தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 23-ம் தேதி தொடங்குகிறது. புதிய
திட்டங்கள், நிவாரணம், அதிகாரிகளுடன் கலந்தாய்வு என பரபரப்பாக இயங்கி
வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'முதல்வராக சசிகலா பதவியேற்பதற்காக
குறிக்கப்பட்ட நல்ல நாட்கள் தள்ளிக் கொண்டே போகின்றன. பிரதமரை நேரடியாகச்
சந்திக்கச் சென்ற தம்பிதுரைக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்கின்றனர்
அ.தி.மு.க வட்டாரத்தில்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு
எளிதாக வர முடிந்த சசிகலாவால், முதல்வர் பதவியை நோக்கி நகர முடியவில்லை.
கடந்த சில நாட்களாக வெளிப்பட்டு வரும் முட்டல், மோதல்கள் நேற்று
பகிரங்கமாகவே வெடிக்கத் தொடங்கின. இதை உணர்ந்து, தன்னுடைய நிலைப்பாட்டை
உளவுத்துறை அதிகாரி ஒருவர் மூலம் கார்டன் பார்வைக்குக் கொண்டு சென்றார்
ஓ.பி.எஸ்.
அப்படியும் மன்னார்குடி உறவுகளின் கோபம் தணியவில்லை.
"ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், பிரதமரை
சந்திக்க முயற்சி மேற்கொண்டார் தம்பிதுரை. அப்போது முடியவில்லை. இரண்டாவது
முறையாக, நேற்று ஜல்லிக்கட்டுக்காக சசிகலா கொடுத்த கடிதத்தை எடுத்துக்
கொண்டு பிரதமரை சந்திக்கச் சென்றார் அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும்
மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை. 'கென்ய அதிபருடனான சந்திப்பில்
பிரதமர் இருக்கிறார். அதனால்தான் அவரை சந்திக்க முடியவில்லை' என தம்பிதுரை
சமாதானம் சொன்னாலும், பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடத்தப்படும் உள்கட்சி
தாக்குதல்களை பிரதமர் கவனித்துக் கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு என்ற
பெயரில் சமரசம் பேசத்தான் தம்பிதுரை சென்றார். அதற்கு மோடி இடம்
கொடுக்கவில்லை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"டெல்லியில்
நேற்று மீடியாக்களிடம் பேசும்போதும், தமிழகத்தில் முதல்வர் ஒருவர்
இருக்கிறார் என்பதை எந்த இடத்திலும் அவர் நினைவூட்டவில்லை. அதேநேரம்,
'ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம். பின்வாங்க மாட்டோம்' என அதிரடியைக்
கிளப்பினார் பன்னீர்செல்வம். 'ஆட்சிக்குள் பன்னீர்செல்வம் பலம் பெற்றுவிடக்
கூடாது' என்பதற்காகத்தான், கடிதம் எழுதுவது, நிர்வாகிகளை பேச வைப்பது
போன்ற செயல்களை மன்னார்குடி உறவுகள் செய்து வருகின்றன. கட்சிக்குள்
இருக்கும் உள் எதிரியாக பன்னீரையும் வெளி எதிரியாக தீபாவையும் பார்க்கிறார்
சசிகலா. அமைச்சர்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து
வருகிறார். பன்னீரை வீழ்த்தும் அவர்களின் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.
கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டுவிட்டதால், சசிகலாவின் முதல்வர் கனவு
தள்ளிப் போய்விட்டது" என்றார் விரிவாக.
"சசிகலா, தினகரன், நடராசன் உள்ளிட்ட மூவரும் அதிகாரத்துக்குள் வந்துவிட முடியாத அளவுக்கு வழக்குகள்
நெருக்கிக் கொண்டிருக்கின்றன. பணப் பரிவர்த்தனை வழக்கில் டி.டி.வி.தினகரனை
நெருக்கிக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. லெக்சஸ் கார் இறக்குமதியில்
மோசடி செய்த வழக்கில் நடராசன் வகையாகச் சிக்கியிருக்கிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜனவரிக்குள் வரலாம் என்பதால்
பதைப்புடன் இருக்கிறார் சசிகலா. இந்த வழக்குகளால் முதல்வர் பதவியைத்
தொட்டுவிடுவது அவ்வளவு எளிதானதல்ல. தீர்ப்பு வருவதற்குள் முதல்வர்
ஆகிவிட்டாலும், உறவுகளில் ஒருவரை பதவிக்குக் கொண்டு வரலாம் எனத்
திட்டமிட்டிருந்தார் சசிகலா.
