Friday, February 14, 2020

சங்ககாலக் காதலும் நவீன காதலும்

By போற்றி ராஜா | Published on : 14th February 2020 02:48 AM |

சங்க இலக்கியங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, அகம் சார்ந்த இலக்கியங்கள். அதாவது, ஓர் ஆணும் பெண்ணும் தம் உள்ள உணர்வுகளால் ஒன்றுபட்டு, பின் காதல் வயப்பட்டு தங்களின் உணர்வுகளையும், தங்களுக்குள் நடந்த ஊடல்களையும், கூடல்களையும் பிறருக்கு வெளிப்படையாகக் கூற முடியாது; இவை பொதுவாக அகம் சார்ந்த இலக்கியங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஒரு மன்னனின் வீரம், படைபலம், ஆட்சி, கொடை முதலியவை குறித்துப் பேசுவது புறம் சார்ந்த இலக்கியங்கள் ஆகும்.

இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்கள் அகம் சார்ந்த இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களில் புற நூல்களைக் காட்டிலும் அக நூல்கள்தான் அதிகம். இதிலிருந்து சங்க காலத்தில் காதலுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது.

சங்க இலக்கியங்களில் காதல் உணர்வுகள் மிகைப்படுத்தப் பட்டிருப்பதாக சிலர் வாதிடலாம். ஆனால், இன்றைய பெரும்பாலான இலக்கியங்கள் நம் சமகால வாழ்க்கையைப் பிரதிபலிப்பவையாகவே இருக்கின்றன. அதேபோல அன்றைய இலக்கியங்களும் இருந்திருக்கும் என்று நாம் தீர்க்கமாக நம்பலாம்.

எடுத்துக்காட்டாக, இன்றைய நவீன காதலில் ஒருவரை முதன்முதலாகப் பார்த்த மாத்திரத்திலேயே தோன்றும் காதலை ("லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்'), அந்தக் காலத்தில் "இயற்கைப் புணர்ச்சி அல்லது தெய்வீகப் புணர்ச்சி' என்று கூறினர். அவ்வாறு காதல் வயப்பட்ட பின்பு ஒருவரை ஒருவர் மீண்டும் சந்திக்க பெரும்பாலான காதலர்கள் தாங்கள் முதலில் சந்தித்துக் கொண்ட இடத்தையே தேர்வு செய்வர்.அதை சங்க காலத்தில் "இடந்தலைப்பாடு' என்று வழங்கியுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குப் பெரும்பாலும் ஆண்களே முதலில் வருவர். அவ்வாறு வந்தவுடன் தாங்கள் வந்ததை காதலியிடம் தெரிவிப்பதற்காக இக்காலத்தில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துகின்றனர்; ஆனால், சங்க காலத்தில் காதலன் ஒருவன் தனது வருகையைத் தெரியப்படுத்த அந்த இடத்தில் இருக்கும் மரத்தின் மீது கல் எறிகிறான்; உடனே, மரத்தில் இருக்கும் பறவைகள் ஓசை எழுப்பிக் கொண்டு நாலா புறமும் பறந்து செல்கின்றன. அந்தப் பறவைகளின் ஓசையை தன் காதலன் வந்ததற்கான குறியீடாகக் காதலி கருதுகிறாள். இந்தக் குறியீட்டை "இரவுக் குறி" என்று அந்தக் காலத்தில் வழங்கியுள்ளனர்.

ஒரு வேளை அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குக் காதலன் வரவில்லை என்றால் இன்று பிரளயமே ஏற்பட்டுவிடும். காதலன் வராததால் வரும் இந்த ஏமாற்றத்தையும் அதனால் காதலி ஒருவர் புலம்பித் தவிக்கும் நிலையையும் அந்தக் காலத்தில் "அல்லக் குறி'படுதல் என்று வழங்கியுள்ளனர்.

