Thursday, September 7, 2017

கோடிக்கணக்கில் லஞ்சம்: முறைகேடுகளுக்கு துணைபோன வருமானவரித் துறை உயரதிகாரிகள்


By யத்தீஷ் யாதவ்  |   Published on : 07th September 2017 04:46 AM  
வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களிடம் வரியுடன் அபராதத்தையும் வசூலித்து அரசுக் கருவூலத்தில் சேர்ப்பதுதான் வருமான வரித் துறையின் முதன்மையான பணியாகும். ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக வருமான வரித் துறை மூத்த அதிகாரிகள் சிலர் தனியார் நிறுவனத்திடம் இருந்து கோடிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, முறைகேடுகளுக்கு துணைபோனது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டைரியில் சிக்கிய அதிகாரிகள்: வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகள் எஸ்.கே. ஓஜா, சுபாஷ் சந்திரா, எம்.எஸ்.ராய் உள்ளிட்ட சில அதிகாரிகள் மற்றும் வதோதரா நகரைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் மீது சிபிஐ கடந்த மாதம் 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, அவர்களின் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்தனர் என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம்.
வரி ஏய்ப்புக்கு துணைபோன இந்த அதிகாரிகளால் அரசின் கருவூலத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அந்த அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வதோதராவில் உள்ள ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தங்கள் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அந்த நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுள்ளனர் என்பதற்கு ஆதாரமான டைரி, கணினியில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 ஆண்டுகள் புதைந்த உண்மை: வருமான வரித்துறைக்குள் நடைபெற்ற சில ரகசிய சமரச நடவடிக்கைகளால் 4 ஆண்டுகளாக இந்த உண்மைகள் புதைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் வந்தபோது முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிபிஐ-யின் கைகளில் ஆதாரம்: வருமான வரித்துறையினர் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றார்கள் என்பதற்கு ஆதாரமான டைரி உள்ளிட்ட ஆவணங்கள், வருமான வரித்துறையிடம் இருந்து சிபிஐ-யின் வசம் சென்றுள்ளது. இந்த முக்கிய ஆவணங்களில் உள்ள தகவல்கள் பல நமது பத்திரிகைக்கு கிடைத்துள்ளன.
போலி நிறுவனங்களும், பினாமிகளும்... ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் கருப்புப் பணத்தை பதுக்குவதற்காக பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், செஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள், அமைப்புகளை ரகசியமாக வைத்திருந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை ஏற்படுத்தி, ஸ்டெர்லிங் பயோடெக், ஸ்டெர்லிங் இண்டர்நேஷனல் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அவற்றிடம் உள்ளன என்று மோசடி செய்துள்ளனர். இரு நிறுவனங்கள் மூலம் கிடைத்த லாபம் பினாமிகள் பெயரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஸ்டெர்லிங் நிறுவனத்தின் கொள்முதல், விற்பனை தொடர்பாகவும் பல போலி ஆவணங்களை தயாரிக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பட்டயக் கணக்காளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தபோது அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்.
பொதுவாக இதுபோன்ற முறைகேடுகளில் நிறுவனங்கள் ஈடுபடுவது தெரியவந்தால் வருமான வரித் துறையினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால், ஸ்டெர்லிங் நிறுவன விவகாரத்தில் இந்த முறைகேடுகள் அனைத்தும் தெரிந்திருந்தும் வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகள் மூவரும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரமும் அந்த நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரி, கணினி தகவல்கள் மூலம் வெளிப்பட்டுள்ளதுதான் வழக்கின் முக்கிய ஆதாரமாகும்.
கோடிகளில் லஞ்சம்: அந்த ஆவணங்களில் உள்ள தகவலின்படி வருமான வரித்துறை மூத்த அதிகாரி எஸ்.கே. ஓஜாவுக்கு ரூ. 1 கோடியே 23 லட்சத்து 89 ஆயிரத்து 500 லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இது, 2007 ஏப்ரல் 13, 2008 ஏப்ரல் 7, 2008 ஏப்ரல் 9, 2009 நவம்பர் 27 ஆகிய தேதிகளில் தவணை முறையில் பணமாகவும், கேட்பு வரைவோலைகளாகவும் (டிமாண்ட் டிராஃப்ட்) வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஓஜாவின் பல்வேறு பயணச் செலவுகளையும், நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான செலவையும் அந்த நிறுவனமே மேற்கொண்டுள்ளது.
ஓஜாவுக்கு கொடுத்த பணத்துக்கான செலவுக் கணக்கை அந்த நிறுவனம் தனது தனிப்பட்ட பதிவேட்டில் 'ஓஜாவுக்கு கொடுத்த வட்டி' என்ற பெயரில் பதிவு செய்து வைத்துள்ளது. ஓஜா குஜராத்தில் 1987 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்திலும், மும்பையில் 1996 முதல் 2005, 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றியுள்ளார். ஸ்டெர்லிங் நிறுவனத்துடன்அவர் நீண்டகாலம் தொடர்பில் இருந்துள்ளார். ஓஜாவின் குடும்பத்தினருக்கு பல்வேறு விமானப் போக்குவரத்து செலவுகளையும் அந்த நிறுவனம் செய்து தந்துள்ளது.
மேலும் இரு அதிகாரிகள்: இது தவிர சிபிஐ வசமுள்ள டைரியின் 8-ஆவது பக்கத்தில் 2011-ஆம் ஆண்டு ஜனவரியில் மூத்த வருமான வரித் துறை அதிகாரி சுபாஷ் சந்திராவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர அந்த டைரியின் 14-ஆவது பக்கத்தில் அவருக்கு மேலும் ரூ.2 லட்சம் வழங்கியதாக குறிப்பு உள்ளது. இது தவிர நிறுவனத்தின் கணினிப் பதிவில் சுபாஷ் சந்திராவுக்கு ரூ.11 லட்சம் வழங்கியதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது.
மேலும், சுபாஷ் சந்திரா, வருமான வரித் துறையின் மற்றொரு மூத்த அதிகாரியான ராய் ஆகியோருக்கு 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் தலா ரூ.75 லட்சம், ரூ.30 லட்சம் மற்றும் ரூ.1 கோடி அளிக்கப்பட்டதாக அந்த டைரியில் எழுதப்பட்டுள்ளது.
விரைவில் கைது: இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், 'டைரியில் உள்ள தகவல்கள் மூலம் வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகளில் யாரெல்லாம் லஞ்சம் பெற்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் ஏதுவும் ஏற்படவில்லை. அவர்களும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்களும் உரிய நேரத்தில் கைது செய்யப்படுவார்கள்.
இப்போது வெளிப்பட்டுள்ள விவரங்கள் மிகப்பெரியதொரு ஊழலின் சிறு பகுதிதான். வருமானத் துறையில் ஊழலின் வேர் அடி வரை பரவியுள்ளது. அந்த நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு பல்வேறு நிலைகளில் வருமான வரித்துறை துணை போயுள்ளது' என்று தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்ளிட்டவை வெளிப்பட்டபோது பெரும் அதிர்ச்சி அலைகள் நாட்டில் ஏற்பட்டன. அவற்றில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மீதுதான் முக்கிய குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், இப்போது முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள வருமான வரித்துறையின் உயரதிகாரிகள் மீது லஞ்ச-ஊழலின் கரிய நிழல் படரத் தொடங்கியுள்ளது. 
அரசு நிர்வாகத்தின் கீழ் மட்டம் முதல் உச்சி வரை லஞ்சமும், ஊழலும் புரையோடித்தான் கிடக்கிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம். இந்த முறைகேடு தொடர்பான அடுத்தக் கட்ட விசாரணைகளில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐ-யிடம் சிக்கிய டைரியில் பரபரப்பு தகவல்
கடந்த காலங்களில் 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்ளிட்டவை வெளிப்பட்டபோது பெரும் அதிர்ச்சி அலைகள் நாட்டில் ஏற்பட்டன. அவற்றில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மீதுதான் முக்கிய குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், இப்போது முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள வருமான வரித்துறையின் உயரதிகாரிகள் மீது லஞ்ச-ஊழலின் கரிய நிழல் படரத் தொடங்கியுள்ளது.
'ப்ளூ வேல்' மாணவர்கள் 5 பேர் மீட்பு

பதிவு செய்த நாள்07செப்
2017
00:02

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, 'ப்ளூ வேல்' விளையாடிய, அரசு பள்ளி மாணவர்கள், ஐந்து பேர் மீட்கப்பட்டனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, எலவனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், ப்ளூ வேல் விளையாடுவதாக, நேற்று முன்தினம் தகவல் பரவியது. சின்னதாராபுரம் போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில், பிளஸ் 1 மாணவர்கள், நான்கு பேர், பிளஸ் 2 மாணவர் ஒருவர் என, ஐந்து பேர், ப்ளூ வேல் விளையாடியதாக, பள்ளி ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர்.
மாணவர்களின் பெற்றோரை அழைத்து, டாக்டர்கள் உதவியுடன், பள்ளியில் நேற்று முன்தினம் மாலை, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
ஐந்து மாணவர்களையும், சில நாட்கள், வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுமாறு, பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

13 மாணவியர் மீட்பு : வேலுார் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 17 வயது மாணவி, பிளஸ் 2 படித்து வருகிறார். சில நாட்களாக, மாணவி சோர்வுடன் காணப்பட்டார். அவரை அழைத்து, ஆசிரியர்கள் விசாரித்தனர்.இதில், அவர், இரண்டு வாரங்களாக, ப்ளூ வேல் விளையாடியது தெரியவந்தது. மேலும், கையில் அந்த சின்னத்தை பச்சை குத்தி இருந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவியை, வேலுார் மாவட்ட குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனர். மாணவிக்கு, மருத்துவர்களால் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளியில் சென்று விசாரித்தார். இதில், மேலும், 12 மாணவியர், ப்ளூ வேல் விளையாடுவது தெரியவந்தது. அந்த மாணவியரை அழைத்து விசாரித்தார். அவர்கள், இப்போது தான் விளையாட துவங்கியிருப்பது தெரிந்தது. அவர்களை எச்சரித்து, அனுப்பி வைத்தார்.