அவருடைய நினைப்புக்கு குறுக்கே
பன்னீர்செல்வம் இருக்கிறார். அதன் விளைவை தம்பிதுரை நேரடியாகக் காட்டிக்
கொண்டிருக்கிறார். 'உங்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன்' என
பன்னீர்செல்வம் கூறினாலும், கார்டன் வட்டாரம் மிகுந்த எரிச்சலில்
இருக்கிறது. பிரதமர் மூலமே விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வேலையில்
மன்னார்குடி உறவுகள் இறங்கியுள்ளன. 'இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், தமிழக
பா.ஜ.கவின் எதிர்காலத்துக்கு நல்லது' எனத் திட்டமிடுகிறார் அமித் ஷா.
அதனாலேயே, சசிகலாவுக்கு எதிரான சக்திகளை சந்திப்பதற்கு ஆர்வம் காட்டி
வருகிறார். தீபாவுக்குக் கூடும் கூட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு,
விசாரித்திருக்கிறார். விரைவில் தீபாவை அவர் சந்திப்பதற்கும் வாய்ப்பு
இருக்கிறது" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.
"குடியரசு
தினத்தில் பன்னீர்செல்வம் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது. சட்டசபை கூட்டத் தொடர், பட்ஜெட் வேலைகள் என முதல்வருக்கான
பணிகளில் வேகத்தைக் கூட்ட ஆரம்பித்துவிட்டார் பன்னீர்செல்வம். முதல்வரின்
முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், இருட்டடிப்பு செய்வதற்கான
வேலைகளில் ஆளும்கட்சி ஊடகமும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. 'ஜெயலலிதா
மரணமடைந்த நாளிலேயே, சசிகலா முதல்வர் பதவியை ஏற்றிருந்தால், இந்தளவுக்கு
விவகாரம் நீண்டிருக்காது' என மன்னார்குடி உறவுகள் பேசி வருகின்றனர்.
வெங்கய்ய நாயுடு சொன்னதால்தான், பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தினார்.
இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, பன்னீர்செல்வதைப் பதவியில்
இருந்து நீக்குவதற்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. எந்த
அசைவையும் காட்டாமல், பளீர் புன்னகையோடு வலம் வருகிறார் முதலமைச்சர்
பன்னீர்செல்வம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
- ஆ.விஜயானந்த்
இந்த சம்பவம் நடந்து 50 வருடமாகி விட்டது. ஆனால்
இன்றளவும் அதை எளிமையாக கடந்து விட முடியாது. அந்தளவு தமிழக அரசியலில்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் அது.
திரைப்படங்களில்
கதாநாயகனாக வருபவர்தான் வில்லனைச் சுடுவார். ஆனால் வில்லன் நடிகராக
திகழ்ந்தவர் கதாநாயகனை சுட்ட சம்பவம் தான் அது. அதுவும் நிஜத்தில்.
அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும், ஏழைகளின் தோழனாகவும், நல்லதை
மட்டுமே செய்பவராகவும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு பாமர
மக்களின் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக உருவெடுத்திருந்த தி.மு.க.வின்
செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்தவர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
மக்கள் மனங்களிலும் அரசியல் அரங்கிலும் அசைக்க முடியாத
செல்வாக்குடன் திகழ்ந்த எம்.ஜி.ஆரை ஒரு தோட்டாவின் மூலம் சாய்த்த
சம்பவம்தான் அது. எம்.ஜி.ஆரை சுட்டவர் எம்.ஆர்.ராதா. "எம்.ஜி.ஆரை
சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது
வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். சண்டை
போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை
போட்டிருப்போம். கத்தி இருந்தா கத்திச்சண்டை போட்டிருப்போ, துப்பாக்கிதான்
இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்' என சாதாரணமாக பதிலளித்தார்
1967-ம்
ஆண்டு நடக்க இருந்த பொது தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் நடந்தது அந்த
அதிர்ச்சி சம்பவம். எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் திரை உலகில் கொடி கட்டி
பறந்த காலம் அது. 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற படத்துக்காக பட அதிபர்
வாசு நடிகர் எம்.ஆர்.ராதாவிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றிருந்தார். படம்
வெளியான பின் அந்த பணத்தை திருப்பி கொடுப்பது எனவும், அதற்கு எம்.ஜி.ஆர்
பொறுப்பேற்று இருந்ததாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக பேச ஜனவரி
12-ம் தேதி ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு
எம்.ஆர்.ராதா சென்றிருந்தார். உடன் பட அதிபர் வாசுவும் சென்றிருந்தார்.
இருவரும் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசி கொண்டிருக்கும் போது
எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. அந்த
நேரத்தில் ராதா தன் மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து
எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத எம்.ஜி.ஆர்
சமயோசிதமாக குனிய துப்பாக்கியில் இருந்து வெளியான தோட்டா எம்.ஜி.ஆரின் இடது
பக்க காதின் அருகாமையில் கண்ணத்தில் பாய்ந்தது. இதனை தொடர்ந்து
எம்.ஆர்.ராதா துப்பாக்கியை தன் தலையில் வைத்து இயக்க அதிலிருந்து வெளியான
தோட்டா ராதாவின் நெற்றியில் பாய்ந்தது.
