Wednesday, April 8, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு 50 லட்சம் பேர் பயன் அடைவார்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல், 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு 7 சதவீதம் உயர்த்தி அறிவித்தது.

இந்த உயர்வு 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் 1–ந் தேதி அமலுக்கு வரும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி சதவீதம் 107 ஆக உயர்ந்தது.

6 சதவீதம் அதிகரிப்பு

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. 6 சதவீத அளவிற்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதன் காரணமாக தற்போது மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்ந்தது.

இந்த உயர்வு 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

50 லட்சம் பேர் பயனடைவார்கள்

இந்த உயர்வின் காரணமாக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 20 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் எனவும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிவாரண சலுகையின் கீழ் அடிப்படை சம்பளத்தில் இது 113 சதவீதமாக உயரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவகழகம் அங்கீகாரம் கல்லூரி முதல்வர் தகவல்

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

மருத்துவகழகத்தின் அங்கீகாரம்

மருத்துவகல்லூரிகளை நடத்துவதற்கு இந்திய மருத்துவகழகத்தின் அங்கீகாரம் அவசியம். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவகல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகள் இந்திய மருத்துவகழகம் தொடர்ந்து ஆய்வு நடத்தி ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. திருவாரூர் மருத்துவகல்லூரியிலும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மருத்துவ கழகம் ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கியது. இந்த ஆண்டு தொடர்ந்து 5–வது முறையாக அங்கீகாரம் வழங்குவது குறித்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடத்தியது.

மருத்துவகழகத்தின் சார்பில் மேற்குவங்காளம், அரியானா மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர்கள் தத்தா, ஷாம்சிங்க்லா, பிரிசில்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் திருவாரூர் மருத்துவ கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி, 17–ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு பணி முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு தற்போது அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக திருவாரூர் மருத்துவகல்லூரியின் முதல்வர் மீனாட்சிசுந்தரம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல் ஆய்வு

திருவாரூர் மருத்துவகல்லூரியில் தொடர்ந்து 5–வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மருத்துவகழகம் ஆய்வு நடத்தியது. ஆய்வு குழுவினருக்கு எனது தலைமையிலான மருத்துவர்கள் மருத்துவகல்லூரி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பற்றி விவரித்தோம். உள்கட்டமைப்பு வசதிகளில் திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவகழகம் திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வின்போது மருத்துவகழகம் சில வசதிகளை செய்ய வேண்டும் என சுட்டி காட்டியது. அந்த வசதிகளை செய்த பின்னர் 2–வது கட்டமாக ஆய்வு நடத்தி அதன் பின்னர் தான் மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கியது. ஆனால் இந்த ஆண்டு முதல் கட்ட ஆய்வின் முடிவிலேயே மருத்துவ கழகம் திருப்தி அடைந்து திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி விட்டது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அடுத்ததாக 2020–ம் ஆண்டு தான் மருத்துவகழகம் ஆய்வு நடத்தும்.

நன்றி

இந்த சாதனையை எட்டுவதற்கு உதவி புரிந்த உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர், மருத்துவ கல்லூரி இயக்குனர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காலை குறி வைத்திருக்கலாமே?

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள சேஷாசலம் வனப் பகுதியில் சட்ட விரோதமாகச் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கொண்டிருந்த இருபது தொழிலாளர்கள், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பவர்கள் அனைவருமே தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்குப் பஞ்சம் பிழைக்கப் போன அப்பாவி ஆதிவாசி மரம் வெட்டிகள்.

செம்மரக் கட்டைகள் கடத்தல் தடுப்புக்கான சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் என்று பரவலாக அறியப்படும் சிவப்பு சந்தன மரங்களை சட்ட விரோதமாக வெட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. அதற்காக அவர்கள் ஈவிரக்கமோ, மனிதாபிமானமோ இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமா என்று கேட்டால், சிறப்புக் காவல் படையினரின் மனசாட்சியேகூட அதை ஏற்றுக் கொள்ளாது!

