Friday, August 3, 2018

கணவரின் சொத்தா மனைவி?- உச்ச நீதிமன்றம் கேள்வி

Published : 03 Aug 2018 08:05 IST

புதுடெல்லி 

 


உச்ச நீதிமன்றம்: கோப்புப்படம்

திருமண பந்தத்தில் மனைவி என்பவர் கணவரின் தனிப்பட்ட சொத்தா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இத்தாலியில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஜோசப் ஷைன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த சட்டத்தின்படி, தவறான உறவின்போது ஆண்கள் மட்டுமே குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர். பெண்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவது இல்லை. ஆண்களுக்கு எதிரான இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:

இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவு பெண்களுக்கு சாதகமானது போன்று தெரியும். ஆனால் இந்த சட்டம் பெண் களுக்கு எதிரானது. கணவரின் ஒப்புதலுடன் மனைவி தவறான உறவில் ஈடுபட்டால் அது தவறில்லை. கணவரின் ஒப்புதல் இல்லாமல் மற்றொரு ஆணுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கூறுகிறது.

திருமண பந்தத்தில் மனைவி, கணவரின் தனிப்பட்ட சொத்தா கவே பாவிக்கப்படுகிறார். இது எந்த வகையில் நியாயம்? இவ் வாறு தலைமை நீதிபதி கூறினார்.

இதே வழக்கு கடந்த டிசம்பரில் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் இதே கருத்தை வெளியிட்டது. திருமணமான பெண் கணவரின் சொத்தா, ஜடப்பொருளா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை யில் மத்திய அரசு 11 பக்கங்கள் அடங்கிய பதிலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “திருமண பந்தத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்க தவறான உறவை குற்றமானதாகவே கருத வேண்டும். 497-வது சட்டப்பிரிவை ரத்து செய்யக்கூடாது” என்று கோரப்பட்டுள்ளது.

பயமுறுத்தும் சாலை விபத்துகள்


By எஸ். ஸ்ரீதுரை | Published on : 03rd August 2018 01:28 AM |

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில், வெகுவேகமாக வந்த ஒரு சொகுசு கார் மோதியதில் ஆறு பேர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் கோவை நகரை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. மேலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகள் பாதுகாப்பானவைதானா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்பது திருவள்ளுவரின் வாக்காகும். நேற்று உயிருடன் இருந்தவர் இன்று உயிருடன் இல்லை என்பதே இவ்வுலக வாழ்வின் சிறப்பு என்ற கருத்துடைய இக்குறள் மனித வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துக்கூறுகின்றது.
அன்றாடம் நாம் கேள்விப்படும் சாலை விபத்துக்களோ, சென்ற விநாடி இருந்தவர் இந்த விநாடியில் உயிருடன் இல்லை என்ற புதிய விதியை உருவாக்கி வருகின்றன.

அதிக வேகம், அலட்சியம், சாலை விதிகளை மதியாமை போன்று எத்தனையோ காரணங்களால் சாலை விபத்துக்கள் நேர்கின்றன. விபத்துகள் எதிர்பாராமல் ஏற்படக்கூடியவையே. ஆயினும், விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியவையே என்பதையும் வாகனங்களை இயக்குவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

சூழ்நிலைகள் மிக வேகமாக மாறி வருகின்றன. அம்பாசிடர்', பியட்' போன்ற கார்களை மட்டுமே நம் நாட்டுச் சாலைகள் பார்த்த காலம் ஒன்று உண்டு. எப்போதாவது அபூர்வமாக சில நவீன ரக கார்கள் கண்ணில் தென்படும். சென்ற தலைமுறையினரில் பலரும் இருசக்கர வாகனங்களுக்கு முன்பணம் கட்டிவிட்டு, வருடக் கணக்கில் காத்திருந்து வாங்கியவர்கள்தான்.
இப்போது எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கை, விதவிதமான வாகனங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ளவும், தேவைக்கேற்ப வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளவும் வழிவகை செய்துள்ளது.

வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருந்தாலே பெரிது என்ற காலம் போய், ஆளுக்கொரு ஸ்கூட்டர் அல்லது பைக் மற்றும் குடும்பத்துக்கு ஒரு கார் (குறைந்தபட்சம்) சொந்தம் என்ற நிலை உருவாகி விட்டது. யாருக்கும் யாருடனும் பேசுவதற்குக்கூட நேரமில்லை
.
நடுத்தர வர்க்கத்தினரின் நிலை இப்படி இருக்க, பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் தேவைக்கு வானமே எல்லை என்றாகிவிட்டது.
அதிகபட்ச வசதிகள் மற்றும் அதிவிரைவுப் பயணம் என்ற குறிக்கோளுடன் வாகனங்களை வாங்க விரும்பும் இவர்களுக்கென்றே பல லட்சம் ரூபாய்களில் (சில கோடிகளில் கூட) இறக்குமதித் தயாரிப்புகள் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப இறக்குமதி வரிகளும் உண்டு. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சமூக அந்தஸ்தின் குறியீடாகவே இத்தயாரிப்புகள் வாங்கப்படுகின்றன.

