மெகா சீரியல் என்ற குட்டிச்சாத்தான்!மனித படைப்புகளிலேயே மிகவும் அபாயகரமானவை இரண்டு. ஒன்று, ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியில் வெடித்த அணுகுண்டுகள். மற்றொன்று, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்கள்.
ஜப்பானில் வெடித்த அணுகுண்டுகளைப் பற்றியும், அதன் பாதிப்புகளையும் நாம் கண்கூடாக பார்த்துவிட்டோம். அதைப்பற்றி விவாதிக்கத் தேவையில்லை. ஆனால், மெகா சீரியல்கள் இந்த அணுகுண்டுகளை விட மோசமான விளைவுகளை நம்மிடைய விதைத்து வருகிறது. பாதிப்புகள் இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது.
மகாபாரதத்தை எழுதிய வியாசரே வியந்துபோகும் கதையமைப்பு மற்றும் கதா பாத்திரங்கள். சகுனியை மிஞ்சும் சூழ்ச்சி. துரியோதனனையே விழுங்கி ஏப்பம் விடும் வில்லத்தனம். ஷேக்ஸ்பியரின் யாகு, புரூடஸ் கதாபாத்திரங்களின் நயவஞ்சகங்கள் ஆகிய அனைத்து அம்சங்களும் சேர்ந்ததுதான் இன்றைய மெகா சீரியல்கள்.
மெகா சீரியல்கள் உளவியல் ரீதியாக நம்ம வீட்டு மனிதர்களிடம் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரின் எதிர்பார்ப்பு, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் ஆவல், இந்த இரண்டையும் உசுப்பேற்றி அந்த நபரை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்கின்றன.
பிடிக்காத மருமகள் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறாள். மாமியார் ஒரு பாம்பாட்டியோடு வருகிறார். அவன் ஜன்னல் வழியாக பாம்பை உள்ளே வீசுகிறான். பாம்பு மெதுவாக மருமகளின் கட்டில் மேல் ஏறுகிறது. படமெடுத்து கொத்துவதற்கு ஆயத்தமாகிறது. சட்டென்று தொலைக்காட்சியின் ஓரத்தில் 'தொடரும்' என்ற வாசகம் ஒளிர்கிறது. பாம்பு கொத்தியதா? விடை அடுத்த நாள் கிடைக்கும்.
நாம் பார்க்கின்ற தொடரில் அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியுமென்றால், நமது உயிரியல் ரீதியான பதில் (Biological response) அமைதியாக மட்டுமே இருக்கும். அப்படியில்லாமல், நம்மால் கணிக்க முடியவில்லை என்றால், மூளை சுறுசுறுப்பாகி நிலைமையை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கும். இந்த நிலையை பயன்படுத்தி நம்மை தொலைக்காட்சி தொடர்களோடு கட்டிப்போட்டு விடுகிறார்கள்.
சின்ன மருமகளின் குழந்தையை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று அவர் குடிக்கும் பாலில் எதையோ கலக்கிறார் பெரிய மருமகள். பாலைக் குடித்த சின்ன மருமகள் துடிதுடித்து கதற, 'தொடரும்' என்ற வார்த்தையோடு முடிவுக்கு வருகிறது அன்றைய ஆட்டம்.
அடுத்தவரின் குழந்தையை கடத்துகிறார் ஒருவர். முகம் முழுக்க மீசை, முகத்தில் மிகப் பெரிய மரு, வெட்டுக்காயத் தழும்பு இப்படிப்பட்ட ஒருவர் அந்த வில்லத்தனத்தை செய்கிறார் என்று நினைக்க வேண்டாம். வில்லத்தனத்தை செய்பவர் ஒரு அழகிய பெண். கதையின் நாயகியைவிட கொஞ்சம் அதிக மேக்கப்புடன் தோன்றுகிறார். அவர்கள் நம்மிடையே திணிக்கும் ஒரு விஷயம், தவறை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கென்று தனி பயிற்சியோ, ரெளடிகளோ, திருடர்களோ தேவையில்லை. நம்மிடையே மறைந்திருக்கும் வில்லத்தனமே போதும்', என்ற தத்துவத்தை உலகிற்கு புரியவைக்கிறார்கள்.
மாமனார், மாமியார், மைத்துனன், தங்கையின் கணவன் என்று எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு படுபாதகி. மாமனாரின் வீட்டை அபகரிக்க செய்யும் கேவலமான காரியங்கள், அப்பப்பா! சாதாரணமாக குடும்பத்தில் ஏற்படும் வாய்ச் சண்டைக்கு அம்மி குழவியை தூக்கி தலையிலே போட வைக்கும் அளவுக்கு வெறியை மனத்தில் விதைக்கும் ஒரு கதாபாத்திரம். மனம் முழுவதும் விஷம் நிரம்பிய ஒருவரால் மட்டுமே இத்தகைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியும்.
