Tuesday, May 28, 2019

ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா?: சுகாதாரத் துறை அமைச்சர் பதில்

By DIN | Published on : 28th May 2019 02:38 AM

நிகழாண்டில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற வாய்ப்புள்ளதா? என்பதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.

மாநிலத்தின் நலன் கருதி பிளஸ் - 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு முயற்சியெடுத்து வருவதாகவும், ஆனால் இதுவரை அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
அதற்கான சுற்றறிக்கையை கடந்த ஆண்டே ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது. ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1970-இல் இடம்பெற்றுள்ள ஒரு ஷரத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த ஷரத்தை காரணமாகக் காட்டி கடந்த ஆண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர், மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால், நிகழாண்டில் நீட் தேர்வு மூலமாக மட்டுமே பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக, தினமணி செய்தியாளரிடம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. அதற்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளதுடன், வழக்கம்போல பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே இங்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஆனால், அதுதொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த ஒப்புதலையும் அளிக்கவில்லை. அதுமட்டுமன்றி, நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால், தமிழகத்திலும் அதே நடைமுறைதான் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இருந்தபோதிலும், தமிழகத்தின் சூழல்களையும், ஏற்கெனவே உள்ள நடைமுறைகளையும் குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பேரில் மத்திய அரசு எடுக்கும் முடிவின்படி, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றார் விஜயபாஸ்கர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு

By DIN | Published on : 28th May 2019 02:40 AM

நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன் இணைந்து அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, கரூரில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி பெருந்துறை கல்லூரியையும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. மீதமுள்ளவை தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. புதிய கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது. அதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மொத்தம் உள்ள 3,350 இடங்களுக்கான கலந்தாய்வை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களுக்கும், தேர்வுக் குழுவினருக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின்ஜோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் இதுவரை ஒற்றைச் சாளர முறையே பின்பற்றுப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை மாற்றி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன் தொடக்கமாக இணையதளங்களின் வாயிலாகவே முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வினை ஆன்லைன் முறையில் நடத்தவே முயற்சி செய்தோம். ஆனால், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.

அதேவேளையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைன் வாயிலாக நடத்த தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான சோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பொறியியல் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உறுதுணையுடன் அப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே, நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன என்றார் அவர்.
தனியார் பல்கலைக்கழகப் பணியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
By DIN | Published on : 28th May 2019 02:40 AM |

தொழில் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் கல்வி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் வித்தியாசம் உள்ளதாகக் கூறி, தனியார் பல்கலைக்கழகப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகமானது, அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளை இயக்குகிறது. இந்த சேவைக்காக மாணவர்களிடமிருந்து அவர்களின் கல்விக் கட்டணத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. இலவசமாக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

மேலும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையின் ஒரு பகுதியை பேருந்துகளின் பராமரிப்புக்காகச் செலவிட்டாலும், மீதமுள்ள தொகை பல்கலைக்கழகத்துக்கு லாபமாகக் கிடைக்கிறது. எனவே போனஸ் சட்டத்தின்படி இந்த லாபத் தொகையின் ஒரு பகுதியை பேருந்துகளை இயக்கும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களான எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி அனிதாசுமந்த் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போனஸ் சட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும், கல்வி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அரசு விதித்துள்ள சட்டங்களைப் பின்பற்றியே கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. எனவே கல்வி நிறுவனங்களுக்கு இந்த போனஸ் சட்டம் பொருந்தாது என பல்கலைக்கழகத்தின் சார்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தொழில் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் கல்வி நிறுவனங்கள் ஈட்டும் லாபத்துக்கும் வித்தியாசம் உள்ளது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் புதிதாக 15 பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி

By DIN | Published on : 28th May 2019 02:48 AM

தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் (2019-20) புதிதாக 15 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் 78 புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் குறைந்தபட்சம் 5 பொறியியல் கல்லூரிகள் முதல் அதிகபட்சம் 20 கல்லூரிகள் வரை மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தி வந்தன. 100-க்கும் அதிகமான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை பாதியாகக் குறைத்தன.
இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிலிருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக அளவில் பணிகள் வர ஆரம்பித்தன. இதனால், இந்த நிறுவனங்களில் மீண்டும் பணிவாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் கணினி சார்ந்த பொறியியல் படிப்பு இடங்களை கடந்த ஆண்டு முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. புதிய பொறியியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதேபோல், 2019-20-ஆம் கல்வியாண்டிலும் புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க ஏராளமான விண்ணப்பங்கள் ஏஐசிடிஇ-யிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

