Monday, February 17, 2020

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் பீட்ரூட் கிலோ ரூ.8

சென்னை176.02.2020

கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் பீட்ரூட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.8-க்கு விற்கப்பட்டு வருகிறது.

நார்ச்சத்து மிகுந்த காய்கறியான பீட்ரூட்டில் மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட ஊட்டச் சத்துக்கள் மற்றும் சி, பி9 போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் பீட்ரூட் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் பீட்ரூட் கொண்டுவரப்படுகிறது.

மேலும், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்தும் பீட்ரூட் வருகிறது. கடந்த இரு வாரங்களாக வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக அதன் விலை கிலோ ரூ.8 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான தக்காளி, புடலங்காய் தலா ரூ.15, வெங்காயம், அவரைக்காய் தலா ரூ.30, சாம்பார் வெங்காயம், கத்தரிக்காய் தலா ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.21, வெண்டைக்காய், கேரட் தலா ரூ.25, முள்ளங்கி, முட்டைக்கோஸ் தலா ரூ.10, பாகற்காய், பீன்ஸ் தலா ரூ.20, முருங்கைக்காய் ரூ.80, பச்சை மிளகாய் ரூ.15 என விற்கப்பட்டு வருகிறது.

பீட்ரூட் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் கூறும்போது, "பருவமழை முடிந்த பின்னர், பனிப்பொழிவு ஏற்படும் காலங்களில் பீட்ரூட் விளைச்சல் அதிகமாக இருக்கும். அதனால் தற்போது வரத்து அதிகரித்து, அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்துக்கு இதே நிலை நீடிக்கும்" என்றனர்.
மாநகர போக்குவரத்து கழகத்தில் ஊழியர் விருப்ப ஓய்வுக்கான நிபந்தனை தளர்வு: தொழிற்சங்கத்தினர் வரவேற்பு

சென்னை

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விருப்பு ஓய்வு பெறுவதற்கான நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்து கழகங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 3,000 முதல் 3,500 பேர் வரை ஓய்வு பெறுகின்றனர். இருப்பினும், காலிபணியிடங்களுக்கு ஏற்ப புதிய ஆட்களை நியமிப்பதில்லை என தொழிற்சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஒரு சில ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற்று வேலையிலிருந்து விலகி வருகிறார்கள். உடல் நலத்தை காரணம் காட்டி சிலர் விருப்ப ஓய்வுபெறுகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களை பொருத்தவரையில் 50 வயது நிறைவு செய்திருப்பதுடன் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் மட்டுமே விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது.

இதில் மாற்றம் செய்து புதிய உத்தரவை மாநகர போக்குவரத்து கழகம் சமீபத்தில் பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 50 வயது நிறைவு மற்றும் 20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் மட்டுமே விருப்ப ஓய்வை பெறலாம் என்ற நிபந்தனை இருந்தது வந்தது. தற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கண்ட 2 நிபந்தனைகளில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் போதுமானது. எனவே, 50 வயது பூர்த்தியாவனவர்கள் அல்லது 20 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் முடித்தவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறும்போது, “உடல்நிலை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தான் விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவிப்பார்கள். எனவே, விருப்ப ஓய்வு பெற 20 ஆண்டுகள் பணி மற்றும் 50 வயது பூர்த்தி செய்ய வேண்டுமென கட்டாய நிபந்தனைகள், விருப்ப ஓய்வு பெற நினைக்கும் ஊழியர்களுக்கு தடையாக இருந்தது. இந்நிலையில், தற்போது இந்த நிபந்தனையை தளர்த்தியுள்ளதை வரவேற்கிறோம். இதனால், விருப்ப ஓய்வு பெறுவோருக்கு பென்ஷன் வழங்குவதில் சிக்கல் இருக்க கூடாது.

அதேபோல், இந்த உத்தரவை நிர்வாகம் தவறாக பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, மாற்றுப்பணி கேட்டு வரும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது’’ என்றார்.