துப்பாக்கியால்
சுடப்பட்ட எம்.ஜி.ஆர் ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டு பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராதாவும் அங்கே அனுமதிக்கப்பட்டார். ராதாவின் நெற்றியில் பாய்ந்த தோட்டா
அகற்றப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரி கண்ணத்தில் பாய்ந்த தோட்டா அவரது
கழுத்தில் 3 முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்தது. அதனை அகற்றினால்
எம்.ஜி.ஆரின் உயிருக்கே ஆபத்து ஏற்படாலாம் என மருத்துவர்கள் கருதினர்.
இதனால் தோட்டாவை அகற்றாமலேயே தையல் போடப்பட்டது.
இந்த நிலையில்
நடக்க இருந்த தேர்தலில் பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக
நிறுத்தப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவரால் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்ல
முடியாத நிலையில் அவர் மருத்துவமனையில் கழுத்தில் பெரிய கட்டுடன்
இருக்கும் படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது.
தேர்தல் பிரசாரத்துக்கு
தொகுதிக்குச் செல்லாமலே தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்
ரகுபதியை 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரும்
எம்.ஆர்.ராதாவும் குணமடைந்த நிலையில் ராதா மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டு விசாரணை நடந்தது. எம்.ஜி.ஆரின் சாட்சியத்தை கேட்டறிந்த
சைதாப்பேட்டை நீதிமன்றம் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை
அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் துப்பாக்கி தோட்டாவிடம் இருந்து உயிர் தப்பியது
மட்டுமல்ல தேர்தலில் படுத்து கொண்டே ஜெயிக்கவும் செய்தார்.
அதனால் தான் காலத்தை வென்றவன் எனவும், காவியமானவன் எனவும் அழைக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். - இரா.மோகன்
'கௌரவம்' படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக
படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை ஓடவிட்டார் உதவி
இயக்குநர். காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத்
துவங்கினார். ஒருதடவையல்ல... இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக
பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி
படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து "சுந்தரா கொஞ்சம்
டயம் கொடு...அப்புறம் சூட் பண்ணிக்கலாம்..."
எந்த பாடலையும்
அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த
மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம் "என்னண்ணே ஏதாவது
பிரச்னையா...சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா...?
என்றார் பதறியபடி
. "இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய
சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப்
பிரவாகத்தோடு பாடியிருக்கிறார். பல்லவியில் ஒரு விதமான பாவம்,
ஆக்ரோஷம்.அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்.இன்னொரு
பரிமாணம்.என பிச்சு உதறியிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு
விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை
அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம்
மெனக்கெட்டால்தான் நான் அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்... காட்சியும்
எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்"
என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி.
உச்சி
முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம்
குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன் என்கிற
டி.எம்.எஸ்.!
கவுரவம் படத்தில் இடம்பெற்ற " நீயும் நானுமா... கண்ணா
நீயும் நானுமா..." என்ற அந்த பாடலில் சிவாஜிக்கு சவால் தந்த டி.எம்.எஸ்க்கு
தபால் தலைவெளியிட்டு கவுரவம் செய்திருக்கிறது மத்திய அரசு. கடந்த 30-ம்
தேதி இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை
வெளியிட்டு கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த பட்டியலில் இடம்பெற்ற
ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே.
தமிழ்சினிமாவின்
சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரரான டி.எம். சவுந்தரராஜன், மதுரையில்
1923- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்தார். பிரபல வித்வான்
காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். இசை ஞானம்
அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக்கொள்ள சிறியதும் பெரியதுமான கச்சேரிகளில்
பாட ஆரம்பித்தார். தன் திறமையை மெருகேற்றிக்கொள்ள மதுரை சுற்றுப்புறங்களில்
கோயில் பஜனைகளில் கூட சங்கடங்கள் இன்றி பாடுவார். டி.எம்.எஸ் திரையுலகில்
நுழைய காரணம் அவரது குரல்வளம். ஆம் அவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார்
தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருக்கும். "டேய் உன் குரலுக்கு பாகவதர் போல்
நீ எங்கேயோ போகப்போறெ" என அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை
நண்பர்கள் ஏற்படுத்திவைத்தனர். கச்சேரிகளில் அவர் பாடுகிறபோது சற்று கண்ணை
மூடிக்கேட்டால் தியாகராஜ பாகதவர்தான் நினைவுக்கு வருவார். தெய்வாதீனமாக
அமைந்த இந்த குரல்வளம்தான் அவருக்கு சினிமா உலக கதவு திறக்க காரணமானது.
