Showing posts with label DINAMANI. Show all posts
Showing posts with label DINAMANI. Show all posts

Friday, August 7, 2026

சேவைக்குள் அடங்கும் வாழ்க்கை!



தினமணி

நடுப்பக்கக் கட்டுரைகள்

சேவைக்குள் அடங்கும் வாழ்க்கை!

வாழ்க்கை ஒரு வட்டம் என்போம்; ஆனால், வாழ்க்கை ஒரு 'பேக்கேஜ்'.

வெ. இன்சுவை

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 6:01 am IST

காலை முதல் இரவு வரை ஏதோ ஒரு வகையில் நாம் தொகுப்புகளின் உலகில் (பேக்கேஜ்) வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி, நேரமின்மை மற்றும் வசதியைப் பழகிக் கொண்ட மனித இயல்பு ஆகியவை, நம் அன்றாட வாழ்வில் ஒவ்வோர் அங்கத்தையும் ஒரு தொகுப்பாக மாற்றிவிட்டன. பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துச் செய்ய முகமைகள் உள்ளன.

'வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தை செய்து பார்' என்று சொல்வார்கள். இவை இரண்டும் கடினமானவை என்று கருதப்பட்ட காலம் உண்டு. இன்றோ பணம் இருந்தால்போதும், ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல் ஒரு திருமணத்தை ஆடம்பரமாக நடத்திவிட முடியும். இரண்டு நாள்கள் முன்னரே வந்து தங்கி திருமண வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய ஒருவராலும் இயலாது.

திருமண வரவேற்பு அல்லது முகூர்த்தம் - இந்த இரண்டில், ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் போதும். அதுதான் மரியாதை. மிக நெருங்கிய சுற்றம் மட்டுமே இரண்டு தினங்களிலும் இருக்கும். ஒருவரும் முன்வந்து எந்த வேலையும் செய்வதில்லை. ஆகவே, நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களிடம் ஒப்படைப்பது எளிதாக உள்ளது. அவர்கள் மிகவும் நேர்த்தியாக நடத்திக் கொடுக்கிறார்கள். திருமண வீட்டாரும் விருந்தினர்போல கவலையின்றி பதற்றம் இன்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

குழந்தை பிறப்புக்கு இப்போது மருத்துவமனைகளில் 'பேக்கேஜ்' உண்டு. மருத்துவமனையின் தரம், தங்கும் அறை, பிரசவ முறை ஆகியவற்றைப் பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும். மருத்துவர்கள் கட்டணம், அறுவைச் சிகிச்சை அரங்கு கட்டணம், அறைக் கட்டணம், நர்சிங் கட்டணம், மருந்துச் செலவு, குழந்தை மருத்துவர் கட்டணம், தடுப்பூசி என அனைத்தும் இதில் அடக்கம். இது நம் பதற்றத்தைக் குறைக்கிறது. பேரக் குழந்தையுடன் வீடு திரும்பலாம். வளைகாப்பு, சீமந்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்த நாள் விழா, அறுபதாம் கல்யாணம் போன்ற அனைத்தையும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் சிறப்பாக நடத்திக் கொடுக்கின்றன.

'சுற்றுலா பேக்கேஜ்' இன்று சக்கைப் போடு போடுகிறது. போக்குவரத்து, தங்குமிடம், உணவு, வாகன வசதி என அனைத்தையும் அவர்கள் பார்த்துக் கொள்வதால் பயணம் இனிதாக இருக்கிறது. கல்லூரி கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், புத்தகத் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் ஆகிய அனைத்தும் தற்போது தொகுப்பாக கொடுக்கப்பட்டு விடுகின்றன. அந்த நிறுவனமே சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்கிறது. நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறது. விருந்தினர்களை அழைத்து வருதல், அவர்களுக்குச் சிறப்பு செய்தல், மேடை அலங்காரம், இருக்கை வசதிகள், ஒலி, ஒளி அமைப்புகள், நினைவுப் பரிசுகள், உணவு வரை அவர்கள் பொறுப்பு. மாணவர்களோ, ஆசிரியர்களோ, நிர்வாகமோ அலட்டிக் கொள்வதில்லை.

குடும்ப நிகழ்வுகளை நாமே நடத்தலாம் என சிலர் நினைக்கக் கூடும். இதை ஏன் வியாபாரமாக்க வேண்டும்? ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவு. எவரிடமும் உரிமை எடுத்துக் கொண்டு எந்த வேலையையும் செய்யச் சொல்ல தயக்கமாக இருக்கிறது. கேட்க நா எழவில்லை. காரணம், நாம் அவர்கள் வீட்டு நிகழ்வுகளில் தாமரை இலை தண்ணீர்போல இருந்திருப்போம். இந்த அவசர உலகில் அவரவர் ஓட்டம் அவரவருக்கு முக்கியம். நல்லது} கெட்டதுக்கு ஐந்து நிமிஷம் தலை காட்டினால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம் . நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்களிடம் ஒப்படைப்பது இன்று வழக்காகி உள்ளது.

இந்த நடைமுறைக்கு தற்போது மனிதனின் இறுதிப் பயணம்கூட தப்பவில்லை. தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் மாறி வரும் நவீன உலகில் வணிகமயம் புகாத இடமே இல்லை என்று கூறி எப்படி நம் பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் இன்று ஒரு குறிப்பிட்ட விலை கொண்ட 'பேக்கேஜாக' மாறி விட்டது என்று ஆதங்கப்பட்டார். அவர் உறவினர் வீட்டில் ஒரு மரணம். தந்தை இறந்து போனார். அவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

மரணம் சம்பவித்த உடனே அந்த அம்மா அழுது கொண்டிருக்க, மற்ற பெண்கள் உடலுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக சாமான்களை அந்த வீட்டில் தேடி இருக்கிறார்கள். எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் மகனிடம் கேட்டுள்ளார்கள். மகன் சொன்னாராம் 'யாரும் எதுவும் சிரமப்பட வேண்டாம். நமக்கு ஒரு வேலையும் இருக்காது. 'பேக்கேஜ்'க்கு சொல்லி விட்டேன். அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்'. ஆமாம், மரணமும் ஒரு கார்ப்பரேட் சேவையாக மாறிவிட்டது.

இறுதிச்சடங்கு முகமைகள் இன்று பெருகிவிட்டன; ஒரு குடும்பத்தில் ஏற்படும் மரணத்தின்போது சோகத்தில் இருக்கும் உறவினர்கள் சடங்குகளுக்கான வேலைகளில் அலைக்கழிக்கப்படாமல் ஆரம்பம் முதல் இறுதிவரை அனைத்துக் காரியங்களையும் ஒரு தொழில்முறை சேவையாக முன்னின்று நடத்த அமைப்புகள் உள்ளன. தற்கால நகர்ப்புறச் சூழலில் கூட்டுக் குடும்ப அமைப்புகள் குறைந்துவிட்ட நிலையில் இத்தகைய நிறுவனங்களின் சேவை தேவையாய் இருக்கிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த நிமிஷத்தில் இருந்து உடல் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் வரை உள்ள அனைத்துத் தேவைகளையும் இந்த முகமைகள் ஒருங்கிணைக்கின்றன. உடல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, உறைவிப்பான் பெட்டி, ஆம்புலன்ஸ், சமய வழிபாடுகள் மற்றும் சடங்குகள் இறந்தவரின் சமயம் அல்லது வழக்கப்படி சடங்குகளை முன்னின்று நடத்த புரோகிதர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். மாலைகள், பாடை அல்லது சவப்பெட்டி, புத்தாடைகள் என அனைத்தும் அவர்கள் பொறுப்பு. இறப்பைப் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுத் தந்து விடுகிறார்கள்.

வீட்டின் முன்பு பந்தல் அமைப்பது, இறுதி ஊர்வல வாகனத்தை மலர்களால் அலங்கரிப்பது, துக்க நிகழ்வுக்கு வந்திருப்பவர்களுக்கு. உணவு, நீர் ஏற்பாடு செய்வது, சாம்பலைக் கரைப்பது, பதின் காரியம், ஆண்டு திதி போன்றவற்றைக்கூட நடத்தித் தருகிறார்கள். துக்கத்தில் சம்பந்தப்பட்ட ரத்த உறவுகள்கூட எந்தக் கவலையும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பது உறுத்துகிறது.

எல்லோரும் மேஜிக் ஷோ பார்ப்பதைப் போல அந்த நபர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டிக் கொண்டு அழுவது, கதறுவது இல்லாமல் அமைதியாக அஞ்சலி செலுத்துகிறார்கள். நீத்தார் பெருமைகளைச் சொல்லி அழுவார்கள். அடக்கி வைத்திருந்த அழுகை வெடிக்கும். அழுகை வராதவர்களுக்குக்கூட அப்போது கண்களில் நீர் முட்டும். உறவினரின் கையை அழுத்தி, முதுகைத் தடவி, கண்ணில் ஈரம் காட்டி நாங்கள் இருக்கிறோம் துணையாக... என்று உணர்த்துவார்கள். இப்போது அப்படி ஏதும் இல்லை.

மரணம் முன்பகையை மறக்க வைக்கும். கல்யாணத்தில் அடித்துக் கொண்டவர்களும் இறப்பின்போது பகை மறந்து துக்கம் விசாரிக்க வருவார்கள். மீண்டும் உறவு புதுப்பிக்கப்படும். மரணம் நம் இருப்பின் ஆழத்தைத் தொட்டு உலுக்கும் ஒரு பெரும் உணர்வு. மரணம் மனிதனின் பிரிவை மட்டும் அல்ல; அவருடன் நாம் பகிர்ந்துகொண்ட நினைவுகளை ஒரு விநாடியில் உறைந்து போகச் செய்யும் வித்தை. அவர் சட்டென்று கடந்தகாலமாகி காற்றில் கரைந்து போய் விடுவார். முன்பெல்லாம் பாடையை பிள்ளைகளோ, உறவுகளோ வீட்டில் இருந்து இடுகாடு வரை சுமந்து செல்வார்கள். தற்போது வாகனத்தில் எரியூட்டும் இடத்துக்கே கொண்டு சென்று விடுகிறார்கள்.

அந்த வீட்டில் இறந்தவரின் உடல் எரியூட்டும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டது. வாகனத்தில் இருந்து உடலை இறக்கி சில அடி தொலைவு உள்ள எரி மேடைவரை எடுத்துப் போக வேண்டும். அவரின் இரண்டு மகன்களும் கையைக் கட்டிக் கொண்டிருக்க பெரியவர் ஒருவர் உடலை இறக்க அவர்களை அழைத்தார். அவர்களோ 'நாம் தூக்க வேண்டியதில்லை. அவர்களே தூக்குவார்கள். அதுவும் பேக்கேஜில் இருக்கும்' என்று பதில் கூறி அதிர்ச்சி கொடுத்தார்கள்.

உடலைச் சுமப்பது ஒரு வரம்; ஒரு கொடுப்பினை; அது அந்த ஆன்மாவுக்குச் செய்யும் மரியாதை. உடலைவிட உணர்வுகளின் பாரம் அதிகம் இருக்கும். தன் தோளிலும் மார்பிலும் தூக்கி தன்னை வளர்த்த தந்தை அல்லது தாய், உயிரற்ற உடலான பிறகு மயானத்துக்கு தூக்கிச் செல்வது தன் இதயத்தை அன்பெனும் பன்னீர் தூவி அழைத்துச் செல்வதுபோல் இருக்கும். நாம் வெறும் உடலை சுமக்கவில்லை. ஒரு சகாப்தத்தின் முடிவை அல்லது அரைகுறையாக முடிந்த ஒரு வாழ்க்கையைச் சுமக்கிறோம். அது துக்கத்தின் உச்சம்; அன்பின் மிச்சம்.

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இத்தகைய முகமைகள் பெரிதும் கைகொடுக்கின்றன. அவர்கள் இங்கு வருவதற்கு முன் அனைத்து ஏற்பாடுகளையும் அந்த முகமைகள் செய்து விடுகின்றன. சில மகன்களால் வர முடியாமல் போய்விட்டால் அவர்கள் அங்கிருந்தே பணத்தை அனுப்பி இறுதிக் காரியங்களை செய்து முடித்து விடுகிறார்கள். அவரவர் வாழ்வில் ஆயிரம் பிரச்னைகள். எதையும் நாம் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிலர் முதியோர் இல்லத்தில் பெற்றவர்களை விட்டு இருப்பார்கள். அவர்கள் இறந்து விட்டால் அங்கிருந்தே அந்த உடலுக்கு இறுதி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து விடுகிறார்கள்.

