Wednesday, August 1, 2018

குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு :
11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு 

 
1.8.2018

சென்னை,:'குரூப் - 4' தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், 2,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வின் வழியே, 11 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 9,351 பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, இந்த ஆண்டு, பிப்., 11ல் நடத்தப்பட்டது. தேர்வில், மாநிலம் முழுவதும், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள், ஐந்து மாதத்திற்குப்பின், நேற்று முன்தினம் வெளியாகின.முடிவுகள்,http://results.tnpsc.gov.in மற்றும், http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், 15 லட்சத்து, ௨,௦௦௦ பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் செயலர், நந்தகுமார் ஆகியோர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பிப்., 2018ல் நடத்தப்பட்ட, குரூப் - 4 தேர்வு, இந்தியாவிலேயே ஒரே நாள் தேர்வில், அதிக விண்ணப்பங்களை பெற்று, நடத்தப்பட்ட தேர்வு.

இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவர். தற்போதைய நிலையில், தோராயமாக, 33 ஆயிரம்பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பட்டியல், விரைவில் அறிவிக்கப்படும்.ஆக.,16 முதல், 30 வரை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இ - சேவை மையங்களுக்கு சென்று, தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் ஆய்வு செய்த பின், அக்டோபரில் இட ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் நடக்கும்.இந்த தேர்வின் வழியே, வி.ஏ.ஓ., பதவியில், 494 காலியிடங்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான, 9,351 இடங்கள் நிரப்பப்படும்; இடங்களின் எண்ணிக்கை, மாறுதலுக்குரியது என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தற்போது கூடுதலாக, 1,929 இடங்கள் நியமன பட்டியலில் சேர்ந்துள்ளன.வி.ஏ.ஓ., - 1,107; பிணையமற்ற இளநிலை உதவியாளர் பதவி, 4,722; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் பதவி, 226; வரிவசூலிப்பாளர், 52; தட்டச்சர், 3,974; சுருக்கெழுத்தர், 931; கள ஆய்வாளர், 102 மற்றும் வரைவாளர், 156 என, 11 ஆயிரத்து, 270க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த எண்ணிக்கையும், கவுன்சிலிங்

நடக்கும் வரை மாற வாய்ப்புள்ளது.

86 சதவீதம், 'பாஸ்'பெண்கள் அமோகம்

குரூப் - 4 தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றதில், 15.02 லட்சம் பேர், அதாவது, 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களில், 7.97 லட்சம் பேரும்; ஆண்களில், 6.28 லட்சம் பேரும், மூன்றாம் வகை பாலினத்தில், 35; மாற்று திறனாளிகள், 17 ஆயிரம்; விதவைகள், 5,000 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், 2,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தட்டச்சர் பதவிக்கு, 74 ஆயிரத்து, 555 பேரும்; சுருக்கெழுத்தர் பதவிக்கு, 1,446 பேரும் தேர்ச்சி பெற்றனர். வி.ஏ.ஓ., உள்ளிட்ட மற்ற ஆறு வகை பதவிகளுக்கு, 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.குரூப் - 4 தேர்வில், சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தவர்களில், திருநாவுக்கரசு என்பவர், மாநில அளவில், 14வது இடம் பிடித்துள்ளார். செல்வகுமார், 33; கிருத்திகா, 114 மற்றும் கோபி, 731 ஆகிய இடங்களை பெற்றுள்ளனர்.
ஸ்ரீவி., ஆடிப்பூர விழா ஆக.5ல் கொடியேற்றம்

Added : ஆக 01, 2018 01:58

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஆக., 5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக., 13ல் தேரோட்டம் நடக்கிறது.ஆக.,5 காலை 9:00 மணிக்குமேல் கொடியேற்றம் நடக்கிறது. ஐந்தாம் நாளான ஆக.,9 காலை 10:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவை நடக்கிறது. ஆக.,11 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் ரெங்கமன்னார் சயன திருக்கோல உற்ஸவம் நடக்கிறது. ஆக.,13 காலை 7:20 மணிக்கு ஆண்டாள் தேரோட்டம் நடக்கிறது.12 நாள் விழாவில் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், இரவு 7:00 மணிக்கு வீதி உலா, மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 வரை சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, நாமசங்கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் பட்டர்கள், அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
காலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை கமிஷனர் தகவல்

