Monday, October 17, 2016

மனைவி தனியுரிமை கோருவது கணவர் மீதான கொடுமை அல்ல: தில்லி உயர் நீதிமன்றம்


திருமணமான ஒரு பெண், தன்னுடைய புகுந்த வீட்டில் தனியுரிமையை (பிரைவசி) கோருவதை, கணவரைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது. எனவே இதன் அடிப்படையில் கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 2003-இல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தன் மனைவி கூட்டுக் குடும்பத்தில் வாழ விருப்பம் இல்லாததால் தனிக் குடித்தனம் நடத்த வற்புறுத்துவதாகவும் அதற்காக தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி தில்லி கீழமை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி 2010-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, தனிமை என்பது அவரவரது அடிப்படை உரிமை என்பதால் தனிக் குடித்தனம் செல்ல மனைவி கோரியது நியாயமற்றதாக தெரியவில்லை என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
கீழமை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து பெண்ணின் கணவர், தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது:
தனிக் குடித்தனத்துக்கு அழைத்து அவ்வப்போது தன்னை தன் மனைவி கொடுமைப்படுத்துவதாகவும், அதுமட்டுமல்லாது, கடந்த 12 ஆண்டுகளாக இருவரும் தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாலும், இனி ஒன்று சேர வாய்ப்பில்லாததாலும், "மீண்டும் இணைய முடியாத திருமண முறிவு' என்ற அடிப்படையில் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தீபா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: திருமணமாகி தங்கள் வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு மணமகன் வீட்டார் தனியுரிமைகளை வழங்க வேண்டியது அவர்களது கடமை. இந்த வழக்கைப் பொறுத்தவரை அதுபோன்று வழங்கியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. மேலும் இந்த விவாகரத்து வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியே.மேலும் ஹிந்து திருமணச் சட்டத்தில் "மீண்டும் இணைய முடியாத திருமண முறிவு' என்ற சட்டத் திருத்தத்தை இதுவரை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
துணையை நம்பாததும் சித்ரவதையே:41 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து

புதுடில்லி:'கணவன், மனைவிக்குள் பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதை, புரிந்து கொள்ளும் குணம் போன்றவை இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாததும் சித்ரவதையே' என, ராணுவ அதிகாரிக்கு, 41 ஆண்டுகளுக்குப் பின் விவாகரத்து வழங்கி, டில்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
துணை ராணுவப் படையான, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கில், டில்லி ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு:ஆண், பெண் இடையே, அனைத்து விஷயங்களிலும் மன ஒற்றுமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. திருமணமான தம்பதி இடையே, பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதை அளிப்பது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் குணம் இருக்க வேண்டும்; அவ்வாறு இருந்தால் தான் திருமண வாழ்க்கை இனிக்கும்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, 1975ல் திருமணம் நடந்துள்ளது. சி.ஆர்.பி.எப்., உயரதிகாரியான கணவன், ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றி உள்ளார். அவருக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்புள்ளதாக, சி.ஆர்.பி.எப்., தலைமைக்கு, மனைவி புகார் கொடுத்து உள்ளார்.சரியாக விசாரிக்காமல், மனைவி அளித்த இந்த புகாரால், அவமானம், பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை கணவன் சந்திக்க நேர்ந்துள்ளது. 
இந்த புகாரால், உயர் அதிகாரிகள் மற்றும் தனக்கு கீழுள்ளவர்கள் இதுவரை அளித்து வந்த மரியாதை குறைந்து விட்டதாக கணவன் கூறியுள்ளார்.இவ்வாறு பரஸ்பரம் நம்பிக்கையில்லாமல் சந்தேகப்படுவதும், அதனால் அவமானம் ஏற்படுவதும், ஒருவகையில் சித்ரவதையே. அதன்படி, இந்த வழக்கில், கீழ்க் கோர்ட் அளித்த விவாகரத்தை உறுதி செய்கிறோம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday, October 16, 2016

கூகுள் தேடல் - மொபைல் , டெஸ்க்டாப் எதில் தேடுவது பெஸ்ட்?

நமக்குத் தெரியாத விஷயத்தை யாராவது நம்மிடம் கேட்டால் உடனே கைகள் கூகுளை தேடி பதிலைச் சொல்லும். அந்த அளவுக்கு நம்மை பழக்கப்படுத்தியுள்ளது கூகுள். இதில் கூகுள் புதுமைகளை புகுத்தியுள்ளது. ஒரு வார்த்தையை தேடினால் ட்ரில்லியன் பக்கங்களை தேடி பதில் சொல்லும் அளவுக்கு கூகுள் தேடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கூகுள் தேடலில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதுமை மேலும் ஆச்சர்யத்தை அளிக்கும் விதமாக உள்ளது. கூகுள் தேடலை டெக்ஸ்டாப்பில் செய்கிறீர்களா? இல்லை மொபைல் போனில் செய்கிறீர்களா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது தான் அது.
கூகுள் தேடல் என்பது ஒரு குறிப்பிட்ட தேடலுக்கு 60 ட்ரில்லியன் பக்கங்களை தேடி அதன் பிரிவுகளின் அடைப்படையில் ஒரு வரிசையை உண்டாக்கி அதனை தரவரிசை, அல்காரிதம், வார்த்தையோடு பொருந்திய கீ-வேர்டுகள் என அனைத்து வழிகளிலும் மைக்ரோ செகண்டில் தேடி நமக்கு வரிசைப்படுத்தும்.

