Wednesday, May 16, 2018

அரசு மருத்துவமனையில் சேவைக்கு லஞ்சம் : மருத்துவ கல்வி இயக்குனருக்கு, 'நோட்டீஸ்'

Added : மே 16, 2018 00:19

சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், அனைத்து சேவைக்கும் லஞ்சம் வாங்கப்படுவது குறித்து பதிலளிக்க, மருத்துவ கல்வி இயக்குனருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தமிழக மக்கள் நுகர்வோர் பேரவை தாக்கல் செய்த மனு: சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற வரும் ஏழை மக்களிடம், அங்கு பணியாற்றும் நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள், ஒவ்வொரு சேவைக்கும் லஞ்சம் வாங்குகின்றனர். ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனைகள், பணம் கொடுத்தால் தான் எடுக்கப்படுகிறது.வீல் சேர் தள்ளுவோர், சவரம் செய்யும் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர் ஆகியோருக்கு, பணம் கொடுத்தால் தான், தங்கள் சேவையை செய்கின்றனர்.இவற்றை தடுக்க, மருத்துவமனையிலும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால், கண்காணிப்புக்குழு அமைக்கப்படவில்லை.லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது, உயரதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏழை மக்களுக்கு, இலவசமாக மருந்து, மாத்திரை வழங்குவது, தமிழக அரசின் கடமை. இதில் தவறிய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.ஆணைய தலைவர் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், 'அரசு மருத்துவமனையில், இலவச சேவைக்கு பணம் வாங்கப்படுவதை ஏன் தடுக்கவில்லை.
'இதுபோன்ற புகார்களில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், இரண்டு வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
'பன்முக வித்தகர்' பாலகுமாரன்

Added : மே 16, 2018 01:35



எழுத்து, சினிமா, ஆன்மிகம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாலகுமாரன், கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என, 270க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். யோகா, தியானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரியில் 1946 ஜூலை 5ல் பாலகுமாரன் பிறந்தார். இவரது தாய் சுலோசனா, தமிழாசிரியை. பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர், தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று, தனியார் நிறுவனத்தில் 1969ல் சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். அப்போது, கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதில், சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின், பணியில் அதிகாரியாக உயர்ந்தார்.

திரைத்துறையில் பணியாற்றுவதற்காகத் தன் வேலையைத் துறந்தார். நுாறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இயக்குனர் பாலசந்தரிடம் மூன்று திரைப்படங்களிலும், பாக்யராஜிடம் சில படங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். பின், 'இது நம்ம ஆளு' படத்தை பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

இவர் எழுதிய 'மெர்க்குரி பூக்கள்', 'இரும்புக் குதிரைகள்' 'தாயுமானவன்' நாவல்கள் புகழ்பெற்றவை. 'இரும்பு குதிரை' நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. 'எழுத்துச் சித்தர்' என போற்றப்பட்ட இவர், தனது கதைகளில் அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். யோகா, தியானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

ரஜினி நடித்த 'பாட்சா' படத்தில், 'நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி' என்ற 'பஞ்ச்' வசனம், பாலகுமாரன் எழுதியது. 'நாயகன், குணா, ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முகவரி' உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

ராஜராஜ சோழன், தஞ்சை தேசம் குறித்தும் இவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து எழுதிய 2,733 பக்கங்கள் கொண்ட சரித்திரப் புனைக்கதையான, 'உடையார்' நாவல் மிக பிரபலம். இதுவரை 12 பதிப்புகள் வெளிவந்துள்ளன. இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் திரைப்பட விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

மனித எண்ணத்தை பிரதிபலித்தவர் பாலா: எழுத்தாளர்கள் புகழாரம்

தமிழ் படைப்புலகில் வாசகர்களின் பேரன்பைப் பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன். இலக்கிய உலகிலும், திரை உலகிலும் இவரது பங்களிப்புகள் பெரிது. அவரது இழப்பு வாசகர்களின் மனங்களிலும் ஒரு பெரும் வெற்றிடத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மரணத்தை வென்றவர் :