மாணவர், 'அட்மிட்' : 'ப்ளூ வேல்' விளையாட்டுக்கு அடிமையான பாலிடெக்னிக் மாணவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவன், துறையூரில் உள்ள பாலிடெக்னிக்கில், முதலாண்டு டிப்ளமா படித்து வருகிறார். இவர் கல்லுாரியில் எப்போதும் மொபைல் போனுடன் இருந்துள்ளார். கல்லுாரி நிர்வாகம், மாணவரை கண்டித்துள்ளது. இதனால், கல்லுாரிக்கு செல்வதை தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே, மொபைல் போனில் விளையாடி கொண்டு இருந்துள்ளார். மேலும், தந்தையிடம் கல்லுாரியில், 'டிசி' வாங்கி வருமாறும் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தந்தை, நேற்று காலை மொபைல் போனை பிடுங்கி உடைத்து விட்டார். ஆத்திரமடைந்த மாணவர், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மகனை ஒரு அறையில் வைத்து பூட்டி, போலீசாருக்கு தெரிவித்தார். துறையூர் போலீசார், மாணவனை மீட்டு, துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர், ப்ளூ வேல் விளையாட்டுக்கு அடிமையானது தெரியவந்தது. மாணவரை, நேற்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
'நீட்' போராட்ட பின்னணியில் கல்லூரி நிர்வாகம்? ;

யு.ஜி.சி. உத்தரவால் விசாரணை துவக்கம்

'நீட்' தேர்வுக்கு எதிராக, தனியார் கல்லுாரி மாணவர் போராட்டங்களின் பின்னணியில், கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனரா என, விசாரணை துவங்கி உள்ளது.

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாததால், பிளஸ் ௨ முடித்த மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.







போராட்டங்கள் :

அதனால், தமிழகம் முழுவதும் மீண்டும், 'நீட்' தேர்வை எதிர்த்து, சில மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆதரவு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதில், இதுவரை இல்லாத அளவுக்கு, மாநிலத்தில்

உள்ள சில தனியார் கல்லுாரிகள், குறிப்பாக, மருத்துவத்துக்கு தொடர்பில்லாத கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல், இந்த போராட்டங்களிலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷமிடுகின்றனர். இது குறித்து, கலை, அறிவியல் கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,க்கு, சிலர் புகார் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

மாநில தலைநகரான சென்னையில் உள்ள புதுக்கல்லுாரி மற்றும் லயோலா போன்ற தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து, உயர்கல்வித் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். யு.ஜி.சி., அறிவுறுத்தல்படி, இந்த விசாரணை துவங்கி
உள்ளது.

காரணம் என்ன? :

அரசு கல்லுாரிகளில், போராட்டங்கள் நடத்தும் அமைப்புகள் எவை; தனியார் கல்லுாரிகளில் போராட்டங்கள் நடக்க காரணம் என்ன; கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவர்களை துாண்டி விட்டனரா; கல்லுாரிகளில் முறைப்படி மாணவர் பேரவை

தேர்தல் நடத்தப்பட்டதா;போராட்ட பின்னணியில் ஆசிரியர்கள், ஜாதி, மத ரீதியான அமைப்புகள் உள்ளனவா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

உயர்கல்வித் துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவுத்துறை போலீசாரும் இணைந்து, விசாரணையை துவக்கி உள்ளனர். போராட்டத்தில், கல்லுாரி நிர்வாகத்தினரின் தொடர்பு இருந்தால், யு.ஜி.சி., மூலம், கல்லுாரிகளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என, தெரிகிறது.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏமாற்றப்படும் அரசு ஊழியர்கள்
பதிவு செய்த நாள்06செப்
2017
22:21

அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சிகிச்சை பெறக் கூடிய நோய், மருத்துவமனை விபரங்களை மட்டுமே அரசு அறிவித்துள்ளது. சிகிச்சைக்குரிய செலவு விபரத்தை அறிவிக்காததால், காப்பீட்டு நிறுவனம், முறையாக பணம் கொடுப்பதில்லை என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அவர்கள் சம்பளத்தில் மாதம், 180 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.

சிகிச்சை ; இதில், இதய நோய் உட்பட, 59 வகையான நோய்களுக்கு, 300க்கும் மேற்பட்ட தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தில், நான்கு ஆண்டுகளில், நான்கு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கு, 7.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிகிச்சைக்குரிய தொகையை கணக்கிட்டு வழங்கும் பணியை, எம்.டி., இந்தியா என்ற தனியார் நிறுவனத்திடம், யுனைடெட் இந்தியா நிறுவனம் ஒப்படைத்து உள்ளது. இந்த திட்டத்தில், சிகிச்சை பெறக் கூடிய நோய், மருத்துவமனை விபரங்களை மட்டுமே அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கண்புரை அறுவை சிகிச்சைக்கு, 25 ஆயிரம் ரூபாய், கர்ப்பப்பை நீக்கத்திற்கு, 45 ஆயிரம் ரூபாய் என, இரண்டு நோய்களுக்கு மட்டுமே, செலவு விபரம் தெரிவித்துள்ளது. மற்ற நோய்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால், மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு, அதற்குரிய பணத்தை, காப்பீட்டு நிறுவனம் முழுமையாக வழங்குவதில்லை.

வழங்குவதில்லை ; இதனால், பாதித் தொகையை, சிகிச்சை பெறுவோரே மருத்துவ மனைக்கு செலுத்த வேண்டியுள்ளது. மேலும், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த சிலருக்கு மட்டும் முழுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது: சிகிச்சைக்குரிய பணத்தை, முழுமையாக மருத்துவமனைகளுக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்குவதில்லை. பிரச்னை செய்வோருக்கு மட்டுமே பணம் வழங்குகின்றனர். டாக்டர் ஆலோசனை கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம், அறை வாடகை, உணவு உள்ளிட்ட அனைத்திற்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணம் தர வேண்டுமென, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதை, இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்த மறுக்கிறது. ஒவ்வொரு நோய்க்கும், தனித்தனியாக சிகிச்சைக்கான தொகை விபரத்தை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இன்சூரன்ஸ் நிறுவனத்தினர், 'அரசு விதிமுறைப்படி, இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறோம்' என்றனர்.
மோகனூரை புரட்டிப்போட்ட சூறாவளி : 50 ஆயிரம் வாழை, வெற்றிலை சேதம்

பதிவு செய்த நாள்06செப்
2017
20:06




நாமக்கல்: மோகனுாரை புரட்டி போட்ட சூறாவளி காற்றால், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள, 50 ஆயிரம் வாழைகள், 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, வெற்றிலை கொடிக்கால் பயிர்கள் சேதம் அடைந்தன.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, வரலாறு காணாத சூறாவளி காற்று வீசியது. காவிரி கரையோரம் பயிரிடப்பட்டிருந்த, வாழை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் பயிர்கள் வேரோடு சாய்ந்தன. மோகனுாரில், 25க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது; 200க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மக்கள், பீதியில் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். அப்பகுதியில் பல நுாறு ஏக்கர் பயிரிடப்பட்டிருந்த, ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும், விவசாயிகளுக்கு, பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல், 10 ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் பயிரும் மூட்டுவேலியுடன் கீழே விழுந்துள்ளதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பின் நிர்வாகி, கூறியதாவது:

சூறாவளி காற்றில், 50 ஆயிரம் வாழை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் ஆகியவை சேதமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு, மூன்று கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கு, இலக்கு நிர்ணயம் செய்து முடிக்க நினைக்கும், வேளாண் துறையினர், இதற்கு எப்படி இழப்பீடு தரப்போகின்றனர் என்பது தெரியவில்லை.

மாவட்ட நிர்வாகம், நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.
'மருத்துவ துறையில் சிறந்து விளங்குது தமிழகம்'
பதிவு செய்த நாள்  07செப்
2017
00:03




சென்னை: ''மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது; ஆனால், மருத்துவ ஆராய்ச்சியில் பின்தங்கி உள்ளது,'' என, தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 29வது பட்டமளிப்பு விழாவில், மத்திய சுகாதாரத் துறை செயலர், சவுமியா சுவாமிநாதன் பேசினார்.

நிதியுதவி : தமிழ்நாடு, டாக்டர்எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 29வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் தலைமை வகித்து, மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில், மத்திய சுகாதாரத் துறை செயலர்,சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: தமிழகம் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியை, மற்ற மாநிலங்களும் உற்று நோக்குகின்றன. இருப்பினும், மருத்துவ ஆராய்ச்சியில், தமிழகம்மிகவும் பின்தங்கி உள்ளது; நாடு முழுவதும் இதே நிலையே உள்ளது. தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், மனிதவளம், தரவுகள் அனைத்தும் இருந்தும், ஆய்வில் கவனம் செலுத்த தயங்குகிறோம்.

