Wednesday, September 7, 2016

ராயல் என்ஃபீல்டு பைக் விலை கிடுகிடு ஏற்றம்!


இந்தியாவில் தான் விற்பனை செய்யும் பைக்குகளின் விலையை, ஆகஸ்ட் மாத இறுதியில் கணிசமாக உயர்த்தியது. இந்த புதிய விலைகள், செப்டம்பர் மாதம் முதலாக அமலுக்கு வந்துள்ளன. ஆக ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 1955 முதலாக இந்தியாவில் பைக்குகளை விற்பனை செய்யும் ராயல் என்ஃபீல்டு, அதன் டிஸைனில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யாதது மைனஸ்தான் என்றாலும், இந்த பைக்குகளுக்கான ரசிகர் வட்டம் காலப்போக்கில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனுடன் பைக்குகளுக்கான வெயிட்டிங் பீரியட்டும் அதிகரித்து வருவதை இங்கு சொல்லியாக வேண்டும். ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் புதிய சென்னை ஆன் ரோடு விலைப்பட்டியல் பின்வருமாறு;

350சிசி பைக் மாடல்கள்:

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350: 1,23,228
ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரா 350: 1,38,992
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350: 1,47,833
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350: 1,59,401

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்: 1,76,035

500சிசி பைக் மாடல்கள்:

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500: 1,76,837
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500: 1,88,582
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500 டெஸர்ட் ஸ்டார்ம்: 1,91,688
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500 க்ரோம்: 2,00,371
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500: 2,02,007
ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி: 2,23,303

ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பர், ஆசிரியர்! #HappyTeachersDay


vikatan.com

நாம் அனைவரும் பள்ளி கல்லூரி படிப்பை கடந்து வந்தவர்கள். அங்கு நமக்கு கிடைத்த ஒரு அரிய புதையல் ஆசிரியர்கள். குழந்தைகள் தன் பள்ளி பருவத்திலும் சரி கல்லூரி பருவத்திலும் சரி பெற்றோரை விட ஆசிரியர்களிடமே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே ஒரு நல்ல புரிதல் இருக்க வேண்டும். நம் அனைவருடைய மனத்திலும் ஆசிரியர் என்றால் படம் நடத்தி குழந்தையை மாநிலத்தில் முதல் மாணவனாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. ஆனால், ஆசிரியர்களுக்கு அது தவிர பல விளக்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு ஆசிரியர் அப்படி இருந்தால் நம் மனம் அவரை ஏற்க மறுக்கிறது. ஏன் என்றால் மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி நாம் விரட்டப்படுகிறோம். ஆனால் இன்றளவிலும் பல ஆசிரியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்து வருகின்றனர். அப்படி ஆசிரியர் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? தெரிந்துகொல்லுங்கள்!

கற்பிப்பதில் ஆர்வம்!

இதுதான் முதல், கற்பிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஒருவர் அந்த ஆர்வத்தை தானகவே வெளிப்படுத்துவார். அப்படி ஆர்வம் உள்ளவரை நாம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அந்த ஆர்வம் இருக்கும் ஒருவர் தன் வகுப்பில் எளிதாக பாடத்தை புரியவைத்துவிடுவார். இந்த ஆர்வம் மிக்க ஆசிரியர் தன் மாணவர்களை மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி ஓடவிடாமல் அறிவு என்ற பாதைக்கு அழைத்துச்செல்வார்.

மாணவர்களிடம் அன்பு!

ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவர்களிடத்தில் அன்பு வைத்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி அன்பு செலுத்தும் ஆசிரியரிடத்தில் மாணவர்களும் அன்பு செலுத்தலாம். ஒவ்வொரு ஆசிரியரும் இந்த அன்பை உணர்ந்திருப்பீர்கள். இந்த விதமான ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தாலே மாணவர்கள் தனிப் புத்துணர்வு அடைவார்கள். அவர் எடுக்கும் பாடத்திலும் கவனம் செலுத்துவார்கள். ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் இதை அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம் என்றால் அது அன்பு தான்.


பாடத்துறையின் மீது காதல்!

தான் கற்பிக்கும் பாடத்துறையின் மீது காதல் கொண்ட ஒரு ஆசிரியர் அந்த பாடத்தை மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பிப்பார். தான் விரும்பும் பாடத்தை பிறர் விரும்பும் வகையில், ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு அளிப்பது மிகவும் அருமையாக இருக்கும். மாணவர்களுக்கும் அந்த பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்படும்.