புகழின் உச்சியில் இருந்த சமயம் தியாகராஜ பாகவதர் திருச்சியில் கச்சேரி
செய்ய வந்திருந்தார். அதே கச்சேரியில் அவருக்கு முன்பு பாடிய சிறுவன்
ஒருவனது குரல் அவரை ஈர்த்தது. ஆச்சர்யத்துடன் சிறுவனை அழைத்து பாடச்
சொன்னார் பாகவதர். பாகவதரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை அட்சரம் பிசகாமல்
பாடிக் காண்பித்தான் சிறுவன். "சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம்
இருக்கு" என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் தியாகராஜபாகவதர்.
திரையுலக கனவில் மிதக்க ஆரம்பித்த சிறுவன் டி.எம்.சௌந்தரராஜன் சினிமா
வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.
சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில்
வெளியான கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப்
போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரல் ஒலித்த முதல்பாடல்.
தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற
படங்களில் பாடினார். மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்கு பாடிய எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாடல் பட்டிதொட்டியெல்லாம் டி.எம்.எஸ் என்ற
மந்திரக்குரலோனை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து திரையுலகில் டி.எம்.எஸ்ஸின்
சகாப்தம் துவங்கியது.
எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின்
திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு
சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ்
பாடியவை. தம் குரல் வளம், இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத மற்ற
பாடகர்களிடமிருந்து டி.எம்.எஸ் முற்றிலும் மாறுபட்டார். திரையுலகின் அன்றைய
இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது
பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என
கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும்
கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல...அதன்பின்
இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.
உரத்த குரலும் அழுத்தமான பேச்சு
வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை
எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும்
இடத்திலிருந்து பாடுவார்...ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன்
சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில
ஃபார்முலாவில் பாடி அசரடிக்கும் திறமைசாலியாக உலாவந்தவர் டி.எம்.எஸ்.
பாடல்களை
பாடுகிறபோது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததுபோல் நில்லாமல் பாடலை
மெருகேற்ற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வார் டி.எம்.எஸ். அதற்காக பாடலின்
இசை அம்சங்களை தவிர்த்து பாடல்காட்சியின் சூழலையும் இயக்குநரிடம் கேட்டு
தெரிந்துகொண்டு பாடுவது அவரது குணம். 'உயர்ந்த மனிதன்' படத்தில் இடம்பெறும்
'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் நடுத்தர வயதைக் கடந்த கதாநாயகன்
தன் பால்ய நினைவுகளை சுமந்தபடி தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து
பாடுவதாக காட்சி. படத்தின் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக
இயக்குநர் காட்சியை சித்தரித்திருந்தார். அதைக்கேட்டுக்கொண்ட டி.எம்.எஸ்
ரிக்கார்டிங் நடந்த அறையில் பாடலை பாடியபடி தேவைப்பட்ட நேரத்தில்
பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார்.
காட்சிக்கு தக்கபடி டி.எம்.எஸ் குரல் தத்ரூபமாக பாடல் காட்சிக்கு பொருந்தி
பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.
வீரம்,
காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்,மூவாயிரத்துக்கும்
மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகனுக்காக அவர் பாடி
இசையமைத்த பாடல்கள் சாகாவரம்பெற்றவை.
மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம்
விதிவிலக்கல்ல. திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக
திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின்
பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு
பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா
உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார்.
அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ்
தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல
சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து
குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.
"டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி,
நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு
மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு.
ஆம்...தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை
மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது,
எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள்
அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார்
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.
ஆனால் தன்னால்
பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட
அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை
திகழ்ந்தார் டி.எம்.எஸ்.
கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார். அருணகிரிநாதர்
என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை
புகழ்ந்து "முத்தைத் திருபத்தித் திருநகை" எனும் பாடலை பாடியிருந்தார்.
தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ்
இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான
பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட
அவரது பையன்களில் ஒருவர், "அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா" என
கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ்.
"வடநாட்டுக்கு
ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை
டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில்
சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை
இசைஞானம்" என புகழ்ந்தார்.
" லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னாலும்
டி.எம்.எஸ் சுருதி விலகி பாடமாட்டார். அதுதான் டி.எம்.எஸ்" என இன்னும் ஒரு
படிமேலாக டி.எம்.எஸ் பற்றி எம்.எஸ்.வி குறிப்பிட்டார் ஒருசமயம்.
