Sunday, June 18, 2017

Return to frontpage

எழுவர் விடுதலை: நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லையா?

செல்வ. புவியரசன்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மாநில அரசின் போக்கில் முன்பிருந்த வேகமில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு அவரளித்த உறுதிமொழிகளும் விதிவிலக்கல்ல.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரை, விடுதலை செய்வதற்கான தீர்மானம் 2014, பிப்ரவரி 19-ல் தமிழக சட்ட மன்றத்தில் ஏகமனதாக நிறைவேறியது. அவ்வழக்கு, மத்திய புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டது. எனவே, சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேறிய அன்றே அதுபற்றி மத்திய அரசின் கருத்தை அறிய தமிழக அரசு கடிதம் அனுப்பியது. மத்திய அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, ஏழு பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 2015 டிசம்பர் 2-ல் வழக்கு மீண்டும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கே திருப்பியனுப்பப்பட்டது. வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. தமிழக அரசு மீண்டும் ஒரு தடவை 2016 மார்ச் 2-ல் மத்திய அரசுக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், மத்திய அரசின் மனப்போக்கில் எந்த மாற்றமும் இல்லை.

சீர்திருத்தமே தண்டனையின் நோக்கம்

ராஜீவ் கொலை வழக்கில் விசாரணைகள் முடிந்து தீர்ப்பளித்தாகிவிட்டது. தண்டனையும் அளிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பு வெளிவந்த பிறகு, காவல் துறை அதிகாரி ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளளின் வாக்குமூலத்தை முறையாகப் பதிவு செய்யவில்லை என்றார். அவரது ஒப்புதல், விசாரணையின் நிலையை எடுத்துரைத்தபோதிலும், அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. முக்கியமாக, கொலை வழக்கின் முழுமையான பின்னணி வெளிக்கொண்டுவரப்படவில்லை.

இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்ட பிறகு, வழக்கு விசாரணைகள் பற்றிய மீளாய்வுகள் இயலாத ஒன்று. ஆனால், அளிக்கப்பட்ட தண்டனையின் அளவைக் குறைப்பது மாநில அரசின் நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்டது. அதற்கு நீதித் துறை தடையாக நிற்க முடியாது. தண்டனை அளிக்கப்பட்டவரின் நன்னடத்தை, இனி அவர் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார் என்ற நம்பிக்கை ஆகியவையே தண்டனைக் குறைப்புக்கான அளவுகோல்கள். தண்டனைக் குறைப்பு தொடர்பான மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த முனைகிறது என்பதே இவ்வழக்கில் உள்ள சிக்கல். மத்திய-மாநில அதிகாரப் பிரிவினைப் போட்டியில் சிறைவாசிகளின் மீள்வாழ்வு சிதைக்கப்பட்டுவிடக் கூடாது.

இன்ன பிற வழக்குகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவதில் மத்திய அரசுக்கு ஆட்சேபனைகள் இல்லை. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்ற காரணத்தினால் தண்டனைக் குறைப்பை மத்திய அரசு விரும்பாதிருக்கலாம்.

மக்களைக் காப்பது மட்டுமே தனது பணியென்னும் காவல் அரசல்ல இந்திய அரசு. மக்கள் நலன் பேணும் அரசு. அரசியலமைப்பை அவ்வாறே நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இத்தகைய அரசமைப்பில் தண்டனைக் கோட்பாடுகள் பழிவாங்கும் நோக்கிலோ, அச்சுறுத்தும் நோக்கிலோ அமைந்துவிடக்கூடாது. சீர்திருத்துவது மட்டுமே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டும்.

நீடித்த மரணம்

ராஜீவ் வழக்கில் சிறைவாசம் அனுபவித்தவர்கள் அவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளிகள் இல்லை. அவர்களுக்கு வேறெந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. தண்டனைக் குறைப்புக்குக் காத்திருப்பவர்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் 23 ஆண்டு காலம் மரண தண்டனைக்கான காத்திருப்பிலேயே தனிமைச் சிறை வாசம் அனுபவித்தவர்கள். ‘தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து மரண தண்டனை வரையிலான நீண்ட காலக் காத்திருப்பின்போது தண்டிக்கப்பட்ட கைதி கடுமையான மனவேதனையாலும் கொடுமையான உளவியல் நெருக்கடியாலும் பாதிக்கப்படுகிறான். அது நீடித்த மரணமாயிருக்கிறது’ என்றார் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி.

இந்த நீடித்த மரணத்தை அனுபவித்தவர்களில் ஒருவரான பேரறிவாளன் சிறையிலிருந்தே இதழியலில் சான்றிழ்ப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். சிறைவாழ்க்கை குறித்த அவரது புத்தகம், அவரை ஒரு திறம்பட்ட எழுத்தாளராகவே அடையாளம் காட்டுகிறது. அதே நேரத்தில் தனிமைச் சிறைவாசம் அவரை நோயாளியாகவும் மாற்றியிருக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறது. தந்தையின் உடல்நலம் மோசமாகியிருப்பதைக் காரணம் காட்டியும் அவரது பரோல் விடுப்புக்கான மனுகூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தண்டனை முடியும் முன்னர் சஞ்சய் தத் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்று பேரறிவாளன் எழுப்பிய கேள்விக்கு ஆழ்ந்த மௌனத்தைத் தவிர வேறெந்த பதிலும் இல்லை.

26 ஆண்டுகள் நிறைவு

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் சிறை வாழ்க்கை தற்போது 26 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ஏழு பேரின் ஆயுள் தண்டனையையும் ரத்துசெய்து அவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்முயற்சிகளை எடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் அதுகுறித்த வழக்கு நடந்தபோது தனிக்கவனம் எடுத்துக்கொண்டார். ‘அழாதீர்கள்.. உங்கள் மகன்தான் உங்களோடு சேரப்போகிறாரே’ என்று அற்புதம் அம்மாளின் கரங்களைப் பற்றி ஜெயலலிதா அளித்த உறுதிமொழி இன்னும் நிறைவேறாமலேயே காலம் நீள்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை விரைவுப்படுத்த மாநில அரசின் தரப்பிலிருந்து எந்த முயற்சியும் இல்லை.

நடந்துகொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சிதான் எனும்போது, அவரளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தற்போதைய முதல்வர் பழனிசாமிக்கும் உண்டு; இரண்டாகப் பிளந்து நிற்கும் அதிமுகவின் இரு பிரிவுகளுக்கும் உண்டு!

- செல்வ. புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

நீட்: தமிழக உரிமையை நிலைநாட்ட என்ன செய்ய வேண்டும்?

ஜி.ஆர்.இரவீந்திரநாத்


நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, சித்தா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம். பொறியியல் படிக்கவும், வெளி நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்கும் ‘நீட்’ தேர்வு தேவை என்ற முடிவையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காகவே தனி அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் சட்டங்களில் திருத்தங்களைச் செய்தது மத்திய அரசு. மே 7-ல் இந்தியா முழுவதும் 10 மொழிகளில் ‘நீட்’ தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தியது. நாடு முழுவதும் 11.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால், நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறிவிட்டு, வெவ்வேறு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. குஜராத்தி மொழியில் வினாத்தாள் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் மேற்கு வங்கக் கல்வி அமைச்சர் புகார் கூறினார். மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குஜராத் கல்வி அமைச்சரோ, குஜராத்தி மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஜவடேகரிடமே புகார் செய்தார். தமிழகத்திலும் ஆங்கில மொழி வினா கடினமாக இருந்ததாகப் புகார் எழுந்தது. வாரங்கலிலோ ஒருபடி மேலே போய், தெலுங்கு மொழி வினாத்தாளை வழங்குவதற்குப் பதில் இந்தி மொழி வினாத்தாள் வழங்கிவிட்டார்கள். அதனால், அங்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்பட்டது.

இவ்வளவு குழப்பங்களுக்கு நடுவே, சோதனை என்ற பெயரில் மாணவ - மாணவிகளின் உள்ளாடைகளைக் களைந்த சம்பவங்களும் நடந்தன. வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால், தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத, மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) உண்மையை ஒப்புக்கொண்டது. வெவ்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்தால் வினாத்தாள் கசிந்துவிடும் என்பதால்தான் வெவ்வேறு வினாத்தாள் வழங்கியதாக சப்பைக்கட்டு கட்டியது. இறுதியில், ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது உயர் நீதிமன்றம். ஆனால், உச்ச நீதிமன்றமோ ஒரே வாரத்தில் அந்தத் தடையைத் தகர்த்துவிட்டது.

தரத்தின் தரம்
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை எனக் கூறி, இந்திய மருத்துவ கவுன்சிலால் அனுமதி ரத்துசெய்யப்பட்ட 86 மருத்துவக் கல்லூரிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ ‘நீட்’ தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கான மதிப்பெண் 7.5% குறைக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க அரசோ, போலி மருத்துவர்களுக்கு ஆறு மாத காலப் பயிற்சி கொடுத்து, அங்கீகாரச் சான்றிதழை வழங்குகிறது. ஆந்திர அரசும் இதை ஏற்கெனவே அனுமதித்துவிட்டது. ஜார்கண்ட் மாநிலமோ, இளநிலை அறிவியல் பட்டம் வைத்திருந்தாலே அரசு மருத்துவமனைகளில் பணி வழங்குகிறது. இதை எல்லாம் சரி செய்யாமல், ஒரு நுழைவுத்தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவர்களின் தரத்தை மேம்படுத்திவிடுவோம் என்பது நகைப்புக்குரியது.