பள்ளியின் பொருள்!

ஒரு ஆசிரியர் பள்ளி எதற்கானது என்பது அறிந்திருக்க வேண்டும். பள்ளி என்பது மாணவன் வந்து குறிப்பிட்ட மணிநேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளில் 100 மதிப்பெண்களுக்கான‌ பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்று கூறும் இடம் அல்ல. இது மாணவனின் வாழ்க்கையின் ஒரு பொன்னான காலம்தான் பள்ளி படிப்பு. இந்த பருவத்தில் அவன் வளர்ச்சி பெற்று, அவனுடைய அடையாளத்தை அறிந்து அவனுக்கு எது செய்தால் மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்து அதனை இலக்காக வைத்து ஓட வேண்டிய பருவம். ஆசிரியர்கள் அந்த மாணவனின் திரமையை கண்டறிய ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவன் திறமை வகுப்பறையில் வெளிப்படலாம் அல்லது விளையாட்டு மைதானத்தில் வெளிப்படலாம். இதை கண்டறிந்து அந்த மாணவனை ஊக்குவிக்கவேண்டியது ஆசிரியரின் கடமை.


விருப்பத்திற்கான மாற்றம்!

இது ஒரு சிறந்த ஆசிரியருக்கான ஒரு சிறந்த பன்பு. இந்த பன்பு உடைய ஆசிரியர் சிறப்பின் உச்சியில் உள்ளார் என்றே கூறலாம். ஆசிரியர் எப்போதும் தன் கற்ப்பித்தல் மூலமாக மாணவர்களை மற்றலாம் என்று எண்ணக்கூடாது. மாணவர்களுடன் கலந்துரையாடும்போது மாண‌வர்களுக்கு ஏற்ப தன்னை மற்றிக்கொள்ளவும் முன்வர வேண்டும். இது ஆசிரியர்களுக்கு ஒரு கடினமான காரியம் அல்ல. அப்படி தன்னை மற்றிக்கொள்ளும் மனம் ஆசிரியருக்கு வந்துவிட்டால் ஆசிரியர் மாணவரிடையே ஒரு சிறந்த உறவு உருவாகும்.


தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்!

எத்தனை வருடம் இந்த ஆசிரியர் பணியில் இருந்தாலும் நாம் கற்றது கை மண் அளவே. நாம் கற்க வேண்டியது ஏறாலம் என்பது ஒவ்வொரு ஆசிரியரும் அறிந்த ஒன்று. நமக்கு தெரிந்ததுடன் நிருத்தாமல் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றலுக்கு முடிவில்லை. ஆசிரியர்கள் தினம் தினம் புதுப்புது சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மேலும் அந்த சவால்களுக்கு திறமையுடன் உழைத்து நல்ல தீர்வுகளையும் கண்டறிய வேண்டும்

இது மட்டும் அல்ல.இன்னும் பல உள்ளன. கற்றல் என்பது ஒரு குழு முயற்சி. அங்கு ஆசிரியர் மாணவர் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அனைவருமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். மாணவர்களுடன் உரையாடும் போது ஆசிரியர் ஒரு சக மாணவனாக அந்த மாணவனுடன் பேசிப் பழகவேண்டும். பொறுப்பு, கருணை, ஒத்துழைப்பு, படைப்பு,அர்ப்பணிப்பு, உறுதி, முன்மாதிரி, ஈடுபாடு, உத்வேகம், பறந்தமனம் போன்றவையும் ஆசிரியரின் உயரிய பண்புகளே.

மாபெரும் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு மாபெரும் சக்தி ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களை பெருமைப்படுத்த தான் இந்த ஆசிரியர் தின விழா. அத்தகைய பெருமை மிக்க ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

முரளி.சு
மாணாவப் பத்திரிகையாளர்

மௌனராகம் 30: நினைவில் நகரும் கம்பளிப்பூச்சி!


கடந்த சில நாட்களாகவே ‘மெளன ராகம்’ திரைப்படத்தின் பின்னணி இசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்ன காரணமெனத் தெரியவில்லை. பிறகு ஒரு நண்பர் சொல்லித் தெரிந்தது. இது மெளன ராகத்தின் முப்பதாவது ஆண்டு! ஆம், 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியானது அத்திரைப்படம்.