நம்மை விட சிறிய நாடான இலங்கை, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தரத்திலும் முன்னோடியாக திகழ்கிறது. சர்வதேச அளவில், தீர்வுகளை கண்டறியும் வகையில், நாம், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மூன்று முதல், ஆறு மாதங்கள் வரையிலான குறுகிய ஆய்வுகளுக்கு, நிதியுதவி அளிக்கிறது. இதை, தமிழக மாணவர்கள், சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்பு : முதுநிலை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படிப்போர், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வசதியாக, நாடு முழுவதும் இருந்து, 20 மருத்துவ கல்லுாரிகள், சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதில், தமிழகத்தில்இருந்து, இரண்டுகல்லுாரிகளாவது இடம்பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், மருத்துவ கல்லுாரிகள் மற்றும் செவிலியர் கல்லுாரிகளில், ஆராய்ச்சிக்காக தனி துணை முதல்வர்களைநியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் போலீசாரின் என்.ஓ.சி., தேவையில்லை : உடனே 'டூப்ளிகேட்' பெற ஏற்பாடு

பதிவு செய்த நாள்  06செப்
2017
23:50

திண்டுக்கல்: வாகன ஓட்டிகளின் ஒரிஜினல் 'ஓட்டுனர் உரிமம்' தொலைந்து போனால், மீண்டும் பெற போலீசின் தடையில்லா சான்று தேவையில்லை. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனுக் கொடுத்தால், 'டூப்ளிகேட்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் செல்வோர் மீது, போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த கட்டாரியா வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து போனால், போலீசாரின் தடையில்லா சான்று(என்.ஓ.சி.,) பெற வேண்டும். இதனால் தங்களின் பணிகள் பாதிப்பதாகவும், ஊதிய இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் ஒரிஜினல் உரிமம் தொலைந்தால் போலீசாரின் என்.ஓ.சி., தேவையில்லை. அதுபற்றி, போலீஸ்'ஆன்லைனில்' பதிவு செய்து ரசீது பெற்றால் போதும். இதை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்துடன் இணைத்து மூன்று நாளில் 'டூப்ளிகேட்' உரிமம் பெறலாம் என, தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன் கூறியதாவது: போக்குவரத்து ஆணையரின் உத்தரவு, வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும். ஒரிஜினல் உரிமத்தின் ஜெராக்ஸ் காப்பியுடன், போலீசில் ஆன்லைனில் விண்ணப்பித்த ரசீதையும் இணைத்து விண்ணப்பிப்பது அவசியம். அதற்கு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும், என்றார்.
உயர் மருத்துவம் நாளை கவுன்சிலிங்
பதிவு செய்த நாள்  06செப்
2017
23:28

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்., என்ற படிப்புகளுக்கு, 192 இடங்கள் உள்ளன. நாடு முழுவதும், 1,215 இடங்கள் உள்ளன. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில், 1,140 பேர் இடங்கள் பெற்றனர்.மீதமுள்ள இடங்கள் மற்றும் கல்லுாரியில் சேராதோர் இடங்களுக்கான கவுன்சிலிங், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், 'ஆன் லைன்' வழியே, நாளை நடைபெற உள்ளது.



நெல்லையில் பலத்த மழை

பதிவு செய்த நாள்06செப்
2017
22:25

திருநெல்வேலி: நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பெய்த மழையில், குளம் உடைப்பெடுத்தது. நெல்லை, துாத்துக்குடியில், இரண்டு தினங்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கழுகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த மழை பெய்தது. கழுகுமலை- - குமாரபுரம் இடையே, சாலையில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக, தற்காலிகமாக போடப்பட்ட பாலத்தை உடைத்து, தண்ணீர் வெள்ளமாக சென்றது. கோவில்பட்டியை அடுத்துள்ள பாப்பான்குளத்தில் பெய்த பலத்த மழையால், அங்குள்ள குளம் உடைந்து, தண்ணீர் முழுவதும் வெளியேறியது. நெல்லையில், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. பேட்டை, என்.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாலை, 4:30 முதல், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, மழை பெய்தது.
சென்னையில் பரவலாக மழை
பதிவு செய்த நாள்

07செப்
2017
01:36



சென்னை: சென்னை - ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நான் நலமுடன் இருக்கிறேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பதிவு செய்த நாள்

06செப்
2017
22:32




சென்னை: நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன் என சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறி உள்ளார். தனக்கு உடல்நலமில்லை என வதந்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவுவது வருத்தமளிக்கிறது. நான் நலமுடன் தான் இருக்கிறேன்.நான் வெறுமனே சளி என மருத்துவமனை செல்வதை சிலர் பார்த்தாலும் தீவிர பாதிப்படைந்திருப்பதாகவும், பாடல் வாய்ப்புகளை ரத்து செய்துவிட்டதாகவும் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ராஜபாளையத்தில் மலையில் இருந்து பாறாங்கல் உருண்டு விழுந்தது


ராஜபாளையம் சஞ்சீவி மலையில் உள்ள பாறாங்கல் பெயர்ந்து கீழே உருண்டு விழுந்தது.

செப்டம்பர் 05, 2017, 04:00 AM

ராஜபாளையம்,

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் உள்ள பாறாங்கல் பெயர்ந்து கீழே உருண்டு விழுந்தது. அடிவாரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவரை உடைத்து உருண்டு நின்றது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்ட்னர். சஞ்சீவி மலை உச்சியில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை தொடர்ந்து உச்சியில் இருந்த கற்களில் ஒன்று உருண்டு அடிவாரத்தில் விழுந்துள்ளது. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் கண்டுபிடிப்பு



ராஜபாளையம் அருகே 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகளும் பாறை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 06, 2017, 04:00 AM

ராஜபாளையம்,

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும் அரசு பள்ளிதமிழ் ஆசிரியருமான சங்கரநாராயணன் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:–

ராஜபாளையத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 5 குன்றுகள் உள்ளன. இதில் ஒரு குன்றில் நுண்கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல சிறிய குகைகள் உள்ளன. அவற்றில் 3 குகைகளில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் அமைந்துள்ளன.

இதனை நானும் மாங்குடியை சேர்ந்த மலைக்கனி என்பவரும் சேர்ந்து ஆய்வு நடத்தி கண்டறிந்தோம். இந்த பாறை ஓவியத்தில் வேட்டைகாட்சிகள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மனிதர்கள் சிலர் ஒரு புலியை சுற்றி வளைத்து தாக்குவது போன்ற காட்சி சிறப்பாக தீட்டப்பட்டுள்ளது.

மற்றொரு கூட்டத்தினர் வேறொரு விலங்கை சுற்றி வளைத்து பிடித்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆரவாரம் செய்கிற காட்சியையும், கையில் ஆயுதங்களுடன் நிற்கும் மனிதர்களையும் சூரியன் காட்சியையும் வேட்டையாடிய விலங்கை கையில் பிடித்துக்கொண்டு வரும் மனிதனையும் வரைந்துள்ளனர். மேலும் யானையின் உருவத்தையும் கருவுற்ற விலங்குகளின் உருவத்தையும் அந்த கூட்டத்தின் தலைவனையும் அழகாக தீட்டி இருக்கின்றனர். இன்னும் பல கோணங்களில் ஆய்வு செய்வதற்கும் இந்த பாறை ஓவியங்கள் இடம் அளிப்பதாக அமைந்துள்ளன.

இந்த பாறை ஓவியங்கள் உள்ள குகைகள் மற்றும் இதனை சுற்றியுள்ள பழங்கால மனிதர்கள் வாழ்ந்த சில குகைகளையும் கொண்டுள்ள இந்த குன்றினை பாதுகாக்கப்பட்ட தொன்மரபு சின்னமாக தொல்லியல்துறை உடனடியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மீனாட்சிபுரம் கிராமம் மாங்குடி என்ற கிராமத்தோடு இணைந்த பகுதியாக உள்ளது. இதில் மாங்குடி நெல்லை மாவட்ட பகுதியில் உள்ளது. சங்ககால புலவர் மாங்குடி மருதனார் பிறந்த ஊர் மாங்குடியாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2002–ம் ஆண்டு இங்கு தொல்லியல் துறை, அகழாய்வு மேற்கொண்டுள்ளது. அந்த அகழாய்வில் இங்கு நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம், இடைக்காலம் என தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

மேலும் இவர்கள் சீன நாட்டோடும் ரோமானிய நாட்டோடும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இந்த தகவலையும் சங்கரநாராயணன்
தலையங்கம்
டிஜிட்டல் லைசென்சுக்கு அங்கீகாரம்




தமிழ்நாடு முழுவதும் இப்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் மற்றும் கார், லாரி, பஸ், டிராக்டர் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே போகிறது.

செப்டம்பர் 07 2017, 02:32 AM

தமிழ்நாடு முழுவதும் இப்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் மற்றும் கார், லாரி, பஸ், டிராக்டர் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது. இதுபோல, விபத்துக்களின் எண்ணிக்கையிலும், விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கையிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 2–வது இடத்தில் இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தகவலாகும். பெரும்பாலும் விபத்துக்கான காரணம் சாலை விதிமீறல் என்பதில் சந்தேகமே இல்லை. நிறையபேர் லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது விபத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதை தடுக்கும் வகையில், வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களுடன் அசல் டிரைவிங் லைசென்சை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையினரும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது. விரிவான விசாரணைக்குப்பிறகு, நீதிபதிகள் இவ்வாறு ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பதில் என்ன சிரமம் இருக்கிறது?. கண்டிப்பாக டிரைவிங் லைசென்சு வைத்திருக்கவேண்டும் என்ற அரசின் அறிவிப்புக்கு தடைவிதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.

