Monday, January 16, 2017

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு: நிரந்தரமாக விலக்கு பெற புதிய சட்டம்; தமிழக அரசு தீவிர முயற்சி

சி.கண்ணன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தரமாக விலக்கு பெறும் வகையில் புதிய சட்டம் இயற்றும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த கல்வியாண்டில் (2016-17) தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் நிரப்பப்பட்டது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் மாநில அரசுக்கான 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளின் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலமாகவும், அரசு கல்லூரிகளில் தேசிய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் நுழைவுத்தேர்வு மூலமாகவும் நிரப்பப்பட்டன.

இந்த கல்வி ஆண்டுக்கான (2017-18) நீட் தேர்வு குறித்த அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வர உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவது சம்பந்தமாக சட்ட நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
நீட் தேர்வு குறித்து அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவந்த பிறகுதான் நீட் தேர்வை நடத்த வேண்டும். இப்போது நீட் தேர்வு நடத்தினால் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ளதால், சென்னை போன்ற பெருநகரங்களில் பயிற்சி மையங்கள் அதிகரித்து வருகின்றன. வசதியான மாணவர்கள் அதில் சேர்ந்து வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்க வேண்டும்’’ என்றார்.

தமிழுக்குப் பெருமை!

By ஆசிரியர்  |   Published on : 16th January 2017 01:59 AM

இன்றைய உலகமய, தொழில்நுட்ப சூழலில், தமிழ்வழிக் கல்வி என்பது வருங்காலத்துக்கு உதவாது என்கிற கருத்தைப் பொய்யாக்கியிருக்கிறார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பதவி ஏற்க இருக்கும் நடராஜன் சந்திரசேகரன். தமிழகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரசேகரனின் நியமனம் டாடா சன்ஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய திருப்பம். டாடா சன்ஸ் என்கிற 10,300 கோடி டாலர் (ரூபாய் சுமார் 7 லட்சம் கோடி) வர்த்தகக் குழுமத்தின் தலைவராக, பார்ஸி இனத்துக்கு வெளியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

டாடா சன்ஸ் என்பது இந்தியாவிலேயே மிகவும் பழைமையான, சர்வதேச அளவில் அறியப்படும் வணிகக் கூட்டாண்மை நிறு
வனம். இந்தக் குழுமத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் செயல்படுகின்றன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தக் குழுமத்தின் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அப்படிப்பட்ட டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்படுகிறார் என்றால் அது தமிழகத்திற்குப் பெருமை.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியிலும், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திலும் படித்து பொறியியல் பட்டமும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்சில் முது   நிலைப் பட்டமும் பெற்றவர். 1987-இல் டாடா சன்ஸ் குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீஸில் சேர்ந்த சந்திரசேகரன், 2009-இல் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் தலைவராக உயர்ந்தவர். ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து டாடா நிறுவனத்திலேயே இருந்து வந்த அவருக்கு, இப்போது கிடைத்திருக்கும் தலைமைப் பதவி திறமைக்காக மட்டுமல்ல, விசுவாசத்திற்காகவும்கூட.

அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற சந்திரசேகரன் மட்டுமல்ல, அவரது இரண்டு சகோதரர்களும் இன்று மிகப்பெரிய நிர்வாகிகளாக வலம் வருகிறார்கள். அவரது மூத்த சகோதரர் சீனி
வாசன், முருகப்பா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவர். இன்னொரு சகோதரர் டாடா கன்சல்டன்சி சர்வீஸின் தலைமை செயல் அதிகாரி. இந்த மூன்று திறமைசாலிகளின் தந்தை எஸ். நடராஜன், வழக்குரைஞர் தொழிலிலிருந்து ஓய்வுபெற்று மோகனூரில் விவ
சாயத்தில் ஈடுபட்டவர். 85 வயது நடராஜனுக்கும், 82 வயதான மீனாட்சிக்கும் தமிழகமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