Added : ஆக 01, 2018 00:50 |

மதுரை: ''கருவூல துறையில், காலையில் பில் தாக்கல் செய்தால், மாலையில் பணம் பட்டுவாடா செய்யும் வகையில், டிஜிட்டல் மயமாக்கும் பணி நடக்கிறது,'' என, கருவூல கணக்கு துறை கமிஷனர், ஜவஹர் தெரிவித்தார்.
மதுரையில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் டில்லியில், 293 கருவூலங்கள், சார்நிலை கருவூல அலுவலகங்கள் செயல்படுகின்றன. திகார் சிறைடில்லி திகார் சிறையில் பணிபுரியும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 1,000 பேர், தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, டில்லியில் கருவூலம் செயல்படுகிறது.இத்துறை மூலம், ஒன்பது லட்சம் அரசு ஊழியர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது.முதியோர் உதவி தொகை உட்பட அரசு நலத் திட்டங்களும், இத்துறை மூலம் வழங்கப்படுகிறது.மேலும், 40 லட்சம் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடும், 12 லட்சம் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஓராண்டில் இத்துறை மூலம், 1.56 ஆயிரம் கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கப்பட்டது. 1.70 ஆயிரம் கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.கடந்த, 1970ல் இத்துறை கம்ப்யூட்டர்மயமானது. 2003ல், முதல் முறையாக, 'இ - சேவை' மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், சம்பள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், 29 ஆயிரம் பேர் உள்ளனர்.

டிஜிட்டல் மயம் : ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊழியர்களின் பணிப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடக்கிறது. இது குறித்து, 42 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.தற்போது, பில் தாக்கல் செய்த சில நாட்களில், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கம் மூலம், காலையில் பில் தாக்கல் செய்தால், மாலையில், வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
7 ஆண்டு சிறை! அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்தால்..
 புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் 


1.8.2018

புதுடில்லி,: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிப்போருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.



நியாயமான வகையில் செயல்படும் அரசு ஊழியர்கள் மீது, உண்மைக்கு மாறாக, லஞ்சப் புகார்கள் அளிப்பதை தடுக்கும் வகையில், ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அறிக்கை

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி சமீபத்தில் கூறியிருந்ததாவது:ஊழல் ஒழிப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம், நியாயமான அரசு ஊழியர்கள் பாதுகாக்கப்படுவர். பொய் வழக்குகள் தொடுக்கப்படுவதால், நேர்மையாக செயல்படும் அரசு ஊழியர்கள் பயப்படும் சூழ்நிலை நிலவியது.இதனால், முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் முடிவு எடுக்காமல் தள்ளிப்போட்டு, பின் வரும் அதிகாரி, அந்த முடிவை எடுக்கட்டும் என்ற மனப்பான்மை, அதிகாரிகள் மத்தியில் நிலவியது. இதனால், நியாயமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இந்நிலையில், புதிய ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
அளித்துள்ளதாக, அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த சட்டம், ஜூலை, 26 முதல் அமலுக்கு வந்து உள்ளதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை

அரசுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய சட்டப்படி, அரசு ஊழியர் அல்லது அதிகாரி எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக, எத்தகைய குற்றச்சாட்டு கூறப்பட்டாலும், அவர் சார்ந்த துறையின் முன் அனுமதி இன்றி, போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடாது. இந்த பாதுகாப்பு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.அதேசமயம், தனக்காக அல்லது வேறு ஒருவருக்காக, ஏதாவது பிரதிபலனை ஒரு அதிகாரி பெற்றாலோ, பெற முயற்சி செய்தாலோ, அதற்காக கைது செய்யப்படும் வழக்குகளில், போலீசார் விசாரணை நடத்த, முன் அனுமதி பெறத் தேவை இல்லை.புதிய சட்டப்படி, அரசு ஊழியருக்கு பிரதிபலன் அளிப்பவர் மற்றும் அளிப்பதாக வாக்குறுதி தருபவருக்கு, ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப் படலாம்.

தீர்ப்பு

ஊழல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு வழங்க, அதிகபட்சம், இரண்டு ஆண்டுகாலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புதிய, ஊழல் ஒழிப்புசட்டத்தில், அரசு ஊழியர்கள் தவிர, அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், வங்கி துறையை சேர்ந்தோர் ஆகியோருக்கும், சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குஎதிராக புகார் தரப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆணையத்திடம், முன் அனுமதி பெற்ற
பின்பே, சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், விசாரணை நடத்த முடியும்.லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கும் சட்டம், ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

7 நாளில் புகார் செய்யணும்!

