Wednesday, April 19, 2017

தினகரன் வெளிநாடு செல்ல திட்டமிட்டது உண்மை; நெருங்கிய வட்டாரங்களே உறுதி செய்தன: தில்லி போலீஸ்

By DIN  |   Published on : 19th April 2017 12:21 PM  | 

dinakaran

புது தில்லி:  டிடிவி தினகரன் ஒரு சுதந்திர மனிதனாக வெளியே நடமாடும் நாட்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டாலும், இதுபோன்ற தகவல் கசிய அடிப்படையில் ஒரு காரணம் இருந்திருக்கிறது.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற  தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சென்னை வந்து, டிடிவி தினகரனிடமும் விசாரணை நடத்த தில்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால், இவர்களது சென்னைப் பயணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அதற்காக டிடிவி தினகரனை அவர்கள் சுதந்திரமாக விட்டுவிடவில்லை. தில்லி காவல்துறையினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில்தான். தில்லி காவல்துறை மூலமாக இந்திய விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், டிடிவி தினகரன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, அவரது வருகையை கவனியுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனை, தில்லி கூடுதல் ஆணையர் (குற்றவியல்) பிரவீன் ரஞ்சன் உறுதி செய்துள்ளார்.
அதாவது, தினகரனுக்கு மிகவும் நெருங்கிய நபர்கள், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில்தான் தில்லி காவல்துறை இந்த அறிவுறுத்தலை அனுப்பியது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் அடிப்படையில், டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது, தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா அணிக்கே பெற்றுத் தருவதாக தினகரனிடம் சுகேஷ் உறுதி அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகேஷூக்கு, தினகரன் கொடுத்தனுப்பிய 10 கோடியில் மீதமிருக்கும் ரூ.8.7 கோடியை தேடும் பணியில் தில்லி காவல்துறை ஈடுபட்டுள்ளது என்றும் பிரவீன் ராஜன் கூறினார்.
இந்த நிலையில், இன்று காலை அந்நிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதாவது,வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக தகவல்கள் வெளியானது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த தினகரன், எனது பாஸ்போர்ட் பல ஆண்டு காலமாக நீதிமன்றத்தில்தான் உள்ளது. பிறகு எப்படி என்னால் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று விளக்கம் அளித்தார்.
அதன்பிறகு, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், ஆங்கில ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, எனது பாஸ்போர்ட் என்னிடம் இல்லை. நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னால் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது என்றார்.
மேலும், தாங்கள் சிங்கப்பூர் குடிமகன் என்று தகவல்கள் வெளியாகிறதே என்ற கேள்விக்கு, நான் சிங்கப்பூர் குடிமகனாக இருந்தேன். இப்போது இல்லை. நான் இந்திய பிரஜை. சிங்கபூரின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து காலாவதி ஆகிவிட்டது என்றார்.
எனவே, நெருப்பு இல்லாமல் புகையாது என்பது போல, ஏதோ திட்டம் போடப்பட்டுள்ளது. அதுதான் தில்லி காவல்துறை மூலமாகக் கசிந்துள்ளது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
அதற்கேற்றார் போல, அதிமுகவின் துணைப் பொதுச் செயலராக இருந்து, முதல்வர் கனவோடு இருந்த டிடிவி தினகரன், இன்று அவருக்கு எதிராக அமைச்சர்கள் கொடி பிடித்ததுமே எந்த எதிர்ப்பும் காட்டாமல், 'நான் நேற்றே கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டேனே' என்று பதில் அளித்துள்ளார்.
இந்த சாமர்த்தியமான பதிலும், அவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது.
தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்
பிடிஐ



தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினகரன், வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளவர் என்பதால் விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி க்ரைம் பிராஞ்சு இணை ஆணையர் பிரவீர் ரஞ்சன், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார். தூதரக அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரை அணுகியதாகவும். இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தால் ரூ.60 கோடி லஞ்சம் தர தினகரன் தயாராக இருந்ததாகவும் சுகேஷ் டெல்லி போலீஸில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே தினகரனுக்கு வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னீர்செல்வம், பழனிசாமி அடுத்தடுத்து ஆலோசனை! பரபரப்பில் கிரீன்வேஸ் சாலை
vikatan சகாயராஜ் மு



சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக, அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோனை நடத்திவருகிறார். இந்த நடவடிக்கையால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவிவருகிறது.

சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரிந்து சென்ற பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க-வையும், சின்னத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இதனிடையே, பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகக் குழு ஒன்றை அமைப்பதுகுறித்து முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.



இந்த நிலையில், மைத்ரேயன் எம்பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், செம்மலை, ராஜகண்ணப்பன், விஸ்வநாதன், மோகன், சண்முகநாதன், நிர்மலா பெரியசாமி ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்துள்ளனர். அவர்களுடன் பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

முதல்வர் பழனிசாமி அணி அமைச்சர்களின் அழைப்புகுறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போது, முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது.

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் அடுத்தடுத்து நடத்திவரும் ஆலோசனையால், கட்சியினர் இடையே பரபரப்பு நிலவிவருகிறது.
‘பன்னீர்செல்வம் செய்த தப்பை, நான் செய்ய மாட்டேன்!’ - எடப்பாடி பழனிசாமியின் ‘முதல்வர்’ லாஜிக் #VikatanExclusive

ஆ.விஜயானந்த்




அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பில் நடக்கும் நிபந்தனைகளால் தினகரன் வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 'மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார் பன்னீர்செல்வம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை. தற்போதுள்ள அரசு தொடர்வதையே பா.ஜ.க தலைமையும் விரும்புகிறது' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.

'சசிகலா குடும்பம் அல்லாத அ.தி.மு.க' என்ற ஒற்றை கோரிக்கையோடு பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகோர்த்துள்ளனர். நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த அவசர ஆலோசனையில், ‘ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், கழகமும் நம் கையைவிட்டுப் போய்விடும்' என விவாதித்துள்ளனர். முதல்வரின் முடிவை அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல், தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி விட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பகமாக உள்ளது' என்றார். இந்தக் கருத்தை எதிர்பார்த்த தினகரனும், 'எம்.எல்.ஏக்கள் அனைவரும் என் பின்னால்தான் உள்ளனர்' எனப் பேட்டியளித்தார். தற்போது தினகரனுக்கு ஆதரவாக, வெற்றிவேல், சுப்ரமணியம், தங்க.தமிழ்ச்செல்வன் உள்பட மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

"அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் இணைப்பது என்று முடிவு செய்யப்பட்ட பிறகு, பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்கூட்டியே சில நிபந்தனைகளை விதித்தனர். அதில், ‘முதல்வர் பதவியை மீண்டும் பன்னீர்செல்வத்துக்கே வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். கூடவே, மா.ஃபா.பாண்டியராஜன் உள்பட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனை கொங்கு மண்டல அமைச்சர்கள் ரசிக்கவில்லை. இதுகுறித்து, தங்களுக்குள் விரிவாக ஆலோசனை செய்தனர். இந்த விவாதத்தில், ‘முதல்வர் பதவியில் சமசரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்ற கருத்தையே கொங்கு மண்டல அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்" என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "முதல்வர் பதவி மட்டுமல்லாமல், அமைச்சரவை மாற்றத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை. அமைச்சர்களின் ஒருமித்த கருத்தாகவும் இது உள்ளது. இதற்குக் காரணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலா எதிர்ப்பு என்பது தீபா பக்கம் சென்றது. முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பிறகு, சசிகலா எதிர்ப்பு அவர் பக்கம் சென்றது. மக்களும் அவர் பக்கம் நின்றார்கள். இந்த இடத்தில்தான் பன்னீர்செல்வம் தவறு செய்தார் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி கொங்கு மண்டல நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் பழனிசாமி,