மரணத்தை வென்றவர் பட்டியலில் பாலகுமாரனுக்கு இடம் நிச்சயம். அவரது உடலுக்கு வேண்டுமானால் மரணம் இருக்கலாம். அவரது புகழுக்கு மரணம் என்பதே கிடையாது. பாலகுமாரன் பேனா, எழுத்து, புத்தகங்கள் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார். எழுத்துக்கள், புத்தகங்கள் மூலம் அவர் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். அவரது மரணம் எழுத்துலகிற்கு பேரிழப்பு.
-கே.பாக்யராஜ், சினிமா இயக்குனர்

எழுத்துக்களால் வென்றவர் :

பாலகுமாரன், எண்பதுகளில் தமிழ் வாசகப் பரப்பை விஸ்தரித்த எழுத்தாளர்களில் முதன்மையானவர். தன் பிற சகாக்களைப் போல அல்லாமல் எழுத்தை முழு நேரத் தொழிலாக கொண்டு அதில் வென்று காட்டினார். அந்த காலத்தின் தமிழ் நடுத்தர வர்க்கத்து உட்குரலாக பாலாவின் கதைகள் ஒலித்தன. அதுவரை உற்று நோக்கப்படாத சாமானியர்களை, கூட்டங்களுக்கு நடுவே கைபிடித்து அழைத்து வந்து தன் கதாபாத்திரங்களாக்கினார்.

நட்பு, பாசம், காதல், அன்பு என்பனவற்றை எல்லாம் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் கூட்டுத் தேடலாக முன்நிறுத்தினார். பெண் மனதை ஆழ்ந்து சாட்சியப்படுத்துகிற எழுத்துகளுக்காக அவர் கொண்டாடப்பட்டார். வாசித்தவர்கள் அவரது பல கதாமாந்தர்களை தமது வாழ்வுகளுக்கு தேடச் செய்தது பாலகுமாரனின் தனித்துவம். எழுத்தாளன் என்பதை தாண்டி ஒரு ஆசிரியனுக்கு உண்டான பொறுப்புடன் எவை மீறல்கள், எவை வெற்று ஜம்பங்கள் என்பதை அவரது கதைகள் அலசியதால், பலரும் அவரைத் தமது வழிகாட்டியாகவே உயர்த்திக் கொண்டனர்.

சினிமா வசனகர்த்தாவாக ஒரு முகமும், புராணங்கள் உபகதைகள் வழியாக ஆன்மிகத்தின் வேர்களை சாட்சியப்படுத்தும் நெடுநாவல்களின் ஆசிரியராக மறுமுகமும் கொண்டார். 'உடையார்' உள்ளிட்ட பல படைப்புகள் பெருங்கவனம் ஈட்டின. பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு மாபெரும் இழப்பு.
-ஆத்மார்த்தி, எழுத்தாளர்

உளவியலில் கெட்டிக்காரர் :

பாலகுமாரன் எங்கள் தலைமுறைக்கு ஒரு மூத்த சகா. எங்களை விட வயதில் பெரியவராக இருந்த போதும், எங்களுக்கு இணையாக அவர் களத்தில் நின்றவர். பெண்களின் உளவியல் தெரிந்து எழுதியதில் மிகப் பெரிய கெட்டிக்காரர். மனித மனதின் எண்ண ஓட்டங்களை அழகாக சொல்பவர். பலம், பலவீனம் இரண்டையும் அழகாக சொல்லக்கூடியவர். அப்படி சொல்லும் விதம் தான் அவருக்கு அதிக வாசகர்களை தந்தது. அடுத்தது அவரது நாவல் தலைப்புகள். அவை ஒவ்வொன்றும் கவித்துவமாக இருக்கும். 'மெர்க்குரி பூக்கள்', 'திருவடி தாமரை' இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.

