Thursday, May 17, 2018


தேர்வில் மகன் தோல்வி: இனிப்பு வழங்கிய தந்தை

Updated : மே 17, 2018 01:30 | Added : மே 17, 2018 01:26 | 




போபால்:மத்திய பிரதேசத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மகன் தோல்வி அடைந்ததை, அவனது தந்தை, இனிப்பு வழங்கி, உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார்.

மத்திய பிரதேசத்தில், 10வது மற்றும் பிளஸ் ௨ பொது தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இதில், 10ம் வகுப்பில், 34 சதவீத மாணவர்களும், பிளஸ் ௨வில், 32 சதவீத மாணவர்களும் தோல்வி அடைந்தனர்.

இதனால், மனமுடைந்து, 11 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ம.பி., யின் சாகர் என்ற பகுதியை சேர்ந்த, சுரேந்திரா என்பவரின் மகன், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தான். இதை கேள்விப்பட்ட சுரேந்திரா, இனிப்புகள் வாங்கி, சொந்தக்காரர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.மேள தாளங்களை வரவழைத்து, அப்பகுதியில் நடனமாடியபடி ஊர்வலம் சென்று, தன் மகனின் தோல்வியை கொண்டாடினார்.

இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். முதலில், அதிர்ச்சி அடைந்த சுரேந்திராவின் மகன், பின்னர் மெல்ல, கொண்டாட்டங்களில் இணைந்து கொண்டான்.
'மகனின் தோல்வியை ஏன் கொண்டாடுகிறீர்கள்' என, பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:

தேர்வில் தோல்வி அடைந்தால், வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைக்கின்றனர்; அது தவறு. ஒரு பாதை மூடிவிட்டால், வேறு பாதைகள் திறக்கும் என்பது அவர்களுக்கு புரிய வேண்டும்.இதற்காக மனமுடைந்து தவறான முடிவுகளை தேடிச் செல்லக் கூடாது. எனவே, அந்த மனநிலையை மாற்றவே, இதை கொண்டாடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
சட்ட வல்லுனர்கள் ஆலோசனைக்கு பின் கவர்னர்... அழைப்பு : கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்பு : 15 நாட்களில் மெஜாரிட்டி நிரூபிக்க அவகாசம்

Updated : மே 17, 2018 00:25 | Added : மே 17, 2018 00:23




  பெங்களூரு: கர்நாடக தேர்தலில், அதிக இடங்களை பிடித்துள்ள, பா.ஜ.,வின் எடியூரப்பாவை, ஆட்சி அமைக்குமாறு, கவர்னர் வஜுபாய் வாலா, நேற்றிரவு அழைப்பு விடுத்தார். இன்று காலை, 9:00 மணிக்கு, கர்நாடகாவின், 27வது முதல்வராக பதவியேற்கிறார். இவருடன், நான்கு அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அவருக்கு, 15 நாட்களில் மெஜாரிட்டி நிரூபிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், 15ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள, 222 தொகுதிகளில், 104ல் பா.ஜ.,வும், 78ல் காங்கிரசும், 37ல் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளன. மூன்றில், பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க, 112 எம்.எல்.ஏ., ஆதரவு தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு பொறுப்பேற்பதில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையே, பா.ஜ., ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சேர்ந்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க, கவர்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, குமாரசாமி முதல்வராக பதவியேற்க, முழு ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. எனினும், காங்., கட்சியின் சட்டசபை தலைவர், இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ், எம்.எல்.ஏ.,க்கள் என, மொத்தம், 116 உறுப்பினர்களின் பலம் இருப்பதாக, கவர்னரிடம், குமாரசாமி கடிதம் அளித்துள்ளார். அதே சமயம், 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ., அதன் சட்டசபை தலைவராக, எடியூரப்பாவை தேர்ந்தெடுத்துள்ளது.தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ., எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க, கவர்னரிடம் உரிமை கோரியது.இதையறிந்த, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் முன் அணிவகுக்க, அனுமதி கோரினர். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்து, 10 பேரை மட்டுமே அனுமதித்தார். இதனால், ராஜ்பவன் முன், பா.ஜ.,வுக்கு எதிராக, இரு கட்சி தொண்டர்களும் கோஷம் எழுப்பினர். அவர்களை மிகவும் சிரமப்பட்டு, போலீசார் அப்புறப்படுத்தினர்.பின், கவர்னரை, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் சந்தித்தனர். 'தங்கள் கூட்டணிக்கு தான் முழு பெரும்பான்மை உள்ளது. இதன் சட்டசபை குழு தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தன்னை ஆட்சி அமைக்க, அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினர். இதற்கு பதிலளித்த கவர்னர், ''சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்தும், இது போன்ற நிலை, கோவா மாநிலத்தில் ஏற்பட்ட போது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்தும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கிறேன்,'' என, தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழகத்தில் நடந்த, 'கூவத்துார் பார்முலா'வை பின்பற்றி, நீச்சல் குளம், பார் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய, பிடதியிலுள்ள ஈகிள் டன் சொகுசு விடுதிக்கு, காங்., சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், சொகுசு பஸ்களில் நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.இதற்கிடையில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு வசந்த்நகரிலுள்ள நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றில், இரண்டு நாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆகிய மூன்று கட்சிகளுமே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், கவர்னர் வஜுபாய் வாலா, உச்சநீதிமன்ற மூத்த வக்கீல்கள் சோலி சொரப்பா, முகுல் ரோத்தகி ஆகியோருடன் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். நேற்றிரவு, 9:30 மணியளவில், பா.ஜ.,வை ஆட்சி அமைக்கும்படி அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு கவர்னர் வஜுபாய் வாலா எழுதிய அதிகாரபூர்வ கடிதம் வெளியானது. 15 நாட்களுக்குள், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வராக எடியூரப்பா, இன்று காலை 9:00 மணிக்கு பதவியேற்பதாக, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ் அறிவித்தார். இவருடன், ஈஸ்வரப்பா, அசோக், கோவிந்த் கார்ஜோல், ஸ்ரீராமுலு ஆகிய நான்கு அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த காங்கிரஸ், ம.ஜ.த.,வினர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.

