரத்தைக் குலைக்கக் கூடாது, 3. கட்டணம் செலுத்துவோருக்கு முன்னுரிமை என்பதும் கூடாது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது.

தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களின் கழுகுப் பார்வையில் படுவது கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (ஃபேஸ்புக்) போன்ற சிறப்பு சேவையாளர்கள் (ஓவர் த டாப்) மீதுதான். வழக்கமான தொலைபேசி சேவை, குறுந்தகவல், எம்எம்எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், கட்செவி அஞ்சல், முகநூல், லைன், வைபர், வீசாட் போன்றவற்றின் மூலம் தகவல், விடியோ, புகைப்படம் பரிமாறிக்கொள்வதால் உலகம் முழுவதிலும் உள்ள தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 50 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம்.

இந்தியாவைப் பொருத்தவரை, தகவல் பரிமாற்றம் செய்வோரில் 52 சதவீத நபர்கள் சிறப்பு சேவை வழங்குவோர் மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். இந்தியாவில் கட்செவி அஞ்சல் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு அதிக அளவு தகவல் பரிமாற்றம் (42%) முகநூல் மூலமே நடைபெறுகிறது. 83% பேர் ஸ்மார்ட்போன் மூலம் இணைய சேவை பெறுகின்றனர். இதனால், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது. உண்மையில் பார்த்தால், இது இழப்பு அல்ல. மொத்த வருவாயில் 5% குறைவு, அவ்வளவே.

இந்தியாவில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை நமக்குத் தெரியாமலேயே பிடுங்கி விடுகின்றன. இழப்பு என்பதை மாற்று வகையில் ஈடு செய்துவிடுகின்றன. ஆனால் வெளியே சொல்வதில்லை. நுட்பமாகப் பார்த்தால், இணைய இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல நிலைகளில், நாள் எண்ணிக்கையில் வைத்து, கட்டணத்தை அதிகரிக்கவே செய்கின்றன. ஆரம்பத்தில் செல்லிடப்பேசி இணைய சேவைக்கான கட்டணம் 30 நாள்களுக்கு 1 ஜிபி பதிவிறக்கத்திற்கு ரூ.68 ஆக இருந்தது, இப்போது 3ஜி சேவைக்கு 28 நாள்களுக்கு ரூ.198 வசூலிக்கப்படுகிறது.

இது தவிர, லைப்ஸ்டைல் சேவை என்ற பெயரில், நாம் கோராமலேயே அளித்து, அதற்கும் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள். இந்த அநியாய கட்டணப் பிடிப்பை நாம் கவனித்துத் தட்டிக் கேட்டால் திரும்ப அளிக்கிறார்கள். கண்டுகொள்ளப்படாமல் எடுக்கப்படும் கட்டணம் இதுபோல எத்தனை ஆயிரம் கோடியோ, யாரறிவார்?

வழித்தட நெரிசல் காரணமாகத் தரமான சேவை வழங்க இயலவில்லை என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சொல்லுமேயானால், அவர்கள் இதுகாறும் சம்பாதித்த லாபத்தை முதலீடு செய்து, தங்கள் கருவிகளை மேம்படுத்துவதே நியாயமாக இருக்கும். ஆகவே, இன்றைய தேதியில், இந்தியாவைப் பொருத்தவரை, சமநிலை இணைய சேவை தொடர வேண்டும். தொடரத்தான் வேண்டும்!

ஏ.ஐ.சி.டி.இ., விதிகள் மீறலா? 593 கல்லூரிகளில் ஆய்வு!

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை நிறுத்தி வைக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில், 596 தனியார் சுயநிதி மற்றும் சிறுபான்மைப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு, ஆண்டுதோறும், ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின் படி, அண்ணா பல்கலையின் இணைப்பு புதுப்பிக்கப்படும்.