தற்போது மொபைலில் புதுவிதமான தேடலை அறிமுகம் செய்துள்ளது கூகுள். மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு தனது தேடல் அல்காரிதம்களை மாற்றியமைத்துள்ளது. இதன்மூலம் தேடும் வார்த்தைகளுக்கு மிகத்துல்லியமான தேடல் முடிவுகளை டெஸ்க்டாப்களை காட்டிலும் மொபைல்களில் பெற முடியும் என்பது தான் அது.
அடுத்தக் கட்டமாக மொபைல்-ஒன்லி வரிசையை உருவாக்கி மொபைல் போன்களில் தேடும் கூகுள் தேடல்களுக்கு துல்லியமான முடிவுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் டெஸ்க்டாப் தேடல்களின் துல்லியம் மொபைல் தேடல்களின் துல்லியத்தைவிட குறைவாக இருக்கும் என்கிறது கூகுள்.
இதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை முன் வைக்கிறது கூகுள். முதல் காரணம் கூகுள் தேடல்களில் மொபைல் தேடல்கள் முன்னிலை வகிக்கிறது என்பதும், அதிகப்படியான பயன்பாட்டாளர்கள் மொபைல் தேடலை பெறவே அதிகம் விரும்புவதையும் காரணமாக கூறுகிறது கூகுள்.
மேலும் மொபைல் போன்களுக்காக புதிய AMP (Accelerated Mobile Pages) பக்கங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை சிறப்பான முடிவுகள் கொண்ட பக்கங்களை தேடுதல் பக்கத்தின் மேல் பகுதியில் காட்டும், மேலும் இந்த பக்கங்கள் அதிவேகமாக படிக்கும் வகையில் லோட் ஆகும். ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் பதிவுகளைப் போன்ற பக்கமாக இவை இருக்கும்.
செல்போன்கள் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்துள்ள கூகுள் தனது முழு கவனத்தையும் மொபைல் ஒன்லி சேவைகளில் செலுத்தியுள்ளது. அனைத்து நிறுவனங்களும் மொபைல் ஒன்லியை நோக்கியே பயணிக்கின்றன. இனி நீங்களே சோதித்து பாருங்கள் உங்கள் டெஸ்க்டாப் கூகுள் தேடலுக்கும், மொபைல் கூகுள் தேடலுக்கும் அவ்வளவு வித்தியாசம் உள்ளது என்று, ஆச்சர்யப்படுவீர்கள். மொபைல் ஒன்லி சர்ச் சேவையை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. கமான் லெட்ஸ் சர்ஃப் இன் மொபைல்!!!
- ச.ஸ்ரீராம்
Dailyhunt

ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை!


நன்றி குங்குமம் தோழி

மோட்டுவளைச் சிந்தனை - விக்னேஸ்வரி சுரேஷ்

நடந்துகொண்டே மெசேஜ் அனுப்புவது, அலுவலக மீட்டிங் நடக்கையில் நைசாக டேபிளுக்கு அடியில் மின்னஞ்சல் அனுப்புவது, கரண்டியை ஒரு கைக்கும், அலைபேசியை மற்றொரு கைக்கும் தருவது என அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பெரும்பாலானவை ‘மல்ட்டிடாஸ்கிங்’தான். அதாவது, ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது. குழந்தையாக இருக்கும் போதே இதை தொடங்கி வைத்துவிடுகிறோம். ‘கார்ட்டூன் போட்டு விட்டா போதும், ஈஸியா சாப்பாட்டை ஊட்டி விட்றலாம்’ என்பதில் தொடங்கி, பெரியவர்களும் உணவை சீரியல் அல்லது மேட்ச் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது வரை எல்லாமே மல்ட்டிடாஸ்கிங்தானே!

ஒரே வேளையில் குக்கர், தொலைபேசி, கழிவறையிலிருக்கும் குழந்தை, காலிங் பெல் என பல (ஒன்றிரண்டு குறையும்) என்னை அழைக்கும் காலை வேளைகள் உண்டு. இவற்றையெல்லாம் ஏதோ அஷ்டாவதானி போல சமாளித்துப் பார்த்ததில் ‘சகல வேலைகளையும் சொதப்புவது எப்படி?’ என்று கட்டுரை எழுதும் அளவுக்கு விஷயம் வைத்திருக்கிறேன். வாசலில் தலையை சொரிந்து கொண்டு நிற்கும் கூர்காவிடம், ‘திரும்ப எப்போ வருவீங்க? உங்கள பார்க்கணும் போல இருக்கு’ என்றும், போனில் காத்திருக்கும் மாமியாரிடம் ‘போன வாரம்தான வந்தீங்க?