வில்லன் ஏதோ ஒரு ஊசியைப் போட, தன் நினைவை இழந்து புதிய மனிதனாய் வலம் வருகிறார் ஒருவர். அவர் வாழைப்பழத்தை தின்றுவிட்டால், மீண்டும் பழைய நியாபகம் வருமாம். என்ன கேளிக்கூத்து இது! இப்படி ஒரு சம்பவத்தை நிஜத்தில் நடத்திக் காட்ட முடியுமா? எதைக் காண்பிடித்தாலும் மக்கள் பார்ப்பார்கள். அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற திமிரான எண்ணம் மட்டுமே இத்தகைய கதையை அரங்கேற்றியுள்ளது.
அடுத்தவரின் கணவனை அடைந்தே தீருவேன் என்று அலையும் வில்லி. கதாநாயகிக்கும் அவருக்கும் போட்டி. இப்படிப்பட்ட கண்றாவி கருவோடு நகரும் ஒரு தொடர். அடுத்தவன் மனைவியை கல்யாணம் பண்ணியே தீருவேன் என்று அலையும் வில்லன் மகன். அதற்கு உதவும் வில்லன். இப்படி ஒரு தொடர்.
இதையெல்லாம் விட, ஊர் முழுக்க நாத்திகம் பேசும் அரசியல் தலைவர்கள் தங்களது சொந்த தொலைக்காட்சியில் மகாபாரதத்தையும், பேய்க் கதைகளையும், பாம்புக் கதைகளையும் ஒளிபரப்புகின்றனர். பேய், பூதம், கடவுள் என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்றால், அதை வளர்ப்பது ஏன்? இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மக்களின் மனத்தில் விதைத்தால் மட்டுமே தங்களது நாத்திகத்தை திறம்பட சந்தையிட முடியும் என்ற சித்தாந்தமா? அல்லது நாத்திகம் என்பது ஓட்டு வாங்குவதற்கும், மூடநம்பிக்கையை வளர்ப்பது என்பது பையை நிரப்புவதற்கு என்று அர்த்தம் கொள்ளலாமா?
அப்பாடா கதையில் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது, இந்த வாரத்தோடு சீரியல் முடிந்துவிடும் என்று நினைக்கும் போது, புதிய வில்லன் உள்ளே நுழைவார், புதிய சில கதாபாத்திரங்களும் உள்ளே நுழையும். அவ்வளவுதான். மீண்டும் தன் பயணத்தை தொடங்குகிறது.
தனக்கு பிடிக்காதவர்களை சிறுக சிறுக துன்புறுத்துவது, அதைக் கண்டுரசிப்பது, சாதாரண தவறுகளுக்கு மிகப்பெரிய கொடூரங்களை பதிலடியாக கொடுப்பது', என்று மக்கள் மனத்தில் வன்முறையையும், குரூரத்தையும் விதைக்கும் அற்புதமான பணிகளைச் செய்து வருகிறது இத்தகைய சீரியல்கள்.
இவையெல்லாமே நெகடிவான விஷயங்கள். மனிதனின் மனத்தை ரணமாக்கி, குதர்க்கமாக யோசிக்க வைக்கிறது. நாம் பார்க்கும் ஒழுக்க குறைவான செயல்களுக்கும், குற்றங்களுக்கும் நிச்சயமாக இன்றைய சீரியல்கள் அடித்தளமாக இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.
நம்மைச் சுற்றி ஏற்படும் அசைவுகள், சத்தங்கள் ஆகியவற்றை புலன்களால் உணர்ந்து கொண்ட மூளை நம்மை எச்சரிக்கிறது. இதனால் தான் நாய் துரத்தும் முன் நாம் ஓட்டமெடுக்கிறோம். இது இயற்கை நமக்கு அளித்த பாதுகாப்பு அமைப்பு. தொலைக்காட்சி தொடர்களில் வரும் சத்தம், நிகழ்வுகள், காட்சி மாற்றங்கள் ஆகியவை இத்தகைய பாதுகாப்பு அமைப்பை தட்டி எழுப்புகிறது. இதனால் தேவையில்லாமல் நமது மூளையில் ஒரு எழுச்சி ஏற்படுகிறது. இருதய துடிப்பு குறைகிறது. நம்மைச் சுற்றி எத்தகைய பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது என்பதை மூளை ஆராய்கிறது. ஆனால் உண்மையில் அப்படி ஏதும் நடப்பதில்லை.