உண்மைதான்,
இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயங்காதவர் டி.எம்.எஸ். தான்
இசையமைத்த ஒரு படத்தில் தன் இருமகன்கள் இசையுலகில் தலையெடுத்த நேரத்திலும்
பாடலின் சுவைக்காக அவர்களை தவிர்த்து மற்றொரு புகழ்பெற்ற பாடகர் திருச்சி
லோகநாதனின் மகனான டி.எல்.மகராஜனை பாடவைத்தார். பாடகருக்கு புகழ் கிடைக்கும்
பாடல் என்று தெரிந்தும் இசைக்கே முக்கியத்துவம் அளித்து வேறொருவரை
பாடவைத்த அவரது பண்பு ஆச்சர்யமானது.
தமிழை அட்சர சுத்தமாக அழகாக
உச்சரித்து தமிழுக்கு பெருமை சேர்ந்த டி.எம்.எஸ், தமிழை தாய்மொழியாக
கொண்டவரல்ல என்பது ஆச்சர்யமான தகவல்.
2010ல் கோவையில் நடந்த உலகத்
தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "செம்மொழியான தமிழ்மொழியாம்" என பாடியதுதான்
இசையுலகில் டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடல். 3 தலைமுறையினரை தன்
இனிய குரலால் மகிழ்வித்த 'மதுரை மாங்குயில்' டி.எம்.எஸ்ஸின் புகழ்
தமிழர்கள் காதுகள் இல்லாது பிறக்கும் காலம் வரை நீடித்து நிலைக்கும். - எஸ்.கிருபாகரன்
Dailyhunt
ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் இதுதான் நடக்கும்! சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை
'உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன் தமிழகத்தில் தடையை மீறி
ஜல்லிக்கட்டு நடந்தால், சட்டத்தைக் காக்க தமிழக அரசு தவறிவிட்டது என
அர்த்தம். அந்தச் சூழ்நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு
வரவேண்டும்' என ட்விட்டரில் கூறியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. தமிழகத்தில்
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற சூழல் தகித்து வரும் நிலையில், இந்த
கருத்து கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழுக்காக உழைத்தவர்... தமிழுக்காகவே வாழ்ந்தவர்... தமிழ் அறிஞர் ச.வே.சு நினைவு பகிர்வு !
தமிழ் மொழிக்காகவே வாழ்வின் கடைசி காலம் வரையிலும் உழைத்த முதுபெரும் தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் இன்று காலமானார்.
தமிழ்
மொழியின் மீதும் தமிழர்கள் மீதும் அளப்பறிய பற்றுக் கொண்டு
செயல்பட்டவர்களில் மிக முக்கியமானவர், ச.வே.சுப்பிரமணியன். இலக்கியங்கள்
மீது இவருக்கு இருந்த ஆளுமையின் காரணமாக 180 நூல்களை எழுதி உள்ளார். தமிழ்
மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இவர் புலமை வாய்ந்தவர்.
அதனால் ஆங்கிலத்தில் 8 நூல்களையும் மலையாளத்தில் ஒரு நூலும் எழுதி உள்ளார்.
அநேகமாக
தமிழகத்தில் அவரது காலடித் தடம் பதியாத பல்கலைக் கழகங்களே இல்லை என்று
சொல்லும் அளவுக்கு அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவை
நிகழ்த்தி உள்ளார்.
இவரது ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை இருநூற்றைத்
தாண்டும்.. இவரிடம் ஆலோசனை பெற்று முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை
50-க்கும் அதிகம். தமிழ்
மீது உள்ள பற்று காரணமாக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்,
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே தமிழூர் என்ற கிராமத்தை அவரே
உருவாக்கினார். அங்குள்ள தமிழ் நகரில் 'தமிழகம்" என்ற இல்லத்தில் வசித்து
வந்தார். 87 வயதான நிலையிலும் தமிழுக்கு தொண்டு செய்து வந்த
ச.வே.சுப்பிரமணியன், கடந்த 4-ம் தேதி சாலையில் நடந்து சென்றபோது வாகனம்
மோதியதில் காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார்.
நெல்லை மாவட்டம்
வீரகேரளம்புதூரில் 1929 டிசம்பர் 31-ம் தேதி, சு.சண்முக வேலாயுதம்,
ராமலட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் ச.வே.சுப்பிரமணியன்.
தொடக்கக் கல்வியை விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள திருஇருதய மேல்நிலைப்
பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம்
தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், இடைநிலைக் கல்வியை
ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்ற அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
இளங்கலை பட்டம் படித்தார். முனைவர் பட்டத்தை கேரள பல்கலைக்கழகத்தில் ஆய்வு
மேற்கொண்டு முடித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-ல்
பணியைத் தொடங்கிய அவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி,
திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும் பணியாற்றிய அனுபவம்
அவருக்கு இருந்தது. சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள்
இயக்குநராகவும் செயல்பட்டார். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969-ல்
திருவள்ளுவர் கல்லூரி உருவாக்க காரணமாக இருந்தார்.
