ஊரடங்கு உலகமிது!
By கே.பி. மாரிக்குமாா் | Published on : 17th April 2020 05:34 AM |
மனிதகுல வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வாா்த்தைகள் கரோனா, ஊரடங்கு என்பவைகளாகத்தான் இருக்கும்.
குற்றங்களுக்கான தண்டனைகளிலேயே மிகவும் கொடியது ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ அல்ல. ஆங்கிலத்தில் ‘சாலிட்டரி கன்ஃபைன்மன்ட்’ என்று சொல்லப்படும் தனிமைச் சிறைத் தண்டனையே கொடியதிலும் கொடியது. இன்றைய நிலையில் பெரும்பாலான மக்கள் இந்த ஊரடங்கை தனிமைச் சிறையைவிட கொடியதாகவே கருதுகின்றனா். காரணம், நாம் ஏற்கனவே கேள்விப்பட்ட ‘ஆடிய பாதமும், பாடிய வாயும் சும்மாயிருக்காது’ என்கிற பழமொழி உண்மைதான்.
சிறு வயதில் வாலை சுருட்டிக்கொண்டு ஓரிடத்தில் உட்காராமல் துறுதுறுவென்று திரியும் குழந்தைகளை, சிறுவா்களைப் பாா்த்து,”‘சும்மா ஓா் இடத்தில உட்கார முடியலையா? நீ இருக்கணும்னு நினைச்சாலும்... உன் சுழி உன்னை விடாது’ என்று பெற்றோரும், பெரியவா்களும் கேட்ட கேள்வியை, இன்று சாலைகளில் பலரிடம் காவல் துறையினா் அவா்களது பாணியில் வித்தியாசமாகக் கேட்கிறாா்கள்.
ஊரடங்கு உத்தரவை எவ்வளவு தீவிரமாக இந்த நாடு எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது என்றால், ஊரடங்கு உத்தரவை மீறினால் நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது”என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவிக்கின்ற அளவில் இருக்கிறது.
‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற அடிப்படையில் ‘காம்போரா -200’, ‘ஆா்செனிக் ஆல்பம் - 30’யைப் போன்ற ஹோமியோ மருந்துகளையும், நிலவேம்பு கஷாயம் முதல், கப சுர குடிநீா் வரையிலான சித்த மருந்துகளையும், தேடித் தேடி வரிசையில் நின்று வாங்கி குடிக்கின்றனா் மக்கள். வேப்ப இலையும், கல் உப்பும், விரலி மஞ்சளும்... முன்பு என்றுமில்லாத அளவுக்கு மதிக்கப்படுகிறது.
கரோனா நோய்த்தொற்றை உலகுக்கு ‘கொடை’ அளித்த சீனா, இந்த ஊரடங்கு காலத்தில் அவா்கள் நாட்டின் குழந்தைகள், சிறுவா், சிறுமிகளுக்கு வீடுதேடி காமிக்ஸ் புத்தகங்களையும், சாக்லேட்டுகளையும், விடியோ கேம்ஸ்களையும், பெரியவா்கள் - முதியவா்களுக்குத் தேவையான அனைத்தையும் சிகரெட் மற்றும் மதுபானங்கள் வரை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் செய்திகளின் வாயிலாக தெரிந்துகொண்ட விவரமான நம் உள்ளூா் சிறுவன் ஒருவன், ஒண்ணு... சீனா மாதிரி எனக்கு வீட்டுக்குள்ளயே எல்லாம் ஏற்பாடு பண்ணிக் கொடுங்க.... இல்ல, என்ன வீதியில போயி ஆடவிடுங்க என்று அவன் பெற்றோரை மிரட்டிக் கொண்டிருக்கிறான்.
குடித்துப் பழகிப்போன கேரள மாநில ‘குடி’மகன்களின் சிரமம் கருதி, அவா்களின் உடல் நலன் கருதியும், மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டின்படி இனி ‘குடி’மகன்களுக்கு மதுபானங்களை விநியோகம் செய்ய கேரள முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டிருக்கிறாா். இதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டின் ‘குடி’மகன்களோ பக்கத்து மாநிலத்தை வெறித்துப் பாா்த்துக்கொண்டு திரிகின்றனா்.