மாவுக்கு ஏற்ற பணியாரம் என்பதைப்போல நம் வசதிக்கேற்ப பேக்கேஜ்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இனி 'பேக்கேஜ்'தான் நம் வாழ்க்கை முறை. அரசியல் கூட்டங்கள், மாநாடுகள் இவற்றுக்கும் 'பேக்கேஜ்' வரக்கூடும்; எவர் கண்டார்? வாழ்க்கை ஒரு வட்டம் என்போம்; ஆனால், வாழ்க்கை ஒரு 'பேக்கேஜ்'.

Tuesday, June 23, 2026

கையகப்படுத்தும் கைக்கருவி

 கையகப்படுத்தும் கைக்கருவி

கிருங்கை சேதுபதி

தினமணி

22.06.2026

அண்மைக்காலமாக, போதை ஒழிப்பு குறித்த கருத்தாக்கம் பரவலாகப் பேசுபொருளாகி வருகிறது. அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி, இளையோர் நலம் பேணுதல் இன்றியமையாதது அது என்ற நிலையில் செயல் வடிவம் பெற்றால் நன்று. அந்த வரிசையில் நம் கண் முன்னால், வளர்ந்து வரும் அதீத போதை, கைப்பேசிக் கருவிப் பயன்பாடு.

உலக அளவில் தனிநபரின் கைப்பேசிப் பயன்பாடு என்பது ஒருநாளில், நாலரை மணிமுதல் ஏழு மணி நேரம் என்கிறார்கள். இந்தியாவில் ஐந்து மணிநேரத்திற்குக் குறைவின்றி, அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவோர் இருக்கிறார்கள். அமெரிக்கர்களுடன் ஒப்பிடும்போது, இது மிக அதிகம். அண்மைய ஆய்வு முடிவின்படி, சராசரியாக, ஒரு நாளைக்கு 77 முதல் 100 முறைக்குமேல் தன் கைப்பேசியைப் பதின்ம வயதினர் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. கவனித்துப் பார்த்தால், இந்தப் போதைக்கு உள்ளானவர்களில் அதிக வயது பேதமில்லை என்றே சொல்ல வேண்டும்.

அன்றாடம் காலை உலாவலுக்கு வரும் முதியவர்களுள் இருவர் களைப்பா(ற்)றிக் கொள்ளும் தருணத்தில் பேசிக் கொண்டது என் கவனத்தை ஈர்த்தது.

"ஊருக்குப் போயிருப்பீர்கள் என நினைத்திருந்தேன். ஆனால், உங்களிடம் காணும் மாற்றம் உடல் நலம் குறைந்த மாதிரி தெரிகிறது. என்ன காரணம்?' எனக் கேட்ட தன் நண்பரிடம், அவர் சொன்ன பதில் அதிர்ச்சி உண்டாக்கியது.

"சும்மாதான் இருக்கிறோமே என்று மகன் வாங்கித் தந்த அறிதிறன் பேசியைத் துழாவ ஆரம்பித்தேன். பேரக் குழந்தைகளிடம் பயன்படுத்தும் முறையைக் கேட்டுப் பழகத் தொடங்கியது, என் நேரக் கொள்ளி ஆனது. இரவு பகலாக ஸ்டேட்டஸ் போடுவது, ரீல்ஸ் பார்ப்பது, ஃபேஸ்புக்கில் பதிவிடுவது என வளர்ந்தது. தொடக்கத்தில் உற்சாகமாக இருந்தது. இளமை திரும்பின மாதிரி உற்சாகம். இவ்வளவு நாள் போனதே தெரியவில்லை. குடும்ப மருத்துவரும் விடுமுறைக்கு ஊருக்குப் போய்விட்டார்.

நேற்று வழக்கமான மருத்துவப் பரிசீலனைக்குச் சென்றபோது, சர்க்கரை, ரத்த அழுத்தம் என எல்லாமும் கூடிவிட்டிருக்கிறது. இத்தனைக்கும் மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிட்டிருக்கிறேன். கண்களில் தெரிந்த மாற்றத்தைக் கொண்டு காரணத்தை அவர்தான் கண்டுபிடித்துச் சொன்னார்.

பகலெல்லாம் எதையாவது பார்க்கிறதுடன் நிறுத்திக் கொள்ளாமல், இரவு வேளையில் விழிப்பு வந்த பிறகு, நேரம் என்ன என்பதைப் பார்ப்பதுபோல் தொடங்கிய பழக்கம், திரும்பவும் அந்தக் கருவிக்குள் மூழ்கவைத்துவிட்டது.

முதலில் இந்தக் கருவியிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று பலமுறை முயன்றும் தோற்றுப் போய்விட்டேன். இன்றைக்குக் கட்டாயமாக உதறிவிட்டு வந்திருக்கிறேன். இனி பழையபடி வாழ்க்கையைத் தொடங்கவேண்டும். பாருங்கள்; இப்போது மணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளக் கைப்பேசியைத் திறந்துவிட்டால் என் பதிவுக்கு எத்தனை பேர் பதிலிட்டிருக்கிறார்கள்?

எத்தனை பேர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்? என்று பார்க்கிற புத்தி வந்துவிடுகிறது' என்று சின்னக் குழந்தைபோல் அவர் சிரித்துக் கொண்டு சொன்னார்.

"உங்ககிட்ட சொல்றதுக்கென்ன, எதைப் பார்க்கிறோம் என்கிற விவஸ்தையே இல்லாம, வந்ததையெல்லாம் பார்த்துப் பார்த்து என் கண்ணும் உடலும் மட்டுமில்லே, மனசும் கெட்டுப் போச்சு' என்று விசும்பலுடன் கூறியது கேட்க வருத்தமாக இருந்தது.

உண்மைதான். பழக்கமாகத் தொடங்கி, வழக்கமாக வளர்ந்து, முழுக்கவும் தன்வயப்படுத்தி மனங்களை ஆட்கொள்ளும் கருவி, குருவாக உயர்ந்து பலவற்றைப் போதிக்கத் தொடங்கி விடுகிறது. உடல் நலம், மன நலம் என்கிற பெயரில், உணவு, உடை, நாகரிகம், அனுபவம் என உதவுவதுபோல் முன் வரும் பதிவுகள் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கின்றன. பின்னர், அடிமனதில் ஒளிந்திருக்கும் ஆசாபாசங்களை மெல்லத் தூண்டி தீனி போட்டுவிடுகின்றன. இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியாமலேயே அதுவாகவே நம்மை ஆக்கிவிடுகிற நிலை.

ஆப்பதனை அசைத்துவிட்ட

குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே

என்று பட்டினத்தார் பாடுகிற அவலத்துக்கு நம்மை உள்ளாக்கிவிட்டு விடுகிறது.

ஒரு குரங்கு, மரக்கிளையில் இருந்தபடி, அந்த மர நிழலில் அறுக்கக் கொணர்ந்த மரத்தைப் பிளந்து பணி செய்யும் தச்சரை வேடிக்கை பார்க்கிறது. பெரு மரம் ஒன்றைப் பிளக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். சுத்தியல் உளி கொண்டுஅம்மரத்தில் சிறு பிளவை முதலில் உருவாக்குகிறார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட சிறு கட்டையை (அதுதான் ஆப்பு) அப்பிளவில் திணிக்கிறார். சுத்தியல் மாதிரியான கொட்டாப்புளி கொண்டு அதன் தலைப்பகுதியில் அடிக்கிறார். ஆப்பு உள்ளே இறங்குகிறது. அதை மெல்ல மெல்ல அசைக்கிறார். அது பெருமரத்தில் விரிசலை ஏற்படுத்தி, பிளவைப் பெரிதாக்கிக் கொண்டே போகிறது. அது நெடுமரமும் கூட.

நெடுநேரம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குரங்கு, தச்சர் உணவு இடைவேளைக்குச் சென்ற நேரம் பார்த்து, அவரைப் போலவே செயல்படத் தொடங்கியது. வேடிக்கையாகத் தொடங்கிய இவ்விளையாட்டு, சுவாரசியமாகி வளர்ந்தது. அசைக்க முடியாத நிலையில் ஆப்பு இறங்கிவிட்டது. மரத்தின் இருமருங்கிலும் கால் போட்டுக் கொண்டு ஏறி அமர்ந்தபடி குரங்கானது, தனது கைகளையும் கால்களையும் பயன்படுத்தி வலிந்து அசைத்து அசைத்து இழுத்தே விட்டது. அந்த நேரம் பார்த்து, தச்சரும் வந்துவிட, மீண்டும் மரக்கிளைக்குத் தாவப் போகும்போது தான், ஆப்புக் கழன்ற இடைவெளியில் தன் கால் அகப்பட்டுக் கொண்டது தெரியவருகிறது.

ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு, அப்புறம் வெளிவர முடியாத நிலையில், பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே ஊகியுங்கள் என்று விட்டுவிட்டுத் தன் காலத்து அனுபவக் கதையினை விவரிக்கிறார் பட்டினத்தடிகள்.

நாப்பிளக்கப் பொய்யுரைத்து

நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத

நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க வருகின்ற

புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலெனப்

புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வகை அறியீர்

கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையில்

கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட

குரங்கதனைப் போல

அகப்ட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

காம வயப்பட்டு இல்லற மரபு மீறிய மனிதர்களுக்கு அவர் உரைத்த அறம், ஆசை வயப்பட்டு கைப்பேசிக் கவர்ச்சியில் இறங்கிய மனங்களுக்கும் மிகச் சரியாகப் பொருந்திவருகிறது.

ஒரு காலத்தில் தொலைக்காட்சி, இந்த வகையில் தொல்லை கொடுப்பதாக இருந்தது. ஆனால், அப்பெட்டிக்கும் பார்ப்பவர்க்கும் இடைவெளியிருந்தது. அது கணினியாகி வந்தபோது இடைவெளி குறைந்தது. குழந்தைபோல், மடியேறி அமர்ந்த கணினி, கையளவில் சுருங்கியபிறகு, அதுவே அனைவரையும் கையகப்படுத்திவிட்டது.

பொதுவெளியில் பேச, எழுதக் கூசும் வாசகங்கள் வெகு இயல்பாய்ப் பதிவிடப்படுகின்றன. முதலில் அநாகரிகம் என்று முகச்சுழிப்போடு கடந்துபோனாலும், அவற்றைப் பார்க்கவும் படிக்கவும் தொடங்கியதைப் பார்த்து இதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை உங்களுக்கு முன்னதாகவே அது புரிந்துகொண்டு அம்மாதிரியான பதிவுகளைக் கவனத்தில் கொண்டுவந்து கையகப்படுத்திவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. இயல்பானதுதான் என்கிற மனநிலைக்குத் தள்ளிவிடுகிறது. இந்த இடத்தில் உறுதியற்ற மனத்தவர்கள் வயதுவேறுபாடின்றி, வசியப்பட்டுவிடுகிறபோது, தனி மனித அளவிலான தவறுகள் குற்றங்களாக வளர்ந்து பொதுவெளியில் சட்ட ஒழுங்கு மீறல்களுக்கு வழிகோலிவிடுகின்றன.

நேரத்தைக் கையகப்படுத்தி, ஆளையே காலி செய்துவிடுகிற அவலத்துக்கு கையேறிய இந்தக் கருவியின் பயன்பாடு எல்லை மிகுந்து போயிருக்கிறது. அந்தப் பெரியவர் சொல்லியதுபோல், "சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது மாதிரிதான்.'

எத்தனை விழிப்புணர்வுப் பயிற்சிகள் கொடுத்தாலும், இந்த விழிப் புணர்வில் இருந்து மீட்க முடியாத போக்கு மிகுந்துகொண்டே போகிறது. யார் எதுவரை எதைப் பார்க்கலாம் என்ற வரம்பின்றி விரியும் இந்தப் பயன்பாடு பயமுறுத்தும் சமூக விரோதப் போக்காகவே வளர்ந்து வருகிறது. நடைமுறையில் அறிய வரும் பல்வேறு குற்றங்களின் பெருக்கத்துக்கு இதுவே நாற்றங்கால் என்பதும் தெரிகிறது.

இது மிகைப்படுத்தப்பட்ட பதிவாக எனக்கும் கூட முதலில் தோன்றியது. இன்றைக்கு, பால் வேறுபாடின்றி, வயது பேதமின்றி கால நேரக் கணக்கின்றி வளர்ந்து வரும் இப்பழக்கம், மதுவைவிட, மற்ற போதைகளைவிட, நம்முள் புகுந்து நம்மையே நமக்கு எதிரியாக ஆக்கி, மனிதகுல விரோத மனப்பான்மையை வளர்த்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

இதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் என்பதே நடைமுறைக்கு வரவேண்டிய கட்டாயக் கடமை.