சர்வதேச வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்ததற்கும், புதிய சந்தைகளைத் தனது நிறுவனத்திற்குத் தேடித் தந்ததற்கும் அவரது நிறுவனத்தால் பாராட்டப்படுபவர் சந்திரசேகரன். தனது நிறுவனத்திற்கு வெளியே இருந்து ஒருவரைத் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுப்பதைவிட, ஊழியர்களில் ஒருவரையே டாடா சன்ஸ் தலைவராகத் தேர்ந்தெடுத்ததற்கு, அந்த நிறுவனத்தின் கொள்கைகள், அடிப்படை குணாதிசயங்கள், மக்கள் மத்தியில் அந்த நிறுவனத்தின் பொருள்களுக்கு இருக்கும் மரியாதை ஆகியவற்றை நன்கு உணர்ந்த, நிறுவனத்தின் மீது விசுவாசமுள்ள ஒருவர் தலைமைப் பொறுப்பில் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்பதுதான் காரணம். இதற்கு முன் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சைரஸ் மிஸ்திரியிடம் இவை காணப்படவில்லை என்பதுதான் அவர்மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு.
கடந்த சில ஆண்டுகளாக, டாடா நிறுவனம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அதன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமைந்த நீரா ராடியா விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போது சைரஸ் மிஸ்திரியின் நீக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை, அந்தக் குழுமத்தை நீதிமன்றத்திற்கும், நிறுவன சட்ட ஆணையத்திற்கும் இழுத்திருக்கிறது.

வியாபார ரீதியாகப் பார்த்தால், சர்வதேச இரும்பு உருக்கு நிறு
வனமான கோரûஸ வாங்கியதால் ஏற்பட்ட பேரிழப்பும், ஜப்பானிய நிறுவனமான டொக்கோமோவுடனான பிரச்னையும் புதிய தலைவரை எதிர்கொள்கின்றன. டாடா நிறுவனத்தின் ஹோட்டல், மோட்டார் வாகனம், விமானப் போக்குவரத்து போன்றவற்றின் செயல்
பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தி, அந்தத் துறைகளில் முன்னணி நிலையை அடைந்தாக வேண்டும். முதலீட்டாளர்கள், பங்குதாரர்
களின் நம்பிக்கையைப் பெறுவது என்பது இன்னொரு சவால்.
நிர்வாக செயல்பாடுகள் மூலம்தான் இழந்த நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க முடியும்.

சைரஸ் மிஸ்திரியின் மிகப்பெரிய குற்றச்சாட்டே, தன்னை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்பதுதான். நிச்சயமாக ரத்தன் டாடாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா சன்ஸின் இயக்குநர் குழுவின் தலையீடுகளை சந்திரசேகரன் ஆரம்ப கட்டங்களில் சகித்துக் கொண்டாக வேண்டும். இந்த நிறுவனத்தின் அடிமட்டத்
திலிருந்து உயர்ந்திருப்பவர் என்பதால் அது சந்திரசேகரனுக்கு சிரமமானதாக இருக்காது. சைரஸ் மிஸ்திரிபோல இவர் "உங்களுக்கு மேலே' என்கிற மனப்போக்கில் செயல்பட மாட்டார் என்பது
நிச்சயம்.

சந்திரசேகரன் ஒரு புகைப்படக் கலைஞரும், சங்கீத ரசிகரும் மட்டுமல்லாமல் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியவரும்கூட. ஆம்ஸ்டர்டாம், பாஸ்டன், சிகாகோ, பெர்லின், மும்பை, நியூயார்க், டோக்கியோ ஆகிய நகரங்களில் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருப்பவர்.

அவற்றையெல்லாம்விடப் பெரிய, சிரமமான மாரத்தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவி. திருக்குறள் கற்று வளர்ந்த இந்தத் தமிழருக்கு "ஞாலம் கருதினும் கைகூடும்' என்பது தெரியும். அவருக்கு "தினமணி'யின் வாழ்த்துகள்!

Sunday, January 15, 2017

ஊழலற்ற அரசியல் கொள்கைக்காக போராடியவர் சோ: மோடி புகழாராம்

சென்னை: 'நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காக போராடியவர் சோ' என்று பிரதமர் மோடி புகழாராம் சூட்டினார்.துக்ளக் இதழின் 47 வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை ஆற்றினார்.
 