சுயேச்சையை தப்ப விட்ட ஈஸ்வரப்பா : முல்பாகல் சுயேச்சை எம்.எல்.ஏ., நாகேஷை, காங்கிரஸ் பிரமுகர் டி.கே.சிவகுமார், நேற்று முன்தினமே தன்னுடன் அழைத்து வந்தார். மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ.,வான ராணிபென்னுாரின் சங்கரை, பா.ஜ.,வை சேர்ந்த மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா, பெங்களூரு டாலர்ஸ் காலனியிலுள்ள எடியூரப்பா வீட்டுக்கு அழைத்து வந்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தார். இதை அறிந்த, சங்கரின் மைத்துனர்களும், எம்.எல்.ஏ.,க்களுமான பைரதி பசவராஜ், பைரதி சுரேஷ் ஆகியோர், தொலைபேசியில் பேசி, உடனடியாக சித்தராமையா வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டனர். அங்கு வந்த சங்கரை, சித்தராமையா, தன் காரில் ஏற்றி கொண்டு, குயின்ஸ் ரோடு காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தார். சங்கரை தப்பிக்க விட்ட, ஈஸ்வரப்பாவை, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக திட்டினார்.

ஆனந்த் சிங் வராததால் பரபரப்பு : காங்., - எம்.எல்.ஏ.,க்கள், ௭௮ பேரில், பல்லாரி விஜயநகராவை சேர்ந்த ஆனந்த் சிங் மட்டும் வரவில்லை. காலை முதல் மாலை வரை காத்திருந்தும் பயனில்லாமல் போனது. ரிசார்ட்டுக்கு செல்வதற்கு தயாரான நிலையில், அவர் வராததால் பதற்றம் ஏற்பட்டது. அவரை தொடர்பு கொண்டு முயற்சித்தும், தொடர்பில் கிடைக்கவில்லை. அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரித்த போது, விமானத்தில் பெங்களூரு வருவதாக அறிந்த காங்கிரஸ் தலைவர்கள், ஜமிர் அகமது கான், நாகேந்திரா ஆகியோர் சென்றனர். ஆனால், ஆனந்த் சிங் வராததால், திரும்பி வந்தனர். இவர், தேர்தலுக்கு முன், பா.ஜ.,விலிருந்து காங்கிரசுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரமலான் நோன்பு இன்று துவக்கம்

Added : மே 17, 2018 05:53



சென்னை: இஸ்லாமியர்கள் புனித கடமையான, ரமலான் நோன்பு, இன்று(மே-17) துவங்குவதாக, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று துவங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசின் தலைமை காஜி, முகமது சலாவுதீன் அய்யூபி, நேற்று அறிவித்தார். ரமலான் மாத பிறை, பல பகுதிகளில் தென்பட்டதால், நோன்பு துவங்குவதாக, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

Updated : மே 17, 2018 06:07 | Added : மே 17, 2018 04:43 | 



  புதுடில்லி : எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று(மே-17) காலை கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கிறார்.

இதுதொடர்பாக, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்ற வாதத்தின் போது மத்திய அரசின் வழக்கறிஞர் ரோஹத்கி தெரிவிக்கையில், 'காங்., மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். கவர்னரை அவரது பணியை செய்ய விடுங்கள். அவர் வேலைகளில் தலையிட வேண்டாம். ஆட்சியமைக்க அழைப்பது கவர்னரின் கடமை. கவர்னரும், ஜனாதிபதியும் எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. கவர்னர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால் எந்த சட்டமும் இயற்றப்பட்டது' என்றார்.

