Tuesday, November 6, 2018


குழந்தைகள் பட்டாசு வெடித்தால் தந்தை மீது வழக்கு

By DIN | Published on : 06th November 2018 01:15 AM |

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, குழந்தைகள் பட்டாசு வெடித்தால் அவர்களின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகைக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

இதை மீறி பட்டாசுகள் வெடிப்பதைத் தடுக்க காவல் துறை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குழந்தைகள் பட்டாசுகளை வெடித்தால் அந்தக் குழந்தையின் தந்தை மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடித்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது குடித்தால் பரிசு: விளம்பரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள் கைது

By DIN | Published on : 06th November 2018 02:48 AM |

திருவல்லிக்கேணியில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது குடித்தால் பரிசு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி, பல்வேறு தனியார் நிறுவனத்தினர் தங்களது விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் கவர்ச்சியான விளம்பரங்களையும், சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிப்பது வழக்கம்.

ஆனால், திருவல்லிக்கேணி வல்லபா அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலின் நிர்வாகத்தினர், தீபாவளியையொட்டி ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 32 இன்ச் கலர் டிவி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மிஷின் வழங்கப்படும் என்றும், மது அருந்துவோருக்கு தின்பண்டங்கள் இலவசம் என விளம்பரம் செய்திருந்தது.
இதுதொடர்பாக ஹோட்டல் முன்பு ஒரு பெரிய விளம்பர பதாகையும் வைக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களிடம் விளம்பரமும் செய்தது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜாம் பஜார் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தனர்.
இருவர் கைது: அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார், ஹோட்டல் உரிமையாளர் முகமது அலி ஜின்னா, மதுபானக் கூட மேலாளர் வின்சென்ட் ராஜ் (25), மதுபான கூட ஊழியர் ரியாஸ் அகமது (41) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் வின்சென்ட் ராஜ், ரியாஸ் அகமது ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். முகமது அலிஜின்னா முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலராகவும், தற்போது சேப்பாக்கம் சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர் நல்லவரானால்...

By அருணன் கபிலன்

| Published on : 05th November 2018 02:31 AM |

திருமணத்துக்கு வெளியில் உறவில் இருப்பது குற்றமல்ல என்று அண்மையில் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருப்பது பலருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒழுக்கத்திலும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பெருந்தீங்கை ஏற்படுத்தும் என்று அவர்கள் கணிக்கிறார்கள்.

காலந்தோறும் அறங்கள் புதுப்பிக்கப் பெறுகின்றன. பழைமையில் பிடிப்புள்ளவர்கள், புதுமையை விரும்புகிறவர்கள், பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் தத்தளிப்பவர்கள் என்று குழம்பிக் குழம்பித்தான் சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. நவீனயுக விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சி, பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்ட இயந்திர வாழ்வு என்று பல சிக்கல்களுக்குப் பின்னால் பழைய அறமாகிய இல்லறமும் துறவறமும் சிக்கிக் கொண்டு அல்லற்படுகிறது.


ஒருவர் மட்டுமே தனித்து வாழும் துறவறம், ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழும் இல்லறம் என்னும் இவற்றிற்கு மாறாக ஒரு பாலினத்தைச் சேர்ந்தவரே இணைந்து வாழும் புதியதொரு நல்லறம் (?) அண்மையில்தான் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்தே இந்தத் தீர்ப்பும் வந்திருப்பதை உற்று நோக்க வேண்டும். இதுவும் ஒரு புதிய அறமாகவும் இருக்கலாம்.

குடும்ப வாழ்வில் ஆணுக்கு இருக்கிற உரிமையும் சமத்துவமும் பெண்களுக்கு இன்றைக்கு இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் பழங்காலத்தில் அப்படி இல்லை. ஆனபோதும் அன்றைய காலத்திலிருந்தே பெண்ணை விட ஆணின் ஒழுக்கத்தையே பெரிதென்று வலியுறுத்தித் தமிழ் இலக்கியங்கள் தொடர்ந்து சுட்டி வந்திருக்கின்றன.

