Sunday, November 16, 2014

THREE PUT OUT FAKE AD TO SELL MEDICAL COLLEGE




Source: Deccan Chronicle

சிவப்பு விளக்குகளை யார் யார் பயன்படுத்தலாம்? தமிழக அரசு புதிய உத்தரவு



சிவப்பு, நீல வண்ண விளக்குகளை எந்தெந்த அதிகாரிகள் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

அரசு வாகனங்களின் மேல்புறத்தில் சிவப்பு விளக்குகள் பொருத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், அரசு வாகனங்களில் சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளையும், சாதாரண வகை சிவப்பு விளக்குகள், நீல வண்ண விளக்குகளை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளார். அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு உத்தரவைப் பிறப்பிக்கிறது.

அதன்படி, சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவர்கள்: மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர்.

சுழலும் வகையில் இல்லாமல், சாதாரண வகை சிவப்பு விளக்குகளை 14 பேர் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் விவரம்: சட்டப்பேரவை துணைத் தலைவர், தலைமைச் செயலாளர், ஆலோசனைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், மாநில ஆலோசனைக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்குரைஞர், மாநில திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகியோர். இதேபோல, காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் தங்களது வாகனங்களில் சுழலும் வகையிலான நீல வண்ணத்தைக் கொண்ட விளக்குகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

அவர்களின் விவரம்: போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள், டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம்-ஒழுங்கு) ஆகியோர்.

சில அதிகாரிகள் தங்களதுப் பணி காரணமாக, சாலை வழியாகச் செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருப்பதற்காக தங்களது வாகனங்களில் சுழலும் வகையிலான நீல வண்ணத்தைக் கொண்ட விளக்குகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

அந்த அதிகாரிகளின் விவரம்: அரசுத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்களின் தலைவர்கள், மாவட்ட நீதிபதிகள், பெருநகர முதன்மை நீதிபதிகள், உயர் நீதிமன்றப் பதிவாளர், கூடுதல் ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி மேயர்கள், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆகியோர்.

அவசரக் காலங்களில் இயங்கக் கூடிய தீயணைப்பு, மீட்புப் பணித் துறை வாகனங்கள், போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவு வாகனங்கள், காவல் துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியன சிவப்பு, நீலம், வெள்ளை என மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிறக் கண்ணாடியைக் கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குடன் இயக்கலாம் என்று உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா தெரிவித்துள்ளார்.

Source: Dinamani

சுற்றுச்சுவர் இடிந்ததால் பரபரப்பு: வண்டலூர் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பிய புலி: புதரில் மறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது


வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்ததால் தப்பிய புலிகளுள் ஒன்று புதரில் மறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புலியை பிடிக்க பூங்கா நிர்வாகிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

5 ஏக்கர் நிலப்பரப்பில்...

சென்னையை அடுத்த வண்டலூரில் சுமார் ஆயிரத்து 490 ஏக்கர் நிலப்பரப்பில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு 46 வகை விலங்குகள் சுமார் 400-ம், 74 வகை பறவைகள் சுமார் 750-ம், 32 வகை ஊர்வனற்றில் சுமார் 350 உள்ளன.

இதில், வங்கப்புலிகள் என்று அழைக்கப்படும் ஆரஞ்சு நிறப்புலிகள் 12, கலப்பின புலிகளான வெள்ளைப்புலிகள் 14 உள்ளன.

இவற்றில், 5 பெண் புலிகள் மட்டும் வசிப்பதற்கு வசதியாக ஒரு கூண்டுடன் கூடிய அடர்ந்த காட்டுப்பகுதி சுமார் 5 ஏக்கரில் உள்ளது.

இதற்கு அருகில் ஒருபுறம் மான் சரணாலயம், ஒரு புறம் சிங்கத்தின் வசிப்பிடம், மற்றொரு புறம் பறவைகள் வசிக் கும் இடம் ஆகியவை உள்ளன.

சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது

இந்த புலிகளை பொதுமக்கள் பார்ப்பதற்காக, அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு பகுதியை இரும்பு வலையால் அடைத்து அந்த இடத்தில் விடுவது வழக்கம். மேலும் இரும்பு வேலிக்கு பின்னால், அடர்ந்த செடி கொடிகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியில் புலிகள் சுற்றித்திரிவதற்கு வசதியாக பிரத்யேக வழிகளும் உள்ளன.

