பைட்டு பைட்டாகக் குறையும் ஞாபகம்!
Published : 14 Jul 2018 09:51 IST
டாக்டர் ஆ. காட்சன்
மறுபதிவு
சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் சிலரிடம், அவர்களது செல்போன் எண்ணைத் தவிர எத்தனை பேரின் எண்களை எதையும் பார்க்காமல் மனப்பாடமாகக் கூறமுடியும் என்று கேட்டேன். ஆச்சரியம் என்னவென்றால், நான்கில் மூன்று பகுதியினரால் சராசரியாக ஐந்து செல்போன் எண்களுக்கு மேல் சொல்ல முடியவில்லை, அவர்களது பெற்றோர்களின் எண்கள் உட்பட!
டிஜிட்டல் காலத்துக்கு முன்பு நாம் சிலரைப் பற்றி ‘விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பார்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் இப்போது விரல் நுனியைக்கொண்டு தொடுதிரையைத் தொடாமல் பலரால் பல தகவல்களை நினைவுகூர முடிவதில்லை. வாங்க வேண்டிய மளிகைப் பொருட்கள், நெருக்கமானவர்களின் பிறந்த நாட்கள், இரண்டும் இரண்டும் நான்கு என்பது போன்ற சிறிய கணக்குகள், நம் வாழ்க்கையின் இனிய தருணங்கள் போன்ற பலவற்றை ‘வாட்ஸ் ஆப்’, மொபைல் கேமரா, செல்போன் கால்குலேட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் இன்று பெரும்பாலானவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது.
குறையும் நினைவாற்றல்
இப்படி நம் மூளை கொண்டிருந்த ஞாபகசக்தி, கவனம் கொள்ளல், உணர்வுபூர்வமான நினைவுகள் போன்ற பெரும்பாலான வேலைகளுக்கு இன்று நாம் ஸ்மார்ட்போன்களையே சார்ந்திருக்கிறோம். இதைத்தான் ஜெர்மானிய மனநல மருத்துவரான மான்பிரட் ஸ்பிட்சர், ‘வயதானவர்களுக்கு மூளைநரம்பு தேய்மானத்தால் ஏற்படும் டிமென்ஷியா (Dementia) என்ற ஞாபக மறதி நோய்க்கு ஒப்பாக, அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள், இணையதளங்களைப் பயன்படுத்தும் இளம் வயதினர் கவனக்குறைவு, எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஞாபகசக்திக் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது’ என தனது ஆய்வுக்கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கு அவர் ‘டிஜிட்டல் டிமென்ஷியா’ (Digital Dementia) என்று பெயரிட்டிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் குறிப்பிட்டிருக்கும் ஆபத்து ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.
இணையதளம், ஸ்மார்ட்போன்களைச் சார்ந்துள்ளதால், விவரங்களை மனப்பாடம் செய்வதைவிட, கூகுள் போன்றவற்றில் தேடித் தெரிந்துகொள்ளவே நாம் விரும்புகிறோம். எது எளிதானதோ அதையே நம் மனமும் விரும்புவதில், ஆச்சரியம் இல்லை. இதனால் மூளை நரம்புகளின் தேடிப் பார்க்க உதவும் திறன் மேம்படும். ஆனால் நினைவாற்றலில் வைத்துக்கொள்ளும் திறன் குறைய வாய்ப்புள்ளது. வகுப்பில் சொல்லிக்கொடுக்கப்படும் ஒரு பாடத்தை ஒரு மாணவனால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அவனுக்கு ஞாபக மறதி என்று சொல்லிவிட முடியாது. அவன் கவனம் இல்லாமல் இருந்தால் அந்தப் பாடம் நினைவாற்றலை அடையக்கூட முடியாது.
அன்றாட வேலைகள், கல்வித் தேவைகளுக்காக ஸ்மார்ட்போன்களை அதிகம் சார்ந்திருப்பதால் கவனக்குறைவு ஏற்பட்டு, கருத்துகளை ஞாபகத்தில் பதியவைக்கும் திறன் பாதிக்கப்படும். யாரேனும் ஒருவர் ஒரு தகவலைக் கேட்டால், ‘இருங்கள் தேடிப் பார்த்துச் சொல்கிறேன்’ என்று நம் கைகள் தானாகவே கூகுளைப் புரட்டிப் பார்ப்பது நமது நினைவாற்றலில் இருந்து பதிவுகளை மீட்டெடுக்கும் திறனைப் பாதிக்கிறது.