அதுக்குள்ள என்ன?’என்றும் கேட்கும் அளவுக்கு நிலைமை சிக்கலாகிப் போனது. அதன் பின் ஒரு சுபயோக சுபதினத்தில், மின்விசிறிக்கு அடியில் கிடைத்த ஞானம் என்னவென்றால், ‘மல்ட்டி டாஸ்கிங் மண்ணாங்கட்டியெல்லாம் எனக்குச் சரி வராது’ என்பதுதான். அதிக பட்சம் இரண்டு வேலைகளையே ஒரு நேரத்தில் ஒழுங்காக செய்ய வருகிறது!
‘ஒரு நேரத்தில் ஒரு வேளை’ என்பதை வாழ்வின் வழக்கமாகக் கொண்டு வர கொஞ்சம் மெனக்கெடலும், கொஞ்சம் திட்டமிடலும் போதுமானதாக இருக்கிறது.

உதாரணமாக காலையில் 7 மணிக்கு பிறகுதான் நிறைய வேலைகள் குவிகிறதென்றால், அதற்கு முன் செய்துவிடக்கூடியதாக சமையல் இருந்தது. ஆரம்பத்தில் 5 மணிக்கு எழுவதென்பது கருடபுராண தண்டனை போலிருந்ததை மறுக்க முடியாதுதான். போர்வை துணையை விட்டு பிரிய மனசேயில்லை. ஆனால், எம்.எஸ். அம்மாவையோ இளைய
ராஜாவையோ சேர்த்துக்கொண்டபின், வேறு யாருமற்ற 5 மணி இனிமையாகிவிட்டது. முடிவில், குழந்தைகளை அதட்டாமல் கிளப்ப முடிகிறது. நேரம் தெரியாமல் வாசலில் நின்று மொக்கை போடுபவருக்கு கூட புன்னகையை தர முடிகிறது.

எல்லாவற்றையும் விட, கணவருக்கான நைட்டி, பரட்டை தலை தரிசனத்தைத்தவிர்க்க முடிகிறது!
பல ஆராய்ச்சிகள் இந்த தலைப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் முடிவில், ‘மல்ட்டிடாஸ்கிங்’ என்பது உங்கள் நேரத்தை சேமிக்கவில்லை... மாறாக அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதுடன், உங்கள் உடல்நலத்தையும் பாதிக்கிறது என்று வெளியிட்டிருக்கிறார்கள்.ஏனெனில், நம் மனது ஒரு வேலையில் மட்டும் ஒருங்கிணைந்து இருக்கையில், அந்த வேலையை கவனமாக இசைவுடன் செய்கிறோம். அதில் பிழை ஏற்படுவதோ, மீண்டும் மீண்டும் செய்வதற்கான வாய்ப்போ குறைகிறது.

கணினியில் செய்யக்கூடிய வேலைகளையே எடுத்துக்கொள்ளலாம். அவற்றில் எதையெல்லாம் ஒன்றிணைக்க முடியுமோ, அவற்றை ஒன்றாக முடிக்கலாம். ஒரே நேரத்தில் பல வேலைகள் என்பதை தவிர்க்க முடியாத சூழலில், ஒரே மாதிரியான வேலைகளை தொகுத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் Batching என்பார்கள். இதில் நம் செயல் திறனும் அதிகரிப்பதை காணலாம்.அதே போல ‘ஸ்ட்ரெஸ்’ எனப்படும் வேலைசார் மனஅழுத்தமும் இவ்வாறு மல்ட்டிடாஸ்கிங் செய்பவர்களாலேயே உணரப்படுகிறது. நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் போது, இதயத் துடிப்பு அதிகரிப்பதால் எப்போதும் பதற்றமாக உணர்கிறோம் (அதாவது, மற்றவர் கண்களுக்கு ‘சிடுசிடு’).

உணவுக்கான நேரத்தை பல வேலைகளுக்கு பகுத்து வழங்கும் போது, நாம் அளவுக்கு அதிகமாக உண்ணும் வாய்ப்புண்டு. என்ன சாப்பிட்டோம் என்பதையே உணராமல் தட்டு நிறைய சாப்பிடுவதை விட, ஒரு கவளமானாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவதில்தான் ஆரோக்கியத்தின் ரகசியம் இருக்கிறது. சில மாணவர்கள் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் படிப்புக்காக செலவிட மாட்டார்கள். ஆனால், அந்த நேரம் படிப்புக்காக மட்டும்தான். வேறு சிலரோ சாப்பிடும் போதும், தொலைக்காட்சி பார்க்கும் போதும் கூட கையில் புத்தகத்துடனே காட்சியளிப்பார்கள்.