புலிகள் அடைக்கப்பட்டுள்ள 5 ஏக்கர் பகுதியை சுற்றிலும் 30 மீட்டர் அகலத்தில் அகழி தோண்டப்பட்டு உள்ளது. அகழியை ஒட்டி 7 மீட்டர் உயர சுவர் கருங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக, அகழியின் ஒரு பகுதியில் சுமார் 100 அடி நீளத்திற்கு, கருங்கற்களால் அமைக்கப்பட்டிருந்த சுவர் நேற்று முன்தினம் சரிந்து விழுந்தது.

தப்பிய புலி

அந்த நேரத்தில், அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில், பத்மா என்ற 12 வயது பெண் புலியுடன், சுமார் 2 முதல் 2½ வயது அடங்கிய வித்தியா, ஆர்த்தி, உத்ரா, ‘நேத்ரா’ ஆகிய பெண் புலிகள் சுற்றித்திரிந்துள்ளன. சுவர் இடிந்து விழுந்ததைக் கண்ட, வனத்துறை ஊழியர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலையடுத்து, பூங்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் குழு அதிவேகமாக உயிரியல் பூங்காவிற்குள் வந்து. புலிகள் சுற்றித் திரிவதற்கான அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து பத்மா, வித்யா, ஆர்த்தி, உத்ரா ஆகிய பெண் புலிகளை துப்பாக்கியின் மூலம் மயக்க ஊசி செலுத்தி, அவற்றை பிடித்து கூண்டுக்குள் அடைத்து விட்டனர்.

எனினும், பூங்கா உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர் குழுவினரின் கண்ணில் படாமல் ‘நேத்ரா’ என்ற பெண் புலி தப்பித்துவிட்டது.

எனினும் அந்த புலி அகழியை விட்டு வெளியில் சென்று விடாமல் இருக்கும் வகையில், வனத்துறையினர் சுவர் இடிந்த பகுதியில் அவசர, அவசரமாக இரும்பு கம்பியால் வலை அமைத்தனர்.

ஆயினும், ‘நேத்ரா’ புலி, அதற்கான காட்டுப்பகுதியில் தான் உள்ளதா? அல்லது அகழியை விட்டு வெளியே சென்றுவிட்டதா? என்பதை அறிவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை நேற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

வனத்துறையினர், தீப்பந்தம், கவை கம்புகள், மயக்க மருந்து ஊசி போடும் துப்பாக்கி சகிதம் குழுக்களாக பிரிந்து அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

தப்பிய புலியை பிடிப்பதற்கு நேற்று முன்தினம் இரவு பூங்கா அதிகாரிகள் செய்த முயற்சி பயன் அளிக்கவில்லை. இந்த செய்தி காட்டு தீ போல் நேற்று முன்தினம் இரவு பூங்காவின் அருகில் உள்ள கிராம மக்கள் இடையே பரவியது. கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர். இதனால் வண்டலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் புலி இருப்பிடத்திற்கு வந்து பார்த்த போது உடைந்த சுற்றுசுவர் அருகே புலி நடமாடியதை அதனுடைய கால் தடயங்களை வைத்து உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பூங்கா ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் மருத்துவர்கள் கொண்ட குழுவினர், புலி இருப்பிடத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்துள்ள 2 வயது புலிக்குட்டியை தீவிரமாக தேடிப்பார்த்தனர். ஆனால் புலிக்குட்டி கிடைக்கவில்லை.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் உயரமான மரத்தின் மேல் ஏறிநின்று பைனாகுலர் (தொலைநோக்கி) மூலம் பார்த்த போது புலி நடமாட்டம் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்தனர்.

தேடும் பணி நீடிக்கிறது

இதனை தொடர்ந்து பூங்கா மருத்துவர்கள் மயக்க மருந்து துப்பாக்கியுடனும், ஊழியர்கள் நெருப்பு தீப்பந்தங்களுடனும் புலிக்குட்டி பதுங்கியுள்ள அடர்ந்த புதர் பகுதிக்கு சென்றனர். ஆனால் புதரில் இருக்கும் புலிக்குட்டி வெளியே வரவில்லை.

நேற்று மாலை 6 மணி வரை புலிக்குட்டியை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் புலிக்குட்டி சிக்கவில்லை, 6 மணிக்கு மேல் இருள் சூழந்துள்ளதால் தேடும்பணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே புலிக்குட்டிகள் பதுங்கியுள்ள இருப்பிடம் அருகே சாம்பார் மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதனால் தப்பிய புலிக்குட்டி உறுமும் சத்தம் கேட்டவுடன் மான்கள் நாலாபுறமும் சிதறி ஓடுகின்றன.