பொதுவாக காதலிப்பது எளிது. ஆனால், காதலிக்கும் விஷயத்தை இடம் பொருள் ஏவல் அறிந்து, சமயம் பார்த்து பெற்றோரிடம் தெரிவிப்பது சவாலான ஒன்று. இன்றும் பெரும்பாலான காதலர்கள், தங்களின் உள்ள உணர்வுகளைப் பெற்றோரிடம் தெரிவிக்க மனதுக்குள் ஒரு போராட்டமே நடக்கும். ஒரு வேளை நேரடியாகக் கூற முடியவில்லையெனில், பெற்றோருக்கு அபிமானமான ஓர் உறவினரின் மூலம் மத்தியஸ்தம் செய்யலாம். நண்பர்கள் பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் பெற்றோரிடம் மத்தியஸ்தம் செய்வதில்லை. ஆனால், சங்க காலத்தில் பெண்கள் தங்களின் காதலை தோழி மூலம் பெற்றோருக்குத் தெரியப்படுத்தினர். அவ்வாறு தோழி எடுத்துரைப்பதை "அறத்தொடு நிற்றல்' என்று வழங்கினர்.

ஒரு வேளை காதலைப் பெற்றோர்கள் ஏற்கவில்லை எனில், காதலர்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியேறி ஏதேனும் காவல் நிலையத்திலோ அல்லது நண்பர்களின் புடைசூழ ஏதேனும் கோயிலிலோ இன்று திருமணம் செய்கின்றனர். சங்க காலத்தில் காதலின் பொருட்டு ஒரு பெண் இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறுவதை "உடன் போக்கு' என்று கூறினர்.

"சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவதாயின்
மறக்குவேன் கொல் என் காதல் எனவே'

அதாவது, தலைவனைப் பிரிந்த தலைவி ஒருத்தி, தன் தோழியிடம் "நான் சாவதற்கு அஞ்சவில்லை; ஒரு வேளை நான் இறந்துவிட்டால் மறுபிறவியில் நான் பிறக்கக் கூடும். அவ்வாறு பிறக்கும்போது என் காதலனை மறந்து விடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்' என்று ஒரு நற்றிணை பாடல் ஒரு காதலின் ஆழம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் நாம் உச்சத்தைத் தொட்டாலும் மனித உயிர்கள் பரிணமிக்க அடிப்படை ஆதாரமாக இருக்கும் இது போன்ற உன்னதமான காதல் உணர்வுகளால்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.சங்க காலத்திலும் சரி இன்றைய காலத்திலும் சரி காதல் என்ற உணர்வு ஒன்றுதான். அதை வெளிப்படுத்தும் கருவிகள் மட்டுமே மாறியிருக்கின்றன.

காதல் என்பது ஒருவரின் மேல் ஏற்படும் அற்புதமான உணர்வு. அது காமம், மரியாதை, இனம் புரியாத ஈர்ப்பு, அவரின்பால் உள்ள நம்பிக்கை என்று எத்தனையோ கூறுகளை உள்ளடக்கியது. 
 
பெண்களும் சரி, ஆண்களும் சரி அப்படிப்பட்ட காதல் உணர்வை பரஸ்பரம் நயமாக வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் ஒரு முறை தீர்க்கமாக மறுத்து விட்டால் மீண்டும் மீண்டும் தன்னைக் காதலிக்க வற்புறுத்துவது அறியாமை. இதைச் சங்க இலக்கியத்தில் "கைக்கிளை' (ஒருதலைக் காதல்) என்று கூறினர்.

அதே போல ஒருவர் தனக்குக் காதல் கடிதம் கொடுத்து விட்டாலோ அல்லது அவர்களின் காதலை வேறு விதமாக நயமாகச் சொன்னாலோ அந்தக் காதலை அவர் நம் மீது வைத்திருக்கும் அளவற்ற மரியாதையாக எண்ண வேண்டுமே ஒழிய அது தன் அழகுக்கோ திறமைக்கோ கிடைத்த உச்சபட்ச அங்கீகாரமாக எண்ணி மனதளவில் கர்வம் கொள்வது அதைவிட அறியாமை.

காதலை வெளிப்படுத்துவது எவ்வளவு நயமாக இருக்க வேண்டுமோ, அதைவிட காதலை மறுப்பதும், கோபப்படாமல் அதை ஏற்றுக் கொள்வதும் நயமாக இருப்பது முக்கியம்.