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: பன்முகத் தன்மை கொண்டவர் துக்ளக் ஆசிரியராக இருந்த சோவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனக்கும் சோவுக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் பல ஆண்டுகள் நட்பு உண்டு. என் வாழ்வில் நான் சந்தித்த பன்முகத் தன்மை கொண்ட சிலரில் சோவும் ஒருவர். பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர், கதாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகள் கொண்டவர். பல துறைகளில் சிறந்து விளங்கினாலும் துக்ளக் ஆசிரியர் என்ற பொறுப்பு அவருக்கான மணி மகுடமாகும். ஊழலற்ற அரசியலுக்காக போராடியவர் நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் விமர்ச்சித்தவர். விமர்ச்சிக்க கடினமான விசயங்களையும் ஒரே வரி, கருத்து சித்திரம் மூலம் எளிதாக புரிய வைத்தவர். விமர்ச்சிக்கப்பட்டவர்கள் கூட விரும்பும் தன்மை கொண்டவர்.

சோவின் விமர்சனத்தை தவிர்த்துவிட்டு இந்திய அரசியல் வரலாற்றை எழுத முடியாது. நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காகவே போராடியவர். சோவின் மறைவு துக்ளக் பத்திரிக்கைக்கு மிகப்பெரும் இழப்பு. சோ காட்டிய பாதையில் துக்ளக் ஆசிரியராக குருமூர்த்தி சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

குருமூர்த்திக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தன் உரையை துவக்கினார்.
Dailyhunt

குடும்ப அரசியலை பார்த்துக் கொண்டு துக்ளக் சும்மா இருக்காது - ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு

சென்னை: துக்ளக் இதழில் 47ஆவது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ஆசிரியர் சோ. ராமசாமியின் மறைவிற்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தும் விழாவாகவே இது அமைந்தது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
இதில் துக்ளக் இதழில் புதிய ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசினார். அப்போது அவர் இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியல் திசை தவறி தறி கெட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாம் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

துக்ளக்கில் என்ன எழுத வேண்டும் என்பதை ஒரு குழுவாகவே முடிவு செய்கிறோம். தனி குரு மூர்த்தியின் சிந்தனை மட்டுமல்ல. இது குழுவின் முடிவு.

அவரவர் ஒரிஜினாலிட்டியை பயன்படுத்துகிறோம் என்றும் கூறினார். சோ அவர்கள் குடும்ப அரசியலை கடுமையாக எதிர்த்தார். தமிழகத்தில் ஒரு கட்சிதான் குடும்ப அரசியலுக்குள் போய்க் கொண்டிருந்தது. இன்றைக்கு இன்னொரு கட்சியும் குடும்ப அரசியலுக்குள் போய்க்கொண்டிருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது என்று கூறினார்.

இதைப் பார்த்துக்கொண்டு துக்ளக் சும்மா இருக்காது என்று தெரிவித்த குருமூர்த்தி, எனக்கு ஏன் வம்பு என்று என்னிடம் வந்து சிலர் பேசுகின்றனர். அவர்களிடம் எல்லோரும் பயப்படுவதினால்தான் நான் எழுதுகிறேன் என்றார்.
பத்திரிகை உலகில் ஒருவித பயம் தெரிகிறது. எதிர்த்து பேசக்கூடாது என்று நினைக்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. நம் நாட்டின் ஆன்மீக குணத்திற்கு நல்லதல்ல எந்த விதமான நல்ல குணத்திற்கும் நல்லதல்ல. இதற்கெல்லாம் மாற்று மருந்து இன்றைக்கு இருக்கிற துக்ளக்தான் என்றும் கூறி அமர்ந்தார் குருமூர்த்தி.
தை பொங்கல் நாளில் துக்ளக் ஆண்டுவிழாவில் சோ பேச்சில்தான் நக்கல், நையாண்டி, அரசியல் கலந்து அனல் பறக்கும். அவரது மறைவிற்குப் பிறகு நடக்கும் முதல் விழாவில் குருமூர்த்தி பேசியது பரபரப்பை பற்ற வைத்து விட்டது என்றே கூறலாம்.
source: oneindia.com
Dailyhunt

மழை, வெள்ளத்தால் அமெரிக்காவில் மூன்று மாகாணங்கள் பாதிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா, நவேடா, ஓரேகான் மாகாணங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கன மழையோடு, தொடர்ந்து பெய்த பனியும் சேர்ந்து கொண்டால், அந்த மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிபோய் உள்ளது.

