Saturday, February 24, 2018

அமலுக்கு வந்தது ஹெச்1பி விசா கட்டுப்பாடு : லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு

By DIN | Published on : 24th February 2018 04:29 AM |

ஹெச்1பி விசா நடைமுறைகளை கடுமையாக்கி புதிய கொள்கைகளை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்களும், இந்திய தகவல் - தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகின.
புதிய நடைமுறையானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், அமெரிக்காவில் ஏற்கெனவே பணியாற்றி வரும் இந்தியர்களுக்கும், விசா நீட்டிப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் இந்நடவடிக்கை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.

அமெரிக்க வங்கிகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் தகவல் - தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி குறிப்பிட்ட காலத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் அப்பணிகளை அமெரிக்காவில் இருந்து மேற்கொள்கின்றன. அவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் தகவல் - தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் 70 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அவர்கள் அனைவரும் ஹெச்1பி விசா பெற்று அதன் வாயிலாக அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் அத்தகைய விசாவை சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனங்களே தங்களது ஊழியர்களுக்கு பெற்றுத் தருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு ஹெச்1பி விசா நடைமுறையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்கர்களுக்கு பலனளிக்கும் வகையில் அது மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு இந்தியா அதிருப்தியை வெளிப்படுத்தியது. பல்வேறு தருணங்களில் அமெரிக்க ஆட்சியாளர்களுடன் இதுதொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தையும் நடத்தியது. இதனால் அந்தக் கட்டுப்பாடுகள் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக ஹெச்1பி விசாவுக்கான புதிய கொள்கைகளுக்கு அமெரிக்க அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. அது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இனி விசா பெறும் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அதாவது, முன்பிருந்த நடைமுறைப்படி விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் மூன்றாண்டுகளுக்கு ஹெச்1பி விசா பெற இயலும். ஆனால், புதிய கொள்கையின்படி அவ்வாறு பெற இயலாது. மூன்றாண்டுகளுக்கும் குறைவாகவே விசா வழங்கப்படும். அதேபோன்று, விசா பெறுவதற்கு கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் புதிய நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விசா காலத்தில் குறிப்பிட்ட ஒப்பந்தப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் விசா காலத்தை நீட்டிப்பதில் சிக்கல் உருவாகும். உதாரணமாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகிறது என்றால், ஒருவேளை சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஓராண்டில் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அந்த ஊழியர் மீதமுள்ள ஓராண்டு பணியை மேற்கொள்ள மாட்டார். பணிபுரியாத காலத்தைக் காரணமாக வைத்து விசா நீட்டிப்பை ரத்து செய்யவும் புதிய நடைமுறையில் வகை செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர வேறு சில கட்டுப்பாடுகளும் புதிய கொள்கையில் அமலாகியுள்ளன. இதுதொடர்பான தகவல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...