Wednesday, January 18, 2017

50 MBக்கு இருக்கும் பவர் கூட 50 MPக்கு இல்லையே.. பொட்டில் அடித்தாற் போல ஒரு உண்மை!

சென்னை: பொட்டில் அடித்தாற் போல உள்ளது இந்த மீம். கேலி சித்திரமாக இருந்தாலும் எத்தனை உண்மை பாருங்கள்.

அதிமுகவுக்கு மட்டும் நாடாளுமன்றத்தில் (லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும்) சுளையாக 50 எம்.பிக்கள் உள்ளனர். நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். ஆனால் ஒரு பாரம்பரியத்தை, கலாச்சாரத்தைக் காப்பாற்ற முடியவில்லை இவர்களால்.

இவர்களை விட குறைந்த அளவிலான எம்.பிக்களை வைத்துள்ள அண்டை மாநிலத்தவர், இத்தனைக்கும் எதிர்க்கட்சிகளாக இருப்பவர்களால் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியும்போது இவர்களால் ஒன்றையும் செய்ய முடியாமல் வெறும் மந்தைக் கூட்டமாக இருப்பது எத்தனை வேதனைக்குரியது.

அதைத்தான் இந்த மீம்ஸ் தோலுரித்துக் காட்டியுள்ளது.
source: oneindia.com
Dailyhunt

அலங்காநல்லூர் மக்கள் கெடு எதிரொலி.. அலறியடித்து டெல்லிக்கு ஓடும் தமிழக அரசு!

மதுரை: ஜல்லிக்கட்டு என்றாலே உலக மக்கள் அனைவரின் நினைவிற்கும் வருவது அலங்காநல்லூர். தை பொங்கலை முன்னிட்டு 3வது நாள், காணும் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதற்காகவே வாடிவாசல் அலங்கரிக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிப்பார்கள். உச்சநீதிமன்ற தடையினால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.

தமிழக மக்களின் பாராம்பரிய மிக்க ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கடந்த 3வது நாளாக பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் மூன்றாவது நாளாக மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி கோரியும், ஏற்கனவே கைது செய்தவர்களை விடுவிக்க கோரியும் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் மதுரை தமுக்கம் மைதானத்திலும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 நீண்ட நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கல்லூரிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தின் எல்லா கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஜல்லிக்கட்டு நடைபெற அரசு நடவடிக்கை எடுக்கப்படாவில்லை, மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக அலங்காநல்லூர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடையடைப்பு, மறியல் போராட்டம் நடத்தவும் மக்கள் முடிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், 6 மணிக்குள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அதிமுக எம்.பிக்கள் 50 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அலங்காநல்லூரில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த தீர்மானம் தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில் மாலை 5.30 மணியளவில் முதல்வர் ஓ.பி.எஸ்சிடமிருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் நாளை பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கைவிடுக்க உள்ளதாகவும், எனவே போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், கோரிக்கைவிடுக்கப்பட்டது.
மக்களாட்சியில் மக்களின் கோரிக்கைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் அரசுக்கே கெடு விதித்ததால் கோரிக்கையில் ஒரு படி முன்னேறியுள்ளனர்.
source: oneindia.com
Dailyhunt
 ஜல்லிக்கட்டு போராட்டத்தால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்...கிண்டி - போரூர் சாலை ஸ்தம்பிப்பு
 
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்கள், இளைஞர்கள் சென்னை ராமாபுரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கிண்டி - போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து போராடுவதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.
கடற்கரையைச் சுற்றியுள்ள சாலைகளான திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பைகிராப்ட்ஸ் சாலை, சிவானந்தாசாலை, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, ஐஸ்ஹவுஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதனால், கடற்கரை சாலையை நோக்கி வரும் பேருந்துகளும், அண்ணா சதுக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகளும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ராமவாரத்தில் நடைபெறும் போராட்டத்தால் கிண்டி-போரூர் சாலை ஸ்தம்பித்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்கள், இளைஞர்கள் சென்னை ராமாபுரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டிஎல்.எஃப் ஐடி அருகே நடைபெறும் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் கிண்டி ஒலிம்பியா மென்பொருள் நிறுவனம் அருகே போராட்டம் நடைபெறுவதால் ஈக்காட்டுத்தாங்கல், கத்திப்பாரா பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன.
source: oneindia.com
Dailyhunt

கேஸ் வெல்டிங்கால் வங்கியின் 3 லாக்கர் உடைப்பு! சென்னையில் அதிர்ச்சி

சென்னை மந்தைவெளியில் உள்ள யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் புகுந்த கொள்ளையர்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மந்தைவெளி ஆர்.கே மடம் சாலையில் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பூட்டை உடைத்து இன்று அதிகாலை 3 மணி அளவில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வங்கியில் இருந்த 3 லாக்கரை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து பணம், நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இன்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள், வங்கியின் லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைப்போன நகைகள் மற்றும் பணம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
Dailyhunt

"அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றுகிறார்கள்" : போராட்டகளத்தில் கொதிக்கும் மாணவர்கள்!

'ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்' என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில், 'ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்' எனப் பல சிற்றூர்களிலும் புதிதாகப் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்தப் போராட்டம் சென்னை, கோவை, நெல்லை, கடலூர், சேலம், திருச்சி, மதுரை, புதுச்சேரி எனப் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இது, மேலும் பல நகரங்களுக்கும் பரவத் தொடங்கி உள்ளது.
ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டு. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளை மாடுகள் கொடுமைபடுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு கொடுத்த புகாரின்பேரில், உச்ச நீதிமன்றம் இந்த விளையாட்டுக்குத் தடை விதித்திருந்தது.

இந்த ஆண்டு, பொங்கலை முன்னிட்டு அந்தத் தடையை மீறிப் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இருப்பினும், ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில், இந்த விளையாட்டு நடத்தப்படாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் எனப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டக் களத்தில் மின்சார வசதிகளும், மொபைல் நெட்வொர்க்களும் தமிழக அரசின் பேரில் துண்டிக்கப்பட்டன. அப்படியாவது போராட்டம் கலைந்துவிடும் என எதிர்பார்த்திருந்த அரசுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இளைஞர்கள் தங்களின் மொபைலில் உள்ள லைட் வெளிச்சத்தைக் கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டம் காட்டுத்தீயைவிட வேகமாக பரவி அனைத்து ஊர்களிலும் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரையும் ஆங்காங்கே களத்தில் இறக்கியுள்ளது.
இன்று காலை (18-01-16) சென்னை காரப்பாகத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் எனவும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்களிடம் பேசியபோது, ''நம் கலாசாரம் கண்முன்னே அழிவதைக் கண்டு எங்களால் பொறுமையாகப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

எங்கள் வீட்டில் வளரும் அனைத்து விலங்குகளையும் சகோதரர்களாகவே பார்க்கிறோம். எங்கிருந்தோ வந்த பீட்டா அமைப்பின் பேச்சைக் கேட்டு இந்திய அரசு தமிழகத்தின் கலாசாரத்தை அழிக்கப் பார்க்கிறது. இனியும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும். பொங்கல் முடிந்துவிட்டால் ஜல்லிக்கட்டை மறந்து அமைதியாகப் போய்விடுவோம் என்று நினைத்துவிட்டார்கள். அதற்கு நம் அரசியல்வாதிகளும் துணைபோகிறார்கள்'' என்றனர் ஆதங்கத்துடன்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மெளனமாக வேடிக்கை பார்ப்பதன் சூட்சமம், தமிழக கலாசாரத்தை வேரோடு அழிப்பதற்காக இருக்குமோ?

ஜல்லிக்கட்டு தொடர்பான உங்கள் கருத்துகளைக் கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
- ஜெ.அன்பரசன்
Dailyhunt

#Jallikattu- பிரதமரை நாளை சந்திக்கின்றனர் அதிமுக எம்.பி.க்கள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், அ.தி.மு.க எம்.பி-க்கள் நாளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.

நாளை காலை 10 மணிக்கு, பிரதமரை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க எம்.பி-க்கள் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் சென்று ஜல்லிக்கட்டு மீதுள்ள தடையை நீக்கக் கோருவதே இந்த சந்திப்பின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றக்கோரி கடந்த வாரம் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் பிரதமரை சந்திக்கச் சென்றனர். அப்போது, பிரதமரை சந்திக்க முடியவில்லை.
இதனால், பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அதிமுக எம்பிக்கள் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

சூடு பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்.. மோடியை சந்திக்க டெல்லி விரைகிறார் முதல்வர் ஓ.பிஎஸ்.. !

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் வீரியம் அடைந்துள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்த உள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. சென்னை மெரினாவில் மாணவர்களால் நடத்தப்படும் போராட்டத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற தொடர் போராட்டங்களை அடுத்து, ஓபிஎஸ் நாளை பிரதமரை சந்திக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி நாளை ஓபிஎஸ் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த உள்ளார். 
 இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டங்களை கைவிடுமாறு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு குறித்து பேச உள்ளதை குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் இந்த வேண்டுகோளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விடுத்துள்ளார்.

மேலும், சட்டத்திருத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்பதையும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
source: oneindia.com
Dailyhunt

NEWS TODAY 09.06.2026