ஏதேனும் ஒரு திரைப்படம் நம்மைக் கவர்கிறது என்றால், அதற்கு முக்கியக் காரணம் நாம் அந்தப் படத்துடன் நம்மைத் தொடர்புபடுத்திக்கொள்வதுதான். என் வாழ்க்கையில் நான் அப்படித் தொடர்புபடுத்திக்கொண்ட சில திரைப்படங்களில் முதன்மையானது, முக்கியமானது, மௌன ராகம்.

இந்தப் படம் வெளியான அடுத்த வருடம் அதே ஆகஸ்ட் மாதத்தில் நான் பிறந்தேன். என் பால்யத்தில், கார்த்திக் போடும் சண்டைக் காட்சிகளுக்காகத்தான் இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன். படத்தின் ஆகப் பெரும் பலம் கார்த்திக். “தான் நடித்தேன் என்று சொல்லிக்கொள்வதற்கு கார்த்திக்குக்கு இந்த ஒரு படம் போதும். ‘ஸீல் ஆஃப் யூத்’ என்பதை இந்தப் படத்தில் கார்த்திக் முழுமையாக வெளிப்படுத்தியிருப்பார். அதனை என்ஹான்ஸ் செய்ததில் இளையராஜாவின் இசைக்கும், பி.சி.ஸ்ரீராமின் கேமராவுக்கும் நிறைய பங்குண்டு” என்று என் நண்பர் ஒருவர் சொல்கிறார். இன்று வரையிலும் கார்த்திக் வரும் அந்தப் பகுதியைப் போல வேறு எந்தப் படத்திலும், எந்த இயக்குநரும் செய்யவில்லை. அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் கார்த்திக்கின் துள்ளல் வசனம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

கார்த்திக் அறிமுகமாகும் காட்சி இந்தப் படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று. அவர் தன் நண்பர்களுடன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் உள்ளே வரும்போது, கேமரா நிறைய ‘ஷேக்’ ஆகியிருக்கும். அந்தக் காட்சியைப் பார்த்தால், கார்த்திக் நம் எதிரில் வருவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

“கீழே ஒரு போர்வையை விரித்து அதில் பி.சி. ஸ்ரீராம் கேமராவுடன் படுத்துக்கொண்டார். நாங்கள் பின்னாலிருந்து அந்தப் போர்வையை இழுத்துக்கொண்டு செல்லச் செல்ல, கார்த்திக் அறிமுகமாகும் காட்சியை அவர் படமாக்கினார்” என்று திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதிய ‘கான்வர்சேஷன்ஸ் வித் மணி ரத்னம்’ புத்தகத்தில் தெரிவிக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் மணி ரத்னம்.

“திவ்யா என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து முதலில் ஒரு சிறுகதை எழுதினேன். அதுதான் பிறகு திரைப்படமாக மாறியது” என்று மணி அதே புத்தகத்தில் சொல்கிறார்.

அப்படியான ஒரு பெண்ணை என்னுடைய இருபதுகளில் கடந்தபோது தான், இந்தப் படம் சொல்லவரும் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொண்டு பார்த்தேன்.

இது போன்ற சில தனிப்பட்ட காரணங்கள் பலருக்கும் இருக்கலாம். அவை எல்லாவற்றையும் தாண்டி அந்தப் படம் நம்மை ஈர்த்ததற்கு, இன்றும் ஈர்ப்பதற்கு முக்கிய காரணம் அதன் படமாக்கம்.

ஏழை நாயகன், பணக்கார நாயகி. நாயகியின் திமிரை அடக்கி, தன்னிடம் காதலில் விழவைக்கும் நாயகன். நாயகியின் அப்பாவின் வில்லத்தனங் களை முறியடித்து, சில பாடல் காட்சிகள், ‘அபுஹாய்… அபுஹாய்’ எனப் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள், கொஞ்சம் சென்டிமென்ட் ஆகியவற்றுக்குப் பிறகு ‘சுபம்’ போடுகிற ரீதியிலான படங்கள் வந்துகொண்டிருந்த வேளையில், எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகரும் திரைக்கதையுடன் வந்த இத்திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்!