மாணவிக்கு தொல்லைபேராசிரியர் மீது புகார்

Added : பிப் 13, 2020 22:39

திருச்சி: ஆய்வு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், பாரதிதாசன் பல்கலை உதவி பேராசிரியரிடம் விசாரணை நடக்கிறது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலையின், 'பயோ இன்பர்மேட்டிக்ஸ்' துறையில் உள்ள உதவி பேராசிரியர் ஒருவர், அதே துறையில், பி.எச்டி., படிக்கும் மாணவிக்கு கைடாக இருந்துள்ளார். சில மாதங்களாக, அந்த மாணவிக்கு, அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.உதவி பேராசிரியரின் தொல்லை அதிகமாகவே, நான்கு நாட்களுக்கு முன், ஆதாரங்களுடன், பல்கலை துணைவேந்தர் மணிசங்கரிடம் மாணவி புகார் அளித்தார். அதிர்ச்சி அடைந்த துணைவேந்தர், அது குறித்து விசாரிக்க, குழு அமைத்தார். குழுவினர், உதவி பேராசிரியர், புகார் அளித்த மாணவி மற்றும் அந்த துறையில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணை முடிந்து,

அதன் அறிக்கையை, துணைவேந்தரிடம் ஒப்படைத்துள்ளனர். 'அறிக்கை அடிப்படையில், விரைவில் உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையில், உதவி பேராசிரியருக்கு ஆதரவாக, துணைவேந்தரிடம் சிலர் பேசி வருவதாகவும், பி.எச்டி., மாணவி புகாரில் உண்மை இல்லை எனக் கூறி, உதவி பேராசிரியரை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

Added : பிப் 14, 2020 01:28

சென்னை: ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால் மும்பை - காரைக்கால் எக்ஸ்பிரஸ் உட்பட ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை லோக்மான்ய திலக் நிலையத்தில் இருந்து காரைக்காலுக்கு இரவு 8:30 மணிக்கு இயக்கப்படும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் 22ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து மும்பை லோக்மான்ய திலக் நிலையத்துக்கு காலை 9:40க்கு இயக்கப்படும் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் 24ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதுஎம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு இரவு 8:30க்கு இயக்கப்படும் ஆமதாபாத் எக்ஸ்பிரஸ் வரும் 16 20 22 23ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலுக்கு காலை 9:40க்கு இயக்கப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் 19 22ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதுஎம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து ஆமதாபாத்துக்கு இரவு 8:30க்கு இயக்கப்படும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் 19ம் தேதியும் ஆமதாபாத்தில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலுக்கு மாலை 3:25க்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் 17 24ம் தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்

Added : பிப் 13, 2020 22:55

சென்னை: நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, மேட்டுப்பாளையத்துக்கு, இரவு, 8:55க்கு, நீலகிரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், ஜூன், 11 முதல் நேரம் மாற்றப்பட்டு, இரவு, 9:05 மணிக்கு இயக்கப்படும்; மேட்டுப்பாளையத்துக்கு காலை, 6:15க்கு சென்றடையும் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலுக்கு, வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், இரவு, 8:20க்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, ஜூன், 13ல் இருந்து, இரவு, 8:00க்கு புறப்படும். சென்னைக்கு பகல், 12:15 மணிக்கு வந்தடையும் சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு தினமும், இரவு, 9:05க்கு சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், ஜூன், 11 முதல் நேரம் மாற்றப்பட்டு, இரவு, 8:55 மணிக்கு இயக்கப்படும். ஆலப்புழாவுக்கு மறுநாள் காலை, 10:40க்கு சென்றடையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எம்.ஜி.ஆரிடம் ஒரே முறை தான் பேசினேன்'

Added : பிப் 13, 2020 22:52

சென்னை: ''முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம், நான் ஒரே முறை தான் பேசினேன்,'' என, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய கே.மகாலிங்கம் எழுதிய, 'சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்' என்ற நுாலை, சென்னையில் வெளியிட்டு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:அ.தி.மு.க.,வின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரிடம், 15 ஆண்டுகள் உதவியாளராக, கே.மகாலிங்கம் பணியாற்றியுள்ளார். ஆனால், 1982ல் நடந்த இடைத்தேர்தலில், பெரியகுளம் தொகுதி பிரசாரத்துக்காக எம்.ஜி.ஆர் வந்தார். அப்போது, கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. எங்கள் ஊரில் நிற்காமல், அவர் சென்று விட்டார். உடனே, நான் டூவீலரில் விரட்டிச் சென்று, எம்.ஜி.ஆரின் காருக்கு முன் நிறுத்தினேன். என்னை சூழ்ந்த பாதுாகாப்பு அதிகாரிகள், என் முகவரி கேட்டனர். அப்போது, காரில் இருந்து இறங்கி வேறு காருக்கு மாறிய எம்.ஜி.ஆர்., என்னை பற்றி விசாரித்தார்.'நான் பெரியகுளம் தொகுதியின், 18வது வார்டு செயலர்' என்றேன். உடனே அவர். 'போய் தேர்தல் வேலையை பார்க்காமல், இங்கே எனக்குப் பின்னால் ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறாய்; போய் வேலையைப் பார்' என்றார். அந்த ஒரு முறை தான், அவருடன் பேசும் பாக்கியம் கிடைத்தது.