தமிழகத்தின் போராட்டம்
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில், தமிழக மாணவர்கள் படிக்கும் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகிறது. காரணம், இளநிலை மருத்துவ இடங்களில் 15%-யும், முதுநிலை மருத்துவ இடங்களில் 50%-யும், நாம் அகில இந்தியத் தொகுப்புக்கு (All India Quota) வழங்கிவருகிறோம். ஆனால், நாம் வழங்கும் இடங்களின் அளவுக்கு, அகில இந்தியத் தொகுப்பில் இடங்களைப் பெறுவதில்லை.
கூடவே, நமது உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்திலும் வட நாட்டினர் கணிசமான இடத்தைப் பிடித்துவிடுகிறார்கள். ஏனைய மாநிலங்களைப் போல் தமிழகத்தின் டி.எம்., எம்.சிஹெச் இடங்களை, அகில இந்திய அளவில் பகிரங்கப் போட்டிக்கு விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டதன் விளைவு இது. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் இளநிலை மருத்துவக் கல்வி பயின்றவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் நிறுவன ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை உச்ச நீதிமன்றமும் ஆதரிக்கிறது. ஆனால், தமிழக அரசின் உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் பறிக்கிறது.

அரசு செய்ய வேண்டியவை
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கிடைக்கும் வகையில், ஆந்திரத்தைப் போல் தமிழக அரசும் சட்டம் கொண்டுவர வேண்டும். நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களின் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு, மத்திய அரசே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்கு மாநில அரசுகளே ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும். இந்திய மருத்துவக் கழகச் சட்டத்தில் இதற்காகத் திருத்தம் கொண்டுவரலாம்.

ஆண்டு வருமானம் 12 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, தொடர்புடைய அரசுகளே ஏற்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஏழை மாணவர்கள்கூட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் சூழலை ஏற்படுத்த முடியும். இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒரு மசோதாவும், முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒரு மசோதாவும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு இன்னமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்குரிய அழுத்தத்தை தமிழக அரசும் கொடுக்க வேண்டும்.

சமூக நீதியை நிலைநாட்ட..
இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நமது மாணவர்களைப் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது. ஏனெனில், ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற்றாலும், நமது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏறத்தாழ 3,500 இடங்களுக்கு மட்டுமே பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.
ஆனால், நமது மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்கள், அகில இந்திய தொகுப்பு இடங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரி இடங்களில் சேர வேண்டுமெனில், ‘நீட்’ தேர்வு மூலம்தான் சேர முடியும். ‘நீட்’ தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றால், நமது மாணவர்கள் 28,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களில் இந்தியா முழுவதும் சேர முடியும். ஆயிரக்கணக்கான பல் மருத்துவ இடங்களிலும் சேர முடியும். நுழைவுத் தேர்வுக்கு நன்றாகப் பயிற்சி வழங்கப்பட்டால், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 672 இடங்களிலும், ஜிப்மரில் உள்ள 200 இடங்களிலும் சேர முடியும். மேலும், மருத்துவப் படிப்புகள் தவிர, மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள 2 லட்சம் இடங்களில் சேர முடியும். தற்போது இந்த இடங்களில் தமிழக மாணவர்கள் 1%-க்கும் குறைவாகவே சேர்கின்றனர். கடந்த 1995 முதல் 2012 வரை தமிழக மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆறு இடங்களில் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள மாற்றங்கள் போதாது. நுழைவுத் தேர்வுக்கான தரமான பயிற்சி, பள்ளிகளிலேயே இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஏழை, எளிய, பின்தங்கிய மாணவர்கள் அதிகமாகப் படிக்கிற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளே நமது மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை அதிகரிக்கும். சமூக நீதியையும் நிலைநாட்டும்!
- டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.
தொடர்புக்கு: daseindia@gmail.com
Published: June 16, 2017 09:08 ISTUpdated: June 16, 2017 09:08 IST

பாவம் மாணவர்கள்!

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்ற தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை வெளியிட அனுமதி வழங்கியிருப்பதன் மூலம், மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் நுழைவதற்கான காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஜூன் 24-க்குள் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. ஆனால், தமிழகம் இத்தேர்வு தொடர்பில் எழுப்பியிருக்கும் முக்கியமான கேள்விகள், அதன் ஆட்சேபணைகள் யாராலும் பொருட்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.

மருத்துவப் படிப்புக்கான கட்டமைப்பு உருவாக்கத்தில் நாட்டிலேயே முன்னணியில் இருக்கும் தமிழகம், இந்தத் தேர்வுமுறையால் பாதிக்கப்படும் என்று மாநில அரசு கருதுவது மிக நியாயமான ஒரு விஷயம். ‘ஒரே நாடு - ஒரே தேர்வு’ என்றெல்லாம் கூறப்பட்டாலும், எல்லோரும் ஓர் நிறையாகக் கருதப்படுவதற்கான சூழலை இந்தத் தேர்வு உருவாக்கப்போவதில்லை என்பதற்கான சமிக்ஞைகள் ஆரம்பத்திலேயே தெரியத்தொடங்கிவிட்டன. மே 7-ல் நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் ஆங்கிலம், இந்தி வினாத்தாள்கள் ஒரே மாதிரியிருந்தாலும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட மாறுபட்ட வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாகப் புகார்கள் எழுந்தன. வங்க அமைச்சர் இது தொடர்பில் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் கல்வித் துறை இருக்கும்போது, ஏன் அதைப் பறிக்க மத்திய அரசு இப்படி துடியாய்த் துடிக்கிறது என்று தெரியவில்லை!

இந்த விவகாரத்தின் போக்கை யூகித்தே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை விலக்கக் கோரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளித்ததுடன், “2017 ‘நீட்’ தேர்வு தொடர்பான எந்த வழக்கையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் ஒரு முடிவு இது. மாநிலங்களின் அதிகாரத்தோடு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் அதிலும், இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் தமிழகத்தின் மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில், வழக்கை ஒட்டுமொத்தப் பின்னணியிலும் பொருத்திப் பார்த்திருக்க வேண்டும் உச்ச நீதிமன்றம்.

தமிழகத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட, நூற்றுக்கணக்கான மாணவர்கள் சம்பந்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றித் தரும் அக்கறை மத்திய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், மாநிலங்களின் உரிமை சம்பந்தப்பட்ட இந்த மசோதா ஏன் தாமதமாகிறது என்று மத்திய அரசைக் கேள்வி கேட்கும் திராணியும் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசிடம் இல்லை. இதுகுறித்து முடிவெடுக்கும் நிர்ப்பந்தத்தை உருவாக்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் இப்போது காலியாகிவிட்ட நிலையில், தமிழக மாணவர்களையும் எதிர்காலச் சூழலையும் நினைக்கையில் வருத்தமே கவிகிறது!

ஆங்கிலம் அறிவோமே 164: ‘மக்’ அடித்தால் மக்கா?

ஜி. எஸ். எஸ்.
கேட்டாரே ஒரு கேள்வி

Mug என்றால் ஒரு பெரிய கோப்பை என்பது தெரியும். மனப்பாடம் செய்வதை ‘mug அடிப்பது’ என்கிறோமே இதற்கும் அதற்கும் தொடர்பு உண்டா?

**********************

Famous – Infamous

“நாங்க ரெண்டுபேரும் ஒரே சமயத்தில்தான் சென்னைக்கு வந்தோம்; உழைச்சோம். ஆனால், அவன் famous ஆயிட்டான்; நான் மட்டும் infamous - ஆகவே இருக்கேன” என்றார் ஒருவர் வருத்தத்துடன்.

அப்படி அவர் சொல்லக் கூடாது என்றேன். “ஒருவர் தன் மனவருத்தத்தை வெளிக்காட்டக் கூடாதா?” என்று மனவருத்தத்தோடு கேட்பவர்களுக்கு - தவறு கண்டது அவர் உணர்வில் அல்ல, ஆங்கிலப் பயன்பாட்டில்.

Famous என்பதற்கு எதிர்ச்சொல் infamous என எண்ணிக்கொண்டு unpopular என்ற பொருளில் அதைச் சிலர் பயன்படுத்துகிறார்கள். Infamous என்பது அதற்கும் மேல் (அதாவது அதற்கும் கீழ்!) ஒருவர் infamous ஆக இருக்கிறார் என்றால் அவருக்கு மிகவும் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.

Notorious என்றும் குறிப்பிடலாம். மனிதர்களுக்கு மட்டும்தான் இந்த infamous பயன்படுத்தப்படுகிறது என்பதில்லை. The infamous Delhi smog is an example of extreme air pollution.

**********************

“Preposition-னுக்கான அர்த்தம் தெளிவாக விளங்கவில்லை. எடுத்துக்காட்டாக with என்றால் கூட, on என்றால் மேலே என்பதுபோல் பிற prepositions-க்கான அர்த்தங்களைக் கூற முடியுமா?”

நண்பரே, prepositions-களைப் பொறுத்தவரை மேலும் மேலும் அவற்றை வாக்கியங்களில் பயன்படுத்தும்போதுதான் தெளிவு கிடைக்கும். இதுகூட எந்த preposition-ஐ எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவுதானே தவிர, அந்த preposition-னுக்கான குறிப்பான அர்த்தம் குறித்து அல்ல.

With பற்றிக் குறிப்பிட்டீர்கள். England fought with France against Germany எனும்போது with என்பதற்கு நீங்கள் கூறிய அர்த்தம் வருகிறது. அதாவது பிரான்ஸுடன் இணைந்து (அல்லது) பிரான்ஸையும் சேர்த்துக்கொண்டு ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து போரிட்டது.