அசல் டிரைவிங் லைசென்சு கையில் வைத்திருப்பது நிச்சயமாக எல்லோராலும் முடியாது. திருட்டு போய்விட்டால் திரும்ப லைசென்சு வாங்குவதற்கு பல நாட்களாகும். அதுவரையில் வாகனம் ஓட்டாமல் இருக்க வேண்டும் என்றநிலை இப்போது இருக்கிறது. ஆனால், இவ்வாறு டிரைவிங் லைசென்சு தொலைந்து விட்டது என்று கூறுபவர்கள், டூப்ளிகேட் லைசென்சுக்காக விண்ணப்பிக்கும்போது போலீஸ் ஸ்டே‌ஷனில் புகார் கொடுத்து, அங்கிருந்து இதை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் பெறவேண்டியதில்லை என்ற அளவில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் குழப்பத்தை போக்குவதற்காக சென்னை கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழு பரிந்துரைப்படி, ‘அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல்’ போன்ற 6 விதிமீறல்கள் மட்டுமே கடுமையான குற்றமாக கருதப்பட்டு, 9–ந்தேதி முதல் போலீசார் அசல் டிரைவிங் லைசென்சை கேட்பார்கள் என்று அறிவித்துள்ளார். போலீசாரின் அனாவசியமான கெடுபிடி இருக்கும் என்ற அச்சத்தை தவிர்க்கும்வகையில், இதுபோன்ற நடைமுறைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசார் அமல்படுத்தவேண்டும்.

2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம், அனைவரும் டிரைவிங் லைசென்சையும், ஆர்.சி.புக் என்ற வாகனப்பதிவு சான்றிதழையும், செல்போனில் உள்ள டிஜிலாக்கரில் பதிவுசெய்து போலீசார் கேட்கும்போது, அதை டவுன்லோடு செய்து காட்டிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று போலீசாரும், வட்டாரபோக்குவரத்து அலுவலகமும் தங்கள் செல்போனில் இதற்கான ‘ஆப்’ என்று கூறப்படும் செயலியை வைத்திருந்தால் இந்த லைசென்சு ஒரிஜினல்தானா? என்பதை உடனடியாக கண்டுபிடித்துக் கொள்ளலாம். செல்போனில் இந்த வசதி இருக்கும்போது, ஒரிஜினல் லைசென்சை கொண்டுவா என்று சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. தமிழக அரசு உடனடியாக தனது மோட்டார் வாகன விதிகளில் ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்கவேண்டும் என்ற பிரிவோடு, டிஜிலாக்கரில் பதிவுசெய்து வைத்திருக்கலாம் அதுவும் செல்லும் என்ற திருத்தத்தை கொண்டுவரவேண்டும். மேலும், இதுகுறித்து முறையாக, அதிகாரபூர்வமாக அறிவித்து, டிஜிலாக்கரில் வைத்திருக்கும் லைசென்சு செல்லுபடியாகக் கூடியதுதான், அதையே போலீசாரிடம் காட்டிக்கொள்ளலாம் என்று அங்கீகரிப்பதன் மூலம், இப்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்கமுடியும்.
இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா: பிரதமர் மோடி அறிவிப்பு


இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா இந்தியா வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 06, 2017, 04:05 PM
நேபிதாவ்,


இந்தியா வர விரும்பும் மியான்மர் மக்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மியான்மர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அந்நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி, இலவச விசா குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மோடி கூறுகையில்,” இந்தியா வர விரும்பும் அனைத்து மியான்மர் மக்களுக்கும் இலவச விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது என்பதை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். மேலும் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் உள்ள மியான்மர் கைதிகள் 40 பேரை விடுதலை செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

வரும் காலங்களில் பரஸ்பர நலனுக்காக இருநாடுகளும் இணைந்து வலுவான உறவை மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். மியான்மருடன் உறவை வலுப்படுத்துவது என்பது இந்தியாவுக்கு முதன்மையானவைகளில் ஒன்றாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 16 வயதில் குழந்தை பெற்ற மாணவி சாவு


பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 16 வயதில் குழந்தை பெற்ற மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செப்டம்பர் 07, 2017, 05:30 AM

சேலம்,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பெற்ற நிலையில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த மாதம் 29–ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்த மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிளஸ்–1 படித்து வந்த அந்த மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். மாணவியின் உடல் சற்று பருமனாக இருந்ததால் அவர் கர்ப்பம் அடைந்தது பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாய உத்தரவு எதிரொலி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலைமோதும் வாகன ஓட்டிகள்


வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து

செப்டம்பர் 07, 2017, 05:00 AM


பூந்தமல்லி,

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை சமாளிக்க கூடுதல் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டு உள்ளன.

வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது அவர்களது அசல் உரிமத்தை வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு நேற்று முதல் அமல் படுத்தி உள்ளது. இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகள் பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவும், புதிய ஓட்டுனர் உரிமம் பெறவும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து ஓட்டுனர் உரிமம் எடுக்க குவிந்துள்ளனர்.

வழக்கத்தை விட கூட்டம் அதிகமானதால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தவர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு, உரிமம் தொடர்பாக சேவைகள் அளிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாகன ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமலும், உரிமத்தை தவற விட்டவர்களும், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களும் அதிகஅளவில் வாகனங்களை ஓட்டி வந்து உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் இந்த உத்தரவு அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் அனைவரும் உரிமம் பெறுவதற்காக வட்டார அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் வழக்கத்தை விட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் திரண்டு உள்ளது.

இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறவர்கள் மூலம் உரிமம் பெறுவதற்காக பெரும்பாலோனோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரில் உள்ள பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர், ஆலந்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

இதனால் கூட்டத்தை சமாளிக்க வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கூடுதலாக சில கவுண்ட்டர்களை திறந்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதுகுறித்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ. நெடுமாறன் கூறுகையில் : அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்ததையடுத்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ எல்லைக்குஉட்பட்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அதிக அளவில் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு வருகின்றனர். அவர்களின் தேவையை அறிந்து கூடுதலாக 3 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி இதற்கு முன்பு எல்லாம் காலை தொடங்கி மதியம் 12 வரை மட்டுமே ஓட்டுனர் உரிமம் எடுக்க ஆன்லைனில் பதிவு செய்யப்படும். தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் காலை தொடங்கி மாலை வரை புதிய ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் சான்று ஏதும் பெறத்தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து அந்த சான்றை கொண்டு வந்து கொடுத்து தொலைந்த ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக புதிய ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ள முடியும்‘ என்று தெரிவித்தார்.

குன்றத்தூர் ஆர்.டி.ஓ. சுந்தரேசன் கூறுகையில் : அரசு அறிவிப்பை தொடர்ந்து அதிக அளவில் பெண்களும், வாலிபர்களும் ஓட்டுனர் உரிமம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை முதல் மாலை வரை ஓட்டுனர் உரிமம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் தினமும் குறைந்த அளவு மக்களே ஓட்டுனர் உரிமம் எடுக்க வருவார்கள் ஆனால் தற்போது அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு உரிய தேவைகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக கொளத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. சுமார் 200–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அலுவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்‘ பெரும்பாலானோர் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்காதவர்களும் தான் அதிகளவில் வாகனங்களை ஓட்டி வந்து உள்ளனர். தமிழக அரசின் இந்த உத்தரவினால் அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகிறார்கள்.‘ என்றார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் இன்று முதல் தொடங்குமா?


ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பிளவு ஏற்பட்டதால் இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பர் 07, 2017, 05:30 AM

ஈரோடு,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் அரசு சார்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு வரும் முதல்-அமைச்சர், ஜாக்டோ- ஜியோ அமைப்பு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பி.இளங்கோ, ஜே.கணேசன் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.

அதைத் தொடர்ந்து ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேயர் அரங்கத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற பி.இளங்கோ, ஜே.கணேசன் ஆகியோர் ‘போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்’ என்று கூறினார்கள். ஆனால் இவர்களுடைய கருத்துகளை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இளங்கோ, கணேசனை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளாக சுப்பிரமணியன், மாயவன் ஆகியோரை நியமித்து கூட்டம் நடத்தினர். அதன்பின்னரே புதிய ஒருங்கிணைப்பாளர்கள், ‘திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்’ என்று அறிவித்தனர்.

கூட்டம் முடிந்த பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்களுடைய கோரிக்கைகளை முதல்-அமைச்சர் தீர்த்து வைப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் எங்களுடைய எந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இணைந்துள்ள சங்கங்கள் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளோம். அதன்படி திட்டமிட்டபடி நாளை முதல் (இன்று) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும்.

அதே போன்று நாளை (இன்று) அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என்றும், 8-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 9-ந் தேதி சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பில் இணைந்திருக்கக்கூடிய சங்கங்கள் பேசி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதற்கிடையே கூட்டத்தை விட்டு வெளியே வந்த, பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ மற்றும் கணேசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்களுடைய கோரிக்கைகளை முதல் -அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடைய வாக்குறுதியை நம்பி எங்களுடைய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்’ என்றார்கள்.

போராட்ட அமைப்பில் பிளவு ஏற்பட்டு இருவேறுபட்ட அறிவிப்புகளால் இன்று (வியாழக்கிழமை) வேலை நிறுத்தம் நடைபெறுமா என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

Wednesday, September 6, 2017

’நீட் தேர்வில் நான் பாஸ்... ஆனாலும் நீட் வேண்டாம்’: அரசுப் பள்ளி மாணவியின் ஆதங்கம்!