கதை மிகவும் எளிமையானது. தனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் நாயகிக்குத் திருமணம் நடக்கிறது. நாயகிக்கு ஒரு ‘ஃப்ளாஷ்பேக்’ காதல் உண்டு. அதைத் தனக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொண்டு, புதிய வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய சவால் நாயகிக்கு. அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதையின் அடிநாதம். அன்றைய காலத்தில் காதல் படங்களுக்கு கமல்ஹாசனிடம் ‘கால்ஷீட்’ கிடைக்கவில்லை என்றால், தயாரிப்பாளர்கள் அடுத்துத் தேர்வு செய்யும் நபர் மோகன். நாயகியை மையமாகக் கொண்ட இதுபோன்ற படத்தில் மோகன் நடித்தது உண்மையிலேயே ஆச்சர்யம்!

“சின்ன வயதிலிருந்து சுதந்திரமாக வளர்ந்த ஒரு பெண், பெற்றோர் பார்க்கிற ஆணை மணந்துகொள்வாள். முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் முதலிரவைக் கழிக்க நேரிடும். என் சிறுகதை அந்த முதலிரவைப் பற்றியதுதான். பின்னர் அந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்தபோது ரேவதி சொல்லும் 'நீங்க தொட்டாலே கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு' என்கிற வசனமும் அந்த முதலிரவைப் பற்றித்தான்” என்று பரத்வாஜ் ரங்கனுடனான உரையாடலில் தெரிவிக்கிறார் மணி.

திருமணமான முதல் நாளில் விவாகரத்தைப் பரிசாகக் கேட்கும் பெண், எந்த ஒரு கணவனுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியையே தருவார். நாயகியின் முன்பு கம்பளிப்பூச்சியாகக் குறுகிப்போய் நாயகன் கடக்கின்ற நாட்கள், வெளிப்படுத்த முடியாத அன்பு குறித்த கவித்துவமான சுயகழிவிரக்கம்!

பின்னர் ஒரு காட்சியில் “என்னைத் தொட்டா உனக்குத்தான் கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கும்” என்று ரேவதியிடம் அவர் கொடுக்கும் பதிலடியில் அத்தனை காலம் தான் பொதித்து வைத்திருந்த ஆற்றாமையை, ஒரே வரியில் மோகன் கடந்துவிடும்போது நமக்குள்ளும் ஒரு பனிப்பாறை உடைக்கப்பட்டுவிடுகிறது.

இந்தப் படம் வெளியானதற்குப் பிறகு ‘மிஸ்டர் சந்திரமெளலி’ எனும் வசனம் எவ்வளவு பிரபலமானதோ, அதே அளவுக்கு அந்த ‘கம்பளிப்பூச்சி’யும் பிரபலமாகிவிட்டது. ‘மெளன ராகம்’ திரைப்படத்தை முதன்முறை பார்ப்பவர்களுக்கு கார்த்திக்கையும் அவருடைய இளமைத் துள்ளலையும் பிடிக்கும். அதே படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிறவர்களுக்குக் கம்பளிப்பூச்சிதான் அதிகம் பிடிக்கும். ஏனென்றால், நம் எல்லோருக்குள்ளும் வெளிப்படுத்த முடியாத அன்பு, சுயகழிவிரக்கமாக நகர்ந்துகொண்டிருக்கிறது ஒரு கம்பளிப்பூச்சியைப் போல!

ரிலையன்ஸ் ஜியோ தொழில் ரகசியம் என்ன?


கடந்த வாரத்தின் ஹாட் டாபிக் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் தான். பங்குச்சந்தை, தொலை தொடர்புத் துறை என அனைத்து ஏரியாக்களிலும் ஜியோமயம்தான். இனி குரல் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை, ஒரு ஜிபி டேட்டா 50 ரூபாய் மட்டுமே, மாணவர்களுக்கு 25 சதவீத சலுகை, இந்த வருடம் முழுவதும் இலவசம், அடுத்த வருடம் வரை 15,000 ரூபாய்க்கு இலவசமாக செயலிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு புறம் எப்படி ரிலையன்ஸ் ஜியோ லாபம் ஈட்டும் என்ற சந்தேகமும் இருந்தன.

முகேஷ் அம்பானி இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில் பார்தி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. அதே சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கும் சரிந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இந்த பங்கு சரிந்ததற்கும் முதலீட்டாளர்களிடையே நிலவிய எப்போது லாபம் ஈட்டும் என்னும் சந்தேகம்தான். காரணம் கிட்டத்தட்ட ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவது கடினம்தான். ஆனால் நீண்ட காலத்தில் கணிசமாக லாபம் சம்பாதிக்க வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் மாதம் 150 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ கட்டணங்களை கூர்த்து கவனித்தால் இதில் உள்ள உத்தி தெரியும். குறைந்தபட்ச கட்டணம் 149 ரூபாய். இதில் 0.3 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும்.

குரல் வழி கட்டணம் இலவசமாக இருந்தால் கூட 0.3 ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் பெரும்பாலானவர் கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இதற்கு அடுத்த திட்டத் துக்கு செல்ல வேண்டும் என்றால் 499 ரூபாய்க்குத்தான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அந்த திட்டத்தில் கூட 4ஜிபி மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு ஜிபி 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றால் 4ஜிபி எப்படி 499 ரூபாய்?

மேலும் அதிக டேட்டா வேண்டும் என்றால் ரூ.1,000-க்கு மட்டுமே உங்களால் எடுக்க முடியும். இடையில் எந்த விலையும் கிடையாது. 1,000 ரூபாய்க்கு கூட 10 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதுபோல விலை நிர்ணயம் செய்வதில் நல்ல உத்தியை கடைபிடித்திருக்கிறது.

இன்னொரு விஷயம் இந்த அனைத்து திட்டங்களுமே 28 நாட்களுக்கானது. ஒரு வருடத்துக்கு 365 நாட்கள் என்னும் போது 13 முறை கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

எப்படி இலவசம்?

எப்படி குரல் அழைப்புகள் இலவச மாகக் கொடுக்க முடியும் என்பது அடுத்த கேள்வி? அனைத்து அழைப்புகளும் இணையம் வழியே செல்கிறது. உதார ணத்துக்கு வாட்ஸ்அப்-பில் நாம் எப் படி பேசுகிறோமோ அல்லது தகவல் அனுப்புகிறோமோ அதேபோல இங்கேயும். அதனால் குரல் அழைப்புகளை இலவசமாக கொடுக்கிறது.

ஐடிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தகவல்படி 8 கோடி வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வசம் இருப்பார்கள். ஒரு மாதத்துக்கு ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் கட்டணம் 180 ரூபாய் என்ற அளவில் இருக்கும். அடுத்த மூன்று வருடங்களில் பிரேக் ஈவன் ஆகும் என தெரிவித்திருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2019-20-ம் நிதி ஆண்டில் பிரேக் ஈவன் ஆகும் என கணித்திருக்கிறது.

எடில்வைஸ் நிறுவனம் கூறும் போது 500 ரூபாய்க்கு கீழ் இரு பேக்கேஜ் மட்டுமே இருப்பதால் அதிக வாடிக்கையாளர்கள் ரிலையன் ஸுக்கு செல்லும் வாய்ப்பு குறைவு. தற்போதைய தொலைதொடர்பு நிறு வனங்கள் பல திட்டங்களை வைத் துள்ளன. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் என்றும் கூறியிருக்கிறது.

கோடக் செக்யூரிட்டீஸ் கூறும் போது ஆரம்பத்தில் இலவசங்களால் வாடிக்கையாளர்கள் வருவார்கள். தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கு சிரமப்படுவது போன்ற சூழ்நிலை இருக்கும். வாடிக்கை யாளர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறது. நான்கு வருடங்களில் லாபம் சம்பாதித்தாலும் மொத்த முதலீட்டை மீண்டும் எடுப்பதற்கு 7-10 வருடங்கள் கூட ஆகலாம் என்ற கருத்தும் சந்தையில் இருக்கிறது.

ரிலையன்ஸ் மீன் பிடிக்குமா என்பது தெரியவில்லை ஆனால் மொத்த குட்டையையும் குழப்பி இருக்கிறது. டாடா டொகோமோ ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்னும் திட்டத்தை அறிவித்த போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுமாறின. அதன் பிறகு இப்போது…!

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணிக்காக ஆதார் எண் உள்ளவர்கள் மட்டும் விவரம் அளித்தால் போதும்: உணவுத்துறை அதிகாரி அறிவிப்பு