தினமணி

நடுப்பக்க கட்டுரைகள்

22.06.2026

Monday, March 16, 2026

DINAMANI 

கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

தமிழ்நாடு, உத்தர பிரதேசம் குறித்த சமீபத்திய ஒப்பீடுகள் தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...


கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

Updated On :16 மார்ச் 2026, 3:00 am


- முனைவர் ஏ.ஜே. ஹாஜா முகைதீன்

கடன் என்பது முதலீடுகளை மேற்கொண்டு வளர்ச்சியை அடைவதற்கு அரசுகள் பயன்படுத்தும் ஒரு கருவியாகும். மத்திய, மாநில அரசுகளின் கடன்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு மாநிலத்தின் கடன் அதிகரிக்கும் போது அதை நிதிச் சிக்கல் என்று கூற முடியாது. ஏனெனில், மாநிலத்தின் பொருளாதார வலிமையை கடன் எடுத்துக்காட்டுவதில்லை. கடனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவது அர்த்தமற்றதாகும். நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம், கடன்களை வரம்பின்றி மாநில அரசுகள் வாங்குவதைத் தடுக்கிறது.

ஒரு மாநிலம் அதன் பொருளாதாரத் திறனுக்கு ஏற்றவாறுதான் கடன் வாங்க முடியும். ஒரு மாநிலத்தின் கடனை அதன் பொருளாதார வலிமையை எடுத்துக்காட்டும் குறியீடான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிஎஸ்டிபி) ஒப்பிட்டுப் பார்த்து கடனை அணுக வேண்டும்.

ஓராண்டில் மாநிலத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் சேவைகள் ஆகியவற்றின் மொத்த பணமதிப்பே ஜிஎஸ்டிபி. மாநிலத்தின் கடனை ஜிஎஸ்டிபியுடன் ஒப்பிடுவதே கடன் ஜிடிபி விகிதமாகும். இது மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பீடு செய்வதற்கு சரியான அளவுகோலாகும்.

வரம்புக்குள் கடன் உள்ளதா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு வாங்கியுள்ள கடன் தொகை அதிகமானதாக இருந்தாலும், அதை வைத்து அதன் நிதிநிலை மோசம் என்று கூற முடியாது. இரண்டு நபர்கள் தனித்தனியே ரூ10,000, கடன் வாங்கியுள்ள நிலையில், யாருடைய நிதி நிலை மோசமாக உள்ளது என்பதை அறிய அவர்களின் வருமானத்தை- கடனை திருப்பிச் செலுத்தும் திறனை ஒப்பிட்டுப் பார்த்தே கூற முடியும்

ஒரு லட்சம் ரூபாய் மாத வருமானம் பெறுபவருக்கு ரூ.10,000 என்பது எளிதில் சமாளிக்கக்கூடிய கடன். ஆனால், மாத வருமானம் பத்தாயிரம் உள்ளவருக்கு கடனை சமாளிப்பது கடினம். தமிழ்நாடு, உத்தர பிரதேசம் குறித்த சமீபத்திய ஒப்பீடுகள் தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் கடன் ரூ.9.29 லட்சம் கோடி. அதன் ஜிஎஸ்டிபி மதிப்பு ரூ.35.6 லட்சம் கோடி. கடன் ஜிடிபி விகிதம் 26% ஆகும். உத்தர பிரதேசத்தின் கடன் ரூ. 9.03 லட்சம் கோடி. அதன் ஜிஎஸ்டிபி மதிப்பு ரூ. 30.8 லட்சம் கோடி. கடன் ஜிடிபி விகிதம் 29 முதல் 30% ஆகும். 15-ஆவது நிதி ஆணையம் நிர்ணயித்துள்ள கடன் ஜிடிபி விகிதத்தின் உச்சவரம்பு 28.07 % ஆகும்.

தமிழ்நாட்டின் கடன் ஜிடிபி விகிதம் 26.07% மட்டுமே. உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை 19 கோடி. தமிழ்நாட்டின் மக்கள்தொகை 7 கோடி. தமிழ்நாட்டைவிட உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை 2.7 மடங்கு அதிகம். ஆனாலும், குறைந்த மனித வளத்தைக் கொண்டு அதிகம் உற்பத்தி செய்து கடன் ஜிடிபி விகிதத்தை உத்தர பிரதேசத்தைவிட குறைவாகவே தமிழகம் வைத்திருக்கிறது. மாநிலத்தின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான பொருளாதார வலிமையைக் கணக்கிடுவதற்கு தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (தனிநபர் சராசரி வருமானம்) உதவுகிறது.

ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியின் பண மதிப்பை மாநிலத்தின் மக்கள்தொகையால் வகுத்துக் கிடைப்பதே தனி நபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி. அந்த வகையில், தமிழ்நாட்டின் தனி நபர் சராசரி வருமானம் ரூ.3,61,619. ஆனால், உத்தர பிரதேசத்தில் ரூ1,08,572. தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உத்தர பிரதேசத்தைவிட 3.3 மடங்கு அதிகம்.

நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை மூன்று சதவீதத்தை ஒட்டியே உள்ளது. இதன் மூலம் "நீதி ஆயோக்' மற்றும் நிதி ஆணையம் நிர்ணயித்த வரம்புக்குள்ளாகவே நிதிப் பற்றாக்குறையை தமிழகம் வைத்துள்ளது.

வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் செலவுகளுக்கான வருவாயில் நான்கில் மூன்று பங்கை தனது வரி மற்றும் வரி அல்லாத ஆதாரங்களில் இருந்து பெறுகிறது. மீதி ஒரு பங்கை மட்டுமே மத்திய அரசிடமிருந்து பெறுகிறது. ஆனால், உத்தர பிரதேச அரசு தனது வருமானத்துக்கு பாதிக்கும் மேல் மத்திய அரசை சார்ந்துள்ளது.

வாங்கப்படும் கடன்கள் வளர்ச்சிக்கான கடன்களாகவும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு உண்டான ஆதார வளங்களை அதிகரிப்பதாக இருந்தால் எவ்விதப் பிரச்னையும் இல்லை. தமிழ்நாடு அரசின் கடன்கள் பெரும்பாலும் சமூக நலத் திட்டங்களுக்காகவும் வளர்ச்சிக்கான மூலதன செலவுகளுக்காகவும் வாங்கியவையாகும். உற்பத்தி, சேவைத் துறைகளின் வளர்ச்சி கூடுதல் கடன்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உதவுகிறது.

கரோனா பெருந்தொற்று நெருக்கடியைச் சமாளிக்க மாநிலங்களை கூடுதலாக கடன் வாங்க மத்திய அரசு அனுமதித்ததும் தமிழ்நாடு அரசின் கடன் அதிகரித்ததற்கு ஒரு முக்கிய காரணம். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் ரூ.54,000 கோடி (13%) கல்விக்காக செலவிடப்படுகிறது. சுகாதாரத்துக்கு ரூ.20,000 கோடி (5%) செலவிடப்படுகிறது. சாலைப் போக்குவரத்து, குடிநீர் விநியோகம், நகர்ப்புற வளர்ச்சி, உள்கட்டமைப்பு, தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றுக்காக ரூ.57,000 கோடி செலவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கண்ட செலவினங்களுக்காக தமிழ்நாடு தொடர்ந்து கடன் வாங்கி வருகிறது. இதன் விளைவாக, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இடைநிற்றல் குறைந்துள்ளது. தேசிய மனித வளர்ச்சி குறியீடான 0.64-ஐ தாண்டி தமிழ்நாட்டின் மனித வளர்ச்சி குறியீடு 0.69-ஆக உள்ளது.

Saturday, March 14, 2026

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

DINAMANI. 14.03.2026

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம் உயரிய பண்பின் அடையாளம். அதுவே மனிதநேயத்தின் உண்மையான இதயக்குரல்.

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 5:12 am


எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் "நாடற்றவன்' கட்டுரைத் தொகுப்பில் உள்ள "ஓ' என்ற கட்டுரை என்னை மிகவும் யோசிக்க வைத்தது. ஒருமுறை கவிஞர் முத்துலிங்கம் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் நின்ற ஒரு பெண்மணி பணம் எடுக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். அவருக்கு அடுத்து ஓர் இளம்பெண்ணின் முறை வந்தது; அந்தப் பெண் விரைவாகப் பணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டார். இப்போது முத்துலிங்கத்தின் முறை வந்தபோது, அவரால் தனது அட்டையை உள்ளே செலுத்த முடியவில்லை. காரணம், அவருக்கு முன்பாக பணம் எடுத்துச் சென்ற இளம்பெண் தனது அட்டையை எடுக்காமலேயே சென்றிருந்தார்.

உடனே, அவர் அந்த அட்டையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். அப்போது, தான் பணம் எடுப்பதைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. அந்தப் பெண் காரில் அமர்ந்திருந்தாள். இவர் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டு கார் கண்ணாடியை இறக்கினாள். முத்துலிங்கம் அவளிடம் அட்டையைக் கொடுத்தார். அவள் "ஓ' என்று மட்டும் சொன்னாளே தவிர, ஒரு "நன்றி' கூடச் சொல்லவில்லை. அவர் மீண்டும் சென்று வரிசையில் இணைந்து கொண்டார். அவர் தனது முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.

அப்போது, அவருக்குத் தனது நண்பர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்த நண்பருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக சுமார் 70 பேர் ஒன்று சேர்ந்து பணம் திரட்டிக் கொடுத்தார்கள். சிகிச்சைக்குப் பிறகு, அவர் முழுமையாகக் குணமடைந்து விட்டார். ஆனால், தனக்கு உதவிய அந்த 70 பேரில் ஒருவருக்குக் கூட அவர் நன்றி சொல்லவில்லை.

"அவருடைய இதயம் நிமிஷத்துக்கு 70 முறை துடிக்கிறது; அதில் ஒரு துடிப்பு எனக்குச் சொந்தமானது, அது நன்றியைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது' என்று முடித்திருப்பார்.

உண்மைதான், உலகில் நன்றியுணர்வு இல்லாத மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நன்றி கூறுதல் என்பது வெறும் உதட்டு வார்த்தை அல்ல; அது மனித உறவுகளையும், மன நலத்தையும் மேம்படுத்தும் ஒர் உன்னதமான பண்பாகும்.

"உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து' என்கிறது வள்ளுவம்.

ஒருவர் செய்த உதவி, எவ்வளவு பெரியது என்பதைப் பொருத்து கைம்மாறு செய்யக்கூடாது; உதவியைப் பெற்றவரின் நல்ல சால்பின் (பண்பின்) அளவே கைம்மாறு செய்ய வேண்டிய அளவாகும். சில நேரங்களில் கைம்மாறு கூட ஏதும் செய்ய வேண்டாம், "நன்றி' என்ற ஒற்றைச் சொல் மட்டும் போதும். அந்த உணர்வு ஒருவரைச் சிறந்த மனிதராக மாற்றும் வல்லமை வாய்ந்தது.

உதவி பெறாவிட்டாலும் கூட நன்றி சொல்பவர்கள் உண்டு. அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், உள்நாட்டுப் போரின்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். ஆயிரக்கணக்கானோர் அவரிடம் உதவி கேட்டு தினமும் வந்தனர். ஒருமுறை வயதான பெண்மணி அவரைச் சந்திக்க வந்தார். லிங்கன் அவரிடம், "அம்மா, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, "நான் உங்களிடம் எதையும் கேட்க வரவில்லை. இவ்வளவு இக்கட்டான சூழலில் நாட்டை வழிநடத்தும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைச் சொல்லவே வந்தேன்' என்று கூறி சில உணவுகளைப் பரிசாக அளித்தார். இதைக் கேட்ட லிங்கன் கண் கலங்கினார்.

"இத்தனை ஆண்டுகளில் எதையும் எதிர்பார்க்காமல் நன்றி சொல்ல வந்த முதல் நபர் நீங்கள்தான்' என்றார் அவர். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நாம் நன்றி சொன்னால், அது அவர்களுக்குச் சாமரம் வீசியதுபோல ஒரு மகிழ்ச்சியைத் தரும்; அவர்களைச் சலிப்படையாமல் தடுத்து வேலையைத் தொடர உற்சாகப்படுத்தும். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்குத் தன்னால் இயன்றவரை உதவுபவர்கள், அவர்கள் நன்றி கூறத் தவறும்போது மட்டும் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அந்த வருத்தம் அவர்கள் மனதுக்குள் ஓர் ஓரமாய் அமர்ந்து கொள்ளும்.

