Thursday, May 17, 2018


‘ஜூன் 7-ம் தேதி ‘காலா’ ரிலீஸாவது உறுதி; வதந்திகளை நம்ப வேண்டாம்’ - தயாரிப்பு நிறுவனம்

Published : 16 May 2018 19:28 IST

 

ஜூன் 7-ம் தேதி ‘காலா’ படம் ரிலீஸாவது உறுதி என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இதன் இசை வெளியீட்டு விழா கடந்த 7-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், மணிகண்டன், அஞ்சலி பாட்டீல், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

‘காலா’, ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் எனத் தகவல் பரவியது.



அதாவது, ‘ஜுராஸிக் பார்க்’ ஹாலிவுட் படத்தின் அடுத்த பாகமான ‘ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்’ ஜூன் 8-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாவதாகவும், இந்தியாவிலும் நிறைய திரையரங்குகளில் வெளியாவதால் ‘காலா’ படத்துக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப் போகிறது என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது, ‘எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். திட்டமிட்டபடி ஜூன் 7-ம் தேதி ‘காலா’ ரிலீஸாவது உறுதி. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன’ என்று பதில் அளித்துள்ளனர். ‘ஜுராஸிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்’ ஜூன் 22-ம் தேதி தான் ரிலீஸாகிறது. அப்படியிருக்கும்போது யார் இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டது என விசாரித்து வருகின்றனர்.
தவறான சிகிச்சையால் பாதிப்பு : இழப்பீடு வழங்க உத்தரவு

Added : மே 17, 2018 06:15

சென்னை: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம், 1.90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர், ரேணுகா, 45. உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மேற்கு தாம்பரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.

மன உளைச்சல் ; டாக்டர் பரிசோதனை செய்த போது, கர்ப்ப பையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை பின், அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது.சோதனை செய்த போது, சிகிச்சையின் போது, சிறுநீரக குழாய் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, சரி செய்யப்பட்டது. இதற்கு, 80 ஆயிரம் ரூபாய் செலவானது. தவறான சிகிச்சையால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானேன். மருத்துவச் செலவுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என, செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில், ரேணுகா, 2013ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையில், 'பிரபல அறுவை சிகிச்சை நிபுணரால், சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில், தவறேதும் நடக்கவில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இழப்பீடு : இந்த வழக்கு விசாரணையில், நீதிபதி கலியமூர்த்தி, நீதித் துறை உறுப்பினர்கள் பிரமிளா, பாபு வரதராஜன் பிறப்பித்த உத்தரவு:மருத்துவமனை நிர்வாகம் உரிய சேவை வழங்கவில்லை. மருத்துவச் செலவு தொகை, 80 ஆயிரம் ரூபாயுடன், இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 1.90 லட்சம் ரூபாய், மருத்துவமனை நிர்வாகம், மனுதாரருக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
மது கடைகளை மூட வலியுறுத்தி மரணித்த மாணவர் சாதனை

Added : மே 17, 2018 02:16




திருநெல்வேலி: தமிழகத்தில், மதுக்கடைகளை ஒழிக்க வேண்டி, துாக்கிட்டு தற்கொலை செய்த மாணவர், பிளஸ் 2 தேர்வில், 1,024 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கே. ரெட்டிபட்டியைச் சேர்ந்த மாணவர் தினேஷ் நல்லசிவன். மது பழக்கத்திற்கு அடிமையான, தன் தந்தையின் செயல்பாட்டை நினைத்து, கடந்த சில தினங்களுக்கு முன், திருநெல்வேலி ரயில்வே பாலத்தின் கீழ், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'என் தந்தை போன்றவர்கள், மதுவிற்கு அடிமையாகி குடும்பத்தை நிர்கதியாக்கி வருகின்றனர். 'எனவே, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட, அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை மூடுவேன்' என்று தெரிவித்து இருந்தார்.மாணவர் தினேஷ், நாமக்கல் தனியார் பள்ளி யில், பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு, மருத்துவர் ஆகும் கனவில், 'நீட்' தேர்விற்கும் விண்ணப்பித்திருந்தார். நீட் தேர்விற்கு இரண்டு தினங்களுக்கு முன், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று வெளியான, பிளஸ் 2 தேர்வில் தினேஷ், 1,024 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.தமிழ் - 194, ஆங்கிலம் - 148, இயற்பியல் - 186, வேதியியல் - 173, உயிரியல் - 129, கணக்கு - 194 என, மொத்தம், 1024 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.'மதிப்பெண் வாங்கி என்ன பயன்... அவன் உயிரோடு இல்லையே' என்று அவரது உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
62 கைதிகள் தேர்ச்சி

Added : மே 17, 2018 02:13

சென்னை: தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்து, 103 கைதிகள், பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அதில், ஆறு பெண் கைதிகள் உட்பட, 73 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், புழல், கடலுார், சேலம், பாளையங்கோட்டை, வேலுார், திருச்சி, மதுரை மற்றும் மகளிர் தனிச் சிறைகளில் இருந்து தேர்வு எழுதிய, நான்கு பெண் கைதிகள் உட்பட மொத்தம், 62 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில், கோவை மத்திய சிறையில் கைதி, தமிழழகன், 1,050 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர், வணிகவியல் பாடத்தில், 200க்கு, 199 மதிப்பெண்பெற்றுள்ளார். வேலுார் சிறை கைதி பால்ராஜ், 1,022, புழல் சிறை கைதி, சூளை இப்ராகிம், 1,005 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

வேலுார் மாவட்டத்தில், டீக்கடை, செங்கல் சூளை, பீடி கம்ெபனி, தோல் தொழிற்சாலைகளில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில், 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆம்பூரைச் சேர்ந்த பஷீரா யாஸ்மின், 1,200க்கு, 943 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார்.
முதுநிலை இயன்முறை மருத்துவம் படிக்க வாய்ப்பு

Added : மே 17, 2018 02:08

சென்னை: முதுநிலை இயன்முறை மருத்துவ படிப்பில் சேர, வரும், 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் செயல்படும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.டி., எனப்படும், முதுநிலை இயன்முறை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இடஒதுக்கீடு மற்றும் இளநிலை படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர், www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில், வரும், 22ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நேரடி விண்ணப்ப வினியோகம் கிடையாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு, மே, 23ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் கிடைக்கும் வகையில், அனுப்பி வைக்க வேண்டும்.
மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் எப்போது?