Return to frontpage

பொது விநியோக திட்டத்தில் மின் னணு குடும்ப அட்டை வழங்கும் பணிக்காக, ஆதார் எண் உள்ளவர் கள் மட்டும் விவரம் அளித்தால் போதுமானது என்று உணவுத்துறை அதிகாரி தெரிவித்தார். அனைவரது ஆதார் எண்ணையும் கேட்டு கட் டாயப்படுத்தக் கூடாது என கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 25,532 முழு நேரம், 9,154 பகுதி நேரம் என மொத்தம் 34,686 ரேசன் கடை கள் செயல்பட்டு வருகின்றன. இக் கடைகளின் மூலம், ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள் உட்பட 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது புழக்கத் தில் உள்ள குடும்ப அட்டைகள் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டவை. இவை கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டன. தொடர்ந்து 6 ஆண்டுகளாக உள்தாள் ஒட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளுக்கு பதில் புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு, அதற் கான பணிகள் நடந்து வருகின்றன. தேசிய மக்கள் தொகை பதிவின் விவரங்களை பெற்று முதல்கட்ட மாக அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரிட்சார்த்த அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தமிழகம் முழு வதும் பொது விநியோக திட்டப் பணிகளை கணினிமயமாக்கும் பணிகள் நடக்கின்றன. இதை யொட்டியே, மின்னணு குடும்ப அட்டை வழங்க ஏதுவாக ஆதார் எண்களை உள்ளடக்கிய கணினி தொகுப்பு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரேசன் கடை களுக்கு ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப் படும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியில், குடும்ப அட்டை தாரர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகள் முடிந்ததும், பொதுவிநி யோகத் திட்ட பயனாளிகள் விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, அதன் பின் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

இந்நிலையில், சில பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில், குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் விவரங்களை அளித்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உணவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

மாவட்டம்தோறும் ‘பாயின்ட் ஆப் சேல்’ மின்னணு விவரப் பதிவு இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில இடங்களுக்கு வழங்கவேண்டி உள்ளது. இதில் பதிவாகும் விவரங்களை சேகரித்து, விவரத் தொகுப்பு தயாரிக்கப்படும். ரேசன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர் அளிக்கும் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம். 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆதார் பதிவு இருக்காது. அவர் களுக்கு தேவையில்லை. அவர்கள் பெயர் விவரம் மட்டும் சேர்த் தால் போதுமானது. மேலும், அனைவரது ஆதார் எண் ணும் வேண்டும் என கட்டாயப் படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆதார் எண் கிடைக்கும்போது, பொதுமக்கள் அதை ரேசன் கடை அலுவலரிடம் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம். ஆதார் விவரங்கள் இணைக்கும் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய மின்னணு அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட் டங்களில் தற்போது ரேசன் கடை ஊழியர்களுக்கு ‘பாயின்ட் ஆப் சேல்’ இயந்திரங்கள் வழங்கப்பட்டு, பதிவு செய்வது தொடர்பான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரங்கிமலை, சென்னை சைதாப்பேட்டை மண்டல பகுதிகளுக்கு நேற்று இயந்திரம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திருச்சி, அரியலூர், பெரம் பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படிப் படியாக இயந்திரங்கள் வழங்கப் பட்டு, ஆதார் இணைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
Keywords: மின்னணு குடும்ப அட்டை, ஆதார் எண் உள்ளவர்கள், விவரம் அளித்தால் போதும், உணவுத்துறை அதிகாரி அறிவிப்பு

Tuesday, September 6, 2016

குறள் இனிது: ‘சிக்’கெனப் பிடிச்சுக்கணும்!


உங்களால் உண்ணாவிரதம், மௌன விரதம் போல கைபேசியில்லா விரதம் இருக்க முடியுமா?

ஒரு 21 வயது பெண், அவரது கைபேசி மூன்று மாதங்களுக்குப் பறிக்கப்பட்டும் கவலைப்படவில்லை என்றால் நம்பமுடிகிறதா?

ஆமாங்க நம்ம ரியோ ஒலிம்பிக்ஸ் வெள்ளிப் பதக்க நாயகி சிந்து தானுங்க அது!

அப்பா ரமணா வாலிபால் விளையாடப் போனால், உடன் செல்லும் 8 வயது சிந்து மெதுவாக பாட்மிட்டன் அரங்கிற்கு நழுவி விடுவாராம்!

அர்ஜுனா விருது வாங்கிய விளையாட்டு வீரரான ரமணா, தன் மகளை விளையாட்டு வீராங்கனையாக்க விரும்பியதால் சிந்துவிற்கு பாட்மிட்டன் பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்தார். 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தொடங்கிய வெற்றி தொடர்கதையானது. படிப்படியாக உலகத் தர வரிசையில் 10வது இடத்திற்கு முன்னேறினார்!

அவரது 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் ஆட்டத்தைப் பார்த்த யாரும் அவருடைய விசிறியாகாமல் இருக்க முடியாது... சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட!