தமிழகத்தில்
பல கருத்தரங்குகளில் இவர் ஆய்வுக் கட்டுரைகளை படித்துள்ளார். அத்துடன்,
இலங்கை, ஜெர்மனி, போலந்து, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து
உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் சென்று ஆய்வுக் கட்டுரைகளையும் சிறப்பு
சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி உள்ளார். இவர், சென்னை உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்த காலத்தில், பல ஆய்வு நூல்களை
வெளியிட்டார். இவரது நூல்கள் பல்வேறு பலகலைக் கழகங்களிலும் கல்லூரி
மாணவர்களுக்கு பாடநூலாக உள்ளது.
பணியில்
இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழூர் என்ற
கிராமத்தை உருவாக்கினார். அங்கு இவரது வீட்டில் பல அரிய நூல்கள்
இருந்ததால் எப்போதும் அங்கு மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களால் நிறைந்து
இருக்கும். இவர், செந்தமிழ்ச் செம்மல், நல் அறிஞர், தமிழாசுரர், தமிழ்
இயக்கச் செம்மல், தொல்காப்பியச் செம்மல் என பல பட்டங்களையும் விருதுகளையும்
பெற்று உள்ளார். 1999-ல் சாகித்ய அகாடமி சார்பாக இவருக்கு 'பாஷாசம்மன்"
என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழிக்காக பங்காற்றியதைக்
கவவுரவிக்கிற வகையில் இந்த விருது சாகித்ய அகாடமியால் வழங்கப்பட்டது. அதன்
பின்னர், இதுவரையிலும் தமிழ் மொழிக்காக வேறு எழுத்தாளர் யாருக்கும் இந்த
விருது வழங்கப்படவில்லை. இவர், இலக்கிய நினைவுகள், சிலம்பின் சில
புரல்கள், இலக்கிய கனவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, இலக்கிய
உணர்வுகள், கம்பன் கற்பனை, கம்பன் கவித்திறன், இளங்கோவின் இலக்கிய
உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகார இசைப்பாடல்கள் என நூல்களின்
வரிசை சென்று கொண்டே இருக்கிறது. ஆங்கிலத்தில், சிலப்பதிகாரத்தின்
இலக்கணம், அகநானூறு இலக்கணம், தமிழ் இலக்கிய ஆய்வுகள் என 9 நூல்களை எழுதி
இருக்கிறார். சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தை மலையாள மொழியில்
மொழிபெயர்த்து உள்ளார்.
இவரது வாழ்க்கை வரலாற்று நூல்களாக 'தமிழ்
ஞாயிறு, சாதனைச் செம்மல்" மற்றும் தமிழ்ச் செம்மல் வ.வே.சு" என இரு
படைப்புக்கள் வெளிவந்து உள்ளன. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த
ச.வே.சுப்பிரமணியன் மறைவுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ்
ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இவரது பெயரை அவரது படைப்புக்கள்
காலம் கடந்தும் நினைவுகூரும் என்பது நிச்சயம். - ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்
Dailyhunt
குறைந்தபட்சம் ரூ.1.84 லட்சம்; அதிகபட்சம் ரூ.7.59 லட்சம் சம்பளம்! தமிழக அரசு தகவல்
சவூதி அரேபிய அமைச்சகத்தின் ரியாத் அரசு மருத்துவமனைகளில்
பணியாற்றுவதற்கு சிறப்பு மருத்துவர்களுக்கு வளருகின்ற நாடுகளில் பட்டம்
பெற்றவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப ரூ.1.84 லட்சம் முதல் ரூ.3.03 லட்சமும்,
முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ரூ.5.01
லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.59 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும்
என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவூதி அரேபிய அமைச்சகத்தின் ரியாத்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அவசர மருத்துவம் (Emergency
Medicine),, ஆர்தோபீடிக் (Orthopedics),, மகளிர் மகப்பேறு மருத்துவம் (Obs
& Gyn),, தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), மயக்க மருத்துவம்
(Anaesthesia), இன்டர்னல் மெடிசன் ((Internal Medicine), குழந்தை
மருத்துவம் (Pediatrics) ரேடியாலஜி(Radiology), நரம்பு அறுவைச் சிகிச்சை
(Neuro Surgery) போன்ற பிரிவுகளில் அலோபதி மருத்துவர்களுக்கான நேர்முகத்
தேர்வு டெல்லியில் 18.1.2017 முதல் 20.1.2017 வரையிலும் மற்றும்
பெங்களூருவில் 22.1.2017 மற்றும் 23.1.2017 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55
வயதுக்குட்பட்ட கண்சல்டண்டுகள் (Consultants) மற்றும் சிறப்பு
மருத்துவர்கள் (Specialists), விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு வளருகின்ற நாடுகளில்
பட்டம் பெற்றவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப ரூ.1.84 லட்சம் முதல் ரூ.3.03
லட்சமும், முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு பணி
அனுபவத்துக்கேற்ப ரூ.3.07 லட்சம் முதல் ரூ.5.09 லட்சமும், கண்சல்ட்ண்ட்
மருத்துவர்களாக இருப்பின் வளரும் நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு பணி
அனுபவத்துக்கேற்ப ரூ.2.42 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.3.98 லட்சமும்,
முன்னேறிய நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு பணி அனுபவத்துக்கேற்ப ரூ.5.01
லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.59 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
மேலும்
சிறப்பு தகுதிக்கான சலுகையாக 20 முதல் 50 விழுக்காடு ஊதியத்துடன், இலவச
உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவூதி அரேபிய
அரசின் சட்டத்திட்டத்துக்குட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால்
வழங்கப்படும்.
