Added : மார் 17, 2020 02:37
இன்றைய இளசுகள், தொழில்நுட்பத்தில் கெட்டி என்று நான் எழுதியதை படித்து விட்டு, சில பெரியவர்கள், என்னிடம் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவித்தனர். 'இவர்களுக்கு பெரிய அறிவியல் அறிவெல்லாம் கிடையாது; மொபைல் போன் வைத்து நோண்டிக் கொண்டிருந்தால், பெரிய அறிவாளி என்று அர்த்தமா...' என்று செல்லமாக சண்டை போட்டார், ஒரு தகப்பனார்.என் கருத்தை விளக்கினேன். 'பிறக்கையிலேயே, இவர்களுக்கு எல்லா மின்னணு கருவிகளும் அறிமுகமாகி விடுவதால், இவர்கள் எல்லோரும், Gadget freeks. இதை தனித்திறன் என்பதை விட, இந்த சந்ததியின் சர்வ சாதாரண இயல்பு என்று தான் சொன்னேன்' என்றேன்.
தொழில்நுட்பம் புகுந்த வாழ்க்கை, இன்று வயது வித்தியாசமின்றி, எல்லோரையும் பாதித்து வருகிறது என்பது தான் உண்மை. இன்று, 'டிவி' தனியாக ஓடிக்கொண்டிருக்க, வீட்டிலுள்ள அனைவரும் மூன்று மூலைகளில் உட்கார்ந்து கொண்டு, மொபைலைப் பார்த்துக் கொண்டிருப்பது தான், பலர் வீடுகளில் நடக்கிறது. ஆனால், எல்லா வயதினரையும் விட, அதிக பாதிப்பு, 20களுக்குத் தான்.திரையைப் பார்க்கும் நேரம், இன்று மனித முகங்களை பார்க்கும் நேரத்தை விட, பன் மடங்கு அதிகமாகி விட்டது. 'ஆன்லைன்' தான் இன்று சமூகக்கூடம், கல்விக்கூடம், பணியிடம், ஆடுகளம், கேளிக்கை தளம், காதல் அரங்கம் எல்லாம்.
இதனால், இன்று நம் வாழ்வின் தவிர்க்க இயலாத அங்கமாக மாறிவிட்டது கைப்பேசி. தட்டையான திரையைப் பார்த்து பார்த்து, நம் வாழ்வும் மழுங்கடிப்பட்டு, தட்டையாக மாறி வருவதை கவனிக்கத் தவறுகிறோம். 35 வயதை கடந்தவர்களுக்கு கைபேசி இல்லாத ஒரு காலம் தெரியும்; அதனால் பெற்றது என்ன, இழந்தது என்ன என்று ஒப்பிட முடியும். 20களுக்கு அந்த கற்றல் கிடைக்க வாய்ப்பேயில்லை.
எப்படி அறிவுரை சொல்வது?
மனிதர்கள், சக மனிதர்களோடும், விலங்குகளோடும் இயற்கையோடும் மட்டுமே வாழ்ந்த வாழ்க்கை ஒன்று இருந்தது. அதை, எப்படி இப்போது இந்த, 20களுக்கு புரிய வைப்பது? இதற்கு அவர்களை குறை சொல்வதில் எந்த நியாயமுமில்லை. இந்த இயந்திரம் சூழ் வாழ்க்கைக்கு பெரும் காரணம், இப்போது வாழும், 40களும், 60களும் தானே! ஆனால், தொழில்நுட்பம் வரமா, சாபமா என்று விவாதித்தால், யாராலும் ஒரு பட்சமாய் தீர்ப்பு சொல்ல இயலாது.நமக்கு பழக்கம் இல்லாத ஒரு உலகிற்கு நாம் தள்ளப்பட்டது போல உணர்கிறோம். எல்லாம் தெரிந்த ஆசிரியர் என்ற மதிப்பு போய் விட்டது. எல்லாம் தெரிந்த, 'கூகுள்' நம் கையில் உள்ளதாக நினைக்கிறோம். ஒரு மாணவன் வேடிக்கையாகச் சொன்னான்: 'மாதா, பிதா, கூகுள், தெய்வம்!'என்று. செயற்கை அறிவு, படு மலிவாய் நம் உள்ளங்கையில் கிடைக்கையில், நாம் அறிவு சேர்க்க அனுபவம் தேவையில்லை என்று, அவசரப்பட்டு முடிவு செய்து விடுகின்றனர்.எல்லாம் தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் சந்ததிக்கு எப்படி அறிவுரை சொல்வது? பெற்றோரின் அதிகாரமும், ஆசிரியர்களின் கட்டுப்பாடும் மிக விரைவில் தோற்றுப் போய் விடுகின்றன. படுக்கையில் விழுகையில் மட்டும், மருத்துவர்கள் சொல் கேட்கின்றனர்.
'சரி, எப்படியோ போகட்டும்!' என்றும் மூத்தவர்களால் போக முடியவில்லை. முதல் முக்கிய காரணம் உடல் மற்றும் மன நலக்கேடு. இரண்டாவது உறவுப் பிரச்னைகள். ஆரோக்கியம் இன்று இவர்களின் மிகப்பெரிய சவால். இதைப் பற்றி புதிதாக உங்களுக்கு சொல்ல ஏதுமில்லை. உணவு, உறக்கம், ஓய்வு, உடற்பயிற்சி என, ஒவ்வொரு விஷயத்திலும் இவர்களுக்கு பிரச்னை. மன நலப் பிரச்னைகளும் இன்று பெருகி விட்டன. பள்ளிக் குழந்தைகள், 'டிப்ரஷனுக்கு' மருந்து எடுப்பது என்பது, சென்ற தலைமுறை அறியாதது.போதை மனித முகங்கங்கள்கைப்பேசித் திரை, மடி கணினித் திரை, தொலைக்காட்சித் திரை என, குறைந்தபட்சம் மூன்று திரைகளில், ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரத்திற்கு மேல் பார்த்தால், அதுவும் போதை போல நம்மை ஆட்கொள்ளும். Electronic Screen Syndrome இன்று பரவி வருவதாக, மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
என்ன போதை இது?
எதைச் செய்தாலும் அதில் லயிக்காமல், உடனே ஏதோ ஒரு திரையை திறந்து அதை காணுவது. இன்று, வாகனம் ஓட்டுபவர்கள் ஒரு சின்ன இடைவெளி கிடைத்தாலும், உடனே செய்தி தட்டுகின்றனர் அல்லது கைப்பேசியில் படம் பார்க்கின்றனர். இந்த போதை மனித முகங்களை காட்டிலும், திரையை நோக்கச் செய்யும். உறவுகளில் குழப்பம் வர இது போதாதா?இருபதுகள் நம்மை விட அறிவாளிகள் தான்; சந்தேகமே இல்லை. ஆனால், வாழ்வு முறை இடர்பாடுகள் நிறைந்த அவர்கள் வாழ்க்கையில், உணர்வு சிக்கல்களும், உறவு சிக்கல்களும் ஏராளம் உள்ளன. அதை அவர்கள் அறிந்தாலும், பல நேரங்களில் தேவைப்படும் காலத்தில் அவர்களுக்கு உதவி கிடைப்பதில்லை.
முத்திரை குத்தாமல், குற்றம் சொல்லாமல், அறிவுரை சொல்லிக் கொள்ளாமல், நாம் அவர்களுக்கு உதவ வேண்டிய இடத்தில் நிற்கிறோம். அது நம் கடமையும் கூட!