தன் கணவன் கள்வன் என்ற கொடுஞ்சொல் கேட்டவுடன் வெகுண்டெழுந்து அரசவை சென்று எரிமலைபோலப் பொங்கி வாதாடித் தக்க சான்றுகளைக் கொண்டு நிறுவி, அரசனே உயிர் துறந்தும் போதாது, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை உலகறிய வேண்டும் என்பதற்காக மதுரையை எரியூட்டினாளே தாய் கண்ணகி. அவள் தனது கணவனாகிய கோவலன் தன்னைப் பிரிந்துவிட்டு நாட்டிய மங்கையாகிய மாதவியோடு இன்புற்றிருந்தபோது எந்த அரசவைக்கும் போகவில்லை. தன் தாய் தந்தையிடத்தோ, தன் கணவனான கோவலனின் தாய் தந்தையிடத்தோ கூடப் புகார் கூறவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாகச் சமூகம் குறிப்பிடுகிற, பெண்களுக்கே ஏற்படுகிற இன்னலின் விளைவிது என்று கூறி அவளது தோழி தேவந்தி அதற்குப் பரிகாரமாகப் புகார் நகரத்துக்கு அருகிலிருக்கும் சோம குண்டத்திலும் சூரிய குண்டத்திலும் மூழ்கியெழுந்து காமவேளைத் தொழுதால் இந்த இன்னல் தீரும் என்று அறிவுறுத்திய வேளையில், தாய் கண்ணகி அன்றே தானே நீதிபதியாகி இந்தத் தீர்ப்பினைக் கூறிவிட்டாள். தனது தோழியின் அறிவுரைக்குக் கண்ணகி தந்த பதில் "பீடன்று' என்பதுதான். அப்படிச் செய்வது எனக்குப் பெருமையில்லை என்று தன்னை தெய்வப் பெண்ணாக்கிக் கொண்டு அவள் கூறினாள்.

ஆனால் கோவலன் திரும்பி வந்து மதுரைக்கு அழைத்துச் செல்லும் வேளையில் தனிமையில் அவன் வருந்துவதைக் கண்டு, துணிந்து "போற்றா ஒழுக்கம் புரிந்தீர்' என்று இடித்துரைக்கவும் தவறவில்லை.

தாய் கண்ணகி பெண்குலத்திற்கு வழிகாட்டுகிறாள். ஆணாகிய கோவலனுக்கும் பெண்ணாகிய தனக்கும் உள்ள ஆழ்உறவுப் பிரச்னைகளை அடுத்தவரிடத்துச் சொல்ல வேண்டியதில்லை (கடவுளிடமும் கூட) என்பதே கண்ணகி மேற்கொண்டிருக்கிற நியதி.

கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இருகட்சிக்கும் அதைப் பொதுவில் வைக்கும் வழக்கம் இன்றைக்கும் வரவில்லை. ஆனால் அன்றே அப்படிப் பாடிய பாரதியார் மேலும் சில கருத்துகளையும் பெண் விடுதலை குறித்து முன்வைத்திருப்பதை இங்கு எண்ணிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால், 1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது. 2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. 3. விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது. 4. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது. 5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். 6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விட வேண்டும்.

7. பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். 8. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது. சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.

சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மிஸஸ் அன்னி பெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதை மறந்து போகக் கூடாது. இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப் படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள்' என்று உறுதி கூறுகிறார் பாரதியார்.
இதையெல்லாம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறைக்குச் சாத்தியமா என்னும் கேள்வி எழலாம். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் குடும்ப உறவினைக் கடந்து வெளியுறவில் ஈடுபடுகிற ஒரு மனைவியின் கணவனாக - ஓர் ஆணாக எப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்?

எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
என்பது ஒளவை வாக்கு.