இளைஞர்களும், இளம்பெண்களும் இத்தகைய கார்களை ஓட்டும்போது ஆகாயத்தில் பறப்பது போன்று உணர்வார்கள். ஆனால், சட்டென்று பிரேக் பிடிக்க நேரும்போது வண்டி அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்காது. விபத்து நேரிடும்போது யாருக்குமே தப்பிக்க வழியிருக்காது.
சென்னையில் சினிமா நட்சத்திரங்கள் சிலரும் கோடீஸ்வர வீட்டு வாரிசுகளும் இத்தகைய விலையுயர்ந்த இறக்குமதி வாகனங்களை விரைவாக ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதையும் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். குறிப்பாக, பழைய மகாபலிபுரம் சாலை இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தர சாட்சியாகிவிட்டது. இச்சாலையில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் படுத்தும் பாடு ஒரு தனிக்கதை.

குடியிருப்புப் பகுதிகளிலேயே, வண்டியைக் கிளப்பி, சில விநாடிகளில் அறுபது எழுபது வேகத்தைத் தொடுபவர்கள் நம்மவர்கள். இந்நிலையில், நல்ல தரமான சாலைகளில், வெளிநாட்டு இறக்குமதி வண்டியை ஓட்டுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது நம்மால் யூகிக்கப்படக்கூடியதே. உண்மையிலேயே விரைவாக ஓர் இடத்தை அடையவேண்டிய தேவையில் இத்தகைய வண்டிகளில் பயணிக்கக் கூடியவர்களும் உண்டு. தாம் நிர்வகிக்கும் தொழிலில் ஒரு விநாடியைக் கூட வீணடிக்க முடியாத நபர்களை நாம் விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை.

அதே நேரம், இத்தகைய வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் (உரிமையாளரே ஓட்டினாலும் சரி) மிகமிகத் திறமையான ஓட்டுநர்களாக இருப்பது முக்கியம். சாலை விதிகளைத் தாங்கள் மதிப்பது மட்டுமல்லாமல், நமது நாட்டில் சாலைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் (சாலையைக் கடக்கும் பாதசாரிகள் உட்பட) சாலை விதிகளை முழுவதுமாக மதிக்காதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டவர்களாக இருத்தல் மிகமிக முக்கியம்.

மது அருந்திவிட்டு இவ்வாகனங்களை ஓட்டக் கூடாது என்பதைத் தனியே கூறத் தேவையில்லை. கோவையில் ஏழு உயிர்களை வாங்கிய காரின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. உடல்நிலை சரியில்லாததால், தனக்குச் சற்றே மயக்கமாக இருந்ததாக அவர் கூறியதாகவும் ஒரு செய்தி உலா வருகின்றது. இவற்றில் எது உண்மை என்பது முழுமையான விசாரணைக்குப் பின்பே தெரியவரும்.
ஓட்டுநர்களைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களும் அவர்கள் சரியாக உணவருந்தியிருக்கிறார்களா, போதிய ஓய்வு எடுத்துவிட்டு வண்டியை இயக்க வந்திருக்கிறார்களா, ஏதாவது அச்சம் அல்லது கவலையுடன் இருக்கின்றார்களா என்பதுடன் அவர்கள் போதைப் பொருள் பழக்கமுள்ளவர்களா போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா வாகன ஓட்டிகளுக்கும் இவை பொருந்தும் என்றாலும், மின்னல் வேக இறக்குமதி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு இந்தக் காரணிகள் வெகுவாகப் பொருந்தும். மத்திய, மாநில அரசுகளும் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, பள்ளி - கல்லூரி வாகனங்கள், அரசு விரைவுப் பேருந்துகள் போல, இத்தகைய வெளிநாட்டு சொகுசு வண்டிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.