தைரியமாக உறவுச் சிக்கலை சொன்னவர். தனது ஆன்மிகத்தை பட்டவர்த்தனமாக படைப்புகள் மற்றும் நடைமுறை வாழ்க்கையில் வெளிக்காட்டிக் கொண்டவர். எந்த சார்பும் இல்லாமல், எதைப் பற்றியும் அச்சமில்லாமல் வாழ்ந்தவர். பலவீனங்களை தைரியமாக அணுகி பேசியவர். போலியான தன்மை இல்லை. மனதில் பட்டதை தைரியமாக பேசியவர்.

திரைப்படத்துறையிலும் ஒரு சாதனையாளர். பத்திரிகை துறையில் எழுதி திரைக்கு வந்து, பிரபல இயக்குனர்கள், இளம் கதாநாயகர்களோடும் பணிபுரிந்துள்ளார். சினிமாவும், எழுத்துத்துறையும் வேறு வேறு. சினிமாவிற்கு ஏற்ப தன்னை மாற்ற வேண்டும். அப்படி இருந்தும் தனது சுயத்தை இழக்காமல் செயல்பட்டவர்.

'நான் ஒரு தடவை சொன்னா...நுாறு தடவை சொன்ன மாதிரி', 'நான் சத்திரியன் இல்லை, சாணக்கியன்' இப்படி இவரது பல சினிமா வசனங்கள் பேசப்பட்டவை. அவரது இறப்பு எங்களுக்கும், எழுத்து துறைக்கும் பெரும் இழப்பு.
-இந்திரா சவுந்தர்ராஜன், எழுத்தாளர்
சோதனை ஓட்டம், 'சக்சஸ்'

Added : மே 16, 2018 01:02

சென்னை: 'ஷெனாய்நகர் - சென்னை சென்ட்ரல் இடையே, விரைவு ரயில் சோதனை ஓட்டம், வெற்றி பெற்றுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்கா வரையும், விமான நிலையத்தில் இருந்து, சின்னமலை வரையும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.ஷெனாய்நகர் - நேரு பூங்கா இடையே இரண்டாவது பாதை பணியும், நேருபூங்கா - சென்ட்ரல் இடையே, இரு வழி பாதை பணிகளும் முடிந்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், மனோகரன், நேற்று முன்தினம், டிராலியிலும், நேற்று அதிகாலையில், 80 கி.மீ.,வேகத்தில், ரயில் இயக்கியும், சோதனை நடத்தினார்.நேற்று காலையில் இருந்து, மாலை வரை, இந்நிலையங்கள் இடையே, மீண்டும் டிராலியில் சென்றும், சோதனை நடத்தினார். சில இடங்களில், ரயில் பாதையில், அதிகாரிகளுடன் நடந்து சென்றும் சோதனை நடத்தினார்.'ஷெனாய்நகர் - சென்னை சென்ட்ரல் இடையே, விரைவு ரயில் சோதனை ஓட்டம், வெற்றி பெற்றுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வுவரும், 18, 19ம் தேதிகளில், சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, 4.5 கி.மீ., மெட்ரோ ரயில் பாதையில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், விரைவு ரயில் இயக்கி, சோதனை நடத்த உள்ளார். இதன்பின், பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியதும், உடனடியாக, இப்பாதைகளில், ரயில் போக்குவரத்து துவங்குவதற்கு, மெட்ரோ ரயில் நிர்வாகம் தயார் நிலையில்
உள்ளது.
முதுநிலை மருத்துவம் : நாளை இறுதி கவுன்சிலிங்

Added : மே 15, 2018 22:37

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான, அகில இந்திய கவுன்சிலிங் நாளை நடக்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள, முதுநிலை மருத்துவ இடங்களுக்கானகான கவுன்சிலிங், மார்ச், 27ல் துவங்கியது. இரண்டு கட்டங்களாக கவுன்சிலிங் நடந்தது. இதில், நிரம்பாத இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்பின.இந்நிலையில், சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங், 'ஆன்லைன்' வழியே, நாளை நடக்க உள்ளது.