திசையறியாப் பறவைகள்

By வாதூலன் | Published on : 06th November 2018 01:24 AM 

சில மாதங்களாக நாட்டில் நிகழும் சம்பவங்களைப் பார்க்கும்போது இது போன்ற குழப்பமான சூழல் இதற்குமுன் எப்போதுமே இருந்ததில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக, பஞ்சாபில் நடந்த ரயில் விபத்து. ஏடுகளில் விவரமாகப் படித்துமே, இது அந்த ஊர் உள்ளாட்சி அமைப்பின் அலட்சியம் என்று தெளிவாகத் தெரிகிறது. தசரா பண்டிகையில் நடைபெறும் ராவண விழாவுக்காக, இரவு வேளையில் பொதுமக்கள் கோஷமிட்டுக் கொண்டு போகிறார்கள். ஒரு சில பிரபல அரசியல்வாதிகளால் விழாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்தது. விழா கூச்சலில் மின்சார ரயில் வருவதைக் கவனிக்காததால் கொடூர விபத்து நேர்ந்திருக்கிறது.

மின்சார ரயில், நாலு சக்கர வாகனம் போலவோ, லாரி போலவோ அல்ல உடனே பிரேக் போட்டு நிறுத்த. காவல் துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது இந்த விழா. இந்த விபத்துக்கு மத்திய அரசையும் பிரதமரையும் குற்றம் சாட்டுவானேன்?

அனைவரும் அறிந்த சபரிமலை விவகாரத்தில் பெண்ணுரிமை பேசும் முற்போக்காளர்கள் வரம்பு மீறித்தான் செல்கிறார்கள். அதற்காக வேற்று மதம் சார்ந்த இல்லத்தில் தாக்குதல் செய்தது சரியில்லைதான். ஆனால் வெறும் வீம்புக்காக பிரச்னையை கிளப்பியதே முற்போக்கு வாதிகள்தானே? இதில் கேரள காங்கிரஸின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கும் தோழன், பா.ஜ.க.வுக்கும் எதிரி என்ற முரணான நிலைப்பாடு.
வட இந்தியாவில் நடக்கவிருக்கும் மாநிலத் தேர்தல்கள், அடுத்த பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இங்கே, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரின் கருத்தைக் குறிப்பிடலாம். இந்தியாவின் மிக முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில கட்சிகள் தங்கள் மாநிலப் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று குறைபடவும் செய்கிறார்.

உண்மை என்னவென்றால் பல மாநிலத் தலைவர்களுக்கு, தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டிருக்கிறது. மம்தா பானர்ஜி மதில் மேல் பூனையாக இருக்கிறார். மாயாவதியின் நிலைப்பாடும் இது மாதிரிதான். ஒன்றிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்து, மத்திய அரசுடன் நட்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான நிதி பெறுவதில் சந்திரபாபு நாயுடு வல்லவராயிருந்தார். இப்போது அவருக்கு தன்முனைப்பு மேலோங்கி, மத்திய அரசுடன் மோதுகிறார். காங்கிரஸை உதறிவிட்டுத் தனியாக நிற்க முற்படும் சந்திரசேகர ராவிடம் எங்களுடன் இணையுங்கள் என்று வீரப்ப மொய்லி கெஞ்சுகிறார்.

தமிழ்நாட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏற்கெனவே லஞ்ச ஊழலாலும், கோயில் சிலை திருட்டாலும் பெயர் கெட்டுப்போன மாநிலத்தை, இப்போது டெங்கு காய்ச்சலும், பன்றிக் காய்ச்சலும் அச்சுறுத்துகின்றன. இதில் வேதனை என்னவென்றால், அரசு அதிகாரிதான் அறிக்கை விட்டுக் கொண்டேயிருக்கிறாரே தவிர, எந்த அமைச்சரும் பொறுப்பான பதில் தருவதில்லை.

தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவற்றின் போக்கும் இரை தேடும் பறவைகளைத்தான் ஞாபகப் படுத்துகின்றன. அதோடு ஒருநாளும் இல்லாத திருநாளாக ராகுல் காந்தி இந்து மதக் கோயில்களுக்கு திடீரென விஜயம் செய்கிறார்.