நம் நாட்டின் மக்கள்தொகை, வாகனப் பெருக்கம் இவற்றைக் கணக்கில் கொண்டு, எந்த வண்டியும் எந்தச் சூழ்நிலையிலும் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் விரையக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால்தான் விலைமதிப்பு மிக்க மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.
மருத்துவ இடம் கைவிட நாள் அறிவிப்பு

Added : ஆக 03, 2018 02:06


சென்னை:'அகில இந்திய கவுன்சிலிங்கில் பெற்ற இடங்களை கைவிட, வரும், 6ம் தேதி கடைசி நாள்' என, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட அகில இந்திய கவுன்சிலிங், ஜூன், 20, 21ல் நடந்தது. இதற்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இடங்களை பெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லுாரிகளில், வரும், 8ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

இந்நிலையில், முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், தங்கள் பெற்ற இடங்களை கைவிட விரும்பினால், வரும், 6ம் தேதிக்குள் கைவிடலாம் என, மத்திய சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், இடத்தை கைவிட நினைத்தால், கல்லுாரி நிர்வாகத்தை அணுகி, வரும், 6ம் தேதி மாலை, 3:00க்குள் இடங்களை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை

Added : ஆக 03, 2018 00:24



  விருத்தாசலம் : கடலுாரைச் சேர்ந்த பெண் இன்ஜினியரிங் பட்டதாரியை, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், திருமணம் செய்து கொண்டார்.

கடலுார் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் குணசேகரன் - மணிமேகலை தம்பதியின் மகள் சாருலதா, 32; பி.இ., பட்டதாரி. இவர், ஐரோப்பிய நாடான செக் குடியரசில் ஆங்கிலம் கற்பிக்கும் பணி புரிகிறார். அதே நாட்டைச் சேர்ந்த தாமஸ் - க்வேதா தம்பதியின் மகன் லுாகாஸ், 40; கணினி நெட்வொர்க் தொழில் நுட்ப பணியாளர். இருவரும், காதலித்தனர்.

தங்களது பெற்றோரிடம் தெரிவித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த மார்ச் மாதம் செக் குடியரசு நாட்டின் பாரம்பரிய முறைப்படி லுாகாஸ், சாருலதாவை மணம் முடித்தார். சாருலதா வீட்டில்,தமிழ் பாரம்பரிய முறைப்படியும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதையடுத்து. மணமக்கள் இந்தியா வந்தனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில், தமிழ் பாரம்பரிய கலாச்சாரப்படி, வேட்டி சட்டை அணிந்த லுாகாஸ், சாருலதாவின் கழுத்தில் தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி

Added : ஆக 02, 2018 23:53



மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி

ஆடிவெள்ளியும், ஆடிப்பெருக்கும் இணையும் நன்னாள் இன்று. இந்நாளில் காவிரியன்னையுடன் மீனாட்சி, காமாட்சி உள்ளிட்ட அம்மன்கள் மற்றும் மகா லட்சுமியை வழிபட்டால் மங்கள வாழ்வு உண்டாகும்.

* 'பெருக்கு' என்றால் 'பெருகுதல்' மட்டுமல்ல, 'சுத்தம் செய்தல்' என்றும் பொருள். ஆடிப்பெருக்கில் காவிரி பெருக்கெடுத்து ஓடும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் அடித்துச் செல்லப்பட்டு துாய்மை பெறும். மனதிலுள்ள தீய எண்ணங்களை பக்தி என்னும் வெள்ளத்தை பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை ஆடிப்பெருக்கு உணர்த்துகிறது.

* திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர், விநாயகர், அகத்தியர் போன்றவர்களோடு சம்பந்தம் கொண்ட காவிரிநதியில் நீராடினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். புதுமணத் தம்பதிகள் மாங்கல்ய பலம் பெற புதிய மஞ்சள் கயிறு மாற்றுவர். விவசாயிகள் விளைச்சல் பெருக வழிபாடு நடத்துவர்.

*தங்க நகைகள் வாங்க ஏற்ற சுபநாள் இன்று. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கலாம். செய்த நற்செயல்களால் புண்ணியம் பெருகுவது போல இந்நாளில் செய்யும் சேமிப்பும் பன்மடங்கு பெருகும். அதோடு தொழில் துவங்கினால் லாபம் பெருகும்.

*லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்ய மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன் வாசலில் மாக்கோலம் இட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மாவட்ட செய்திகள்

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ரோகிணி அறிவிப்பு




சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2018 05:04 AM

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்
 
சென்னையில் நாளை மின்தடை உள்ள இடங்கள்

சென்னையில் நாளை மின்தடை உள்ள இடங்கள்
 
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னை, 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை(சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

கொடுங்கையூர்: முத்தமிழ் நகர் 1 முதல் 5 மற்றும் 7-வது பிளாக், டி.எச்.சாலை, கிருஷ்ணன் தெரு, சந்திரன் தெரு, ஆசிரியர் காலனி, காந்தி நகர், வடிவுடையம்மன் கோவில் தெரு, நேதாஜி தெரு, காவேரி சாலை.