எனக்குத் தெரிந்த ஒருவரின் குணம் அதிசயமானது. அவர் தன்னுடன் பழகியவர்கள் விளிம்பு நிலையில் இருப்பதைத் தெரிந்து கொண்டால், ஓடிப்போய் அவர்களுக்குப் பண உதவி செய்வார். என்றைக்கோ தனக்கு ஒரு கோப்பை தேநீர் வாங்கி கொடுத்தவரை, தேடிப்போய் பணம் கொடுப்பார். அந்தச் செயல் அவருக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் அவர்களின் நன்றியை எதிர்பார்த்துச் செய்வதில்லை. உதவும்போது அது தன் கடமை என்று நினைப்பது மனதுக்கு இதமளிக்கிறது; ஓர் ஆத்ம நிறைவைத் தருகிறது என்பது அவர் வாதம்.

"நான் நானாகவே வளர்ந்தேன், எனக்கு யாரும் உதவவில்லை' என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் மனிதர்கள் இங்கே அதிகம். ஆனால், உண்மையில், நம் ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும், நாம் அனுபவிக்கும் வசதிகளுக்குப் பின்னாலும் பலரின் உழைப்பு மறைந்துள்ளது. நமக்குப் பின்னால் நின்று மறைமுகமாக உதவிய அந்த நபர்களுக்கு நாம் எப்படி நன்றி சொல்வது? நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய முன்வருவதே, அவர்களுக்குச் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும். இப்படி ஒருவருக்கொருவர் சங்கிலித் தொடராக உதவிக் கொண்டே இருந்தால் மனிதம் தழைக்கும்.

அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தினமும் தனக்குத்தானே இவ்வாறு சொல்லிக் கொள்வாராம். "என்னுடைய அகம் மற்றும் புற வாழ்க்கை, தற்போது வாழும் மற்றும் மறைந்த பல மனிதர்களின் கடும் உழைப்பால் உருவானது. நான் அவர்களிடமிருந்து பெற்ற அதே அளவு அன்பையும் உழைப்பையும் பிறருக்குத் திருப்பித் தர நான் கடுமையாக உழைக்க வேண்டும்'.

சிலர் தங்களுக்குக் கிடைக்கும் உதவியைத் தங்களின் உரிமை என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். இன்னும் சிலர் பிறகு நன்றி சொல்லிக்கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுவிட்டு, காலப்போக்கில் அதை மறந்தே போய்விடுகிறார்கள். உதவி செய்தவர்களுக்கு அந்தச் செயலின் சூடு ஆறுவதற்குள் நன்றி சொல்லிவிட வேண்டும்.

நம் அன்றாட வாழ்வில் உணவகத்தில் உணவு பரிமாறுபவர், அலுவலகத்தில் மின்தூக்கி இயக்குபவர், தேநீர் கொண்டு வருபவர், வாடகை வாகனத்திலிருந்து இறங்கும்போது அந்த ஓட்டுநர் எனப் பலரைச் சந்திக்கிறோம். இத்தகைய எளிய மனிதர்களிடம் புன்முறுவலுடன் "நன்றி' சொன்னால், அவர்கள் மனம் அந்த விநாடியில் மத்தாப்பாய் மலரும். அவர்கள் நம்மை மனதார வாழ்த்துவார்கள். மிக எளிதாக நாம் அவர்களின் மனதில் அன்பால் இடம் பிடித்து விடலாம். குழந்தைகளுக்கு இந்த நற்பண்பை சிறுவயதிலேயே பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், அது அவர்களின் மனதில் வேர் பிடித்து நிற்கும். அதைக் கற்றுக் கொடுக்காததே அனைத்து அலட்சிய மனப்பாங்குக்கும் அடிப்படைக் காரணம்.

கடவுள் எப்போதும் சொர்க்கத்தில் மட்டுமே இருப்பதில்லை; அவர் நமக்கு உதவுவதற்காக பல நேரங்களில் சாதாரண மனித வடிவில் வருவதுண்டு. ஆகவே, நமக்கு இக்கட்டான நேரத்தில் உதவுபவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாகவே இருக்கக்கூடும். இத்தகைய உயர்ந்த எண்ணம் உள்ளத்தில் உதித்தால், நம் உதடுகள் தானாகவே நன்றியை உதிர்க்கும். "நன்றி' என்பது வெறும் வார்த்தையல்ல. அதைச் சொல்லால் சொன்னால் அது ஒரு கடமை; அதைச் செயலில் காட்டினால் அது ஒரு பெருமை; ஆனால், அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் சுமந்தால் அதுவே மிகப் பெரிய அறம்!

வாய் திறந்து நன்றி சொல்லக்கூடத் தேவையில்லை; மெளனத்தாலேயேகூட நன்றி சொல்ல முடியும். ஈரமான விழிகளும், இதயபூர்வமான சிறு புன்னகையும், அழுத்திப் பிடிக்கும் கைகளும் அதைக் கூறிவிடும். பெற்று வளர்த்த பெற்றோருக்குப் பிள்ளைகள் தங்களின் செயல்கள் மூலம் நன்றி கூறலாம். ரத்த உறவு இல்லை என்றாலும், "உடுக்கை இழந்தவன் கைபோல' ஓடி வந்து உதவும் நட்புக்கு நம் உள்ளத்தில் எப்போதும் ஒரு தனி இடம் இருக்க வேண்டும். நம் துன்பத்தைத் துடைக்க ஓடிவந்த கால்களையும், கண்ணீரைத் துடைத்த கைகளையும், நமக்காக வருந்திய கண்களையும் நாம் எப்படி மறக்க முடியும்?

1885-ஆம் ஆண்டில் ஜோசப் மெய்ஸ்டர் என்ற ஒன்பது வயது சிறுவனை வெறிநாய் கடித்துவிட்டது. அப்போது தடுப்பூசி, பரிசோதனை நிலையிலேயே இருந்தது. ஆனால், லூயி பாஸ்டர் துணிந்து அந்தச் சிறுவனுக்குத் தடுப்பூசி போட்டு அவனைக் காப்பாற்றினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சிறுவன் வளர்ந்து பாஸ்டர் நிறுவனத்திலேயே காவலாளியாகப் பணியில் சேர்ந்தான். இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானிய நாஜிக்கள் படை பாரிûஸக் கைப்பற்றின. அவர்கள் லூயி பாஸ்டரின் நினைவகத்தைச் சிதைக்க முயன்றனர். தன் உயிரைக் காப்பாற்றிய அந்த மாமனிதரின் நினைவிடத்தைச் சேதப்படுத்த விடக்கூடாது என்பதற்காக, ஜோசப் மெய்ஸ்டர் அங்கேயே தற்கொலை செய்துகொண்டார்.

இப்படியும் சில மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். நன்றி என்பது நாம் வாங்கிய கடனுக்கான வட்டி அல்ல; அது மனித மாண்புக்கான ஓர் அங்கீகாரம். நம் வாழ்வைச் செதுக்கும் ஒவ்வொருவருக்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் பெற்ற உதவிக்கு ஈடாகப் பொன்னும் பொருளும் கொடுக்கத் தேவையில்லை; உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம் உயரிய பண்பின் அடையாளம். அதுவே மனிதநேயத்தின் உண்மையான இதயக்குரல்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

Tuesday, March 10, 2026

குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!



குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!

DINAMANI 

பெண்களின் உடல்நலத்திலும், மனநலனிலும் அதிக அளவிலான எதிர்மறையான தாக்கங்களை இளம் வயது திருமணங்கள் ஏற்படுத்துகின்றன. இதை பெண்கள் நன்கு புரிந்துகொள்வது நல்லது.


குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!- சித்திரிப்பு

Updated On :10 மார்ச் 2026, 4:54 am

முனைவர் என். பத்ரி

உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள பெண்களில் சுமார் பாதி பேர் 18 வயதுக்கு முன்பும், 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 47 சதவீதம் பேரும் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்வதாக இது சார்ந்து பெறப்பட்டத் தரவுகள் கூறுகின்றன. தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தரவுகள் கடந்த 2 ஆண்டுகளில் இளம் வயது திருமணங்கள் அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7000 இளம் வயது திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

1992 - 93 மற்றும் 2005 - 06-க்கு இடையில், இந்தியாவில் இளம் வயது திருமணங்கள் சுமார் 7% அளவுக்கு குறைந்தது. இருப்பினும், சில மாநிலங்களில் இவ்வாறான திருமணங்கள் இன்னும் 60 சதவீதத்தைவிட அதிகமாக உள்ளது. பிகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இவ்வாறான திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நகர்ப்புறங்களைவிட கிராமப்புற இந்தியாவில் இந்தப் பிரச்னை மோசமாக உள்ளது.

இந்தியாவின் குழந்தை திருமண தடைச் சட்டம் (2006) பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கு இது 21 ஆண்டு எனவும் கூறுகிறது. மேலும், இந்தச் சட்டம் இளம் வயது திருமணங்களைத் தடுப்பது, இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப் பது, அத்தகைய திருமணங்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும், அவற்றை நடத்துபவர்கள் மீதும் அபராதம் விதித்தல் போன்ற தண்டனைகளையும் சாத்தியப்படுத்தியது.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 55 சதவீதம் அளவுக்கு இளம் வயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் உரிமைச் சட்டத் தகவல் கூறுகிறது. இளம் வயது திருமணம் நடைபெற்ற பிறகு பிரசவத்துக்காக இளம் பெண்கள் மருத்துவமனைக்கு வரும் போதுதான் இது சார்ந்த விவரம் வெளிச்சத்துக்கு வருகிறது. பின்னர்தான் குற்றவாளிகள் கைதாவதாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் இளம் வயது திருமணம் தொடர்பான புகார்களில் 75 திருமணங்கள் நடைபெற்றதாகவும், 25 திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரியவருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டில் 1054 இளம் வயது திருமணங்களும், 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 1,640 திருமணங்களும் நடைபெற்றுள்ளன. அரியலூரில் 2023-ஆம் ஆண்டு இரண்டாக இருந்த இளம் வயது திருமணம், 2024-ஆம் ஆண்டில் 31-ஆக அதிகரித்துள்ளது. இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் முதல் 10 மாவட்டங்களில் இடங்களை மேற்கு மாவட்டங்கள் பிடித்துள்ளன.

அதன்படி, 2023-ஆம் ஆண்டு ஈரோட் டில் 150 இளம் வயது திருமணங்களும், கோவையில் 90-ம், நாமக்கலில் 74-ம், திருப்பூரில் 66-ம், தருமபுரியில் 58-ம், சேலத்தில் 51-ம் பதிவாகியுள்ளன. 2024 ஜனவரி முதல் நவம்பர் வரையில் கோவையில் இளம் வயது திருமணம் தொடர்பாக சமூக நலத் துறைக்கு வந்த 125 புகார்களில் 35 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்துவிட்ட 90 திருமணங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே காலகட்டத்தில் ஈரோட்டில் பதிவான 186 புகார்களில் 36 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தருமபுரி, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் முறையே 157, 165, 131 இளம் வயது திருமணங்கள் சார்ந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இளம் வயது திருமண சட்டத்தை திறம்படச் செயல்படுத்த தமிழகத்தில் மாவட்ட சமூக நல அலுவலர்கள் இளம் வயது திருமண தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இளவயது திருமணம் தொடர்பாகப் பெறப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், இளம் வயது திருமணத்தை ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்க சட்டப்படி தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். ஆனால், இந்த அலுவலருக்கு வேறு பல பணிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புறங்களில் நடைபெறும் இளம் வயது திருமணங்களைத் தடுக்க ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

20 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட கல்வி இல்லாத பெண்களில் 77% பேர் 2005 - 06-ஆம் ஆண்டில் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி பெற்றவர்கள் சார்ந்து இந்த எண்ணிக்கை முறையே 62% மற்றும் 27%-ஆக உள்ளது.

பொம்மலாட்டம், வீதி நாடகம், பேரணி, கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இளம் வயது திருமணத்தின் தீய பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.

பள்ளி இடைநிற்றல்தான் பல நேரங்களில் இளம் வயது திருமணத்துக்குக் காரணமாக அமைகிறது. கல்வித் துறை, சமூக நலத் துறை, காவல்துறை ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து இதுசார்ந்து நடவடிக்கைகள் எடுப்பது நல்ல பலன்களைத் தரும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்தே பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பு நடைபெறும் இளம் வயது திருமணங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மகளிர் உதவி எண் 181, அவசர உதவி எண் 100 ஆகியவற்றுக்கு இது தொடர்பாக புகார் வரும்போது அதிகாரிகள் இளம் வயது திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

பெண்களின் உடல்நலத்திலும், மனநலனிலும் அதிக அளவிலான எதிர்மறையான தாக்கங்களை இளம் வயது திருமணங்கள் ஏற்படுத்துகின்றன. இதை பெண்கள் நன்கு புரிந்துகொள்வது நல்லது. நாட்டில் அனைத்துப் பெண்களும் இது சார்ந்து மேலும் விழிப்புணர்வைப் பெறுவது அவசர அவசியமாகும்.