சாலைகளில் தண்ணீர் பெருகியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆற்றங்கரையோரம் வசித்த 5000 பேரை கலிபோர்னியா மாகாண அரசு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளது.
முக்கியமாக, ஓரேகான் மாகாணத்தில் 60 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Dailyhunt
 எக்ஸ்கியூஸ்மீ... உங்களுக்கு சொந்த வீடா? வாடகை வீடா?

By கார்த்திகா வாசுதேவன்  |

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கென்று இதுவரை சட்ட உரிமைகள் எதுவும் கண்டடையப்படவே இல்லையா? இல்லை எனில்... ஏன்? ஏன்? ஏன்
மிக அதிக வாடகை கொடுத்து ஒரு வீட்டில் குடி இருந்தாலும் யாருக்கோ பயந்து கொண்டு வாழ்வதைப் போலான ஒரு நிலைமையை ஏற்படுத்தும் வீட்டு உரிமையாளர்களின் சர்வாதிகாரப் போக்கை கட்டுப்படுத்த சட்ட உரிமைகள் தேவையா இல்லையா? 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வாடகை கொடுத்து குடியிருக்கும் நபருக்கே அந்த வீடு சொந்தம் என்ற சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா! நடுத்தர குடும்பஸ்தர்களுக்கு தமது ஒட்டு மொத்த வாழ்நாளுக்கும் சேர்த்து தமக்கென்று ஒரே ஒரு சொந்த வீடு என்பது தான் வாழ்நாள் லட்சியம்... கனவு என்று சொல்லலாம், அப்படி கட்டிய வீட்டை விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு மீண்டும் வாடகை வீட்டுக்கு குடியேறும் நிலை வந்தால் அந்த வாழ்வின் அர்த்தம் என்ன?!

வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடி இருப்பவர்கள் என்பதைத் தாண்டி இடைத்தரகர்கள் என்றொரு பிரிவு வாடகை வீடு தேடுபவர்களின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறதே, இதை எல்லாம் முறைப்படுத்த சட்ட ரீதியாக எதுவும் செய்ய இயலாதா? அகஸ்மாத்தாக மனிதத் தன்மையும் கொஞ்சம் நேர்மையும் கலந்த வீட்டு உரிமையாளர்கள் அல்லது சட்ட நிபுணர்கள் இதற்கு பதில் அளிக்க முயற்சிக்கலாம்.

800 சதுர அடி வீட்டுக்கு 10000 ரூபாய் வாடகை அட்வான்ஸ் வீட்டு உரிமையாளர்களின் நோக்கம் போல அவர்களது மனநிலைக்குத் தக்க தீர்மானிக்கப்படும் , குறைந்த பட்சம் 50000 லிருந்து 1 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்ட தொகை, முகப்பேரில் உறவினர் ஒருவர் வீடு தேடிக் கொண்டிருந்தார் நகர சந்தடி அற்ற புறநகர் பகுதி வீடு ஒன்றிற்கே, 900 சதுர அடி வீட்டுக்கு 8000 ரூ வாடகை 80,000 ரூ அட்வான்ஸ் கேட்கப் பட்டது ,இந்த அட்வான்ஸ் தொகையை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள் என்று தெரியவில்லை, ரொம்பத் தெரிந்தவர்கள் என்றால் தொகை குறையுமாம், அறிமுகமற்றவர்கள் என்றால் 10 மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாகத் தர வேண்டியதாய் இருக்கும்.வாடகைக்கு வீடு தேடும் பலரும் இந்த அட்வான்ஸ் தொகையையே பெர்சனல் லோனில் தான் வாங்க வேண்டிய நிலையிலிருப்பார்கள், ஆக மொத்தம் வீட்டு வாடகையோடு இந்த பெர்சனல் லோன் டியூவும் மாதாந்திர செலவில் சேர்ந்து கொள்ளும்,
இன்னொரு சகிக்க முடியாத கஷ்டம், இடைத் தரகர்கள் இல்லாமல் வீடு வாடகைக்குக் கிடைத்தால் சரி இல்லையேல்; அவர்களுக்கு ஒரு மாத வாடகைத் தொகையை கமிஷனாகத் தர வேண்டும். சரி இப்படி கமிஷன் அடிக்கிறார்களே அதில் ஒரு நேர்மை, குறைந்தபட்ச நியாயம் இருக்குமா? என்றால் அதுவும் இல்லை, வீட்டு உரிமையாளர் நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகையைக் காட்டிலும் இந்த இடைத் தரகர்கள் 500 அல்லது 1000 ரூ அதிகமாக சொல்லித் தான் வீட்டையே கண்ணில் காட்டுவார்கள்,

