Monday, December 1, 2014

நான் ஒரு பாசிட்டிவ் பெண்’.......ஜி.ஞானவேல்முருகன்

விஜயலட்சுமி

உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1

தன்னைப் பாதித்த நோயைக் காரணமாக்கி இந்தச் சமூகமும் உறவுகளும் தன்னை ஒதுக்கிவைத்தபோதும் தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து வாழ்ந்துவருகிறார் விஜயலட்சுமி. திருச்சியைச் சேர்ந்த இவர், “நான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆம் நான் ஒரு பாசிட்டிவ் பெண்” என்று அழுத்தம் திருத்தமாகத் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். தன் முகத்தையோ அடையாளங்களையோ மறைத்துக்கொள்ள ஒருபோதும் விரும்பாதவர். “ஓடி ஒளிந்துகொள்ள நான் என்ன தவறு செய்தேன்? என்னைத் தாக்கிய நோய்க்கு எதிராகப் போராடுவதும் நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நம்பிக்கை தருவதும் குற்றமா என்ன?” என்று கேட்கும் விஜயலட்சுமியின் ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்க்கை மீதான நம்பிக்கை மிகுந்த சிந்தனை வெளிப்படுகிறது.

தன் கணவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்தான், விஜயலட்சுமிக்கும் ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களைப் போலவே விஜயலட்சுமியும் தன்னை மாய்த்துக்கொள்ளத்தான் நினைத்தார். ஆனால் பிறகு அந்த நினைப்பில் இருந்து மீண்டு தற்போது எய்ட்ஸ் நோயால் பாதிப்புக்கப்பட்டிருக்கும் 3 ஆயிரத்து 500 பேரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

தாக்கிய பேரிடி

விஜயலட்சுமி 10-ம் வகுப்பு முடித்த கையோடு 16 வயதில் முருகேசனை 1996-ல் வாழ்க்கைத் துணைவராகக் கரம்பிடித்தார். முருகேசனுக்குக் கட்டுமானத் துறையில் சென்ட்ரிங் வேலை. அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகவே, 2003-ல் திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் முருகேசனை சிகிச்சைக்குச் சேர்த்தனர். அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதே நேரத்தில் விஜயலட்சுமியையும் பரிசோதிக்க, அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உறுதியானது.

அதைக் கேட்டதுமே உடைந்துபோனார் விஜயலட்சுமி. அந்த நொடியிலும் அவருக்கு ஆறுதல் அளித்த ஒரே செய்தி, அவருடைய 5 வயது மகனுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பதுதான்.

மக்களிடையே எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு பரவலாக்கப்பட்டுவரும் இந்தக் காலத்திலேயே பலரது பிற்போக்கு சிந்தனை மாறவில்லை. அப்படியிருக்கும்போது 10 ஆண்டுகளுக்கு முன் விஜயலட்சுமி சந்தித்த துயரங்களைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தன்னைச் சூழ்ந்த புறக்கணிப்பையும் தனிமையையும் சமாளிக்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ள விஜயலட்சுமி முடிவெடுத்தார். தூக்கமாத்திரைகளை விழுங்கித் தற்கொலைக்கு முயன்றார்.

தன்னம்பிக்கைப் பயணம்

விஜயலட்சுமியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள், அவருக்கு ஆலோசனை வழங்கி தாம்பரத்தில் இதற்கென உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் கவுன்சலிங் பெற அறிவுறுத்தினர். ஆரம்பத்தில் திருச்சியில் இருந்து மாதம் ஒருமுறை என தாம்பரம் மருத்துவமனைக்கு 2 ஆண்டுகள் சிகிச்சைக்காகச் சென்றார்.

நன்றாகப் பழகியவர்கள்கூட தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிந்ததும் தன்னைவிட்டு ஒதுங்கினார்கள் என்று வேதனையுடன் சொல்கிறார் விஜயலட்சுமி. தன் வீட்டிலும் தனித் தட்டு, டம்ளர், தனிப் படுக்கை என அவமதிப்பு தொடர, ஒரு கட்டத்தில் மகனுடன் வீட்டைவீட்டு வெளியேறித் தனியே வாழப் பழகினார். தொடர்ந்து சில நல்ல உள்ளங்களின் உதவியால் மகனை வளர்த்து வருகிறார்.