பார்வையாளர்களுக்கு தடை

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூங்கா திறந்து இருந்தது. புலிக்குட்டி தப்பித்துவிட்டதாக வந்த செய்தியால் பூங்காவிற்கு நேற்று குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்தனர். இவர்கள் பூங்காவில் உள்ள புலி இருப்பிடங்களை பார்வை யிடுவதற்கு பூங்கா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

மேலும் புலி இருப்பிடங்களுக்கு செல்லும் சாலைகளில் வனத்துறை ஊழியர்கள் மரங்களை வெட்டிப்போட்டு சாலையை அடைத்தனர். இதனால் பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள் புலியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இது குறித்து பூங்கா உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நேற்று முன்தினம் முழுவதும் புலி இருப்பிடத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியுள்ள புலிக்குட்டியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால் புலிக்குட்டி கிடைக்கவில்லை. நாளை (இன்று) காலையில் இருந்து மீண்டும் தேடுதல் வேட்டை தொடரும். புலிக் குட்டி விரும்பி சாப்பிடும் உணவுகளை புலிக்குட்டி பதுங்கியுள்ள இடங்களில் இன்று வைக்கப்படும். அதனை சாப்பிட வரும் புலிக்குட்டி துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும். புலிக்குட்டியை கண்டிப்பாக பிடித்துவிடுவோம், இதனால் அருகில் உள்ள கிராம மக்கள், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் யாரும் அச்சப்படதேவையில்லை.

இரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு

சென்னை: இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுத்த, போக்கு வரத்து கழக பொது மேலாளரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஈரோடு, தாராபுரத்தில், அரசு போக்குவரத்து கழக கிளையில், தொழில்நுட்ப அலுவலராக, பழனிசாமி என்பவர், பணியாற்றி வந்தார். 2011, ஆகஸ்டில், விபத்தில் சிக்கி, கோவை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர், 13ல், இறந்தார்.


விவாகரத்து:


இறந்த பழனிசாமிக்கு, மகுடேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன. குடும்ப பென்ஷன் மற்றும் இதர பலன்களை வழங்கக் கோரி, மகுடேஸ்வரி, விண்ணப்பித்தார்.


ஈரோட்டில் உள்ள, அரசு போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர், 'பழனிசாமியுடன் மகுடேஸ்வரிக்கு திருமணம் நடந்த போது, பழனிசாமியின் முதல் திருமணம் ரத்தாகி இருக்கவில்லை; எனவே, பென்ஷன் பெற, மகுடேஸ்வரிக்கு உரிமையில்லை' என, உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மகுடேஸ்வரி, தாக்கல் செய்த மனு: கடந்த, 1984ல், ஈஸ்வரி என்பவரை, என் கணவர் பழனிசாமி, திருமணம் செய்தார். பாரம்பரிய வழக்கப்படி, 1990ல், ஈஸ்வரியை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின், 1991ல், என்னை திருமணம் செய்தார். தாராபுரம் நீதிமன்றம், விவாகரத்து வழங்கி, 1992ல், உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, என் கணவருக்கு உரிய பென்ஷன் மற்றும் இதர பணிப் பலன்களை, எனக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.சரவணன் ஆஜராகி, ஈஸ்வரி அளித்த உத்தரவாதத்தையும், போக்குவரத்து கழகம் அளித்த அடையாள அட்டையையும் தாக்கல் செய்தார். உத்தரவாத கடிதத்தில், தனக்கும், பழனிசாமிக்கும், 1990ல், திருமண உறவு முறிந்து விட்டதாகவும், மகுடேஸ்வரிக்கு பென்ஷன் பலன்களை அளிப்பதில், தனக்கு ஆட்சேபனையில்லை என்றும், கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன், பிறப்பித்த உத்தரவு: போக்குவரத்து கழகம் வழங்கிய, அடையாள அட்டையில், பழனிசாமி, மகுடேஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளின் புகைப்படங்கள் உள்ளன. மகுடேஸ்வரியை, பழனிசாமியின் மனைவி என, குறிப்பிட்டு உள்ளனர்.

