Sunday, August 18, 2019

முதியவர்களைப் போற்றுவோம்

By வி.குமாரமுருகன் | Published on : 17th August 2019 01:44 AM |

திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் வயதான தம்பதி துணிச்சலுடன் செய்த செயல் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
கடையம் அருகேயுள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேலுவின் பண்ணை தோட்டத்தில் சில நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், சண்முகவேலுவை நாற்காலியுடன் சேர்த்து இழுத்துக் கீழே தள்ள முயன்றனர். அவர்களை சண்முகவேலு எதிர்கொண்டு போராடினார். சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி செந்தாமரையும் கணவரும் சேர்ந்து துணிச்சலுடன் போராடி கொள்ளையர்களை விரட்டியடித்தனர். கொள்ளையர்கள் கையில் அரிவாள் இருந்தபோதும், அது முதியவர்களை பயம் கொள்ளச் செய்யவில்லை.

சண்முகவேலு தம்பதியினரிடம் எந்தவித ஆயுதங்களும் இல்லை. ஆனால், மன திடத்துடன் கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு கொள்ளையர்களை விரட்டி அடித்த காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

தொடர்ந்து கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிகளை நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டினர். சண்முகவேலுவின் வீட்டுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் சென்று அவர்களுடைய துணிச்சலைப் பாராட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திரதின விழாவில், அதீத துணிவுக்கான முதல்வரின் சிறப்பு விருதுக்கான தங்கப் பதக்கம், ரூ. 2 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை சண்முகவேலு-செந்தாமரை தம்பதியினருக்கு முதல்வர் பழனிசாமி வழங்கி கெளரவித்தார்.

ஆனால், இத்தகைய முதியவர்களின் அனுபவ அறிவைப் பயன்படுத்தாத ஏராளமான இன்றைய தலைமுறையினர் இன்று நகரங்களில் வசித்து வருகின்றனர். இதனால், முதியவர்கள் என்றாலே பாரம்தான் என்ற மனப்போக்கு அடுத்த தலைமுறையினரிடம் உள்ளது.
இன்றைய இயந்திரமயமான உலகில், வாரிசுகள் ஒரு பகுதியிலும் பெற்றோர் வேறு இடத்திலுமாக தனித்து வாழ்கின்றனர். காலை முதல் இரவு வரை ஓயாது உழைக்க வேண்டியதாக நகர வாழ்க்கை இருந்து வரும் நிலையில், ஊருக்குள் குடியிருக்க வீடுகள் கிடைப்பதில்லை; புறநகர்ப் பகுதியில்தான் அவர்கள் வசிக்க வேண்டியுள்ளது.
புறநகர்ப் பகுதியிலுள்ள வீடுகளில் குழந்தைகளுடன் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்து வரும் அவர்களுக்கு அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது. வீட்டைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்கள் என்றுமே கவனத்தில் கொள்வதில்லை.
ஊருக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் வசிப்போர், கொள்ளைச் சம்பவங்கள் நடக்கும்போது என்ன செய்வது என்றே தெரியாமல் இன்றைய இளம் தலைமுறையினர் தவிப்பதுடன், சேர்த்து வைத்த செல்வத்தையும் இழக்கின்றனர்.

அது மட்டுமல்ல, கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தைகளை என்ன செய்வது என்று தெரியாமல் மாலை நேரத்தில் வீடுகளில் இருக்க வைத்துவிட்டு அலுவலகத்திலிருந்து கவலைப்பட்டு கொண்டு இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாமல் பல குழந்தைகள் தங்களின் வாழ்க்கைப் பாதையை திசை மாற்றி தொலைத்து வரும் சம்பவங்களும் நிகழ்கின்றன. 

பெரும்பாலான வீடுகளில் வேலைக்குச் செல்லும் தம்பதிகள் இரவில்தான் வீடு திரும்புகின்றனர். தாங்கள் வரும் வரை பசிக்கு மாற்றாக , வேறு வழியின்றி தவிர்க்க வேண்டிய உணவுப் பண்டங்களை வைத்து விட்டுச் செல்கின்றனர் பெற்றோர். இத்தகைய உணவுகளை இரவு வரை இடைவிடாது உண்பதால் குழந்தைகளின் உடல் நலனும் பாதிக்கப்படுகிறது. மேலும், தந்தையும் தாயும் வீடு திரும்பும் வரை, இளம் தலைமுறையினர் செல்லிடப்பேசியே கதி என நேரத்தைக் கழிக்கின்றனர். வீட்டில் யாரும் இல்லாதபோது, இன்றைய இளம் தலைமுறையினரின் பெரும்பாலானோர் செல்லிடப்பேசியில் சமூக ஊடகங்களில் மூழ்கி தங்களது வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்கின்றனர்.

சில இடங்களில் வேலைக்குச் செல்லும் தம்பதிகள் , மாலை நேரத்தில் தங்கள் பிள்ளைகளை பக்கத்து வீட்டில் இருக்கச் சொல்வார்கள். அது போன்ற நிகழ்வுகளிலும்கூட சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதையும் மறுப்பதற்கில்லை; ஆண் வாரிசுகளைவிட பெண் வாரிசுகள்தான் இதனால் பாதிக்கப்படுவது அதிகம்.
முன்பு கூட்டுக் குடும்ப முறை இருந்தபோது, வாரிசுகளை தங்களின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு பல நாள்கள் வெளியிடங்களில் தங்கியிருந்த சம்பவங்கள் அதிகம். இப்படிச் செல்வோர், எதற்காகச் சென்றார்களோ அந்தப் பணிகளை நிம்மதியாக முடித்து விட்டு வருவார்கள். ஆனால், இன்றோ இரண்டு நாள்கள் வெளியூர் செல்ல வேண்டுமென்றாலும்கூட , தங்கள் வாரிசுகளை என்ன செய்வது என்ற குழப்பம் பெற்றோருக்கு ஏற்படுகிறது. 

வீட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதைக் குறைக்க முடியும். முக்கியமாக, தங்கள் வீட்டுக் குழந்தைகளை எந்தவிதப் பயமும் இல்லாமல் வீடுகளில் விட்டுச் செல்ல முடியும். அப்படி விட்டுச் செல்லும்போது, தனது தாத்தா அல்லது பாட்டி இருக்கிறார் என்பதால் தொடர்புடைய இளம் தலைமுறையினர் தவறு செய்வதைத் தவிர்க்கக் கூடிய சூழல் உருவாகும்.

எனவே, தங்களுடைய முதிய பெற்றோரின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையுடன் அவர்களைப் பாதுகாப்பு அரணாக இன்றைய தம்பதியினர் கருத வேண்டும். அதாவது, தங்களது வாரிசுகளையும் வீட்டையும் அவர்கள் பாதுகாப்பார்கள் என்பதையும் உணர வேண்டும். 

கடையத்தின் முதிய தம்பதிகளின் விவேகத்துடன் கூடிய வீரமே இன்றைய இளைஞர்களுக்கு தேவை. அத்தகைய திறனை இன்றைய இளைய தலைமுறையினருக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்க கிராமங்களில் இருக்கும் பெற்றோராகிய முதியவர்களை நகரங்களில் உள்ளோர் தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து போற்றுவது அவசியம்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...