ஆனால், England fought with France என்று மட்டுமே அந்த வாக்கியம் இருந்தால் (போன வாக்கியத்தில் கூட்டாளியாக இருந்த) பிரான்ஸ் இப்போது எதிரியாகிவிட்டது. அதாவது பிரான்ஸுக்கு எதிராக இங்கிலாந்து போரிட்டது. ஆக with என்ற preposition alongside, against ஆகிய இரு விதங்களிலும் பயன்படுகிறது.

இதுகுறித்து எழுதும்போது, எனக்கு Janus faced words என்பவை நினைவுக்குவருகின்றன. ஒரே வார்த்தை இரண்டு எதிரெதிர் அர்த்தங்கள் கொண்டதாக அமைவது. கிரேக்கக் கடவுளான ஜானஸ் இரு எதிரெதிர் முகங்கள் கொண்டவர். எடுத்துக்காட்டு sanction என்ற வார்த்தை. Please sanction me leave எனும்போது sanction என்ற வார்த்தை அளிப்பது எனப் பொருள் கொண்டிருக்கிறது. Economic sanctions எனும்போது தடுப்பது என்ற பொருளில் வருகிறது (பொருளாதாரத் தடை). Let us dress என்றால் அணிதல் என்று பொருள். Let us dress the chicken எனும்போது நீக்குதல் என்று பொருள் (கோழியின் இறக்கைகளை நீக்குதல்).

இப்படிப்பட்ட வார்த்தைகள் காலப்போக்கில் ஒரு அர்த்தம் கொண்டவையாகவே மாறிவிட வாய்ப்பு அதிகம். வேறொரு அர்த்தம் வழக்கொழிந்துவிடும். ஆனால், விதிவிலக்குகள் உண்டு.



“பழமொழிகள் குறித்து எழுதியிருந்தீர்கள். A hundred years of regret pay not a farthing of debt” என்பதன் பொருளை விளக்க முடியுமா?” எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.

“ஆக வேண்டியதைப் பார்” என்பதைத்தான் இந்தப் பழமொழி உணர்த்துகிறது. அதாவது கடன்பட்டுவிட்டோமே என்று வருடக்கணக்கில் வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. அதனால் கடன் சுமையில் ஒரு துளியும் குறையப்போவதில்லை.

எனினும், இந்தப் பழமொழியை வேறு கோணத்தில் பார்த்தால் ஒரு நண்பரையோ, உறவினரையோ பார்த்து, “எனக்காக நீ குடம் குடமாகக் கண்ணீர் விடுவதால் மட்டும் என் கடன் துளியாவது குறையப் போகிறதா என்ன? முடிந்தால் நிதி உதவி செய். இல்லைய என்றால் நகர்ந்து செல்” என்று ஆதங்கத்தோடு கூறுவதாகவும் படுகிறது.

Farthing என்பது பிரிட்டனில் பயன்படுத்தப்பட்ட மிக மிகக் குறைவான மதிப்பு கொண்ட நாணயம் (நம் தம்படிபோல).

Penny என்பதைக் குறைவான மதிப்பு கொண்ட நாணயமாகக் கருதுவதுண்டு (Penny wise and found foolish) என்பது நினைவுக்கு வருகிறதா - சிறு விஷயங்களில் கவனம் செலுத்திவிட்டுப் பெரிய விஷயங்களில் கோட்டை விடுவது! ஒரு பவுண்டில் 100-ல் ஒரு பங்கு மதிப்பு கொண்டதுதான் penny. ஒரு penny-ல் நான்கில் ஒரு பங்கு மதிப்பு கொண்டதுதான் farthing.

அக்காலத்தில் பிரிட்டனில் சைக்கிள்கள் அறிமுகமானபோது அவற்றை penny farthings என்று குறிப்பிட்டார்கள். இவற்றின் முன்சக்கரம் பெரிதாகவும், பின் சக்கரம் சிறிதாகவும் இருந்தன.

**********************

Sleeping Partner என்று அழைக்கப்படுபவர் யார்?

Active Partner என்றால் ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொள்ளும் அதன் பங்குதாரர்.

Sleeping Partner என்றால் முதலீடு செய்துவிட்டு அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்.

Sleeping Partner-ஐ Dormant Partner என்றும் குறிப்பிடுவதுண்டு.

Nominal Partner என்றால் ஒரு நிறுவனத்தில் எந்த ஆர்வமும் இல்லாதவர். முதலீடும் செய்யாதவர். ஆனால், அவரை ஒரு partner என்று கூறிக் கொண்டால் அந்த நிறுவனத்துக்கு ஓர் அந்தஸ்து கிடைக்கலாம்.

ஒரு கூட்டு வணிகத்தில் (Partnership) அனைத்துப் பங்குதாரர்களும் லாபம் - நஷ்டம் ஆகிய இரண்டையுமே பகிர்ந்துகொள்வார்கள். ஆனால் Partner-in Profits only என்பவர் லாபத்தில் மட்டுமே தன் பங்கை அனுபவிப்பார். நஷ்டத்துக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது.

**********************

Mug தொடர்பாக ‘கேட்டாரே ஒரு கேள்வி’யில் இடம்பெற்ற கேள்விக்கான பதில் சுவாரசியமானது - உண்டு!

Mug என்பது (noun ஆகப் பயன்படுத்தப்படும்போது) உருளை (அதாவது சிலிண்டர்) வடிவத்தில் கைப்பிடியோடு கூடிய சற்றே பெரிய கோப்பையைக் குறிக்கும். Cup என்றால் saucer உண்டு. ஆனால் mug-குக்கு saucer கிடையாது. I drank a mug of coffee.

Mug என்பது verb ஆகப் பயன்படுத்தப்படும்போது வேறு பொருள்கள் கொண்டது. “He was mugged by four persons of a gang” என்றால் அவர் நான்கு பேரால் தாக்கப்பட்டார் என்று பொருள். பொதுவாகப் பொது இடங்களில் தாக்கப்பட்டுத் திருட்டு நடப்பதை mug என்ற வார்த்தையின் மூலம் குறிக்கிறோம்.

எதையாவது mug செய்வது என்றால் அது ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்துக்குள் ஒன்றை வேகமாகக் கற்றுக்கொள்வதைக் குறிக்கும். முக்கியமாகத் தேர்வு காலத்துக்கு முன்பு.

எனவே, முழுமையாக ஒன்றை அறிந்துகொள்வது இப்படிப் படிப்பதற்கான நோக்கமில்லை என்பதால் mug செய்வது அல்லது mug அடிப்பது என்பதை அர்த்தம் புரியாமலேயே மனப்பாடம் செய்வதைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம்.

Mugshot என்றால் அதிகாரபூர்வமாக ஒருவரது முகத்தை எடுக்கும் ஒளிப்படம். அதற்காகப் புது அலுவலகத்தில் சேர்வதற்காக உங்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதைப் பிறரிடம் ‘இதுதான் என்னோட mugshot’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளாதீர்கள். காரணம் நடைமுறையில் mugshot என்ற வார்த்தை சிறையில் அடைக்கும் முன் ஒருவரைக் காவல்துறை எடுக்கும் புகைப்படத்தைக் குறிக்கவே பயன்படுகிறது.

**********************

போட்டியில் கேட்டுவிட்டால்?

The rain will ________ for most of the morning, but we are expecting a brighter afternoon.

a) insist

b) persist

c) resist

d) consist

e) pourest

Will pour என்று வரலாம். ஆனால் will pourest என்று வராது.

Insist என்றால் ஒன்றில் உறுதியாக இருப்பது.

Persist என்றால் விடாமல் தொடர்வது.

Resist என்றால் ஒன்றை எதிர்ப்பதில் உறுதி காட்டுவது.

Consist என்றால் கொண்டிருப்பது.

இவற்றில் persist என்ற வார்த்தைதான், அதன் அர்த்தத்தால் கோடிட்ட இடத்தில் சரியாகப் பொருந்துகிறது. எனவே The rain will persist for most of the morning, but we are expecting a brighter afternoon என்பதுதான் சரியான வாக்கியம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

வேண்டாமே, பழைய உணவு

டாக்டர் வி. விக்ரம்குமார்



ஆற்றங்கரை நாகரிகம் முதல் கடந்த நூற்றாண்டுவரை மனித இனம் தனக்குத் தேவையான உணவை, அன்றன்றைக்கு சமைத்தே சாப்பிட்டு வருகிறது. ஆனால் குளிர்பதனப் பெட்டியின் அதிரடி வருகைக்குப் பின்னர், முந்தைய நாளில் சமைத்த உணவை சற்று அதிகமாக சாப்பிடத் தொடங்கிவிட்டோம். இதன் காரணமாக உடல்நலத்தைக் குறித்து வைத்துத் தாக்குவதற்கு, கிருமிகளின் பெரும்படையுடன் நோய்கள் ஆயத்தமாகிவிடுகின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் மீந்த பழைய உணவு கழனிப் பானைக்குச் செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக, மீதமான பழைய உணவு குளிர்பதனப் பெட்டிக்குள்ளும், பிறகு நம் இரைப்பைக்குள்ளும்தான் அடிக்கடி தஞ்சமடைகிறது. ஆழ்ந்து யோசித்தால், மீந்த உணவுப் பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கழனிப் பானையாக நம் இரைப்பை மாறியிருப்பதை உணரலாம்.