பாஜகவின் செயல்பாடும் அத்தனை போற்றத்தக்கதாக இல்லை என்றே கூற வேண்டும். ரஃபேல் ஊழல் வழக்கு, சிபிஐ அதிகாரிகள் மோதல் இவற்றுடன், ரிசர்வ் வங்கி கவர்னருடன் மனக்கசப்பு என்று புதிதாக ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. மிக முக்கியமான பிரச்னைகளில் மௌனம் சாதிக்கும் பிரதமர், குஜராத்தில் வல்லபபாய் படேல் சிலையைத் திறந்து வைத்துப் பெருமிதம் அடைகிறார்.

சுதந்திரத்துக்கு முன் பிறந்த அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, இரும்பு மனிதரான படேலுடன் நேருவுக்கு பனிப்போர் நிலவியது. மற்றொன்று, சுபாஷ் சந்திர போஸின் மரணத்தில் மர்மம் இருந்தது. இவ்விரண்டு தலைவர்களுக்கும் காங்கிரஸ் உரிய மதிப்பு தராமலிருந்திருக்கலாம், அதற்காக நேருவின் பங்களிப்பைக் குறைத்துப் பேசுவது முறைதானா?

தன்னிகரிலாத் தலைவராக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பிரதமராக நேரு ஆட்சி புரிந்தார். பல மாநிலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இன்றும் வெற்றிகரமாக இயங்கும் என்எல்ஸி, எச்ஏஎல் இவை இரு உதாரணங்கள்.

இங்கு வேறொன்றையும் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த நாளில் எங்கோ ஒரு மூலையில் நிகழும் தனிப்பட்ட கலவரங்களுக்குக் கூட அரசியல் சாயம் பூசி அரசியல் தலைவர்கள் சிலர் குளிர் காய்கிறார்கள். ஆனால் 1948-இல் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது காந்தியைக் கொன்றது முஸ்லிம் அல்ல என்று ஒற்றை வரி அறிக்கையை விடுத்து அன்றைய பயங்கரமான சூழலை பெருமளவு நீர்த்துப் போகச் செய்தார் பண்டித நேரு என்பது வரலாறு.

இன்றைய அரசியல் போக்கைக் கவனித்தால், தேசியக் கட்சிகளும் சரி, மாநிலக் கட்சிகளும் சரி திசை தெரியாமல் தவிப்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தலைவர்கள் மனத்திலும் ஒரே கேள்விதான்: யாருடன் கூட்டு வைத்தால் வெற்றி? நிகழப் போகிற மாநிலத் தேர்தல்கள், மோதலோ, வன்முறையோ இல்லாமல், பொதுத் தேர்தலுக்கு ஒரு நல்ல முன்னோட்டமாக அமையும் என்று நம்புவோமாக.
'அரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி' உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Added : நவ 05, 2018 23:58

மதுரை'அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண்டிற்குள் வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.இது தொடர்பான, ஒரு வழக்கில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:கருணைப் பணி நியமனம் தொடர்பாக, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற, 2019 ஜன.,1 முதல் அமல்படுத்தும் வகையில், உடனடியாக தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண்டிற்குள், சட்டப் பூர்வ வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க வேண்டும்.

நான்காம் நிலை ஊழியர்களைப் பொறுத்தவரை, கருணைப் பணியில் சில விதிகளைக்கூறி, புறக்கணிக்கக்கூடாது. விதிவிலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக, துப்புரவுப் பணியாளர் நியமனத்திற்கு போதிய தகுதிகள் அவசியம் இல்லை. எழுதப், படிக்க மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தால் போதும்.ஒரு ஊழியர் திடீரென இறக்கும்போது, அப்போது மனைவியின் வயிற்றிலுள்ள குழந்தைக்கு, 18 வயது பூர்த்தியாகும்வரை, கருணைப் பணிக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டியதில்லை.பணிக்கு விண்ணப்பித்தபின், மூன்று மாதங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரி முடிவெடுக்க வேண்டும். தவறினால், அவரை முக்கியத்துவம் இல்லாத பணிக்கு மாற்ற வேண்டும்.இறந்தவரின் மனைவியைத் தவிர, மகன் அல்லது மகளுக்கு பணி வழங்கினால், அவர்களின் சம்பளத்தில், 25 சதவீதத்தை பிடித்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வேலை கிடைத்ததும், தாயை கைவிடுகின்றனர். இதைத் தவிர்க்க, தாயை பாதுகாக்க,வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