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி கமலிஸ்வரி. மத்திய அரசு அறிவித்த நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும் இவர் படித்தது எல்லாம் தமிழ் வழிக் கல்வியில்தான். ராஜகம்பீரத்தில் பத்தாம் வகுப்பும் மதுரை திருமங்கலத்தில் பன்னிரண்டாம் வகுப்பும் படித்திருக்கிறார். அரசுப் பள்ளியில்தான் தனது பள்ளிக்கல்வியை முழுவதுமாக நிறைவு செய்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பில் 1028 மதிப்பெண்கள் பெற்ற கமலீஸ்வரி சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் கட் ஆப் 109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்கிறார். ஆனாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.
kamaleeswari
 
நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்க வந்திருந்த கமலீஸ்வரி மற்றும் அவரது தாயார் வீரலெட்சுமி ஆகியோரிடம் பேசும்போது, ’நாங்கள் விவசாயக் குடும்பம். என்னோட அண்ணன் தம்பிகளுக்கு எல்லாம் வங்கியிலும் வெளியாட்களிடமும் கடன் வாங்கித்தான் எங்க அம்மா படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் வழி என்பதால் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஆகையால், தமிழக அரசும் மாவட்ட ஆட்சித்தலைவரும் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்க உதவிட வேண்டும். நான் தேர்வுபெற்றபோதிலும் என்னைப்போன்ற கிராமப்புற மாணவர்கள்தான் நீட் தேர்வினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்துக்கு நீட் தேர்வு என்பது தேவையற்றது. ஆகையால், மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு 85 சதவிகித மருத்துவ மாணவர் சேர்க்கை கேட்டதையும் நீதிமன்றம் நிராகரித்தது, என்னைப் போன்றவர்களுக்குப் பாதிப்புதான்’ என்று தெரிவித்தார்.
அக்யூட் டிராமா..! - அனிதா தற்கொலைக்கு உளவியல் விளக்கம்

VIKATAN

"என் அம்மா நோயுற்றுத் தவித்தபோது சரியான மருத்துவம் கிடைக்கவில்லை. அதனால், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். என் கிராமத்தில் போதிய மருத்துவ வசதி இருந்திருந்தால் என் அம்மாவைக் காப்பாற்றி இருக்கலாம். இனி எங்கள் கிராமத்தில் எந்தப் பிள்ளையும் மருத்துவ வசதி கிடைக்காமல் அம்மாவை இழக்கக்கூடாது. அதற்காகவே, நான் மருத்துவம் படிக்கப்போகிறேன்...' ஏன் நீங்கள் மருத்துவத்தைத் தேர்வு செய்தீர்கள் என்று கேட்ட நிருபருக்கு அனிதா சொன்ன பதில் இது.



எந்தப் பின்புலமும் இல்லாத அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் அனிதா. சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் மரணம் தான், அனிதாவின் மனதில் மருத்துவக் கனவை விதைத்தது.

அப்பாவும், 4 சகோதரர்களும் அனிதாவை மருத்துவராக்குவதற்காக உழைத்துத் தேய்ந்தார்கள். அனிதா, எந்தச் சூழலிலும் தன் இலக்கில் இருந்து திசை திரும்பவில்லை. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் குவித்தார். மெடிக்கல் கட் ஆப் 196.75.

இரவு பகல் பார்க்காத படிப்பு, கவனச்சிதறல் இல்லாத உழைப்பால் தான் இலக்கு வைத்த மருத்துவப் படிப்பை எட்டிப்பிடிக்கும் விளிம்பில் நின்றபோதுதான் 'நீட்' தடையாக வந்து மறித்தது.

அனிதா மட்டுமல்ல... அவரது குடும்பமே நிலைகுலைந்தது. வாழ்நாள் உழைப்பைக் கொட்டி மகளை மருத்துவராக்கிப் பார்க்க நினைத்த அனிதாவின் தந்தை சண்முகமும், சகோதரர்களும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

குழப்பம் நீக்கி, மாணவர்கள் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு, தன்னைத் தற்காத்துக் கொள்ளவே போராடிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம், நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று விடுவோம் என்று மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டு, மறுபக்கம். மத்திய அரசுக்கு அதற்கான அழுத்தத்தைத் தர எந்த முயற்சியும் எடுக்காமல் சமரசம் செய்துகொண்டு விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தருவோம் என்று பேசுவதும், டெல்லி சென்றபிறகு, மற்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமெல்லாம் உருவாக்க முடியாது என்று வேறு முகம் காட்டினார்கள்.

கடந்த ஆறுமாத காலமாக மாணவர்களை உச்சபட்சமான குழப்பத்திலேயே வைத்திருந்த மத்திய, மாநில அரசுகள், இறுதியில் கைவிரித்து விட்டார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது, 'மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வையுங்கள்' என்று உச்ச நீதிமன்றத்திடம் சொல்லி, தீர்ப்பை நிறுத்திய மத்திய அரசு, 'நீட் தேர்வு கட்டாயம் என்று கோர்ட் சொல்லிவிட்டது, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று கை விரித்துவிட்டது.



கண்டிப்பாக விலக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்த அனிதாவுக்கு, அதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவந்தபோது வேறு வாய்ப்பிருக்கவில்லை. லட்சங்களில் கொட்டிக்கொடுத்து, தனிப்பயிற்சி எடுக்கவும் சாத்தியமிருக்கவில்லை.

இருந்தும் தேர்வு எழுதினார். தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, மொத்தமுள்ள மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவிகிதம், சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 15 சதவிகிதம் என்று அரசாணை போட்டது தமிழக அரசு. அந்த ஆணை வெளிவந்தபோதே, வலுவற்ற இந்த ஆணை நீதிமன்றத்தில் நிற்கப்போவதில்லை என்று கல்வியாளர்கள் சொன்னார்கள். அதுதான் நடந்தது.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் வழக்கறிஞர் நளினி சிதம்பரம். இந்த வழக்கில் எதிர்வாதியாக அனிதா தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், நீதிமன்றத்தின் காதுகளில் அனிதாவின் அவலக்குரல் விழவில்லை. 'தமிழக அரசின் உத்தரவால், சிபிஎஸ்சி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார் நளினி சிதம்பரம்.

அத்தனை கதவுகளும் மூடப்பட்டப் பின்னர், அனிதா மிகுந்த குழப்பத்துக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். ஒரு கட்டத்தில், 'இனி தான் கண்ட கனவு பழிக்கப்போவதில்லை... தன் தந்தையும், சகோதரர்களும் உழைத்த உழைப்பு வீணாகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட அனிதா தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்.

வறுமை, ஏற்றத்தாழ்வுகள், சிறு வயதிலேயே தாயை இழந்த சோகம் என எல்லாத் தடைகளையும் விடாமுயற்சியால் உடைத்தெறிந்து ப்ளஸ் டூ-வில் 1176 மதிப்பெண்கள் வரை பெற்று முன்மாதிரியாக உயர்ந்து நின்ற அனிதாவைத் தற்கொலை நோக்கித் தள்ளியது எது?



தமிழகத்தில் கடந்தாண்டு 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினார்கள். அதில் அறிவியல் பிரிவை எடுத்துப் படித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். அதில் 1 லட்சம் மாணவர்கள் மருத்துவப் படிப்பை இலக்கு வைத்துப் படித்திருப்பார்கள். அவர்களின் முழுக்கவனமும் பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண் பெறுவதாக மட்டுமே இருந்திருக்கும். ஏராளமான மாணவர்கள் 1000-த்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள். தமிழக அரசின் உண்மை முகம் அறிந்து, முன்கூட்டியே நீட் தேர்வுக்குத் தயாரான கொஞ்சம் மாணவர்கள் மட்டுமே முட்டிமோதி எம்பிபிஎஸ் சீட்டைப் பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசின் வார்த்தைகளை நம்பி நீட் தேர்வுக்குத் தயாராகாத எல்லா மாணவர்களுமே செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்களை எப்படி மீட்கப்போகிறோம்?

"எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வில்லை என்று சில 'நடுநிலை வாதிகளும், 'சமூகப் போராளிகளும்' இப்போது பேசுகிறார்கள். நீட் தேர்வுக்கு சமூக நீதிக்கு எதிரானது; அனிதா போன்று அடித்தட்டில் இருந்து தடையுடைத்து மேலெழுந்து வரும் மாணவர்களுக்கு விரோதமானது; பணத்தைக் கொட்டி தனிப்பயிற்சிக்குச் செல்ல முடியாத ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு விரோதமானது என்று தொடக்கத்தில் இருந்தே சமூக ஆர்வலர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாநில அரசும் பிரச்னையின் உண்மையான மையத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அதற்கு விலையாகத்தான் அனிதா என்ற மகளை அள்ளிக் கொடுத்திருக்கிறோம். அனிதா தமிழகத்தின் மகள். அவர் தற்கொலையை தமிழகத்தில், உரிய தகுதிகள் இருந்தும் நீட் தேர்வால் தகுதியிழந்து நிற்கும் பல ஆயிரம் மாணவர்களின் மனநிலையை உணர்த்தும் பிம்பமாகப் பார்க்க வேண்டும். இது சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி. அனிதாவின் மரணத்துக்கு இந்த அரசுகள் மட்டும் காரணம் அல்ல. சிறிதும் உணர்வின்றி வாழும் நீங்களும் நானும் கூட காரணம்தான்.

மாணவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த சமூகம் துணை நிற்க வேண்டும்..." என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

" அனிதாவின் தற்கொலை என்னை மிகவும் பாதித்திருக்கிறது. மனம் நொறுங்கும் அளவுக்கு ஓர் மோசமான சம்பவம் நடக்கும்போது தற்கொலையைத் தீர்வாக நினைப்பது சராசரியான ஒரு மனிதச் செயல்பாடு. அதைக் கடந்து நிற்கப் பழக வேண்டும்." என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

"அனிதா மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்டிருந்தார். அது வாய்க்காது என்றபோது பெரும் ஏமாற்றம் அவரைச் சூழ்ந்து விட்டது. இதுபோன்ற ஏமாற்றங்கள் மனதளவில் மிகக் கொடூரமான காயங்களை உண்டாக்கிவிடும். இந்த நிலைக்கு 'அக்யூட் டிராமா' (acute trauma) என்று பெயர். ' இனி நமக்கு எதிர்காலமே இல்லை' என்று எண்ணத் தோன்றும்.

இந்த நிலை உருவானபிறகு, மனம் நிலையிழந்து வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என்ற அளவுக்கு யோசிப்பார்கள். இதுதான் அனிதா விஷயத்திலும் நடந்திருக்கிறது. அனிதாவுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன செய்தாலும் அவரின் இழப்புக்கு ஈடாக இருக்காது.

இனியொரு சம்பவம் நிகழாமல் இருக்க, மத்திய மாநில அரசுகள் எவ்வித தயக்கமும் நிபந்தனையும் இன்றி நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். சுகாதாரத்தில் பிற மாநிலங்களை விட தமிழகம் மிகச் சிறப்பாக முன்னேறியிருக்கிறது. அதற்கு இங்கிருந்த தலைவர்களே காரணம். தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் இந்த கல்வி நிறுவனங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அந்த வாய்ப்பை, உரிமையை மத்திய அரசு பறிப்பது மிகப்பெரும் அநீதி.." என்கிறார் ஷாலினி.



மத்திய மாநில அரசுகள் அனிதாவின் மரணத்துக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்!
நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை - வேலூர் சி.எம்.சி நிர்வாகம் தகவல்!
கா.முரளி

நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி), மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் படுவேகமாகச் செய்திகள் பரவி வருகின்றன. இது தவறான தகவல் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சி.எம்.சி கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜேஸ்பரிடம் பேசினோம்."தவறான தகவல் இது. நீட் தேர்வில், தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் அட்மிசனுக்கு அழைக்க உள்ளோம். நீட் தேர்வில் தேர்வான 300 மாணவர்களை நாங்கள் நடத்தும் மூன்று நாள் கலந்தாய்வுக்கு அழைப்போம், அதில் அந்த மாணவர்கள் கிராமப்புறத்தில் பணியாற்றக்கூடிய தன்மையையும், லீடர்ஷிப் தகுதியையும் மருத்துவராகக்கூடிய இயல்பும் உள்ளதா என எங்கள் கல்லூரி தேர்வுசெய்யும். அதில் தேர்வான மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு சீட் தருவோம். இந்த முறையைத்தான் நாங்கள் இதுநாள் வரை கடைப்பிடித்தோம். ஆனால், தற்போது தனியார் கல்லூரிகள் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கவுன்சில் தடை செய்துள்ளது.

இதற்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதற்கான விவாதங்கள் முடிந்து அக்டோபர் 11-ம் தேதி தீர்ப்பு வருகிறது. அதன்பிறகே நாங்கள் 99 எம்.பி.பி.எஸ் மற்றும் 61 சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை நடத்தவுள்ளோம். நீட் தேர்வை எதிர்த்து, நாங்கள் அட்மிசனை நிறுத்தி வைத்திருப்பதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. நீட் தேர்வில் தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் கலந்தாய்வுக்கு அழைப்போம். 1918-ம் ஆண்டு தொடங்கியது எங்கள் கல்லூரி, இந்தியாவிலேயே முதல் தனியார் மருத்துவக்கல்லூரி. அடுத்த ஆண்டு 100 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம்" என்றார்.

புளூவேல் விளையாடிய இளைஞரின் திகிலூட்டும் அனுபவம்: இது கேமோ, ஆப்-போ அல்ல!


By DIN  |   Published on : 06th September 2017 05:48 PM  |   
student
புளூவேல் விளையாட்டிலிருந்து மீட்கப்பட்ட இளைஞருடன் காவல்துறை அதிகாரி.

காரைக்கால்: விபரீத விளையாட்டான புளூவேல் விளையாடிய காரைக்காலைச் சேர்ந்த இளைஞர், தனக்கு நேரிட்ட திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, யாரும் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
காரைக்கால் பகுதியில் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் பணியாற்றும் அலெக்சாண்டர், விடுமுறையில் ஊருக்குச் சென்ற போது இந்த ப்ளூவேல் விளையாட்டை விளையாடத் தொடங்கியுள்ளார். ஆனால் விளையாட்டின் காரணமாக அவர் விடுமுறை முடிந்தும் சென்னை திரும்பவில்லை.
இதுகுறித்து, புளூவேல் கேம் விளையாடிய அலெக்ஸ்சாண்டர் கூறியதாவது, இது டவுன்லோடு செய்யும் ஆப்-போ அல்லது டவுன்லோடு செய்து ஆடும் விளையாட்டோ அல்ல. வெறும் லிங்க் மட்டுமே இருக்கும். வாட்ஸ் அப்பில் (கட்செவி அஞ்சல் ) லிங்க் கிடைத்தவுடன் இந்த விளையாட்டை எப்படியாவது விளையாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. இருப்பினும் இது உயிர் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பது போகப்போகத்தான் தெரிந்தது.
 
குறிப்பாக, முதலில் நமது பெயர், இமெயில், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அட்மின்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு போட்டோ அனுப்ப வேண்டும். பின்னர் நள்ளிரவில் பேய் படம் பார்க்க வேண்டும். அனைத்துமே நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான். பயமே இந்த கேமில் இருக்கக்கூடாது என்பதுதான் நோக்கம் என்று அட்மின்கள் கூறுகிறார்கள்.
பின்னர் சுடுகாடு அல்லது கடல் பகுதி, ஏரி போன்ற இடங்களுக்கு நள்ளிரவில் தனியாக சென்று செல்ஃபி எடுத்து குரூப் அட்மின்களுக்கு அனுப்ப வேண்டும். 5-ஆவதாக கையில் கத்தி அல்லது பிளேடால் புளூவேல் திமிங்கலம், மீன் போன்றவைகளை வரைய வேண்டும். நான் 5-ஆவது நிலையை நோக்கி போகும்போதுதான், காவல் துறையினர் என்னை மீட்டனர். 
தினமும் பயங்கர காட்சிகள் நிறைந்த சினிமாவை பார்த்துக் கொண்டிருந்தேன். பயத்தைப் போக்குவதே இந்த விளையாட்டின் நோக்கம் என்றாலும் மனதளவில் பாதிக்கப்பட்டேன்.
இந்த விளையாட்டால் நான் என் குடும்பத்தாரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டேன். எப்போதும் என் அறைக்குள்ளேயே இருப்பேன். இது எனக்கு மிக மோசமான மன அழுத்தத்தை தந்தது. இந்த விளையாட்டில் இருந்து வெளியே வர விரும்பினேன். ஆனால் என்னால் செய்ய முடியவில்லை.
இனி இதுபோன்ற விளையாட்டில் ஈடுபட மாட்டேன். இது இக்கட்டான விஷயங்களை சவாலாக எடுத்து செய்தாலும் கூட, மனதளவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது. யாரும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டாம் என்று கூறினார்.
பின்னணி: 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செல்லிடப்பேசியில் ஆன்லைன் மூலம் புளூவேல் விளையாடும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்கும்படி காவல்துறை டிஜிபி சுனில்குமார் கவுதம் சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காரைக்கால் பகுதி நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெரோம்ஜேம்ஸ்பாண்டுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தனது மூத்த சகோதரர் புளூவேல் கேம் விளையாடுவதுபோல் தெரிகிறது. நள்ளிரவில் வெளியே புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். அவரது நடவடிக்கை சரியில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நிரவி போலீஸார் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அலெக்ஸ்சாண்டர் (23) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்லிடப் பேசியை பரிசோதித்தபோது, அவர் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, அலெக்ஸாண்டரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, புளூவேல் விளையாட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து அறிவுரை அளித்தனர்.
பின்னர், மண்டல காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

காராகிரக நெரிசல்!