அதனடிப்படையில், நாடு முழுவதும் புதிதாக 78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதியளித்து அதற்கான அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 3,047 ஆகவும், மொத்த பி.இ., பி.டெக். இடங்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 26,392 ஆகவும் உயர்ந்துள்ளன.
இதில் தமிழகத்தில் மட்டும் 15 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், தமிழகத்திலுள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 518 ஆகவும், மொத்த பி.இ., பி.டெக். இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 79,507 ஆகவும் உள்ளன.
ஏற்கெனவே, தமிழகத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற அண்ணா பல்கலைக் கழகத்திடம் 22 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்காத நிலையில், புதிதாக 15 பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் படும் பாடு!

By ரமாமணி சுந்தர் | Published on : 28th May 2019 01:56 AM |

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மாதவிடாய் சுகாதார தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஜெர்மனி நாட்டிலுள்ள வாஷ் யுனைடெட் என்னும் தொண்டு நிறுவனம் மாதவிடாய் சுகாதார தினத்தை 2013-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தது.

மாதவிடாய் தொடர்பாக இளம் பெண்கள், மகளிர் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்னைகளைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்குவதும், அவர்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதுமே மாதவிடாய் சுகாதார தினத்தை கடைப்பிடிப்பதற்கான நோக்கங்கள். ஒருகாலத்தில் பெண்கள் தங்களுக்குள்ளேயேகூட பேசிக்கொள்வதற்கு கூச்சப்பட்டுக் கொண்டிருந்த மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் பற்றி இப்போது சில ஆண்களும் சிந்திக்கத் தொடங்கியிருப்பதும், அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முற்பட்டிருப்பதும் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க மாற்றங்கள்.

மே 21 முதல் 28 -ஆம் தேதி வரை நமது நாட்டின் ஒன்பது மாநிலங்களிலும், அண்டை நாடான நேபாளத்திலும் மாசிகா மஹோத்ஸவ் என்னும் மாதவிடாய் உற்சவம் கொண்டாடப்படுகிறது. மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளை களைந்தெறிவதே இந்த விழாவின் நோக்கம்.
மாதவிலக்கின் மூன்று நாள்களும் பெண்கள் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுவது இன்னமும் கிராமப்புறங்களிலும், சில குடும்பங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மாதவிலக்கு காலத்தில் உணவுப் பொருள்களை குறிப்பாக ஊறுகாய் போன்ற பண்டங்களை தொடக்கூடாது போன்ற மூட நம்பிக்கைகளும், அவர்கள் மேல் விதிக்கப்படும் சில தடைகளும் மாதவிடாய் சுகாதாரத்துக்கு குறுக்கே நிற்கின்றன. அந்த நாள்களில் அசுத்தமானவர்கள் என்று கருதப்படுவதால் வீட்டுக்குள்ளும், வெளியிலும் சில இடங்களுக்குச் செல்வதற்கு பெண்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. அந்த மூன்று நாள்களும் அவர்களுக்கு குளிப்பதற்குகூட அனுமதி கிடையாது. நல்ல சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டிய அந்த நாள்களில், மீத  மிருக்கும் உணவு அல்லது பழைய உணவே வழங்கப்படுகிறது.

அந்த நாள்களில் குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது என்பதால், பல பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகளை தாங்களாகவே கடைகளிலிருந்து வாங்கிச் சாப்பிடுவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாதவிலக்கு சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட செயல்கள் அவர்களின் உடல்நலத்தை வெகுவாகப் பாதிக்கக் கூடும்.

2015-16-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய குடும்ப சுகாதார ஆய்விலிருந்து, நமது நாட்டில் 58 சதவீத பெண்கள் மட்டுமே, அதுவும் கிராமப்புறங்களில் 48 சதவீத பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிய வருகிறது. ஏனைய பெண்கள் பெரும்பாலும் வீட்டிலுள்ள பழைய துணியை உபயோகிப்பது மட்டுமல்லாமல், அதையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர்.
மாதவிலக்கு சமயத்தில் சுத்தமாக இல்லாமல் இருப்பதே இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் 60 சதவீத நோய்த்தொற்றுக்குக் காரணம் என்று ஐ.நா. மக்கள் தொகை நிதியம் 2012 -இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் 60,000 பெண்கள் உயிரிழக்கிறார்கள் என்றும், இவர்களில் மூன்று பேரில் இருவருக்கு இந்தப் புற்றுநோய் வருவதற்குக் காரணம், மாதவிடாய் சமயத்தில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காததே என்றும் கூறப்படுகிறது.