புழல்: ஸ்ரீபத்மாவதி நகர் 1 முதல் 120-வது தெரு, லட்சுமி காந்தம்மாள் நகர், ஸ்ரீ லட்சுமியம்மன் நகர், ஆர்.சி.அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வெங்கடேசுவரா நகர், திருமால் நகர் 1 முதல் 24-வது தெரு, கிரேஸ் நகர், விஜயலட்சுமி நகர், வேல் முருகன் நகர், காமராஜ் நகர்.

புழல் குடிநீர் தேக்க நிலையம்: சென்னை குடிநீர் தேக்க நிலையம், புழல் சிறைச்சாலை 1 மற்றும் 2, புழல் பெண்கள் சிறைச்சாலை.

பெசன்ட் நகர்: 1-வது மெயின் ரோடு, பீச்.ஓம்.அவென்யூ, தமோதரபுரம்.

அடையாறு: ஜீவரத்தினம் நகர், பத்மநாபன் நகர், பரமேசுவரி நகர், பெசன்ட் அவென்யூ.

பெருங்களத்தூர்: பழையபெருங் களத்தூர், பார்வதி நகர், முடிச்சூர், ராயப்பா நகர், கிருஷ்ணா நகர், லட்சுமி நகர், வரதராஜபுரம், ரங்கா நகர்.

கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை ஏ, பி, சி, டி பிளாக், அம்பாள் நகர், பிள்ளையார் 3, 5, 6-வது தெரு, பூமகள் தெரு, அண்ணாசாலை பகுதி, ஜே.என்.சாலை, பல்லவன் தெரு, கபிலர் தெரு, வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, கணபதி காலனி.

பரங்கிமலை: மெகஸின் சாலை, பட்ரோடு, பட்லேன், மிலிட்ரி குடியிருப்பு மற்றும் மருத்துவமனை, நந்தம்பாக்கம் மெயின் ரோடு, ராமர் கோவில் தெரு, செயிண்ட் தாமஸ் மவுண்ட், மீனம்பாக்கம், ஆலந்தூர், நசரத்புரம், மவுண்ட்-பூந்தமல்லி சாலை, பர்மா மற்றும் ஸ்ரீபுரம் காலனி, போலீஸ் அதிகாரி சாலை, அச்சுதன் நகர்.

தரமணி: தெற்கு லாக், மேற்கு கேனல் சாலை, அங்காளம்மன் கோவில் தெரு, ஏரிகரை தெரு, குருவப்பா தெரு, பூண்டி தெரு, வரதராஜபுரம், நாயுடு தெரு, துலுகாத்தம்மன் கோவில் தெரு, கருணாநிதி தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு.

வேளச்சேரி: புவனேஸ்வரி நகர், வி.ஜி.பி.செல்வ நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பிரமணியம் காலனி.

திருமுடிவாக்கம்: நத்தம் காலனி, சம்பந்தம் நகர், பத்மாவதி நகர், மாணிக்கம் நகர், தேவகி நகர், தேவி நகர், வழுதலம்பேடு.

ராயபுரம்: எம்.சி.சாலை, என்.என்.கார்டன், எம்.எஸ். கோவில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, பி.வி. கோவில் தெரு, வெங்கடாசலம் தெரு, அர்த்தூன் சாலை, மசூதி தெரு, ஜெகநாதன் தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா தெரு, சிங்கார கார்டன், சோமசெட்டி தெரு, மீனாட்சியம்மன் பேட்டை, டேங் தெரு, டோபி கான தெரு, பிச்சான்டி தெரு, பணைமரத்தொட்டி, வைகுண்ட நாடார் தெரு, தாண்டவமூர்த்தி தெரு, மாநகராட்சி மாடல் லேன், அப்பையர் லேன், வீராசாமி தெரு, சஞ்சீவராயணன் தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம், என்.ஆர்.டி.சாலை, வெங்கடேசன் தெரு 1 முதல் 4-வது தெரு வரை, அம்மன் கோவில் 1 முதல் 8-வது தெரு வரை, பி.சி.பிரஸ் தெரு.

செம்பியம்: சிம்சன் கம்பெனி, டப்பே 2 பாயின்ட், அடிசானால் பெயின்ட், எல்.எம். வேன் மெப்ப, டப்பே ஆர்-டி, பைய்மெட்டால் பேரிங்.

பனையூர்: கடற்கரை நகர் 1 முதல் 6-வது அவென்யூ, குடிமியான்டி தோப்பு, வேலுநாயக்கர் தெரு, ஆதியாரம் நகர், பனையூர் குப்பம், ஜெ.நகர், எம்.ஜி.ஆர்.நகர்.

மாலை 4 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

NEWS TODAY 06.12.2025