Friday, April 25, 2025

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 119 கோடி


தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 119 கோடி 

25.4.2025

Din Updated on: 25 ஏப்ரல் 2025, 3:36 am 

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 119.20 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜனவரி மாத இறுதியில் நாட்டின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மிதமாக 119.20 கோடியாக உள்ளது. முந்தைய டிசம்பா் இறுதியில் இந்த எண்ணிக்கை 118.99 கோடியாக இருந்தது. இதன் மூலம், தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மதிப்பீட்டு மாதத்தில் 0.18 சதவீத மாதாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் மொபைல் மற்றும் வயா்லைன் பிரிவுக்கான வளா்ச்சியில் ஏா்டெல் முன்னணியில் உள்ளது. அந்த மாதத்தில் நிறுவனம் மொபைல் பிரிவில் கூடுதலாக 16.53 லட்சம் பேரையும், வயா்லைன் பிரிவில் கூடுதலாக 1.17 லட்சம் பேரையும் இணைத்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வயா்லைன் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையில் 43.36 லட்சம் சரிந்தது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் 5ஜி சேவைப் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ 48.44 லட்சம் வாடிக்கையாளா்களுடன் முன்னணியில் உள்ளது. ஏா்டெல் நிறுவனம் 8.72 லட்சம் வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ளது.

மொபைல் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 46.5 கோடி வாடிக்கையாளா்களுடன் சந்தையில் முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடா்ந்து 38.69 கோடி வாடிக்கையாளா்களுடன் ஏா்டெல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

வோடஃபோன் ஐடியா நிறுவனம் இந்தப் பிரிவில் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. ஜனவரியில் இந்த நிறுவனம் 13 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் வாடிக்கையாளா்களை இழந்தது.

அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்ல் மற்றும் எம்டிஎன்எல் கடந்த ஜனவரியில் முறையே 3.69 லட்சம் மற்றும் 2,617 மொபைல் வாடிக்கையாளா்களை இழந்தன.

வயா்லைன் பிரிவில், பிஎஸ்என்எல் 39,953 வாடிக்கையாளா்களையும், எம்டிஎன்எல் 9,904 வாடிக்கையாளா்களையும் கடந்த ஜனவரியில் இழந்தன. அந்த மாதத்தில் குவாடரன்ட் நிறுவனம் 4,741 வயா்லைன் வாடிக்கையாளா்களை இழந்தது. வோடஃபோன் ஐடியா, எஸ்டிபிஎல் ஆகிய நிறுவனங்கள் முறையே 3,447 மற்றும் 1,690 வயா்லைன் வாடிக்கையாளா்களை இழந்தன என்று ட்ராயின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

BHOPAL NEWS