விருப்பமும் தகுதியும் உள்ள மருத்துவர்கள் தங்களின்
முழுவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈமெயில்
முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்திலோ
அல்லது 044-22505886/22502267/22500417 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவோ
அறிந்து கொள்ளலாம்.
இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான
விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்
முகவர் எண்.RC No.B-0821/CHENNAI/CORPN/ 1000+/5/308/84 ஆகும்" என்று
கூறப்பட்டுள்ளது.
Dailyhunt
Thursday, January 12, 2017
கவனம் தேவை!
By ப. இசக்கி |
Published on : 12th January 2017 01:30 AM
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை நம்பி அப்பாவி பொதுஜனம் வாயைக்
கட்டி, வயிற்றைக் கட்டி சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் வங்கிகளில்
செலுத்தியாகி விட்டது.
பிரதமரின் அதிக மதிப்பு செலாவணி செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு,
நாட்டில் புழக்கத்தில் இருந்த 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூ.1000 மற்றும்
500-இல் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கு வந்தாயிற்று.
இப்போது பொதுமக்கள் கையில் பணம் இல்லை; ஆனால் வங்கிகளின் கையில் பணப் புழக்கம் ஏராளம்.
வங்கிகள் என்பவை பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், மேட்டுக்குடி
மக்களுக்குமே கைகட்டி சேவையாற்றி வந்த நிலையில்தான் 1969 ஜூலை 19
நள்ளிரவில் அவற்றை தேசியமயமாக்கி
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அன்று அவர் நாட்டு
மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றிய உரையில், வங்கிகளை குறிப்பிட்ட நபர்களின்
பிடியில் இருந்து விடுவித்தல், விவசாயிகளுக்குத் தேவையான கடன் வழங்குதல்
உள்ளிட்ட ஐந்து முக்கிய நோக்கங்களை அறிவித்தார்.
ஆனால் அரை நூற்றாண்டு காலம் ஆகியும் அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இன்னமும்கூட வங்கிகள் பெரிய தொழிலதிபர்களுக்கும், வணிக கூட்டாண்மை
நிறுவனங்களுக்கும் சேவை செய்வதில்தான் ஆர்வம் காட்டுகின்றனவே தவிர சாமானிய
ஏழை, எளிய மக்களின் தேவையை பூர்த்தி செய்வதை ஒரு பொருட்டாகவே
நினைப்பதில்லை. அரசின் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் கூட
ஏகப்பட்ட அழுத்தங்களுக்கு பிறகுதான் அரைகுறை மனதுடன் சம்மதம்
தெரிவிக்கின்றன.
நாட்டில் உள்ள தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட 49 வங்கிகளின் கடந்த
மார்ச் 2016 வரை வாராக் கடன் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 929 கோடி. கடந்த 10
மாதங்களில் இந்த தொகை மேலும் அதிகரித்திருக்கும். இந்த வாராக் கடன்
பட்டியலில் உள்ள முதல் 20 பெரிய நிறுவனங்களின் கடன் தொகை மட்டும் சுமார்
ரூ.1.54 லட்சம் கோடி. அவற்றை வழங்கியவை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்தான்.
இதற்கு காரணம், கடன் வழங்கும்போது கவனக் குறைவு, அரசு அதிகாரிகள் மற்றும்
அரசியல்வாதிகளின் தலையீடு முக்கியமானவை. இந்த வாராக் கடன்களால் வங்கிகளின்
நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வந்த
வண்ணம் உள்ளன.