அமுதெனினும் வேண்டாம்
நோய் நம்மை நெருங்காமல் இருக்க, ’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது சித்த மருத்துவர் தேரையரின் கூற்று. ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டதாக கூறப்படும் ‘திரிகடுகம்’ எனும் நூலும், பழைய உணவை சாப்பிடாமல், நாள்தோறும் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.
பணிச் சுமை, நேரமின்மை, அவசர வாழ்க்கை என செயற்கை காரணங்களுக்காக நேற்றைய உணவை பத்திரமாகப் பாதுகாத்து இன்று சாப்பிடுகிறோம். ஆனால், இந்தப் பழக்கம் தொடரும்போது வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை, தோல் நோய், வாந்தி என பல்வேறு நோய்களுக்கு வழி அமைத்துக் கொடுத்துவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. சிறுதுளி பெருவெள்ளமாய், நஞ்சானது நமக்கே தெரியாமல் சிறிது சிறிதாக நாளடைவில் பெரிய நோய் அறிகுறிகளை உருவாக்கும்.

மாறுபடும் இயற்கைத் தன்மை
‘நேற்றைய உணவை இன்று சூடேற்றித்தானே சாப்பிடுகிறோம், அதில் கிருமிகள் இருந்தாலும் அழிந்துவிடுகின்றன, வேறு என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது?’ என்பதே பெரும்பாலோரின் கேள்வி. ஆனால், பாதிப்பு உறுதியாக இருக்கிறது என்பதே இதற்கு பதில். ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் நோய் தீர்க்கும் குணம் உண்டு. ஒரு உணவுப் பொருளின் சுவை, தன்மை, ஆயுட்காலம், சமைக்கப்படும் முறை, செரிமானத்துக்கு பின், அதில் உண்டாகும் மாறுபாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே, அதன் நோய் போக்கும் தன்மை அமையும்.
அதிகமாகச் சூடேற்றி அல்லது குளிர்மைப்படுத்தி, ஒரு உணவுப் பொருளை அதன் இயற்கை தன்மையிலிருந்து மாற்றும்போது, அதன் நோய் தீர்க்கும் பண்பும் மாறுபட்டு, நோய் உண்டாக்கும் காரணியாகிவிடும். அரிசியை அதிகக் கொதியில் சமைக்கும்போது குழைந்தோ, நசிந்தோ இயற்கை குணத்திலிருந்து மாறுபடுகிறது. அதைப்போல, ஒரு உணவை ஒரு முறை சமைத்து மறுநாள் சூடேற்றும்போது, உணவின் இயற்கைத் தன்மை மாறுபடும். அதில் ஒளிந்துக்கொண்டிருக்கும் கிருமிகள் முழுவதுமாக அழிந்துவிடுமா என்றால், அதுவும் இல்லை.

பதப்படுத்தப்பட்ட உணவு
இன்றைய காலகட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் காரணமாக காலையில் சமைத்த சில வகை உணவு, அடுத்த வேளையே கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் அதை மறுநாள்வரை வைத்திருந்து சாப்பிடுவது உகந்ததல்ல. குளிர்பதன வசதி கொண்ட மிகப்பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவை (Canned and Tinned foods) முடிந்தவரை தவிர்த்துவிட்டு, தினமும் கிடைக்கும் கீரை, காய்களால் தயாரிக்கப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் நஞ்சு உண்டாவதற்கான சாத்தியம் மிக அதிகம். ’சில நிமிடங்களில் ரெடி’ என விளம்பரப்படுத்தப்படும் சிற்றுண்டி வகைகளையும், அடைக்கப்பட்ட ’ரெடிமேட்’ சூப் ரகங்களையும் சாப்பிடும்போது உடலில் அடிக்கடி விஷ உணவு அறிகுறிகள் உண்டாவது கவனத்துக்குரியது.

விபரீதமாகும் பழைய அசைவம்
சைவ உணவைவிட அசைவ உணவைப் பதனப்படுத்தி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கெட்டுப்போன அசைவ உணவில் கிருமிகள் மறைந்திருந்து, உடல் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். வீட்டுக்கு அருகே வாழும் கோழியையோ ஆட்டையோ அப்போதைக்குப் பிடித்து, யாரும் இன்றைக்கு அசைவ உணவைத் தயாரிப்பதில்லை.
மாறாக அதிக அறிமுகம் இல்லாத உணவகங்களில் சுவைத்துச் சாப்பிடும் இறைச்சி உணவு, எப்போது சமைக்கப்பட்டது என்பதிலும் நம்பகத்தன்மை இருப்பதில்லை. கெட்டுப்போன உணவின் மூலம் பூஞ்சைகளையும் (Mycotoxins), பாக்டீரியாவையும் இலவசமாக நம் உடலுக்குள் நுழைய அனுமதிக்கும்போது, உடனடியாகவோ சில நாட்கள் கழித்தோ விபரீத பாதிப்புகள் உண்டாகலாம். பழைய மீன் குழம்பு சுவையானது என்பதற்காக, ஒருவாரம்வரை வைத்திருந்துப் பயன்படுத்துவது அறிவுடைமை அல்ல.

தேவையின்போது மட்டும்
வாரம் ஒரு முறையாவது உணவகங்களில் சாப்பிடப் பழகிவிட்ட மேல்தட்டுக் குடும்பங்கள், சுகாதாரமான மற்றும் நம்பகமான உணவகங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தேவை இருக்கும்போது மட்டும் உணவகங்களை நாடிச் செல்வது உசிதம். பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே போதுமான அளவு சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. வீட்டிலேயே சமைக்கப்படும் உணவில் என்னென்ன பொருட்கள் சேர்கின்றன, அவற்றின் பயன்கள் என்ன என்பதை உணர்ந்து சாப்பிடுவது மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்கின்றன உளவியல் ஆய்வுகள். இதுவே நமது உணவுக் கலாசாரத்தின் பெருமை. அதை விடுத்து உணவகங்களில் சாப்பிடும் உணவில் என்ன கூறுகள் சேர்கின்றன என்பது தெரியாமல், வயிற்றுக்குள் அனுப்புவது திருப்திகரமான, முழுமையான உணவாக மாறாது.

நோய்களின் தொடக்கப் புள்ளி
சமைத்து பக்குவப்படுத்தப்பட்டு குளிர்ந்து பின்பு மீண்டும் சூடாக்கப்பட்ட உணவு, வயிற்றில் ஆமத்தை உண்டாக்கி பலவித நோய்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறது சித்த மருத்துவம். பழைய உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது, செரிமான ஆற்றல் பாதிக்கப்படும். உணவைச் செரிப்பதற்கு தேவையான செரிமான அக்கினி (Digestive fire), கெட்டுப் போன உணவில் விஷமாக்கினியாக மாறாமல் இருக்க, தினமும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்.

நசிந்த பழைய உணவை உட்கொள்ளும்போது, நுண்கிருமிகளின் ஆதிக்கத்தால் விஷ உணவின் அறிகுறிகளான (Food poisoning) வாந்தி, சுரம், பேதி, மயக்கம் போன்றவை உண்டாகும்.

சேமிப்புக் கிடங்கு அல்ல
அறிவியல் வளர்ச்சியான குளிர்பதனப் பெட்டியை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதையே உணவின் சேமிப்புக் கிடங்காக நெடு நாட்களுக்குப் பயன்படுத்துவதுதான் பிரச்சினை.

சாப்பிடத் தகுந்த ஒரே பழைய உணவு எதுவென்றால், இரவில் சாதத்தோடு நீர் சேர்த்து, மறுநாள் காலையில் நலம் பயக்கும் பாக்டீரியாவுடன் உண்ணத் தயாராக இருக்கும் ’நீராகாரம்’ மட்டுமே. தேவைக்குப் போக மீந்த உணவை குளிர் பதனப் பெட்டியில் அடைத்து வைக்காமல், பசியால் வாடுபவர்களுக்கு அன்றே தானம் செய்யலாம். அதிகளவில் மீந்த உணவைப் பெற்றுக்கொள்ள நிறைய தொண்டு நிறுவனங்களும் உள்ளன.

ஆயுட்கால நிர்ணயம்
கம்பு, சோளம், நெல் வகைகள் போன்ற மூலப்பொருட்களை பதனப்படுத்தும் முறைகள் நம் பாரம்பரியத்தில் அதிகம். ஆனால் சமைக்கப்பட்ட உணவை நீண்ட நாட்கள் பதனப்படுத்திப் பயன்படுத்துவது, நமது பாரம்பரிய உணவு முறைக்கு எதிரானதே. நாம் சாப்பிடும் உணவின் ஆயுட்காலத்தை தரநிர்ணயம் செய்தால், உணவு நமது ஆயுட்காலத்தை நிர்ணயம் செய்யும். வயிற்றின் மென்தசைகளுக்கும், அதன் செரிமானச் சுரப்புகளுக்கும் கெட்டுப் போன கழிவு உணவுக்குப் பதிலாக, புதிதாகச் சமைத்த உணவைப் பரிசளித்தால் உடல்நலமும் புத்துணர்ச்சியும் புத்துயிரும் பெறும்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் 
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

ஜெ. மருத்துவ செலவு ரூ.6 கோடியை அப்போலோவுக்கு செலுத்தியது அதிமுக

ஜெயலலிதா | கோப்புப் படம்.

ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ரூ.6 கோடியை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிமுக வழங்கியது.

முதல்வராக இருந்த ஜெய லலிதா திடீர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே 5 முறை யும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் 3 முறையும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித் தனர். அவர்கள் கொடுத்த ஆலோ சனைகளின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த 2 பெண் பிசியோ தெரபி நிபுணர்கள், ஜெயலலிதா வுக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுத்தனர். டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதா உயிரிழந்தார்.

இதற்கிடையே, ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக அரசு டாக்டர் பி.பாலாஜி கூறும்போது, “ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் மருத்துவமனையில் அளிக்கப் பட்ட சிகிச்சைக்கு ரூ.5 கோடி முதல் ரூ.5.50 கோடி வரை செல வாகியுள்ளது” என தெரிவித்தார். இதையடுத்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு செலுத்துவதா அல்லது கட்சி செலுத்துவதா என்ற பெரும் குழப்பம் நீடித்து வந்தது.