செம்மரங்களை வெட்டுபவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்கள் கடத்தல்காரர்கள் அல்லர். வெளிநாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களைக் கடத்துபவர்களையும், இந்தியாவிலிருந்து நட்சத்திர ஆமைகள், தந்தங்கள், கடவுள் சிலைகள், சந்தனக் கட்டைகள் போன்றவற்றைக் கடத்துபவர்களையும் போன்றவர்கள் அல்ல இவர்கள். இவர்கள் கைது செய்யப்படலாம், தடுப்புக் காவல் படையினரால் தாக்கப்படலாம், ஆனால், நாயைச் சுட்டுக் கொல்வதுபோலச் சுட்டுக் கொல்லப்படுவது என்பது நினைத்துப் பார்க்கவே கொடூரமானதாக இருக்கிறது.

சேஷாசலம் வனப் பகுதியில் திருட்டுத்தனமாக செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தபோது அவர்களைச் சுற்றிவளைத்து சரணடையச் சொன்ன காவல் படையினரை, அரிவாளாலும், கோடாரியாலும் அந்தக் கும்பல் தாக்க முற்பட்டதாகவும், அதற்காகத் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதாகவும் காவல் துறையினர் கூறுவது உண்மையாகவே இருக்கலாம். கூலிக்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த அப்பாவிகளை ஏவி, காவல் படையினரைத் தாக்கச் சொல்லிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிப் போயிருக்கக் கூடும். காவல் துறையினர் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் தவறில்லை. ஆனால், அந்தத் துப்பாக்கிகள் காலுக்குக் குறி வைக்காமல் உயிருக்கு உலை வைத்திருக்கிறதே அதுதான் கொடூரம்!

ஆந்திர மாநிலத்தில் கடப்பா, சித்தூர், கர்நூல், நெல்லூர் மாவட்டங்களில் பரவலாக சிவப்பு சந்தன மரங்கள் வளர்கின்றன. ஏறத்தாழ 4.67 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச ஒப்பந்தப்புள்ளி மூலம் ஆண்டுதோறும் நடைபெறும் ஏலத்தில் ஆந்திர அரசுக்கு இந்த செம்மரக் கட்டைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் ரூ.1,000 கோடிக்கும் அதிகம்.

கடந்த ஆண்டு மே மாதம் இதே சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கடத்தல்காரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான செம்மரக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2013-இல் மட்டும் 2,025 டன் செம்மரக் கட்டைகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. கடந்த சில வருடங்களாக செம்மரக் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக் கட்டைகள் கடந்த டிசம்பர் மாதம் ஏலம் விடப்பட்டன.

செம்மரக் கட்டைக் கடத்தல்காரர்களுக்கும், தடுப்புக் காவல் படையினருக்கும் இடையே மோதல் நடப்பதும், காவல் துறை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதும் புதிதொன்றுமல்ல. அப்பாவி மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை கடத்தல்காரர்கள் சமயோசிதமாகப் பயன்படுத்தித் தங்களைப் பிடிக்க முற்படும் காவல் துறையினரைத் தாக்குவதும் புதிதல்ல.

2013 டிசம்பர் 15-ஆம் தேதி கடத்தல்காரர்களுக்கும் தடுப்புக் காவல் படையினருக்கும் இடையே நடந்த கடும் சண்டையின்போது, காவல் படையினரின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. இரண்டு மூத்த வனத் துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களால் கல்லால் தாக்கப்பட்டு இறந்தனர். காவல் படையினர் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். இன்னும் மூன்று பேர் தப்பி ஓடினர். அதுமுதலே, கடத்தல்காரர்களைப் பழிவாங்க வேண்டும் என்கிற வெறி தடுப்புக் காவல் படைக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

செம்மரக் கடத்தல் தடுக்கப்பட வேண்டும் என்பதிலும், கடத்தல்காரர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியாக வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து யாருக்குமே இருக்க முடியாது. அதற்காக, கடத்தல்காரர்களின் கூலிகளாக மரம் வெட்டிப் பிழைப்பு நடத்தும் ஏழை ஆதிவாசிகள் சுட்டுக் கொல்லப்படுவதா என்கிற கேள்விக்கு, இருதயத்தின் ஓரத்தில் ஈரம் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்கூட ஆமோதித்து பதிலளிக்க இயலாது.

சட்டப்படி, தற்காப்புக்காக நடத்தப்படும் என்கவுன்ட்டராகவே இருந்தாலும், இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ் சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, அவர்கள் தற்காப்புக்காகத்தான் அதிரடித் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். இந்தச் சட்டப்படியான நடவடிக்கையை, இந்தியா முழுவதுமே காவல் துறையினர் கடைப்பிடிப்பதில்லை. இந்த முறையாவது, சட்டம் முறையாகத் தனது கடமையைச் செய்யட்டும்!