இளையோருக்கான பிரச்சினை
இதில் அதிக ஆபத்தைச் சந்திப்பது குழந்தைகள்தான். கவனம், தகவல்களைப் பதிவேற்றம் செய்தல், மீட்டெடுத்தல் போன்றவற்றில் மூளைக்கு வேலை கொடுப்பதைப் பொறுத்தே குழந்தைகளின் மூளையின் உயர் அறிவாற்றல் (Cognition) வளர்ச்சி சீராக இருக்கும். அதிலும் சமூகப் பழக்கவழக்கங்கள், துரிதமாகச் செயல்பட உதவும் நினைவாற்றல் ஆகியவை வளரக் காரணமான ‘ஃபிராண்டல்’ பகுதி என்ற மூளையின் முன்பகுதியின் வளர்ச்சி மிக முக்கியமானது. ஸ்மார்ட்போன்களைச் சார்ந்திருப்பது குழந்தைகளின் இந்த வளர்ச்சியைப் பாதிக்கும்.
இந்தப் பருவத்தில் அடையவேண்டிய அறிவாற்றல் வளர்ச்சியை, காலம் கடந்தபின் எவ்வளவு முயற்சித்தாலும் மீட்டெடுப்பது கடினம். ஸ்மார்ட்போனைச் சார்ந்து வளர்வதால் ஏற்படும் ‘டிஜிட்டல் டிமென்ஷியா’ என்பது முழுக்க முழுக்க இளவயதினரின் பிரச்சினையாகவே மாறும் சூழல் வெகு தூரத்தில் இல்லை. வருங்காலத் தலைமுறையினர் எல்லா விஷயங்களையும் தெரிந்தவர்கள்போல் தோன்றினாலும், மின்னணுக் கருவிகள் இல்லாவிட்டால் எதுவும் தெரியாதவர்களாகவே தோன்றும் நிலை உருவாகும்.
தென் கொரியா, சீனா போன்ற நாடுகள் ஸ்மார்ட்போன்கள், இணையதளப் பயன்பாட்டால் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் தாக்கங்களை ஆராய்ந்தது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிப் பருவத்திலிருந்தே எடுக்க ஆரம்பித்து விட்டன. ஆனால், இந்தியா இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
பாரம்பரியம் பாதுகாக்கும்!
மேற்கத்திய உணவுப் பழக்கங்களால் ஏற்பட்ட உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி பாரம்பரிய உணவு வகைகளுக்கு மாறி வருகிறோமோ, அதுபோல மின்னணுக் கருவிகளைச் சார்ந்து வாழ்வதால் மூளையில் ஏற்படும் மாற்றங்களில் இருந்து நம்மையும் நம் தலைமுறையினரையும் காப்பாற்றிக்கொள்வதற்குப் பாராம்பரியமாக நாம் கைகொண்ட வாசிப்பு, மனனம் செய்தல், நினைவுபடுத்திக்கொள்ளுதல் போன்ற மூளை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது அவசியம்.
ஸ்மார்ட்போன், இணையதளத்தை முற்றிலும் சார்ந்திருப்பதை மாற்றிக்கொள்ளாதபட்சத்தில், ‘ஒருநாள் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழ முடியாது’ என்ற அளவுக்கு ‘ஸ்மார்ட்போன் அற்ற மாற்றுத் திறனாளி’களாக நாம் மாறிவிடக்கூடும்.
மொபைல் ‘மெமரி’யைப் பற்றி மட்டுமல்ல… நமது ‘மெமரி’ பற்றியும் கொஞ்சம் கவலைப்படுவோம்!
# ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் ஞாபக மறதிக்கு ‘டிஜிட்டல் டிமென்ஷியா’ என்று பெயரிட்டுள்ளார் ஜெர்மானிய மனநல மருத்துவர் மான்பிரட் ஸ்பிட்சர்
# ஸ்மார்ட்போன்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகளின் மூளையின் முன்பகுதி வளர்ச்சி பாதிக்கப்படும்
# வாசிப்பு, மனனம் செய்தல் போன்ற மூளை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்
கட்டுரையாளர், மனநலமருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com