கட்சி சார்பில்..
இந்நிலையில், சில நாட் களுக்கு முன்பு சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல் வர் கே.பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத் தில், ஜெயலலிதாவின் சிகிச்சைக் கான செலவை கட்சி சார்பில் கொடுப்பது என முடிவு செய்யப் பட்டது. அதன்படி, கட்சியின் சார்பில் ரூ.6 கோடிக்கான காசோலை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அந்த காசோ லையை அப்போலோ மருத்துவ மனை நிர்வாகத்தினரிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் வழங்கினார்.

எம்ஜிஆர் மருத்துவ செலவு
இதுதொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியதாவது:

‘‘ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டாம் என நினைத்தோம். அரசுப் பணம் மக்களின் வரிப் பணம். அதனால் ஜெயலலிதாவின் மருத்துவ செலவை கட்சியே செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கட்சியில் இருந்து ரூ.6 கோடிக்கான காசோலை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கரிடம் கொடுக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு சென்று கொடுத்தார். ஏற்கெனவே எம்ஜிஆரின் மருத்துவ செலவான ரூ.92 லட்சத்தை அரசு செலுத்தியது. பின்னர் அந்த தொகையை அரசுக்கு கட்சி செலுத்திவிட்டது. அண்ணாவின் மருத்துவ செலவையும் கட்சிதான் ஏற்றது’’ என்றார்.

சென்னையில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு: சமாளிக்குமா குடிநீர் வாரியம்?

By DIN  |   Published on : 18th June 2017 04:40 AM 
சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய சென்னைக் குடிநீர் வாரியம் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குளம்,ஆறு, ஏரிகள் தண்ணீர் வறண்டு விட்டன.
சென்னை மக்களின் ஒரு நாளுக்கான குடிநீர்த் தேவை 83 கோடி லிட்டர் ஆகும். எனினும் பற்றாக்குறை காரணமாக தற்போது 500 மில்லியன் லிட்டருக்கும் குறைவான தண்ணீர்தான் விநியோகிக்கப்படுகிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகள் முற்றிலும் வறண்டு வருகின்றன. சென்னை மக்களுக்கு தினமும் குழாய்களில் வழங்கப்பட்டு வந்த குடிநீர் வெகுவாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில் சில மணி நேரம் மட்டும் தண்ணீர் வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு நிலைமை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டு வருகிறது.
ஏரிகளில் தண்ணீர் முற்றிலும் வற்றி விட்டதால் மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரம் கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை எடுத்து சுத்திகரித்து விநியோகித்து வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதால் அனைத்துப் பகுதியிலும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரின் அளவும் வெகுவாக குறைந்து விட்டதால் சென்னையில் பல பகுதிகளில் பொதுமக்கள் தினமும் குடிநீருக்காக அல்லல் பட்டு வருகின்றனர்.
நகரின் பெரும்பாலான தெருக்களில் உள்ள பொதுமக்கள் லாரி குடிநீருக்காகவும், குழாய் தண்ணீருக்காகவும் குடங்களுடன் காத்திருக்கின்றனர்.
சென்னையின் மையப் பகுதிகளான எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பாரிமுனை, சூளை, வட சென்னை பகுதிகளான பெரம்பூர், சௌகார்பேட்டை, ராயபுரம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் குடிநீர் அடிபம்புகளில் தண்ணீர் வருவதில்லை. ஆதம்பாக்கத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் இல்லை என பொதுமக்கள் தொடர்புடைய அதிகாரிகளுக்கு புகார் அளிப்பதுடன் ஆங்காங்கே குடிநீருக்காக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
குடிநீர் தட்டுப்பாட்டால் கேன் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. தேவை அதிகமாக இருப்பதால் நகரின் பல இடங்களில் குடிநீர் கேன்களின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
சென்னையில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் தெருக்களில் சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் கூடுதல் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனினும் தேவையுடன் ஒப்பிடுகையில் விநியோகம் மிகவும் குறைவாகவே உள்ளது.
இது குறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:
சென்னை நகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டை முன்னரே கணித்து முடிந்தளவுக்கு நிலைமையைச் சமாளித்து வருகிறோம். 4 குடிநீர் ஏரிகளிலும் மொத்த கொள்ளளவில் (11 டிஎம்சி) தற்போது 1 சதவீத அளவுக்கு (125 மில்லியன் கன அடி) மட்டுமே தண்ணீர் உள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் அளவு மிகவும் கீழே சென்று விட்டது. இதனால் குடிநீர் விநியோகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்.
இந்தநிலையிலும் நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், கல்குவாரிகள், விவசாயக் கிணறுகள் மூலம் குடிநீரைப் பெற்று விநியோகித்து வருகிறோம்.
நெம்மேலியில் தற்போது 100 மில்லியன் கன அடி பெறப்பட்டு வருகிறது. மிக விரைவில் இங்கிருந்து கூடுதல் நீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று சில வாரங்களில் போரூர் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படும். இது தவிர நூற்றுக்கணக்கான குடிசைப் பகுதிகளுக்கு வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் குடிநீர் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்றனர்.


ஜிஎஸ்டியால் இந்த ஆண்டு முன்கூட்டியே வருகிறதா ஆடி மாதம்.. எப்படி?

Published on : 17th June 2017 03:30 PM |



சென்னை: வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் என்றால் அது ஷாப்பிங் சீசன் என்பது போல அதிரடி தள்ளுபடிகள் களைகட்டும்.

ஆடி மாதத்தை ஆங்கில மாதத்தில் சொல்ல வேண்டும் என்றால் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் வரும். ஆனால், இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், ஆடி மாத தள்ளுபடிகளை முன்கூட்டியே அறிவிக்க சிறு வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மேஜை, நாற்காலி விற்பனை கடைகள் உள்ளிட்ட சில்லறை வணிகக் கடைகள் பலவும் தங்களிடம் உள்ள ஏராளமான சரக்குகளை ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே விற்பனை செய்து விடும் வகையில், தள்ளுபடி விலையை அறிவிக்க முன் வந்துள்ளன. சில கடைகளில் 50% அளவுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மிகப்பெரிய ஸ்டேஷனரி கடையில் கைக்கடிகாரங்களுக்கு 25 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பின்னணி என்னவென்றால், கைக்கடிகாரங்களுக்கான வரி விகிதம், ஜிஎஸ்டியால் மாறுபடுகிறது. தற்போது 14 சதவீதமாக இருக்கும் வரி, ஜிஎஸ்டிக்குப் பிறகு 28% ஆக உயரும். எனவே தற்போது 25% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

கன்ஸ்யூமர் டியூரபிள் மற்றும் டிஜிட்டல் புராடக்ட்ஸ் விற்பனை மையத்தில் லேப்டாப் உட்பட பல பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகி பி.ஏ. ஸ்ரீனிவாசன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பல பொருட்களின் விலை உயரும் என்பதால், ஏற்கனவே இருக்கும் பொருட்களை தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

தற்போதிருக்கும் விலையை விட, ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை உயரும் வாய்ப்பிருக்கும் பொருட்களை, தள்ளுபடி விலையில் விற்க பல சில்லறை வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

பிரான்டட் துணி வகைகளுக்குக் கூட தற்போது சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

துணி விற்பனையில் ஜிஎஸ்டி என்ன செய்யும் என்று பார்த்தால், ஒரு துணியின் 60% விலைக்கு 12% வரி விதிக்கப்படும். எனவே, ஒரு துணியின் எம்ஆர்பி விலையிலேயே வரியும் அடங்கிவிடும். இதனால் சில்லறை விற்பனையாளர் எந்த வரியும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

அதேசமயம், ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு ஆலையில் இருந்து வெளியேறும் ஒரு துணியின் மதிப்புக்கு வரி மதிப்பிடப்படும். அதாவது, ரூ.1000க்கு மேல் இருக்கும் ஒரு துணிக்கு 12% வரியும், ஆயிரத்துக்குக் குறைவாக இருக்கும் துணிக்கு 5% வரியும் விதிக்கப்படும். இதனால் தற்போது கிடப்பில் இருக்கும் பொருட்களை ஜூலை 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்தால், ஜிஎஸ்டி வரியை தனியாக வசூலிக்க வேண்டியதிருக்கும். எனவே, தங்களிடம் இருக்கும் இருப்புகளை காலி செய்யவே சில்லறை விற்பனையாளர்கள் விரும்புவார்கள்.

செல்போன் விற்பனையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், தற்போது அலமாரிகளில் பல நாட்களாக விற்பனையாகாமல் இருக்கும் செல்போன்களுக்கு மட்டுமே தள்ளுபடி அறிவிக்கிறோம். ஜிஎஸ்டி பற்றி பலருக்கும் புரியவில்லை. இந்த நிலையில் எப்படி செல்போன் வாங்குவார்கள். அதனால்தான் சலுகை அறிவிக்கிறோம் என்கிறார்கள்.


































இது குறித்து வழக்குரைஞர் மற்றும் வரித் துறை ஆலோசகருமான வைத்தீஸ்வரன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 'சில்லறை விற்பனையாளர்கள், தங்களிடம் இருக்கும் ஓராண்டுக்கும் மேலான பழைய இருப்புகளை விற்பனை செய்யவே இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கு ஜிஎஸ்டியால் எந்த பலனும் கிடைக்காது என்பதால் தான்' என்று கூறுகிறார்.