எய்ட்ஸ் நோயைப் பற்றித் தன் மகனுக்குச் சிறு வயதில் இருந்தே விஜயலட்சுமி விளக்கியிருக்கிறார். மற்றவர்களுடன் உணவு, உடையைப் பகிர்ந்துகொள்வதாலும் ஒரே இடத்தில் வசிப்பதாலும் பரவாது என்பதையும், எப்படிப் பரவும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“சின்ன வயசுல இருந்தே என்கூட சிகிச்சைக்குத் துணையாக வருவதால் என்னைப் பத்தி என் மகனுக்கு எல்லாமே தெரியும். இப்போ டிப்ளமா படிக்கிற அவன்தான் தினமும் மாத்திரை எடுத்துக் கொடுப்பதில் தொடங்கி, சத்தான உணவு கொடுப்பது வரை ஒரு தாய்போல் என்னைக் கவனித்துக்கொள்கிறான்” என்று தன் மகனைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார்.

தயக்கம் தவிர்ப்போம்

தன்னைப் போல் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திக்கும்போது தன் வாழ்க்கையையே முன்னுதாரணமாக எடுத்துக் கூறுகிறார் விஜயலட்சுமி. “தயக்கம் இன்றி வெளியே தலை காட்டுங்கள். புதிய வாழ்க்கைக்குத் தயாராகுங்கள். இது நம்மை நம்பும், நம் மீது அன்பு செலுத்தும் ஒரே ஒரு உறவால் சாத்தியமாகும். நோய்த் தொற்று உள்ளவர்கள் மறைந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தலைமுறையினர் நம்மை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் உள்ளனர். மற்ற வியாதிகளை வெளியில் சொல்வதைப் போல ஹெச்.ஐ.வி தாக்குதலையும் தைரியமாகச் சொல்லுங்கள்” - தான் சந்திக்கும் ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் மனிதர்களிடம் விஜயலட்சுமி சொல்லும் தாரக மந்திரம் இதுதான்.

மணப்பாறையில் உள்ள ஏ.ஆர்.டி மையத்தில் ஒருங்கிணைப்பாளராக வேலை பார்க்கும் இவர், ‘நெட்வொர்க் ஆஃப் பீப்புள் லிவிங் வித் ஹெச்ஐவி/ எய்ட்ஸ்’ என்ற அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவராகச் செயல்படுகிறார்.

“ஹெச்.ஐ.வி பாதித்தவர்கள் மீது அன்பு காட்ட, தலை சாய்த்துக் கொள்ள, ஆதரவாய்த் தோள் கொடுக்க ஒரே ஒரு ஜீவன் இருந்தால் போதும். ஆயுள் மேலும் மேலும் நீடிக்கும்” என்று அன்பையும் புரிந்துகொள்ளுதலையுமே தீர்வாக முன்வைக்கிற விஜயலட்சுமி, நோயின் பாதிப்பில் சோர்ந்துபோகிறவர்களுக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறார்!

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம்



புதுடில்லி : இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.

ஸ்மிருதியுடன் சந்திப்பு:

பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மூத்த அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா போன்ற பலர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து, பா.ஜ.,வில் இணைந்தவர்கள். பா.ஜ.,வை கட்டுப்படுத்தும் உயரிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது என சொல்லப்படுகிறது.இந்திய கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வர, மத்திய அரசு, படிப்படியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக, கடந்த அக்., 30ல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலர் சந்தித்தனர் என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோசபலே போன்றோர், அமைச்சர் ஸ்மிருதியை சந்தித்து, கல்வி முறையை எந்தெந்த விதங்களில் மாற்ற வேண்டும் என கூறியதன் அடிப்படையில் தான், மத்திய அரசு, சமீப காலமாக செயல்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்., சொல்வதென்ன?


*வெறும் எழுத்தர்களை உருவாக்கும், மெக்காலே கல்வி முறையை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். சிந்திக்கத் தெரிந்த, நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை போன்றவற்றுடன் இயைந்தவாறு கல்வி முறை இருக்க வேண்டும்.
*நவீன தொழில்நுட்ப யுக்திகளுடன், பாரம்பரிய கல்வி முறையையும் இணைத்து, புதியதொரு கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும்.
பொறுப்பு

யார் வசம்?

கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற, ஆர்.எஸ்.எஸ்., அதற்கான வடிவமைப்பு, செயல்திட்டத்தை, அந்த அமைப்பின் சிறந்த கல்வியாளரான தினாநாத் பத்ராவிடம் வழங்கியுள்ளது. அவர், இதற்காக ஆராய்ச்சி செய்து வடிவமைத்துள்ள கல்விமுறை, குஜராத்தில் பின்பற்றப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது.

புதிய கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:


*இப்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 கல்வி முறை, 1968ல், கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி அமலில் உள்ளது; இந்த முறை, விரைவில் மாற்றப்பட உள்ளது.
*மாணவர்களின் முதல் எட்டாண்டு படிப்பு, தனி பிரிவாகவும்; அதன் பின், நான்காண்டு தனிப்பிரிவாகவும்; அதன் பின், மூன்றாண்டு தனிப்பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளது.
*முதல் எட்டாண்டு படிப்பு, மாணவர்களின் அடிப்படை கல்வி தொடர்பானதாக இருக்கும்; இதில், அவர்களின் தாய்மொழி தான், முதல் மொழியாக இருக்கும்; ஆங்கிலம், இந்தி துணை மொழிகளாக இருக்கும்.
*முதல் எட்டாண்டு படிப்பில், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, வேலை, சுத்தம், பாரம்பரிய கல்வி, சமூக சேவை ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.
*முதல் எட்டாண்டு படித்து முடிக்கும் மாணவன், விரும்பினால், படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டு, தொழில்கள் செய்யவோ, அல்லது தொழிற்கல்வி
படிக்கவோ செய்யலாம்.
*அதன் பின், விரும்பினால், நான்காண்டு படிப்பை தொடரலாம்.

கல்லூரி மட்ட படிப்பு:

*நான்காண்டு படிப்பு, கல்லூரி மட்ட படிப்பை ஒரே வீச்சில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால், முதலாண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம்; அப்போது முதலாண்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு, இன்னொரு சான்றிதழ் வழங்கப்படும்; அது, டிப்ளமோ சான்றிதழாகவும், மூன்றாம் ஆண்டு, டிகிரி சான்றிதழாகவும், நான்காம் ஆண்டு சான்றிதழ், ஹானர்ஸ் டிகிரி சான்றிதழாகவும் வழங்கப்படும்.
*இதனால், கல்வி, தொழில் ரீதியாகவும், நாட்டின் உற்பத்திக்கு உகந்ததாகவும் இருக்கும்.
*எந்த படிப்பில் சேரவும், நுழைவுத் தேர்வு முறை இருக்காது என்பது, பி.எஸ்.எம்., வரைந்துள்ள கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம். மதிப்பெண் மட்டுமின்றி, பிற தகுதிகளும், பொருளாதாரமும் கவனத்தில் கொள்ளப்படும்.
*எல்லா வகையான படிப்பிலும், செய்முறை எனப்படும் பிராக்டிகல் அவசியம் இருக்கும்.

BHARATH UNIVERSITY PG ADMISSION 2015-16 NOTIFICATION


அரசு பணிகளின் வயது வரம்பு

இன்றைய இந்தியா, இளைஞர் பட்டாளத்தால் நிரம்பி ததும்பிக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள மொத்த இளைஞர்களில் ஐந்தில் ஒருபங்கு இந்தியாவில்தான் இருக்கிறார்கள். கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போய்க் கொண்டி ருக்கிறது. தற்போதைய நிலையில் 11 கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, எதிர்கால இளைஞர் சமுதாயத்துக்கு படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான நிலையை உருவாக்கவேண்டியது அரசாங்கங்களின் கடமையாகும். இப்போதெல்லாம் மத்திய அரசாங்க பணிகளுக்கு விண்ணப்பம் அனுப்புபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. 1,300 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழுதியுள்ளனர். இதுபோல, ரெயில்வேயில் ஒருசில ஆயிரம் கடைநிலை ஊழியர் பணிக்கு, லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஆக, எந்த பிரிவுக்கான வேலை என்றாலும் கடுமையான போட்டி நிலவும் சூழ்நிலை இருக்கிறது. ஆக, இவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது மத்திய அரசாங்கத்துக்கு மிகவும் கஷ்டமான நிலைதான். தற்போது ரெயில்வே, ராணுவம், போலீஸ் போன்ற துறைகள் உள்பட மத்திய அரசாங்க பணிகளில் ஏறத்தாழ 50 லட்சம் பேர் இருக்கிறார்கள். இதில் ரெயில்வேயில் மட்டும் 14 லட்சம் பணியிடங்கள் இருக்கின்றன. மத்திய அரசு பணிகளில் 10 லட்சத்து 26 ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். 