இருவகையினரும் ஒரே அளவு மதிப்பெண் பெற்றாலும், முன்னவர்களிடம் எப்போதும் ஓர் உற்சாகத்தை பார்க்கலாம். இதையே நம் எல்லா வேலைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஜென் துறவிகள், தேனீர் அருந்தும் முறையில் வாழ்க்கை தத்துவத்தை போதிப்பார்கள். ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடிப்பது ஒரு ஜென் முறை. அதில் அவர்கள் சொல்ல வருவது, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பிரக்ஞையுடன் வாழ்வதை பற்றியே. தினம் தினம் செல்போனில் பேசிக்கொண்டே நீங்கள் கடக்கும் சாலையில் அழகிய பூக்கள் மலர்ந்திருக்கக்கூடும்.

நேசத்தோடு எதிர்படுபவரின் கண்களை பார்த்து புன்னகைக்கும் நொடியில் வாழ்நாளுக்கான ஒரு நட்பு அமையலாம். கவனமாக பதில் சொல்ல முயன்றால், உங்கள் குழந்தை நாளை அறிவியலையே கூட தன் வாழ்க்கை என தீர்மானிக்கலாம். கூடுதலாக உறவுகள் மேம்படும் என்பதை சொல்லவே தேவையில்லை. அலுவலகமோ, வீடோ, உறவினரோ, மனிதர்களோடு செலவிடும் நேரத்தில் அவர்களை முழுமையாக உள்வாங்கிக்கொண்டால், அவர்கள் பேச்சால் வெளிப்படுத்தாத பல விஷயங்களையும் சேர்த்தே கண்டுகொள்வீர்கள்.

மனைவியின் புது ஹேர்ஸ்டைலை அன்றே பாராட்டும் கணவர்கள் மிக எளிதாக நல்ல பெயரை தட்டிப்போகிறார்கள். சினிமாவில் வேண்டுமானால், நடிகர் பாடிக்கொண்டே ஆடட்டும். பத்தி பத்தியாக பேசிக்கொண்டே சண்டையிடட்டும். அந்த சினிமாவை வீட்டை விட திரை அரங்கில் பார்ப்பது பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறதென்றால், காரணம், அங்கே குவியும் நம் கவனம். வேறு தொந்தரவுகள் அற்ற சூழல்.

பறவைகளோ, மீன்களோ, வேறு எந்த இயற்கையோடு இசைந்து வாழும் உயிரினமோ மல்ட்டிடாஸ்கிங் செய்வதில்லை. மரங்கொத்தியின் முயற்சியை, கொக்கின் கவனத்தை, பசுவின் நிதானத்தைத்தான் நாமும் செயல்களுக்கு தர வேண்டும். அதுவே இயற்கை. அந்த வாழ்க்கைமுறை நம்மை ஒருபோதும் கைவிடாது.

(சிந்திப்போம்!)

சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்!


நன்றி குங்குமம் தோழி

இனிது இனிது வாழ்தல் இனிது  பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்

உங்கள் திருமண உறவு அற்புதமாகவும் ஆரோக்கியமாகவும் அமைய வேண்டுமா? அப்போது சண்டை போடுங்கள்! என்ன இது? சந்தோஷமாக வாழ சண்டையைத் தவிருங்கள் என்றுதானே அறிவுறுத்துவார்கள்? சண்டை போடச் சொன்னால்?  ஏனென்றால், Sometimes a fight saves a relationship என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

கணவனும் மனைவியும் சண்டையே போடாமல் வாழ்வதென்பது சாத்தியமும் இல்லை. சண்டைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யங்களும் இருக்காது. சண்டை போடும்போது சில விதிமுறைகளை மட்டும் கவனத்தில் கொண்டால், அந்தச் சண்டை நல்ல பலனைத் தரும் என்பதே எங்கள் கோரிக்கை.

இருவருக்கும் இடையில் உருவாகும் சண்டைக்கான பொறுப்பை ஏற்கத் தவறாதீர்கள். சண்டைக்கான காரணத்தைத் துணையின் மீது போட்டுவிட்டு நீங்கள் தப்பிக்க நினைக்காதீர்கள்.

கோபம் உச்சத்தில் இருக்கும் போது சண்டையைத் தவிருங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு, ரிலாக்ஸ் செய்து, சண்டையின் வேகத்தைக் குறையுங்கள். கோபமான, வேகமான பேச்சு, சண்டையின் போது நீங்கள் முன் வைக்கிற வாதத்தைக் காணாமல் போகச் செய்து, துணையைக் காயப்படுத்தும்.

