குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா? #GoodParentingநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறது. வளர்இளம் பருவத்தை எட்டும் சிறுவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களைப் பார்க்கும் நோயாளிகளாக மாறுவது என, குழந்தைகள் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். பெற்றோர் செய்வதை அப்படியே காப்பியடிப்பதும், கொஞ்சமாகத் தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்துகொள்வதும் இந்த வயதின் இயல்பு.
பெற்றோர் கவனக்குறைவாகச் செய்யும் பல தவறுகள், குழந்தைகளை வேறு பாதைக்குக் கொண்டுசெல்கிறது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் முன்பு உடை மாற்றுவது. குழந்தைதானே அவர்களுக்கு என்ன புரியப்போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம். சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்துகொண்டால், அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கிற அம்மாக்கள் இருக்கிறார்கள்.
இது குறித்து மனநல மருத்துவர் மீனாட்சி கூறுகையில், ‘‘பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு டிரஸ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும் போதே அனைத்து விஷயங்களும் தெரியும். ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு டிரஸ் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளின் கலாச்சாரம் வேறு., எனவே அங்கு வளரும் குழந்தைகளுக்கு உடை என்பது பெரிய விஷயமாக ஈர்ப்பதில்லை. ஆனால் நம் நாட்டு குழந்தைகள் அப்படி வளர்க்கப்படவில்லை. சமூகமும் அதுபோன்று மாறவில்லை எனும்போது நாம்தான் குழந்தைகள் முன்பு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உடை மாற்றும்போது நம்மை பார்க்கும் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். அவற்றை அவர்களால் காட்டத் தெரியாது. அவை அப்படியே தொடரும்போது
பாலியல் குழப்பத்துக்கு ஆளாவார்கள்.
குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் சூழலில் இருந்தே பெரும்பாலான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரும் விஷயங்களின் ரோல்மாடலாக பெற்றோரே உள்ளனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ள வேண்டும். குளிப்பது, உடுத்துவது என்று பெற்றோரின் தனிமையை குழந்தைகளுக்கு மிகச்சிறு வயதில் இருந்தே புரிய வைக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் போது ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோரான ஆண், பெண் இருவருமே குழந்தைகள் முன் முகம் சுழிக்கும் படியாக உடுத்தக் கூடாது. எந்த சூழலிலும் கண்ணியமாக உடுத்த வேண்டும். மற்றவர்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்தும் படி உடுத்துவது குழந்தைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகவே அமையும்.
நல்ல விஷயங்களை உங்களது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கான முன்னுதாரணமாக மாற நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்...
* உங்கள் குழந்தைக்கான இடங்களில் நீங்கள் அவர்களுக்கான நன்மதிப்பையும் கூட்ட கடமைப்பட்டவர்கள். குழந்தையின் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கண்ணியமாக உடுத்துங்கள். இதுவே உங்களைப் பற்றியும், உங்களது குழந்தை பற்றிய எண்ணங்களையும், மற்ற குழந்தைகள் மனதில் பதிக்க காரணமாக அமையும்.
* எவ்வளவு கோபமான சூழலிலும் உங்கள் குழந்தைகள் முன்பு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். பிறகு, அவர்களுக்கும் வழக்கமாக மாறிவிடும்.
* வீட்டில் கணவன், மனைவிக்குள் பிரச்னை இருந்தாலும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குழந்தைகளிடம் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதைத் தவிர்க்கவும். இது பெற்றோர் மீது குழந்தைகளின் மதிப்பீட்டை குறைக்கும்.
* மார்டன் என்ற பெயரில் குழந்தைக்கு டைட்டாகவும், மற்றவர்கள் முகம் சுழிக்கும் படியும் உடை உடுத்திவிடும் பழக்கத்தை கை விடவும். குழந்தைகள் கம்ஃபோர்டாக பீல் பண்ணும்படி டிரஸ் செய்வதே என்றும் நல்லது.
* உங்கள் குழந்தை கண்ணாடி போன்ற பொருட்களை எடுக்கும் போது, உடனே உடைத்து விடாதே என்று சத்தம் போட வேண்டாமே. அவர்களுக்கும் அது தெரியும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
* உங்கள் குழந்தையிடம் எந்த சூழலிலும் ‘நீ உருப்படவே மாட்ட’ என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது அவர்களது ஆளுமையையும், நம்பிக்கையையும் சிதைக்கும் வார்த்தை. குறைகளை மிகைப்படுத்தாமல் பாசிட்டிவாகப் பேசுங்கள்.
* வீட்டில் உங்களது குழந்தைக்கு என்று தேவையான விஷயங்கள் இருக்கட்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு திருடும் எண்ணம் ஏற்படும்.
* வீட்டில் உள்ள வேலைக்கார்களை நாம் மரியாதையாக நடத்த வேண்டும். நம்மையே நம் குழந்தைகள் பின்பற்றுகின்றனர். அவர்களிடம் அளவுக்கு அதிகமாக நெருக்கம் பாராட்டுவதையும் தவிர்க்கலாம். இது பின்வரும் ஆபத்துகளைத் தடுக்க உதவும்.
* உங்கள் குழந்தை வெளியில் செல்லும் போது, உங்களிடம் அனுமதி பெற்றுச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
* வீட்டில் மூடிய அறைகளுக்குள் நுழையும் போது அனுமதி பெறும் பழக்கம் அவசியம். நீங்களும் பழகிக் கொள்ளலாம்.
* புதிய சூழலையும், புதிய மனிதர்களையும் பணிவோடு அணுகும் பக்குவத்தை உங்களது குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள்.
இது போல் எந்தெந்த விஷயத்தில் உங்கள் குழந்தை பெட்டராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்களோ அதிலெல்லாம் உங்களை நெறிப்படுத்துங்கள் பெற்றோரே!
Latest Comment
let the third track be completed first. by that time State Government will be coerced to contribute for fourth lineN Renganathan