நமது பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு நாப்கின்களின் அவசியத்தை எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல், அதைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்த பெருமை கோவையைச் சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலத்தைச் சேரும். குறைந்த செலவில் நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து ஏழைப் பெண்களும் நாப்கின்களை பயன்படுத்த வழிவகுத்த இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.
இவர் கண்டுபிடித்த இயந்திரம் இன்று நாட்டின் 26 மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளது. இவரது வாழ்க்கைக் கதை பேட்மேன் என்ற இந்தி திரைப்படமாக வெளிவந்திருப்பதும், இவர் நடித்த ஆவணப் படத்துக்கு 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதும், மகளிரின் மாதவிலக்கு சுகாதாரம் எந்த அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. 

தேசிய சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக, 2011 -ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும் மாதவிடாய் சுகாதார திட்டத்தின் கீழ், 10-19 வயதுள்ள பெண்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு, மாதவிலக்கு தொடர்பான சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்குவது, அவர்களுக்கு ஆஷா அமைப்பின் ஊழியர்கள் மூலம் மலிவு விலையில் நாப்கின்கள் விற்பனை செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
 
பள்ளிகளில் பெண்களுக்கென்று கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் பல பெண் குழந்தைகள் கல்வியைத் தொடருவதில்லை என்றும், அப்படியே தொடர்ந்தாலும் அந்த மூன்று நாள்களும் பள்ளிக்குச் செல்வதில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. பிரதம் எனும் நிறுவனம் 2018-இல் நடத்திய 13-ஆவது வருடாந்திர கல்வி நிலை ஆய்வு அறிக்கையின்படி, நமது கிராமங்களில் 11.5 சதவீத பள்ளிகளில் பெண்களுக்கென்று தனியாக கழிப்பறை வசதி இல்லை என்றும், 23 சதவீத பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தும் அவை பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என்பதும் தெரிய வருகிறது.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பது ஒரு பெரிய சவால். வணிக ரீதியா விற்பனையாகும் நாப்கின்களில் உள்ள பிளாஸ்டிக், மக்காத குப்பையைச் சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல பள்ளிகளில் பெண்கள் கழிப்பறையில் நாப்கின்களை எரித்து சாம்பலாகும் இயந்திரங்கள் (இன்ஸினரேட்டர்ஸ்) பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த இயந்திரங்கள் அதிக புகையை வெளியேற்றி மாசு ஏற்படுத்தாமல் உறுதிப்படுத்துவது அவசியம்.

மாத விலக்கு சமயத்தில் தீவிர வயிற்று வலி, அதீத ரத்தப்போக்கு, தலைசுற்றல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவதால், பணி இடங்களில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று சென்ற ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நினோங் எரிங் என்பவர் மாதவிலக்கு அனுகூல மசோதா (மென்சுரேஷன் ஃபெனிஃபிட் பில்) ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஆனால், பணியிடங்களில் ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதும், பாலின அடிப்படையில் சலுகைகள் கேட்பது நியாயமில்லை என்பதும் பலரின் (மகளிர் உட்பட) வாதம். இந்தக் காரணத்துக்காகவே மகளிரை பணிக்கு அமர்த்துவது தவிர்க்கப்படலாம் என்பதும் ஒரு வாதம். ஆனால், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, தைவான், இத்தாலி, ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிலக்கு சமயத்தில் ஒன்றிரண்டு நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான தொழிலாளர் சட்டம் பல ஆண்டுகளாக அமலில் உள்ளது.
பிகார் அரசு 1992 -ஆம் ஆண்டிலிருந்து மகளிருக்கு மாதத்தில் இரண்டு நாள்கள் சிறப்பு விடுப்பு வழங்கி வருகிறது. 

மாதவிலக்கு தொடர்பாக ஒரு வேதனைக்குரிய தகவல். பொதுவாக நமது வீடுகளில் பெண் குழந்தை 12-13 வயதில் பூப்படையும்போது அதை ஒரு மங்களகரமான நிகழ்வாகக் கொண்டாடுகிறோம். ஆனால், ஆட்டிசம் அல்லது மன நலம் குன்றிய பெண் குழந்தைகள் பூப்படையும்போது அவர்களின் தாய்மார்களோ, ஆனந்தப்படுவதற்குப் பதில் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த மூன்று நாள்களைச் சமாளிக்க அந்தக் குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதற்குள் அந்தத் தாய் படும் இன்னல்கள் ஏராளம். எவ்வளவு பயிற்சி அளித்தாலும் சமாளிக்க முடியாத நிலையில், அறுவைச் சிகிச்சை செய்து அந்தப் பெண் குழந்தையின் கருப்பையை அகற்றி விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர்.