மத்திய அரசாங்க பணியில் சராசரியாக 21 வயது முதல் சேரமுடியும். 1962–க்கு முன்பு இவர்களின் ஓய்வுபெறும் வயது 55 ஆக இருந்தது. 55 வயது ஆனால் நீங்கள் ‘ரிடையர்’ ஆகிவிட்டீர்கள் என்று முத்திரை குத்தி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த நாள்வரை மாதசம்பளம் வாங்கிவந்த அவர்கள் அதன்பிறகு பென்ஷனை வாங்கித்தான் தங்கள் காலத்தைக் கழிக்கவேண்டும்.
55 வயதிலேயே வீட்டுக்கு போய் என்ன பயன்? அவர்களால் உழைக்க முடியுமே, அவர்களின் பணி அனுபவம் வீணாகிறதே என்ற கோரிக்கைகளுக்கு பிறகு, 1962–ல் மத்திய அரசாங்க பணியாளர்களின் வயது 58 ஆக உயர்த்தப்பட்டது. 1998–ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரத்தில் இப்போதுள்ள மருத்துவ முன்னேற்றத்தில் மனிதனின் வாழ்நாள் உயர்ந்துவிட்டது, எனவே ஓய்வு பெறும் வயதை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் 60 ஆக உயர்த்தப்பட்டது. எங்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறதே என்று அப்போதே பலத்த எதிர்ப்பு அலை இளைஞர்களிடம் இருந்து கிளம்பியது. எப்போதுமே மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு, அக விலைப்படி உயர்வு போன்ற சலுகைகளை மாநில அரசு ஊழியர் களுக்கும் அளித்துவரும் தமிழக அரசு போன்ற மாநில அரசுகள், இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கத்தைப் பின்பற்றவில்லை. மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு
பெறும் வயது 58 ஆகத்தான் இருக்கிறது.

தற்போது திட்டம் சாராத செலவுகளை குறைக்க வேண்டும், அரசாங்க பணிகளில் நிபுணத்துவம், தகவல் தொழில்நுட்பம், இளம் ரத்தத்தை புகுத்தவேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்துவரும் மத்திய அரசாங்கம், மத்திய அரசாங்க ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60–லிருந்து மீண்டும் 58 ஆக குறைக்க திட்டமிட்டு வருகிறது. 6–வது சம்பளக்குழு பரிந்துரைக்கு பிறகு கடந்த ஆண்டு சம்பளமாக மட்டும் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்றவர்களுக்கான பென்ஷன் மட்டும் இந்த ஆண்டில் வழங்குவதற்காக ரூ.81 ஆயிரத்து 983 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 7–வது சம்பளகுழு பரிந்துரையில் இன்னும் அபரிமிதமான சம்பள உயர்வை எதிர்பார்க்கும்போது, அந்த நிதிச் சுமையை அரசாங்கத்தால் தாங்கமுடியுமா? என்ற நிலையும் உள்ளது. இளைஞர் களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும். அதற்கும் வாய்ப்பு வேண்டும். நாட்டில் தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ளநிலையில், குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம் என்ற வகையில் இளைஞர்களின் திறமையையும், நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி, சிறந்த நிர்வாகத்தை உருவாக்க இந்த முயற்சியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Sunday, November 30, 2014

அடை மழையே! அடை மழையே! உன் மடையை உடனே அடை மழையே!

மாண்புமிகு மழையே

மாண்புமிகு மழையே! உனக்கொரு 
மடல்! நீ 
எவ்வளவு பெய்தாலும் 
ஏற்க வல்லது 
கடல்கொண்ட 
குடல்; 
ஏற்க 
ஏலாதது 
குடல் கொண்ட 
உடல்! 