Monday, March 9, 2026

திண்ணிய நெஞ்சம் வேண்டும்!



திண்ணிய நெஞ்சம் வேண்டும்!

DINAMANI

தகவல்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணையம் வாரி வழங்கினாலும், மனிதனின் மனநலனையும் வாழ்வின் தரத்தையும் பாதுகாப்பதே அறிவியலின் உண்மையான சாதனையாக இருக்க முடியும்.


Updated On :9 மார்ச் 2026, 6:10 am


இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க உயிரி இயந்திரமாக மனித மூளை இயங்குகிறது. நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் கைப்பேசிகள், நமது சிந்தனையின் புற விரிவாக்கமாக மாறி, உடலின் ஓர் உறுப்பைப் போலவே நம்மோடு இணைந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பப் பிணைப்பை ஒரு பரிணாம வளர்ச்சி என நாம் பெருமிதம் கொள்கிறோம். மனதைத் தொழில்நுட்பத்தோடு ஒருமைப்படுத்திக் கொண்டால், வாழ்வின் செயல்பாடுகளை எளிதாக்க முடியும் என நம்புகிறோம்.

கடந்த காலங்களில், ஓர் அவசரத் தகவலைப் பகிர பல மைல்கள் கடந்து தந்தி அலுவலகங்களையே சார்ந்திருக்கும் சூழல் இருந்தது. ஆனால், இன்று, கைப்பேசி தொழில்நுட்பம் உலகையே நமது உள்ளங்கைக்குள் அடக்கியுள்ளது. ஒரு காலத்தில் முறையான கல்வி கற்க வசதியின்றித் தவித்த மாணவர்களும், இன்று கைப்பேசி வாயிலாக உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழக நூலகங்களை ஒரு சிறு சொடுக்கில்' அணுக முடிகிறது. இத்தகைய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் மனிதவளத்தை மேலும் வலுப்படுத்த முடியும்.

இந்தியாவின் 'மின்னணுப் பொருளாதாரம் 2023-ஆம் நிதியாண்டில் இருந்த 11.74 சதவீதத்திலிருந்து, 2025-இல் 13.42 சதவீதமாக உயர்ந்து தேசத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளது. இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 96.96 கோடியைத் தொட்டுள்ளதுடன், சுமார் 85.5 சதவீத வீடுகளில் அறிதிறன்பேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இத்தகைய மின்னணு மாற்றம் ஒருபுறம் பொருளாதார வளர்ச்சியை அளித்தாலும், மறுபுறம் 'மின்னணு அடிமைத்தனம்' (டிஜிட்டல் அடிக்ஷன்) எனும் உளவியல் சிக்கலையும் உருவாக்கியுள்ளது. விருப்பு-வெறுப்புகளைப் பகிர்வதற்கு இந்தச் சிறு திரையையே சார்ந்து இருக்கும்போது, மனிதச் சிந்தனை சிறைபிடிக்கப்படவும் நேர மேலாண்மை பாதிப்படையவும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள். இதனால் உற்பத்தித் திறன் பாதிப்பு, தனிமனித உறவுகளில் விரிசல் போன்றவை எழாமல் காக்க வேண்டுமென பொருளாதார ஆய்வு கள் உணர்ந்துகின்றன.

மின்னணுச் சூழலுக்கு ஏற்ப மனித மூளை தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது என்ற வாதங்கள் இருந்தாலும், வெறும் தகவல்களைச் சேகரிப்பதற்கும் உண்மையான அறிவைப் பெறுவதற்கும் இடையே அதிக வேறுபாடு உண்டு. தகவல்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணையம் வாரி வழங்கினாலும், மனிதனின் மனநலனையும் வாழ்வின் தரத்தையும் பாதுகாப்பதே அறிவியலின் உண்மையான சாதனையாக இருக்க முடியும்.

அறிதிறன்பேசிகளின் தொடர் பயன்பாடு நமது மூளையின் முன்பக்க மேலோடு' (ப்ரீபிரண்டல் கார்டெக்ஸ்) பகுதியில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனிதனின் உயரிய அடையாளமான மன ஆற்றலே அவனது பெரும் சொத்து எனலாம். ஐம்புலன்களால் உணரப்படுவதை உள்வாங்கிச் சிந்திக்கும் மன சக்தி முழுவதையும், நிகழ்காலத் தன்னுணர்வோடு நிலைபெறச் செய்வதே ஒரு மனிதன் அடையக்கூடிய மிகப் பெரும் வெற்றியாகும்.

மனம் புதிய ஈர்ப்புகளைக் காணும்போது உந்துதல் ஏற்படுவது இயல்பே. அங்கே எழும் சிந்தனைப் பாதை நோக்கமின்றி, தெளிவற்று இருந்தால் மன ஆற்றல் சிதைவதையும், மனிதனின் 'சீவகாந்தக் கவசம் குறைவதையும் அங்கே உணர முடியும். மனதின் இந்த ஆற்றல் இழப்பு, பின்னர் உயிர் மற்றும் உடல் ஆற்றல் இழப்பாகச் சங்கிலித் தொடர்போலத் தொடரச் செய்கிறது.

நில்லாத, கட்டுப்படுத்த இயலாத மனவோட்டம் இறுதியில் ஒருவித வெறுமையை உருவாக்குகிறது. இத்தகைய மன ஆற்றலைப் பேராற்றலாக மாற்றி அகம் நோக்கிப் பயணிக்கச் செய்தால் மட்டுமே, 'நான் யார்?" என்ற உயர்ந்த நிலையை உணர்ந்து மனிதன் அமைதி பெற முடியும்.

அறிவு என்னும் வாளைக் கொண்டு, நம் ஆற்றலைச் சிதைக்கும் தேவையற்ற ஈர்ப்புகளைத் தடுத்தால், நமக்குள் இருக்கும் பேராற்றலை உணர முடியும் என்பதை,

மனத்திடைநின்ற மதிவா ளுருவ
புனத்திடை நஞ்சையும் போக மறித்தாற்

என திருமூலர் திருமந்திரத்தில் (1638) குறிப்பிடுகிறார்.


அகத்தில் நிலைபெறும் மனமே என்றும் நிறைவு காணும்; புறப்பொருட்களில் சுழலும் மனம் வெறுமையையே எஞ்சச் செய்யும். இத்தகைய உறுதியான மனநிலையின் அவசியத்தையே மகாகவி பாரதியார் 'திண்ணிய நெஞ்சம் வேண்டும்' என்கிறார்

கண்ணுக்குப் புலனாகாத மனதின் செயல்பாட்டை அறிவியலோடு ஒப்பிட்டும் புரிந்துகொள்ளலாம். ஒரு கட்டடத்தை மின்னல், மின்கசிவுப் பாதிப்பிலிருந்து காக்க புவித்தொடுப்பு (எர்த்திங்) முறை அவசியமாகிறது. அதுபோலவே, மனித மனதுக்கும் உள்ளார்ந்த பிணைப்பு (இன்னர் எர்த்திங்) எனும் மன ஆற்றல் மிக முக்கியம். மின்சுற்றில் ஆபத்தான மின்னோட்டத்தைப் பூமிக்குள் அனுப்பிச் சேதத்தைத் தவிர்ப்பது போல, மன அழுத்தம் அல்லது குழப்பம் சூழும் போது, நமது உள்ளார்ந்த ஆற்றல் நம்மைச் சமநிலைக்குக் கொண்டுவர உதவுகிறது.

தேசிய நலன் சார்ந்த மனிதவளக் குறியீடுகளில் ஒன்றாக மன ஆற்றல் பாதுகாப்பையும் கருத வேண்டும். இணையத்தில் மூழ்கச் செய்யும் 'ஸ்க்ரோலிங் மற்றும் ஆட்டோ பிளே' போன்ற தொழில்நுட்பங்கள், உளவியல் ரீதியாகப் பயனாளர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, 'எண்மப் பெற்றோரியம்' (டிஜிட்டல் பேரன்டிங்) குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் ஆழமாக விதைக்க வேண்டும்.

சமூக ஊடகங்களின் வணிக நோக்கம் கொண்ட உளவியல் உத்திகளைக் கட்டுப் படுத்த, முறையான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும். பதின்ம பருவத்தினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற நாடுகள் சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளன. இந்தியாவிலும் இதுபோன்ற விழிப்புணர்வும் நெறிமுறைகளும் உருவாக வேண்டும். மன வளம்' கொண்ட மனிதனே அகத்தின் அமைதியையும் வாழ்வின் அழகையும் உணர முடியும். இதுவே அறிவின் படிக்கட்டுகளாக மாறி, மனித வளமாக உருமாற வழிவகுக்கும்.

Friday, February 27, 2026

இனி மாணவா்களுக்கு மத்தியில் நல்லகண்ணு! தானமாகும் உடல் பாடமாவது எப்படி?


இனி மாணவா்களுக்கு மத்தியில் நல்லகண்ணு! தானமாகும் உடல் பாடமாவது எப்படி?

நல்லகண்ணு உடல் எம்பிபிஎஸ் மாணவா்களுக்கு உடற்கூறியல் செயல்முறை வகுப்புகளை நடத்த பயன்படுத்தப்படவுள்ளது குறித்து..





Updated on:
27 பிப்ரவரி 2026, 2:48 am

சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) தானமாக வழங்கப்பட்ட முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணு உடல் எம்பிபிஎஸ் சேரும் மாணவா்களுக்கு உடற்கூறியல் செயல்முறை வகுப்புகளை நடத்த பயன்படுத்தப்படவுள்ளது.

தானமாகப் பெறப்படும் உடலை உடனே ஆராய்ச்சிக்கும், கல்விக்கும் பயன்படுத்த முடியாது. பல மாத கால பகுப்பாய்வும், பதப்படுத்தலும் அதற்கு அவசியம்.

இதுகுறித்து விளக்குகிறாா் சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறை இயக்குநா் டாக்டா் தீபா பென்ட்லி: உயிரிழந்தவா்களின் உடலைப் பாதுகாக்க வேண்டுமானால், ‘எம்பாமிங்’ எனப்படும் பதப்படுத்தும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக உடலானது கழுவி தூய்மைப்படுத்தப்படும்.

பின்னா், இடது காலில் சிறு துளையிட்டு தமனி (ஆா்ட்டரி) வழியாக 5 முதல் 10 லிட்டா் வரையிலான திரவம் தேவைக்கேற்ப உடலில் செலுத்தப்படும்.

ஃபாா்மால்டிஹைடு (40 சதவீதம்), கிளிசரின், போரிக் ஆசிட், சோடியம் குளோரைடு ஆகிய ரசாயனங்கள் கலந்த கரைசல்தான் அந்தத் திரவம். வழக்கமாக காய்ச்சலின்போது ரத்த நாளம் வழியாக திரவ மருந்துகள் செலுத்துவதைப் போன்ற நடைமுைான் இது. ஆனாலும், இறந்தவா்களின் உடலில் ரத்த ஓட்டம் இருக்காது. மேலும், தமனிக்குள் ரத்தம் ஆங்காங்கே உறைந்திருக்கும். இதனால், திரவம் எளிதாக உள்ளே செல்லாது. ‘எம்பாமிங் மெஷின்’ எனப்படும் உந்தித் தரும் கருவி மூலம் அதை உள்ளே செலுத்த வேண்டும்.

அனைத்து உறுப்புகளுக்கும் முறையாக அந்தத் திரவம் செல்கிா என்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்படும். இந்த நடைமுறைகள் நிறைவடைய அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகலாம்.

அவ்வாறு ‘எம்பாமிங்’ செய்யப்பட்ட உடலானது ஒரு வார காலம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். ஏதாவது ஓா் உறுப்பிலோ, பகுதியிலோ ‘எம்பாமிங்’ திரவம் குறைந்திருந்தால் அங்கு மட்டும் ஊசி வழியாகச் செலுத்தப்படும்.

அதன் பின்னா், பெரிய தொட்டியில் ‘ஃபாா்மாலின்’ ரசாயனம் 10 சதவீதம் கலந்த தண்ணீரை நிரப்பி அதில் அந்த உடலை ஊற வைக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்களாவது அந்த உடல் அந்த நீரில் மூழ்கிய நிலையில் இருத்தல் அவசியம்.