‘சசிகலா குடும்பத்தின் நிர்பந்தத்தை ஏற்று பன்னீர்செல்வம் பதவியில் இருந்து விலகினார். அரசியலில் பாலபாடம் என்பது, உறுதியான உத்தரவாதம் இல்லாமல் எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதுதான். பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்த நேரத்தில், 'மீண்டும் அமைச்சரவையில் அவரை சேர்க்கக் கூடாது' என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார். இந்த ஏமாற்றத்தில்தான் அவர் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்தார். 'தற்போது நிலைமை அப்படி இல்லை. மிகக் குறைந்த மெஜாரிட்டியில்தான் இந்த அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு அப்படியே தொடரும். இன்னொரு மாற்று அரசு அமைவதற்கு வாய்ப்பில்லை. எந்தச் சூழ்நிலையிலும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. பன்னீர்செல்வத்தை மீறித்தான் இந்த அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்ததுபோல, இந்தப் பதவி நமக்கு வந்து சேரவில்லை. அமைச்சரவையில் நம்பர் டூ இடத்தில் இருந்ததால்தான் முதல்வர் பதவி வந்து சேர்ந்தது. இதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? அனைத்து அமைச்சர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து அரசை செலுத்துவேன். நான் பொம்மை முதல்வர் என்று யாரும் சொல்ல முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போதும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த அதிரடியை பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இரு தரப்பும் ஏற்கும்விதமாக பேச்சுவார்த்தைக் குழு அமைக்க உள்ளனர். ஓரிரு நாட்களுக்குள் விவகாரம் முடிவுக்கு வரும்" என்றார் விரிவாக.

"பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார் பிரதமர் மோடி. அதிலும், கொங்கு மண்டல லாபியை வளர்த்துவிடுவதான் பா.ஜ.கவின் முக்கிய நோக்கம். கொங்கு மண்டலத்தின் சில தொகுதிகளில் பா.ஜ.கவுக்குக் கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. அ.தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியை வளர்த்துவிடுவதன் மூலம், அந்த வாக்குகளையும் பா.ஜ.கவை நோக்கித் திருப்ப முடியும் என உறுதியாக நம்புகிறது பா.ஜ.க தலைமை. அதையொட்டியே, 'எடப்பாடி பழனிசாமியே பதவியில் தொடரட்டும். கட்சிப் பதவியை பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிடலாம்' என சீனியர் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

தினகரனால் வளர்த்துவிடப்பட்ட பன்னீர்செல்வமும் சசிகலாவால் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமியும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்துவிட்டனர். இந்தக் கோட்டை அழிக்கும் வித்தை தெரியாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம், 'துரோகம் தொடர்ந்து கொண்டே இருந்தால் என்னதான் செய்வது?' எனப் புலம்பி வருகிறாராம் தினகரன்.
கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி

vikatan news

ராகினி ஆத்ம வெண்டி மு.



படம்: ஸ்ரீநிவாசலு

'அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படுவில்லை. நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன்' என்று டி.டி.வி.தினகரன் தடாலடியாகக் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க அம்மா அணியிலிருந்து ஒதுக்கப்பட்டதற்காக நான் வருந்தவில்லை. நேற்று இரவே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன். அமைச்சர்கள், தற்போது நடத்திய கூட்டத்துக்கு என்னையும் அழைத்திருந்தால் சென்றிருப்பேன். கட்சியும் ஆட்சியும் பிளவுபட, நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். கட்சியில் சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் மட்டுமே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவசரகதியில் அமைச்சர்கள் தங்கள் முடிவை அறிவித்துள்ளனர். கட்சியில் இருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டதால், கட்சிக்கு நன்மை அளிக்கும் எந்த முடிவுக்கும் நான் ஒத்துழைப்பேன்.

சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை நீக்க பார்க்கிறார்கள். அமைச்சர்களுக்கு ஏற்பட்ட அச்சத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் என்னிடம் போனில் பேசினார்கள். அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது.