இதற்கான முடிவுகள், நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இதில் நிரம்பாத இடங்கள், கல்லுாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.
அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெறலாம் : 'இ- சேவை' மையங்களுக்கு அலைய வேண்டாம்

Added : மே 15, 2018 22:24

அரசின், 'இ - சேவை' மையங்களுக்கு செல்லாமல், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, அரசின் சேவைகளை பெறும் வசதி, விரைவில் நடைமுறைக்கு வருகிறது.மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பொதுமக்கள் பெற வசதியாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' வழியாக, இ - சேவை மையத்தை செயல்படுத்தி வருகிறது.
4.6 கோடி சேவைகள் : கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் மையங்கள் என, மொத்தம், 10 ஆயிரத்து, 420 சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மையங்கள் வழியாக, 2017 - 18ல், 1.05 கோடி உட்பட, நான்கு ஆண்டுகளில், 4.6 கோடி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக்கள், இ-சேவை மையங்களுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே, அரசு சேவைகளை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, அரசு கேபிள் 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசின் சேவைகளாக, வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உட்பட, 114 சேவைகள். மேலும், மத்திய அரசின் சேவைகளான, பாஸ்போர்ட் விண்ணப்பம், 'ஆதார்' சேவை போன்ற, 95 சேவைகள் என, மொத்தம், 209 சேவைகள், அரசு, இ - சேவை மையங்கள் வழியாக வழங்கப்படுகின்றன. இனி, பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, அரசின் இந்த சேவைகளை பெற முடியும்.இதற்காக, திறந்தவெளி, 'போர்டல்' உருவாக்கப்படு கிறது. அரசு இ - சேவை இணையதளப் பக்கத்தில், 'குடிமக்கள் நுழைவு எண்' பதிவு செய்ததும், மொபைல் போனுக்கு, ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் வரும்.
முதற்கட்டம் : அதன் வழியாக, தங்களுக்கு தேவையான அரசு சேவைகளை பெற முடியும். முதற்கட்டமாக, வருவாய் மற்றும் சமூக நலத்துறை சேவைகளை மட்டுமே பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக, இதர துறைகளின் சேவைகளை பொதுமக்கள் பெறலாம். இந்த திட்டம், விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
'ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் அவசியம் இல்லை'

Added : மே 15, 2018 22:54

புதுடில்லி: ''மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள எண் அவசியம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.தன்னார்வ ஏஜன்சிகளுக்கான நிலைக்குழு கூட்டத்தில், அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஜிதேந்திர சிங் நேற்று பேசியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அவசியம் கிடையாது. உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை, வங்கிகளை அணுகாமல் சமர்ப்பிப்பதற்கான தொழில் நுட்பத்தை செயல்படுத்த, ஆதார், கூடுதல் அம்சமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆதார் இல்லாததால், சில ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெறுவதில் சிரமம் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அமைச்சரின் பதில், முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது.
நானே அடுத்த முதல்வர்: எடியூரப்பா - குமாரசாமியே அடுத்த முதல்வர்: சித்தராமையா

Added : மே 16, 2018 02:30 | 




 
பெங்களூரு: சட்டசபை கட்சி தலைவராக இன்று நான் தேர்வாகிறேன் என பா.ஜ. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறினார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பா.ஜ. 104 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னர் 7 நாள் கெடு விதித்துள்ளார்.இது குறித்து எடியூரப்பா கூறியது, இன்று பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்நடக்கிறது. இதில் நான் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளேன். பின்னர் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்துவேன். இனி கவர்னரின் முடிவுபடியே செயல்படுவோம். நிச்சயம் முதல்வராக பொறுப்பு ஏற்பேன் என்றார்.

குமாரசாமியே முதல்வர் : சித்தராமையா

இதற்கிடையே மத சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஆதரவு அளித்து குமாரசாமியை முதல்வராக்க தயார் என காங். அறிவித்தது. நேற்றுநடந்த ஓட்டு எண்ணிக்கையில் காங். 78 இடங்களில் வெற்றிபெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களில் வெற்றிபெற்றது. இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியது, மதசார்பாற்ற ஜனதா தள கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்துவோம். முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்பார். எங்களுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்றார்..

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...