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால், லஞ்சம் தர நிர்ப்பந்தம் செய்யப்படும் பொதுமக்களை பாதுகாக்க, புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, அரசு அதிகாரிகள் லஞ்சம் தரும்படி, யாரையாவது கட்டாயப்படுத்தினால், அது பற்றி, ஏழு நாட்களுக்குள், சம்பந்தப்பட்டோர், விசாரணை அதிகாரியிடம் அல்லது போலீசில் புகார் செய்ய வேண்டும்.லஞ்சம் வாங்குவோருக்கு, புதிய சட்டத்தின் கீழ், குறைந்தபட்சம், மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த தண்டனையை, ஏழு ஆண்டு வரை நீட்டிக்கவும், சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.லஞ்சம் தரும் வர்த்தக நிறுவனங்களும், புதிய சட்ட வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, வர்த்தக நிறுவனத்துடன் தொடர்புள்ள நபர், அரசு அதிகாரிக்கு லஞ்சம் தந்தாலோ, தருவதாக வாக்குறுதி அளித்தாலோ, அபராதம் விதிக்கப்படும்.

Tuesday, July 31, 2018

`ஒரே நேரத்தில் நான்கு பேரிடம் வீடியோ காலில் பேசலாம்'- வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

சத்யா கோபாலன்

'வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் சேவையை இனி இந்தியாவில் பயன்படுத்தலாம்' என F8 டெவலப்பர்ஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



நீண்ட நாள் சோதனைக்குப் பிறகு ஒருவழியாக, இந்தியாவுக்கு வந்தது வாட்ஸ்அப் குருப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதி. இந்த அறிவிப்பை F8 டெவலப்பர்ஸ் மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதிமூலம், ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் செய்யலாம். கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் இந்த வசதி இந்தியாவில் உள்ள பீட்டா வெர்ஷன் போன்களில் சோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது, ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை இன்று முதல் அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம் என்றும், இதைப் பயன்படுத்த விரும்புபவர்கள் ,தங்களின் பிளே ஸ்டோர் ஆப் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சென்று புதிதாக வழங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் வெர்ன்ஸனை அப்டேட் செய்ய வேண்டும். பிறகு, வாட்ஸ்அப் வீடியோ காலின் வலது ஓரத்தின் மேலே உள்ள add participant பட்டனை அழுத்தினால் போதும். நீங்கள் பேச விரும்புபவரை அதன்மூலம் தேர்ந்தெடுக்கலாம். மேலும், இந்த வீடியோ கால் வசதியும் end-to-end encryption முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மூன்றாவது நபர் உங்களின் செயல்களைப் பார்க்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோ மற்றும் வாய்ஸ் கால் மூலம் ஒரு நாளைக்கு 2 பில்லியன் நிமிடங்கள் வரை பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் கலைஞர்', 'பெரியவர் கலைஞர்!' - எடப்பாடி பழனிசாமி இப்படிக் குறிப்பிட்டது ஏன்?

ஆ.விஜயானந்த்

கருணாநிதியைக் கௌரவிப்பதற்கு நான் தயக்கம் காட்டவில்லை. இதனால், அ.தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பும் வராது.




தி.மு.க தலைவர் கருணாநிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கச் சென்றது, அரசியல்ரீதியாக கவனத்தைப் பெற்றுள்ளது. ' 'தலைவர்', 'பெரியவர்' என கருணாநிதியை அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது, தி.மு.க-வுக்கு மரியாதைகொடுப்பதில் தவறு இல்லை' என அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கருணாநிதி. கடந்த 29-ம் தேதி மாலை, அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதாக வெளியான தகவலால், மருத்துவமனை முன்பு குவிந்தனர் தொண்டர்கள். மருத்துவமனைக்குள் என்ன நடக்கிறது என்ற விவரத்தை அறிய முடியாமல், ' மீண்டு வா தலைவா...உன் குரலுக்காகக் காத்திருக்கிறோம்' என உணர்ச்சிவசப்பட்டு குமுறினர். அன்று இரவு 10 மணியளவில், மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியான பிறகே, இயல்பு நிலை திரும்பியது. 'படிப்படியாகக் குறைந்த பல்ஸ் ரேட்டால் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர் கருணாநிதி குடும்பத்தினர். அடுத்த சில நிமிடங்களில், மருத்துவ சிகிச்சையின் பயனாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார் கருணாநிதி. அவர் மீண்டு வந்தது உண்மையிலேயே அதிசயம்தான்' என நெகிழ்ந்தனர் மருத்துவர்கள்.