பார்க்கும்திசையெல்லாம் தீப ஒளி பரவட்டும்

Added : நவ 06, 2018 06:17

கங்கா ஸ்நானம் ஆச்சா

பிரம்மாவின் வேதங்களை கவர்ந்த அசுரன் ஹிரண்யாட்சன் பாதாளலோகத்தில் ஒளிந்தான். அதை மீட்க பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அப்போது பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் அவளுக்கு 'பவுமன்' என்பவன் பிறந்தான். பூமியின் பிள்ளை என்பது பொருள். பொறுமை மிக்க தாய்க்கு பிறந்த அவன் கெட்ட குணங்கள் மிக்கவனாக இருந்தான். இவன் 'நரகாசுரன்' என அழைக்கப்பட்டான்.

தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்தான். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அவனை யாரும் தட்டிக் கேட்க வில்லை. இருப்பினும் அவனது அட்டூழியம் பொறுக்காமல் பெருமாளிடம் புகார் செய்தார் பிரம்மா. ஆனால் தன் தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றிருந்தான் நரகாசுரன். அப்போது சத்தியபாமாவாகப் பூமியில் வாழ்ந்தாள் பூமாதேவி. அவள் பகவான் கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள். கிருஷ்ணர் அவளை அழைத்துக் கொண்டு நரகாசுரனுடன் போருக்குச் சென்றார். ஒரு கட்டத்தில் நரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையடைபவர் போல நடித்தார். பதறிப்போன பாமா தன் கணவரைக் காப்பாற்ற மகனான நரகாசுரன் மீது அம்பு தொடுக்கவே, அவன் இறந்தான். இறந்தவன் அசுரன் என்றாலும் மகன் என்பதால் பெற்ற வயிறு பதறியது. அதே நேரம் அவனது இறப்பை முன்னிட்டு மக்கள் எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை உடுத்தி கொண்டாட வேண்டும் என கிருஷ்ணரிடம் வரம் கேட்டாள். அந்நாளையே 'தீபாவளி' நன்னாளாக கொண்டாடுகிறோம். இந்நாளில் எண்ணெய்யில் மகாலட்சுமியும், நீரில் கங்கையும் வாசம் செய்வதால் தீபாவளி குளியலை ஒருவருக்கொருவர் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' எனக் கேட்பது வழக்கம்.