அமைச்சர்கள் அவர்களது முடிவை கூறியிருந்தால் நானே ஒதுங்கியிருப்பேன். பின்னணியில் பாஜக இருக்கிறதாதென எனக்கு உறுதியாக தெரியவில்லை. சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. எனக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர்கள் யாருக்கும் பயப்படாமல் கட்சி, ஆட்சியை வழிநடத்த வேண்டும். கட்சி களங்கப்பட்டு விடக்கூடாது. கட்சி பொறுப்பை எனக்கு கொடுத்தது சசிகலாதான். சசிகலா கூறுவதை ஏற்று நான் முடிவு எடுப்பேன்" என்று கூறினார்.

இதனிடையே, டி.டி.வி.தினரகன் ஆதரவு எம்எல்ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமைச்சர்களின் அவசர நடவடிக்கையில் ஏதோ பின்னணி உள்ளது. அமைச்சர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர்.
எம்எல்ஏ-க்கள் கூட்டம் கூட்ட எங்களுக்கு அதிகாரம் உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏ-க்களின் கூட்டத்தை டி.டி.வி.தினகரன் நடத்த முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் விரைவில் கைதாகலாம்!

VIKATAN NEWS

BHUVANESHWARI K



'இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில், டி.டி.வி தினகரன் விரைவில் கைதாகலாம்' என்று தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த தகவலின் பேரில், டெல்லி போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மரணத்தில் தொடங்கிய அரசியல் அதிர்வு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான ஒரு மாற்றம் இதுவரை இந்திய அரசியலில் நிகழ்ந்திருக்குமா? என்பது கூட சந்தேகம்தான். அந்த அளவுக்கு தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. "மோசமானவற்றில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்" என்றார் பெரியார். அதுதான் தற்போது தமிழக அரசியலில் நிகழ்ந்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. இந்த இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டிக்கான காய் நகர்த்தலால் 'பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு' எனும் பரபரப்பு அரங்கேற்றப்பட்டு தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாறுதலையும் சந்தித்தது.

இந்த நிலையில், ஆர்.கே நகருக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியானது. தி.மு.க., பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து களமிறங்கிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் 'இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு நின்றன.

இரட்டை இலைக்கான சண்டை!

இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், இரட்டை இலைச் சின்னத்தை எந்த அணிக்கும் வழங்காமல் முடக்கி வைத்தது. மேலும், 'அ.தி.மு.க-வின் பெயரையும் இரு அணியினரும் பயன்படுத்தக் கூடாது' என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தனித்தனியான சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி ஆர்.கே நகரில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பட்டுவாடாக் குற்றச்சாட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர் அடிபட்டது. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ச.ம.க தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை தெரிவித்தது. இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்குப் போக 12-ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.

சின்னத்துக்காக பணம் கொடுத்தது அம்பலம் !

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் சசிகலா அணியும் ஒ.பன்னீர்செல்வம் அணியும் சேருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தைப் பெற்று தருவதற்காக டி.டி.வி தினகரனிடம் இருந்து பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுகேஷிடம் இருந்து 1.3 கோடி ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார்களையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத்தருவதற்காக, டி.டி.வி தினகரனிடம் 50 கோடிக்கு ரூபாய்க்கு பேரம் பேசியதாகவும் சுகேஷ் கூறியுள்ளார். முன் பணமாக சுகேஷ் வாங்கியத் தொகையான 1.3 கோடி ரூபாய் மற்றும் டி.டி.வி தினகரனுடன் பேசிய ஆடியோ ஆகியவற்றை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினகரன் மீது வழக்கு பதிவு ..!

இதன் அடிப்படையில் தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் சென்னை வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்ற தினகரன் அவரை சந்திக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அங்கேயே வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் சொல்கின்றனர்.