நீங்கள் போடுகிற சண்டை அர்த்தமுள்ளதாக  இருக்கட்டும். ஆக்கபூர்வமான விஷயங்களுக்காக இருக்கட்டும். சண்டையின் போக்கு அழிவை நோக்கிப் போவதாக இல்லாமல் கவனமாகக் கையாளுங்கள்.

சண்டையின் போது துணையிடம் கடுமையாக நடந்து கொள்ள, தகாத வார்த்தைகளை உபயோகிக்க, அவமானப்படுத்த, மோசமாக  நடத்த காரணங்களைத் தேடாதீர்கள். அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பதே நாகரிகம்.

கோபத்தையும் சண்டையின் தீவிரத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லையா? துணையிடம் எக்ஸ்கியூஸ் கேட்டுக் கொண்டு, அந்த இடத்தைவிட்டுத் தற்காலிகமாக  நகருங்கள். இருவருக்குமான சண்டைகள் ஒரு எல்லையைத் தாண்டும்போது, இருவரில் ஒருவரோ, இருவருமோ இப்படி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது என்பதை ஒரு
ஒப்பந்தமாகவே பின்பற்றுங்கள்.

சில வேளைகளில் உங்களையும் அறியாமல் சண்டை எக்கச்சக்க சூடுபிடிக்கும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற மாதிரி அந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாமல் போகும். எனவே, கோபம் கொப்பளிக்கிற போது, அதைச் சற்றே தணியச் செய்யுங்கள். இன்றைய சண்டையை நாளைக்கு ஒத்தி வைக்கலாம். தவறில்லை.

துணையை முட்டாள் என்பது மாதிரி மட்டம் தட்டிப் பேசுவது, பட்டப் பெயர் சொல்லித் திட்டுவது, நல்லாவே
இருக்கமாட்டே... நாசமாப் போயிடுவே’ என்கிற மாதிரி சாபம் விடுவது, அவமானப்படுத்துவது போன்றவற்றைச் சண்டையின் போது செய்யவே கூடாது.

சண்டையின் போது உங்கள் துணை பேசும்போது குறுக்கிடாதீர்கள். அவரை முழுமையாகப் பேசவிட்டுக் கேளுங்கள்.

பொதுவாக நாம் யாருமே எதிராளியின் பேச்சை 18 நொடிகளுக்கு மேல் பொறுமையாகக் கேட்பதில்லை என்பதுதான் உண்மை. துணையின் வாதத்தைக் கேட்டாலே அவரது கொந்தளிப்பு சற்று தணியும்.

சண்டையின் போது உங்களை முன்னிலைப்படுத்தி சுயநலமாகப் பேசுவதைத் தவிர்த்து, துணையையும் அவரது உணர்வுகளையும் முன்னிலைப்படுத்திப் பேசுங்கள்.

நான் பேசறது தப்பா இருக்கலாம். ஆனா, நான் இப்படித்தான் ஃபீல் பண்றேன்... இந்தப் பிரச்னையை நான் இப்படித்தான் பார்க்கறேன்’எனப் பேசுங்கள். அதாவது, உங்கள் மீது தவறு இருக்கலாம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதைத் துணைக்குத் தெரியப்படுத்துங்கள்.

உங்கள் சண்டையின் நோக்கம் உங்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை  எப்படி  முடிக்கலாம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.

சண்டையின்போது எக்காரணம் கொண்டும் குரலை உயர்த்திப் பேசக்கூடாது. என்னதான் கோபம் தலைக்கேறினாலும் அமைதியாக, குரலை உயர்த்தாமல் சண்டையிடுவதை ஒரு கொள்கையாகவே கடைபிடியுங்கள்.

உங்கள் துணையின் மனதைப் படிக்க முயற்சிக்க வேண்டாம். அவர் என்ன நினைத்திருப்பார்... அவரது
வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இதுதான் அர்த்தமாக இருக்க வேண்டும் என்கிற மாதிரியான தீர்மானங்களை நீங்களாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை.

துணையின் செயல்களுக்கு நீங்களாக நெகட்டிவ் சாயம் பூசாதீர்கள். ஒருவேளை உங்களுக்கு அப்படித் தோன்றினால் துணையிடமே அதைச் சொல்லுங்கள். நீ பண்றது எனக்கு இப்படி நினைக்க வைக்குது? அது சரியா?’ எனக் கேட்டுத் தெளிவு பெறுங்கள். துணையின் உடல் மொழிகளுக்கும் நீங்களாக ஒரு அர்த்தம் கற்பிக்காதீர்கள்.

துணை, மிகவும் மூர்க்கத்தனத்துடன், நெகட்டிவாக பேசினால், உங்கள் சண்டைக்கு சட்டென ஒரு பிரேக் விடுங்கள்.

அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் எனக் காரணம் கேளுங்கள். கோபத்தின் வீரியம் சற்றே அடங்கியதும், அவரது பேச்சு முறையில் மாற்றம் இருக்கலாம் என்றும், உடல்மொழியைக்கூட மாற்றிக் கொள்ளலாம் என்றும் சொல்லுங்கள்.