ஆட்டம்னா ஆட்டம், அப்படி ஒரு ஆட்டம்! அரை இறுதியில் எதிராளியை சும்மா அங்குமிங்கும் ஓட வைத்துத் திணறடித்ததைப் பார்க்கணுமே!

இறுதி ஆட்டத்தில் அவர் எதிர் கொண்டவர் தர வரிசையில் முதலிடத்தில் இருந்த அனுபவசாலியான கரோலினா !

ஆனால் நம்ம சிந்து அஞ்சாமல் எதிர் கொண்டார். முதல் ஆட்டத்தில் வெற்றியும் பெற்றார். பின் இரு ஆட்டங்களினால் தங்கம் தவறிப் போனாலும், தானே ஒரு தங்கமென நிரூபித்து விட்டார்.

இந்தத் தன்னிகரில்லாத வெற்றிக்குக் காரணம் என்ன? 5'11" உயரமா? 13 வருட உழைப்பா? கோபிசந்தின் உன்னதப் பயிற்சியா?

இவையெல்லாம் கிடைக்கப் பெற்ற மற்றவர்கள் பலர் இருந்தும் இவரால் மட்டும் இது சாத்தியமானது ஏன்?

சிந்துவின் சமீபத்திய பேட்டிகளைப் பாருங்க புரியும்! இனி உலகின் நம்பர் 1 ஆவதற்காக உழைப்பாராம்! 2020-ல் டோக்கியோவில் தங்கம் வெல்லணுமாம்!

இந்தப் பெண்ணுக்கு வேறு நினைவே இல்லைங்க! இந்த விளையாட்டு அவரை ஆட்கொண்டு விட்டதுங்க!

அப்புறம் கைபேசி என்ன, ஐஸ்கிரீம் என்ன, காலை 4 மணித் தூக்கம் என்ன, பயிற்சிக்கு 56 கிமீ தூரம் என்ன?

மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்கின் கதையும் இதைப் போன்றது தான்! 10 வயதில் அவர் அதில் இறங்கிய பொழுது அவருடன் போட்டியிடப் பெண் வீரர்களைத் தேடணுமாம்!

அன்று தொடங்கிய வேட்கை 12 ஆண்டுகளாய்த் தொடர்ந்தது! ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வாங்கிக் கொடுத்துள்ளது!

விளையாட்டுத் தளமோ, வியாபாரக் களமோ அரிய வெற்றி பெறத் தேவை உள்ளுதல் எனும் இடைவிடாத எண்ணம்தான்!

திரும்பத் திரும்ப ஒரு செயலை எண்ண எண்ண அதற்கான வழிகள், திறன்கள் எல்லாம் வந்தமைந்து விடுமல்லவா?

ஒருவர் தான் செய்ய எண்ணியதையே எண்ணி எண்ணி அதற்கானவற்றிலேயே மனம் தோயப் பெறுவாராயின் அவர்தான் நினைத்ததை அடைவது எளிது என்கிறார் வள்ளுவர்.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின் (குறள்: 540)

somaiah.veerappan@gmail.com

Thursday, September 1, 2016

எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது!


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர்பாக சரியான வழிகாட்டுதலை முன்வைத்து, அதில் காணப்படும் குறைகளை அகற்ற இந்தக் குழு முற்படும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான வழிகாட்டுதல் குழு, இந்திய மருத்துவ கவுன்சிலால் அனுமதி மறுக்கப்பட்ட 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மீதான தடையை அகற்ற உத்தரவிட்டிருக்கிறது. தமது வழிகாட்டுதல்களையும் ஆணைகளையும் மருத்துவ கவுன்சில் மதிப்பதில்லை என்றும் அதன் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியவை என்றும் கடிந்து கொண்டிருக்கிறது.

லோதா வழிகாட்டுதல் குழுவின் ஆத்திரத்திலும் கண்டனத்திலும் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், அடிப்படை பயிற்றுவித்தல் வசதிகள் இல்லாமல் இருந்ததாலும், தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடையாது என்பதாலும் 86 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இப்போது, லோதா தலைமையிலான குழு, இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவை நிறுத்தி வைத்து, அந்தப் பட்டியலில் உள்ள 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிபந்தனைகளுடன் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது.

