Thursday, April 20, 2017

தலையங்கம்
தமிழ்நாடு கையில் துருப்புச்சீட்டு

ஏப்ரல் 20, 03:00 AM

சமீபத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்திருக்கிறது. 4 மாநிலங்களில் பா.ஜ.க.வும், ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றினாலும், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பெற்ற பெருவாரியான வெற்றிதான், வருகிற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் 14–வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க.வுக்கு கைகொடுக்கும். ஆனால், முழுமையான வெற்றிக்கு இது போதாது. அதுபோல, இந்த வெற்றி டெல்லி மேல்–சபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரித்துவிடாது. தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிதி மந்திரியாக இருந்தவர். பழுத்த காங்கிரஸ்காரர். கடந்த தேர்தலில் அவரை காங்கிரஸ் கட்சி நிறுத்தி வெற்றிபெற வைத்தது. பிரணாப் முகர்ஜியின் பதவிகாலம் ஜூலை மாதத்தில் முடிகிறது. எனவே, அதற்கு முன்னால் புதிய ஜனாதிபதி தேர்தல் நடந்தாகவேண்டும். ஜூலை மாதம் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றாலும், இந்த தேர்தலுக்கான நடைமுறைகள் ஜூன் மாதத்திலேயே தொடங்கிவிடும்.

ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களாலும், மாநில சட்டசபை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாநில மேலவை உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை இல்லாதவர்கள் ஆவார்கள். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 4,120 எம்.எல்.ஏ.க்களும், 776 பாராளுமன்ற மற்றும் டெல்லி மேல்–சபை உறுப்பினர்களும், புதிய ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு அளித்து தேர்ந்தெடுக்கும் ‘எலக்ட்டோரல் காலேஜ்’ என்று கூறப்படும் ‘தேர்வுக்குழு’ என அழைக்கப்படுவார்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டுமதிப்பு 708 ஆகும். ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டுமதிப்பு அவருடைய மாநிலத்தின் மக்கள்தொகையை வைத்து கணக்கிடப்படும். அதாவது அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை, அங்குள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வகுத்து, அதில் வரும் தொகையை மீண்டும் ஆயிரம் என்ற புள்ளியால் வகுத்தால், எவ்வளவு வருமோ? அதுதான் அந்த மாநில எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பாகும். ஒரு ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால், மொத்த மதிப்பில் பாதி மதிப்பு அதாவது 5,49,442 புள்ளிகள் எடுக்கவேண்டும். தற்போது உத்தரபிரதேசத்தில் 325 எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்றிருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு 5,31,954 புள்ளிகள்தான் கிடைக்கும். இன்னும் 17,488 புள்ளிகள் கிடைத்தால்தான் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெற முடியும்.

தமிழ்நாட்டில், அ.தி.மு.க.வில் உள்ள 134 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 23,584 புள்ளிகள் இருக்கின்றன. இதேபோல் 57 எம்.பி.க்களுக்கு 40,356 புள்ளிகள் இருக்கின்றன. ஆக, அ.தி.மு.க.வின் ஆதரவுபோல, ஒடிசாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பிஜு ஜனதாதளத்திலும் எம்.எல்.ஏ.க்களுக்கு 17,433 புள்ளிகளும், எம்.பி.க்களுக்கு 19,824 புள்ளிகளும் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலிலும், முக்கியமான மசோதாக்கள் டெல்லி மேல்–சபையில் நிறைவேறுவதற்கும், அ.தி.மு.க.வின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு நிச்சயம் தேவை என்ற நிலையில், தமிழகத்தின் கோரிக்கைகள் எல்லாவற்றுக்கும் குறிப்பாக, நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம், தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கான உதவிதொகை ரூ.1,650 கோடி, வறட்சி நிவாரணத் தொகையாக ஏற்கனவே கேட்ட ரூ.39,565 கோடி, ‘வார்தா’ புயல் நிவாரணத்தொகை ரூ.22,573 கோடி உள்பட பல கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து பெறுவதற்கான சரியான நேரம் இதுதான். ஏனெனில், கையில் துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு தயங்கிக்கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூன் 27ல் துவக்கம்

பதிவு செய்த நாள்
ஏப் 19,2017 22:22



சென்னை: 'அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, உயர்கல்வி அமைச்சர், கே.பி.அன்பழகன் மற்றும் உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால் வெளியிட்டனர். கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும், பிளஸ் 2 மாணவர்கள், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விண்ணப்பத்தை பிரதி எடுத்து, அதை, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங் செயலர் முகவரிக்கு, தபால் மூலமோ அல்லது நேரிலோ
சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்தலாம்.  இதன் விபரங்கள், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேதி விபரம்

தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை
அதிகாரப்பூர்வ அறிவிக்கை - ஏப்., 30
கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு துவக்கம் - மே 1
விண்ணப்பத்தை பதிவு செய்ய கடைசி நாள் - மே 31
விண்ணப்ப பிரதியை சமர்ப்பிக்க கடைசி நாள் - ஜூன் 3
ரேண்டம் எண் வெளியீடு - ஜூன் 20
தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூன் 22
கவுன்சிலிங் துவங்கும் நாள் - ஜூன் 27
50 சதவீத ஒதுக்கீடு கோரி டாக்டர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள்19ஏப்  2017   22:51