பண பலமும், அரசியல் பின்புலமும் உள்ள செம்மரக் கடத்தல்காரர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்காகக் கோடாரியைக் கையிலெடுத்து மரம் வெட்டிய ஏழை ஆதிவாசிகள் கொல்லப்படுகிறார்கள். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?

Tuesday, April 7, 2015

குறள் இனிது: யாமிருக்க பயமேன்?...by சோம.வீரப்பன்



அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தீர்களா? தி.நகர் உஸ்மான் சாலையில் ஓர் பெரிய கடையில் மகேசும், அஞ்சலியும் வேலை பார்ப்பார்கள். அவர்களது மேற்பார்வையாளர் அவர்களை நேரத்திற்கு சாப்பிட விடமாட்டார், தூங்க விடமாட்டார், ஏன் பேசக்கூட விடாமல் பாடாய் படுத்துவார்.

தங்குமிடமெங்கும் குப்பை, வேர்வை, நெருக்கடி. கீழ்நிலைப் பணியாளர்களின் அவல நிலையை அப்படம் தெளிவாகப் பிரதிபலித்தது.

அடுத்து இதையும் செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள். சண்டீகரில் பெரிய வங்கியின் முதன்மை மேலாளர் அவரது உயரதிகாரிகள் தகுதி இல்லாத ஒருவருக்குக் கடன் கொடுக்கச் சொல்லி செய்த சித்ரவதை காரணமாக ரயில் முன் விழுந்து தற்கொலையே செய்து கொண்டு விட்டார்!

அட, போங்கப்பா! கடைநிலை, இடைநிலை என்றில்லை. மேல்நிலை அதிகாரிகளுக்கும் அலுவலகத்தில் ஏகப் பிரச்சனைகள் உண்டு. இன்போஸிஸ் நிறுவனத்தின் ஓர் உயர்பதவியில் இருந்த பல்கேரிய-அமெரிக்கப் பெண் அதிகாரி தனக்குப் பாலியல் தொல்லை தரப்படுவதாகப் புகார் செய்தார்.

இன்போஸிஸ் நிறுவனத்தின் இன்னுமொரு மூர்த்தி என்று புகழப்பட்ட பனீஷ்மூர்த்தி மீது தான் அந்தக் குற்றச்சாட்டு! அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருப்பது இந்த மாதிரியான தொல்லைகள்தான்!

அரசாங்கம் சட்டம் தான் இயற்ற முடியும். ஒவ்வொரு அலுவலகத்திற்குள்ளும் காவல் நிலையமா வைக்க முடியும்? பணியிடத்தில் இத்தவறுகள் நடக்க வாய்ப்பில்லாத சூழ்நிலை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத் தலைவருடையது தானே?

முறைமையோடு ஆட்சிசெய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன் அம்மக்களுக்கு இறைவனைப்போல போற்றப்படுவான் என்கிறது குறள்! இன்றைய சூழலில் நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளை பண்டைய அரசர்களுடன் ஒப்பிட்டு குறளின் பலன் பெறலாம்.

தற்காலத்தில் நிறுவனத்தில் சீரிய கொள்கை கோட்பாடுகளை வகுத்தல், அவற்றை நிறுவனமெங்கும் கொண்டு செலுத்துதல், அவை குறித்த புகார்கள் வந்தால் நெறி படுத்துதல் ஆகிய மூன்று அதிகாரங்களும் கடமைகளும் அதன் தலைவர்களுக்கே உள்ளன!

தப்பு நடக்காத, நடக்க முடியாத அமைப்பை ஏற்படுத்துவது முதல் கடமை! அமெரிக்காவில் மிராண்டா விதியின்படி ஓர் கைதியிடம் கூட “உங்களுக்கு மௌனம் சாதிக்கும் உரிமை உண்டு” என்று சொல்லிவிட்டுத்தான் விசாரிக்க வேண்டும்! அனாவசியமாகத் தொல்லை கொடுக்கும் அதிகாரிகளையும், சும்மா எரிச்சல் மூட்டி பணியாளர்களின் ஊக்கத்தைக் குறைக்கும் மேலாளர்களையும், அதிகார வரம்பை மீறும் உயரதிகாரிகளையும் கட்டுபடுத்தாவிட்டால் தினம்தினம் பிரச்சினைதான்.