By ஆசிரியர்  |   Published on : 06th September 2017 02:16 AM 
நாகரிக சமுதாயத்தில் சிறைச்சாலை என்பது தண்டிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்கப்படும் இடம் என்பதாக அல்லாமல், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மனம் திருந்தவும் தண்டனைக்குப் பிறகு அவர்கள் மற்றவர்களைப்போல வாழவும் வழிகோலுகிற சீர்திருத்தக்கூடமாக இருக்க வேண்டும். கடந்த அரைநூற்றாண்டு காலமாக உலகளாவிய அளவில் சிறைச்சாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளைக் கையாளும் முறையிலும் மாற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. 
இந்தியாவைப் பொருத்தவரை ஒருசில சிறைச்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அல்லது புதிதாகக் கட்டப்பட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, சிறைக்காவலர்களின் அணுகுமுறையிலும், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நடத்தப்படும் விதத்திலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. தவறிழைத்து தண்டிக்கப்பட்டவர்கள், தண்டனைக்காலம் முடிந்து வெளியேவரும்போது புதிய மனிதர்களாக வெளிவருவது இல்லை என்பது ஒரு புறம், தவறிழைக்காத விசாரணைக் கைதிகள்கூட சிறைக்குச் சென்று வெளியே வரும்போது தவறான வழிக்குத் திரும்புபவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது இன்னொருபுறம். இதுதான் இன்றைய இந்தியச் சிறைச்சாலைகளின் நிலைமை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் முதலில் வெளியிடும் அறிக்கை, நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பேன் என்பதுதான். ஆனால், அந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைவது இல்லை. அதனால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. 
விசாரணைக் கைதி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர். இவர்களில் பலரும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவும் வாய்ப்புண்டு. அப்படியிருந்தும் தேவையில்லாமல் பலர் நீண்ட நாட்கள் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
2015-இல் இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2.82 லட்சம். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவான அதிகம் படிப்பறிவில்லாத இளைஞர்கள். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பே, தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் சிறையில் கழித்திருக்கும் விசாரணைக் கைதிகள் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2014-இல் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தும்கூட, இதுவரை இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரியது. 
விசாரணைக் கைதிகள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. கைதிகளின் உடல் நலமும், சிறைச்சாலையின் சுகாதார ஏற்பாடுகளும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளின் பாதுகாப்பும்கூட இதனால் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆட்டுக்கொட்டடியில் அடைத்து வைத்திருப்பதுபோலக் கைதிகள் அடைத்து வைக்கப்படுவது அவர்களது மனநிலையைக் கடுமையாக பாதித்து, நிரபராதிகள் குற்றவாளிகளாகவும், குற்றவாளிகள் கடும் குற்றவாளிகளாகவும் மாறிவிடும் போக்குக்கு வழிகோலுகிறது. சிறைச்சாலைத் தற்கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் இது ஒரு முக்கிய காரணம்.
கடந்த மாதம் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, இந்தியாவின் சிறைச்சாலைகள் சிலவற்றில் 200%-க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் குறிப்பிட்டிருந்தார். 'மாதிரி சிறைச்சாலை 2014 கையேட்டின்படி, ஒவ்வொரு சிறைக்கைதிக்கும் குறைந்தது 8.92 சதுர மீட்டர் அளவிலான இடம் தரப்பட வேண்டும். ஆனால், எவ்வளவு இடம் வழங்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரம் இல்லை' என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் 1,401 சிறைச்சாலைகள் இருக்கின்றன. சிறைச்சாலை மாநில பட்டியலில் இருந்தாலும் அதனை மேம்படுத்த 2002-இல் மத்திய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கியது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் புழல் சிறைச்சாலை உள்பட 125 புதிய சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. ஏனைய சிறைச்சாலைகளில் 1,579 அறைகள் அதிகரிக்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்றால், அதற்குக் காரணம் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கைதான். 
இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் 2015-இன்படி, இந்தியாவிலுள்ள 1,401 சிறைச்சாலைகளில் இருக்கும் 4,19,623 கைதிகளில் 67 சதவீதம் பேர் அதாவது, 2,82,076 பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பலரும் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள்.
முன்பே கூறியதுபோல, சிறைச்சாலை என்பது குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய மனிதர்களாக வெளியில் வருவதற்காக ஏற்படுத்தப்பட்டவையாக இல்லை. விசாரணைக் கைதிகளும் சிறு குற்றம் புரிந்தவர்களும் சிறைச்சாலையிலிருந்து கடும் குற்றவாளிகளாக வெளியேறும் அவலம் தடுக்கப்பட வேண்டுமானால், சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி குறைக்கப்பட வேண்டும். தேவையில்லாமல் குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாக தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் சட்ட உதவியும், விரைந்த தீர்ப்பும் மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்.
 
    வாழ்ந்திருக்க வேண்டும் அனிதா: வைரமுத்து இரங்கல்

    Published : 02 Sep 2017 15:01 IST

    BHARATHI PARASURAMAN_50119




    உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'அடி பாவி மகளே' என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.

    ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    மொத்தம் மரணம் மூன்று வகை. இயல்பான மரணம் – அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு; இன்னொன்று கொலை – அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு; மூன்றாவது தற்கொலை – அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

    அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது? தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?

    தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    வேளாங்கண்ணி திருவிழா: எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்

    Published : 06 Sep 2017 09:22 IST

    சென்னை

    வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே வரும் 8-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

    இதன்படி, இந்த சிறப்பு ரயில் (06097) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். இதேபோல், வேளாங்கண்ணி-பன்வேல் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06099) 9-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.55 மணிக்கு பன்வேல் சென்றடையும்.

    கன்னியாகுமரி-சந்திரகச்சி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06905) 7-ம் தேதி (நாளை) இரவு 11 மணிக்கு கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டு 9-ம் தேதி இரவு 9.15 மணிக்கு சந்திரகச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பு பதிவு ரத்து: யுஜிசி விரைவில் புதிய விதிமுறை

    Published : 06 Sep 2017 09:38 IST


    ஜெ.கு.லிஸ்பன் குமார்

    சென்னை




    எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பின் பதிவை ரத்து செய்யும் வகையில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவர பல்கலைக்கழக மானியக்குழு முடிவுசெய்துள்ளது.

    ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய விதிமுறைகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. காப்பியடிக்கப்படும் அளவுக்கு ஏற்ப தண்டனைகளை விதிக்கவும், அப்பட்டமாக காப்பியடித்திருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வகையில் வரைவு விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

    அதன்படி, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வுக்கட்டுரைகள் அவை காப்பியடிக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்கும் வகையில் உரிய மென்பொருள் சாதனம் வைத்திருக்க வேண்டும். ஆய்வுகட்டுரையானது சொந்தமாக உருவாக்கப்பட்டது என்றும் மற்றவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டதல்ல என்றும் மாணவர்களிடமிருந்து உறுதிமொழி பெறப்பட வேண்டும்.

    ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வுசெய்ய ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி ஒழுங்கீன நடவடிக்கைக்குழுவும் அதற்கு மேலாக, காப்பியடித்தல் ஒழுங்கு நடவடிக்கை ஆணையம் என்ற ஓர் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் பாதிப்பு 10 முதல் 40 சதவீதம் இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு மதிப்பெண் அளிக்கக் கூடாது.

    அந்த பகுதிக்குரிய திருத்தப்பட்ட கட்டுரையை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். பாதிப்பு 40 முதல் 60 சதவீதம் வரை இருப்பின் அதற்கு ஒரு மதிப்பெண் கூட அளிக்கக்கூடாது. புதிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒன்றரை ஆண்டை தாண்டக்கூடாது. பாதிப்பு 60 சதவீதத்துக்கு மேல் இருந்தால் ஆய்வுக்கட்டுரைக்கு மதிப்பெண் வழங்காததுடன் படிப்புக்கான பதிவு ரத்து செய்துவிட வேண்டும்.

    காப்பியடித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான வரைவு விதிமுறைகள் குறித்த கருத்துகளை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் தெரியப்படுத்துமாறு யுஜிசி செயலர் பி.கே.தாகூர் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஆன்லைனில் வெளியிடலாம்

    வழக்கமாக, ஒப்புதல் பெறப்பட்ட எம்பில் ஆய்வுக்கட்டுரையானது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறும். அதே நேரத்தில் பிஎச்.டி. ஆய்வுக்கட்டுரை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறுவதோடு யுஜிசி-க்கும் அனுப்பப்படும். இந்த ஆய்வுக்கட்டுரைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் வெளியிடலாம் என கல்வியாளர்கள் யோசனை தெரிவித்தனர்.
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    Published : 06 Sep 2017 11:16 IST


    கி.மகாராஜன்

    மதுரை




    தமிழகத்தில் செப். 7 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனு தொடர்பாக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரையைச் சேர்ந்த டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

    தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளது. அன்று அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள் இயங்காது என்றும், இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த வேலை நிறுத்தப் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் நிறுத்தி அரசு பள்ளிகள், கல்லூரிகள் சமூகமாக செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு 24.8.2017-ல் மனு அனுப்பினேன். என் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும்.

    அரசு ஊழியர்களுக்கு அரசு ஏற்கெனவே போதுமான அளவு ஊதியம் வழங்கி வருகிறது. அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்த முடியாது. மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் தேவைப்படுகிறது. கூடுதல் ஊதியம் பெறுவதற்காக வேலை நிறுத்தம் என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பது தவறு.

    கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. அரசிடம் மனு அளிக்கலாம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம். இதை செய்யாமல் பொதுமக்களையும், அரசு நிர்வாகத்தையும் ஸ்தம்பிக்க செய்யும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. மேலும் வேலை நிறுத்தம் செய்வது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

    வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசு பள்ளிகளில் 10, 11, 12 பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவர். அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் மேற்கொள்ள உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (புதன்கிழமை) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
    உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் கட்டாயத்தில் தமிழக அரசு: நீட் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி

    Published : 06 Sep 2017 11:59 IST

    சென்னை



    உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வை அமல்படுத்தும் கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    தமிழக அரசு பெரும்பான்மையுடன் உள்ளது. இந்த ஆட்சி பதவி விலக வேண்டும் என்று நாங்கள் எப்போது பதவி ஏற்றோமோ அப்போது முதல் ஸ்டாலின் கூறி வருகிறார். அதிமுகவுக்கு சபாநாயகருடன் சேர்த்து 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிமுக அறுதி பெரும்பான்மையோடு உள்ளது.