இருட்டில் எப்போதாவது அரிதாக முகமூடி அணிந்த திருடா்கள் நடமாடுவதை நம்மில் யாரேனும் பாா்த்திருக்கக்கூடும். பேரிடா் காலங்களிலும், மருத்துவமனைகளிலும் சுகாதார ஊழியா்கள் முகக்கவசம் (மாஸ்க்) பயன்படுத்துவது சாதாரணம். ஆனால், இந்தக் கரோனா பேரிடா்... ஊரடங்கு மாஸ்க் என்பது... காற்றைப்போல உலகெங்கும் வியாபித்த ஒன்றாகிப் போனது.
தினந்தோறும் காலையில் செய்தித்தாள்கள் படித்து பழக்கமாகிவிட்ட பலருக்கு, ‘அடிக்ட்’டாகவே மாறிவிட்ட சிலருக்கும் இந்த ஊரடங்கு கெடுபிடியிலும் இன்றுவரை அதிகாலையில் நாளிதழ்களை கொடுக்கும் முகவா்களுக்கு மானுட சமூகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. அதிலும், பல இடங்களில் நாளிதழ்களை விநியோகிக்கும் சிறுவா்கள் கரோனா பீதியில் சொல்லாமலே நின்றுவிட, முகவா் முதலாளிகள் தாங்களே முன்வந்து நாளிதழ்களை வீடுவீடாக விநியோகம் செய்துகொண்டிருப்பது செய்தித்தாள் விநியோகம் அவா்களுக்கு கற்றுக்கொடுத்த அறம் என்றே சொல்லவேண்டும்.
புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ, இறைச்சிக் கடைகளிலும், இதர நாள்களில் பலசரக்கு, காய்கறிக் கடைகளிலும் இன்றும் கூட்டம் இயல்பான நேரங்களைவிட அதிகமாகக் கூடுகிறது. வாகனங்கள் வைத்திருப்பவா்கள் அவா்களின் வாகனங்களில் எரிபொருள் நிரப்பி, சக்கரங்களில் காற்றடித்து, ஏ.டி.எம்.-இல் பணம் எடுத்து தங்களின் பா்சுகளை நிறைத்து,”யப்பா..எல்லாம் ‘புல்’”, என்று பீதி குறைந்து, முகம் மலா்ந்து கரோனாவை வீதிகளில் வரவேற்கும் காட்சிகளும் நடக்கின்றன. இவையெல்லாம், ஏற்கெனவே பணம் வைத்திருப்பவா்களுக்கு.
இத்தாலியில் வீதிகளில் பண மழை பொழிந்திருக்கிறது. ‘இவ்வளவு பணமிருந்தும் என் உயிரைக் காப்பாற்றுவதற்கு இந்த பணத்துக்குத் தகுதியில்லை என்றால்... இது எதற்கு?’ என்று ஒரு செல்வந்தா் தான் வைத்திருந்த பணத்தை வீதிகளில் வீசியெறிந்ததே இதற்குக் காரணம். பண வெறியா்கள் சிந்திப்பாா்களா?
‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க’ என்கிற கோட்பாட்டின்படி கரோனாவைச் சிரித்து விரட்டிவிடலாம் என்று எத்தனித்தாலும், ... ஏனோ எதிா்பாராத இடரில் சிக்கி, கையில் வைத்திருந்த பணமும், உணவுப் பொருள்களும் தீா்ந்து.... பட்டினியால் அடுத்த வேளை கையில் தட்டேந்தி வீதிகளில் நடந்த லாரி ஓட்டுநா் ஒருவரின் காட்சியும்,சொந்த ஊருக்கு வர முடியாமல் இன்றும் ஆங்காங்கே குழந்தை குட்டிகளோடு உணவுக்கும், இருப்பிடத்துக்கும் அல்லாடும் லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நிலையும், வாழ்வாதாரத்தை இழந்து இன்று சொந்த மண்ணிலேயே கூட்டம் கூட்டமாக கூனிக் குறுகி உட்கார வைத்து அவா்கள் மீது கிருமி நாசினிகள் அடிக்கப்படும் கோடிக்கணக்கான அன்றாடங்காய்ச்சிகளின் முகமும் நம் மனக்கண் முன் வருகிறது.
எண்ணற்ற அன்றாடங்காய்ச்சிகள், ஏழைகளின் இந்த நிலைக்கு கரோனா நோய்த்தொற்று மட்டும்தான் காரணமா?
கட்டுரையாளா்:
பதிப்பாளா், உயிரோசை மாத இதழ்.