இந்த பொருட்களுக்கு எல்லாம், ஏற்கனவே இருக்கும் பழைய வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தப்பட்டுவிட்டிருக்கும். உதாரணமாக உற்பத்தி வரி, மதிப்புக் கூட்டு வரி போன்றவை. இவற்றை ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்தால், கூடுதலாக ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியது இருக்கும். அதனால்தான் முன்கூட்டியே விற்பனை செய்ய சில்லறை வணிகர்கள் விரும்புகிறார்கள்.

ஜூலைக்கு முன்பு அவற்றை காலி செய்யவே தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சந்தையில் ஜிஎஸ்டியால் ஒரு பொருளின் விலை ஏறுகிறது, குறைகிறது என்று பலவாறான கருத்துகள் இருக்கின்றன. அதே சமயம் ஜிஎஸ்டி வணிகர்களுக்கு நல்லதாகவும் இருக்கலாம், மோசமானதாகவும் இருக்கலாம் என்கிறார் வைத்தீஸ்வரன்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: தொடங்கிய 5 நிமிடத்தில் நிறைவு

By DIN  |   Published on : 18th June 2017 10:28 AM  |   
சென்னை:  அக்டோபர் 16-ம் தேதி பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய ஐந்தே நிமிடத்தில் நிறைவு பெற்றது.  
2017ம் ஆண்டிற்கான தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று (ஜூன் 18) காலை தொடங்கியது.
தொடங்கிய 5 நிமிடத்தில் ரயில் டிக்கெட்க்கள் அனைத்தும் விற்பனையானது. பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர்.
நாளை அக்டோபர் 17-ம் தேதிக்கான முன்பதிவு, நாளை மறுநாள் அக்டோபர் 18-ம் தேதிக்கான முன்பதிவு துவங்க உள்ளது.

சென்னை அருகே ரூ.71 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மலேசியர் உள்பட 10 பேர் கைது

By DIN | Published on : 18th June 2017 04:41 AM

சென்னை அருகே செங்குன்றத்தில் ரூ.71 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்து மலேசியர் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள சோப்பு பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தில் போதைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து அந்த ஆலையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை செய்தனர். அங்கு பல கோடி மதிப்புள்ள மெதம்பேட்டமைன், பெசுடோபெட்டரைன், ஹெராயின் ஆகியவை தயாரித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக, பெயரளவுக்கு அங்கு சோப்பு பவுடர் தயாரித்து வந்ததும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.71 கோடி மதிப்புள்ள 11 கிலோ மெதம்பேட்டமைன், 56 கிலோ பெசுடோபெட்டரைன், 90 கிலோ ஹெராயின் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த ஒரு மலேசியர் உள்பட 10 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

சர்வதேசக் கும்பலுடன் தொடர்பு: கைது செய்யப்பட்டவர்கள், போதைப் பொருள்கள் தயாரிப்பதற்காக இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மூலப் பொருள்களை சென்னைக்குக் கடத்தி வந்துள்ளனர். சென்னையில் ஒரு கிட்டங்கியில் அந்த மூலப் பொருள்களை பதுக்கி வைத்துக் கொண்டு, தேவைக்கு ஏற்றாற்போல செங்குன்றம் ஆலைக்கு அவ்வப்போது கொண்டு வந்துள்ளனர்.

தேவையான இயந்திரங்களை நிர்மாணித்து அவற்றின் மூலம் போதைப் பொருள் தயாரித்து உள்ளனர். வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தும் நபர் மூலம், இங்கு தயாரிக்கப்பட்ட போதைப் பொருள்களை துறைமுகம், விமானம் வழியாக மலேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தி வந்துள்ளனர்.

இங்குள்ள போதைப் பொருள் தயாரிக்கும் கும்பலுக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பலுக்கு தலைவராகச் செயல்பட்ட நபரை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பலுடன் தொடர்பில் இருந்த வெளிநாட்டு நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

போதைப் பொருள் தயாரித்த அந்த ஆலைக்கும்,மூலப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கிட்டங்கிக்கும் சீல் வைக்கப்பட்டது. சென்னையில் அண்மைக்காலமாக நடைபெற்ற சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களில்,இப்போது கைப்பற்றப்பட்டதே அதிக மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

































சென்னை சில்க்ஸ் ஆறாவது மாடியிலிருந்து விழுந்த ‘லாக்கர்’! - இடிப்பு பின்னணி சொல்லும் ஒப்பந்ததாரர்
எஸ்.மகேஷ்




“சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் நான்காவது மாடியில் உள்ள நான்கு தூண்களை இடித்து, கட்டடத்தின் ஒரு பகுதியை முழுமையாக தரைமட்டமாக்கினோம்” என்று கட்டட இடிப்பு ஒப்பந்ததாரர் பீர்முகமது தெரிவித்தார்.


சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த 31 ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கே பல மணி நேரமானது. மணிக்கணக்கில் எரிந்த தீயால் கட்டடத்தின் முன்பகுதி இடிந்துவிழுந்தது. இதனால் கட்டடம், உறுதித்தன்மையை இழந்தது. உடனடியாக அதை இடித்து தரைமட்டமாக்க அரசு முடிவு செய்தது. தொடர்ந்து கட்டடத்தை இடிக்கும் பணியை சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பர்வீன் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் உரிமையாளர் பீர்முகமது தலைமையில் கட்டடம் இடிக்கும் பணிகள் நடந்தன. கடந்த 10 ஆம் தேதி, திடீரென கட்டடத்தின் முன்பகுதி இடித்து விழுந்ததில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த சரத்குமார் பலியானார். இதனால் கட்டடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.



இதையடுத்து, முன்எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் கட்டடம் இடிக்கும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. காலை 10 மணியளவில் கட்டடத்தின் ஒரு பகுதி சீட்டுக்கட்டுக்களைப் போல சரிந்தது. எந்தவித வெடிப்பொருள்களும் பயன்படுத்தாமல் கட்டடத்தை இடிக்கும் பணி குறித்து ஒப்பந்ததாரர் பீர்முகமதுவிடம் கேட்டோம்.

"சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியை எங்களிடம் அரசு ஒப்படைத்தது. நாங்கள் இந்தக் கட்டடத்தை இடிப்பதற்கு முன்பு முழுமையாக ஆய்வு செய்தோம். கட்டடத்தை இடிக்கப் பயன்படுத்தும் இயந்திரங்களை சமதளமாக நிறுத்தும் பணிகளைத் தொடங்கினோம். இதன்பின்னர், ஜா கட்டர், வால்வோ ஐரீஸ் போன்ற இயந்திரங்கள் மூலம் கட்டடத்தை இடிக்கத் தொடங்கினோம். கடந்த 10 ஆம் தேதி, எதிர்பாராதவிதமாக கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சரத்குமார் என்பவர் பலியாகினார். இதனால் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தோம். 'கட்டடத்தை வெடி வைக்காமல் இயந்திரத்தின் வழியாக சரிந்து விழ வைக்கலாம்' என்று முடிவு செய்தோம். இதற்காக வால்வோ ஜரீஸ் 460 என்ற ராட்சத இயந்திரம் மூலம் 25 அடி தொலைவிலிருந்து கட்டடத்தை இடித்தோம். அந்த வாகனத்தின் ஆபரேட்டர் கார்த்திக் மட்டுமே அங்கு இருந்தார். நாங்கள் எதிர்பார்த்தபடியே கட்டடம் சீட்டு கட்டுப்போல சரிந்து விழுந்தது.



காலை 10.10 மணிக்குள் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விட்டது. கட்டடம் சரியத் தொடங்கியதும் அங்கிருந்து வாகனத்தை அகற்றிவிட்டோம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மீதமுள்ள கட்டடத்தின் இன்னொரு பகுதியை இன்றே இடிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. சென்னை சில்க்ஸ் கட்டடடத்தை முழுமையாக இடித்த பிறகு கட்டட இடிபாடுகளை முப்பது நாள்களுக்குள் அகற்ற திட்டமிட்டு இருக்கிறோம்" என்று விரிவாக தெரிவித்தார்.

'கட்டடத்தை இடிக்கும்போது என்ன நடந்தது?' என்று ஒப்பந்ததாரர் பீர்முகமதுவிடம் கேட்டோம். " ஒரு சில நிமிடங்களிலேயே கட்டடத்தின் ஒரு பகுதி முழுமையாக கீழே விழுந்துவிட்டது. அந்தப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. மூச்சுத் திணறலைத் தவிர்க்க ஆக்ஸிஜன் சிலிண்டரை தயாராக வைத்திருந்தோம். இதுதவிர ஆம்புலன்ஸ், டாக்டர்கள், முதலுதவி கருவிகளும் அங்கு இருந்தன. கட்டடம் இடிந்து விழுந்தபோது 'டமார்' என்று சத்தம் கேட்டது. அந்த இடத்தைப் பார்த்தபோது ‘லாக்கர்’ ஒன்று கீழே விழுந்துகிடந்தது. அது, ஆறாவது மாடியிலிருந்தாகச் சொல்கிறார்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்றார்.

கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட ஆபரேட்டர் கார்த்திக்கிடம் பேசினோம். "சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க வால்வோ ஐரீஸ் 460 என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தினோம். முதலில், கட்டடத்தை மேலிருந்து இடிக்க முடிவு செய்திருந்தோம். அப்போது, நான்காவது மாடியில் உள்ள நான்கு தூண்களும் பலவீனமாக இருந்தன. அதுபோல கட்டடத்தின் சில தூண்களும் பலவீனமாக இருந்தது தெரிந்தது.