வரப்போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்

* நற்குணங்களின் இருப்பிடமே! கருணையின் விலாசமே! அன்பில் சிறந்தவனே! அசுரர்களை துவம்சம் செய்தவனே! இடைக்குலத்தின் தவக்கொழுந்தே! மேகம் போல நீலவண்ணனே! கண்ணனே! மதுராநகர வாசியே! மின்னல் போல் ஜொலிக்கும் பட்டு பீதாம்பரதாரியே! கிருஷ்ணனே! உன்னை வணங்குகிறேன்.* என் மனத் தாமரையில் எப்போதும் இருப்பவனே! நந்தகோபர் வளர்த்த பிள்ளையே! எல்லா துன்பங்களையும் அடியோடு போக்கியருள்பவனே! லீலைகள் பல புரிந்ததால் கோபியர் மனதை விட்டு அகலாத செல்வமே! கிருஷ்ணனே! உன்னை வழிபடுகிறேன்.* கதம்ப மலரைக் காதில் குண்டலமாகத் தரித்தவனே! மிக அழகான கன்னங்களைக் கொண்டவனே! கோபிகைப் பெண்களின் நாயகனே! நந்தகோபருக்கும் யசோதைக்கும் அன்பைப் பொழிந்தவனே! வழிபடும் அடியவர்க்கு சுகம் தருபவனே! கோபி கிருஷ்ணனே! உன்னை தியானிக்கிறேன்.* பூபாரத்தைப் போக்கியவனே! பிறப்பு, இறப்பு என்னும் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிப்பவனே! பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தோணியே! யசோதையின் இளஞ்சிங்கமே! வெண்ணெய்யை விரும்பித் திருடுபவனே! சாதுக்கள் மீது பற்று கொண்டவனே! நாளும் புதிய கோலத்தில் காட்சி அளித்தவனே! கிருஷ்ணனே! உன்னைச் சரணடைகிறேன்.* இடைக்குலத்தின் திலகமாக திகழ்பவனே! ஆயர்குலத்தின் அணிவிளக்கே! ஆனந்தம் அருள்பவனே! தாமரை போல இருக்கும் என் மனதில் மோகத்தைத் துாண்டுபவனே! சூரியன் போல பிரகாசிப்பவனே! வேணுகானம் இசைப்பதில் வல்லவனே! யாவரும் விரும்பும் அழகு மிக்கவனே! கடைக்கண் பார்வையால் அன்பர்களுக்கு வேண்டும் வரமருள்பவனே! கிருஷ்ணனே! உன்னைப்போற்றி மகிழ்கிறேன்.* ஆயர்பாடிக்கு அலங்காரமே! பாவங்களை போக்குபவனே! பக்தர்களின் மனதை மகிழ்விப்பவனே! நந்தகோபரின் புத்திரனே! மயில்தோகையை தலையில் சூடியவனே! இனிய புல்லாங்குழலை கையில் ஏந்தியவனே! கோபியரிடம் விளையாடியவனே! கிருஷ்ணனே! உன்னை துதிக்கிறேன். உன்னருளால் உலகம் செழிப்புடன் வாழட்டும்.

தீபாவளியின் தம்பி யார் தெரியுமாஷசொல்கிறார் காஞ்சிப்பெரியவர்

பகவத் கீதையை 'தீபாவளியின் தம்பி' என்று குறிப்பிடுவது வழக்கம். தியாகத்தாய் சத்தியபாமா மகனை இழந்த நிலையில், பகவான் கிருஷ்ணரிடம் அந்நாளை பண்டிகையாக கொண்டாட வரம் பெற்றதால் 'பண்டிகைகளின் ராஜாவாக' தீபாவளி இருக்கிறது.தத்துவங்கள் பல இருந்தாலும் அதற்கெல்லாம் சிகரமாக இருப்பது பகவத்கீதை. தீபாவளி போல இதுவும் தியாகத்தின் பின்னணியில் உருவானதே. சாதாரணமாக தத்துவ உபதேசம் என்பது குருநாதர் தன் சீடர்களுக்கு செய்வதாக இருக்கும். ஆனால் கீதையோ நெருக்கடியான சூழலில் போர்க்களத்தில் பிறந்தது. எஜமானராக இருக்கும் அர்ஜுனன், வண்டிக்காரனாக தேரோட்டும் சாரதியிடம் கேட்ட உபதேசம். “சிஷ்யனாக சரணாகதி அடைந்த எனக்கு உபதேசம் செய்வாயாக” என அர்ஜுனன் கேட்ட போது பகவத்கீதை பிறந்தது. இதனால் கீதை 'தீபாவளியின் தம்பி' என்ற அந்தஸ்து பெறுகிறது. பண்டிகைகளில் ராஜா தீபாவளி போல் தத்துவங்களில் கீதை உயர்ந்ததாக உள்ளது. தீபாவளி, கீதைக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் பகவான் கிருஷ்ணரே.

நாளெல்லாம் நல்ல நாளே!

பண்டிகைகளில் அதிகம் செலவழிப்பது தீபாவளிக்கு மட்டுமே. குடும்பத்திற்கு மட்டுமின்றி, உறவினர், நண்பர் வகையிலும் புத்தாடை, இனிப்புகள், பட்டாசு என தாராளமாக பணம் செலவாகும். இந்நாளில் பணத்திற்கு அதிபதியான குபேரலட்சுமியை வழிபட்டால் எல்லா நாளும் தீபாவளியாக இனிக்கும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியத்தை படைத்து 'ஓம் குபேராய நமஹ' 'ஓம் மகாலட்சுமியை நமஹ' என்னும் மந்திரங்களை 108 முறை ஜெபித்து மகாலட்சுமிக்கு தீபம் காட்ட வேண்டும்.

