தொட்டனைத் தூறும் மணற்கேணி...
புத்தகத் திருவிழாவின் ஒட்டு மொத்த வெற்றியை கூட்டத்தின் எண்ணிக்கையால் மட்டுமே அளவிடக் கூடாது.
தினமணி செய்திச் சேவை, பொ. ஜெயசந்திரன் Updated on: 09 ஜனவரி 2026, 4:32 am
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் "பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற "ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 49-ஆவது புத்தகத் திருவிழா வியாழக்கிழமை (ஐன. 8)- முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆயிரம் அரங்குகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகள் கொண்ட புத்தகங்கள் இடம் பெறலாம்.
இத்திருவிழா பொங்கல் விடுமுறையில் நடத்தப்படுவது ஒரு பொதுவான நடைமுறை. சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர் பயணம், உறவினர்கள் சந்திப்பு, கோயில் விழாக்கள், பாரம்பரியமான மதுரை ஜல்லிக்கட்டு- இதற்கெல்லாம் திட்டமிட்டு போக்குவரத்துக்கு முன்பதிவு செய்கின்றனர்.
பிற மாவட்டங்களிலிருந்து புத்தகத் திருவிழாவுக்காக சென்னைக்கு வர நினைக்கும் வாசகர்கள் கூட்ட நெரிசலால் பயணத்தைத் தவிர்க்கக் கூடும். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து வரும் எழுத்தாளர்களோ, விமானக் கட்டண உயர்வு; டிக்கெட் கிடைக்கவில்லை போன்ற காரணங்களால் வர இயலாமல் போகலாம். இங்குள்ள மாணவர்கள் விடுமுறைக்கு சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்லக்கூடும்.
புத்தகத் திருவிழா என்பது அறிவின் திருவிழா. அது மன அமைதி, நேரம், கவனம் ஆகியவற்றை நாடும் ஒன்று. பொங்கல் விடுமுறை காலத்தில், வாசகர்களின் கவனம் இயல்பாகவே சிதறுகிறது. புத்தகங்கள் வாங்க வருகிறார்களா? குடும்பக் கடமைகளுக்கிடையே வேகமாக, ஓடி வந்து ஒரு சுற்று பார்ப்பதற்கு மட்டுமா? என்று பல கேள்விகள் உருவாகலாம். ஆகவே, அனைத்துத் தரப்பிலும் பொங்கல் நேரத்தில் புத்தகத் திருவிழா என்பது வாசகர்களுக்கு சிறிய பின்னடைவே. வரும் காலங்களில் இதில் மாற்றம் செய்யலாம்.
சென்னை, ஈரோடு, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி, இன்று சிறு நகரங்களில்கூட புத்தகத் திருவிழாக்கள் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், இதில் எழும் முக்கியமான கேள்வி, இளைஞர்கள் எங்கே?; அரங்குகளில் பெரும்பாலும் நடுத்தர வயதினரும், மூத்தவர்களுமே அதிகம் காணப்படுகின்றனர். மாணவர்கள் வருகிறார்கள் என்றாலும், அவர்களின் பங்கேற்பு, புத்தகங்கள் வாங்குதல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் செல்ல வாய்ப்புக் குறைவு. இதே நிலை நீடித்தால், புத்தகத் திருவிழாக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக வாய்ப்புண்டு. எந்த அறிவுசார் இயக்கமும் இளைஞர்கள் இல்லாமல் நீடிக்க முடியாது.
இளைஞர்கள் புத்தகங்களை விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் நன்றாகவே படிக்கிறார்கள். ஆனால், புத்தகத் திருவிழாக்களின் மாலை நேரத்தில் நடக்கும் நிகழ்வில், ஒரு விசித்திரமான ஒற்றுமை காணப்படுகிறது. எந்த மாவட்டம் என்ற வேறுபாடில்லாமல் மேடைகளில் பேசுபவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட சிலரே. ஆனால், இன்றைய இளைஞர்களுக்குத் தேவை கேட்பதற்கான மேடைமட்டுமல்ல, பேசுவதற்கான மேடைதான். புத்தகத் திருவிழாக்களில் இளைஞர்களுக்கு பேச வாய்ப்பளிப்பது மிகக் குறைவு.