எங்களது ஏரியாவில்  400 சதுர அடிகள் கொண்ட சிங்கிள் பெட் ரூம் பிளாட் ஒன்று சென்ற மாதம் காலி ஆனது, முன்பு இருந்தவர்கள் அந்த வீட்டுக்கு கொடுத்து வந்த வாடகை 5000 ரூ ,வீட்டுக்கு வெள்ளை அடித்து புதுபித்து இருக்கும் அதன் உரிமையாளர் இப்போது அந்த வீட்டுக்கு நிர்ணயித்த வாடகைத் தொகை 7000 ரூ ஆனால் உரிமையாளர் இந்தப் பணியை ஒப்டைத்திருக்கும் இடைத்தரகர் அந்த வீட்டுக்கு நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகை 8000 ரூபாய்.
இது தவிர குடிநீருக்கு மாதம் 500 ரூபாய், கரண்ட் யூனிட் ஒன்றிற்கு வாடகைக்கு குடி இருப்பவர்கள் மாத்திரம் 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை தீர்மாணிக்கிறார்கள், இதில் வீட்டு உரிமையாளர்கள் வைத்தது தான் சட்டம், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது யூனிட்டிற்கு 5 ரூபாய்க்கு கீழ் வாங்குவதே இல்லை. அதன்படி பார்த்தால் ஜெ அறிவிப்பின் படி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், எனும் சலுகையை அனுபவிப்பவர்கள் பெரும்பாலும் சொந்த வீடு வைத்திருப்பவர்களும், வாடகைக்கு வீடு விட்ட புண்ணியாத்மாக்களும் தான். இதற்கெல்லாம் கேள்விமுறைகளே இல்லை. அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் இல்லை.

வாடகைக்கு வீடு தேடும் போது, இடைத் தரகர்களின் சாகசப் பேச்சு வலையில் சிக்காமல் ஒரு வீட்டுக்கு இத்தனை வாடகை தான் தகும் என நியாயமான வாடகைக்கு குடி போக மக்களுக்கு ஆலோசனை தரும் மையங்கள் எதுவும் தமிழகத்தில் இது வரை உருவானதுண்டா!?அரசு நிர்ணயித்துள்ள மின்சார கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூ, அதை பொருட்படுத்தாமல் அல்லது அரசை மதிக்காமல் தான் யூனிட்டிற்கு 5 ரூபாய் அல்லது அதைவிட கூடுதல் தொகை வசூலிக்கப் படுகிறது எனும் போது, இது தண்டனைக்குரிய குற்றம் ஆகாதா? அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா? இதற்கெல்லாம் என்ன வரைமுறைகள்?!
இந்தத் தொல்லைகளில் அலைக்கழிக்கப் பட்டு நொந்து போய் கட்டக் கடைசியாய் சொந்த வீடு இல்லை பிளாட் வாங்குவது என்று முடிவெடுத்தால் சிரமம் குறைந்து விடப் போவதில்லை, அதிகக் குடியிருப்புகள் கொண்ட ஃபிளாட்களில் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிச் செல்வோம். அங்கே மாதாந்திர மெயிண்டனன்ஸ் தொகை கண்டிப்பாக 2000 க்கு குறையாது, லோனில் வீடு வாங்கியிருந்தால அந்தத் தொகையோடு செலவுக் கணக்கில் இந்த மெயிண்டனன்ஸ் தொகையையும் சேர்த்து தான் கணக்கிட வேண்டியதாய் இருக்கும்.