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 1,225 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், 'இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள்படி, இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை கோரி, டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட பல இடங்களில், நேற்று தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இன்று முதல், காலையில், இரண்டு மணி நேரம், புறநோயாளிகள் பிரிவில், பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

Wednesday, April 19, 2017


வெயில் அளவு - வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன்


சென்னையில் கடும் வெயில் காரணமாக வீடற்ற வீதியோரவாசிகள் கடும்

சென்னையில் இன்று 45 டிகிரி செல்சியஸ் முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என வாட்ஸ்அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அவரது முகநூல் நிலைத்தகவல் பின்வருமாறு:

சென்னையில் இன்று 45 டிகிரி செல்சியஸ் முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என வாட்ஸ்அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்

சென்னையில் இன்றைய தினம் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டுவதே கடினம். நேற்றையதினம் போலவே காலை 11.30 மணியளவில் கடற்காற்று வீசத்தொடங்கும். இதனால், 45 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் 40 டிகிரியை வெப்பம் தாண்டாவிட்டாலும் அனல்காற்று வீசும்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள அனல் காற்று எச்சரிக்கையை 45 டிகிரி செல்சியஸ் வெயில் என தவறாக திரித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பாதீர். அத்தகைய வாட்ஸ் அப் தகவல்களைப் பகிரவும் செய்யாதீர்.

40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் வாட்டினால் என்ன செய்யலாம்?

சென்னை நகரைப் பொறுத்தவரையில் உள்பகுதிகளில் இன்று வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். மாநிலத்தின் உள் மாவட்டங்களிலும் வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னையில் கடலில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும் பகுதிகளில் இன்று 40 டிகிரி செல்சியஸுக்கும் சற்று அதிகமாகவே வெயில் இருக்கும். எனவே, வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்லவும். தொப்பியை மறக்க வேண்டாம். சூரிய வெப்பம் நேரடியாக தலையில் விழும்படி வெளியே செல்ல வேண்டாம். அப்படிச் சென்றால் நீர்ச்சத்து இழப்பு நிச்சயம் ஏற்படும். இந்த முன்னேற்பாடுகளே போதுமானது. இதற்கு மேலும் பயம் கொள்ள அவசியம் இல்லை.

சென்னையில் இதுவரை அதிகபட்சமாக கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 45 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. அதன்பின்னர் அத்தகைய அளவு வெயில் அடிக்கவில்லை. இப்போதைக்கு 45 டிகிரியில் இருந்து 48 டிகிரி வரை வெயில் அடிக்கும் என்ற வதந்தியைப் பரப்பாதீர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களின் 50% ஒதுக்கீட்டை காக்க அவசர சட்டம்: அன்புமணி ராமதாஸ்

.
மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீட்டை காக்க தமிழக அரசு அவரச சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, "தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப்படிப்பில் 50% இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கிடைப்பதற்கு காரணமான இந்த ஏற்பாட்டை தமிழக அரசு பாதுகாக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 பிரிவுகளில் 789 மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களும், 15 பிரிவுகளில் 396 மருத்துவ பட்டய மேற்படிப்புகளும், 8 பிரிவுகளில் 40 பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 1205 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்திய மருத்துவக் கழகம் உருவாக்கிய விதிகளைக் காரணம் காட்டி இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி அனைத்து மருத்துவ மேற்படிப்பு இடங்களும் வெளியாட்களைக் கொண்டு தான் நிரப்பப்படும் என்றும், அரசு மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாது என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த 50% இடஒதுக்கீட்டால் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மருத்துவர்களில் 603 பேருக்கு மருத்துவ மேற்படிப்பு இடங்கள் கிடைத்து வந்தன. இது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கும், மருத்துவ சேவைக்கும் பெரிதும் உதவியாக இருந்து வந்தது. அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டும் தான் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்பதால் மருத்துவர்கள் பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்தனர். அதுமட்டுமின்றி, 50% ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று விதி இருப்பதால் அரசு மருத்துவமனைகளுக்கு தாராளமாக மருத்துவர்கள் கிடைத்து வந்தனர். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அதிக ஊதியம் வழங்கும் நிலையில், அரசு மருத்துவமனைக்கு தரமான மருத்துவர்கள் கிடைப்பதில் நிலவிய தட்டுப்பாட்டை இந்த ஏற்பாடு தான் போக்கி வந்தது. இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில் இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு தரமான மருத்துவர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசால் கட்டமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் அரசு மருத்துவமனைக்கான மருத்துவர்களை உருவாக்கும் நாற்றாங்கால்களாகத் தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இவ்விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டியதால் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கலை சரி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்குத் தான் இருக்கிறது. உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலமாகவோ, அல்லது தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீட்டு முறை தொடரும் வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவசர சட்டம் பிறப்பிக்க வைப்பதன் மூலமாகவோ 50% இடஒதுக்கீட்டை தமிழக அரசு மீட்க வேண்டும்.