வேலை வாங்குவதிலும் ஒரு தரம், தராதரம் வேண்டுமில்லையா? பணியாளர்கள் தம் குறைகள் கீழ்நிலையில் தீர்க்கப்படாவிட்டால் மேலதிகாரிகளைத் தயங்காமல் அணுகும் முறை வேண்டுமில்லையா? தப்பு செய்தவனை தப்பிக்கவிடுவது பெரும் தப்பாயிற்றே! இன்றைய உலகில் ஓர் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமாக உடனுக்குடன் எல்லோரையும் அடைந்து விடலாமே!

இங்கு தவறு நடக்காது, தலைவர் நடக்கவிட மாட்டார். மீறி நடந்து விட்டால் நீதி செய்வார் என்று பணியாளர் எண்ணும்படி நடந்து கொள்ள வேண்டியது தலைவரின் தலையாய கடமை! நல்முறை சொல்லும் திருமறை இதோ.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.

இ காமர்ஸை மிஞ்சும் எம் காமர்ஸ்?


தொழில்நுட்பம் மாறுவதற்கு ஏற்ப வியாபார சூழ்நிலைகளும் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் பொருட்களின் பட்டியலைக் கொடுத்து வாங்கினோம். அதன் பிறகு நாமாக டிராலியை தள்ளிக்கொண்டு சூப்பர் மார்க்கெட், துணிக்கடை என்று வாங்கி வந்தோம். இப்போது இணையதளம் (இ காமர்ஸ்) மூலம் பொருட்களை வாங்கி வருகிறோம்.

இந்த வர்த்தகம் உயர்ந்துவரும் சூழ்நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் இ காமர்ஸின் வர்த்தகத்தை எம் காமர்ஸ் வர்த்தகம் (மொபைல் மூலமான பொருட்களை வாங்குவது) மிஞ்சும் என கேபிஎம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளதோடு அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

முதலாவதாக மொபைல் போன் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்வது. 2014-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் 17.3 கோடி வாடிக்கையாளர்கள் மொபைல் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்தினார்கள். இதனுடைய வளர்ச்சி நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.

வரும் 2019-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 21 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் வரும் 2019-ம் ஆண்டு 45.7 கோடி நபர்கள் மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவார்கள்.

தவிர செயலிகளை (ஆப்ஸ்) அதிகம் தரவிறக்கம் செய்வதில் நான்காவது இடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளில் 90 சதவீதம் செயலிகள் இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும் என்பதால் அதிக தரவிறக்கம் நடக்கிறது. அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து அதிக செயலிகளை தரவிறக்கம் செய்வது இந்தியர்கள்தான். மொத்த சந்தையில் 7 சதவீதம் இந்தியர்கள் வசம் உள்ளது.

கால் டாக்ஸி நிறுவனங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் செயலிகளைப் பயன்படுத்தும் போது இலவச பயணச் சலுகை அளிப்பதால், அது போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்துகொள்வது அதிகரித்துள்ளது. அதை தவிர மொபைல் போன் எப்போதும் கையில் இருப்பதால் தேவையானதை எப்போது வேண்டுமானலும் ஒரு சில கிளிக்குகளில் வாங்கிகொள்ள முடியும்.

இதற்கு உதாரணமாக ஸ்நாப்டீல் நிறுவனத்தின் விற்பனையை பார்க்கலாம். 18 மாதங்களுக்கு முன்பு வெறும் 5 சதவீதம் ஆர்டர்கள் மட்டுமே மொபைல் மூலமாக வந்தது. ஆனால் இப்போது 70 சதவீத வியாபாரம் மொபைல் மூலமாக வருகிறது என்று ஸ்நாப்டீல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இன்னும் ஒரு படி மேலேபோய் மிந்திரா நிறுவனத்துக்கு ஆர்டர் செய்பவர்களில் 90 சதவீதம் பேர் மொபைல் மூலமாகவே வருகிறார்கள் என மிந்திரா தெரிவித்திருக்கிறது. இதே போல ஜபாங் நிறுவனத்தின் வருமானத்திலும் 50 சதவீதம் மொபைலே ஆதிக்கம் செலுத்துகிறது. 2020ம் ஆண்டுக்கு பிறகு 70 சதவீத வர்த்தகத்தை மொபைல் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கடைக்குப் போய் பொருட்களை வாங்கும் போது தேவையானதை மட்டுமே வாங்கினோம், இணையம் மூலம் பொருட்கள் வாங்கும் போது கொஞ்சமாவது யோசிக்க நேரம் இருக்கும். ஆனால் மொபைல் மூலம் எப்போது வேண்டுமானாலும் பொருட்கள் வாங்க முடியும் என்பதால் யோசிக்க நேரமிருக்காது.