தொலைக்காட்சி தொடர்களை தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் தூக்கமின்மை, சாப்பிடும் நொறுக்குத் தீனி ஆகியவற்றால் பதினைந்து சதவீதம் இருதய நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். டைப் 2 என்று சொல்லப்படும் நீரிழிவு நோய் ஏற்பட இருபது சதவீதம் வாய்ப்பிருக்கிறதாம்.
குழந்தைகள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் போது, அவர்கள் மனத்தில் விஷயங்களை தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை இழக்கிறார்களாம்.
நமது மூளையின் இடது புறத்தில் (Logical thought and critical analysis) தர்க்க ரீதியான விஷயங்களும், பகுத்து அறியும் விஷயங்களும் கையாளப்படுகிறது. வலது புறத்தில் உணர்வு பூர்வமான விஷயங்கள் கையாளப்படுகின்றன. தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் போது மூளையின் செயல்பாடுகள் மூளையின் இடது புறத்திலிருந்து, வலது புறத்திற்கு மாறுகிறது. இதனால், தொடர்களை பார்க்கும் போது, விஷயங்களை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது.
தொடர்களை பார்க்கும் போது, நமது உடல் என்டோர்பின்ஸ் என்ற இரசாயனத்தை வெளியிடுகிறது. இது நமக்கு ஒருவித திருப்தி நிலையை அளிக்கிறது. இதனால் தொடர்களை பார்க்கும் உந்துதல் நமக்கு ஏற்படுகிறது. ஒரு குட்டித் தூக்கம் போடுவதை விட டிவி பார்ப்பது அதிக ஓய்வை அளிப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் இது மன அழுத்தத்தை மட்டுமே அதிகரிக்கிறது.
Social Cotnitive Theory ன்படி தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களிலிருந்து பெரும்பாலான விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம். தொலைக்காட்சி தொடர்களின் கதாபாத்திரங்களின் பேச்சுக்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை நமது வீட்டு மனிதர்களிடம் அவர்களுக்கும் தெரியாமலேயே நுழைந்து விடுகிறது. அவர்களின் தனிப்பட்ட குணங்கள், பேச்சு, செயல் ஆகியவற்றில் சீரியல்களின் தாக்கத்தை பார்க்க முடிகிறது.
ஒரு காலத்தில், எப்படி தப்பு செய்வது என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் சிரமப்பட வேண்டும். அத்தகைய தவறுகள் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக நடக்கும். அல்லது ஏதாவது ஒரு இடத்தில் மறைவாக நடக்கும். அந்தக் காலம் மலையேறிப் போச்சு. இப்போது அப்படி கஷ்டப்பட வேண்டியதில்லை. கெட்ட விஷயங்களை நம்ம வீட்டுக்கு ஹோம் டெலிவரி செய்து வருகிறது இந்த மெகா சீரியல்கள். இந்த சீரியல்கள் எதை நமக்கு கற்றுக் கொடுத்தன? எதை நாம் கற்றுக் கொண்டோம்? இந்த இரண்டு கேள்விகளை நம்மிடமே கேட்போம். இதற்கு நியாயமான பதில் கிடைக்கிறதா? நிச்சயமாக கிடைக்காது. அதனால் அடுத்தவரை குறை சொல்வதில் அர்த்தமில்லை. இனி விழித்துக் கொள்ள வேண்டியது நாம் தான்.
மெகா சீரியல்களை முறைப்படுத்த வேண்டும். தொடர்களை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கவேண்டும், தொடர்களில் குரூர சிந்தனைகளை விதைக்கக்கூடாது', என்று ஒரு கோரிக்கையை அரசிடம் வைத்து அதற்காக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கேட்பதைவிட கேவலமானது வேறு எதுவும் இருக்க முடியாது. இது ரேஷன் கடைகளில் மதுபானம் விற்பதற்குச் சமம்.
தொடர்களை பார்ப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை நம்மிடம் இருக்கிறது. ஆகையால், தொலைக்காட்சிக்கு அதிக ஓய்வு கொடுங்கள். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழியுங்கள். இதை அனைவரும் உணரும் போது சீரியல் தயாரிப்பாளர்கள் தங்களின் எண்ண ஓட்டங்களை மாற்றிக் கொள்வார்கள். தரமான படைப்புகளை வழங்குவார்கள்.
ஒரு குட்டிக் கதையை பார்ப்போம்.