நிரம்பி வழியும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள்: பராமரிக்க வழி தெரியாமல் தவிக்கும் தன்னார்வலர்கள்

By DIN | Published on : 17th February 2020 02:00 AM




ஈரோடு: ஆதரவற்ற முதியோர் இல்லங்களை நாடி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிதாக மீட்கப்படும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க வழி தெரியாமல் தன்னார்வலர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இலவச முதியோர் இல்லங்களில் இடமே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த அளவுக்கு அனைத்து இலவச முதியோர் இல்லங்களும் நிரம்பி வழிகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் 12 முதியோர் இல்லங்கள் உள்ளன. இதில், 3 இல்லங்கள் இலவச சேவையை அளிக்கின்றன. பிற இல்லங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச சேவையும், பிறருக்கு கட்டணம் பெற்றுக் கொண்டும் சேவை அளிக்கின்றன. முதியோர் இல்லங்களுக்கு பராமரிப்புச் செலவுக்காக ஒரு முதியோருக்கு மாதம் ரூ. 750 என்ற அடிப்படையில் அரசு 40 பேருக்கு மட்டும் உதவித் தொகை வழங்குகிறது. இந்த உதவித் தொகை ஆதரவற்ற முதியோரின் உணவு செலவுக்கே போதுமானதாக இல்லை.
இருப்பினும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் நன்கொடையாளர்களின் உதவி மூலம் முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. நிதி நெருக்கடி காரணமாக, ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் 50 முதியோரைப் பராமரிப்பது என்பதே பெரிய சவாலாக இருக்கிறது.

இந்நிலையில், இப்போது முதியோர் இல்லத்தை நாடிவரும் ஆதரவற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் முதியோர் இல்லங்களுக்கு தினமும் குறைந்தது 10 பேர் வரை தங்களைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி தாமாகவோ அல்லது தன்னார்வ அமைப்பினர் மூலமோ வந்து திரும்பிச் செல்வதாகக் கூறுகிறார் முதியோர் இல்லக் காப்பாளர் ஒருவர்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணியில் இருக்கும் அவர், நான் பணியில் சேர்ந்த புதிதில் இத்தனை பேர் இல்லத்தை நாடி வரவில்லை. முதியோர் இல்லவாசிகளுக்கு குடும்பத்தவருடன் வாழவே விருப்பம். ஆனால், குடும்பத்தவர்களுக்கு அதில் விருப்பமில்லை என்கிற யதார்த்தம் உறுத்தும் நிலையில் முதியோர் இல்லங்களே, அவர்களின் ஒரே புகலிடமாக இருக்கின்றன. ஆதரவற்ற முதியோர் இல்லங்களை நடத்துவதற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது நிதி தேவை. அதனால் இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுப்போம் என்ற அடிப்படையில் பெற்றோரை இல்லத்தில் விடுபவர்களிடம் கட்டணம் வசூலித்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அதிகபட்சமாக 20 பேர் வரை இலவசமாகப் பராமரித்து வருகிறோம்' என்றார்.

நன்கொடையாளர்கள் அதிகரிக்க வேண்டும்: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு தன்னார்வலர்களால் மீட்கப்பட்ட 100 பேர் என மொத்தம் 150 முதியோரை வைத்து பராமரித்து வரும் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் "நமது இல்லம்' என்ற பெயரில் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை நடத்தி வரும் எம்.சந்திரசேகர் கூறியதாவது: அரசால் முழுமையாக உதவ முடியாது என்பதால் நன்கொடையாளர்கள் உதவியை நாடுகிறோம். உணவு, உடை, தங்குமிடம், பராமரிப்பு, பணியாளர்கள் ஊதியம் என ஒரு முதியவருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 5,000 வரை செலவாகிறது. இதனால், வசதி உள்ளவர்கள் ஏதாவது ஒரு வகையில் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு உதவ முன்வர வேண்டும். தேடி வருபவர்களிடம் உதவி செய்வதைத் தவிர்த்து, இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று உதவ வேண்டும். இதன் மூலம் தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, உதவி செய்பவர்களுக்கு நிம்மதியும், மீண்டும் உதவ வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும். வாழப்போகும் சில காலம் முதியோர் சற்று நிம்மதியான வாழ்க்கையை வாழ, வசதி உள்ளவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவ முன்வர வேண்டும் என்றார்.