சண்டையின் போது அப்போதைய மனத்தாங்கலுக்கான விஷயத்தைப் பற்றி மட்டுமே விவாதியுங்கள். கடந்த கால சண்டைகளையும் பிரச்னைகளையும் சுமந்து கொண்டு வந்து தற்போதைய சண்டையில் சேர்க்காதீர்கள்.

அவர்/அவள் எப்போதுமே இப்படித்தான்... மோசமாத்தான் நடந்துப்பார்(ள்)’என்கிற மாதிரியான வார்த்தைகளையும், பழசை எல்லாம் நான் மறக்கவே மாட்டேன்...’என்பது போன்றும் பேசாதீர்கள். அவை ஆரோக்கியமான சண்டையை திசைத் திருப்பி விடும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து சண்டை போடுங்கள். சந்தோஷமான தருணங்களில் பழைய மனஸ்தாபத்துக்குக் காரணமான ஏதோ ஒரு விஷயத்தைக் கிளற வேண்டாம்.

இருவரில் ஒருவருக்கு ஒரு விஷயம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இன்னொருவருக்கும் அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். 'இதெல்லாம் ஒரு மேட்டரா..?’என்கிற மாதிரி துணையின் பார்வையை அணுகாதீர்கள்.

சண்டையின்போது உங்கள் துணை, தவறான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் வைத்துக் கொண்டு பேசலாம். முதலில் அவரது பேச்சுக்கு மதிப்பளியுங்கள். பிறகு அவரது தகவல்களை சரிசெய்யுங்கள். மாறாக அவரது உணர்வுகளை சரி செய்ய முனையாதீர்கள்.

(வாழ்வோம்!)

எழுத்து வடிவம்: மனஸ்வினி

Saturday, October 15, 2016

என்னது ..!!! ஆன்லைன்ல புக் பண்ணா ....வீடு தேடி வருதா “ஜியோ சிம்“ ......!!!

ஜியோவின்  சலுகையை  பார்த்து  வாய்பிளந்து பார்த்த  வாடிக்கையாளர்கள்,ஜியோ சிம்  வாங்குவதற்கு ....ரிலையன்ஸ்  ஷோ ரூம்  ஏறி ஏறி .....திரும்பி  வந்ததுதான்  மிச்சம்  என்ற  அளவுக்கு......நிறைய பேருக்கு  ஜியோ    சிம்  கிடைக்காமல்  இருப்பீங்க தானே ....! சோ  உங்களுக்காக , இப்ப  ஆன்லைன்  மூலமாகவே  புக்  செய்து  ஜியோ  சிம்  பெற கூடிய  ஒரு அற்புதமான  வாய்ப்பை கொடுத்து  இருக்கு.
'aonebiz.in' இந்த  வெப்சைட்  மூலமா  ஜியோ  சிம்  பெறலாம்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு  நீங்க  செய்ய வேண்டியது என்னவென்றால்,  அதில் கொடுக்கப்பட்டுள்ள  விவரத்தை  சரியாக  பூர்த்தி செய்து,   சப்மிட் பண்ணுங்க போதும்.
ஆர்டர்  செய்த  நாளிலிருந்து பத்து நாட்களுக்குள்  நம்  வீடு தேடி வரும்  ஜியோ சிம்.......
மேலும்,  டெலிவரி  சார்ஜ்  மட்டும்  199    ரூபாய்  கொடுத்தால் போதும்.
அதே சமயத்தில்,  சிம் டெலிவரி  செய்யும் போது, உங்களுடைய அட்ரஸ் ப்ரூப், id  ப்ரூப் , போட்டோ கொடுக்க வேண்டும்.
அப்புறம்  என்ன   யோசனை.......இப்பவே  புக்  பண்ணிகோங்க.........
இந்த  செய்தியை , ஜியோ சிம்  விற்பனை செய்யும்  'aonebiz.in இந்த  வெப்சைட்   வெளியிட்டு இருக்கு.
http://www.newsfast.in/news/online-booking-jio-sim

Friday, October 14, 2016

சமூக வலைதளங்களில் 'நீங்கள்' யார்?- ஒரு ஜாலி பட்டியல்


சமூக வலைதளங்களில் 'நீங்கள்' யார்?- ஒரு ஜாலி பட்டியல்

சமூக வலைதளங்கள் பலதரப்பட்ட மக்களைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலானோர் நினைவுகளையும் நனவுகளையும் பகிர்கின்றனர். ஆனால், அங்கே இயங்குபவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான மனநிலையில் இருப்பதில்லை. வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலானவற்றைப் பயன்படுத்துபவர்களில் சுவாரசியமான பயனர்கள் பலர் உண்டு. அவர்களைப் பற்றிய சிறு - குறு தகவல் குறிப்புகள் இவை:


