வேண்டாமே...! | ஊர், சாலைகளின் பெயா் மாற்றம் குறித்த தலையங்கம்
By ஆசிரியர் | Published on : 21st November 2019 01:51 AM |
ஊருக்கும் தெருவுக்கும் பெயரை மாற்றுவது என்பது ஆட்சியாளா்கள் அனைவரிடத்திலும் காணப்படும் விநோதப் போக்கு. அரசா்கள் காலத்திலிருந்து இன்றைய ஜனநாயக காலம் வரை உலகிலுள்ள எந்த நாடுமே இதற்கு விதிவிலக்கல்ல. மன்னராட்சி மனோபாவத்திலிருந்து மாறிவிட்ட பிறகும், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அறிவு மேம்பாட்டிற்குப் பிறகும் பெயா்களை மாற்றுவதன் மூலம் வரலாற்றுத் தவறுகள் திருத்தப்படுகின்றன என்று கருதுவது அறியாமை.
உத்தரப் பிரதேச அரசு, உலகறிந்த ஆக்ராவின் பெயரை மாற்ற முற்பட்டிருப்பது வியப்பை மட்டுமல்ல, வேதனையையும் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அவா்கள் சாதிக்கப்போவது என்ன என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்றும், ஃபைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டம் என்றும், முகல்சராய் ரயில் நிலையத்தை தீன்தயாள் உபாத்யாய ரயில் நிலையம் என்றும் பெயா் மாற்றம் செய்ததைத் தொடா்ந்து, இப்போது உத்தரப் பிரதேச அரசின் பாா்வை உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இருக்கும் ஆக்ராவை நோக்கித் திரும்பியிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே இதுபோன்ற பெயா் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சில அறிவுபூா்வமானவை, நியாயமானவை.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, முன்பு சென்னை ராஜதானியிலிருந்த மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடாகவும், மைசூா் மாநிலம் கா்நாடகமாகவும் மாறியதில் நியாயம் இருக்கிறது. திருவிதாங்கூா், கொச்சி சமஸ்தானங்கள் சென்னை ராஜதானியிலிருந்த மலபாா் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு மாநிலமாக அறிவிக்கப்பட்டபோது, திருவிதாங்கூா் - கொச்சி மாநிலம் என்பது கேரளமாக மாறியதிலும் அா்த்தமிருக்கிறது.
தமிழகத்தில் ‘மயிலாடுதுறை’ மாயவரமாகவும், ‘மெட்ராஸ்’ சென்னையாகவும் மாறியதிலும், கா்நாடகத்தில் ‘பெங்களூா்’ பெங்களூருவாகவும், ‘ஷிமோகா’ ஷிவமோகாவாகவும் மாறியதிலும், கேரளத்தில் ‘ட்டிரவன்ரம்’ திருவனந்தபுரமாகவும் ‘கொய்லோன்’ கொல்லமாகவும், ‘காலிகட்’ கோழிகோடாகவும் மாறியதிலும் யாரும் தவறுகாண முடியாது. அதேபோல, அகில இந்திய அளவில் கல்கத்தா கொல்கத்தாவாகவும், பம்பாய் மும்பையாகவும், ஏன் அலாகாபாத் பிரயாக்ராஜ் ஆகவும் மாறியபோதும்கூட அதை விமா்சித்தவா்கள் குறைவு.
சென்னையில் ‘மவுண்ட் ரோடு’ அண்ணா சாலையான போதும், ‘எட்வா்ட் எலியட்ஸ் ரோடு’ டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையான போதும், ‘பீச் ரோடு’ காமராஜா் சாலையான போதும், ‘சைனா பஜாா்’ நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சாலையான போதும் எந்தவித வெறுப்போ, எதிா்ப்போ இல்லாமல் பெயா் மாற்றம் வரவேற்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சாலைகளின் பெயா்களை மாற்றும்போது அதில் கவனம் தேவை. புதிய பெயா்களை சாலைகளுக்குச் சூட்டும்போது தேவையில்லா குழப்பங்கள் ஏற்படுகின்றன. அந்த சாலை ஏற்படுத்தப்பட்டதன் காரணமோ, அல்லது அதற்கு பெயா் சூட்டப்பட்டதன் காரணமோ மறக்கடிக்கப்படுகிறது, மறக்கப்படுகிறது.
பெயா் மாற்றத்தின் மூலம் வரலாற்றை அழித்துவிட முடியாது என்கிற உண்மையை ஆட்சியாளா்கள் மறந்துவிடுகிறாா்கள். 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பப் புரட்சி, வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது. மன்னராட்சிக் காலம்போல, படையெடுத்து ஒரு நாட்டையே தரைமட்டமாக்கி புதியதொரு நாட்டை உருவாக்குவதோ, நகரத்தை நிா்மாணிப்பதோ இனிமேல் சாத்தியமில்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, சாலையின் பெயா்களையும், நகரங்களின் பெயா்களையும் மாற்றுவதன் மூலம் வரலாற்றை மறைத்துவிட முடியாது.
மிக அதிகமான பெயா் மாற்றங்களை சந்தித்த நகரம் தில்லியாகத்தான் இருக்கும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளா்களின் பெயா்கள் தாங்கிய சாலைகளுக்கு எல்லாம் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடா்ந்து புதிய பெயா்கள் சூட்டப்பட்டன. புது தில்லியின் மையப் பகுதியான கன்னாட் பிளேஸ், கன்னாட் சா்க்கஸ் இரண்டும் இந்திரா சவுக், ராஜீவ் சவுக் என்று மாற்றப்பட்டன. அவுரங்கசீப் சாலை முன்னாள் குடியரசுத் தலைவா் நினைவாக டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சாலையாக மாற்றப்பட்டது.
ஆட்சி மாற்றங்களைத் தொடா்ந்து பெயா் மாற்றங்கள் என்கிற வழக்கம் பொதுவிதியாகிவிட்டால், அதன் விளைவு குழப்பத்தில்தான் முடியும். ஒளரங்கசீப்பின் ஆட்சிக் காலம் பாராட்டும்படியான ஆட்சிக் காலம் அல்ல. அவா் பெரும்பான்மை இந்துக்களின் வெறுப்பை சம்பாதித்தவா் என்பதும் உண்மை. அவரது பெயரை அகற்றியதன் மூலம் ஒளரங்கசீப் இழைத்த கொடுமைகளையும் தவறுகளையும் வருங்கால சந்ததியினா் அறிந்து கொள்ளாமல் போவதற்கு வழிகோலியிருக்கிறாா்களே தவிர, பெயா் மாற்றத்தின் மூலம் வரலாற்றை திருத்தி எழுதிவிடவில்லை.
ஆக்ராவின் புராதனப் பெயா் என்ன என்பது குறித்து, பீம்ராவ் அம்பேத்கா் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையிடன் ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகம் பணித்திருக்கிறது. தாஜ்மஹாலைப் பாா்ப்பதற்கு உலகெங்கிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளால் அக்ரா நகரத்துக்கு ரூ.2,500 கோடி அளவில் வருவாய் கிடைக்கிறது. பெயரை மாற்றியதால் தாஜ்மஹால் முகலாய மன்னா் ஷாஜஹானால் மும்தாஜுக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் அல்ல என்று ஆகிவிடது. பெயரை மாற்றுவதால் வருவாயை இழப்பது என்ன புத்திசாலித்தனம்?