இல்லங்களில் இடம் கிடைக்கவில்லை: ஆதரவற்ற முதியோரை மீட்டு இல்லங்களில் சேர்க்கும் ஈரோட்டைச் சேர்ந்த ஜீவிதம் அறக்கட்டளை நிறுவனர் கே.மனிஷா கூறியதாவது:

ஈரோடு பகுதியில் வாரத்தில் குறைந்தபட்சம் 3 ஆதரவற்ற முதியோரை மீட்கிறோம். ஆனால், இந்த முதியோரைப் பராமரிக்க இல்லம் கிடைக்கவில்லை. பெரும்பாலான முதியோர் இல்லங்கள் கட்டணம் பெற்றுக் கொண்டு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களாகத்தான் உள்ளன. இங்கு செய்துகொடுக்கப்படும் வசதியைப் பொருத்து ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை மாதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தவிர ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

ஆதரவற்ற முதியோரை மீட்டு இல்லம் வரை அழைத்துச் செல்லவே ரூ. 1,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கே மிகவும் சிரமப்படும் நிலையில் எங்களால் எப்படி கட்டணம் செலுத்த முடியும்? மாவட்டத்தில் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை அரசே நடத்த வேண்டும். அப்போதுதான் ஆதரவில்லாத முதியோரைப் பராமரிக்க முடியும் என்றார்.
ஈரோட்டைச் சேர்ந்த எழுத்தாளர், சமூக ஆர்வலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் கூறியதாவது: முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்படும் ஆதரவற்ற முதியோருக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகையை ரூ. 750இல் இருந்து ரூ. 3,000ஆக உயர்த்த வேண்டும். மேலும், 40 பேருக்கு மட்டுமே உதவித் தொகை என்ற விதிமுறையைத் தளர்த்தி ஒவ்வோர் இல்லத்திலும் 100 பேருக்கு இந்த உதவித் தொகையை வழங்க வேண்டும்.
இப்போது உதவ பலர் தயாராக இருந்தாலும், உதவி உரியவர்களுக்குப் போய் சேருகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதனால், நன்கொடையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டத்தை நடத்தி, இந்த இல்லங்களுக்கு நேரடியாக பொருளாதார, பொருளுதவிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றார்.
- கே.விஜயபாஸ்கர்

ஊரை புறக்கணித்து, 'பறந்த' பஸ்கள்

Added : பிப் 17, 2020 00:20

சேலம்:சேலம் மாவட்டம், மல்லுாருக்குள் வராமல், பைபாசில், 'பறந்த' பஸ்களை சிறைபிடித்த மக்கள், பஸ்களை ஊருக்குள் அனுப்பி, பாடம் புகட்டினர்.

சேலம் மாவட்டம், மல்லுார் வழியாக, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, தஞ்சை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு, 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மல்லுாருக்கு வெளியே, சேலம் - நாமக்கல் நான்கு வழிச்சாலை செல்கிறது.இதனால், பஸ்கள் மல்லுாருக்குள் வராமல், புறவழிச்சாலையில் செல்கின்றன. அத்துடன், மல்லுார் பயணியரை பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். இதனால், மல்லுார் மற்றும் சுற்றுவட்டாரத்தில், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், மல்லுார் வராத பஸ்களை, நேற்று சிறைபிடித்து போராட்டம் நடத்தப் போவதாக, அப்பகுதி மக்கள், 'நோட்டீஸ்' வெளியிட்டனர். மல்லுார் போலீசார் அனுமதிக்காத நிலையில், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அய்யனார் தலைமையில், பொதுமக்கள், புறவழிச்சாலையில் நேற்று காலை திரண்டனர்.நான்கு வழிச் சாலையில் சென்ற பஸ்களை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தால் 'எக்ஸ்பிரஸ், ஒன் டூ ஒன்' உள்ளிட்ட பஸ்கள், மல்லுார் வழியாக சென்றன. புறக்கணிக்கும் பஸ்களின் முன்புற கண்ணாடி யில், 'வழி - மல்லுார்' என்ற, 'ஸ்டிக்கர்' ஒட்டினர். புறநகர், டி.எஸ்.பி., உமாசங்கர், ஆர்.டி.ஓ., சரவணபவன் ஆகியோர், மக்களை சமாதானப்படுத்தினர்.'அனைத்து பஸ்களும் மல்லுார் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என, போக்குவரத்து அதிகாரி களும் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.

புற்றுநோய் பாதித்த 5 வயது சிறுவன் சிகிச்சைக்கு பணமின்றி அவதி

Added : பிப் 17, 2020 00:14



பெரம்பலுார்:ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 5 வயது சிறுவனின் சிகிச்சைக்கு பணமின்றி, பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.