மற்றொருபுறம், மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அனைத்தும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள 3 நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக முன்தேதியிட்டு மாணவர் சேர்க்கையை நடத்தி, அதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதியையும் பெற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது அதை அரசு வழக்கறிஞர் எதிர்க்காதது ஐயத்தை ஏற்படுத்துகிறது. உயர்நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதிக்கு எதிராகவும் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுபான கடைகளை மூடச்சொன்னால் இடமாற்றம் செய்வதா?- உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

கி.மகாராஜன்



உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வது சரியல்ல என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுபான கூடங்களையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மட்டும் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் செயல்பட்ட 2800 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய இடங்களில் மதுபான கடைகளை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. புதிய இடங்களில் மதுபான கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். மதுரை பொய்கைகரைப்பட்டியில் புதிய மதுபான கடைகளை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்.

இந்நிலையில் மதுரை, சிவகங்கை, தேனி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிய இடங்களில் மதுபான கடைகள் திறப்பதற்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. அப்படியிருக்கும் போது மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற முயல்வது ஏன்? என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

டாஸ்மாக் சார்பில், மதுபான கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்தால் எங்கு தான் கடையை திறப்பது, ஊருக்குள் கடை திறக்க விடாவிட்டால் காட்டில் தான் திறக்க வேண்டும் என்றார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், புதிய இடங்களில் கடை திறப்பதில் தற்போதைய நிலை (திறக்கக்கூடாது) தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதை அதிமுகவினர் உணர்கிறார்களா?

முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தொடங்கி, தமிழகத்தின் ஆளும் கட்சியைத் தொற்றிக்கொண்டிருக்கும் பரபரப்புச் சூழலுக்கு எப்போது அக்கட்சியினர் முடிவுகொடுப்பார்கள், மாநிலப் பிரச்சினைகளில் எப்போது முழு அளவில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கவலையாக உருவெடுத்திருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கட்சித் தலைமை சசிகலாவின் கையிலும் ஆட்சித் தலைமை பன்னீர்செல்வம் தலைமையிலும் இருந்த ஒரு சின்ன இடைவெளியில், கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்கியது அரசு நிர்வாகம். அதன் பிறகு விரிசல் விழுந்தது. முதல்வர் பதவியிலிருந்து விலகிய பன்னீர்செல்வம் தலைமையில் புதிதாக ஒரு அணி உருவானது. இடையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சசிகலா சிறை செல்ல நேர்ந்தபோது, அவருடைய உறவினர் தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆனார். பழனிசாமி முதல்வரானார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிட்டன. பிளவின் விளைவாகக் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது.

ஆளும்கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டின்பேரில் தேர்தலையே தள்ளிவைத்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில், இடைத் தேர்தலில் எதிரெதிராகக் களம் கண்ட அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒன்று சேர்ப்பதற்கு இப்போது முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. இந்த நகர்வுகள் தொடர்பிலான ஒவ்வொரு நிகழ்வும் ஆளும் கட்சியை மட்டும் அல்லாமல், தமிழகப் பொதுவெளியின் பிரதான கவனத்தை முழுமையாக ஆக்கிரமித்திருப்பதால், மாநிலத்தின் பிரச்சினைகள் கவனிப்பாரின்றிக் கிடக்கின்றன.

கடுமையான வறட்சி, குடிநீர்ப் பற்றாக்குறை, விவசாயத்தின் பேரழிவு, கடன்சுமை அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பாடநூல்கள் தமிழ் மொழியில் கிடைக்காததால் மாணவர்கள் எதிர்கொள்ளும் அவதி என்று ஒவ்வொரு தரப்பும் வெவ்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் தொடர் செயல்பாடுகளால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகிறார்கள் மக்கள். இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களின் தேசியக் குரலாக ஒலிக்க வேண்டிய தமிழகத்தின் அரசு தன் உள்கட்சி சண்டையில் தானும் சிக்கி மக்களையும் சிக்கவைத்து வதைப்பது கொடுமை.

அதிமுகவினருக்கு ஒரு விஷயம் புரிகிறதா என்று தெரியவில்லை. மக்களிடம் நம்பிக்கை இருக்கும் வரைதான் எவ்வளவு பெரிய கட்சிக்கும் மதிப்பு. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால், எவ்வளவு பேர் அணி சேர்ந்தாலும் அதற்கு எந்தப் பொருளும் இருக்கப்போவதில்லை. இன்றைக்கு மக்கள் மத்தியில் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தி உருவாகியிருக்கிறது. மறுபுறம் அதன் எதிர் அணியினரின் செயல்பாடுகளும் மெச்சத்தக்கதாக இல்லை. இரு தரப்புகளுமே அவரவர் நலன் சார்ந்து மட்டுமே செயல்படுவதன் வாயிலாகப் போட்டி போட்டுக்கொண்டு, அதிமுக எனும் பெயருக்கு அதிருப்தியையே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இது நியாயமும் அல்ல; நல்லதும் அல்ல!

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...