Tuesday, March 3, 2020

வழி தவறிய 80 வயது முதியவர் 'வாட்ஸ் ஆப்' உதவியால் மீட்பு

Added : மார் 02, 2020 21:28

தஞ்சாவூர்: தஞ்சைக்கு ரயிலில் வழி தவறி வந்து, ஐந்து நாட்கள் சுற்றித் திரிந்த, பரமக்குடியைச் சேர்ந்த, 80 வயது முதியவர், 'வாட்ஸ் ஆப்' தகவலால், மகனிடம் சேர்க்கப்பட்டார்.

ராமநாதபுரம், பரமக்குடி அடுத்த சாத்தனுாரைச் சேர்ந்தவர் நாகரத்தினம், 80; மனைவி இறந்து விட்டார். குமார், ராஜாராம் என, இரு மகன்கள் டிரைவராக உள்ளனர். நாகரத்தினம் சரியாக பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்தார்; ஞாபக மறதியும் அதிகம்.ராமநாதபுரத்தில், மூத்த மகன் குமாருடன் வசித்து வந்துள்ளார். பரமக்குடியில், இளைய மகன் ராஜாராம் உள்ளார்.

பரமக்குடி ஸ்டேட் வங்கியில், மாதம்தோறும் முதியோர் உதவித்தொகை வாங்க, நாகரத்தினம் ரயிலில் செல்வது வழக்கம்.பிப்., 26ல், பரமக்குடி சென்று, வங்கியில் பணம் வாங்கியவர், மறுபடியும் ராமநாதபுரம் செல்ல, பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். ஆனால், தவறுதலாக, தஞ்சை வழியாக சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவர், வழி தெரியாமல் சுற்றித் திரிந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, மருத்துவக் கல்லுாரி சாலையில் மயங்கி கிடந்தார். அவ்வழியே வந்த வல்லம் ரியாசுதீன், 38, என்பவர் மீட்டு விசாரித்ததில், முதியவர் பரமக்குடியைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. மற்ற விபரங்களை அவரால் சொல்ல தெரியவில்லை.ரியாசுதீன், பரமக்குடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சாத்தனுாரைச் சேர்ந்த இருவரின் மொபைல் எண்களை பெற்று, 'வாட்ஸ் ஆப்'புக்கு முதியவர் படத்தை அனுப்பி உள்ளார்.அவர்கள், பரமக்குடி, சாத்தனுார் பகுதியில் உள்ள, 'வாட்ஸ் ஆப்' குரூப்களுக்கு முதியவர் படத்தை பகிர்ந்துள்ளனர்.

இதை நாகரத்தினத்தின் இளையமகன் ராஜாராமன் பார்த்து, ரியாசுதீனை தொடர்பு கொண்டார்.நேற்று அதிகாலை, ராஜாராமன் தஞ்சை வந்து, தந்தையை அழைத்து சென்றார்.
4 குற்றவாளிகள் துாக்கு மீண்டும் தள்ளிவைப்பு

Updated : மார் 03, 2020 00:50 | Added : மார் 03, 2020 00:27

புதுடில்லி : நாட்டையே அதிர வைத்த, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் துாக்கு தண்டனை மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி திஹார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், சட்ட சிக்கல்களால் நிறைவேற்ற முடியாமல் தள்ளி வைக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக, இன்று காலை, 6:00 மணிக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் புதிய, 'வாரன்ட்' பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பவன் குப்தா, அக் ஷய் குமார் இருவரும், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தனர். அவற்றில் 'உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும், ஜனாதிபதிக்கு மீண்டும் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் உள்ளதால், துாக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று, டில்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, இருவரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, 'துாக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது' என அறிவித்தார். இதையடுத்து, பவன் குப்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏ.பி.சிங்., ''பவன் குப்தாவின் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் காலையில் தள்ளுபடி செய்ததை அடுத்து, உடனே ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளதாகவும், ஆகவே துாக்கு தண்டனையை தள்ளி வைக்க வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, மதிய உணவு இடைவேளைக்குப் பின், வழக்கை விசாரிப்பதாக, நீதிபதி அறிவித்தார். அதன்படி, மீண்டும் நீதிமன்றம் கூடியதும், ஏ.பி.சிங்கை, நீதிபதி தர்மேந்திர ராணா கடுமையாக கடிந்து கொண்டார். ''நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். ''யாராவது ஒருவர் தவறாக நடந்தாலும், விளைவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். பவன் குப்தா, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளதால், துாக்கு தண்டனை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது,'' என, நீதிபதி உத்தரவிட்டார்.