ஒரு செழிப்பான நாடு. மக்கள் அமைதியோடு வாழ்ந்து வந்தனர். அந்த நாட்டுக்குள் குட்டிச் சாத்தான் ஒன்று நுழைந்தது. மனித உருவில் ஒரு விவசாயி வீட்டிற்கு சென்றது. வீட்டு நபர்களுடன் பழகியது.
வீட்டில் நெல் சேமித்து வைக்கும் குதிர் ஒன்று இருந்தது. அதைப் பார்த்த குட்டிச்சாத்தான், சேமித்து வைத்திருக்கும் நெல்லை வைத்து தனது ஆட்டத்தை தொடங்குவது என்று முடிவெடுத்தது. விவசாயியை அழைத்தது. அரிசியில் மதுபானம் தயாரிக்கும் நுட்பத்தை சொல்லிக் கொடுத்தது. பிறகு தயாரித்த மதுபானத்தை குடிக்கவும் சொல்லிக் கொடுத்தது. விவசாயியைப் பார்த்த மற்றவர்களும் சொந்தமாக மதுபானம் தயாரிக்க கற்றுக் கொண்டார்கள். சிறிது நாட்களில் நாடு போதையில் தள்ளாடியது.
விஷயம் அரசனை சென்றடைந்தது.
'மக்களின் இந்த நிலைக்கு காரணம் அரிசி. ஆகையால், இனி யாரும் அரிசியை விதைக்கக்கூடாது. அதற்கு பதிலாக கோதுமையை பயிரிட வேண்டும்', என்ற ஆணை பிறப்பித்தான் அரசன்.
சில மாதங்களுக்குப் பிறகு கோதுமை செழிப்பாக வளர்ந்தது. குட்டிச்சாத்தான் மீண்டும் நாட்டுக்குள் வந்தது. இம்முறை கோதுமையிலிருந்து மது தயாரிப்பது எப்படி என்ற நுட்பத்தை சொல்லிக்கொடுத்தது. மீண்டும் மதுபானம் நாட்டில் ஆறாக ஓடியது. அரசன் மீண்டும் கவலை கொண்டான். நேராக சாதுவிடம் சென்றான்.
'சாதுவே! நாட்டின் இந்த நிலைக்கு காரணம் கோதுமை. ஆகையால் கோதுமையை தடை செய்யட்டுமா?', என்று கேட்டான்.
'அரசே! கோதுமையோ, அரிசியோ இந்த நிலைக்கு காரணமல்ல. அரிசியிலும், கோதுமையிலும் உள்ள நல்ல விஷயங்களை மறைத்து அதை தவறாக பயன்படுத்த சொல்லிக் கொடுத்த குட்டிச்சாத்தானே இந்த பிரச்னைக்கு காரணம்', என்று சொல்லி குட்டிச்சாத்தானை தேடிப் புறப்பட்டார்.
எதிரில் கண்ட குட்டிச்சாத்தானை பிடித்து ஒரு குடுவையில் அடைத்தார். பின் அரசனை சந்தித்தார்.
'அரசே இவ்வளவு பிரச்னைக்கும் காரணமான குட்டிச்சாத்தானை அடைத்துவிட்டேன். ஆனால், பிரச்னை இதோடு முடிந்துவிடும் என்று நினைக்காதீர்கள். அது விதைத்த விஷ விதைகள் இன்றும் மக்களின் மனத்தில் ஒளிந்திருக்கிறது. அதை நீக்கும் வரை நிலைமை சீராகாது. ஆகையால், அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். அரிசி, கோதுமை ஆகியவற்றின் நல்ல குணங்களை மக்களுக்கு புரியவையுங்கள். இந்த முயற்சி உடனடியாக பலனைத் தராவிட்டாலும், வரும் நாட்களில் அரிசி, கோதுமை ஆகியவற்றின் நல்ல குணங்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அது அவர்களை நல்லவர்களாக மாற்றும்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
தொலைக்காட்சி என்ற அற்புத சாதனத்தை கலாச்சாரம், ஒழுக்கம் ஆகியவற்றை சீரழிக்கும் ஆயுதமாக மாற்றியிருக்கிறது இன்றைய மெகா சீரியல்கள் என்ற குட்டிச்சாத்தான்கள். இந்த நிலை மாற வேண்டும். குட்டிச்சாத்தான்களை அடையாளம் கண்டு கொள்வோம். அது விதைத்த விஷ விதைகளை அகற்றுவோம். தொலைக்காட்சி என்ற அற்புதமான ஒரு சாதனத்தை நம் வளர்ச்சிக்கும், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பயன்படுத்துவோம்.
- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
Dailyhunt