ஆக மொத்தம் சொந்த வீடு என்று ஆகி விட்டால் செலவு குறையும் என்று ஆசுவாசப்பட்டுக் கொள்ள முடியாது. முன்பு வாடகை வீட்டில் முறைவாசல் செய்பவர்களுக்கும், வீடு பெருக்கி, பாத்திரம் கழுவ வருகிறவர்களுக்கும் கொடுக்கும் தொகை போக இப்போது ஜிம், பார்க், டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர், மெடிக்கல் சாப் வசதிகள் என்று ஃபிளாட்டில் அழ வேண்டியதாய் இருக்கும். இத்தனைக்கும் கூரை நமக்கில்லை, கீழே தரை தளமும் நமக்கில்லை. பாண்டி விளையாட்டில் கோடு கிழிப்பதைப் போல துண்டு துண்டாய் கோடு கிழித்து வைத்திருப்பார்கள், கார் பார்கிங் என்று அதற்கும் லட்சக் கணக்கில் அழுது விட்டு மூச்சுக் காட்டாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் ஒரு தேர்ந்த சொந்த ஃபிளாட்வாசி .

இதைக்காட்டிலும் சிரமம் ஒன்றுள்ளது, வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு இடையிலான நட்புறவு, நீ யாரோ! நான் யாரோ! என்பதெல்லாம் சாதாரணம், பழைய குடித்தனக்காரர்கள் புதிதாகக் குடி வருபவர்களை எதிரிகளைப் போல அல்லது நாங்கள் இங்கே பல வருடங்களாய் இருக்கிறோம்... நீ முந்தா நாள் மழையில் நேற்று முளைத்த காளான்! ரீதியில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர தொனியில் தான் கண்ணெடுத்துப் பார்க்கிறார்கள், இவர்களுக்கிடையே நல்ல நட்பு நீடிக்கவோ அல்லது முளைவிடவோ முடியுமா?
பழகும் முறை ரொம்பத் தான் பாழ்பட்டுக் கிடக்கிறது, எப்போதும் நம்மை யாராவது ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம், ஜாக்கிரதை உணர்வு நொடிக்கொரு முறை மண்டையில் அலாரம் அடிக்குமோ என்னவோ! யாரும் யாரோடும் சுமுகமாய் பழகுவதே இல்லை, வெளிப் பகட்டுப் பேச்சுக்கள் எத்தனை நிமிடங்களுக்கு! 

சரி போனாப் போகுது, யாரும் எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு சொந்த ஃபிளாட் ஆயாச்சு, இனி என்ன கவலைன்னு கொஞ்சம் உட்கார்ந்து மூச்சு வாங்கி விட கூடாது, மாச செலவுன்னா அது ஹவுசிங் லோன் கட்றதும் வீட்டு வாடகை, தண்ணி பில், கரண்ட் பில் கட்டுவதோடு முடிந்து விடுகிறதா என்ன? இல்லையே, இரவில் தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... உங்கள் குழந்தை படுத்திருக்கும் பொசிஸனில் ஏதோ ஒரு கணத்தில் திடீரென்று அதற்கு கழுத்து சுழுக்கி விடுகிறது! இதென்ன கிராமமா சுழுக்கெடுப்பவர்களைத் தேடிக் கொண்டு ஓட?! இல்லாவிட்டால் வீட்டுக்கு வீடு சுழுக்கெடுக்கவென்றே அனுபவமிக்க பாட்டிகள் தான் இருக்கிறார்களா? தனிக்குடும்ப பேரவஸ்தைகளில் மாட்டிக் கொண்டவர்களால் தான் இந்த தருணத்தின் பேரவஸ்தையை மிக நன்றாக உணர முடியும். வேறு வழியே இல்லை குழந்தை வலியில் கதறும் கதறல், பெற்றவர்களான நம்மை குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடுராத்திரி, நடுப்பகல் என்றெல்லாம் பார்க்காமல் டாக்டர்களிடம் ஓட வைக்கும்.  ,டாக்டர் குழந்தையைத்  தொட்டுக் கூடப் பார்த்திருக்க  மாட்டார், ஆனால் கன்சல்டிங் கட்டணம் 500 ரூ க்கு குறையின்றி வாங்கி விடுவார். இல்லையேல் அவர் திறமையான டாக்டர் இல்லையென்றாகி விடுமாம்! மருத்துவமனையையும் சும்மா சொல்லக் கூடாது இன்டீரியர் டெகரேசன் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் மெயிண்டெயின் செய்திருப்பார்கள். அதற்கும் சேர்த்துத் தான் கன்சல்டிங் கட்டணம்  வாங்குகிறார்களோ என்றிருக்கும்.