மாதவிலக்கு சமயத்தில் சுகாதாரத்தைக் கடைப்பிடித்து தங்கள் உடல் நலத்தை மகளிர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு குடும்பத்தினர் (குடும்பத்தில் உள்ள ஆண்கள் உட்பட), இந்தச் சமூகம் மற்றும் அரசும் ஒத்துழைக்க வேண்டும். அனுசரணையாக கணவர் இருப்பதுடன், மனைவி மற்றும் பெண் குழந்தைகளுக்கு நாப்கின் வாங்குவதற்கு பணம் கொடுக்க வேண்டும்.

பெண்கள் ஒரு நாளில் பல மணி நேரங்களைச் செலவிடும் பள்ளிக்கூடம், கல்லூரி, பணியிடங்களில் அவர்களுக்கென்று தண்ணீர், சோப்பு, தாழ்ப்பாளுடன் கூடிய கதவு போன்ற வசதிகள் கொண்ட தனிக் கழிப்பிடம் இருக்க வேண்டும். உபயோகித்த நாப்கின்களை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு அப்புறப்படுத்துவதற்கான வழிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். வணிக ரீதியாக விற்கப்படும் நாப்கின்களை வாங்க வசதியில்லாதவர்களுக்கு மலிவு விலையில் தரமான நாப்கின்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்:
சமூக ஆர்வலர்.

(இன்று மாதவிடாய் சுகாதார தினம்.)
திருமலையில் குவியும் முதல்வர்கள்

Updated : மே 28, 2019 00:05 | Added : மே 28, 2019 00:03 |

திருப்பதி: தேர்தல் முடிவு வெளி வந்து விட்ட நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, பல மாநில முதல்வர்கள் குவிந்து வருகின்றனர்.
நாட்டில், 17வது லோக்சபா தேர்தல், ஏப்ரல், 11 முதல், மே, 19 வரை, ஏழு கட்டங்களாக நடந்தது. நான்கு மாநிலங்களில், சட்டசபைக்கான தேர்தலும் நடந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை, 23ல் நடந்து முடிந்தது. மத்தியிலும், மாநிலங்களிலும் புதிய அமைச்சரவை அமைய உள்ளது. இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று ஏழுமலையானை தரிசித்தார். அவரை தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நேற்று மாலை திருமலைக்கு வந்தார்.

அவர், இன்று காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். அவரை அடுத்து, ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, நாளை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.தேர்தல் முடிவுகளுக்காக வேண்டுதல் செய்து கொண்ட, பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ஏழுமலையானை தரிசிக்க,தி ருமலையில் குவிந்து வருகின்றனர்.
'சித்தா' படிப்புக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம்!

Updated : மே 28, 2019 07:13 | Added : மே 28, 2019 04:42

'சித்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையும், 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே நடைபெறும்' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.அதேபோல, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும், 2018 - 19 கல்வியாண்டு முதல், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. 

ஆனால், 2018 - 19ல், மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே, தமிழக அரசு நடத்தியது.இதற்கிடையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், 'இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்புகளுக்கு, நீட் தேர்வு தேவையில்லை.ஆனால், சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, இந்தாண்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, 393 இடங்கள் உள்ளன.அதில், இயற்கை மருத்துவம், யோகா படிப் புகளுக்கான, 60 இடங்கள் போக, மீதமுள்ள, 333 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது.இது குறித்து, சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சித்த மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என, மத்திய ஆயுஷ்அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதற்கு, நாம் மறுப்பு தெரிவித்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த, அனுமதி கோரினோம்; மத்திய அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாக, தமிழக அட்வகேட் ஜெனரலிடமும் ஆலோசனை நடத்தினோம். மற்ற மாநிலங்களில், நீட் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்துவதால், நாமும், அதையே பின்பற்ற வேண்டும் என, தெரிவித்தனர்.

எனவே, நீட் தேர்வின் படியே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இருப்பினும், மறு பரிசீலனை கோரி, மத்திய அரசுக்கு, மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளோம். அதற்கு பலன் கிடைக்குமா என, தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

BHOPAL NEWS