பெரம்பலுார், புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள், ராஜு - ராஜேஸ்வரி தம்பதி. ராஜு, வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளி. தாய் ராஜேஸ்வரி, வீட்டு வேலை செய்து வருகிறார்.இவர்களின் மகன் சாய்ராம், 5; பிறந்தது முதல், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சாய்ராமுக்கு, அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு, இதுவரை, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி சிகிச்சை அளித்துள்ளனர்.தாங்கள் வைத்திருந்த நகை, பொருட்கள் என அனைத்தையும் விற்று விட்டனர். இவர்களின் நிலை அறிந்த ஒருவர், தன் பழைய ஓட்டு வீட்டை, இவர்களுக்கு, 150 ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளார்.மாதந்தோறும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு சென்று வரவும், கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமலும், சாய்ராமின் குடும்பம் அவதிப்பட்டு வருகிறது.இந்நிலையில், சாய்ராமுக்கு காலில் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் எனவும், அதற்கு, 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் எனவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

ராஜேஸ்வரி கூறியதாவது:நான், என் அம்மா வைத்திருந்த நகை, என் சித்திகள் உள்ளிட்ட உறவினர்களிடம் இதுவரை, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, செலவு செய்து விட்டேன். என் மகனின் கால் பாதம் வளைந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். என் மகனை காப்பாற்ற, தமிழக அரசும், நல்ல உள்ளம் படைத்தவர்களும் உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.உதவ விரும்புவோர், 96009- - 59257 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர்களது, யூனியன் வங்கி சேமிப்பு கணக்கு எண்: 637402010004538.
கருவூலத்தில் ஆட்குறைப்பு ஊழியர்கள் குற்றச்சாட்டு

Added : பிப் 17, 2020 00:22

மதுரை;'கருவூலத் துறையில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், 4,000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது' என, அரசு ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கருவூலத் துறையில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதன் மூலம், அரசு துறையினருக்கு சம்பளம் உள்ளிட்டவை கையாளப்படவுள்ளன.ஆனால், அடிப்படை கட்டமைப்புகள், அரசு அலுவலகங்களில் மோசமான நிலையில் உள்ளன. இணையதள சேவையை, பல அலுவலகங்களில் பெற முடியவில்லை. தற்போதும், உடனடியாக பணிகளை முடிக்க அழுத்தம் கொடுப்பதால், தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் செல்வம், மதுரையில் கூறியதாவது:அடிப்படை கட்டமைப்புகளை செய்யாமல், ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, அரசு அழுத்தம் தரக்கூடாது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 4,000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.முதலில் அனைத்து அலுவலகங்களுக்கும் கணினி, இணையதள வசதி செய்ய வேண்டும். கடந்த முறை, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட, 5,000த்துக்கும் மேற்பட்டோருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணைகள் வழங்கப்பட்டன. மேலும், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பணிமாறுதல் செய்யப்பட்டனர். அவற்றை திரும்ப பெற, அரசு முன்வராதது ஏமாற்றம் தருகிறது. புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, அரசாணை, 56 ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வெயில் அதிகரிப்பு மதுரையில், 'டாப்'

Added : பிப் 16, 2020 23:42

சென்னை:தமிழகத்தில் அதிகபட்சமாக, மதுரையில், 36 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், குளிர்காலம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சில மாவட்டங்களில் மட்டும், காலையில் லேசான பனி மூட்டம் காணப்படுகிறது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும், வெயில் காலம் துவங்கி உள்ளது.

வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இது, இந்த ஆண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெயில்.இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமாக மதுரையில், 36 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.கரூர் பரமத்தி, மதுரை விமானநிலையம், சேலம் ஆகிய இடங்களில், 35 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. சென்னை விமான நிலையத்தில், 32; நுங்கம்பாக்கத்தில், 31 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.வரும் நாட்களை பொறுத்தவரை, வானம் தெளிவாக காணப்படும். சென்னை உள்ளிட்ட சில இடங்களில், காலையில், லேசான பனிமூட்டம் நிலவும். மற்ற இடங்களில், வெயிலுடன் கூடிய வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

NEWS TODAY 24.05.2026