Added : மே 17, 2018 02:08

சென்னை: ''தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஜூன், மூன்றாம் வாரம் துவங்கும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 6ல், நடந்தது. இதன் முடிவு, ஜூன், 5ல் வெளியாக உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகி உள்ளதால், மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், ''எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், ஜூன் மூன்றாம் வாரத்தில் நடைபெறும்,'' என்றார்.
ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, 'ரிசல்ட்'

dinamalar 17.05.2018

பொது தேர்வு முடிவுகளில், பாராட்டு, வாழ்த்து, கேக் ஊட்டுவது என்ற ஆரவாரத்துக்கு, அறவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.



பரபரப்பான பொது தேர்வு முடிவுகள், மிகவும் அமைதியாக வெளியிடப்பட்டதால், ஆசிரியர் களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

பாராட்டு மழை

தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பிற்கு, தமிழக அளவிலான நுழைவு தேர்வு ரத்தான பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பு களுக்கு சேர்க்கை நடந்தது. இதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கும், அதன், 'கட் ஆப்' மதிப் பெண்ணுக்கும், அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.

மாநில அளவில், எந்த பள்ளி, 'டாப்' மதிப்பெண் பெறுகிறது; பள்ளி அளவில், முதல் மதிப்பெண் பெறும் மாணவ - மாணவியர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. தேர்வு முடிவை வெளியிடும் போது, மாநில அளவில், 'டாப்பர்' ஆக வரும் மாணவர்கள், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் களும், அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

அவர்கள், 'டாப்பர்' ஆக வர, என்ன முயற்சி எடுத்தனர் என, ஊடகங்களில் பேட்டி எடுக்கப்படும். பெரும்பாலானவர்கள், 'டாக்டர் ஆக வேண்டும்; கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம்' என, தெரிவிப்பர்.இப்படி கூறிய பல மாணவர்கள், உயர்கல்வியை முடித்ததும், முதல் ஆளாக, வெளிநாடுகளிலும், பெருநகரங்களிலும்

பணியில் சேர்வதோடு, கிராமங்களை கண்டுகொள்வதில்லை. பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களை, மற்ற மாணவர்கள், தோளில் துாக்கி வைத்து கொண்டாடுவர். அவர்களின், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், கேக் ஊட்டி, போட்டோவுக்கு, 'போஸ் கொடுப்பர்.

இரண்டு ஆண்டுகளாக, 'டாப்பர்' என்ற, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆரோக்கிய மற்ற கொண்டாட்டங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இதே போல, தேர்வு முடிவை, தனியார் இணைய தளங் களில்வெளியிடும் நிலையும் படிப்படியாக மாற்றப் பட்டு, தேர்வுத் துறையே தங்கள் இணைய தளத்தில், நேரடியாக தேர்வு முடிவுகளை வெளியிட துவங்கியது.

புதுமைகள்

இந்த முறை, மாணவர்களுக்கு எளிதாக இருந்தா லும், கிராமப்புற மாணவர்கள் அல்லது கோடை விடுமுறையில், வெளியூர்களில் உள்ள மாணவர் கள், இணையதள இணைப்பு உள்ள பகுதியை தேடி வந்து, தேர்வு முடிவை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர் களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவை வெளியிடும் முறை, 2017 முதல் அறிமுகம் ஆகியுள்ளது.

இதனால், மாணவர்கள் இருக்கும் இடத்திலேயே, தேர்வு முடிவை, மதிப்பெண்ணுடன் அறியும் வசதி கிடைத்துள்ளது. மொத்தத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன உளைச்சல் மற்றும் அலைச்சலுக்கு கல்வி துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வெறிச்சோடிய தேர்வுத்துறை வளாகம்

மாநில, மாவட்ட அளவில், மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேடிப்பிடித்து, அவர்களிடம் ஊடகத்தினர் பேட்டி எடுப்பர். இதற்கு, இரண்டு ஆண்டுகளாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்வுமுடிவுகள், தேர்வுத் துறை அலுவலகத்தில் ஊடகத்தினருக்கு வழங்கப்படும். இந்த தகவல்களை பெற, செய்தியாளர்கள், கேமரா, மைக் சகிதமாக, காலை முதல் தேர்வுத்துறை வாயிலில் காத்திருப்பர்.

தேர்வு முடிவு வெளியிடும் நேரத்தில், பட்டியலை பெற்று, முதலில் யார், 'பிரேக்கிங் நியூஸ்' வழங்குவது என, போட்டி ஏற்படும். அதனால், பட்டியல் வினியோகத்தின் போது, தள்ளு முள்ளு ஏற்படும். இதற்கும், இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது தேர்வு முடிவின் போது, கேமராக்கள் குவிந்திருக்கும், தேர்வுத்துறை அலுவலக வளாகம் நேற்று, ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப் பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். மேலும்,www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

விருதுநகர், 'டாப்' - விழுப்புரம் கடைசி

பிளஸ் 2 தேர்ச்சி பட்டியலில், மாவட்ட அளவில், விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. சென்னை மாவட்டம், 14ம் இடம் பெற்றுள்ளது.

NEWS TODAY 02.01.2026