இன்றைய சிந்தனை
15.12.2025
அடைமழைக் காலத்து அட்டைப்பூச்சியாய் சட்டென வந்து ஒட்டிக் கொள்கிறது வெறுமை..!
காரணம் கண்டு தெளியும் முன் கற்பாறையாய் கனத்து விடுகிறது மனது..!
வழமை மாறாத வறட்டு வாழ்க்கையோ அல்லது வருங்காலம் பற்றிய வலுவிழந்த நம்பிக்கைகளோ,
ஏதோவொரு காரணி எடுத்து வந்து சேர்த்து விடுகிறது இந்த வெறுமையை..!
எதனுடனும் ஒப்பிட்டு விட முடிவதில்லை எளிதில் இந்த வெறுமையை..!
சிதிலமடைந்த சிலந்தி வலையை சில நொடிகள் உற்று நோக்கும் போதும்,
புத்தகங்களால் நிரம்பியிருந்தும் புரட்ட ஆளில்லாத நூலகத்தைக் கடக்கும் போதும்,
இவ்வெறுமையின் சாயலை வேறு நிறத்தில் உணர முடிகிறது!
புறந்தள்ளிக் கடந்து செல்வதும், மறந்து விட்டு மற்ற பணி செய்வதும் கடினமான ஒன்றாகவே அமைந்து விடுகிறது அடுத்த சில நிமிடங்களுக்கு!
ஆனாலும் ஒரு குறுகிய இடைவெளியே போதுமானதாக இருக்கிறது அடுத்ததொரு வெறுமையை அவசரமாக நம் மனம் உடுத்திக் கொள்ள!
மெல்லியதொரு வலியை மென்று விழுங்கி விட்டே மேற்சொன்ன வெறுமையை மெதுவாகக் கடக்க முடிகிறது..!
வெறுமையை விரட்டுவோம். எப்பொழுதும் நம் மனம் புத்துணர்வில் வலம் வரட்டும்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment