Friday, April 21, 2017

கொலைக்கு காரணம் விபரீத வீடியோ கேமா? அல்லது புரிதலற்ற கடுமையான பெற்றோரா?

By RKV  |   Published on : 18th April 2017 01:16 PM  | 
cadele_raja

இந்த விசயத்தை எப்படி விளங்கிக் கொள்வது என்று புரியவில்லை.
இன்று கொலைக் குற்றவாளியாக மாறி இருக்கும் அந்த கேரள இளைஞனின் செயலுக்கு அவனை மட்டுமே காரணமாக்கி விட முடியாது. எனினும் இது போன்ற கொடூர குற்றங்கள், இப்படியான செய்திகள் வாசிப்பவர்களையே குலை நடுங்கச் செய்கின்றன எனில் கொலையானவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள். யூ டியூப்பில் அந்த இளைஞன் கொலைகாரனாக மாற இன்ஸ்பிரேஷனாக இருந்த வீடியோ கேமைத் தேடிப் பார்த்தால் ரத்தத்தை உறையச் செய்கிறது அந்த விபரீத விளையாட்டு. இன்றைய இளைஞர்களுக்கு பொழுது போக்க எத்தனையோ ஜாலியான, குதூகலமான விசயங்கள் இருக்கின்றனவே, ஏன் இந்த இளைஞன் தனது மனக் காயங்களுக்கு வடிகாலாக இப்படி ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்தான் எனில் அங்கிருக்கிறது விவகாரம்.
கேரள மாநிலம் நந்தன் கோட்டில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் 29 வயது ஜென்சன் ராஜா. வீட்டில் இருக்கையில் இந்த இளைஞனின் ஒரே பொழுது போக்கு தனது அறையின் கதைவை அடைத்துக் கொண்டு கம்ப்யூட்டரில் கொடூரமான வீடியோ கேம்களை சளைக்காமல் விளையாடுவது. சமீப காலங்களில் ராஜாவின் வாழவில் பெரும்பாலான நாட்கள் இப்படி டார்க் டிஜிட்டல் ஃபேண்டஸி வீடியோ கேம்களில் மூழ்கிப் போவதாகவே இருந்திருக்கிறது. 
ராஜா தான் கண்ட வன்முறையான வீடியோ கேம்களில் ஒன்றான ‘ஜோம்பி கோ பூம்’ எனும் வன்முறை மிக்க வீடியோ கேம் அடிப்படையில் திட்டமிட்டு கொலைகளை நிகழ்த்துவதற்காக ‘ஸ்டான்லி கேம்ப் ஆக்ஸ்’ எனும் கூர்மையான கோடாரியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறான். அந்த கொடூர விளையாட்டில் கொலையாளி பின்புறமிருந்தே தாக்குவான் என்பதால் கொலையுண்டவர்கள் தாங்கள் தாக்கப் படுவது குறித்து அறிந்திருக்க வகையில்லை. அதோடு விளையாட்டின் அட்சரம் பிசகாமல் கொன்றவர்களை எரிப்பதையும் ராஜா அதே விதத்தில் பின்பற்றி இருக்கிறான். எனவும் அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் இது வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராஜா தனது பள்ளிப் பருவத்தில் நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு அழைத்து வந்து விளையாட அனுமதிக்கப் படவில்லை, தனது குழந்தைப் பருவம் மற்றும் பள்ளி நாட்கள் அனைத்துயுமே தான் தனியாகவே கழித்ததாக ராஜா கூறி இருப்பதாகத் தெரிய வருகிறது. அதோடு மட்டுமல்ல ராஜாவின் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள், மகனுக்கு பண்டைய வரலாறு படிக்க ஆசை இருந்தும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த தங்களது மகன் டாக்டர் ஆகியே தீர வேண்டும் எனும் பிடிவாதம் அவனது பெற்றோர்களுக்கு இருந்திருக்கிறது.
முதலில் உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்காகப் பறந்த ராஜா, அங்கு நிலவிய நிற வெறியின் காரணமாக அங்கிருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்றான். அங்கேயும் சொற்பகாலம் தான். பின் அங்கிருந்து கல்வியில் தோற்றுப் போனவனாக இந்தியா திரும்பிய ராஜாவுக்கு தன்னை தனது பெற்றோர் ஏற்றுக் கொள்வார்களா? எனும் அச்சம் இருந்தது. பெற்றோரால் சரியான வகையில் அங்கீகரிக்கப் படாத நிலையில் தான் இப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறான் ராஜா!
பெற்றோரின் அரவனைப்பு கிடைக்காத பட்சத்தில், தொடர்ந்து தனக்கான புகழிடமாக அந்த இளைஞன் தேர்ந்தெடுத்தது டார்க் ஃபேண்டஸி வகையைச் சார்ந்த கொடூரமான வீடியோ கேம்கள் விளையாடுவது. ஒரு கட்டத்தில் அதற்கு முழு அடிமையான ராஜா அடுத்த கட்டமாக தன்னை இந்தை நிலைக்கு ஆளாகச் செய்த, தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்த பெற்றோரை கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறான். என விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலையானவர்களின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் கிடைத்த விவரங்களின் படி ராஜா தனது பெற்றோர், சகோதரி மற்றும் கண் பார்வையற்ற அத்தை உள்ளிட்டோரை மீன் குழம்பில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொன்றிருக்கிறான். மேலும் விசாரணையின் போது ராஜா  ‘ தான் தனது பெற்றோரைக் கொலை செய்தது வேண்டுமானால் பழிவாங்குவதற்காக என்று சொல்லலாம், ஆனால் எனது சகோதரியையும், அத்தையையும் இப்படி ஒரு மோசமான தனிமை வாழ்வில் இருந்தும், தனது கடுமையான சுபாவம் கொண்ட பெற்றோரிடம் இருந்தும் காப்பாற்றி விடுதலை அளிக்கவே அவர்களையும் சேர்த்து கொலை செய்து விட்டதாக தெரிவித்ததாக காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் வெளியிட்டு வரும் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் ராஜா கொலைகாரனாக மாற வீடியோ கேம் மட்டுமே காரணமல்ல என்பது தெளிவு. தன்னைப் புரிந்து கொள்ளாத, தான் அன்பாக அணுக வாய்ப்பே தராத, தன்னை தன் வாழ்நாளெல்லாம் கட்டுப்படுத்த நினைத்த தனது பெற்றோரின் அடக்குமுறைக்கு எதிரான வன்முறையாகவே இதை ராஜா குறிப்பிடுகிறான். இந்த இளைஞனுக்கு முதல் தேவை சிகிச்சையா? அல்லது தண்டனையா? என்பதை நீதிமன்றம் தீர்மாணிக்கும். ஆனால் இவனது இந்த கொடூரச் செயல்; குழந்தைகளிடத்தில் அனாவசியமாகக் கடுமை காட்ட நினைக்கும் பெற்றோர் அனைவருக்குமே ஒரு அபாய மணி! என்றே கருத இடமளிக்கிறது.

சீமைக் கருவேல் அகற்றம்: ஏன் இந்த வேகம்?

By நமது நிருபர்  |   Published on : 20th April 2017 05:44 PM  |   
karuvelam

சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்பைவிடவும் உரத்துக் கிளம்பி இருக்கிறது. நீதிமன்றங்களும் மாதத்துக்கு ஒரு தீர்ப்பை மீண்டும் மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்களுடன் வெளியிட்டு வருகின்றன.
கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவதில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்கின்றன. பரபரப்புக்கேற்ற வேகம் இல்லையென்பதும் உண்மையே!
மதுரையைச் சுற்றியுள்ள 13 மாவட்டங்களில் நீதிபதிகள் மேற்பார்வையில் அகற்றும் பணிகள் நடைபெற்றுள்ளன. பிரத்யேகமாக "வழக்குரைஞர் ஆணையர்' நியமிக்கப்பட்டு, அகற்றும் பணிகள் மேற்பார்வையிடப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் இதேபோன்ற சுற்றறிக்கை அரசிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டு, நீதிபதிகளுடன் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைப் பார்வையிடும் படங்களும் வெளிவந்திருக்கின்றன.
இந்த நடவடிக்கைகளில் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றையும் கவனத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோருகின்றனர்.
வறட்சியைத் தாங்கி வளரும் சீமைக் கருவேல மரத்தை "வேரோடு பிடுங்கும்' பணிகள் பல இடங்களில் நடைபெறவில்லை என்கிறார்கள் விவசாயிகள். பல இடங்களில் மேலாக வெட்டிவிட்டு- வேரை எடுப்பதில்லை, இதில் எவ்விதப் பயனும் இல்லை என்கிறார் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி.
மேலும், பல்லாண்டுகளாகப் பரவிக் கிடக்கும் சீமைக் கருவேல விதைகளை மீண்டும் முளைக்காமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? என்பது குறித்து எந்தப் பார்வையும் இல்லாமல் இருக்கிறோம். இதற்கும் சரியான தீர்வைக் காண வேண்டும் என்கிறார் சின்னசாமி.
காலி மனைகளில் வளர்ந்துள்ளவற்றை அகற்றும்போது, அந்த இடத்தின் சொந்தக்காரரிடம் அதற்கான செலவுத் தொகை வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பையும் பொதுமக்கள் விரும்பவில்லை. எதிர்ப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.
பல்வேறு பணிகளுக்கு மத்தியில் திடீர் திடீரென "நீதிமன்ற உத்தரவு' என்ற ஒற்றை வரியைச் சொல்லி வேலை வாங்க முற்படுவதால், கடுமையான வேலைப்பளு அதிகரிப்பதாகவும் வருவாய்த் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். "இதற்கான பிரத்யேக நிதி எதையும் உருவாக்காமல் உத்தரவுகளால் அழுத்தம் கொடுப்பது நல்லதல்ல' எனக் குறிப்பிட்டு உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் போராட்டங்களை நடத்தியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருவேல மரங்களை அகற்றும் கொள்கையோடு பிரத்யேக அமைப்புகளும் உருவாகியிருக்கின்றன. சூழலியலாளர்கள் சிலரும்கூட அரசு இதனைக் கொள்கைப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் யோசனைகளை முன்வைக்கிறார்கள்.
இதற்கிடையே, சீமைக்கருவேலம் குறித்து பரபரப்பாகப் பேசப்படுவதை ஆச்சரியத்துடன் பார்ப்பதாகக் கூறுகிறார் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் "வானகம்' மையத்தின் செயலர் ம. குமார்.
"தண்ணீரை அதிகம் உறிஞ்சுகிறது சீமைக் கருவேலம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை எவ்வித பாரபட்சமும் இன்றி- உடனடியாக எடுக்க வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், மற்ற பொதுவான இடங்களில் உள்ள சீமைக் கருவேலத்தை அகற்றுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் ஹெக்டேர் சீமைக் கருவேல மரம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தனை ஹெக்டேர் பரப்பளவிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டால், அந்த இடத்தை கட்டாந்தரையாக விட்டுவிடப் போகிறோமா? பசுமைப் போர்வையை அகற்றும் இந்தச் செயல் பூமியை மேலும் சூடாக்கி விடாதா? படிப்படியாகவாவது மாற்று மரங்களை வைப்பதற்கு எவ்வித முயற்சியும் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. அதுவும் இத்தனை வறட்சியான சூழலில். ஏன் இந்த வேகம்? இது சரியா?
அடுத்து, இந்த மரத்தின் கரியை நம்பி வாழும் மக்களை தொடர்ந்து என்ன செய்யச் சொல்லப் போகிறோம்?
லட்சக்கணக்கான மக்கள் சீமைக் கருவேல மரங்களின் கரிகளைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களையும் எரிவாயுவை நோக்கித் தள்ளிவிட்டு- பிறகு மீண்டும் "மீத்தேன்', "ஷேல்', "ஹைட்ரோ கார்பன்' எடுக்கும் திட்டங்களுக்காக நிலத்தைத் தோண்டுவதை ஆதரிக்கப் போகிறோமா?
எனவே, சீமைக் கருவேல மரம் அகற்றுவதில் உள்ள சிக்கல்களை, அவசியத்தைப் புரிதலுடன் ஏற்றுக் கொண்டு, தமிழக அரசு நல்ல திட்டத்தை அறிவிக்க வேண்டும். வெறுமனே மரங்களை மட்டும் அகற்றுவது எனப் பேசி, ஒரு பெரும் தொகையை ஒதுக்குவது சரியான தீர்வாகாது. "கமிஷனுக்கு' மட்டுமே பயன்தரும்.
சீமைக் கருவேல மரம் மற்ற மரங்களைக் காட்டிலும் உறுதியானது, எல்லா வகையான வீட்டு உபயோகப் பொருள்களும் செய்ய முடியும்.
வெளிநாடுகளில் பழுத்த சீமைக் கருவேல காய்களில் இருந்து "பிஸ்கெட்', "ஜூஸ்' தயாரிக்கப்படுகிறது. பயனுள்ள வகையில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பரந்து விரிந்துக் கிடக்கும் சீமைக் கருவேலம் குறையும் என்கிறார் குமார்.

எக்கணமும் தேவை சிக்கனம்

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம்  |   Published on : 21st April 2017 01:19 AM  |    
சிறு துளி பெரு வெள்ளம் என்பதின் முக்கியத்துவத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சிக்கனமாக இருப்பதற்கு குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொள்கிறவர்கள் அந்தப் பழக்கத்தை பெரியவர்களானாலும் அப்படியே தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
பெரும்பாலான இளைஞர்கள் சிக்கனமாக இருப்பதை கேவலமாகவும், மற்றவர்கள் மத்தியில் அவர்களின் மதிப்பு குறைவதாகவும் கருதுகிறார்கள். இன்னும் கணக்கு பார்த்து செலவு செய்பவர்களுக்கு கஞ்சன் என்ற பட்டப்பெயரையும் சூட்டுகிறார்கள். பணத்தின் அருமை தெரியாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதே இதற்கு காரணமாக அமைகிறது.
சிக்கனம், ஊதாரித்தனம், கஞ்சத்தனம் ஆகிய மூன்று பழக்கங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். ஊதாரித்தனம் வறுமையில் கொண்டு போய் விடும் அல்லது கடன் வாங்கி செலவு செய்யத் தூண்டும்.
பெற்றோர்களும், பெரியவர்களுமே வீட்டில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். நம் பழக்க வழக்கங்களே அவர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் நாம் சிக்கனத்தைக் கடைபிடிப்பது அவசியம். சிறிய விஷயம் தானே என்று நிறைய நேரங்களில் அலட்சியம் பாராட்டுகிறோம்.
பொதுவாகவே சிக்கனம் என்றால் பணத்தை மிச்சப்படுத்துவது என்று எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பணம் மட்டுமின்றி எல்லா விஷயங்களிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அவற்றுள் தண்ணீர், மின்சாரம், வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவை முக்கியமானதாகும்.
சமையல் அறையிலோ, குளியல் அறையிலோ தண்ணீர்க் குழாயைத் திறக்கும் பொழுது தண்ணீர் தேவைப்படும் அளவுக்கே திறக்க வேண்டும். முழுவதுமாகத் திறந்து பாத்திரம் கழுவுவது, வாளி நிறைந்து தண்ணீர் வழிந்து ஓடினாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு குறைவாகக் கிடைக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு என்றில்லாமல் எப்பொழுதும் சிக்கனத்தைக் கடைபிடிக்கவேண்டும். தண்ணீர் நம் வாழ்க்கைக்கு மட்டுமல்லாது எதிர்கால சந்ததியருக்கும் இன்றியமையாதது என்பதை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஒரு அறைக்குள் செல்லும் பொழுது மறக்காமல் மின்விளக்கு, மின்விசிறி ஸ்விட்சுகளை போடுபவர்கள் வெளியில் வரும்பொழுது அவற்றை மறக்காமல் அணைத்து விடவேண்டும்.
அடுப்பில் பாலையோ அல்லது வேறு உணவுப் பொருட்களையோ வைத்து விட்டு அது பற்றய ஞாபகமே இன்றி மணிக்கணக்கில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பது, அல்லது அலை பேசியில் அரட்டை அடிப்பது பெரும்பாலான இல்லத்தரசிகளின் வாடிக்கையாக இருக்கிறது. இதனால் இதனால் எரிபொருள் விரயமாவதுடன், உணவுப் பொருளும் வீணாகப் போய்விடுகிறது.
பெண்கள் கடைகளில் பார்க்கும் தட்டு, முட்டு சாமான்களை வாங்கி பரண்களில் தூங்க விடக் கூடாது. புழங்குவதற்கு என்ன அவசியமோ அவை மட்டும் வீட்டில் இருந்தால் போதுமானது. வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப உணவு தயாரிக்க வேண்டும்.
அளவுக்கதிகமாக சமைத்து குப்பையில் போடுவதும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு உபயோகிப்பதும் தவறான பழக்கங்களாகும். குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் பொழுது வயிறு முட்ட, முட்ட கொடுக்கக் கூடாது.
எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் இரைப்பையில் அரை பாகம் சாப்பாடு, கால் பாகம் தண்ணீர், கால் பாகம் காலியாக வைத்திருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அடிக்கடி வெளியில் வாங்கி சாப்பிடுவதற்குப் பதிலாக வீட்டிலேயே உணவு தயாரித்துக் கொடுப்பதால் பணம் மிச்சப்படுவதுடன் குடும்ப ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
உடை விஷயத்திலும் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கான உடைகளை அலமாரி முழுக்க அடுக்கி வைத்து அவர்கள் ஓரிரு முறை பயன்படுத்திய பின் அல்லது பயன்படுத்தாமலே உடை சிறியதாகி விட்டதென்று கழிக்கும் நிலை நிறைய வீடுகளில் உள்ளது.
நமக்கு வசதி இருந்தாலும் ஆடம்பரமான விலை உயர்ந்த உடைகளை அவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக வாங்கித்தரக்கூடாது.
எடுத்ததெற்கெல்லாம் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் படிக்கும் பள்ளியோ, கடை வீதிகளோ அருகில் இருக்கும் பொழுது அவர்களையும் கூட்டிக்கொண்டு நடந்ததே செல்ல வேண்டும். இதனால் எரிபொருள் சேமிப்புடன் நடக்கவே சலித்துக்கொள்ளும் இந்த காலத்துக்கு குழந்தைகளுக்கு நடை பயிற்சியும் கொடுத்த மாதிரி இருக்கும்.
ஆடம்பரம், பகட்டு, படாடோப வாழ்க்கை வாழ விரும்புபவர்களால் வறுமையில் வாடும் மக்களின் துயரத்தை உணர முடியாது. அவர்களிடம் தன்னலமே மிகுந்து காணப்படும். எளிமையாகவும், சிக்கனமாகவும் வாழ்பவர்களின் உள்ளங்கள் என்றும் ஆடம்பரத்தை விரும்பா.
கடைசியாக, பேசும் வார்த்தைகளிலும் சிக்கனம் வேண்டும். பேச்சில் சிக்கனம் காட்டுவதால் நம் ஆற்றல் பெருகும், சக்தி மிச்சமாகும்.

செய்தித்தாளை புதைத்தால் செடி வளரும்... இது ஜப்பானில்!
மு.ராஜேஷ்





ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பங்கள் சிறந்தவை மற்றும் துல்லியமானவை என்பதை உலகம் அறியும். காகிதத்திலும் சற்று வித்தியாசமான தொழில்நுட்பம் ஒன்றை முயற்சித்திருக்கிறார்கள். ஜப்பானியர்களுக்கு காகிதத்தின் மீது உள்ள காதலை உணர்த்த ஒரிகாமி ஒன்று போதும். இருந்தாலும் அது செயற்கையானதுதானே என்று நினைத்திருப்பார்கள் போல. அதனால் காகிதத்தை உயிர்த்தெழ வைத்துவிட்டார்கள் அந்த காகிதக் காதலர்கள்.

ஜப்பானின் தினசரி நாளிதழ் தி மைனிச்சி (The mainichi). இது ஜப்பானின் மிகப்பெரிய,அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் நிறுவனங்களில் ஒன்று.

இந்த மைனிச்சி நிறுவனம் தனது செய்தித்தாள்களில் இருந்து செடிகள் வளரும் வகையிலான காகிதத்தை சென்ற ஆண்டு தயாரித்தது. இந்தச் செய்தித்தாள்கள் மண்ணில் விழுந்த சில நாட்களில் அதில் இருந்து சிறிய தாவரங்கள் வளரத் துவங்கும். செய்தித்தாளை படித்து முடித்த பின்பு மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றினால் போதும் சிறிய செடிகள் வளர்ந்து மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கிவிடும்.

முழுவதும் மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்படும் இந்த செய்தித்தாளில் மலர்ச்செடிகளின் விதைகள் உட்பட பல செடிகளின் விதைகள் புதிய தொழில்நுட்பம் மூலமாக கலந்து தயாரிக்கப்பட்டு பின்பு அச்சிற்கு செல்கிறது.

மைகளில் உள்ள ரசாயனங்களால் கூட செடிகளின் வளர்ச்சி தடைபடக்கூடாது என்பதற்காக முழுக்க முழுக்க காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பெறப்பட்ட சாயங்களை கொண்டே செய்தித்தாள் அச்சிடப்படுகிறது.காய்கறிகள் மற்றும் பழங்களின் சாறு சுற்றுச்சூழலையும் மாசு படுத்தாமலிருப்பதோடு மட்டுமின்றி செடிகள் வளர இயற்கை உரமாகவும் பயன்படுகின்றது இதனால் செடிகளும் செழித்து வளர்கின்றன.

ஜப்பானில் உள்ள பள்ளிகளுக்காக அச்சடிக்கப்படும் இந்த நாளிதழ்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மறுசுழற்சியின் அவசியத்தையும்,இயற்கை வளத்தை காப்பது பற்றியும்,மரம் வளர்ப்பதின் அவசியத்தை உணர்த்தவும் பயன்படுகின்றன.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் நாளிதழ்களை ஆர்வத்தோடு படிப்பதோடு மட்டுமில்லாமல் அதன் பின்பு நாளிதழை மண்ணில் வைத்து செடிகளாக மாற்றுகின்றனர்.இந்த புதிய முயற்சியின் மூலமாக குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் மேம்படுவதோடு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுகிறது.



இப்படி அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள் ஒரு நாளில் 4 மில்லியன் பிரதிகள் விற்றதோடு மட்டுமில்லாமல் $700,000 டாலர்கள் வருமானத்தையும் மைனிச்சி நிறுவனம் பெற்றது.

காலையில் தினசரி நாளிதழில் தொடங்கும் காகிதப் பயன்பாடு என்பது நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு வகையில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது,காகிதம் என்றாலும் அது மக்குவதற்கு 2 வாரத்திற்கு மேல் ஆகும் மறுசுழற்சி செய்வது எளிது என்றாலும் அதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை இதுபோன்ற தொழில்நுட்பங்கள் குறைக்கலாம்.

ஜப்பானியர்களின் இந்த தொழில்நுட்பம் காகிதம் மக்கும் காலத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒரிகாமி கொக்குகள் செய்வது அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று. இனிமேல் ஒரிகாமி கொக்குகள் செய்யும்போது அவைகள் பறக்க சிறிய காட்டையும் உருவாக்கிவிடுவார்கள் ஜப்பானியர்கள்.

டெக்னாலஜியை இப்படி சுற்றுசூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்பில்லாமல் மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பயன்படுத்துவதுதான் உண்மையான வளர்ச்சி.
கவிதை அல்ல... உயிர்காக்கும் கவசம்! ஆரோக்கியம் சொல்லும் வைரமுத்து வரிகள்

பாலு சத்யா


தமிழ்நாட்டின் பெரு நகரம், சிறு நகரம், சிற்றூர்... அத்தனையிலும் இந்தக் காட்சிகளைப் பார்க்க முடியும்.... காலை நேரத்தில் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் கையில் சீட்டோடு காத்திருக்கும் பெருங்கூட்டம். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனை, அரசு கண் மருத்துவமனை போன்ற சிறப்புப் பிரிவுகள் என்றால், கூட்டத்தின் அளவைச் சொல்லி முடியாது. இதற்குச் சற்றும் குறையாதது, மாலை நேரத்தில் அந்தந்தப் பகுதிகளில் பிரபலமான மருத்துவரின் கிளினிக்குகள். டோக்கன் வாங்கிக்கொண்டு, வரிசை வரிசையாகக் கிடக்கும் நாற்காலிகளில் சுருண்டுகொண்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை வெறித்துக்கொண்டிருப்பார்கள் எண்ணற்ற நோயாளிகள். ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளிலோ, உள்ளிருப்பு நோயாளிகளின் எண்ணிக்கையே அதிகம். மருத்துவத் தொழில்நுட்பம் வெகு முன்னேற்றமடைந்துவிட்டது; ஆனாலும் நம்மைத் தாக்கும் நோய்க் கூட்டம் குறைந்தபாடில்லை. மருத்துவமனைகள் அதிகமாகிவிட்டன; நோயாளிகளின் எண்ணிக்கையோ பலமடங்கு அதிகமாகிவிட்டது. உண்மையில் நம் ஆரோக்கியம் நம் கையில் என்பது பலருக்குப் புரிவதில்லை.



அவர் ஒரு பெரு நிறுவனத்தில் நிதி மேலாளர். சமீபத்தில் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அந்தப் பிரச்னை தீர்ந்தது; புதிதாக ஒன்று முளைத்தது. வலது காலையும் வலது கையையும் அசைக்க முடியவில்லை; கூடவே கடுமையான வலி. பைபாஸ் செய்ததால் ஏற்பட்ட பக்கவிளைவாக இருக்குமோ என பயந்தவர், இதய மருத்துவரைப் போய்ப் பார்த்திருக்கிறார்.

`இது எங்க பிரச்னை இல்லை. நியூராலஜிஸ்டைப் போய்ப் பாருங்க!’ என நரம்பியல் நிபுணரிடம் அனுப்பியிருக்கிறார்கள். இப்போது நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் அவர். `நோய் நாடி நோய் முதல்நாடி...’ என்கிற திருக்குறளுக்கு ஏற்ப ஆராய்ந்து சிகிச்சை தர மருத்துவர்களுக்கு நேரமில்லை. விளைவு, பெருகுகிறது நோயாளிகளின் எண்ணிக்கை! இன்னொரு பக்கம் ஆரோக்கியம் காக்கும் படலம்! உடல் இளைக்க டயட்... உடல் உறுதிக்கு எக்சர்சைஸ்... இரு மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை டெஸ்ட்... ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை... இப்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்டியலின் பின்னால் ஓடி, ஓடிக் களைத்துப் போய்க்கிடக்கிறது இன்றைய தலைமுறை.

இந்தியாவுக்குள் நுழைந்து சில நூறு ஆண்டு காலமே ஆனாலும், அழுத்தமாக காலூன்றி நிற்கிறது ஆங்கில மருத்துவம். அதற்கு முன்னர் நம் பாரம்பர்ய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம்... இவ்வளவு ஏன்... வீட்டு வைத்தியமே போதுமானதாக இருந்தது நம் முன்னோருக்கு. நோய்க் கூட்டத்திலிருந்து தப்பிக்க, வியாதிகளிடம் இருந்து வருமுன் காக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்க, கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை. ஒரு சராசரி மனிதன் ஆரோக்கிய வாழ்வுக்குப் பின்பற்றவேண்டிய எளிய வழிமுறைகளை அழுத்தமாகச் சொல்கிறது ஒரு கவிதை.... கவிஞர் வைரமுத்து `மருத்துவ அறிக்கை’ என்ற தலைப்பில் எழுதியது. அது இங்கே...

மருத்துவ அறிக்கை

டாக்டர்
மருத்துவ முறையை
மாற்றுங்கள்

*
``வாயைத்திற’’ என்பீர்கள்
வயிறு தெரியும்படி
வாய் திறப்போம்

``நாக்கை நீட்டு’’ என்பீர்கள்

கல்கத்தா காளியாய்
நாக்கை நீட்டுவோம்

``முதுகைத் திருப்பி
மூச்சிழு’’ என்பீர்கள்

அப்போது தான்
உண்மையாய் சுவாசிப்போம்
அவ்வளவுதான்!

``அஞ்சேல்’’ என்று
அருள் வாக்கு சொல்வீர்கள்

வாசிக்க முடியாத கையெழுத்தில்
வாயில் வராத பெயரெழுதிக்
காகிதம் கிழிப்பீர்கள்

மூன்று வேளை... என்னும்
தேசிய கீதத்தை
இரண்டே வார்த்தையில்
பாடி முடிப்பீர்கள்

போதாது டாக்டர்

எங்கள் தேவை
இது இல்லை டாக்டர்

நோயாளி பாமரன்
சொல்லிக் கொடுங்கள்

நோயாளி மாணவன்
கற்றுக் கொடுங்கள்

வாய்வழி சுவாசிக்காதே

காற்றை
வடிகட்டும் ஏற்பாடு
வாயில் இல்லையென்று
சொல்லுங்கள்

சுவாசிக்கவும்
சூத்திரமுண்டு

எத்தனை பாமரர்
இஃதறிவார்?

சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரைதொட வேண்டும்

தரையெங்கே தொடுகிறது?
தலைதானே தொடுகிறது

சொல்லிக் கொடுங்கள்

சாராயம் என்னும்
திரவத்தீயைத் தீண்டாதே

கல்லீரல் எரிந்துவிடும்

கல்லீரல் என்பது கழுதை
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது
பயமுறுத்துங்கள்

ஒருகால்வீக்கம்
உடனே கவனி
யானைக்காலின் அறிகுறி

இரு கால் வீக்கம்
இப்போதே கவனி
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்

வாயில் என்ன
ஆறாத புண்ணா?

மார்பகப் பரப்பில்
கரையாத கட்டியா?

ஐம்பது தொட்டதும்
பசியே இல்லையா?

சோதிக்கச் சொல்லுங்கள்

அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னா எழுதியிருக்கலாம்.

நோயாளியை
துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்

நோயொன்றும் துக்கமல்ல

அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது

சர்க்கரை என்பது
வியாதியல்ல
குறைபாடு என்று கூறுங்கள்

செரிக்காத உணவும்
எரிக்காத சக்தியும்
சுடுகாட்டுத்தேரின்
சக்கரங்கள் என்று
சொல்லுங்கள் டாக்டர்

*



ஊமை ஜனங்களிவர்
உள்ளொளி அற்றவர்

பிணி வந்திறப்பினும்
முனி வந்திறந்ததாய்
முனகுவர்
சொல்லிக் கொடுங்கள்

யோகம் என்பது
வியாதி தீர்க்கும்
வித்தை என்று
சொல்லுங்கள்
உயிர்த்தீயை உருட்டி உருட்டி
நெற்றிப் பொட்டில்
நிறுத்தச்சொல்லுங்கள்!

உணவு முறை திருத்துங்கள்
தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம்வை

பசியோடு உட்கார்
பசியோடு எழுந்திரு

சொல்லுங்கள் டாக்டர்

அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்

பச்சை உணவுக்குப்
பாடம் நடத்துங்கள்

மருந்தை உணவாக்காதே
உணவை மருந்தாக்கு


மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியேவா

கோணாத ஒருவன்
கூனன் ஆனான் - ஏனாம்?

அவன்
டப்பா உணவுகளையே
உட்கொண்டதுதானாம்

ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை - ஏனாம்?

அவன்
உப்பில்லா உணவுகளையே
உட்கொண்டதுதானாம்

ஆரோக்கிய மனிதத் தேவை
அரைகிராம் உப்புதானே

மனிதா

உப்பைக் கொட்டிக் கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே
செடி கொடியா நீ?
சிந்திக்கச்சொல்லுங்கள்

உண்மை இதுதான்

மனிதனைத் தேடி
மரணம் வருவதில்லை!
மரணம் தேடியே
மனிதன் போகிறான்

டாக்டர்
எல்லா மனிதரையும்
இரு கேள்வி கேளுங்கள்:

``பொழுது
மலச்சிக்கல் இல்லாமல்
விடிகிறதா?

மனச்சிக்கல் இல்லாமல்
முடிகிறதா?’’

நன்றி: `வைரமுத்து கவிதைகள்’ நூல். வெளியீடு: சூர்யா வெளியீடு, சென்னை)
கடலை மிட்டாய் விற்பவர் கற்றுக்கொடுத்த அனுபவப் பாடம்! #MorningMotivation

க. பாலாஜி





காலையிலிருந்து சென்னை மக்களை வேகாத வெயிலில் அலையவிட்டு விட்டு அத்தனை அமைதியாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது சூரியன். வேலை முடித்து வீட்டுக்கு கிளம்புபவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என அத்தனை கூட்டம் எழும்பூர் ரயில் நிலையத்தில். சுண்டல், வேர்க்கடலை, சமோசா விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. அத்துடன் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களின் பாட்டுச் சத்தமும் சேர்ந்து கொண்டு ரயில் நிலையமே திருவிழா திடல் போல காட்சியளித்தது. சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறி ஜன்னல் ஓரமாக இருக்கிறதா என நோட்டம் விட்டால் எல்லாவற்றிலும் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். சரி, 'ஏதாச்சும் ஒரு இடத்துல உட்காருவோம்' என நினைத்துக்கொண்டு, நடக்கும் பாதையை ஒட்டிய ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ரயில் சேத்துப்பட்டை தாண்டியிருந்தது. ஓர் அக்கா கூடை நிறைய ஆரஞ்சு பழங்களை வைத்துக் கொண்டு "அஞ்சு பழம் அம்பது ரூவா, வாங்கிக்கோ வாங்கிக்கோ" என கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார். இன்னோர் அண்ணன் "10 பிஸ்கட் 20 ரூபா சூடா இருக்கு வேணுமா சார்" என ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு குட்டி அலுமினிய வளையத்துக்குள் தன் உடலை நுழைத்து, அதிலிருந்து வெளியே வந்து உதவி கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. கதவு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பூ கட்டிக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். செய்தித்தாள்களை கீழே மடித்து போட்டு அதில் அமர்ந்து தங்களது அன்றாட நிகழ்வுகள் குறித்து பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள் சிலர். கல்லூரி இளைஞர்கள் சிலர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டு வந்தார்கள்.

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. யாருக்கும் நிற்ககூட இடமில்லாத நிலைமை. ரயில் மாம்பலம் நிலையத்தில் நின்று புதிதாக நிறைய பயணிகளை ஏற்றிக் கொண்டு நகரும் பொழுதுதான் அந்த மனிதரை பார்த்தேன். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். ஒரு கையில் ஸ்டிக்குடன், வண்ண வண்ணமாக நீளமான பேனாக்களையும் வைத்திருந்தார். இன்னொரு கையில் நிறைய வேர்க்கடலை பர்ஃபி பாக்கெட்டுகளையும் வைத்திருந்தார். தோளில் ஒரு பை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. சிகப்பு வண்ண உடையும் முகத்தில் மாஸ்க்கும் மாட்டியிருந்தால் அப்படியே சான்டாகிளாஸ் போலத்தான் இருந்திருப்பார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு "சுவீட்டான வேர்க்கடலை ரெண்டு பாக்கெட் பத்து சார் வாங்கிக்கங்க" எனச் சொல்லி ஒவ்வொரு அடியாக முன்னேறி வந்து கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை சந்தோஷம், வழக்கமாக அந்த ரயிலில் பயணிக்கும் சிலர் அவரிடம் "என்னய்யா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போலையே.." என்று கேட்க "இன்னிக்குதான் என்னை நீ பாக்குறியா? புதுசா கேக்குற? நாம எப்பவுமே ஹாப்பி தான்யா!" - அந்த குரல் வந்த பக்கம் திரும்பி அவர் பதில் சொல்ல அந்த இடமே கலகலப்பாகியது. ஒரு கடலை பாக்கெட்கூட விற்கவில்லை.



என் பக்கத்தில் வந்ததும் கையிலிருந்த பேனாக்களையும், வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் மொத்தமாக என் கையில் கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம்தான் எதுவுமே கேட்கவில்லையே நம் கையில் அத்தனையையும் கொடுக்கிறாரே என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தொண்டையை செருமிக் கொண்டு.

"சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சொல்ல எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தார்கள். அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்களோ இன்னும் உற்சாகமாகி "சைலன்ஸ் ப்ளீஸ்.. சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சத்தம்போட மொத்தப் பெட்டியும் அமைதியான நொடியில்...

"ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான். என்ன அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்..." என சத்தம் போட்டு பாடி நிறுத்த அவர்கள் சிவாஜியோடு கோரஸ் பாடும் நண்பர்களைப் போல கோரஸ் போட்டார்கள்.

"உலகம் எந்தன் கைகளிலே.. உருளும் பணமும் பைகளிலே..." என்று பாடி தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லறைகளை ஆட்டிக் காண்பித்தபோது எங்கும் சிரிப்பலை எழுந்தது.

"யோசிச்சுப் பார்த்தா நானே ராஜா..." எனப் பாடி கொஞ்சம் யோசித்துவிட்டு "இன்னிக்கு குரல் சரியில்லை மீதியை நாளைக்கு பாடுறேன்" எனச் சொல்லி என்னிடமிருந்த வேர்க்கடலை மிட்டாய் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருக்கையில் எல்லோரும் கை தட்ட ஆரம்பித்திருந்தோம். அவருடைய கையிலிருந்த வேர்க்கடலை மிட்டாய்கள் மளமளவென விற்க தொடங்கியிருந்தன. மீதமிருந்த பர்ஃபி பாக்கெட்டுகளை கையில் பிடித்துக் கொண்டு கதவருகில் நின்று கொண்டிருந்தவரிடம் நானும் இரண்டு பர்ஃபி பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். "ரொம்ப நல்லா பாடுனீங்க... உங்க குரல்ல அவ்ளோ சந்தோஷம். சூப்பர் சார்'னு சொல்ல.. அமைதியாக என் பக்கம் திரும்பி புன்னகைத்தவர் "மனசுல சந்தோஷம் இருந்தா, அது நம்ம வார்த்தைகள்லயும் வெளிப்படும் சார். அது மட்டுமில்லாம ஏற்கெனவே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனையோட போய்கிட்டு இருப்பாங்க. நாமளும் சோகமா மூஞ்ச வைச்சுக்கிட்டு பர்ஃபி வாங்கிக்கங்கன்னு போய் நின்னா எப்படி வாங்குவாங்க. அதான் நீங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு பாட்டை எடுத்துவிட்டேன். இதுவும் பிஸினஸ் ட்ரிக்ஸ்தான் சார்!" எனச் சொல்லிய பொழுது ரயில் குரோம்பேட்டையில் நின்றிருந்தது. வேகமாக ரயிலில் இருந்து இறங்கியவர் எதிரே பீச்சுக்கு போகும் ரயிலை பிடிக்க ஸ்டிக்கை கீழே தட்டி தட்டி நடந்து கொண்டிருந்தார்..!



நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா!? "யார் பேச்சையும் நின்று கவனிக்க நேரமே கிடைப்பதில்லை" எனப் புலம்பும் அதே நேரத்தில் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த பழைய மொக்கை மெசேஜை இன்னொரு குரூப்புக்கு ஃபார்வேர்ட் செய்து கொண்டிருப்போம். அல்லது, நம் நண்பர் "டிராவலிங் டூ ஊட்டி வித் மை ஃபேமிலி" என போட்ட ஸ்டேட்டஸுக்கு கமென்ட் போட்டுக் கொண்டிருப்போம். ஆனால், 'சூரியன்' படத்தில் கவுண்டமணி சொல்வது போல "நான் இங்கே ரொம்ப பிஸி" டையலாக்கைச் செல்லாதவர்கள் ரொம்பவே குறைவுதான். ஆயிரம் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளும் அறிவை ஒருவருடைய அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியும் எனச் சொல்வார்கள். அதே போலத்தான் கடலை மிட்டாய் விற்பவரும் வருடக்கணக்கில் எம்.பி.ஏ மாணவர்கள் படிக்கும் பிசினஸ் சூட்சுமத்தை எளிதாக சொல்லிவிட்டார் தானே!?
வெயில் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காக்கும் அரசுப் பள்ளியின் 'வாவ்' முயற்சி!
வி.எஸ்.சரவணன்





கோடை வெயிலின் தாக்கத்தை, பெரியவர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சிரமம்தான். உற்சாகமாக விளையாடும்போது அதிக எனர்ஜியை இழக்கவும் செய்வார்கள். அவர்களின் உடல்சூடு அதிகமாவதையும் தவிர்க்க முடியாது. மாணவர்களின் கல்வியில் மட்டுமல்ல உடல்நிலையிலும் அக்கறைக் காட்டுகிறது நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே உள்ளது நல்லம்பாக்கம் அரசுப் பள்ளி.

"எங்கள் பள்ளிக்கு நிழலையும் குளிர்ந்த சூழலையும் தந்துகொண்டிருந்த ஏழு மரங்கள் சில மாதங்களுக்கு முன் வீசிய வர்தா புயலில் விழுந்துவிட்டன. அதனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் மாணவர்களில் பலர் சோர்ந்துவிடுவதைப் பார்த்தேன். மேலும், இந்தப் பகுதியில் பலருக்கும் 'அம்மை நோய்’ வருவதாக கேள்விப்பட்டேன். அதனால் மாணவர்களை வெயிலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, தினந்தோறும் பழங்கள் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். இந்த யோசனையை ஆசிரியர்களோடு கலந்து ஆலோசித்தபோது, ஓரிரு வகுப்புகளுக்கு என்றில்லாமல் பள்ளியில் படிக்கும் 200 மாணவர்களுக்கும் பழங்கள் கொடுக்கலாம் என்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) அனைத்து மாணவர்களுக்கு தர்பூசணி பழக்கீற்றுகளை வாங்கித்தர முடிவுசெய்தோம். அதற்காக தர்பூசணி வியாபாரம் செய்பவரை அழைத்தோம். அவர், ஒவ்வொரு மாணவருக்கும் தர்பூசணிக் கீற்றை அழகாக நறுக்கிக் கொடுத்தார். மாணவர்களும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டனர். எங்கள் பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையம் இருக்கிறது. அங்கு படிக்கும் 20 மாணவர்களுக்கும் தர்பூசணிக் கீற்றுகளைக் கொடுத்தோம். சுவையான தர்பூசணியைக் கொடுத்தவரிடம் விலையைக் கொஞ்சம் குறைத்துகொள்ளுங்கள் என்று கேட்க நினைத்தோம். ஆனால், அவரோ, பணமே வேண்டாம் என்றுக்கூறி ஆச்சர்யத்தை அளித்தார். 'பசங்களுக்குனு நீங்க நல்ல விஷயம் செய்யறீங்க. அதற்கு என்னோட பங்களிப்பாக இன்னைக்கு கொடுத்த தர்பூசணி இருக்கட்டுமே' என்றார். எவ்வளவு வற்புறுத்தியும் அவர் பணம் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவரின் மகன் எங்கள் பள்ளியில்தான் படிக்கிறான்.

இந்தச் செய்தி தெரிந்த பலரும் தாங்களும் இதற்கு உதவுதாக கூறி வருகின்றனர். ஒருவர், இளநீர் வாங்கித்தருவாக கூறியிருக்கிறார். கனடாவில் வசிக்கும் ஒருவர் பள்ளியின் இறுதி நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் பிரியாணியும் அவர்களுக்கு ரொம்ப பிடித்த ஐஸ்கிரீமோடு விருந்தளிப்பதாகக் கூறினார். ஆனால், தன் பெயரை எங்கும் சொல்லக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார். நேற்று, அனைத்து மாணவர்களுக்கும் திராட்சை பழங்கள் வாங்கிதந்தோம். இதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்" என்று மகிழ்ச்சியின் பூரிப்போடு பகிர்ந்துகொண்டார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்தோஷ் ராஜ்குமார்.



பள்ளியின் வராண்டாவில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரையிலான மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் காட்சியே பேரழகாக இருக்கிறது. மாணவர்களுக்கு உதவுவதற்கான வெளியிருந்து மட்டுமல்ல, பள்ளிக்குள் இருந்தும் ஒருவர் முன் வந்திருக்கிறார். அதுவும் அங்கு படிக்கும் மாணவர்.

" ஆமாம். அந்தப் பையன் பேர் ரஞ்சித். ஆறாம் வகுப்பு படிக்கிறான். தன் வீட்டிலிருந்து தயிரும் மோரும் எடுத்து வருகிறேன். அதை எல்லோருக்கும் கொடுக்கலாம் என்றான். அவன் அப்படிச் சொன்னது நெகிழ்வான தருணம். ஒரு நல்ல விஷயம், மற்றவர்களையும் அதில் ஈடுபடச் செய்யும் என்பது உண்மை என்பது இது ஓர் எடுத்துக்காடு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் தாங்களாகவே முன்வருவது உதவுவது மகிழ்ச்சியான விஷயம்." என்கிறார் அந்தப் பள்ளியின் ஆசிரியை நா.கிருஷ்ணவேணி.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்லதொரு அன்பு பரிமாற்றம் நிகழ்வது ஆரோக்கியமான தலைமுறைக்கு வித்திடுவதாக அமையும். இதுபோன்ற அரசுப் பள்ளிகளை வாழ்த்துவதும் உதவுவதும் அவசியம்.

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...