இதுகுறித்துப் பேசும் டெல்லித் தரப்பினர், "தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் சென்னை வர தயாராகி வருகின்றனர். அவர்கள் எந்த நேரத்திலும் அங்கு வரலாம். ஏற்கெனவே மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் சென்னை வந்துவிட்டார்கள்" என்ற ரகசியத் தகவலையும் கசியவிடுகின்றனர்.

சுகேஷ் சொல்லிய பி.ஜே.பி தலைவர் ?

டெல்லி பி.ஜே.பி வட்டாரத்தில் பேசியபோது, ''தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சியையும் சின்னத்தையும் சசிகலா அணிக்கு சாதகமாக முடித்துக் கொடுக்க பி.ஜே.பி-யைச் சேர்ந்த இரு தலைவர்கள் செயல்பட்டனர்'' என்கின்றனர். விசாரணையிலும் பி.ஜே.பி-யில் உள்ள அந்த தலைவரின் பெயரை சுகேஷ் சந்திரசேகர் உச்சரித்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ''இந்தத் தகவல், பி.ஜே.பி-யின் மேலிடத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மேலிடம் நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் சந்தேகம்'' என்கிறார்கள்.

சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டது குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களிடம் நான் எப்படி பேசியிருக்க முடியும்?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் .

மீண்டும் பெரியாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது .."கெட்டதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்!"
கைவிரித்த உறவுகள்..கடிவாளம் போட்ட பி.ஜே.பி!- திணறும் தினகரன்

SYED ABUTHAHIR A


“அ.தி.மு.கவில் முப்பது ஆண்டுகளாக ஆளுமை செலுத்தி வந்த சசிகலா குடும்பத்திற்கு அந்த கட்சியில் முடிவுரை எழுதப்பட்டு விட்டது” என்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர்.



ஆர்.கே நகரில் தொப்பி சின்னத்தில் தினகரனுக்கு வாக்குகேட்ட அமைச்சர்கள் எல்லாம் இன்று தினகரன் குடும்பமே கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று போர்க்கொடி துாக்கியுள்ளார்கள். எந்த குடும்பத்தை சசிகலா பலமாக நினைத்தாரோ அந்த குடும்பத்திலே குழப்பம் உச்சத்துக்கு வந்துள்ளது. திரைமறைவில் திறமையாக கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்த சசிகலா குடும்பத்தினரால், திரைக்கு முன்னால் தினகரன் திண்டாடுவதை அவர்கள் குடும்ப உறவுகளே ரசிப்பது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் அடையும் முன்பே சசிகலாவுக்கு கட்சி பதவி தரவேண்டும் என்று திவாகரன் விரும்பினார். ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியபோது தான் சசிகலாவின் குடும்பம் அ.தி.மு.க-வின் தலைமை பதிவிக்கு வந்துவிடும் என்ற கணிப்பு அ.தி.மு.கவினர் மத்தியில் ஏற்பட்டது. அதன் பிறகு சசிகலாவிடம் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வலியுறித்தியதன் பின்னணியிலும் சசிகலாவின் குடும்ப உறவுகளே இருந்தார்கள். பன்னீர்செல்வத்திடம் இருந்த முதல்வர் பதவியின் மீது சசிகலாவின் பார்வையை திரும்ப செய்தவர்களும் அதே குடும்பத்தினர் தான்.

முதல்வராக சசிகலா பதவியேற்கும் விழாவை தங்கள் குடும்ப விழாவாக கொண்டாட சசிகலா உறவுகள் திட்டமிட்ட போதுதான் திருப்பங்கள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. பன்னீர் போர்க்கொடி, உச்சநீதிமன்ற தீர்ப்பு என சசிகலாவை நோக்கி ஒவ்வொரு அம்பாக ஏவப்பட்டது. அப்போது தான் மத்திய அரசு தங்களுக்கு எதிராக திரும்பிவிட்டதை உணரத் துவங்கியது சசிகலா குடும்பம். பி.ஜே.பி அரசை சரி செய்ய சசிகலா தரப்பில் இருந்து பலகட்ட முயற்சிகளுக்கும் இன்றுவரை பலனில்லை.



சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்கிற முடிவை மத்திய அரசு எடுத்ததுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வல்லமை சசிகலா தரப்பில் இல்லாமல் போய்விட்டது. சிறைக்கு போகும் வேலையில் அவசர அவசரமாக தினகரனை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்துவிட்டு கொத்துசாவியை தினகரன் கையில் கொடுத்துவிட்டு சென்றார் சசிகலா. அது வரை தினகரனை கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசு, அவர் மீது கண்வைத்தது. பத்தொன்பது ஆண்டுகள் நிலுவையில் இருந்த பெரா வழக்கை துாசிதட்டி எடுத்தது.

அதே நேரம் தினகரன் கட்சிக்குள் குடும்ப உறவுகள் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கடுமையாக இருக்க குடும்ப உறவிலும் சிக்கல் எழுந்தது. தினகரனின் மாமா திவாகரன் பெங்களுர் சிறையில் இருந்த சசிகலாவிடம், “ஆர்.கே நகர் தேர்தல் முடிந்தவுடன் எனக்கு பதவிவேண்டும்” என்று கோரிக்கைவைத்தார். அதற்குக் காரணம் தினகரன் கட்சியில் செலுத்திய ஆளுமை தான். தங்கள் குடும்ப சொத்தாக அ.தி.மு.கவை கருதிய குடும்ப உறவுகளுக்கு தினகரனின் தனி ஆவர்த்தனம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினகரனை காலி செய்ய வேண்டும் என்ற சத்தம் அவர்கள் உறவுகளின் வாயில் இருந்தே கேட்க துவங்கியது.

மத்திய அரசோ தினகரனை கட்சியில் இருந்து கழற்றுவதற்கு முன் அவரை சுற்றி அரணாக நிற்பவர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. தினகரன் பக்கத்தில் இருந்தால் இது தான் நிலை என்ற அச்சத்தை தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் மத்திய அரசு ஏற்படுத்தியது. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய ரெய்டு அமைச்சர்களுக்கு தரப்பட்ட எச்சரிக்கை சிக்னலாகவே பார்க்கபட்டது. அதன் பிறகு தான் அமைச்சர்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதை அறிந்து கொண்ட பி.ஜே.பி தரப்பு, தமிழகத்தின் சில முக்கிய புள்ளிகள் மூலம் அமைச்சர்களிடம் தனித்தனியாக மத்திய அரசின் எண்ணத்தை பதியவைத்துள்ளார்கள். ஆட்சியும் கட்சியும் காப்பாற்றவேண்டுமானால் ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதை தவிற வேறு வழியில்லை என்பதை தெரிவித்துள்ளார்கள்.

மறுபுறம் சசிகலா குடும்பத்தில் இருந்தே தினகரனுக்கு நெருக்கடிகளை கொடுக்க முடிவு செய்து, சில அமைச்சர்களை தினகரனுக்கு எதிராக பேசச் சொல்லியுள்ளார்கள். திவாகரன் ஆதரவு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராகவே செயல்பட நெருக்கடியின் உச்சத்துக்கு சென்றார் தினகரன். ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்று குடும்பத்தையும் மத்திய அரசையும் சரி செய்துவிடலாம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்திய தினகரனுக்கு தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு அடுத்த சோதனையாக அமைந்தது. தேர்தல் ரத்து செய்யபட்டாலே அ.தி.மு.கவில் மீண்டும் ஒரு குழப்பம் வந்துவிடும் என மத்திய உளவுத்துறை சொன்ன தகவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.