வழிகாட்டுதல் குழுவின் கட்டளைப்படி இந்திய மருத்துவக் கவுன்சில் அந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி குறித்து மறு ஆய்வு செய்யவில்லை என்பது லோதா குழுவின் குற்றச்சாட்டு. அதற்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கி கொள்வதற்கான அனுமதியை வழங்குவது சரியான தீர்வு அல்ல.

86 மருத்துவக் கல்லூரிகளில் 26 கல்லூரிகளை எந்த அடிப்படையில் லோதா குழு தேர்வு செய்து அனுமதி வழங்குகிறது என்று பார்த்தால், அது அதைவிட விசித்திரமாக இருக்கிறது. நேரில் சென்று சோதனை நடத்தி இந்திய மருத்துவ கவுன்சில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று அனுமதி மறுத்த கல்லூரிகளுக்கு, அந்த மருத்துவக் கல்லூரிகளின் இணையதளத்தில் தரப்பட்டிருக்கும் விவரங்களையும், புகைப்படங்களையும், குறிப்புகளையும் அடிப்படையாக வைத்து, அனுமதி வழங்க முற்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

மருத்துவ கவுன்சிலின் சோதனை குறித்து லோதா குழு முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு, விடுமுறை நாள்களில் அந்தக் கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டன என்பது. கட்டடங்கள் சரியாகக் கட்டப்பட்டுள்ளனவா, பரிசோதனைச் சாலை வசதிகள் முறையாக இருக்கின்றனவா, அந்தக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் யார் எவர், அவர்களது கல்வித் தகுதி என்ன என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள, எந்த நாளில் பரிசோதனை நடத்தினால்தான் என்ன?

மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி என்பது நீண்டதொரு நடைமுறையைக் கொண்டது. கட்டமைப்பு வசதி, யார் நிறுவுகிறார்கள், யார் நடத்தப்போகிறார்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என்னென்ன, பாடத்திட்டங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன, அதன் ஆசிரியர் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று பல அடுக்குப் பிரச்னைகளை ஆய்வு செய்துதான் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்தெல்லாம் லோதா குழு, ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று நேரடியாக சோதனை நடத்தி, இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி மறுத்தலை மறுபரிசீலனை செய்து ரத்து செய்திருந்தால் அது நியாயமான முடிவாக இருந்திருக்கும்.

86 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுத்திருக்கும் இந்திய மருத்துவ கவுன்சில், முதற்கட்ட சோதனையில் குறைபாடுகள் காணப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு எதற்காக அனுமதி அளித்தது என்பதுதான் லோதா குழு எழுப்பி இருக்கும் விசித்திரமான கேள்வி. அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைபாடுகள் இருந்தால் அதைத் தட்டிக் கேட்கவும், குறைகளை மாற்றவும் வழியுண்டு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அப்படியா என்கிற அடிப்படைக் கேள்வியைக்கூட ஏன் லோதா குழு யோசிக்கவில்லை?

இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளில் பல குறைகள் இருக்கின்றன. அதைக் களைவதற்காகத்தான் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குறைகளைச் சுட்டிக்காட்டி நீக்க லோதா குழுவுக்கு அதிகாரம் உண்டுதான். ஆனால், மருத்துவக் கல்லூரியின் தரம், மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு போன்றவற்றை சட்டம் படித்தவர்கள் நிர்ணயிக்க முடியாது. நீதிபதிகள் நியமனத்தை மருத்துவர்களும், கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் நிர்ணயிப்பது போன்ற விபரீதமாகத்தான் அது அமையும்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடுகளில் பல குறைபாடுகள் இருக்கின்றன. அந்தக் குறைபாடுகளை அகற்ற லோதா குழு என்ன செய்தது, என்ன பரிந்துரைக்கிறது என்றால் எதுவுமே கிடையாது. குறைபாடுகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் நிறைந்த இந்திய மருத்துவ கவுன்சிலே, கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்று அனுமதி மறுத்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீதிபதி லோதா தலைமையிலான குழு அனுமதி வழங்குகிறது என்பதே, அந்தக் குழுவின் முடிவுகள் குறித்து நம்மை சந்தேகப்பட வைக்கிறது.

மாற்றாக ஓர் அமைப்பு உருவாக்கப்படும்வரை, இதுபோன்ற பிரச்னைகளில் இந்திய மருத்துவ கவுன்சிலை அகற்றி நிறுத்திவிட்டு, முடிவெடுப்பது புத்திசாலித்தனம் ஆகாது!

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...