தடையில்லை:

இதனை தொடர்ந்து, நீதிபதிகள் நீண்ட ஆலோசனைக்கு பின், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து, முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு கர்நாடகாவில் எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.

எடியூரப்பாவுக்கு நோட்டீஸ்:

விடிய விடிய நடந்த வாதங்களை கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க தடையில்லை. நாளை(மே 18) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும். மே 15ம் தேதி கவர்னருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும். பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிளஸ்–2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் 28–வது முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை




பிளஸ்–2 தேர்வு முடிவுகளின் படி விருதுநகர் மாவட்டம் உதயமாகி 33 ஆண்டுகளில் 28–வது முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மே 17, 2018, 04:15 AM

விருதுநகர்,

பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 24,297 மணவ–மாணவிகளில் 23,580 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.05 ஆகும். இதன்படி இம்மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 10,797 மாணவர்களில் 10,285 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.26 ஆகும். தேர்வு எழுதிய 13,500 மாணவிகளில் 13,295 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.48 ஆகும்.

விருதுநகர் மாவட்டம் கடந்த 1985–ம் ஆண்டு உதயமானது. 1985–ம் ஆண்டிலிருந்து 2010– ம் ஆண்டு வரை இம்மாவட்டம் தொடர்ந்து 25 ஆண்டுகள் பிளஸ்–2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து 2015–ம் ஆண்டும் 2017–ம் ஆண்டும் முதலிடம் பெற்றது. தற்போது இந்த ஆண்டு 28–வது முறையாக மாநில அளவில் பிளஸ்–2 தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள 3 கல்வி மாவட்டங்களில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 7,921 மாணவ–மாணவிகளில் 7,650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.58 ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 7,670 பேரில் 7,430 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.87 ஆகும். விருதுநகர் கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 8,706 பேரில் 8,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.63 ஆகும்.

பள்ளி கல்வித்துறை பிளஸ்–2 தேர்வில் மாநில மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களின் பெயர்களை அறிவிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ள நிலையில் இம்மாவட்டத்தில் முதல் மூன்று அதிக மதிப்பெண்கள் பெற்ற விவரங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் 1,178 மதிப்பெண்களும் 2–ம் இடம் பெற்றவர் 1,177 மதிப்பெண்களும் 3–ம் இடம் பெற்றவர் 1,174 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் 1,171 மதிப்பெண்களும் 2–ம் பெற்றவர் 1,170 மதிப்பெண்களும் 3–ம் இடம் பெற்றவர் 1,168 மதிப்பெண்களூம் பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 1–ம் இடம் பிடித்தவர் 1,177 மதிப்பெண்களூம் 2–ம் இடம் பெற்றவர் 1,176 மதிப்பெண்களூம், 3–ம் இடம் பெற்றவர் 1,170 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 73 மாணவ–மாணவிகள் 1,151 லிருந்து 1,180 வரையிலும், 215 மாணவ–மாணவிகள் 1,126 லிருந்து 1,150 வரையிலும், 354 மாணவ–மாணவிகள் 1,101 லிருந்து 1,125 வரையிலும் 2,643 மாணவ–மாணவிகள் 1,001 லிருந்து 1,100 வரையிலும் 4,155 பேர் 901 லிருந்து 1,000 வரையிலும், 5,094 பேர் 801 லிருந்து 900 வரையிலும் 5,083 பேர் 701 லிருந்து 800 வரையிலும், 6,680 பேர் 700–க்கு கீழும் மதிப்பெண் பெற்றிருந்தனர்.

அறிவியல் பாட தேர்வினை 6,516 மாணவர்களும் 8,173 மாணவிகளும் ஆகமொத்தம் 14,689 பேர் எழுதியிருந்தனர். இதில் 6,275 மாணவர்களும் 8,078 மாணவிகளும் ஆக மொத்தம் 14,353 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.71 ஆகும். வணிகவியல் பாட பிரிவு தேர்வினை 3,033 மாணவர்களும் 4,179 மாணவிகளும் ஆகமொத்தம் 7,212 பேர் தேர்வு எழுதினர். இதில் 2,877 மாணவர்களும் 4,092 மாணவிகளும் ஆகமொத்தம் 6,969 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.63 ஆகும். கலை பிரிவில் 150 மாணவர்களும் 196 மாணவிகளும் ஆக மொத்தம் 346 பேர் தேர்வு எழுதினர். இத்ல் 141 மாணவர்களும் 191 மாணவிகளும் ஆகமொத்தம் 332 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.95 ஆகும். தொழில்நுட்ப பாடப்பிரிவில் 1,098 மாணவர்களூம் 952 மாணவிகளும் ஆக மொத்தம் 2,050 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 992 மாணவர்களூம் 934 மாணவிகளும் ஆகமொத்தம் 1,926 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.95 ஆகும்.