நீ பெய்யலாம் 
நூறு அங்குலம்; அன்னணம் 
பெய்தால் என்னணம் 
பிழைக்கும் எங்குலம்? 

அடை மழையே! 
அடை மழையே! உன் 
மடையை உடனே 
அடை மழையே! 

கொடுப்பதும் மழை; 
கெடுப்பதும் மழை; 
இது 
இரண்டாயிரம் ஆண்டுகள் முன் 
தாடி வைத்த தமிழ் 
பாடி வைத்த தமிழ்! 

அளவோடு பெய்தால் 
உன்பேர் மழை; 
அளவின்றிப் பெய்தால் 
உன்பேர் பிழை! 

தாகம் _ 
தணிய.... 
உன்னைக் குடித்தோம் என்றா 
எங்கள் 
உயிரை நீ குடிக்கிறாய்? 
மழைக்கே தாகமா? _ எமனுக்கு 
மற்றொரு பெயர் மேகமா? 

சவத்தைக் குளிப்பாட்டினால் அது 
சடங்கு; நீ 
குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே சவக் 
கிடங்கு! 
நீரின்றி 
நிற்காது உலகு; எங்கும் 
நீராகவே இருந்தாலும் 
நிற்காது உலகு! 

பூகம்பம்; 
புகைவண்டி; 
புயல் வெள்ளம்; 

என 
ஏனிப்படி... 

குஜராத்தைக் 
குறி வைத்து 
இடையறாது தாக்குகிறது 
இயற்கை? உன்னொத்த 
இயற்கையைத் தண்டிக்காது 
இருப்பதேன் இறைக்கை? 

விண்ணிலிருந்து
வருவது தண்ணீர்; 
கண்ணிலிருந்து 
வருவது கண்ணீர்; 
எனினும் 
எஞ்ஞான்றும்
தண்ணீரைப் பொறுத்தே 
கண்ணீர்! 

தெய்வம் 
தொழாது 
கொழுநன் 
தொழுவாளைப் போலே... 
மழையே! 
மாந்தர் 
பெய் எனும்போது 
பெய்; உனது 
பெயரை என்றும் 
பெயராமல் வை! 

ஊக்குவிக்க ஆளிருந்தால்

ஊக்குவிக்க ஆளிருந்தால்


ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!

கவிஞர் : கவிஞர் வாலி

  • கவிஞர் : கவிஞர் வாலி


என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து

எத்தனை சொந்தம் என் வாழ்வில் 
வந்தாலும் அம்மா 
உன் ஒற்றை பார்வையின் பந்தம் 
எதுவும் தந்ததில்லை 

உன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில் 
மறைத்தாய் அம்மா 
இத்தனைநாளும் அது எனக்கு 
விளங்கியதில்லை 


நான் வளரும் ஒவ்வொரு நொடியும் 
உனக்கு பாரம் தான் 
தெரிந்தும் சுமக்கிறாய் 
பத்து மாதம் வரை அல்ல 
உன் ஆயுள் காலம் வரை 


உன் காலம் நரைக்கும் நேரத்தில்
என் நேரம் உனக்காய் 
இருக்க போவதில்லை 
தெரிந்தும் 
காக்கிறாய் உன் 
இமைக்குள் வைத்து என்னை 
கடமைக்காக அல்ல 
கடனுக்காக அல்ல 
கடவுளாக 

உன் வாழ்வின் ஒரு பாதி 
உன் பெற்றோருக்காய் 
மறு பாதி உன் பிள்ளைகளுக்காய் 
மனதார பகிர்ந்தளித்து விட்டாய் 
என்றாவது உனக்காய் வாழும் 
உத்தேசம் உண்டா 

உன் அன்னைக்கு என்ன கைமாறு 
செய்தாலும் உன்னை எனக்கு 
தந்ததிற்கு ஈடாய் 
ஒன்றும் செய்ய இல்லாமல் 
முடமாய் நிற்கிறேன் 


ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை 

இனி ஒரு ஜென்மம் 
இருந்து உயிரினமாய் பிறந்தால் 
உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம் 
மட்டும் போதும் 

ஒரே ஒரு வேண்டுகோள் உன்னிடம் 
இன்று மட்டுமாவது 
உனக்காய் வாழ முயற்சி செய் 


என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...