மத்திய அரசு எதிர்பார்த்தது போலவே ஆர்.கே நகர் தேர்தல் ரத்தானதும் கொங்கு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக வாய்திறக்க ஆரம்பித்தனர். இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்த நினைத்த மத்திய அரசு, தினகரனுக்கு அடுத்த நெருக்கடி கொடுக்க இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தார் என்ற வழக்கை டெல்லியில் பதிவு செய்ய அமைச்சர்கள் மனநிலை அப்போதே சசிகலா குடுமபத்துக்கு எதிராக மாறியுள்ளது. அதே நேரம் திவாகரன் தரப்பில் இருந்து சில அமைச்சர்களிடம் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்குங்கள், ஓ.பி.எஸ் அணியுடன் நீங்கள் இணைந்து செயல்படுங்கள் என்று சொன்னதாக ஒரு தகவல் உள்ளது.

குடும்ப உறவுகள் ஓருபுறம், மத்திய அரசு ஒருபுறம் என தினகரனுக்கு கொடுக்கபட்ட நெருக்கடியால் தனது பதவியை ராஜினாமா செய்யும் மனநிலையில் தான் தினகரன் இருந்துள்ளார். ஆனால் எங்கிருந்தோ வந்த ஒரு தகவலால் தான் நேற்று காலை வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் சில அமைச்சர்களை வீட்டிக்கு வர வைத்துள்ளார். அவர்ளிடம் என்னை ஒதுக்கினால் ஆட்சி கவிழ்ந்துவிடும். மத்திய அரசு இந்த அரசை செயல்படவிடாது என்று சொல்லியுள்ளார். அதற்குள் ஓ.பி.எஸ், “சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி ஒன்றிணைய வாய்ப்பில்லை” என்று சொன்னதும், அமைச்சர்கள் தரப்பினர் இதைப் பார்த்து காத்திருந்தது போல “தினகரன், சசிகலா குடும்பத்தின் தலையீடு இனி இருக்காது” என்று பேட்டி கொடுத்துள்ளார்கள். இப்படி பேட்டி கொடுப்பார்கள் என்று தினகரனும் எதிர்பார்த்திருந்தாராம். இந்த சிக்கலில் தனது குடும்ப உறவுகள் சிலருக்கு போன் போட்டு என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்து இவருக்கு சரியாக ரெஸ்பான்ஸ் வரவில்லையாம். “இத்தனை நாள் நீதானே எல்லாம்னு சொன்ன, இந்த பிரச்னையும் நீயே பார்த்துக்கோ” என்ற ரீதியில் கடுப்பாக பேசியுள்ளார் குடும்ப உறவினர் ஒருவர்.

தலைக்கு மேல் தண்ணீர் போய்விட்டதை தினகரனும் உணர்ந்துள்ளார். "எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு பெரிதாக இருக்காது, மத்திய அரசுக்கு பயந்து தான் அவர்கள் செயல்படுவார்கள், இனி விசுவாசத்துக்கு வேலையில்லை” என்று தனது நண்பரிடம் போனில் சொல்லியுள்ளார். ஆனாலும் “கட்சியை விட்டு விலகாமல் கடைசி வரை போராட வேண்டும் என்ற முடிவில் தினகரன் இருக்கிறார். இரண்டு அணியும் ஒன்றிணைந்தாலே அங்கு கிளம்ப போகும் பிரச்னைக்குப் பிறகு நாம் அடுத்த கட்டமாக விஸ்வரூபம் எடுப்போம், மாவட்டச் செயலாளர்களை சரி செய்தாலே இப்போது போதும் என்ற முடிவில் தினகரன் உள்ளார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய தகவல் வந்ததும் மன்னார்குடியில் இருந்து திவாகரன் புறப்பட்டு சென்னை வந்துவிட்டாராம். இன்று கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் அறிவிப்பே தன் பின்னால் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை அறிந்து கொள்ளதானாம். ஆனால் இந்த கூட்டத்தையும் நடத்தவிடாத வேலைகளில் அமைச்சர்கள் தரப்பினர் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

“கண் அசைவிக்கு கட்டுபட்டவர்கள் எல்லாம், கல்லெறிய ஆரம்பித்துவிட்டார்கள் ”என்ற கவலை தினகரனை இப்போது வாட்டிவருகிறது.

-அ.சையது அபுதாஹிர்

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...