உடனடியாக நான்காவது மாடியில் உள்ள தூண்களைப் பலவீனப்படுத்தியதோடு, மேலிருந்து கட்டடத்துக்கு அழுத்தம் கொடுத்தேன். இந்த நடவடிக்கையை அடுத்து, கட்டடம் அப்படியே சரிந்துவிட்டது. ஏற்கெனவே, எங்களுக்கு மும்பை, கொல்கத்தா, குஜராத், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம், சென்னை எம்.ஆர்.சி.நகர் என பல இடங்களில் உயரமான கட்டடங்களை இடித்த அனுபவம் இருக்கின்றன. மீதமுள்ள கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன" என்றார்.

'கார்கூந்தல்தான் எங்கள் அடையாளமா?' மொட்டை அடித்து கேள்வி எழுப்பும் ’மனிதிகள்'

ஷோபனா எம்.ஆர்



நம்மில் எத்தனை பெண்களுக்கு மொட்டை அடித்துக்கொள்ளும் தைரியம் இருக்கிறது? அப்படி ஓர் எண்ணமே பெரும்பாலான பெண்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால், பெண்களின் ’கூந்தல்’ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, இங்கு நடக்கும் அரசியலும் ஆணாதிக்கமும் ஏராளம். இந்த சமூகத்தில், நீளமான முடியுடைய பெண் அடக்கமான பெண்ணாக பார்க்கப்படுகிறாள். ஆனால், தங்களின் செளகரியத்துக்கு ஏற்றவாறு, குட்டையான முடியோ அல்லது கிராப் வைத்துக்கொள்ளும் பெண்களை ஏதோ கட்டுக்குள் அடங்காத பெண்ணாகத்தான் பார்க்கிறது இந்த சமூகம். இந்தப் பார்வையை மாற்றும் ஒரு முயற்சியாக, ’மனிதி’ அமைப்பு பெண்கள் ‘முடி வெட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி’ ஒன்றை இன்று சென்னையில் நடத்தியது. மிக எளிமையான முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.


இது குறித்து, மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதா பேசுகையில், “மனிதி அமைப்பு ஆரம்பித்து கிட்டதட்ட ஒன்றரையாண்டு ஆகிறது. இதுவரை, நாங்கள் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்து, வாட்ஸ்அப் மூலமாகவும், சந்திப்புகள் மூலமாகவும் விவாதித்திருக்கிறோம். இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கெல்லாம் ஏதோ ஓர் அடிப்படை இருக்கிறது. இந்த அடிப்படைகளை உடைத்தால்தான், இந்த சமூக சிக்கல்களிலிருந்து பெண்களை வெளியில் கொண்டு வர முடியும். அதற்கான ஒரு முன்னெடுப்பாகவே, இந்த முடி வெட்டும் நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம். இதைப்பற்றி நாங்கள் முகநூலில் பதிவிட்டோம். அதற்கு இதனால் என்ன புரட்சி நடந்துவிடப்போகிறது என்று சிலர் கேட்கிறார்கள். நாங்களும் இங்கு புரட்சி நடத்தவில்லை. பெண்கள் முடி வெட்டிக்கொள்வதற்குக்கூட எத்தனை பேரிடம் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது? அப்போது அவர்களுக்கான சுதந்திரம் இங்கு எங்கே இருக்கிறது? இதற்கெல்லாம் விடை தேடும் முயற்சிதான் இந்த நிகழ்வு” என்று கூறுகிறார் சுதா.

மேலும், இந்த நிகழ்ச்சியில் மூலம் சேகரிக்கப்படும் முடியை, வரும் 26ஆம் தேதி, சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் தானம் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த சமந்தா என்பவர் கூறுகையில் , “என் அப்பா புற்றுநோயால இறந்தாரு. அவரோட இறப்புக்குப் பிறகு, எங்க அம்மாவுக்கு சடங்கு என்ற பேர்ல செஞ்ச கொடுமைகளை நான் கண்ணால பார்த்திருக்கிறேன். இந்த இரண்டு சம்பவங்களையும்தான், என்னை ‘மனிதி’யோட இணைச்சது. இங்க முடி வெட்டிக்கொள்ள வரும்போதுகூட, என் கணவருக்கும், மாமியாருக்கும் எங்க போறேன், எதுக்கு போறேன்னு பதில் சொல்லிட்டுத்தான் வரவேண்டியிருக்கு. இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில பங்கேற்பது மூலமா எனக்குள்ள பெரிய தன்னம்பிக்கை பிறக்குது’, என்று கூறுகிறார்.

மேலும், இந்த அமைப்பின் மற்றோரு ஒருங்கிணைப்பாளரான சாரதா பேசுகையில், ”நான் தபால் துறையில வேலை பார்க்குறேன். சின்ன வயசுல இருந்தே, பெண் என்பவள் நீளமான முடி வைச்சிக்கணும், பாவாடை சட்டைதான் போடணும், அதற்கடுத்து தாவணி போடணும், அப்புறம் சேலை உடுத்தணும் - இப்படியே என்னை வளர்த்தாங்க. மனிதி அமைப்பை பற்றி கேள்விப்பட்டு, அதுல இணைந்தேன். அப்போதான் பெரியார் குறித்தும், இந்த சமூக கட்டமைப்பு பெண்களை எப்படி காலங்காலமாக அடிமைப்படுத்தி வைச்சுக்கிறதுனு கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். இதோ..இங்க மொட்டை அடிச்சிட்டு, என் சுதந்திரத்தை நான் வெளிப்படுத்துறேன்”, என்று கூறி முடிக்கிறார்.

பெண்களின் உரிமைக்காக போராடும் இந்த ‘மனிதிகளின்’ நற்செயல்கள் தொரட்டும்!
960 பணியிடங்களுக்கு 6 லட்சம் பேர் போட்டி : தொடங்கியது சிவில் சர்வீஸ் தேர்வு!

இரா. குருபிரசாத்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை யு.பி.எஸ்.சி நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டது. மொத்தம் உள்ள 980 காலிப் பணியிடங்களுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6 லட்சத்துக்கு 30 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





அதன்படி, நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல் நிலை எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது. 74 நகரங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது. மொத்தம், இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. காலை முதல் தாள் தேர்வும், மதியம் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது.

இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வின் போது செல்போன், கால்குலேட்டர், ப்ளுடூத் போன்றவற்றை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்குப் பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.
vikatan.com

ஒரு ஆணை எப்போதெல்லாம் பெண்களுக்குப் பிடிக்கும்? - 10 பாயிண்ட் லவ் செக் லிஸ்ட்!
ஹேண்ட்ஸமா, உயரமா, அம்சமா, வெயிட் வாலட் பார்ட்டிதான் பெண்களுக்குப் பிடிச்ச ஹீரோ மெட்டீரியல்னு நெனச்சீங்கன்னா, கண்டிப்பா நீங்க இன்னும் டைனோசர் காலத்துலயே இருக்கீங்கனு அர்த்தம். இப்போ பொண்ணுங்களாம் ரொம்ப தெளிவு. அவங்களை இன்ஸ்பையர் பண்ண, நச்சுனு நாலு நல்ல கேரக்டர் இருந்தாலே போதும். அது உங்ககிட்ட இருக்கா? செக் பண்ணிப் பார்த்துக்கங்க...



1. "மேடம் நீங்கதான அன்னிக்கு..."னு பாக்குற எல்லா பொண்ணுகிட்டயும் விழுந்தடிச்சு பேச நினைக்கும் ஆண்களைவிட, அவசியத்திற்காக மட்டுமே பேச ஆரம்பித்து, அதன் பிறகு அது நட்புரீதியாக வளரும் ரிலேஷன்ஷிப்பை மட்டுமே இப்போ பொண்ணுங்க ரசிக்கிறாங்க...அனுமதிக்கிறாங்க.


2. ஒரு பொண்ணு அவளோட பர்சனல் பக்கங்களை உங்களுக்குப் படிச்சுக் காட்ட ஆரம்பிக்குற அளவுக்கு அவளுக்கு உண்மையாவும் நம்பிக்கையாவும் இருக்குற ஆளா நீங்க ? அப்ப உங்களுக்கு பாஸ் மார்க்!



3. ஒரு பக்கம் துறுதுறு பையனா இருந்தாலும், தன்னோட எதிர்காலத்துக்கான பக்கா பிளான் வைச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு ரசிச்சு வாழுற ஸ்மார்ட் பையனுக்கு டிமாண்ட் ஜாஸ்தி.

4. "எங்க இருக்க இப்ப நீ?", "என்ன பண்ற?"னுலாம் அடிக்கடி விசாரிச்சு உங்க ஸ்டேட்டசை தெரிஞ்சுக்கறதுக்குள்ள பொண்னுங்க டயர்டாகிடுவாங்க. அதனால, உங்க காதலி/மனைவி கேட்குமுன்பே வாட்ஸ்அப்ல உங்க ஸ்டேடஸ் தட்டி விட்டீங்கன்னா, அவங்களோட எவர்க்ரீன் ஹீரோ நீங்கதான்.




5. "நீ செம்ம அழகு டீ", "உன்ன மாதிரி ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்ல"ன்னு சின்னச் சின்னதா பொய் சொல்லிட்டே இருந்தாதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்னு, எப்பவோ பிளாக் அண்ட் ஒயிட் படத்துல கேட்ட வசனத்தை இன்னமும் ஃபாலோ பண்ற பாய்ஸைவிட, "நீதான்டி எனக்கேத்த அழகி"னு நிதர்சனம் பேசுற பசங்கதான் பொண்ணுங்க சாய்ஸ்.