கருணாநிதியின் உடல்நிலைகுறித்து மாறுபாடான தகவல்கள் வெளியானதால், 'அரசு நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு சென்னை திரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்குச் செல்கிறார்' என்றெல்லாம் செய்தி பரவியது. அதற்கு, முதல்வர் அலுவலகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மறுநாள் காலையில், காவேரி மருத்துவமனையில் கருணாநிதியைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு, ஸ்டாலினிடமும் கனிமொழியிடமும் அவரது உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார். இந்தப் புகைப்படங்கள் வெளியானதும், 'வட இந்தியாவில் நிலவக்கூடிய அரசியல் நாகரிகம், தமிழகத்திலும் துளிர்விட்டுள்ளது' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.



கருணாநிதியைச் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ' முன்னாள் முதல்வர், தலைவர் கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருடன் பெரியவர் கருணாநிதியை நேரடியாகச் சென்று பார்த்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். மருத்துவக்குழு அவரை கவனித்துவருகிறது’ என்றார். ' தலைவர் கலைஞர்', 'பெரியவர் கலைஞர்' என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதை ஆச்சர்யத்தோடு கவனித்தனர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள். இதுகுறித்து அமைச்சர்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி, 'பழைய அரசியல் முடிந்துவிட்டது. கருணாநிதியோடு அம்மாவுக்கு (ஜெயலலிதா) இருந்த போட்டி 2016 சட்டமன்றத் தேர்தலோடு முடிந்துவிட்டது. கருணாநிதியைக் கலைஞர் என்பதாலோ பெரியவர் என்பதாலோ என்ன விளைவு வந்துவிடப் போகிறது?

தற்போது அவர், நமக்கு அரசியல் எதிரி அல்ல. ஸ்டாலினுக்கு எதிராக மட்டும்தான் நமது அரசியல் இருக்க வேண்டும். எனவே, கருணாநிதியைக் கௌரவிப்பதற்கு நான் தயக்கம் காட்டவில்லை. இதனால், அ.தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அன்றைக்கு எம்.ஜி.ஆர் இறந்தபோது, திட்டமிட்டு கருணாநிதியின் சிலையை உடைத்தார்கள். அன்று இருந்த அரசியல் காலகட்டம் வேறு. இப்போதுள்ள காலகட்டம் என்பது வேறு. தி.மு.க-வில் உள்ள தலைவர் பதவியை கருணாநிதிக்கு கௌரவமாகத்தான் கொடுத்திருக்கிறார்கள். உண்மையில், ஸ்டாலின்தான் தலைவராக இயங்கிக்கொண்டிருக்கிறார். அரசியல் போட்டியில் ஸ்டாலின்தான் இருக்கிறார்; கருணாநிதி அல்ல. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்போதே அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வுபெற்றுவிட்டார். அவரைப் புகழ்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை. தி.மு.க-வுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதிலும் எந்தத் தவறும் இல்லை' எனக் கூறியிருக்கிறார்.
முதுமை, நோய்மைக்கு சவால் விடும் கருணாநிதியின் ஆரோக்கிய ரகசியம்!

ஜி.லட்சுமணன்

பெ.மதலை ஆரோன்

HARIF MOHAMED S

அயராத உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி... கருணாநிதியின் அன்றாட வாழ்க்கை இப்படித்தான் இருந்தது!




இதழியல், சினிமா, இலக்கியம், அரசியல் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும் உச்சத்தை அடைந்தவர் கருணாநிதி. 12 வயதில் `மாணவ நேசன்' என்ற கையெழுத்து பிரதியைத் ஆரம்பித்தபோதே தொடங்கியது அவரது பொது வாழ்க்கைப் பயணம். பல்வேறு தடைகளைத் தாண்டி எல்லா துறைகளிலும் யாராலும் எட்ட முடியாத அளவுக்குப் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார் அவர்.



தமிழகத்தில் கருணாநிதி கால்படாத நிலப்பரப்பே இல்லை. குக்கிராமங்களுக்குக் கூடச் சென்றிருக்கிறார். பொதுவாழ்க்கையில் நுழைந்த காலம் முதல் அமர முடியாத அளவுக்கு உடல் தொய்ந்துபோகும் வரை பயணித்துக்கொண்டே இருந்தவர் அவர். இன்னொரு பக்கம், அரசியல் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் மன அழுத்தங்கள், குடும்ப உறவுகளால் ஏற்படும் உளைச்சல்கள் என அனைத்தையும் லாகவமாகக் கையாண்டு தன் ஆரோக்கியத்துக்குச் சிறிதும் பங்கம் வராதவகையில் செயல்பட்டார் கருணாநிதி.

