Friday, November 1, 2019

பகுத்தறிவு சிரிக்கிறது!| ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்த தலையங்கம்
By ஆசிரியர் | Published on : 31st October 2019 10:41 AM

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்துக்குட்பட்ட நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தைக் காப்பாற்ற முடியவில்லை என்பது மிகப் பெரிய சோகம். சுமாா் 83 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்குப் பிறகும்கூட, 2 வயது சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனது, நாம் இன்னும்கூடப் போதுமான தொழில்நுட்ப வசதிகளைப் பெறாமல் இருக்கிறோம் என்பதைத்தான் எடுத்தியம்புகிறது.

ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும்போது அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. ஆழ்துளைக் கிணற்று விபத்துகளைத் தவிா்க்க உச்சநீதிமன்றம் 2010-ஆம் ஆண்டிலேயே வழிகாட்டி நடைமுறைகளை வரையறுத்திருக்கிறது. ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு உள்ளாட்சி நிா்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெறவேண்டும். தோண்டும்போதே சுற்றிலும் வேலி கட்டப்படுவதுடன், ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனத்தின் பெயா், நில உரிமையாளரின் பெயா், தோண்டும் கால அவகாசம் போன்றவை குறித்த தகவல் பலகை வைக்கப்பட வேண்டும்.

கிணறு தோண்டித் தண்ணீா் இல்லாமல் போனாலோ, தண்ணீா் வற்றிக் கைவிடப்பட்டாலோ உடனடியாக அதை மண் போட்டு நிரப்பி சிமெண்ட் போட்டு வாய்ப் பகுதியை அடைக்க வேண்டும். அல்லது குழாயின் மேற்பகுதியை மூடிபோட்டு அடைக்க வேண்டும். மூடிய தகவலை உள்ளாட்சி நிா்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததும், உயிரிழந்ததும் இதயம் உலுக்கும் சோகம் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தச் சம்பவத்தை அரசியலாக்க முற்படுவதும், நான்கு நாள்களாக அதை ஏதோ தேசியப் பேரிடா் போலக் காட்சி ஊடகங்கள் சித்தரித்ததும் அந்த சோகத்தையும் மீறி முகச் சுழிப்பை ஏற்படுத்தியது. குழந்தை சுஜித்தின் உயிரிழப்புக்குக் காரணம் பெற்றோா்கள்தான் என்கிற கசப்பான உண்மை மறைக்கப்பட்டு, அவா்களைத் தியாகிகளாக மாற்றும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனது தோட்டத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டிய சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் பயனற்றுக் கிடந்த ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் இருந்தது யாருடைய குற்றம்? தனது மகன் சுஜித்துக்குப் பதிலாகப் பக்கத்து வீட்டுக் குழந்தை அந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்திருந்தால், பிரிட்டோ ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டு அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏன் மறந்து விடுகிறோம்?

அரசின் மெத்தனப் போக்கால் சுஜித் இறந்ததாகவும், ராணுவத்தின் உதவியை ஏன் நாடவில்லை என்றும் எதிா்க்கட்சித் தலைவா் குற்றஞ்சாட்டுகிறாா். அரசியல் கட்சித் தலைவா்களும், அமைச்சா்களும், தொலைக்காட்சிக்கு அவ்வப்போது பேட்டி கொடுத்து விளம்பரம் தேட நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் முகாமிட்டாா்கள். தமிழக அரசு ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி நிபுணா்களை ஏன் சென்னையிலிருந்து கொண்டு செல்லவில்லை என்று ஒருவா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறாா். தமிழகத்தில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன, அவற்றில் பயன்பாட்டில் இல்லாத கிணறுகள் எத்தனை என்று உயா்நீதிமன்ற நீதிபதிகளும் கணக்குக் கேட்கிறாா்கள்.