எல்லோரும் நலம் வாழ...

தீபாவளியன்று காலை, மாலை தீபம் ஏற்றும்போது,“கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!”என்ற ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.பொருள்: புழு, பறவை, மரம் எதுவானாலும், நீரிலும், நிலத்திலும் வாழும் ஜீவராசிகள் எதுவானாலும், மனிதர்களில் யாரானாலும், இந்த தீபத்தைப் பார்க்கும் அனைவரும் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும். பிறவிப்பிணி நீங்கி இன்பமாக வாழ வேண்டும். விளக்கேற்றும் புண்ணியபலனை உயிர்கள் எல்லாம் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஆதிமனிதன் கொளுத்திய 'மத்தாப்பூ'

கங்கைக்கும் மேலான காவிரி

தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் பெருமையாகச் சொல்கிறோம். ஆனால் இந்த ஸ்நானத்தை உருவாக்கிய கிருஷ்ணரோ, தன் பாவம் தீர காவிரிக்கு கரைக்கு வந்தார். வீரனான நரகாசுரனைக் கொன்றதால் அவருக்கு வீரஹத்தி தோஷம் உண்டானது. அவரது நீலமேனி வண்ணம் ஒளியிழந்து மங்கிப்போனது. அதை தீர்க்க கைலாயம் சென்று சிவனிடம் உபாயம் கேட்டார். “கிருஷ்ணா! துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய உதயத்தில் இருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமிடம்) நேரத்திற்குள் காவிரியில் நீராடினால், வீரஹத்தி தோஷம் நீங்கும்” என்றார். கங்கா ஸ்நானத்திற்கு அருள் செய்த கிருஷ்ணர் தீபாவளியன்று காவிரியில் நீராடித் தன் பாவம் போக்கினார். இதனால் கங்கையை விட காவிரியும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பாரத நாட்டில் கடவுள் அருள் வேண்டி ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த பண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் ஆன்மிகப் பின்புலம், வரலாற்றுப் பின்னணி நிச்சயம் உண்டு. நரகாசுரன் என்ற அரக்கனை ஸ்ரீகிருஷ்ண பகவான் வதம் செய்து உலக மக்களை காத்தருளிய நாளை தீபமேற்றி தீபாவளியாக கொண்டாடி வருகிறோம்.தீமையை வெற்றி கொள்ளும் ஒளித்திருநாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது தீ ஒளி என்று பொருள். வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி , வளம் பெருகும் என்பது ஐதீகம். தீய சக்திகளை விரட்டியதை மகிழ்ச்சியுடன் கொண்டாட, பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.காலையில் குளிச்சிட்டு, புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு, ருசியா நாலு பலகாரத்த சாப்பிட்டோமா, அப்படியே 'டிவி'யில போடும் சினிமா நிகழ்ச்சியை பார்த்தோமான்னு பலருக்கு தீபாவளி வீணாக முடிந்து விடுகிறது. இன்னும் சிலருக்கோ தீபாவளி என்பது மது அருந்தி, மாமிச உணவுகளை உண்ணும் ஒரு கொண்டாட்டமாகவே உள்ளது. இந்த இனிய தீபாவளிப் பண்டிகை பற்றி இன்றைய இளைய சமுதாயம் வரலாற்று பின்னணியுடன் தெரிந்து கொள்ளவே இந்த ஆதிமனிதன் கொளுத்திய 'மத்தாப்பூ'குரங்கிலிருந்து வந்த ஆதி மனிதன் தீயை கண்டறியா விட்டால் இன்றைக்கு நாமெல்லாம் பட்டாசு வெடித்திருக்க முடியாது. பூமியின் அற்புதப் படைப்பே 'தீ' என்கிறது யவன புராணம். ஆதிகாலத்தில் இடி, மின்னலால் மரங்கள், புதர்கள் தீப்பிடித்து குபுக்கென்று சிவப்பு நிற ஜூவாலைகள் தோன்றும். அந்த தீயின் மூலமாக வெளிச்சத்தைக் கண்ட ஆதிமனிதன் உணவு சமைக்க, இரவில் வெளிச்சம் தர தீயை பயன்படுத்தினான். தன்னை தாக்கும் மிருகங்களை தீயின் உதவியுடன் விரட்டியடித்து வெற்றி கொண்ட போது கையில் மத்தாப்பூ போல் தீயை வைத்து முழக்கமிட்டு, கூட்டமாக கொண்டாடிய ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆதிமனிதனுக்கு தீபாவளியே.தீயை அடக்கியாளப் பழகிய மனிதன் தீயை சிறு சிறு பொறியாக மாற்றி தீக்குண்டங்களில், அதாவது வேள்வியில் நிலை நிறுத்தினான். இதுவே பின்னாளில் சிறு ஒளியாக தீபமாக மாறியது. மனிதன் உயிர் வாழவும், உயிரை பாதுகாக்கவும் பயன்பட்டதால் 'தீ' புனிதமாக்கப்பட்டது. இன்றும் மாலை நேரத்தில், வீடுகளில் தீபமேற்றி செல்வத்தின் அதிபதி லட்சுமியை வரவேற்கும் முறை உள்ளது. எனவே, ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தீப ஒளி நம்மை காத்து வருகிறது.மனிதன் மனதிலுள்ள இருள் எனும் தீமையை போக்க தீப ஒளியில் இறைவனை வணங்கினான். உள்ளத்து தீமையை சுட்டெரி 'தீ' என்ற அறிவை பயன்படுத்தி விரட்டி, குறைவில்லா செல்வத்தை இல்லங்களுக்கு கொண்டு வரும் நன்னாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீய எண்ணங்களை விலக்கி சங்கடங்கள் வந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். தீபாவளி மத்தாப்பூவைப் பார்த்தீர்களா? அதன் தலையில் நெருப்பை வைத்தாலும், வண்ண வண்ணமாய் பொங்கி எப்படி எல்லாம் சிரிக்கிறது பார்த்தீங்களா? அப்படி இருப்போமே!