ஆங்கிலப் பாடத்தில் தேர்வெழுதிய 24,297 பேரில் 24,022 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.87 ஆகும். மொழிப்பாடத்தில் தேர்வெழுதிய 24,297 பேரில் 24,130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.31 ஆகும். இயற்பியல் பாடத்தில் தேர்வெழுதிய 14,689 பேரில் 14,513 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.8 ஆகும்.

வேதியியல் பாடத்தேர்வு எழுதிய 14,689 பேரில் 14,403 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.05 ஆகும். உயிரியல் பாடத்தேர்வு எழுதிய 8,814 பேரில் 8,685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.54 ஆகும். தாவரவியல் பாடத் தேர்வில் தேர்வெழுதிய 2,392 பேரில் 2,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.08 ஆகும். விலங்கியல் தேர்வெழுதிய 2,392 பேரில் 2,324 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.16 ஆகும். கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வெழுதிய 7,517 பேரில் 7,444 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.03 ஆகும்.

கணக்கு பாட தேர்வெழுதிய 11,606 பேரில் 11,464 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.78 ஆகும். வரலாற்று பாட தேர்வெழுதிய 4,100 பேரில் 4,028 பேர் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி சதவீதம் 98.24 ஆகும். வணிகவியல் பாட தேர்வு எழுதிய 8,349 பேரில் 8,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.69 ஆகும். கணக்கியல் பாட தேர்வெழுதிய 7,561 பேரில் 7,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.98 ஆகும். பொருளியல் பாட தேர்வு எழுதிய 7,558 பேரில் 7,377 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.61 ஆகும்.

இம்மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் தேர்வெழுதிய 96 பேரில் 71 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 73.96 ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேர்வெழுதிய 125 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 11,342 பேர்களில் 11,164 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.43 ஆகும்.

அரசு பள்ளிகளில் தேர்வெழுதிய 8,153 பேரில் 7,685 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.26 ஆகும். மாநில அளவில் அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. நகராட்சி பள்ளிகளில் தேர்வெழுதிய 357 பேரில் 351 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.32 ஆகும். சுயநிதி பள்ளிகளில் தேர்வெழுதிய 2,884 பேரில் 2,861 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.26 ஆகும். அரசிடம் இருந்து பகுதி உதவி பெறும் பள்ளிகளில் தேர்வெழுதிய 1,340 பேரில் 1,323 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.73 ஆகும்.
மாவட்ட செய்திகள்

சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை; 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது



சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மே 17, 2018, 05:18 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. ஆனால் அவ்வப்போது சூறைக்காற்றுடன் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதையொட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த மழையால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் சேலத்தில் நேற்று பகலில் கடும் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து மாலை வானம் மேமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மாநகரில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனையாமல் இருக்க இருசக்கர வாகனங்களில் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் குடைகள் பிடித்தவாறும், தலையில் துணிகளை போட்டுக்கொண்டும் சென்றனர். சேலம் பெரமனூர் நாராயணபிள்ளை தெருவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அதேபோல் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.

இந்த வீடுகளில் தேங்கிய தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். இதனால் அவர்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். மழையின் போது வீசிய சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. சாய்ந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.

மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் சரிசெய்யப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு இடையே சென்று வந்தனர். சேறும், சகதியுமாக உள்ள சாலைகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியல் வெளியீடு





சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

மே 17, 2018, 05:29 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் பட்டியலை அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், முறையாக தமிழக அரசின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா? என்றும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்யுமாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதன்குமாருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், தங்களது பகுதியில் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரும்பாலான நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடர் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஒருசில பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது தெரியவந்தது.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 107 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மட்டுமே அரசு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், 112 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல்கள் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் உள்ள தகவல் பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் நகர்ப்புற உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் நேற்று சேலம் மாநகரில் அங்கீகாரம் பெற்ற நர்சரி, பிரைமரி பள்ளிகள் எது? அங்கீகாரம் பெறாத பள்ளிகள் எது? தொடக்க அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எது? போன்ற விவரங்களை உதவி தொடக்க கல்வி அலுவலர் மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டினர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலங்களிலும் அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு அங்கீகாரம் இல்லாத நர்சரி, பிரைமரி பள்ளிகள் அடங்கிய பட்டியல் தயாரித்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தையை பள்ளியில் சேர்க்கும் முன்பு அந்த பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா? என தெரிந்து சேர்க்க வேண்டும். மேலும், அரசு விதிமுறைகளை பின்பற்றாத 35 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றனர்.

NEWS TODAY 02.01.2026