இன்று 35 வயதுக்காரர்களுக்கெல்லாம் இதயநோய் வருகிறது. சர்க்கரை நோய் பொதுநோயாகி விட்டது. முகம் சோர்வாக இருந்தாலே, சர்க்கரை நோய் டெஸ்ட் செய்துகொள் என்று பிறர் ஆலோசனை சொல்லும் அளவுக்கு அந்தநோய் இளம் தலைமுறையைப் பீடித்துக்கொண்டிருக்கிறது. 95 வயதில், முதுமை உடலை பீடித்து முடக்கிப்போட்டிருக்கும் இந்த நிமிடம் வரை கருணாநிதியின் இதயம் ஆரோக்கியமாகத் துடித்துக்கொண்டிருக்கிறது. சர்க்கரை உட்பட எவ்விதமான நோய்களும் அவரை நெருங்கியதில்லை.

இந்த அளவுக்குத் திட்டமிட்ட வாழ்க்கை முறை. எவ்வளவு பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் உடற்பயிற்சி, யோகா என உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் மெனக்கெடுவார் கருணாநிதி.

`அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான்' என்பார்கள். கருணாநிதி இரவு எத்தனை மணிக்குப் படுக்கைக்குச் சென்றாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நடைமுறையை மிகவும் கடுமையாகப் பின்பற்றினார். உடன் பயணிப்பவர்கள், உதவியாளர்களெல்லாம் மிரண்டு போவார்கள்.



சிறுவயது முதலே விளையாட்டில் அவருக்கு ஆர்வமுண்டு. பூப்பந்து, கபடி... இரண்டும் அவருக்குப் பிடித்த விளையாட்டுகள். நண்பர்களோடு கபடி விளையாடி சில நேரங்களில் படுகாயங்கள் கூட ஏற்பட்டுள்ளதாக அவர் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

31 வயதில் கருணாநிதி சென்ற கார் ஒரு விபத்தில் சிக்கியது. அதில் அவரது கண் பாதிக்கப்பட்டது. கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. அதன்பிறகே, பவருடன் கூடிய கறுப்புக்கண்ணாடியை அவர் அணிய ஆரம்பித்தார். காலையில் கண்ணாடியை அணிந்தால் இரவு உறங்கச் செல்வதற்கு முன்புதான் கழட்டுவார்.



தொடக்கத்தில், வாரத்தில் இரண்டு நாள்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபிறகு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டுவிட்டார்.

ஒருமுறை கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டு வதைத்தது. `உல்லன் நூல் பட்டால் நல்லது' என்று மருத்துவர் சொல்ல அதன்பிறகு உல்லன் சால்வை அணிய ஆரம்பித்தார். பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி மஞ்சள் சால்வை அணிவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

உணவு விஷயத்திலும் கருணாநிதி மிகவும் கட்டுப்பாடாக இருப்பார். சாப்பாட்டில் தேங்காய் பயன்பாடு அறவே ஆகாது. இட்லிக்குக் கூட தேங்காய்ச் சட்னி வைத்துக்கொள்ள மாட்டார். கொத்தமல்லி சட்னி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, சாம்பார்தான் ஊற்றிக்கொள்வார். ஆப்பம் என்றால் தேங்காய்ப்பாலுக்குப் பதில் பசும்பால் சேர்த்துக்கொள்வார். எண்ணெயும் குறைவாகப் பயன்படுத்துவார்.

வெளியில் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிள்ளைகள் உணவகத்தில் சாப்பிட்டால் கூடத் திட்டுவார். வெளியூர் சென்றால், கூடவே ஒரு சமையல் குழுவும் உடன் செல்லும். ஒருநாள் பயணமென்றால் மிகவும் பிடித்த நண்பர்கள் வீட்டில் சாப்பிடுவார்.

முன்பெல்லாம் மதியம் 12 மணிக்கு சிக்கன் சூப் குடிப்பார். வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு சிக்கன் , மட்டன் சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட்டார், சிக்கன் சூப் வெஜிடபிள் சூப் ஆகிவிட்டது. சூப் குடிப்பதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பு ஒரு கப் காபி குடிப்பார். வெயில் காலமென்றால் காபிக்குப் பதில் இளநீர். மாதம் மூன்று முறை மீன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, திரவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார் கருணாநிதி.