மாணவா்களின் கல்விக்காக.. : அதற்குப் பிறகே மாணவா்களின் கல்விக்காக அதைப் பயன்படுத்த முடியும். 10 மாணவா்களுக்கு ஓா் உடல் வீதம் சென்னை மருத்துவக் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு 25 உடல்கள் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

உடற்கூறியல் தொடா்பான அனைத்து விஷயங்களையும் அதில் கற்பிக்கிறோம். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் வீதம் திங்கள் முதல் வெள்ளி வரை 10 மணி நேரம் பதப்படுத்தப்பட்ட உடல்களைப் பயன்படுத்துவோம்.

ஒவ்வொரு நாளும் வகுப்புகள் நிறைவடைந்த பிறகு பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிா்ப்பு மருந்துகள், கிளிசரின் கொண்டு உடல் தூய்மைப்படுத்தப்படும்.

அதன் பின்னா், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் அந்த உடல்கள் ஃபாா்மாலின் தொட்டிக்குள் ஊற வைத்துப் பாதுகாக்கப்படும்.

எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழிமுறையில் உடலைப் பாதுகாக்கலாம் என்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவக் கல்விக்காக உடல்களை மாற்றுவது வழக்கம்.

அப்போது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த உடல்கள் தேசிய மருத்துவ ஆணைய வழிமுறைப்படி புதைக்கப்படும். ஆற்று மணலைப் பயன்படுத்தியும், வேறு சில மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றியும் உடல்கள் புதைக்கப்படும். அதற்கு அடுத்து 2 அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த இடத்தை தோண்டி எலும்புகளை மருத்துவக் கல்விக்காக சேகரிப்போம் என்றாா் அவா்.

நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் எண்ணற்ற உடல்கள் பாடமாகி இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது நல்லகண்ணும் இணைந்துள்ளாா். செயல் மட்டுமல்ல... இனி அவரது உடலும் பொதுவுடைமைதான்!.

Monday, February 23, 2026

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!



இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

மாணவர்கள் தம் கல்வித் திறனைச் சோதித்துக் கொள்ளும் தேர்வைப்போல மக்கள் தங்களைத் தாங்களே தேர்ந்து கொள்ளும் முறையே தேர்தல்.





Updated on:
23 பிப்ரவரி 2026, 3:19 am


ஜனநாயக நட்டின் மிகப்பெரிய திருவிழா தேர்தல்தான். நாடே சேர்ந்து கொண்டாடிக் களிக்கும் பெருவிழா. பாமரர்களுக்கும் தங்கள் உரிமையை உணர்த்துவதற்குக் கிடைத்த நல்வாய்ப்பு தேர்தல்.

மன்னராட்சிக் கொடுமைகளிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே காத்து ஆண்டுகொள்ளக் கண்டடைந்த அனைவருக்குமான பெருநுழைவாயில் தேர்தல்.

தேர்ச்சி இல்லாத ஆட்சி தீங்கிழைக்கும். இதற்கு சாட்சி பாண்டிய நெடுஞ்செழியனின் ஆட்சி. அதனால்தான் கோவலன் கொலைக்களப்பட நேர்ந்தது. எனவே வெகுண்ட கண்ணகி, தேரா மன்னா' என்று இகழ்ந்து சீறி மதுரையை எரித்தாள்.

மாணவர்கள் தம் கல்வித் திறனைச் சோதித்துக் கொள்ளும் தேர்வைப்போல மக்கள் தங்களைத் தாங்களே தேர்ந்து கொள்ளும் முறையே தேர்தல்.

ஆட்சி செய்யப்போகும் அமைச்சர்கள் யாவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களுள் ஒருவரே. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆட்சி சிறப்புக்குரியதாக இருந்தால் அப்பெருமையாவும் மக்களையே சேர்வதைப்போல், ஆட்சி குற்றமுடையதாயின் அப்பழியையும் மக்கள்தான் ஏற்க வேண்டும். ஏனென்றால், அந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்தவர்கள் மக்களே; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மக்களுள் ஒருவரே.

அரச மரபுகளின்படியும்கூட வாரிசு என்பதற்காக ஒருவரை அரசராக அத்தனை எளிதாய்ப் பட்டம் சூட்டிவிட முடியாது. அரசவைப் பிரதிநிதிகளின் ஒருமனதான ஆதரவை மட்டுமின்றி, குடிமக்களின் மனதைக் கொள்ளை கொண்ட கோமகனாகவும் அறிவுடையோனாகவும் இளவரசர் திகழ வேண்டும்.

ஒருகுடியில் பிறந்த பலருள்ளும், 'மூத்தவனை முதனிலைப்படுத்தாமல் அவர்களுள் அறிவுடையோன் எவனோ அவன் வழியிலேயே அரசு சிறப்படையும் என்று மன்னனைத் தேரும் முறை குறித்துச் சங்க இலக்கியம் காட்டுகிறது. இது அக்காலத்துத் தேர்தல் உத்தி.

"வாழ்வியல் புரியாது. சாதாரண மனிதனுக்குள்ள உலகறிவும் தனக்கில்லை என்ற மன அழுத்தத்தினாலேயே மனைவி, குழந்தையையும், அரண்மனை சுகபோக வாழ்வினையும், காத்திருந்த மணிமகுடத்தையும் ஒருசேரத் துறந்து சித்தார்த்தர் நள்ளிரவில் காட்டுக்குப் போக நேர்ந்தது.

நான்கு பிள்ளைகளில் முதல்வனான இராமனுக்கு முடிசூட்டத் தசரதர் நேரடியாகவே அறிவிப்புச் செய்தார் என்பார் வால்மீகி. ஆனால், தமிழ் மரபில் கம்பர் அதை ஜனநாயகப்படுத்துகிறார். அமைச்சர் நிறைந்த அவையிலே அவர்களின் ஒருமனதான முடிவோடுதான் இராமனுக்குப் பட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இது மக்களாட்சியின் மாண்பு. இந்தத் தேர்தல் உத்தியை மயில்முறை குலத்துரிமை' என்று நுட்பப்படுத்துவது ஆய்வுக்குரியது.

"எல்லாரும் இந்நாட்டின் மன்னர்கள் என்பதுதான் ஜனநாயகத்தின் வெற்றி. அந்த மன்னர்களுக்குத் தொண்டாற்ற வேண்டித்தான் பிரதிநிதிகளாகத் தங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி மன்னர்களுள் ஒருவரான வேட்பாளர் தனக்கு வாக்களிக்கும்படி வேண்டுகிறார்.

அந்நியப் பிடியில் அடிமைப்பட்டிருந்த அவலநிலை மாறி விடுதலைக்குப் பின்னர் ஒரு ஜனநாயக நாடு இத்தனை உயர்ந்திருக்கிறது என்றால், அது மக்களாட்சியின் வெற்றியேயாகும். வளரும் நாடுகளில் பிரச்னைகளும் சிக்கல்களும் பலவீனங்களும் மலிந்திருப்பது இயல்பு. கட்டற்ற சுதந்திரத்தின் வெளிப்பாடு இவை. கடுமையான சட்ட திட்டங்களைப் பயன்படுத்தாமல் மாண்புகளை மட்டுமே முன்னிறுத்தி உலக நலனை வளர்த்தெடுக்கும் பாங்கு மக்களாட்சிக்கே உண்டு. அதிலும் பழம் பெருமைமிக்க நமது பாரத தேசத்தின் தனிச் சிறப்பு. மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் சில ஒற்றுமை-வேற்றுமைகள் உண்டு. போர்களும் வெற்றிக்களிப்பும் அதிகார போகமும்தான் மன்னருக்கான பெருமையென சக்கரவர்த்திகள் கருதினர். புத்தர் முதலான உத்தமர்களால் அசோகனைப் போன்ற போர்வெறி மன்னர்கள் திருந்தினர்.

அரசவாழ்வை விடவும் உயர்ந்தது பொதுவாழ்வு. இவ்வுண்மையை இலக்கியங்களின்வழி எடுத்தியம்பும் திணைக்குப் பொதுவியல் எனப் பெயர். அதிகார வெறியிலோ, ஆடம்பர போகங்களிலோ ஆட்சியாளர்கள் மூழ்காமல் இருக்க அறங்கூறு அவையம், ஐம்பெருங்குழு, எண்பேராயம் உள்ளிட்ட அமைப்புகள் இருந்தன. மக்கள் நலனை, இயற்கைப் பேணலை, இலக்கிய வாழ்வை உணர்த்துவதற்குப் புலவர் பெருமக்கள் குழுவும் இருந்தது. மக்களோடு மக்களாய் இருந்து அறவழி காட்டிய வள்ளுவர். போன்ற தூய ஞானியர் இருந்தனர் என்பதையும் வரலாற்றின் வழியாக அறிகிறோம்.

அரசனைச் சுற்றிலும் புகழ்பாடும் கூட்டத்தை விடவும் குறைகாட்டும் கூட்டமும் பிழைகட்டும் குழுவும் இருந்தது. இடிப்பார்' என்று இவர்களை அறிமுகப்படுத்துகிறார் திருவள்ளுவர். அந்தப் பணியை இந்தக்காலத்தில் இதழ்கள் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

அதிகாரம் பரவலாக்கப்படுதலும் உரிமைகள் பொதுமைப்படுத்தப்படுதலும்தான் மக்களாட்சியின் மகத்தான வெற்றி. அதை அத்தனை எளிதில் அடைந்துவிட முடியாது. கடும் போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையில்தான் நிறைவேற்ற இயலும். அதுவரையிலும் இலக்கை நோக்கிப் பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த இடையறாத பயணத்தின் மைல்கல்லாக அமைவதே தேர்தல்.

பழங்காலந்தொட்டு அரசியலும் ஆட்சிமுறைகளும் உலகம் முழுவதும் தேர்தலையே அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கின்றன. ஏதென்ஸ் நகரில் வயது வந்தவர்கள் யாவரும், சட்டப்பேரவையில் சென்று வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். அவர்கள் வாக்களித்தலின் மதிப்பை நன்கு அறிந்திருந்தனர்; அடிமைகளுக்கும் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது.

ஞானபீடம் ஜெயகாந்தனிடம் ஒருமுறை நேர்காணலில், நீங்கள் தேர்தலில் வென்று அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வீர்கள்? என்று வினவியபோது, அவர், 'மன்றத்தை மரத்தடியில் கூட்டுவேன் என்றார். கிரேக்க நாட்டில் அந்தக் காலத்தில் சட்டப்பேரவை 'நைஸ்' என்னும் மலையடிவாரத்தில் அதிகாலையில் வெட்டவெளிகளில் கூடும். இன்றுபோலக் கட்டடத்துக்குள் கூடும் வழக்கம் அந்தக் காலத்தில் இல்லை. நம்முடைய பழைமையான ஊராட்சி மன்றக் கூட்டங்களும்கூட வெட்டவெளியிலும் ஆலமரத்தடிகளிலும்தான் நிகழ்ந்திருக்கின்றன. ஜனநாயகப் பொதுமையை இயற்கையாய் நிலைநாட்டும் இந்த மரபு, இன்றும் பல ஊர்களில் தொடர்கிறது.

மனித சமுதாயத்தில் அரசுகளின் தோற்றமே மகிழ்ச்சியைத் தரக்கூடியதல்ல. நல்லதைக் கருவாகத் தாங்கி அரசுகள் தோன்றவில்லை. நிலப் பிரபுத்துவமும் - தனியுடைமையும், உழைப்பும் - கூலியும் என்ற சமுதாய நெறிமுறை தோன்றிய பிறகு, உடைமைக்காரர்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக அரசைத் தோற்றுவித்து, அதிகாரங்களை வழங்கினர். அரசுகள் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை மக்களாட்சியிலும் கூட அரசுகள் உடைமை வர்க்கத்தைப் பாதுகாப்பதாகவே இயங்கி வருகின்றன. பின், காலப்போக்கில் அரசே ஓர் அசுர அமைப்பாகிவிட்டது. அரசுக்கு நிலம், கஜானா, படை என்றெல்லாம் அமைந்துவிட்டன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மக்களாட்சி முறையைத் தேர்ந்தெடுத்தோம்.

ஆனால், மன்னராட்சியின் இந்த குணங்கள் மாறாமல் மக்களாட்சியிலும் ஒட்டிக் கொண்டன. ஆனால், இவற்றின் தாக்கங்களால் கொடுங்கோன்மை அரசுகள் பெரும்பாலும் தோன்றவில்லை. இந்தியாவிலும், அதிலும் தமிழகத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும், சீனாவிலும் நல்ல அரசுகள் இருந்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டு அரசுகளில் பல அரசுகள் மக்கள் நல அரசுகளாகவே திகழ்ந்தன. அதனாலேயே அரசை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்த வரலாறு தமிழக வரலாற்றில் இல்லை என்பார் தவத் திரு குன்றக்குடி அடிகளார்.

