'நாட்டா' தேர்வுக்கு பதிவு: நாளை மறுநாளுடன் விண்ணப்ப பதிவு முடிவு
Added : மார் 13, 2020 23:14
சென்னை: கட்டடவியல் என்ற, 'ஆர்கிடெக்ட்' படிப்புக்கான, 'நாட்டா' தேர்வுக்கு, நாளை மறுநாளுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது.
பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், கட்டடவியல் மற்றும் கட்டட வடிவமைப்பு படிப்புகளில் சேரலாம். பி.ஆர்க்., என்ற ஆர்கிடெக்ட் படிப்பில் சேர, பள்ளி படிப்பில் கணித பாட பிரிவை கட்டாயம் தேர்வு செய்திருக்க வேண்டும்.
பி.ஆர்க்., படிப்பில் சேரும் முன், நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்ட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை நாட்டா தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, முதற்கட்ட நாட்டா தேர்வு, நாடு முழுவதும், ஏப்.,19ல் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஒரு மாதத்திற்கு முன் துவங்கியது. பதிவுக்கான அவகாசம், நாளை மறுநாளுடன் முடிகிறது. அதற்குள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.