என்னத்தை சொல்ல இதோடு நிறுத்திக் கொள்ளலாம்... ஏனெனில் நாம் எத்தனை விவாதித்தாலும் மேலே சொன்ன விசயங்கள் எதிலும் எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை. மோடியின் கருப்புப் பண ஒழிப்பு போராட்டத்தின் பின்னும் இதே தான் மாறா நிலை.

மாநகரங்களைப் பொறுத்தவரை சொந்த வீடோ... வாடகை வீடோ! எதுவானாலும் செலவுகள் சாமானியர்களின் மென்னியை முறித்துக் கொண்டு அமுக்கும் நிலையில் தான் எப்போதும் இருக்கின்றன. 

கையில வாங்கினேன்...பையில போடல; காசு போன இடம் தெரியல...” என்று பழைய பாடல் ஒன்றுண்டு.

அந்தக் கதை தான் இப்போதும் பலருக்கு!

ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு!

By ஆசிரியர்  |   Published on : 14th January 2017 01:25 AM 

தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். நமது உரிமைகளையும், உணர்வுகளையும், பாரம்பரியங்களையும் காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பீட்டாவின் வாதத்தை ஏற்று நமக்கு எதிராக நிற்கிறது.

நாட்டு மாடுகளின் அழிவுக்கு முதல் காரணம் பாலுக்கு போதிய விலை கிடைக்காததுதான். ஒரு லிட்டர் குடிநீர் ரூ.25-க்கும், குளிர்பானங்கள் ரூ.60 முதல் ரூ.70 வரையும் விற்கப்படுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு லிட்டர் பசும்பால் ரூ.22 முதல் ரூ.25 வரையிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது. பால் விலை உயர்வால் மக்கள் சிரமப்படுவார்கள் என்று கவலைப்படும் நமது அரசியல்வாதிகள், பால் உற்பத்தி செய்யும் ஏழை விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது.

மாட்டுக்கு கொடுக்கக்கூடிய அடர் தீவனம் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. நாட்டு மாடு ஒன்று ஒரு வேளைக்கு அதிகபட்சம் 2 லிட்டர் வரை மட்டுமே பால் கொடுக்கும். கறவையில் இருக்கும் மாட்டுக்கு நிச்சயம் ஒரு வேளைக்கு ஒரு கிலோ அடர் தீவனம் கொடுத்தாக வேண்டும். இதுதவிர உலர் தீவனம், பசும்புல், பராமரிப்பு செலவு என இதர விஷயங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாட்டு மாடு வளர்ப்பது என்பது பொருளாதார ரீதியாக பெருத்த நஷ்டம்தான்.
ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, அரசு அறிமுகப்படுத்திய, அதிக பால் தரக்கூடிய ஜெர்ஸி மற்றும் எச்.எப். என்றழைக்கப்படும் கறுப்பு - வெள்ளை நிறத்திலான கலப்பின பசுக்களை வாங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட, அப்போது ஆரம்பமானது நாட்டு மாடுகளின் அழிவு. வேடிக்கை என்னவென்றால், பிரேஸில் உள்ளிட்ட சில நாடுகள் நமது நாட்டு மாடுகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதற்குக் காரணம் அவற்றிற்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான்.