புகைப்பட பிரபலங்கள்:

நின்றால் புகைப்படம், நடந்தால் புகைப்படம், அமர்ந்தால், ஊர் சுற்றினால் படம் என்று புகைப்படங்களாகப் போட்டு பிரபலம் ஆனவர்கள் இவர்கள். அவர்களின் புகைப்படத்துக்கு குவிந்திருக்கும் லைக், கமெண்டுகளைப் பார்க்கும்போதுதான் நமக்கு காதில் புகை வரும். சரி பிரபலமானவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்ஃபியைப் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரைத் தூக்கத்தில் ஒரு செல்ஃபி, தூங்கி எழுந்தவுடன் செல்ஃபி, பல் விளக்கும்போது செல்ஃபி என்று இவர்களின் செல்ஃபி பட்டியல் சென்று கொண்டே இருக்கிறது. ஆணாதிக்கம் நசுக்கப்படுவதும் இங்கேதான். ஆம், இந்த வகைப் பிரபலங்களில் பெண்களுக்கே அதிக மவுசு.

'வணக்க' வல்லுநர்கள்:

இவர்களின் தினசரி வேலைகளில் முக்கியமானது வணக்கம் என்று சொ(கொ)ல்லும் நிலைத்தகவலை மறக்காமல் பதிவேற்றுவது!

காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாரதியார் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டு ஃபேஸ்புக்கைப் படிப்பார்கள். அதோடு மறக்காமல் 'காலை வணக்கம்' என்று ஸ்டேட்டஸ் போட்டுவிடுவார்கள். மதிய வேளையில் 'மதிய வணக்கம்' என்ற ஸ்டேட்டஸும், இரவில் 'இரவு வணக்கம் நண்பர்களே, உறவுகளே, சொந்தங்களே!' ஸ்டேட்டஸும் போடப்படும். வணக்கம் சொல்லியே வதக்கி எடுப்பவர்கள் இவர்கள்.

புரியாத புதிர்கள்:

இந்த வகை ஆட்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாது. தமிழில் புதிதாக சில வார்த்தைகளைத் தெரிந்து கொண்டு வந்து, பத்துப் பக்கங்களுக்குக் குறையாமல் எழுதி, (படிப்பது ஃபேஸ்புக் நண்பர்களின் கடமை என அவதானிப்பவர்கள்!) சாமான்ய ரசிகர்களைத் திணறடித்தே பிரபலமானவர்கள் இவர்கள்.

ரசிக பிரபலங்கள்:

எப்படியாவது பிரபலம் ஆக வேண்டும் என்று நினைத்து, பிரபலங்களுடன் அடிக்கடி கமெண்டில் கதைப்பது, அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துத் தன் பக்கத்தில் பதிவது, அவர்களின் எல்லாப் பதிவுகளுக்கும் சூப்பர், செம்ம சொல்லிக் கொண்டே இருப்பது போன்ற காரியங்களில் கர்மசிரத்தையாய் இருப்பவர்கள்.

ஃபீலிங்ஸ் பறவைகள்:

காதல் மற்றும் காதல் சார்ந்த இடங்களில் / தளங்களில் மட்டும் ஈடுபாட்டுடன் இயங்குபவர்கள்; காதல், பிரிவு ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது.

'புஜ்ஜிமா'க்கள்:

இவர்கள் எப்போதும் குழந்தைப் படங்கள், பூக்கள், இயற்கை ஆகியவற்றை மட்டுமே ஷேருபவர்கள்; லைக்குபவர்கள். அடுத்தவர்கள், அழகான குழந்தைப் படங்களைப் பதிவேற்றினால் மட்டும்தான் ச்ச்சோ ஸ்வீட், லவ்லி, கியூட் சொல்வார்கள்.

தொழில் முறை பதிவர்கள்:

மாதக்கணக்காக அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் பொருட்களை விளம்பரப்படுத்தும் வேலை வந்துவிட்டால் மட்டும், தீயாய் வேலை செய்வார்கள்.

கடவுள் பற்றாளர்கள்:

பண்டிகைக் காலங்கள், விழாக் காலங்களில் மட்டும் சுறுசுறுப்பாக கடவுள்களின் வரலாறு, தோற்றம், விழாக்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

காப்பி பேஸ்டாளர்கள்:

நன்றாக இருக்கும் பதிவுகளை, காப்பியடித்து தன் பக்கத்தில் போட்டு, 'அட, இந்தப் பையனுக்குள்ள இம்புட்டு அறிவா?!' என்று புருவம் உயர்த்த வைக்கும் காப்பி பேஸ்டாளர்கள். இந்தப் பதிவுகளில் பெரும்பாலானவை பத்திரிகைகளில் தொகுக்கப்படுவதும் கவனிக்கத்தக்க கொடுமை.