உங்களை நுகர்வு கலாசாரத்துக்கு இரையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களிடம் மட்டுமே இருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பார்ம் பட்டதாரிகளுக்கு விரிவுரையாளர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவத் துறை மற்றும் மருத்துவ கல்வித் துறையில் பணிபுரிந்துவருவோரில் எம்.பார்ம் முடித்தவர்களுக்குத்தான், அரசு மருத்துவ கல்லூரிகளில் மருந்தாளுநர் விரிவுரையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

மதுரையை சேர்ந்த எம்.முத்துராமலிங்கம், ஆர். ஜெயசு ரேஷ், ஆர். அன்பழகன், ஜி.சத்யபாலன், எஸ்.ஜஸ்டின் சுரேஷ், ஜி. மகுடேசுவரி, கே.நஞ்சப்பன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மருத்துவத் துறை, மருத்துவ கல்வித் துறையில் மருந்தாளுநராக பணியாற்றி வருபவர்களில் பி.பார்ம் முடித்தவர்கள் பதவி உயர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக நியமிக்க ப்படுகின்றனர்.

மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக பி.பார்ம் முடித்தவர்களை நியமனம் செய்வது சரியல்ல. அகில இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் விதிப்படி எம்.பார்ம் படித்தவர்களைத்தான் மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

எனவே, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்களில் மருத்துவத் துறை மற்றும் மருத்துவ கல்வித் துறையில் பணியில் உள்ள எம்.பார்ம் முடித்தவர்களை நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார். விசாரணைக்குப்பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விதிப்படி எம்.பார்ம் முடித்தவர் களைத்தான் மருந் தாளுநர் விரிவுரையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் 28 மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்கு எம்.பார்ம் முடி த்து மருத்துவத் துறை, மருத்துவக் கல்வித் துறையில் பணிபுரிந்து வருபவர்களை நியமிக்க, மாநில பணிமூப்பு பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநர் தயார் செய்து, ஒரு மாதத்தில் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலருக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பட்டியலுக்கு செயலர் ஒரு மாதத்தில் ஒப்புதல் வழங்கி, விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

28 மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மனசு போல வாழ்க்கை- 3: நல்ல எண்ணங்களைப் பயிலலாமே!....by டாக்டர். ஆர். கார்த்திகேயன்



நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.

ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது. ஆனால், அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.

ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது.

“உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது” என்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? ” என்று எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.

அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.

ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.

மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை தேடுவதும், இனப்பெருக்க உணர்வும்தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள் அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை. அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.

“உங்கள் குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா? உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா? உங்களுக்குக் கொஞ்சமாவது துப்பு இருக்குதா?” என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில் அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம் நமக்குச் சுலபமாக வரும்.

மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.

அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.

அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.

இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!

இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை உடனடி யாகச் செயல்படும். முன் மூளை சற்று நேர மெடுக்கும்.

நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம் செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.

உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம் குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, “ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..!”என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.

ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள் மனைவியின் பின் மூளையைத் தாக்க, “ எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?” என்று கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, “குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான் புதுசா என்ன?” என்று சமாதானமாகிறார்.

ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது.

அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதும் என்னென்ன கருத்துகள் வந்தன? “கோஹ்லி சரியில்லை. எல்லாம் அனுஷ்கா ஷர்மா ராசி”. “தோனியே சொதப்பிட்டார்” இப்படி வந்தவைதான் அதிகம். “அன்று ஆஸ்திரேலியா நம்மை விட நன்றாக விளையாடியது” என்று சொல்லியவர்கள் எத்தனை பேர்?

வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.

நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!

இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...