ஐந்தாண்டு கால ஆட்சியைத் தங்கள் அதிகாரத்துக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்று எதேச்சதிகாரம் செய்வோரும் உண்டு. மாறாக, மக்களுக்குத் தொண்டு செய்யக் கிடைத்த பெரும்பேறு என்று தங்களின் உடைமைகளை மட்டுமின்றி உயிரையே துறந்தவர்களையும் நம் நாடு கண்டிருக்கிறது.

பழங்குடி மக்கள் வசித்த ஒரு தீவில் இரண்டு நண்பர்கள் வழிதவறிச் சிக்கிக் கொண்டார்கள். அந்த மக்களிடையே ஒரு வழக்கமுண்டு. தங்கள் தீவுக்குப் புதிதாக வருகிறவர்களை ஐந்தாண்டுகளுக்கு அரசராக அறிவித்து விடுவார்கள். இந்த நண்பர்களில் ஒருவரை முதலாவதாக அரசராக்கி விட்டார்கள். அங்கு மற்றொரு வழக்கமும் உண்டு. அதாவது ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் அருகிலே இருக்கும் மற்றொரு தீவில் அந்த அரசரை விட்டு விடுவார்கள். அங்குள்ள கொடிய விலங்குகள் பலவும் அவரைக் கொன்று விடும். இதைத் தெரிந்து கொள்ளும் இந்தத் திடீர் அரசர்கள், 'நம் ஆயுள் காலம் ஐந்தாண்டுகள்தானே என்று தங்கள் விருப்பம்போல ஆட்சிசெய்து குடி, கும்மாளக் கேளிக்கைகளில் மூழ்கித் திளைத்து முடிவில் அத்தீவில் சென்று இறப்பர்.

இரண்டு நண்பர்களில் முதலாமானவரும் அப்படியே இருந்து முடிவில் அத்தீவுக்குப் போகிறபோது தன்னுடைய நண்பனி டம், நீயும் அடுத்த ஐந்து ஆண்டுகள் களிப்போடு வாழ்ந்து முடித்துக்கொள் என்று வாழ்த்திச் சென்றார். இவரும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தார். என்னென்னவோ புதிய திட்டங்கள் அந்தத் தீவில் தென்பட்டன. தீவே முழுமையாக மாறிவிட்டது. ஐந்தாண்டுகள் முடிகிறபோது அத்தீவுவாசிகள் மற்றைய மன்னரைப் போல இவர் இல்லாமல் இத்தீவுக்கு நிறைய நன்மைகளைச் செய்திருக்கிறாரே என்று வருத்தப்பட்டனர். ஆனால், என்ன செய்ய? தீவின் ஒழுங்குக்குக்கட்டுப்பட்டாக வேண்டுமே. ஆட்ட பாட்டங்களோடு அடுத்த தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே சென்ற தீவுவாசிகளுக்கு பேரதிர்ச்சி. கொடிய விலங்குகள் நிறைந்திருந்த அந்தப் பகுதி இப்போது மாடமாளிகைகள், கூட கோபுரங்களோடு ஒரு புதிய நகராகத் திகழ்ந்தது. அரசர் சிரித்தார். ஐந்து ஆண்டுகளில் இதுவரை செய்த பணிகளிலேயே இதுதான் தலைசிறந்த பணி. நான் உங்களுக்காக ஒரு புதிய நகரத்தை உருவாக்கியிருக்கிறேன். இனிமேல் நான் மரணிக்கத் தயார். நீங்கள் விரும்பியவாறு செய்யுங்கள்' என்று பணிந்து நின்றார். அத்தீவுவாசிகள் என்ன செய்திருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்; நம் தேர்தல் திருவிழாவும் கூட அப்படிப்பட்டதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter



Friday, February 20, 2026

இசையால் வசப்படுத்தலாம்!

DINAMANI

இசையால் வசப்படுத்தலாம்!

பல நாடுகளில் ஆறாம் வகுப்பிலிருந்தும், சில நாடுகளில் ஆறு வயதிலிருந்தும் இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.



Updated on:
20 பிப்ரவரி 2026, 3:59 am

அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், சீனா, பின்லாந்து, டென்மார்க், ஹாலந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பள்ளி களில் இசைப் பயிற்சி கட்டாயம். பல நாடுகளில் ஆறாம் வகுப்பிலிருந்தும், சில நாடுகளில் ஆறு வயதிலிருந்தும் இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இசைக் கருவிகள் வாசிக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

பள்ளி அளவிலேயே இசைப் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியம் என்ன, இசை பயில்வதால் மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் யாவை என்ற கேள்விகள் எழும். மாணவர்களின் திறமையை வெளிக்கொணரவும், சரியான வழியில் திருப்பிவிடவும் இசைப் பயிற்சி உதவும். அவர்களின் கவனக் குவிப்பை அதிகரிக்கும்; புலன்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படச் செய்யும்.

இன்றைய மாணவர்களுக்கு கல்வி பெரும் சவாலாக உள்ளது. வீட்டுப் பாடங்கள், தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்காக ஆயத்தப்படுத்துதல் என தொடர்ச்சியாக பல சவால்கள் முன்நிற்கின்றன. இருப்பினும், பள்ளியில் ஒவ்வோர் நாளும் 45 நிமிஷங்கள் இசைப் பயிற்சிக்காக ஒதுக்குவது, அவர்களுக்கு மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபெற உதவும். இசைப் பயிற்சி பெறுபவர்களின் மனதை இலகுவாக ஆக்கும் வல்லமை இசைக்கு உண்டு. எனவே, அதைக் கற்பவர்கள் தெளிவான மன நிலையில் செயல்படுவார்கள். மாணவர்களின் நேரம், தரமான வழியில் செலவிடப்படும்; கைப்பேசி போன்றவை ஏற்படுத்தும் தீய தாக்கங்கள் கணிசமாகக் குறையும். சிறார் குற்றங்களும் குறையும்.

ஏராளமான பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையா என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆனால், இசைப் பயிற்சி "திறமை மடைமாற்றும்' ஆற்றலை வெளிப்படுத்தும். அதன்

மூலம், மாணவர்களின் படைப்பாற்றல் மட்டுமின்றி, மொழி மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்பதற்கான அவசியமான பகுப்பாய்வு திறனும் மேம்படும். அவர்களை பல்துறைகளில் பரிணமிக்கச் செய்யும். இந்தத் தகவலை பள்ளிக்கூட ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர். இசை, நாட்டியம் கற்கும் மாணவர்கள், அவற்றில் மட்டுமின்றி, தங்கள் பாடங்களையும் நன்கு கற்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

குழுவாக வாசிக்க அல்லது பாடுவதற்கு கற்பிக்கப்படும் மாணவர்கள் ஒத்திசைவு பயிற்சி பெறுகிறனர். அதன்மூலம் ஒழுக்கம்}கட்டுப்பாடு, விதிகளுக்கு இயைந்து நடப்பது, குழுவாகச் செயல்படுவது மற்றும் குழுவினர் குறித்த புரிதல் ஆகியன மட்டுமின்றி, ஒருவரிடமிருந்து இன்னொருவர் கற்கும் திறன் வளர்ச்சியும் ஏற்படு

கிறது. விடாமுயற்சிக்கும் வித்திடுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இசைப் பயிற்சி என்பது மாணவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.

ஏதோ ஆறேழு ஆண்டுகள் மட்டுமே மாணவர்களுடன் பயணிக்கும் விஷயமல்ல இசை. மாறாக, வாழ்நாள் முழுமைக்கும் துணையாக வருவது. கல்விச் சாலையைக் கடந்து, அவரது பணியிடத்தில் செயல்திறனை அதிகரிக்கும். காரணம், இசைப் பயிற்சி தனி மனிதனுக்கு அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகிய இரு பெரும் குணங்களை ஏற்படுத்தும்.

தியானம் செய்வதற்கு ஈடான பலனை இசைப் பயிற்சி ஏற்படுத்தும்; இதனால், சீரான ரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு ஆகியன உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். இல்லத்தில் அமைதி மட்டுமின்றி, அண்டை அயலாருடன் இணக்கம், நல்லுறவு ஆகியவற்றை ஏற்படுத்தும். தனி மனிதனுக்கு மட்டுமின்றி சமூக வளர்ச்சிக்கும் வழிகோலும்.ஏனெனில், இசை என்பது ஜாதி, மத, இன,நிற வர்க்க பேதங்கள் கடந்த உலக மொழியாகும்.

தமிழ் மக்களுக்கு அந்நியமானது அல்ல இசை. நம் தமிழோடு கலந்த ஒன்று; 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல இசை நூல்கள் நம்மிடம் இருந்தன. முத்தமிழின் ஒரு பகுதியாக இசை இருந்தது. அந்த வகையில், வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரையில் தமிழர்களுடன் இயைந்தது இசை.

கிராமப் புறங்களில் தற்போது வழக்கத்தில் இல்லையென்றாலும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வயலில் ஏற்றம் இறைக்கும்போதும், நாற்று நடும் போதும், களை எடுக்கும் போதும் அதில் ஈடுபடுவோர் நாட்டுப்புறப் பாடல்

களைப் பாடுவது உண்டு. இறைவனைப் பாடி தொழுது பரவசம் அடைந்தனர் நம் முன்னோர். ஆயினும், எப்படி இசை நமக்கு தற்போது அந்நியமானது? என்பது தெரியவில்லை.

இசை பரவலாக்கப்பட வேண்டும்; பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். பொருளாதாரம்} குடும்பச் சூழல் போன்றவை இசைப் பயிற்சிக்குத் தடையாக இருக்கக் கூடாது.

இசையைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு முன்பாக, அதை மாணவர்களுக்கு கற்பிக்க தரமான ஆசிரியர்களை போதிய எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். தற்போது, இத்தகைய ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, இசைக் கல்லூரிகள் இசை ஆசிரியர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும். அரசு ஊக்கம் தந்தால், இசைக் கல்லூரிகளில் ஏராளமானோர் சேர்ந்து பயின்று, மாணவர்களுக்கு கற்பிக்க முன்வருவர்.

இசையை பள்ளிகளில் பாடத்திட்டத்தில் இணைப்பது என்பது, நிச்சயம் நம்மை அடுத்தகட்டத்துக்கு கொண்டு

செல்லும். இது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டால், போதிய கால இடைவெளியில் சரியான திட்டமிடலுடன் சில ஆண்டுகளில் பள்ளிகளில் இசைப் பயிற்சியை நடைமுறைப்படுத்த முடியும்.

Tuesday, February 17, 2026

பணிச்சுமையில் பயிற்சி மருத்துவர்கள்

பணிச்சுமையில் பயிற்சி மருத்துவர்கள்

DINAMANI 17.02.2026

ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 120-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பணிச்சுமை, மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.




Updated on:
14 பிப்ரவரி 2026, 4:14 am

பணம் செலுத்தினால்தான் சிகிச்சையை ஆரம்பிப்பீர்களா? என பிரபல தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், நோயாளியின் உறவினர் எழுப்பிய கேள்வி, அங்கே நின்றிருந்த பயிற்சி மருத்துவரைத் துளைத்துக் கொண்டிருந்தது.

நிர்வாகத்தின் மீது காட்ட வேண்டிய கோபத்தை, பயிற்சி மருத்துவர் மீது திருப்புவது வேதனையானது. ஆனாலும், அந்தப் பயிற்சி மருத்துவர் பொறுமையாக பதில் அளித்துவிட்டு, மற்றொரு நோயாளியைப் பார்க்கச் சென்று விட்டார். நான்கரை ஆண்டுகால படிப்பு, ஓராண்டு கட்டாயப் பயிற்சி என ஐந்தரை ஆண்டுகளை முடித்துவிட்டு சேவையாற்ற வரும் இவர்களுக்கு 8 மணி நேர பணிக்கு தனியார் மருத்துவமனைகள் தருவதோ சொற்ப ஊதியம்தான். இந்தச் சூழல்நிலையில், மருத்துவப் படிப்பு மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்ததுமே, நீட் பயிற்சி மையங்களில் மாணவர்கள் பலரும் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களின் விருப்பம், திறமை என்ன என்பது குறித்து சிந்திக்காமல், சமூகத்தில் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் காட்டுவதற்காகவே, மருத்துவராக்க வேண்டும் என்ற அழுத்தத்தை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கிறார்கள்.

ஒரே வகுப்பறையில் படித்த இரண்டு நண்பர்களில், ஒருவர் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து, 22 வயதில் படிப்பை முடித்து முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்கிறார். அவருக்கு தொடக்கத்திலேயே நல்ல ஊதியம் கிடைக்கிறது.

