இனி எல்லாமே அரிசி ரேஷன் கார்டு தான்: குளறுபடியை தீர்க்க தமிழக அரசு திட்டம்
தமிழகத்தில், அரிசி, சர்க்கரை, காவலர் மற்றும் பொருளில்லா, 'என்' கார்டு என, நான்கு பிரிவுகளில் ரேஷன் கார்டுகள் உள்ளன. அரிசி கார்டுதாரருக்கு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி; குறைந்த விலையில், சர்க்கரை, பருப்பு, பாமாயில், கோதுமை வழங்கப்படுகிறது.
சர்க்கரை கார்டுதாரருக்கு, அரிசி தவிர்த்த மற்ற பொருட்கள்; காவலர் கார்டுக்கு அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன. அரசு, 2005ல் வழங்கிய, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 2009ல் முடிந்தது. அவற்றில் உள்தாள் ஒட்டி, ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், சர்க்கரை, பொருளில்லா கார்டுகள் வாங்கிய பலரின் வாழ்க்கைத்தரம், இன்று மாறியுள்ளது. இதனால், அனைத்து குடும்பங்களுக்கும், அரிசி கார்டை மட்டும் வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒருவரே, பல முகவரிகளில் ரேஷன் கார்டுகள் வாங்கி உள்ளனர். அதை தடுக்க, ஏப்., முதல், விழி, விரல் ரேகை, புகைப்படத்துடன் கூடிய, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களின், 'ஆதார்' அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள், ரேஷன் கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், பணிபுரிந்த பலர் சர்க்கரை, பொருளில்லா ரேஷன் கார்டுகள் வாங்கினர். தற்போது, அவர்கள், வயது முதிர்வு, ஆதரவு இன்றி சிரமப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
பொங்கல் பரிசு, இலவச பொருட்கள் போன்றவை, அரிசி கார்டுக்கு மட்டும் கொடுப்பதால், பலரும் அதிருப்தியில் உள்ளனர்.ரேஷன் கார்டுகள், நான்கு பிரிவுகளில் இருப்பதால் குழப்பம் ஏற்படுவதோடு, முறைகேடுகளுக்கு காரணமாகிறது. தற்போது, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'பில்' போடுவதால் முறைகேடு குறைந்துள்ளது.
ஸ்மார்ட் கார்டு கொடுத்த பின், முறைகேடு முற்றிலும் குறையும். எனவே, அனைவருக்கும் அரிசி கார்டு மட்டும் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
கார்டு வழங்கிய பின், 'அரிசி வேண்டாம்' என கூறுபவர்களிடம், ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு, கருவியில் பதிவு செய்யப்பட்டு விடும். அவர்களுக்கு, அரிசி கிடைக்காது. இதன் மூலம், ரேஷனில் குழப்பம், முறைகேடும் நடக்காது. விரைவில், அதற்கான அறிக்கை தயாரித்து, உணவு துறை அமைச்சர் மூலம், முதல்வரிடம் ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் செலவு 'நோ'
தமிழகத்தில், 2016 ஜூன் நிலவரப்படி, 2.03 கோடி ரேஷன் கார்டுகள் இருந்தன. அதில், அரிசி கார்டுகளின் எண்ணிக்கை, 1.91 கோடி. ஆனால், 2017 ஜன., வரை, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், பதிவான அனைத்து வகை கார்டுகளின் எண்ணிக்கை, 1.93 கோடி தான். இதனால், அனைத்து கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்றினாலும், அரசுக்கு அதிக செலவு ஏற்படாது.
- நமது நிருபர் -