அதுமட்டுமன்றி வங்கிகளின் நம்பகத்தன்மையே கேள்விக்
குறியாகியது.
கடந்த 2000-ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 2010-ஆம் ஆண்டு வரை உலகில் பல
நாடுகளை அச்சுறுத்திய பொருளாதார மந்தநிலையில் கூட இந்திய பொருளாதாரமும்,
வங்கிகளும் தாக்குப் பிடித்தன. அதற்கு காரணம், நம் நாட்டு மக்களின்
பாரம்பரிய பண சேமிப்பு முறைதான் என்பது நிபுணர்களின் கருத்து.
இப்போது அந்த சேமிப்பு எல்லாம் செலாவணி செல்லாததாக்கிய அறிவிப்பால்
வங்கிகளின் கஜானாவில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றின் சொந்தக்காரர்கள்
இனிமேல் அவ்வளவு எளிதில் அவற்றை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது.
அப்படியானால் அந்த பணத்தை வங்கிகள் என்ன செய்யப் போகின்றன? கடன்தான்
கொடுக்க வேண்டும். ஆனால் அந்த கடன் யாருக்கு போய்ச் சேரும் என்பதுதான்
சமானிய மக்களின் அச்சமாக உள்ளது.
முழுக்கால் சட்டை, புறச்சட்டை (கோட்), கழுத்துப்பட்டை அணிந்து
குளிரூட்டப்பட்ட அறையில் வங்கி மேலாளருடன் கோடிக்கணக்கில் கடன் கேட்டு
பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பார் ஒருவர். விவசாயக் கடனுக்காக தங்க
நகையை கையில் வைத்துக் கொண்டு கண்ணாடிக் கதவுக்கு வெளியே கால் கடுக்க
நின்று கொண்டிருப்பார் ஒரு ஏழை விவசாயி. இது வங்கிகளில் அன்றாட காட்சி.
பெரிய தொழில் நிறுவனங்களுக்குக் கொடுத்த கடனை வசூலிக்க வங்கிகளுக்கு திராணி
இருக்காது. ஏழை விவசாயி வாங்கிய கடனுக்காக அவரது புகைப்படத்தையும்,
விலாசத்தையும் அம்பலப்படுத்தி அவமானப்படுத்துவார்கள்.
இந்த நிலை இனிமேலும் தொடருமா, அல்லது சாமானிய ஏழை, எளிய மக்களின் சேமிப்பு,
தேவையுள்ள ஏழை, எளிய மக்களுக்கே கடனாக கிடைக்குமா என்பதுதான் கேள்வி.
வாராக் கடன்களால் வங்கித் துறை சீரழிந்து கொண்டிருந்த நேரத்தில் பிரதமரின்
அறிவிப்பு அவற்றுக்கு புதுரத்தம் பாய்ச்சியுள்ளது. வங்கிகளில்
கொட்டிக்கிடக்கும் சுமார் ரூ.15 லட்சம் கோடியில் எந்த வகையில் பார்த்தாலும்
ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் இப்போது உரியவர்களால் வெளியே எடுக்க முடியாது.
அந்த நிதி என்பது வங்கிகளின் இதுவரையிலான வாராக் கடன் தொகைக்கு நிகரானது.
எனவே, இனிமேல் வங்கிகள் வாராக் கடன் நிதி பற்றாக்குறையால் தள்ளாட வேண்டியது
இருக்காது. இந்த உபரி நிதியைக் கொண்டு மீண்டும் புதுக் கடன்களை
கொடுப்பார்கள்.
புதுக் கடன் கொடுப்பதில் அரசும், வங்கிகளும் கவனமுடன் இருக்க வேண்டியது
அவசியம். ஒரு தொழில் நிறுவனம் அல்லது தொழிலதிபர் நாட்டில் எந்த ஒரு
வங்கியிலாவது வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்பச்
செலுத்தவில்லை என்றால் அவருக்கு இனிமேல் புதுக் கடன் வழங்க முடியாது.
தொழில் நிறுவனத்தின் பெயரில் கடன் பெறும் அதன் உரிமையாளரே அந்த கடனுக்கு
முழுப் பொறுப்பு. தொழிலில் இழப்பு ஏற்பட்டாலும் அவரது பிற சொத்துகள் அல்லது
தொழில் மூலம் பணம் ஈட்டி கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாக
வேண்டும்.
மேலும், பெரிய தொழில் நிறுவனங்களின் கடனை வசூலிப்பதில் உள்ள சட்டப்
போராட்டங்களைத் தவிர்க்க தேவையான மாற்றங்களையும் உடனே அரசு கொண்டு
வந்தால்தான் சமானிய மக்களுக்கு மோடி கொடுத்த வாக்குறுதி உண்மையுள்ளதாக
இருக்கும்.