ஆனால், அவருடன் படித்து, மருத்துவக் கனவுடன் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொண்ட மற்றொரு மாணவரின் நிலையோ தலைகீழ். எம்பிபிஎஸ் முடித்து, கட்டாயப் பயிற்சி முடித்து, மீண்டும் முதுநிலை நுழைவுத் தேர்வுக்குப் படித்து, ஒரு சிறப்பு மருத்துவராக வெளியே வரும்போது அவருக்கு வயது 30-ஐ தொடுகிறது.

தனது பள்ளி நண்பர் வீடு, கார் என வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்குச் சென்றிருக்கும் அதே வேளையில், 30 வயதைக் கடந்த இந்த மருத்துவர், தனது வாழ்க்கையை அப்போதுதான் தொடங்குகிறார்.

அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர், படித்து முடிக்க ரூ. 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகிறது. 2024-25-ஆம் கல்வியாண்டின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் சுமார் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இவ்வளவு பெரிய போட்டிக்களத்தில் வெற்றி பெற்று, கோடிகளில் செலவு செய்து படித்த மருத்துவருக்கு, கார்ப்பரேட் மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் தொடக்கநிலை ஊதியம் மாதம் ரூ. 35,000 முதல் ரூ.45,000 வரை மட்டுமே. வங்கிக் கணக்கின்படி பார்த்தால், கல்விக் கடனுக்கு மாதம் 45,000 ரூபாய் தவணை செலுத்த வேண்டிய நிலையில், 30,000 ரூபாய் ஊதியத்தை வைத்துக் கொண்டு இவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சலும், சமூகப் பொருளாதார அழுத்தமும் விவரிக்க இயலாதது. ஏராளமாக செலவு செய்து எம்பிபிஎஸ் முடித்தாலும், முதுநிலை மருத்துவப் படிப்பு இல்லாவிடில் அவர்கள் ஒரு முழுமையான மருத்துவராக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சாதாரண காய்ச்சலுக்குக்கூட சிறப்பு மருத்துவர்களை நாடும் போக்கு உள்ளது.

இதனால், எம்பிபிஎஸ் முடித்தவுடன் முதுநிலை மேற்படிப்பு என்னும் அடுத்தகட்ட போட்டிக்குள் மருத்துவ மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 120-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பணிச்சுமை, மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் குறைவு என்பதும், தமிழக அரசு பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை ஆறுதல் அளிக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மருத்துவர்கள் படித்து முடித்து வருகின்றனர். அரசு மருத்துவர் பணியிடங்கள் போதிய அளவில் நிரப்பப்படாததால், 90 சதவீத மருத்துவர்கள் கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களில் பணிக்குச் சேர வேண்டியுள்ளது. சொந்தமாக கிளினிக் வைக்கலாம் என்றால், அதற்கு முதலீடு தேவைப் படுகிறது.

ஒரு பொறியாளருக்கோ, ஒரு திறன்சார் தொழிலாளிக்கோ வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தைப் போல, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் அல்லது சிறு நகரங்களில் கிளினிக் அமைக்க விரும்பும் இளம் மருத்துவர்களுக்கு, பிணையில்லா கடன் மற்றும் வரிச் சலுகைகளை வழங்க வேண்டும்.

மருத்துவம் ஒரு சேவைதான்; அதைச் செய்பவரும் வாழ்வாதாரம் தேவைப்படும் ஒரு மனிதரே என்பதை உணர்வதுதான் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியத்துக்கான அடித்தளம். மருத்துவத் துறையில் வெற்றி பெற்ற மருத்துவர்கள் பலரும் உள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், மருத்துவக் கல்வி மீதான சமூகத்தின் கண்மூடித்தனமான மோகமும், பெற்றோரின் அழுத்தமும், வணிகமயமான கல்விச்சூழலும் மாற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


காட்சிப் பொருளாகும் கொண்டாட்டங்கள்!

DINAMANI KATTURAIGAL

காட்சிப் பொருளாகும் கொண்டாட்டங்கள்!

17.02.2026

முன்பெல்லாம் திருமண வீடுகள் என்றால், அங்கு மனிதர்களின் அன்யோன்யம் வாசலில் இருந்தே தொடங்கிவிடும். ஆனால் இன்று, ஒரு திருமண மண்டபத்துக்குள் நுழைந்தால் நாம் காண்பது உறவுகளின் நெருக்கத்தை அல்ல; மாறாக, நிழற்படக் கருவிகளின் ஒளிக்கற்றைகளைத் தேடி அலையும் மனிதர்களைத்தான்.


IANS



Updated on:
17 பிப்ரவரி 2026, 5:20 am

தமிழர் பண்பாட்டு வரலாற்றில் திருவிழாக்களும் இல்லச் சடங்குகளும் வெறும் களியாட்டங்கள் அல்ல; அவை சமூகப் படிநிலைகளில் சிதறிக் கிடக்கும் உறவுகளை ஒரு புள்ளியில் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத இழை. ஊர் கூடித் தேர் இழுப்பதும், பந்தி விசாரிப்புகளும் ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உரசிப் பார்க்கும் தருணங்கள். ஆனால், இன்றைய சமூக ஊடக யுகத்தில் கொண்டாட்டங்களின் ஆன்மா நசுக்கப்பட்டு, அவை வெறும் காட்சிப் பொருள்களாகவும், போலியான பாவனைகளாகவும் மாறி வருவது நம் காலத்தின் பண்பாட்டுத் துயரம்.

முன்பெல்லாம் திருமண வீடுகள் என்றால், அங்கு மனிதர்களின் அன்யோன்யம் வாசலில் இருந்தே தொடங்கிவிடும். ஆனால் இன்று, ஒரு திருமண மண்டபத்துக்குள் நுழைந்தால் நாம் காண்பது உறவுகளின் நெருக்கத்தை அல்ல; மாறாக, நிழற்படக் கருவிகளின் ஒளிக்கற்றைகளைத் தேடி அலையும் மனிதர்களைத்தான்.

நிச்சயதார்த்தம் முதல் வளைகாப்பு வரை அனைத்தும் இன்று ஒரு நாடக மேடைபோல மாற்றப்பட்டு விட்டன. மணமக்களின் அக உணர்வுகளைவிட, நிழற்படக் கலைஞரின் கோணங்களே முதன்மை பெறுகின்றன. தாலி கட்டும் புனிதமான அந்த விநாடியில்கூட, உற்றார் உறவினர்களின் வாஞ்சையான பார்வையைவிட, அறிதிறன்பேசிகளின் செயற்கை வெளிச்சமே அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது. இது உறவுகளின் சங்கமம் என்பதைவிட, பிம்பங்களின் சந்தை என்றே சொல்லத் தோன்றுகிறது.

இன்றைய கொண்டாட்டங்கள் வாழ்வதற்காக அல்ல; பதிவிடுவதற்காக மட்டுமே என்று மாறிவிட்டது. ஒரு மங்கல நிகழ்வுக்குச் செல்பவர்கள், அங்குள்ளவர்களிடம் நலம் விசாரிப்பதைக் காட்டிலும், அங்குள்ள அலங்காரங்களையும் உணவுகளையும் சமூக ஊடகங்களிலும், தங்கள் வாட்ஸ் } ஆப்பிலும் நிலைத்தகவலாக பதிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மெழுகுவர்த்தி அணைக்கப்படும்போது, அங்கிருப்பவர்கள் பாடும் வாழ்த்துப் பாடல் உண்மையான மகிழ்ச்சியில் ஊற்றெடுப்பதில்லை. அது காணொலியில் சரியாகப் பதியப்பட வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் ஒரு போலி ஒத்திகையாகவே இருக்கிறது. ஒளிப்படக் கருவி அணைக்கப்பட்ட அடுத்த விநாடியே, அந்த அறையில் மெüனம் குடியேறுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் பதிவுக்கு எத்தனை பாராட்டுகளும், விருப்பக் குறியீடுகளும் கிடைத்தன என்று எண்ணத் தொடங்கிவிடுகின்றனர். இது கொண்டாட்டத்தின் நேரடி அனுபவத்தை முற்றிலுமாகச் சிதைத்து விடுகிறது.

பந்தி விசாரிப்பு என்பது தமிழ்ப் பண்பாட்டின் ஆகச்சிறந்த அடையாளம். பரிமாறுபவரின் அன்பும், உண்பவரின் திருப்தியும் அங்கு உரையாடல்களாக மாறும். ஆனால் இன்று, இலை போடப்பட்டவுடன் கைகள் முதலில் அறிதிறன் பேசியைத்தான் தேடுகின்றன. அந்த உணவின் சுவையை நாவால் அறியும் முன்பே, அகிலம் அறியச் செய்கிறார்கள்.

முன்பெல்லாம் உணவின் தரமும் ருசியும் பேசப்படும்; இன்று அந்த உணவைப் படம் பிடித்த கோணம் பேசப்படுகிறது. பந்தியில் அருகருகே அமர்ந்திருப்பவர்களிடம் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொள்ளக்கூட நேரமில்லாமல், கண்ணுக்குத் தெரியாத இணைய நண்பர்களுக்குப் பதில் சொல்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். இது பந்தி கலாசாரத்தின் மற்றொரு கோணமாக மாறிவிட்டது.

கிராமத்து திருவிழாக்களில் ஜாதி, மத பேதமின்றி மக்கள் ஒன்றுகூடிய மந்தை கலாசாரம், இன்று வாட்ஸ்}ஆப் குழு கலாசாரமாகச் சுருங்கிவிட்டது. ஊர்த் திருவிழாக்களில்கூட, முன்னின்று வேலை செய்பவர்களைவிட, தற்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். பாரம்பரியக் கலைகள் அவற்றின் கலைத் தன்மைக்காக ரசிக்கப்படாமல், இணையப் பக்கங்களை அலங்கரிக்கும் "பின்னணி இசை'யாக மாற்றப்படுவது பண்பாட்டுச் சிதைவின் உச்சம்.

கொண்டாட்டங்கள் என்பவை ஒருவருக்கொருவர் அன்புடன் நலன் விசாரித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் களம். ஆனால், இன்று ஒரு துக்க வீட்டில்கூட கைப்பேசியில் படம் பிடிப்பவர்களைக் காண முடிகிறது. உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்த கண்ணீரும், புன்னகையும் இன்று வெறும் குறியீடுகளின் கூடாரங்களாகிவிட்டன.

உறவினர்களுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த காலங்கள்போய், இப்போது படங்களை மட்டும் அனுப்புங்கள், அப்புறம் பேசலாம் என்று சொல்லும் இயந்திரத்தனமான மனிதர்களாக நாம் மாறிவிட்டோம்.

இந்தத் தொடர் ஓட்டத்தில், அடுத்த தலைமுறைக்கு உறவுகளின் பெயரோ அல்லது அவற்றின் ஆழமோ தெரியாமல் போகும் அபாயம் உள்ளது.

இந்த மாற்றத்துக்குப் பின்னால் ஓர் ஆபத்தான உளவியல் ஒளிந்திருக்கிறது. "தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்பதைவிட "தான் மகிழ்ச்சியாக இருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்வதில்' மனிதர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மற்றவர்களின் அங்கீகாரத்துக்காக வாழத் தொடங்குவது ஒரு சமூகத்தின் ஆன்ம பலத்தைக் குறைத்துவிடும்.

நிஜமான அன்யோன்யம் குறைந்து, மேலோட்டமான தொடர்புகள் அதிகரிப்பது மனிதர்களைத் தனிமைக்குள் தள்ளுகிறது.

தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வை எளிதாக்க வேண்டுமே தவிர, நம் உணர்வுகளை ஆக்கிரமிக்கக் கூடாது. நிழற்படங்கள் எடுப்பதைக் குறைத்துவிட்டு, மனிதர்களை நேரில் பார்ப்போம். திரைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பதை விடுத்து, நிஜ உலக உரையாடல்களில் ஈடுபடுவோம். குழந்தைகளுக்கு உறவுகளின் உன்னதத்தை வாழ்த்தும் விதமாக நம் நேரத்தைச் செலவிடுவோம்.

வெறும் பதிவுகளுக்காகக் கொண்டாடப்படும் எந்த ஒரு நிகழ்வும் வரலாற்றில் நிற்காது; நினைவுகளில் மட்டுமே வாழும் தருணங்கள் என்றும் அழியாது. ஆரவாரமான விளக்குகளும், நிழற்படக் கருவிகளும் அணைந்த பிறகு மிஞ்சப் போவது என்னவோ நாம் பகிர்ந்துகொண்ட அந்த அன்பின் உரையாடல்கள் மட்டும்தான். எனவே, பிம்பங்களைத் தேடுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் மனிதர்களைத் தேடத் தொடங்குவோம்.

அப்போதுதான் நம் பண்பாடு சிதையாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

NEWS TODAY 16.08.2026