இங்கு, எம்.ஜி.ஆருடன் பழகியோர், அந்த அனுபவங்களை பகிர்ந்தனர். அது, எனக்கு புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. இது, கட்சிக்கும், ஆட்சிக்கும் உதவும். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், அ.தி.மு.க., அவை தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் எச்.வி.ஹண்டே, பொன்னையன், முன்னாள் டி.ஜி.பி அலெக்சாண்டர், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., நடராஜ், தமிழக அரசின் முன்னாள் துணைச் செயலர் பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பி.இ.ஓ.,தேர்வுக்கு பேனா எடுத்துவர தடை

Added : பிப் 14, 2020 01:01

புதுடில்லி: பள்ளிக் கல்வி துறையில் காலியாக உள்ள, வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, இன்று போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழகம் முழுவதும், 57 மையங்களில், ஆன்லைன் வழியில், இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இது, கணினி தேர்வாக நடந்தாலும், தேர்வின் வினாக்களுக்கு குறிப்பெடுக்க பேனா பயன்படுத்தப்படுகிறது.

அதற்காக, சில தேர்வர்கள் பேனாவை எடுத்து வருவதாக கூறி, அதில், 'ப்ளூ டூத், வைபை' மற்றும் டிஜிட்டல் வசதிகள் உள்ள பேனாவை எடுத்து வந்து, முறைகேட்டில் ஈடுபட்டு விடாமல் கண்காணிக்க வேண்டும் என, கண்காணிப்பாளர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., போல, ஏதாவது வித்தியாசமான பேனாவை பயன்படுத்தி விடக்கூடாது என்பதால், தேர்வர்கள் யாரும் பேனா எடுத்து வரக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் பேனா மற்றும் பென்சில் வழங்கப்படும். அதை தேர்வு முடிந்ததும், திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

தேர்வுக்கு புகைப்படம் ஒட்டிய, 'ஹால் டிக்கெட்' மற்றும் அரசு அங்கீகரித்த அசல் அடையாள அட்டையை மட்டும் எடுத்து வர வேண்டும். ஷூ, சாக்ஸ், பெல்ட் மற்றும் ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது. மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வரவும் அனுமதியில்லை என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இன்ஜி., படிக்க பிளஸ் 2வில் வேதியியல் கட்டாயமில்லை ஏ.ஐ.சி.டி.இ.அறிவிப்பு

Added : பிப் 14, 2020 00:40

புதுடில்லி; அடுத்த கல்வியாண்டு முதல் இன்ஜினியரிங் படிக்க பிளஸ் 2வில் வேதியியல் பாடம் படிக்க வேண்டிய கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் இன்ஜி., படிப்புகளில் சேர, சில மாற்றங்களை செய்து ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. அதன்படி, இன்ஜி., படிப்பில் சேர அடுத்த கல்வியாண்டு (2020--21) முதல் பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் பாடத்துடன் சேர்த்து ஏதேனும் விருப்பப்பாடத்தை படித்திருந்தால் போதும். அதாவது, மேற்கூறிய இரு பாடத்துடன் வேதியியல், பயோடெக்னாலஜி, உயிரியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தகவல் பயிற்சி, வேளாண்மை, பொறியியல் கிராபிக், வணிக ஆய்வுகள் ஆகிய விருப்பப்பாடங்களில் ஒன்றை சேர்த்து படித்திருந்தாலே இன்ஜி., படிப்புகளில் சேரலாம்.

இது குறித்த அறிக்கையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இன்ஜி., கல்லுாரிகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரி கூறுகையில், ''இந்த மாற்றங்களால் இன்ஜி., படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அடுத்த ஆண்டு முதல் ஜே.இ.இ., (மெயின்) தேர்விலும் இதற்கான மாற்றம் செய்யப்படும்,'' என்றார்.

NEWS TODAY 24.05.2026