'நிர்பயா' வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு, இந்தாண்டு, ஜன.,22, பிப்.,1 ஆகிய தேதிகளில் துாக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. இன்று நிறைவேற்றப்பட இருந்த துாக்கு தண்டனை, நீதிமன்ற உத்தரவால், மூன்றாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


தோல்வியை காட்டுகிறது

என் மகளின் இறப்புக்கு காரணமாக குற்றவாளிகள், துாக்கு தண்டனையில் இருந்து மூன்றாவது முறையாக தப்பித்துள்ளது, நம் நாட்டின் சட்ட நடைமுறைகளின் தோல்வியை காட்டுகிறது. அநீதிக்கான தண்டனை தள்ளிப் போவதை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

-ஆஷா தேவி, 'நிர்பயா'வின் தாயார்

கருணை மனு

'நிர்பயா' வழக்கில் குற்றவாளியான பவன் குப்தா, ஜனாதிபதிக்கு எழுதிய கருணை மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, அனுப்பியுள்ளார். 'பவன்குப்தாவின் கருணை மனு விரைவில், ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காமாட்சி அம்மன் வீதியுலாவில் தடி முறிந்து ஊர்வலம் நிறுத்தம்

Added : மார் 03, 2020 00:37

காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்ஸவத்தில் நேற்று நடைபெற்ற தங்க சூரிய பிரபை வீதியுலாவின்போது தடி முறிந்ததால் ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்ஸவம் பிப்ரவரி 28ம் தேதி துவங்கியது.தினமும் காலை மற்றும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் வீதியுலா செல்கிறார். நான்காம் நாளான நேற்று காலை தங்கசூரிய பிரபை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.

அப்போது அம்மனுக்கு கச்சபேஸ்வரர் கோவில் எதிரில் 18 அடி அகலம் உடைய பெரிய குடை மாற்றப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் துாக்கி செல்ல பயன்படுத்தப்பட்ட தடி முறிந்தது.இதனால் சூரிய பிரபை வாகன ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டது. தடி முறிந்தாலும் வாகனம் கவிழவில்லை; யாருக்கும் காயமுமில்லை.

இதையடுத்து கேடயத்தில் வைத்து அம்மனை கோவிலுக்கு எடுத்து சென்றனர். முறிந்த தடியை அகற்றி கோடியகாரர்கள் துாக்கி சென்றனர். பிரம்மோற்ஸவத்திற்காக நடப்பாண்டு செய்யப்பட்ட புதிய தடியில் முறிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இரவு வாகன அம்மன் வீதியுலாவுக்கு பழைய தடி பயன்படுத்தப்பட்டது.
மருத்துவ தேர்வில் முறைகேடுகள் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

Added : மார் 02, 2020 22:36

சென்னை: ''மருத்துவ தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்,'' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர், சுதா சேஷய்யன் கூறினார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: மருத்துவ பல்கலையின் பட்டமளிப்பு விழா, வரும், 5ம் தேதி நடைபெற உள்ளது.விழாவில், மாநில கவர்னரும், பல்கலையின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்குவார். விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன், அணுசக்தித் துறை முன்னாள் தலைவர் சிதம்பரம் ஆகியோர், மருத்துவ துறையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து, சிறப்புரையாற்ற உள்ளனர்.

கண்காணிப்பு

இந்தாண்டு பட்டமளிப்பு விழா, பல்கலையின் வெள்ளி விழா அரங்கில், முதன் முறையாக நடைபெற உள்ளது. மொத்தம், 17 ஆயிரத்து, 590 பேர் பட்டம் பெறுகின்றனர். விழாவில், நேரடியாக, 724 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.மருத்துவ தேர்வுகளில், முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்வு மையங்களில், 'கேமரா' பொருத்தப்படுவதுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில், தேர்வுகளை கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பிரத்யேக மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது நடைமுறைக்கு வந்த பின், எந்த தேர்வு கூடத்தில் முறைகேடுகள் நடந்தாலும், அதுகுறித்த தகவல்கள், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்து விடும். இந்த வசதியை, ஆகஸ்ட் மாதத்திற்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கடந்தாண்டு, 'நீட்' நுழைவு தேர்வு வாயிலாக, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்தவர்களுக்கு, பதிவு எண் வழங்குவது தாமதமாகிறது. வழக்கு நிலுவை'நீட்' தேர்வு முறைகேடுகள் குறித்து, விசாரணை நடைபெற்று வருவதும், அதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதுமே காரணம். ஆனாலும், மாணவர்கள் நலன் கருதி, தற்காலிக பதிவு எண் வழங்கப்படும். விசாரணை முடிவுக்கு வந்த பின், நிரந்தர எண் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.பல்கலை பதிவாளர், டாக்டர் அஸ்வத் நாராயணன் உடனிருந்தார்.
மானசரோவர், முக்திநாத் யாத்திரைக்கு மானியம்