உத்தரவாதம்:

எனவே, பழனிசாமியின் மனைவி மகுடேஸ்வரியை, சட்டப்பூர்வ மனைவியாக அங்கீகரிக்க முடியாது என, போக்குவரத்து கழக நிர்வாகம் கூறுவது சரியல்ல. மகுடேஸ்வரியை மனைவி என குறிப்பிட்டு, அடையாள அட்டை வழங்கி விட்டு, வேறு நிலையை எடுக்க முடியாது. தனக்கும், பழனிசாமிக்கும் திருமண உறவு ரத்தாகி விட்டது என, ஈஸ்வரியும் உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே, போக்குவரத்து கழக உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. எட்டு வாரங்களில், மனுதாரருக்கு, கணவரின் பென்ஷன் பலன்களை வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு

புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து 2009 க்கு பின் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தொடக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த, 79 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 247 ஆசிரியர்களுக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஜேம்ஸ் கூறியதாவது: பொதுநல நோக்கத்துடன் தகவல்களை கேட்டு பெற்றேன். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணப்பலன் கொடுப்பது தொடர்பாக எந்த அரசு உத்தரவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை கூட வழங்காதது அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, November 15, 2014

MARRIED WOMAN TO GET GOVT JOB ON COMPASSIONATE GROUND

Source: The New Indian Express

தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

நேற்று காலை 9.50 மணிக்கு ‘தந்தி’ டி.வி. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. இலங்கை மந்திரி செந்தில் தொண்ட மானுடன், ‘தந்தி’ டி.வி. செய்தியாளர் நடத்திய உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. அதில், இலங்கை மந்திரி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்வது பற்றி, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மீனவர்களை விடுவிக்கக்கோரி ராஜபக்சேயுடன், அமைச்சர் ஆறுமுக தொண்டமானும் பேசினார். 

அதற்கு மதிப்பளித்து ராஜபக்சே, மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டிருப்பதாகவும், இந்திய அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்ட பிறகு, மீனவர்களை விடுவிக்கும் அதிகாரபூர்வ நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் ஆறுமுக தொண்டமானிடம், ராஜபக்சே கூறியுள்ளார். இதையடுத்து 2 அல்லது 3 நாட்களில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியா திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செந்தில் தொண்டமான் பேசியதும், கொஞ்ச நேரத்தில் இந்த செய்தி சுனாமி வேகத்தில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் வேகமாக பரவியது. மீனவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆனந்த கூத்தாடியது.

2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 28–ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் வங்காள விரிகுடா கடலில் மீன் பிடிக்கச்சென்றனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்தனர். முதலில் இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துவிட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டினர். பிறகு என்ன நிர்ப்பந்தமோ அல்லது என்ன தூண்டுதலோ தெரியவில்லை. அவர்கள் 5 பேரும் ஹெராயின் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததாக கடுமையான சட்டங்களின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதற்கு முன்பு, சிறையில் இருந்த அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய நல்லெண்ணத்தின் அடிப்படையில் உத்தரவிட்டபோது, அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அந்த நேரத்தில் இந்த 5 மீனவர்களும் விடுதலை செய்யப்படாததால், இது முழுமையான மகிழ்ச்சியாக இருக்கவில்லை. இந்த
5 மீனவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றிருந்த நிலையில், கடந்த மாதம் 30–ந்தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளதாக வந்த தீர்ப்பு, இடிவிழுந்ததுபோல இருந்தது. தமிழ்நாடு முழுவதும் கொதித்து எழுந்தது. ஒட்டுமொத்த கண்டன குரல் மட்டுமல்லாமல், அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என எல்லோரும் கோரிக்கைவிடுத்தனர்.

1976–ம் ஆண்டுக்கு பிறகு, இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாருக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை. எனவே, இந்த 5 மீனவர்களும் நிச்சயமாக தூக்குமேடைக்குச் செல்லமாட்டார்கள் என்று எத்தனையோ உறுதிமொழிகள் சொல்லப்பட்டாலும், அது யாருக்கும் மனநிறைவு அளிக்கவில்லை. உடனடியாக இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய தமிழக அரசு, இந்திய தூதரகத்துக்கு ரூ.20 லட்சம் அனுப்பியது. இலங்கை உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் செய்யப்பட்டது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பேசி, இலங்கை ஜனாதிபதி என்ற முறையில் ராஜபக்சே தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ய வைப்பதுதான் சிறந்தவழி என்று எல்லோரும் பிரதமருக்கு முறையீடு விடுத்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு முன்பு ராஜபக்சேயிடம் டெலிபோனில் பேசி, 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறினார்.

நரேந்திர மோடியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, தூக்கு தண்டனையை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளார். ஆக, பிரதமரின் ராஜ்ய உறவுதான் வெற்றி பெற்று இருக்கிறது. இதே நல்லெண்ணத்தையும், ராஜ்ய உறவையும் உரியமுறையில் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும். அந்த தீர்வு, இனியும் மீனவர்கள் கைது என்ற நிலை இல்லாத அளவில் இருக்க வேண்டும், அதை நரேந்திர மோடிதான் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.

Source: daily thanthi

NEWS TODAY 01,02.2026