நமது நாட்டு மாடுகள் வெளுத்து வாங்கும் வெயிலை மட்டுமல்ல, கன மழையையும், கடுங்குளிரையும் தாங்கக் கூடியவை. கடுமையான வறட்சியிலும் நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியும். அபரிமிதமான எதிர்ப்பு சக்தி கொண்ட நாட்டு மாடுகளை அவ்வளவு எளிதாக எந்த நோயும் தாக்காது. ஆனால் கலப்பின மாடுகள், எல்லா காலநிலைகளிலும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். வெயில் காலத்தில் அயர்ச்சியால் இறக்கும். மழைக் காலத்தில் கால் மற்றும் வாய்ப் பகுதியில் புண் (எப்.எம்.டி.) ஏற்பட்டு இறக்க நேரிடும் அபாயம் உண்டு.
பால் மாடுகளைத் தாக்கும் மிகக் கொடிய நோயான மடிவீக்க நோய், கலப்பின மாடுகளைத் தாக்குவதற்கு 100 சதவீதம் வாய்ப்புள்ளது. கலப்பின மாடுகளுக்கு மாதந்தோறும் மருத்துவ செலவு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கலப்பின மாடுகளைவிட நம்முடைய நாட்டு மாடுகள் எல்லா வகையிலும் மேலானவைதான். ஆனால் பெரிய அளவில் அதில் பால் இல்லாததும், பாலுக்குப் போதிய விலை இல்லாததும்தான் அந்த மாடுகளின் உயிருக்கு உலை வைப்பதாக அமைந்தன.

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும், எண்ணெய் செக்குகளிலும், கமலை கட்டி தண்ணீர் இறைப்பதற்கும் நமது நாட்டு காளைகள்தான் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது எல்லாமே இயந்திரமயமாகிவிட்டதால் காளைகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. தற்போது ஒரு சிலர் தங்கள் வீட்டின் பால் தேவைக்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும் மட்டுமே நாட்டு மாடுகளை வளர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டும் தடைபடுமானால் காளைகள் இறைச்சிக் கூடத்துக்கு அனுப்பப்படுவது மேலும் அதிகரிக்கும். நாட்டுக் கன்றுகளின் பிறப்பு விகிதம் குறைந்து, கடைசியில் நாட்டு மாடுகளின் இனமே அழிந்துவிடும்.
மாட்டிறைச்சியை ஒருபுறம் அனுமதித்துக்கொண்டு, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையைச் சேர்த்திருப்பது போன்ற அபத்தம் வேறெதுவும் இல்லை. காளையை இறைச்சிக்காகக் கொல்லலாம், ஆனால் வீர விளையாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்கிற பீட்டாவின் வாதத்தை நீதிமன்றம் எப்படி, ஏன் ஏற்றுக்கொள்கிறது என்று புரியவில்லை.
காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளை நீக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி, கரடி, சிறுத்தை, குரங்கு, காளை போன்றவற்றிலிருந்து காளையை நீக்காத வரையில், காளை என்றால் மாடு, எருமை, கன்று, பசு என எல்லாமும் அடங்கும் என்கிற வனத் துறையின் விளக்கமும் அவ்வாறே தொடரும். ஆகவே, காளையை அப்பட்டியலில் இருந்து நீக்காமல் பிரச்னை தீராது.

ஒவ்வொரு மாநிலத்திலும் மரபு, கலாசாரம் போன்றவை வேறுபடுவதாக இருப்பதால், எந்தெந்த விலங்குகளை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பு அந்தந்த மாநில அரசிடம் இருப்பதே இந்தப் பிரச்னைக்கு மாற்றுத் தீர்வு. இதற்காவது அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து போராட வேண்டும். தமிழகத்தின் எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மத்திய அரசு அதற்கு இணங்குவதைத்தவிர வேறு வழியில்லை. நிச்சயமாக பட்டியலிலிருந்து காளை அகற்றப்படும்.
தற்போதைய நிலையில் நாட்டு மாடுகளைப் பாதுகாக்க நம்மிடம் இருக்கும் கடைசி ஆயுதம் ஜல்லிக்கட்டுதான். இதை நம்மால் உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து அவர்களுக்குப் புரியவைக்க முடியாததற்குக் காரணம், நமது வழக்குரைஞர்களின் திறமையின்மையா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் புரிதல் இல்லாமையா, இல்லை நமது பாரம்பரிய பசு இனம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்கிற சில சுயநல சக்திகளின் சதியா? தெரியவில்லை.

NEWS TODAY 09.06.2026