புத்தகங்கள் தலைமுறைகளை இணைக்கும் பாலம். அதன் நடுப்பகுதியில் இளைஞர்கள் நிற்கவில்லை என்றால், அந்தப் பாலம் ஒரு நாள் பயன்பாடில்லாமல் காணாமல் போய்விடும். இளைஞர்களை நாளைய வாசகர்கள் என்று பார்ப்பதைவிட, இன்றைய பங்கேற்பாளர்கள் என பார்க்கும் மனநிலை மிக அவசியம்.
அறிவுத் திருவிழா என்பது புதிய குரல்களை உருவாக்கும் பொறுப்பையும் கொண்டிருக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இலக்கியம், வரலாறு, சமூகநீதி எனப் பல துறைகளில் பேச்சாளர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். புத்தகத் திருவிழா மேடைகளில் இவர்களுக்கு வாய்ப்பு அரிதே.
அதே வேளை, சிறிய பதிப்பகங்களுக்கும், புதிய எழுத்தாளர்களுடைய நூல்களுக்கும் உரிய இடம் வழங்கும்போது, புத்தகத் திருவிழா பல்வேறு வகையில் நன்மை பெறுகிறது. நூல் வெளியீட்டு விழாவில், குறைந்தபட்சம் 25 வாசகர்களுக்காவது அழைப்பு விடுத்தல், சமூக வலைதளத்தில் நூல் வெளியீடு குறித்த தகவல் பகிர்வது போன்றவற்றைச் செயல்படுத்தலாம்.
புத்தகத் திருவிழா என்பது வெறும் விற்பனைக்கான இடம் மட்டுமல்ல. அது அறிவை விரிவுபடுத்தும் பொது வெளி. இது எப்போதும் உயிர்ப்புடன் இயங்க வேண்டுமென்றால் நடத்துபவர்கள், விற்பனையாளர், நூலாசிரியர், புத்தக ஆர்வலர்கள் எனஅனைவரின் ஒற்றுமை அவசியம். இந்த ஒற்றுமை இல்லாவிட்டால், புத்தகத் திருவிழா வணிகச் சந்தையாக மட்டுமே சுருங்கும்.
புத்தகத் திருவிழாக்கள் நடத்துபவர்கள் திசை காட்டினால், விற்பனையாளர்கள், நூலாசிரியர்கள் அதை நடைமுறையில் கொண்டு வருகிறார்கள். புத்தகங்களை நேசித்து வாங்குகின்ற வாசகர்கள் அதற்கு உயிர் கொடுக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் பயணம் செய்தால்தான், அது உண்மையில் அறிவைக் கொண்டாடும் விழாவாக இருக்கும்.
புத்தகத் திருவிழாவின் ஒட்டு மொத்த வெற்றியை கூட்டத்தின் எண்ணிக்கையால் மட்டுமே அளவிடக் கூடாது. எத்தனை புதிய வாசகர்கள் உருவாகியுள்ளனர்; எத்தனை உள் மாவட்ட புதிய எழுத்தாளர்கள் நூல்களை அறிமுகம் செய்தனர்; அர்த்தமுள்ள கலந்துரையாடலில் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்துள்ளது இதுபோன்ற மதிப்பீடுகள் அவசியம்.
புத்தகம் வாங்குவது மட்டுமல்ல, வாசகர்களின் கருத்தைக் கேட்பது, சிந்தனையை விவாதிப்பது, புதிய குரலை அறிமுகப்படுத்துவது- இவை அனைத்தும்தான் அறிவுத் திருவிழாவின் அடையாளம். அப்படிப்பட்ட அடையாளத்தை சென்னைபுத்தகத் திருவிழா உருவாக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
No comments:
Post a Comment