Added : மார் 02, 2020 22:27

சென்னை: 'மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை செய்தவர்கள், அரசு மானியம் பெற, ஏப்ரல், 30க்குள் விண்ணப்பிக்கலாம்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் தலங்களுக்கு, புனித யாத்திரை செல்வோருக்கு, மானியம் வழங்கும் திட்டத்தை, அறநிலைய துறை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.அதன்படி, 2019 ஏப்ரல் முதல், 2020 மார்ச், 31 வரை, யாத்திரை சென்றவர்கள், மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.மானியம் பெற, தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். மானசரோவர் சென்றவர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய்; முக்திநாத் சென்றவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், அரசு மானியமாக வழங்கப்படுகிறது.விண்ணப்பங்கள், 500க்கு மேல் வந்தால், குறைந்த வருமானம் அடிப்படையில், பயனாளிகள், அரசின் தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர். முதல் முறையாக, மானசரோவர், முக்திநாத் சென்றவர்களுக்கு மட்டுமே, இந்த மானியம் வழங்கப்படும்.

எனவே, மானியம் பெற விரும்புவோர், www.tnhrce.gov.in என்ற, அறநிலையத் துறை இணையதளத்தில் இருந்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், ஹிந்து சமய அறநிலையத் துறை, எண் 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34' என்ற முகவரிக்கு, ஏப்., 30க்குள் அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருக்குறள் ஒப்புவித்தால் குடும்பத்திற்கே அசைவ விருந்து: தமிழை வளர்க்க புதுச்சேரி ஓட்டலில் புதுமை

Added : மார் 03, 2020 02:44

புதுச்சேரி:புதுச்சேரி அருகே ஓட்டல் ஒன்றில், திறக்குறள் ஒப்புவித்தால் போதும், குடும்பத்திற்கே மெகா அசைவ விருந்து வைத்து அசத்துகின்றனர்.
உலக பொது மறையாக விளங்கும் திருக்குறள் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, வருங்காலத்திலும் அதன் புகழை மங்காமல் பாதுகாக்க தமிழ் ஆர்வலர்கள் பலரும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் பொதுமக்களிடையே திருக்குறளை எளிதாக கொண்டு சேர்க்கும் புதுமையான முயற்சியில் புதுச்சேரியை சேர்ந்த சமையற்கலை வல்லுநரான நிருபன் ஞானபானு இறங்கியுள்ளார்.புதுச்சேரி அடுத்துள்ள கரிக்கலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இவர், அமெரிக்காவில் உள்ள ஓட்டல்களில் சமையற் கலை வல்லுநராக பணிபுரிந்துள்ளார். புதுச்சேரி- கடலுார் சாலையில் நோணாங்குப்பம் பகுதியில் கீற்று வேயப்பட்ட கொட்டகையில் இயற்கை சூழலுடன் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை துவக்கியுள்ளார்.தமிழ் மீது பற்றுகொண்ட நிருபன் ஞானபானு, திருக்குறளின் புகழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தனது ஓட்டலுக்கு வரும் எவரும், 100 திருக்குறளை ஒப்புவித்தால் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் என 21 வகையான மெகா அசைய விருந்து வைத்து அசத்தி வருகிறார்.குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்தால் தங்களது குடும்பத்தோடு இலவசமாக அசைவ விருந்தை சாப்பிட்டு மகிழலாம். நிருபன் ஞானபானுவின் இந்த புதுவிதமான முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விவோ: புதிய 5ஜி போன்

பதிவு செய்த நாள்03மார்  2020  00:00

விவோ நிறுவனம், அதன் புதிய, 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 'விவோ இசட்6-5ஜி' எனும் இந்த போன், 48 எம்.பி., மெயின் கேமராவுடன் வந்துள்ளது.விளையாடும்போது, போன் அதிக சூடாவது ஒரு பிரச்னை. இதில் அதை குறைக்கும் வகையிலான தொழில்நுட்பம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இரு வண்ணங்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த போன், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.6 ஜி.பி., /128 ஜி.பி., மாடல் விலை, 22 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இதுவே, 8 ஜி.பி., எனில், 26 ஆயிரம் ரூபாய் ஆகிறது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...