6. ஹீரோ மாதிரி ட்ரெஸ், சூப்பர் பைக்னு சுத்திட்டிருக்கும் ஷோ-ஆஃப் பசங்களைவிட கொஞ்சம் நீட்டா, கேஸுவல் லுக்ல உலாத்துற பசங்கதான் பெண்களின் 'சைட்டு'!




7. "நான் இப்படி.. அப்படி" என வெத்து கெத்து காட்டுவதைவிட அமைதியாக தன் வேலைகளை கவனித்து அதன் மூலம் அதிகமா பேசப்படும் ஆண்கள்தான் பெண்களின் ஃபேவரிட்.

8. வீக் எண்ட் அவுட்டிங் அல்லது மீட்டிங் ஸ்பாட்டை நீங்களே முடிவு செய்யாம, உங்க பார்ட்னரிடம் கேட்டோ அல்லது கலந்தாலோசித்தோ முடிவெடுத்தால், உங்க அவுட்டிங் 'அவுட்' ஆகாம இருக்கும்.




9. "என்ன பண்ற? எதுக்கு பண்ற? எங்க போற? எதுக்கு போற?"னு எல்லா விஷயத்துலயும் குறுக்கிட்டு, "நான் ஆண்.. நீ பொம்பளை"னு கேள்வி கேட்டு அட்வைஸ் பண்ணிட்டே இருந்தா, இந்தக் கால பொண்ணுங்க அவங்களை சும்மா வெச்சு செஞ்சிடுவாங்க... பீ கேர்ஃபுல்!

10. சாக்லேட் பாய் லுக்கில் இருக்கும் சல்மான், துல்கரைத் தாண்டி பொறுப்பான குடும்பத் தலைவராக இருக்கும் 'தல' அஜித்துக்குதான் பெண் ரசிகர்கள் அதிகம் பாஸ். ஸோ... ஹோம்லியா இருக்குற பையன்தான் செலெக்டட்... 'ஹோம்லி பொண்ணுதான் வேணும்னு சொல்ற பையன்லாம் ரிஜெக்டட்!

- இந்துலேகா.சி
பணம் பத்திரம்..! தெரியாத நம்பர்ல இருந்து வரும் மெசேஜ், அழைப்புக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க!

சோ.கார்த்திகேயன்


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். அங்கு ஒரே ஒரு செல்போன் கோபுரம்தான் உள்ளது. அங்கிருந்து தினமும் மும்பைக்கு மூன்றாயிரம் மோசடி வங்கி அழைப்புகள் செல்வதாகச் சொல்லப்படுகிறது. இங்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல இடங்களிலிருந்தும்... ஏன் வெளிநாடுகளிலிருந்தும்கூட ஃபேக் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்துவது என்பது உண்மையில் முடியாத காரியம். ஏனெனில், இந்த டிஜிட்டல் உலகில் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; பணத்தை பிடுங்கலாம். இதையே ஒரு தொழிலாக பலரும் செய்கிறார்கள். ஆகையால், நாம்தான் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.







வெளிநாட்டிலிருந்து லாட்டரிப் பரிசு விழுந்ததாகவோ அல்லது பணம் வந்துள்ளதாகவோ உறுதியளிக்கும் போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவற்றை எந்தக் காலத்திலும் நம்பாதீர்கள்.

உங்களின் மொபைல் நம்பருக்கு வரும் OTP எண், உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டு அட்டையின் பின் பகுதியில் இருக்கும் மூன்றெழுத்து CVV எண், உங்கள் ஏடிஎம் PIN நம்பரை யாருக்கும், எப்போதும் சொல்லாதீர்கள். இந்த எண்ணை ரகசியமாக வைத்திருங்கள். இதைப்போல உங்களுடைய இணையதள வங்கிச் சேவையின் User ID, Password விவரங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். இவற்றைக் கேட்பவர், தான் ஒரு வங்கி அல்லது கடன் அட்டை கம்பெனி அதிகாரி எனக் கூறிக்கொண்டாலும் இந்தத் தகவல்களை எவருக்கும் தெரிவிக்க வேண்டாம். உங்களுக்கு யாரும் இலவசமாகப் பணம் கொடுப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA)-ன் கீழ் தடைசெய்யப்பட்ட விஷயங்களுக்காகப் போலியாக வரும் அழைப்புகளை ஏற்று எந்த வகையிலும் பணம் அனுப்பாதீர்கள். இந்திய ரிசர்வ் வங்கி, தனிநபர் வங்கிக்கணக்குகளைப் பராமரிப்பதில்லை. அது வங்கிக்கணக்கு விவரங்களை யாரிடமும் கேட்பதுமில்லை.

தனிப்பட்டவர்களுக்கு லாட்டரிப் பரிசு விழுந்ததாகவோ, வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததாகவோ, உங்களுக்கு ரிசர்வ் வங்கி தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்புவதில்லை. இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள்போல போலியாகக் கொடுக்கப்படும் பெயர்களை நம்பாதீர்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் ரிசர்வ் வங்கி முத்திரையுடன் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வமான மற்றும் உண்மையான இணையதளம் என்பது www.rbi.org.in மட்டுமே.

போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மட்டுமல்லை, நம்முடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு காந்தப்பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களைச் சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்துகொள்ளும் மோசடி செயல்கள் உள்பட பல மோசடி செயல்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள், வேறு ஒரு கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கோ பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வகையான மோசடிகள் நேற்று, இன்று என்றில்லை... பல ஆண்டுகளாக நீடித்துவருகின்றன. உஷாராக இருங்கள். நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தை உடனடியாக அணுகுங்கள்.
வீதிக்கு வந்த அதிகார மோதல்... சவால் போட்டி நடத்தும் ஆளுநர், முதல்வர்!

ஜெ.முருகன்

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியை முதல்வராக அறிவித்தது கட்சி மேலிடம். அந்த சந்தோஷத்தைக் கொண்டாடக் கூட அவருக்கு நேரம் கொடுக்காமல் கிரண்பேடியை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமித்தது மத்திய பா.ஜ.க அரசு. இரு தரப்பினருக்கும் அன்று தொடங்கிய அதிகார மோதல் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ முதுநிலை சீட் விவகாரத்தில், கிரண்பேடியும் நாராயணசாமியும் மாறி மாறி சவால் விட்டு வருகின்றனர்.




இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடியின் அதிகாரத்தைக் குறைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டினார் முதல்வர் நாராயணசாமி. மேலும் புதுச்சேரியில் ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லா விட்டால் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு சென்று விடலாம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் நாராயணசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாட்ஸ்-அப் மூலம் காரசார அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் கிரண்பேடி.


”துணைநிலை ஆளுனரின் அதிகாரங்களைப் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகளுக்கு எனது சிறிய பதில் இது. ஆளுநராக நான் செய்யும் ஒவ்வொரு பணியும் என் பொறுப்புகளுக்கு உட்பட்டவை என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால்தான், நான் ஒரு ஆளுநராகவும், நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன். துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென்றால் ஏன் நிதி ஒப்புதல்கள், இடமாற்றங்கள், கேபினட் முடிவுகளுக்கு ஒப்புதல், கொள்கை ஒப்புதல்கள் ஆகியவற்றிற்கான கோப்புகளை என்னிடத்தில் கொண்டு வருவதன் அவசியம் என்ன? நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுச்சேரியில் முழுநேரம் செயல்படும் ஆளுநராக நான் இருக்கிறேன்.



யூனியன் பிரதேசத்தில் 24 மணி நேரமும் பணியில் கவனம் செலுத்துபவர்தான் ஆளுநர். மக்கள் கவலையை கேட்பதற்காகவும், கவனம் செலுத்தப்பட வேண்டிய இடங்களை பார்வையிடவும், கவனமாக கோப்புகளை பரிசோதித்து நுட்பமாக கவனிப்பதும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிக்கைகளைக் கேட்டு செயல்படுத்துவதும், ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு முதலிய சேவைகளுக்காகத்தான் ஆளுநர் அலுவலகம் திறக்கப்பட்டது. இது எனது பொறுப்பின் முன்னோட்டத்திற்கு உட்பட்டது. அதிகாரிகள் மற்றும் மக்களை ஊக்குவிப்பதற்காகவும் மக்களுக்கு தூண்டுதலளிக்கவும் இத்தகவலை தெரிவிக்கிறேன்.

என்னுடைய பொறுப்புகளின் இதுவும் ஒரு பகுதி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் காலை நேர ஆய்வுகளுக்கு என்னுடன் சேர்ந்து செயல்புரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதிலும் அதற்கு ஒத்துழைக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இது அவர்களின் முடிவு என்றால் வார இறுதியில் காலை நேர ஆய்வுகளில் நான் கடந்த விவரங்களின் தொகுப்புகளை வெளியிடுவதும் என் முடிவு. புதுச்சேரியின் மேம்பாட்டிற்காக என் வார இறுதி நாட்களில் நான் பணி செய்வதால் புதுவையின் வளர்ச்சிகளைக் கண் கூடாக பார்ப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.

ராஜ் நிவாஸை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் நான் இங்கு இருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சரியான நிதி நிர்வாகத்தை உறுதிப்படுத்துவேன். இது என் கடமை மற்றும் பொறுப்பும் கூட. என் நோக்கத்தையும், ஆர்வத்தையும் புரிந்து கொள்ளப்படாததை குறித்து மிகவும் வருந்துகிறேன். நான் கவலைப்படுவதற்கான ஒரே காரணம் இதுவே. எனக்கு அளிக்கப்பட்ட நிர்வாக பொறுப்புகளை உணர்ந்து என் கடைசி நாள் வரை பொறுப்புடன் செயல்படுவேன்” என்று பேசுகிறது கிரண்பேடியின் செய்தியறிக்கை.

news today 02.01.2025