Tuesday, February 21, 2017

Posted Date : 17:24 (20/02/2017)

வறண்ட வீராணம் ஏரி... கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை..! #TNDrought2017




சென்னையின் குடிநீர்த் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கும்போது அவ்வப்போதிய சென்னையின் குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளப்படும். ஆனால் கடந்த வருடம் இரண்டு பருவமழைகளும் ஏமாற்றிய நிலையில் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. இதனால் சென்னையின் குடிநீர்த் தேவையை சமாளிக்க விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்தல், ஆழ்துளைக் கிணறுகளை அதிகப்படுத்துதல் என தங்களால் முடிந்த ஏற்பாடுகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள நான்கு ஏரிகளிலும் நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.



இதில் இன்றைய நிலவரப்படி, மொத்தம் 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவுடைய பூண்டி ஏரியில் 842 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியானது 41 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. ரெட்ஹில்ஸ் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியில் 577 கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அதிக தண்ணீரைக் கொண்டிருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெறும் 208 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி ஆகும். ஆனால் தற்போது நான்கு ஏரிகளிலும் இருக்கும் தண்ணீரை சேர்த்து 1,668 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. இது மொத்தக் கொள்ளளவான பத்தில் ஒரு சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே தேதியில் 8,367 மில்லியன் கனஅடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் குடிநீர்த் தேவைக்காக ஆந்திரா கிருஷ்ணா நதிநீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டது. இதுதவிர, வீராணம் ஏரியிலிருந்தும் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் கொண்டுவரப்பட்டது.



தற்போது கோடை ஆரம்பிக்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே தற்போது வீராணம் ஏரி வறண்டு விட்டது. இதற்கு முன்னர் வீராணம் ஏரியினை பற்றி சற்று தெரிந்துகொள்வோம். இந்த வீராணம் ஏரியானது கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரம். வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47 அடி. வீராணம் ஏரிக்கு காவிரியில் இருந்து கொள்ளிடம் வழியாக சின்ன செங்கால் ஓடை, பெரிய செங்கால் ஓடைகளின் வழியாகவே இந்த ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இதுதவிர, மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரானது வடவாறு வழியாகவும் வீராணத்துக்கு வருகிறது. இந்த ஏரியானது செம்பரம்பாக்கம் ஏரி போலவே கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்தில் தண்ணீர் அதிகமாக வந்தபோது திறந்துவிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்னர் மூன்று வருடங்களாக விவசாயிகள் கேட்டும் தண்ணீரைத் திறந்து விடவில்லை. தண்ணீர் அதிகமாக வருகிறது என்று தண்ணீர் திறந்துவிட்டு சுற்றிலும் பாசனம் செய்த பயிர்களானது மூழ்கடிக்கப்பட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம், பொதுவாக கடலூர் மாவட்டத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீர்நிலைகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் ஆகியவை தூர்வாரப்படவில்லை என்பதே உண்மை. இதனுள் வீராணம் ஏரியும் அடங்கும். வீராணம் முழுமையாக தூர்வாரப்படாமல் மணலும், வண்டல் மண்ணும் அதிக அளவில் படிந்துள்ளது. இதனால் இந்த ஏரியில் தண்ணீரை அதிக அளவில் தேக்கி வைக்க முடியவில்லை. அதிலும் மிஞ்சும் தண்ணீரானது சென்னையின் குடிநீர்த் தேவைக்கு எடுத்துக்கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலிருந்து 2010-ம் ஆண்டு வெள்ளம், 2011- தானே புயல் மற்றும் 2015-ம் ஆண்டு வெள்ளம் என கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படும் மாவட்டமாக ஆகிப்போனது. இதற்கெல்லாம் காரணம் நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததுதான்.



வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் பயன்படுத்தவே இந்த ஏரியானது சோழ மன்னர்களால் 11-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. ஆனால், பின்னர் சென்னையின் குடிநீர்த் தேவைக்கு ஏற்ப அதிக அளவு தண்ணீர் தேக்கப்பட்டு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. முன்னரெல்லாம் 20 அடி தோண்டினாலே தண்ணீர் சுரக்கும் கடலூர் மண்ணில் நெய்வேலி சுரங்கத்தால் நீர் வரத்தும் குறைந்து விட்டது. பொதுவாக விவசாயம் மற்றும் குடிநீர் தேவை என இரண்டில் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள ஏரியானது தூர் வாரப்பட்டே ஆக வேண்டும். ஏரியினை முழுமையாக தூர்வாரினால் அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ள முடியும். முழுமையாக தூர்வாரப்பட்டால் வீராணம் ஏரியானது குடிநீர்த் தேவைக்கு மட்டுமின்றி விவசாயத் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். தற்போது இந்த ஏரியானது முழுமையாக வறண்டு போயுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஏரியினை தூர்வாரினால் அடுத்த பருவமழைக்கான தண்ணீரை முழுமையாக தேக்கி வைத்து வீராணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். கடலூர் வீராணம் ஏரி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதே போல கடந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் வீராணம் தண்ணீர் இல்லாமல் வறண்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஶ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரப்படும் மணலிலும் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் தூர்வாரப்படும் பணிகளும் முழுமையாக நடந்தால் மட்டுமே முழுமையாக தண்ணீர் தேக்குவதும் சாத்தியம்.




சென்னையைப் பற்றிய ஏரிகளின் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ள சென்னை மாநகர குடிநீர் வாரியத்தை தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி "வரும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே 4 ஏரிகளின் தண்ணீரானது சென்னை மக்களின் பயன்பாட்டுக்கு வரும்" என்பதோடு முடித்துக்கொண்டார். மேற்கொண்டு தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பொதுப்பணித்துறையை தொடர்பு கொண்டதற்கும் எந்தவிதமான பதிலும் இல்லை. வீராணம் ஏரி மற்றும் வறண்ட அத்தனை ஏரிகளும் அதற்குத் தண்ணீர் வரும் கால்வாய்களும் இதற்கு பின்னராவது தூர்வாரப்பட்டால் அடுத்த பருவமழைக்காவது அதிக அளவு தண்ணீர் கிடைக்கும் என்பதை பொதுப்பணித்துறை நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...