சென்னை,
பொது மருத்துவ கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 200–க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 17 மாணவ–மாணவிகள் சென்னை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தனர்.
20 கல்லூரிகளில் 2,665 இடங்கள்
தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான இடங்கள் 2,655 உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக 398 போய்விடும். மீதம் உள்ள 2,257 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.
சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தலா 250 இடங்களும், மதுரை மருத்துவக்கல்லூரியில் 155 இடங்களும், தஞ்சை, கீழ்ப்பாக்கம், திருநெல்வேலி, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் தலா 150 இடங்களும், சேலம், கன்னியாகுமரி, வேலூர், தர்மபுரி, தேனி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவாரூர், சிவகங்கை, திருவண்ணாமலை, ஓமந்தூரார் ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் தலா 100 இடங்களும் உள்ளன. மொத்தத்தில் 2,665 இடங்கள் இருக்கின்றன.
அரசு பல்மருத்துவக்கல்லூரி சென்னை பிராட்வே அருகே உள்ளது. அந்த கல்லூரியில் 100 இடங்கள் இருக்கின்றன.
சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 863 உள்ளன. சுயநிதி பல்மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,020 வர உள்ளன.
முதல் பட்டதாரிகள்
எம்.பி.பி.எஸ். மற்றும் பல்மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் 32 ஆயிரத்து 184 பேர். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 444.
தகுதியான விண்ணப்பங்களாக 31 ஆயிரத்து 525 வந்துள்ளன. பழைய மாணவர்கள் 4 ஆயிரத்து 679 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் பட்டதாரிகள் 12 ஆயிரத்து 242 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தகுதியான அனைத்து மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலும் இணையதளத்தில் (www.tn.health.org) வெளியிடப்பட்டன.
உடல் ஊனமுற்றோர், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
பொது கலந்தாய்வு
நேற்று மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொது கலந்தாய்வு நடந்தது. 510 மாணவ–மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது. 200–க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவ–மாணவிகள் 17 பேர் எம்.பி.பி.எஸ். படிக்க சென்னை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தனர்.
அந்த 17 பேர் பெயர் விவரம் வருமாறு:–
1. கே.நிஷாந்த் ராஜன், ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
2. எம்.முகேஷ் கண்ணன், எஸ்.ஆர்.வி.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சமயபுரம், திருச்சி.
3. ஆர்.பிரவீன், எஸ்.கே.வி.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, எம்.கண்டம்பாளையம், நாமக்கல்.
4. ஜி.நிவாஷ், மலர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பரமத்தி, நாமக்கல்.
5. எஸ்.சரவணகுமார், கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பொதுப்பட்டி, நாமக்கல்.
6. டி.கவுதமராஜூ, கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பொதுப்பட்டி, நாமக்கல்.
7. வி.மோதிஸ்ரீ, கிரீன் பார்க் மெட்ரிகுலேசன் (மகளிர்)மேல்நிலைப்பள்ளி, பொதுப்பட்டி, நாமக்கல்.
8. ஜே.எம். திராவிடன், ஸ்ரீகிருஷ்ணா, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்.
9. பி.பிரவின்குமார், கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பொதுப்பட்டி, நாமக்கல்.
10. எம்.முகமது பைஸ், வித்யா விகாஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, பள்ளிப்பாளையம் மெயின்ரோடு, திருச்செங்கோடு, நாமக்கல்.
11. எம்.சரண்ராம், எஸ்.எஸ்.எம்.லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, குமாரப்பாளையம், குமாரப்பாளையம், நாமக்கல்.
12. ஆர்.ரேணுகா, ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு.
13. பி.மோனிஷ், ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கோபிச்செட்டிபாளையம், ஈரோடு.
14. ஜி.கார்த்திக், ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
15. எம்.மோகன்குமார், ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆதர்ஷ் நகர், ஈரோடு.
16. ஏ.நதாஷா, எப்.எம்.ஜி. மேல்நிலைப்பள்ளி, கூம்பம்பரா, அடிமலி. கேரளா.
17. இ.அஜித்குமார், சவுதாம்பிகா மெட்ரிகுலேசன் (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி, துறையூர், திருச்சி.
பார்வையிட்டார்
கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதா லட்சுமி, மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம், இணை இயக்குனர் டாக்டர் அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் சென்றபோது அவர்கள் கல்லூரியை தேர்ந்து எடுத்ததற்கான ஒதுக்கீட்டு ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை எந்த தேதியில் வழங்கப்படும் என்பது குறித்து நீதிமன்ற உத்தரவையொட்டி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றனர்.