ஃபேக் ஐடி பிரபலங்கள்:

தன் சுய அடையாளம் மறைத்து, பெயர் விடுத்து, நச் கருத்துகளைப் போட்டே பிரபலம் ஆனவர்கள்.

ஜென் நிலையாளர்கள்:

24 மணி நேரமும் ஆன்லைனில் இருந்துகொண்டே / பார்த்துக்கொண்டே / படித்துக்கொண்டே, யாருடைய பதிவுக்கும், லைக்கோ, கமெண்டோ போடாமல் ஜென் நிலையிலேயே வாழ்பவர்கள்.

தகவல் சொல்லிகள்:

2 நிமிடத்தில் சமைப்பது எப்படி, அழகாவது எப்படி, இயற்கை விவசாயம் செய்வது எப்படி, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைக் கையாள்வது எப்படி என்று தடுக்கி விழுந்தால் கூட தகவல் சொல்லிக் கொண்டே இருப்பது இவர்களின் ஸ்பெஷாலிட்டி. எப்படிங்க இப்படி?

'கோட்'டீஸ்வரர்கள்:

கருத்து சொல்லி, கைகாலை புண்ணாக்கிக் கொள்ளாமல், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பேர் வாங்குபவர்கள். தெளிவாக தத்துவங்களை (மற்றவர்களின்) மட்டுமே பகிர்வார்கள். பிரபல கோட்ஸ் சைட்டுகளின் கோட் இமேஜ்களைப் பகிர்ந்து உலகத்துக்கு ஏதாவது சொல்லிக்கொண்டு தங்கள் இருப்பை நிலை நிறுத்துபவர்கள்.

சமூக சேவையாளர்கள்:

சமூக ஊடகங்களை, சமூக சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் குறைந்த லைக்குகளுக்கு சொந்தக்காரர்கள்.

சினிமா ஆர்வக்கோளாறாய்ச்சியாளர்கள்:

வெள்ளிக்கிழமை படம் ரிலீஸுக்கு முன்பே டீசர் ரிவியூ பகிர்ந்து பகீரிடச் செய்வார்கள். படம் தொடங்கி அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அனுபவத்தைப் பகிர்வார்கள். இடைவேளையில் முக்கால் விமர்சனமும், முடிந்தவுடன் முழு விமர்சனமும், படத்துக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பொருத்து முழுமையான அலசல்களையும் வெளியிட்டு தங்கள் சினிமா அறிவை பறைசாற்றுவார்கள். உலக சினிமாவை உள்ளூருக்குக் கொண்டு வந்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

மீம் மக்கள்:

சினிமா, அரசியல், விளையாட்டு என்று எந்த துறையாக இருந்தாலும் கவலையே படாமல், இல்லாத மூளையைப் போட்டுக் கசக்கி ஸ்டேட்டஸ் யோசிக்காமல், அழகாய் ஒரு படத்தையும், அதற்கேற்ற பன்ச்சையும் சேர்த்துப் போட்டு, பெயர் வாங்குபவர்கள். ஒரே படத்தை வெவ்வேறு மீம்களுக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள். ஆகவே என்னதான் சுட்டாலும் மீம் மக்கள், மீம் மக்களே!

ஃபேஸ்புக் போராளிகள்:

முழுமையான செய்திக்கு முந்தைய நியூஸ் ஃபளாஷ் வந்த அடுத்த நொடியில் தங்கள் உக்கிரக் கருத்துகளைப் பகிர்ந்து லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளுவார்கள். ஆர்வமிகுதியில் தப்பான செய்திக்கு ரைட்டான கருத்துச் சொல்லிவிட்டு, பின்னர் அந்தச் செய்தியே தப்பு என்று உணரும்போது பகிரங்க மன்னிப்புக் கேட்கத் தயங்காத மானஸ்தர்கள்.

இவர்களுக்கு நாட்டில் என்ன நடந்தாலும் கருத்து சொல்லியே ஆகவேண்டும். தக்காளி விலை ஏறினாலும் கருத்து சொல்வார்கள். தங்கம் விலை ஏறினாலும் கருத்து சொல்வார்கள். சிந்தாதிரிப்பேட்டை முதல் சிரியா வரை இவர்களின் கருத்துக்கு சிக்காத இடங்களே உலக வரைபடத்தில் இல்லை. கருத்து சொல்வது குறித்தும் கருத்து சொல்வதுதான் ஹைலைட். மார்க் ஸக்கர்பெர்க்குக்கு பேஜ்வியூஸ் வாங்கித் தருவதில் முன்னிலை வகிப்பதே இந்தப் போராளிகள்தான் என்றால் அது நகையில்லை.

கடைசியாக... தல - தளபதி ரசிகர்கள் படை:

இவர்களுக்கு அறிமுகக் குறிப்பு தேவையில்லை.

சரி... நீங்கள் எந்த வகை?




NEWS TODAY 02.01.2026