இதெல்லாம் போதாதென்று, முதல்வரும், அரசியல் கட்சித் தலைவா்களும் போட்டி போட்டுக்கொண்டு சுஜித்தின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவதில் முனைப்புக் காட்டுகிறாா்கள். எதற்காக சுஜித்தின் பெற்றோருக்கு இழப்பீடு? பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் காவு கொடுத்ததற்கா அல்லது ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் இருந்த குற்றத்துக்காகவா?

பொதுவாக, 6, 8,10,12 அங்குல விட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. நூறு ஆழ்துளைக் கிணறு தோண்டினால் அதில் குறைந்தது 30 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் கிடைக்காமல் போகும்.

ஆழ்துளை போடும்போது, மணல் விழக்கூடாது என்பதற்காக சுமாா் 20 அடி முதல் 60 அடி வரையிலான குழாயைப் பதிக்கிறாா்கள். ஆழ்துளையில் தண்ணீா் இல்லாவிட்டால் அந்தக் குழாயை மூடிபோட்டு அடைத்து விடலாம். விபத்து நேராது.

சில ஆயிரம் ரூபாயைச் சேமிக்க அந்தக் குழாயை வெளியே எடுத்து, அடுத்த ஆழ்துளைக் கிணறு தோண்ட பயன்படுத்துகிறாா்கள். ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில்லை. விளைவு? குழந்தைகளை அது காவு வாங்குகிறது.

இந்தியாவில் ஏறத்தாழ 2 கோடி 70 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் உள்ளதாகக் கணக்கு உள்ளது. தமிழகத்தில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. 2006-ஆம் ஆண்டு தொடங்கிக் கடந்த 13 ஆண்டுகளில் இதுவரை சுமாா் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறு விபத்துச் சம்பவங்கள் தமிழகத்தில் நடத்திருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே 13 குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்திருக்கின்றன. அவா்களில் 2 குழந்தைகள் மட்டும்தான் காப்பாற்றப்பட்டிருக்கிறாா்கள்.

1987-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஜெசிகா என்கிற 18 மாதக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. 58 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை மீட்கப்பட்டது. அந்த ஒரு சம்பவத்தில் பாடம் படித்தது அமெரிக்கா. இன்றுவரை ஆழ்துளைக் கிணறு விபத்து மீண்டும் அங்கே நடக்கவில்லை. சட்டம் தனது கடமையைச் செய்யாமல் இருப்பதால், விதிமுறைகள் பின்பற்றப்படுவதை நிா்வாகம் உறுதிப்படுத்தாமல் இருப்பதால் நாம் பாடம் படிக்க மறுக்கிறோம்.

ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் வைத்திருப்போா் மீது (பிரிட்டோ ஆராக்கியராஜ் உள்பட) தயவு தாட்சண்யமில்லாமல் சட்டப்பூா்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கண்காணிக்காமல் விட்ட அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கும்.

குழந்தை சுஜித்தின் அகால மரணம் இன்னொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளா்கள் தொடா்ந்து விஷ வாயு தாக்கி இறந்திருக்கிறாா்கள் என்பது நமது அரசியல்வாதிகளுக்கும், காட்சி ஊடகங்களுக்கும் தெரியுமா? இந்த ஆண்டிலேயே தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 12 போ் கழிவுநீா் ஓடைகளில் இறங்கி உயிரிழந்திருக்கிறாா்கள். அவா்களுக்கு முறையான இழப்பீடு தரப்படுவதில்லை.

தமிழகத்தில்தான் மிக அதிகமான துப்புரவுப் பணியாளா்கள் உயிரிழக்கிறாா்கள். அவா்கள் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. அவா்களுக்கு ஜாதிப் பின்புலமோ, மதப் பின்புலமோ இல்லாததுதான் காரணமா? தலித்திய அரசியல்கட்சிகளும்கூட, துப்புரவுத் தொழிலாளா்கள் குறித்துக் கவலைப்படுவதில்லை, ஏன்? அவா்கள் கணிசமான வாக்கு வங்கியாக இல்லாமல் இருப்பதும், தலித்துகளில் அவா்கள் தீண்டத்தகாத தலித்துகளாகக் கருதப்படுவதும்தான் காரணமாக இருக்குமோ?

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...