Tuesday, March 15, 2016

பணத்தைக் கொண்டு போகவே முடியவில்லையே?

பணத்தைக் கொண்டு போகவே முடியவில்லையே?
தலையங்கம்: தினத்தந்தி

தமிழகத்தில் 15–வது சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16–ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22–ந் தேதி தொடங்குகிறது. ஆனால், இந்த தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் 4–ந் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது. 4–ந் தேதி முதலே அதாவது, இந்த தேர்தல் தேதியை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. 70 நாட்களுக்கு முன்பே தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்ததால், பல விதிகளின் அமலில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில விதிகள் கஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன. தேர்தலையொட்டி, ஆங்காங்கு சோதனை நடத்த சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாகனங்களில் செல்பவர்களை மடக்கிப் பிடித்து சோதனை நடத்துகிறார்கள். சோதனையில், யாராவது ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை கொண்டுபோனால், இந்த பறக்கும் படையினரும், கண்காணிப்பு படையினரும் அதற்கும் கணக்கு கேட்கிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்தால் ஏ.டி.எம். ரசீதை காட்டுங்கள், இந்த பணம் உங்களுக்கு கிடைத்தற்கான ‘பில்’, அல்லது ‘ரசீதுகள்’, அல்லது ‘ஆதாரங்கள்’ ஏதாவது உள்ளதா?, எதற்காக கொண்டுபோகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். இதுபோல, வங்கிகளோ, நிதிநிறுவனங்களோ பணத்தை எடுத்துக் கொண்டு போனால் கூட, அதற்கும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்கிறார்கள்.

சில நேரங்களில் அந்த இடத்தில் உடனே ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யமுடியவில்லை என்றால், அந்த பணத்தைக் கைப்பற்றி மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். உடனடியாக மாவட்ட வருவாய் அதிகாரியை அணுகி, இதற்கான அத்தாட்சிகளை தாக்கல் செய்தால்தான், பணத்தை திரும்ப பெறமுடியும். சில நேரங்களில் உரிய அத்தாட்சிகளை தாக்கல்செய்ய சற்று தாமதமானால் அரசு கருவூலத்தில் போய் அந்த பணத்தைக் கட்டிவிடுகிறார்கள். அதன்பிறகு உரிய ஆதாரத்தை காட்டினாலும், பணத்தை திரும்பப்பெற பலநாட்கள் ஆகிவிடும். இந்த பறக்கும்படை சோதனைகளால் நியாயமான வகையில் முக்கியமான செலவுகளுக்காகப் பணம்கொண்டு செல்பவர்களுக்கு மிகவும் சிக்கல் ஏற்படுகிறது.

இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் ரூ.50 ஆயிரம் என்பது சாதாரணமாக ஆகும் செலவுகளுக்குத் தேவையான பணம்தான். குடும்பங்களில் திருமணங்களுக்கு 4 பவுன் நகைவாங்கவேண்டுமென்றால் கூட, ரூ.1 லட்சத்துக்குமேல் செலவாகும். இதுபோல, முக்கியமான செலவுகளுக்கு வீட்டிலுள்ள சேமிப்பை எடுத்துக்கொண்டு செல்பவர்களுக்கு உடனடியாக அந்த பணத்துக்கு ஆதாரமாக என்ன ரசீதை காட்டமுடியும்?. மேலும், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், அன்றாடம் விற்பனையாகும் தொகையை வங்கியில் போடுவதில்லை. ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் தொகையை மொத்தமாக கையில் எடுத்துக்கொண்டுதான், மொத்த வியாபாரிகளிடம் போய் சரக்குளை வாங்குவார்கள். அந்த வகையில், ஒரு சிறிய கடையை எடுத்துக் கொண்டாலும், அன்றாடம் சரக்குகளை வாங்க ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதுபோல, சிறிய தொழில்கள் செய்பவர்களெல்லாம் அவசரமாக பொருட்கள் வாங்க ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டுபோவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. சில தனியார் பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்குக்கூட ரூ.50 ஆயிரத்துக்குமேல் நன்கொடை கொடுக்க பணமாகத்தான் எடுத்துச்செல்ல வேண்டியதிருக்கிறது.

பணம் கொடுத்து ஓட்டுவாங்கும் அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த நிச்சயமாக இந்த கட்டுப்பாடு தேவைதான். ஆனால், அரசியல் கட்சிகள் கொண்டுசெல்லும் பணத்துக்கும், பொதுமக்களும், வியாபாரிகளும் கொண்டுசெல்லும் பணத்துக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. அது அதிகாரிகளுக்கும் நன்றாகத்தெரியும். தேர்தலில் பண நடமாட்டத்தை தடுக்கிறோம் என்ற பெயரில், பொதுமக்களும், வியாபாரிகளும் இன்னல்களுக்கு ஆளாவது என்பது ஏற்புடையதல்ல. எனவே, தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் பணத்தை கொண்டுபோகிற ஆட்கள் யார்?, என்ன காரணங்களுக்காக கொண்டுபோகிறார்கள்? என்று பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். பொதுமக்களும் கூடுமான வரையில், பணப்பரிமாற்றங்களை வங்கிப்பரிமாற்றங்களாகவே வைத்துக்கொண்டால் எந்த பிரச்சினைக்கும் இடமிருக்காது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...