நிரந்தர இணைப்பு:

சில கல்லூரிகளுக்கு நிரந்தர இணைப்பு, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இணைப்பை புதுப்பிக்க, ஆண்தோறும் டிசம்பர் இறுதியில் கல்லூரிகள் விண்ணப்பம் அளிக்கும். நிரந்தர இணைப்பு இல்லாத கல்லூரிகள் தவிர, மற்ற கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலை அதிகாரிகள் சென்று, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை நேரடியாக சோதனை செய்வர். இந்த ஆண்டுக்கான ஆய்வை, அண்ணா பல்கலை அதிகாரிகள் சமீபத்தில் முடித்துள்ளனர். ஒவ்வொரு கல்லூரிக்கும், தனித்தனியாக ஆய்வறிக்கை தயாராகும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், விதிகளை பின்பற்றாத கல்லூரிகளின் பட்டியல், ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பப்படும். பின், ஏ.ஐ.சி.டி.இ., பரிந்துரையின்படி, விதிகளை பின்பற்றாத கல்லூரிகளுக்கு இணைப்பு மற்றும் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீக்கம்:

இணைப்பு புதுப்பிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில், மே 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். இணைப்பு ரத்தாகும் கல்லூரிகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த முடியாதபடி, அந்த கல்லூரிகள், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த ஆண்டு, மூன்று பொறியியல் கல்லூரிகளை மூட, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. இக்கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை மிக மோசமாக உள்ளதால் அவற்றை மூட, ஏ.ஐ.சி.டி.இ.,யும், அண்ணா பல்கலையும் ஒப்புதல் அளித்துள்ளன. இக்கல்லூரிகளில், புதிய மாணவர் சேர்க்கை நடத்தாமல், தற்போது படிக்கும் மாணவர்களின் படிப்பு முடியும் வரை, அதற்கான வகுப்புகளை நடத்த, அண்ணா பல்கலை உத்தரவிட்டு உள்ளது. இதேபோல், 31 கல்லூரிகளில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, தனியார் பொறியியல் கல்லூரிகள் முன்வந்துள்ளன. இவற்றுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அனுமதி அளித்து உள்ளன.

- நமது நிருபர் -

Tuesday, April 14, 2015

மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேர்வில் புதிய முறை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு

நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தேர்தெடுக்க புதிய விதிமுறைகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மனிதவள மேம் பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் சூரஜ் சிங் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், “புதிய முறைப்படி மத்திய பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்த ராக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் நபர், துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில் ஒருவராக இருத்தல் கூடாது. அப்படி இருந் தால் இனி அவர் தேர்வுக்குரிய தகுதியை இழந்து விடுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக மத்திய பல்கலைக்கழகங்கள் சிலவற்றில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் கொண்ட தேர்வுக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரின் பெயர், அடுத்த துணைவேந்தராக பரிந்துரைக்கப் பட்டு வந்துள்ளது.

தேர்வுக்குழுவில் ஒருவராக இருக்கும் துணைவேந்தர் தான் அந்தப் பதவியை மீண்டும் பெறும் வகையில் பரிந்துரையில் தனது பெயரை சேர்த்து விடுவதும் வழக்க மாக இருந்து வந்துள்ளது. இது போன்ற முறை சில மத்திய பல் கலைக்கழகங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்படுவது ஊழலுக்கு வழி வகுக்கும் என மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கருது கிறது. மத்திய பல்கலைக்கழகங் களின் துணைவேந்தருக்கு இருக் கும் மிக அதிகமான செல்வாக்கு இதற்கு காரணம் என்றும் கூறப் படுகிறது. இதையடுத்து இத்துறை யின் அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறப்படு கிறது. திருவாரூரில் மத்தியப் பல்க லைக்கழகம், சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் என தமிழ கத்தில் 2 பல்கலைக்கழகங்கள் உட்பட நாடு முழுவதிலும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் செலவுக்கு அதிக நிதி அளிக்கப்படுகிறது.

கடும் எதிர்ப்பையும் மீறி நடந்தது தாலி அகற்றும் நிகழ்ச்சி!

சென்னை: கடும் எதிர்ப்பையும் மீறி திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
 
திராவிடர் கழகம் சார்பில் நடக்கும் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த மனுவை விசாரித்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கியதோடு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறும் திராவிட கழகத்தினரை நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
 
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்நீ திமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்க விருந்த நிலையில் காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியை காலை 7 மணிக்கே திராவிடக்கழகம் தொடங்கி நடத்தி முடித்தது.
 
திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் தாலியை அகற்றினர். தாலி அகற்றிய பெண்கள் தங்கள் கணவன்கள், பிள்ளைகளோடு வந்திருந்தனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...