    அனைவரும் அதிமுக ஆட்சிக்கு ஆதரவை அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்துக்கு பல்வேறு காரணங்களினால் சிலர் வரவில்லை.

    தமிழகத்தில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணமும். அதற்காகத்தான் போராடினோம், டெல்லிச்சென்று முயற்சி எடுத்தோம். ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு விட்டதை அனைவரும் அறிவீர்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    6 வகையான விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம சோதனை: காவல்துறை விளக்கம்

    Published : 06 Sep 2017 14:30 IST

    சென்னை



    6 விதிமுறை மீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும் என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    அசல் வாகன ஓட்டுநர் வாகன உரிமம் புதன்கிழமை முதல் கேட்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது, இது பற்றிய விவரம் வருமாறு:

    வாகன ஓட்டிகள் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் காவல்துறையினரோ அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகளோ கேட்கும்போது அதைக் காட்ட வேண்டும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

    அசல் வாகன ஓட்டுநர் உரிம கட்டாயத்துக்கான தடையை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் இன்று முதல் அசல் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை கையில் வைத்திருந்தால் தொலைந்துவிடும் வாய்ப்பும், பாதுகாப்பு இல்லாதா சூழ்நிலையும் இருப்பதாக சுட்டிக்காட்டினர். ஆனால் வாகன ஓட்டிகள் அனைவரிடமும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பதோ, இதற்காக தனி சோதனையோ நடத்தப்போவதில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    6 விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது.

    அத்தகைய 6 விதிமீறல்களில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்குபவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் பயமின்றி பயணிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    6 விதிமீறல்கள் என்னென்ன என்பது குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்:

    1. மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்

    2. அதி வேகமாக வாகனம் ஓட்டுதல்

    3. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்

    4. வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பாரம் ஏற்றுதல்

    5. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லுதல்

    6. சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றுதல்

    மேற்கூறிய 6 விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். அசல் ஓட்டுநர் உரிமத்தை சோதனை செய்வதற்காக தனியாக வாகன சோதனை நடைபெறப் போவதில்லை. வழக்கமான சோதனையே நடைபெறும்.

    இந்தச் சோதனை மூலம் பறிமுதல் செய்யப்படும் வாகன ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனச் சட்டப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் குறைந்தது 3 மாதங்களாவது தற்காலிக நீக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி
    Published : 06 Sep 2017 15:19 IST

    சென்னை





    அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தமிழக அரசே நேரடியாக நடத்த வேண்டும்; கல்விக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கல்லூரிகளின் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, அதற்கு மாறாக மாணவர்கள் போராட்டத்தை அடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த நேரத்தில் அப்பல்கலைக்கழகத்தை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்ற யோசனையை முதன்முதலில் முன்வைத்தது பாமகதான். அதன்படியே அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அதனுடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் அரசுடைமை ஆக்கப்பட்டன. ஆனால், அதன் பயன்கள் இன்று வரை மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கவில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானதாகும்.

    தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிப்பதற்காகவே தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதுதான் முறையாகும். ஆனால், தமிழக அரசோ அதை செய்யாமல் அந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப் பல்கலையின் அங்கமாகவே நிர்வகித்து வருகிறது. இந்த இரு கல்லூரிகளும் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த போது அவற்றில் மருத்துவப் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அண்ணாமலை பல்கலை அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் அதே கட்டணத்தை தமிழக அரசு வசூலிப்பது ஏற்க முடியாததாகும்.

    தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வின் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக அரசு கல்லூரிகளில் 13,600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ 5 லட்சத்து 54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், இளநிலை பல் மருத்துவம், முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு, முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையே ரூ.11,600, ரூ. 42,025, ரூ.31,325 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இப்படிப்புகளுக்கு முறையே ரூ.3.40 லட்சம், ரூ.9.80 லட்சம், ரூ.8.00 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4 லட்சத்துக்கும் குறைவாகவே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதைவிட அதிகமாக கட்டணம் வசூலிப்பது அரசே நடத்தும் கட்டணக் கொள்ளையாக அமையாதா?

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு நிதியில் தான் இயங்குகிறது. மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தகுதியில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மட்டும் மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் சரியாகும்? இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்பதாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பது தான் சரியான அணுகுமுறை.

    மாறாக, மருத்துவம் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிகளையும் மூடி மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. அதுமட்டுமின்றி, போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறது.

    மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அன்பும், பேச்சும் தான் சிறந்த ஆயுதங்கள் ஆகும். மாறாக, அடக்குமுறையை ஏவ நினைத்தால் அது எரியும் தீயில் ஊற்றப்பட்ட பெட்ரோலாக போராட்டத்தை மேலும் பரவச்செய்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
    நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து- உயர் நீதிமன்றம்

    Published : 06 Sep 2017 17:31 IST

    சென்னை



    அரசு நிலத்தை அபகரித்த வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    2002-ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது, 1996-2001 -ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் 1998ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, அரசுக்கு சொந்தமாக சைதாப்பேட்டையில் இருந்த 3600 சதுர அடி நிலத்தை மோசடி செய்து தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பதிவு செய்து வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. 2007ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை மூன்றாவது அமர்வு நீதிமன்றம் வழக்கிலிருந்து பொன்முடியை விடுவித்தது. நீதிமன்ற உத்தரவில் சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த சொத்தும் அடங்கி இருப்பதால் ஒரு குற்றத்திற்காக இரு வேறு விசாரணைகள் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அரசு நில அபகரிப்பு வழக்கிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.

    அவரது தீர்ப்பில், சொத்துக் குவிப்பு வழக்கும், அரசு நில அபகரிப்பு வழக்கும் ஒரே மாதிரியானவையாக இல்லாதபோது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவித்ததற்காக நில அபகரிப்பு வழக்கிலும் விடுவித்தது செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.

    எனவே பொன்முடி தன் மீதான அரசு நில அபகரிப்பு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    நீட் தேர்வு சர்ச்சையால் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சிஎம்சி

    Published : 06 Sep 2017 10:54 IST




    நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வேலூர் சிஎம்சி (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) நிறுத்திவைத்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனமான சிஎம்சி சார்பில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட் தேர்வை) நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தேசிய நுழைவுத்தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என ஏற்கெனவே சிஎம்சி உச்ச நீதிமன்றம்வரை வலியுறுத்திவந்தது.

    இந்நிலையில் நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது.

    இதன் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஓரிடமும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்பில் உள்ள 62 இடங்களில் ஓரிடமும் மட்டுமே நிரப்பப்படுவதாக சிஎம்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சிஎம்சி இயக்குநர் சுனில் சாண்டி கூறியதாவது:

    நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆண்டு சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்படுவார். அவர், போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் வாரிசு. மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் அவருக்கு இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் இதயநோய் நிபுணத்துவம் பிரிவில் ஒருவருக்கு இடம் வழங்கப்படுகிறது. அது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்படுகிறது.

    மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை வழக்கமான நடைமுறையை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில், அரசு உத்தரவு வருவதற்கு முன்னதாகவே சிஎம்சியில் மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிஎம்சி கோரிக்கை என்ன?

    சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 85 இடங்கள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுகிறது. 15 இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் தனியாக நுழைத்தேர்வும் நடத்தப்படுகிறது. அத்தேர்வில் மாணவர்களின் தலைமைப் பண்பு, குழுவாக செயல்படும் திறன், கிராமப்புறங்களில் பணியாற்றும் மனப்பாங்கு ஆகியன சோதிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள் கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் சேவை புரிவது கட்டாயம். இத்தகைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயேன் மருத்துவ இடம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேவேளையில் மருத்துவக் கல்வி கட்டணமாக வெறும் ரூ.3000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    எனவே சேவை அடிப்படையில் சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய சிறுபான்மையினருக்காக நடத்தப்படும் தங்கள் மருத்துவக் கல்லூரியில் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்த அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என நிர்வாகம் கூறுகிறது.

    இருப்பினும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கள் மருத்துவக் கல்லூரி விதிகளின்படி தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதே அவர்களது தற்போதையை நிலைப்பாடாக உள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மற்ற இடங்களை நிரப்பாமல் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இரண்டு சிறப்பு இடங்களை மட்டும் நிரப்புவதாக சிஎம்சி தெரிவித்துள்ளது.
    தமிழகத்தில் 'நீட்' போராட்டத்துக்கு தடை கோரும் மனு: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    Published : 06 Sep 2017 11:23 IST

    சென்னை




    மாணவி அனிதா மரணத்தை அடுத்து நீட்டுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வலுத்து வருகிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

    நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை அமல்படுத்துவதில் தமிழகத்துக்கு விதிவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதில் இந்த ஆண்டு விதிவிலக்கு கட்டாயம் உண்டு என்று நம்பிய நிலையில் திடீரென நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

    நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற அரியலூர் மாணவி அனிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவி அனிதா திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கு நீதி கேட்டும் நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

    இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வழக்கறிஞர் அனிதாவின் மரணத்தை அடுத்து, நீட் உத்தரவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. நீட் விவகாரத்தில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இது. உத்தரவை மீறுவதாகும்.

    அனிதாவின் மரணத்தை அடுத்து நடக்கும் இத்தகைய போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இதில் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவசர வழக்காக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு எடுப்பதற்கு அப்படி என்ன தேவை வந்தது, உடனடியாக வழக்கை விசாரிக்கும் அளவுக்கு என்ன நடந்து விட்டது என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

    இந்த வழக்கு பின்னர் ஒரு நாளில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

    ரகசியம் காப்போம்!

    ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...