மதிய சாப்பாட்டில் கண்டிப்பாக ஒரு கீரை இருக்க வேண்டும். கத்தரிக்காய், முள்ளங்கி விரும்பிச் சாப்பிடுவார். குழம்புதான் விரும்புவார். வறுவல், பொறியல் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டார். மாலை நேரத்தில் தோசை இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் பிரெட் சாப்பிடத் தொடங்கினார். டீயில் தொட்டுச் சாப்பிடுவது பிடிக்கும். இரவு, இரண்டு சப்பாத்தியும் குருமாவும். திராட்சை, சப்போட்டா, பப்பாளி, பேரிச்சம்பழங்களும் சாப்பிடுவார்.

வயிறு நிறைய சாப்பிடுவதில்லை. அளவோடுதான் சாப்பிடுவார். அறிவாலயம் கட்டத் தொடங்கியபிறகு வாக்கிங் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். நடக்க இயன்ற காலம் வரை தினமும் 20 நிமிடமாவது வாக்கிங் சென்றுவிடுவார். யோகக்கலை வல்லுநரான தேசிக்காச்சாரியிடம் யோகா கற்றுக்கொண்டார். வாக்கிங் முடிந்ததும் யோகா செய்யத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ அருந்துவார். இடையிடையே கேரட் டாலட் சாப்பிடுவார். கேரட்டைப் பொடியாக நறுக்கி அதோடு எலுமிச்சை சாறு, உப்புச் சேர்த்துத் தருவார்கள்.

வெயிலோ, பனியோ, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவற்றையும் செய்யத் தொடங்கினார். கடும் உழைப்புக்கு மத்தியில் ஆரோக்கியத்தின் மேல் அவர் காட்டிய அக்கறைதான் உடல் வலிமைக்கு மட்டுமன்றி மன வலிமைக்கும் உறுதுணையாய் இருந்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

கோபாலபுரத்தில் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் டாக்டர் கோபால்தான் கருணாநிதியின் உடல்நிலையை முற்றிலும் அறிந்தவர். தினமும் வந்து சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் பரிசோதிப்பார். நட்பு அடிப்படையில் நரம்பியல் மருத்துவர் டாக்டர் ராமமூர்த்தியும் செக் அப் செய்வதுண்டு.

2006-ம் ஆண்டில், முதுமையின் காரணமாக, மூட்டுகள் உடம்பைத் தாங்கும் சக்தியை இழந்துவிட்டன. இருந்தாலும் அவரது இயல்பு வாழ்க்கையைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. சக்கர நாற்காலியைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதன் பின்னரும்கூட தினமும் காலை ஒரு மணிநேரம் எளிய முறையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்து வந்தார். நடப்பது குறைந்துவிட்டதால், வாரம் ஒருமுறை கை, கால்களுக்கு ஆயில் மசாஜ் செய்வதுண்டு.

கருணாநிதி அடிக்கடி எதிர்கொண்ட பிரச்னை, செரிமான பிரச்னைதான். கடந்த சில ஆண்டுகளாக சாதத்தை மிக்ஸியில் போட்டு திரவமாக்கியே சாப்பிட்டு வந்திருக்கிறார்.

நெஞ்சுச்சளி காரணமாக 2016 ம் ஆண்டு செப்டம்பரில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு மருத்துவமனையில் நெஞ்சுச்சளி அகற்றப்பட்டது. ஆனாலும் கருணாநிதியின் வயதைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான சுவாசத்துக்காக `ட்ரக்கியோடோமி' கருவி நிரந்தரமாகப் பொருத்தப்பட்டது. மருத்துவர்கள். கழுத்துக்குக் கீழே துளையிடப்பட்டு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதால், அவரால் பேசமுடியவில்லை. அந்த சமயங்களில் விழிக்கும் நேரம், தூங்கும் நேரம் ஒழுங்கில்லாமல் போனது. படிப்படியாகச் செயல்பாடுகள் குறைந்தன.

வயோதிகம் அவரை முடக்கிபோட்டதே தவிர, நோய்களின் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்படவில்லை. அவரின் மனோதிடமும் எந்தச் சூழலிலும் விடாமல் செய்த உடற்பயிற்சிகளும் யோகாவும் உணவுக்கட்டுப்பாடும்தான் இந்தச் சூழலை எதிர்கொள்ளும் வலிமையைக் கொடுத்திருக்கின்றன!

NEWS TODAY 06.12.2025