காவிக்கு இல்லை கட்டுப்பாடு

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது அவசியம். ஐப்பசி மாதம் குளிர்காலம் என்பதால் வெந்நீரில் குளிக்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் சிறப்பு இருக்கிறது. நல்ல எண்ணெய்யில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய்த்தலையைக் கண்டால் அபசகுனம் என்பர். ஆனால், தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி இருப்பதால் நீராடுவோருக்கு வளம் பெருகும். காவியணிந்த துறவியும் கூட எண்ணெய் தேய்த்து நீராடி தீபாவளியை கொண்டாட வேண்டும். இதன் மூலம் முன்வினைப்பாவம் கூட நீங்கும்.
டிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம்

Added : நவ 06, 2018 02:54

மதுரை, கருவூல கணக்குத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிச., 14க்குள் தமிழகத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படவுள்ளன.

இத்திட்டம் 288.90 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாநில கணக்காயர், அனைத்து கருவூல அலுவலகங்கள், சார்நிலை கருவூலங்கள், நிதித்துறை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்படும். மாநிலத்தில் அரசு துறைகளில் 29 ஆயிரம் சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் அலுவலர்களது சம்பள பட்டியலை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வர். அவை பரிசீலிக்கப்பட்டு ஒரு நாளில் சம்பளம் உள்ளிட்ட இதர பணப்பயன்கள் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது மூன்று நாட்களில் பணம் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.

கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் கூறியதாவது: மாநிலத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்கள், 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களது பில்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதால் பேப்பர் இல்லாத அலுவலகங்களாக கருவூலங்கள் மாறும். கம்ப்யூட்டரில் பில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறியலாம். மேலும் அரசு அலுவலர்கள் பணிப்பதிவேடுகள் கம்ப்யூட்டர் மயமாவதால், அவர்கள் சம்பள கணக்கு விவரங்களை உடன் அறியலாம். டிச., 15க்குள் கணினிமயமாக்கும் பணிகள் முடியும் என்றார்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...