Monday, December 8, 2014

பிரீமியம் ரயில்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய பிரீமியம் தத்கல், பிரீமியம் ரயில் திட்டங்களுக்கு தமிழகத்தில் போதிய வரவேற்பு இல்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரீமியம் தத்கல் முறை அறிமுகப்படுத்தி இரண்டு மாதங்களில் 56.7 சதவீதப் பயணிகள் மட்டுமே இதனைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பல பிரீமியம் ரயில்கள், போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில நாள்களுக்கு முன் சபரிமலைக்கு அறிவிக்கப்பட்ட பிரீமியம் ரயில்கள், பயணிகளிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் அதிவிரைவு சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. இதில் குறிப்பாக, மதுரை- ஜெய்பூர் இடையே பிரீமியம் விரைவு சிறப்பு ரயில், ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால், சில வாரங்களிலேயே அந்த ரயில் ரத்து செய்யப்பட்டது.

வட மாநிலங்களில் வர்த்தக நகரங்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்ற பிரீமியம் ரயில், பிரீமியம் தட்கல் முறை தமிழகத்தில் வெற்றி பெறவில்லை. முதன் முதலில் தில்லி- மும்பை இடையே பிரீமியம் விரைவு ரயில் கடந்தாண்டு இயக்கப்பட்டது. அதன் வரவேற்பை பொருத்தே பட்ஜெட்டில் பிரீமியம் விரைவு ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பிரீமியம் தத்கல்: பிரீமியம் தத்கல் முறையில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் தத்கல் ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இடங்கள் பிரீமியம் தத்கலுக்கு ஒதுக்கப்படும். இது சாதாரண தத்கல் டிக்கெட் முன்பதிவுக் கட்டணத்தில் இருந்து முதலில் பத்து சதவீத கட்டணம் உயர்த்தப்படும்.

பின்னர் அது 20 சதவீதமாகி அதற்கு மேலும் பயணிகள் இருந்தால் 40 சதவீதம் முதல் ஐம்பது சதவீகிதம் வரை இக்கட்டணம் உயர்த்தப்படும். இதனை இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும்.

காத்திருப்பு பயணச் சீட்டு கிடையாது. படுக்கை, இருக்கை வசதி கொண்ட பயணச் சீட்டை மட்டுமே பிரீமியம் தத்கல் வழங்கும். உதாரணத்துக்கு ரூ.250 க்கான தத்கல் பயணச் சீட்டு, பிரீமியம் தத்கலில் ரூ.500-க்கு கிடைக்கும்.

பிரீமியம் விரைவு ரயில்: பிரீமியம் விரைவு ரயில்களில் டைனாமிக் பிரைசிங் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது பயணிகளின் தேவைக்கு ஏற்ப முன்பதிவு நிலவரத்தைப் பொருத்து ரயில் பயணச் சீட்டு கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கும். சென்னையில் இருந்து திருச்சிக்குப் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் ரூ.225 மதிப்புள்ள பயணச் சீட்டு, தேவை அதிகமாகும் பட்சத்தில் ரூ.800 வரை பிரீமியம் ரயில்களில் கட்டணம் இருக்கும்.

இதுபோன்ற பிரீமியம் ரயில்களில் ஏசி வகுப்புகளின் பயணச் சீட்டு விமானப் பயணச் சீட்டுக்கு நிகராக இருக்கும். மேலும், பிரீமியம் ரயில்களின் பயணச் சீட்டு விற்பனை ரயில் புறப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன்பாக இணையதளத்தில் முன்பதிவு தொடங்கப்படும். ஒரு முறை முன்பதிவு செய்துவிட்டால், ரத்து செய்ய முடியாது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி கூறியது:

வட மாநிலங்களில் பிரீமியம் ரயில் அதிக வரவேற்பை பெற்றது. இதற்குக் காரணம் அவர்கள் செய்யும் வணிகம். தில்லி- மும்பை- ஆமதாபாத் ஆகியவை வர்த்தக நகரங்கள்.

அவர்களுக்கு இந்தப் பிரீமியம் தத்கல், பிரீமியம் ரயில்களின் கட்டணம் பெரிதில்லை. ஆனால், தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை வேறு. இந்த நடைமுறை தமிழகத்தில் பயணிகளிடம் போதிய வரவேற்பு பெறவில்லை என்றார் அவர்.



பாதி இடங்கள்கூட முன்பதிவாகவில்லை (அக்.1 முதல் நவ.30 வரை)



சென்னை சென்ட்ரல்- ஆமதாபாத்- நவஜீவன் விரைவு ரயிலில் 2 மாதங்களில் பிரீமியம் தத்கலுக்கு முன்பதிவுக்கென ஒதுக்கப்பட்ட 8,164 இடங்களில் 3,882 இடங்களே முன்பதிவு செய்யப்பட்டன.

சென்னை எழும்பூர்- செங்கோட்டை- பொதிகை விரைவு ரயிலில் பிரீமியம் தத்கல் முன்பதிவுக்கென ஒதுக்கப்பட்ட 6,786 இடங்களில் 3,327 இடங்களே முன்பதிவு செய்யப்பட்டன.

கோவை- ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் பிரீமியம் தத்கல் முன்பதிவுக்கென ஒதுக்கப்பட்ட 225 இடங்களில் 51 இடங்களே முன்பதிவு செய்யப்பட்டன. இதில், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மட்டுமே 30 சதவீதம் நிரம்பியது. இரண்டாம் ஏசி, மூன்றாம் ஏசி வகுப்புகளில் பிரீமியம் தத்கல் முன்பதிவுக்கு வரவேற்பு இல்லை.

முன்பதிவு உள்ள தத்கல் ரயில்கள்



சென்னை சென்ட்ரல்- ஆமதாபாத் நவஜீவன் விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல்- ஹெளரா கோரமண்டல் விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல்- ஹெளரா மெயில்

சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை விரைவு ரயில்

திருவனந்தபுரம்- ஷாலிமார் விரைவு ரயில்



ரத்து செய்யப்பட்டவை

மதுரை- ஜெய்ப்பூர் பிரீமியம் ரயில்

சென்னை சென்ட்ரல்- ஹெüரா பிரீமியம் ரயில்

சென்னை சென்ட்ரல்- கொச்சுவேளி பிரீமியம் ரயில்

சென்னை சென்ட்ரல்- திருநெல்வேலி பிரீமியம் ரயில்

நவீன வசதிகளுடன் சொகுசு சுற்றுலா ரயில்


இந்தியாவின் பாரம்பரிய நகரங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில், அதிநவீன "மஹாராஜா எக்ஸ்பிரஸ்' என்ற சொகுசு சுற்றுலா ரயிலை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்திருக்கிறது.

ஏழு நட்சத்திர ஹோட்டல் வசதிகளுடன் கூடிய இந்த ரயில், ஆசியாவிலேயே மிக உயர்ந்த கட்டணத்தைக் கொண்ட ரயிலாகக் கருதப்படுவதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய காலங்களில் ராஜாக்களும், ஆட்சியாளர்களும் திருமண நிகழ்ச்சிகள், வேட்டையாடுதல் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது தங்களுக்கென தனியாக சொகுசு ரயில்களைப் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு அவர்கள் செல்லும் ரயில்களில், பல நாள்களுக்குத் தேவையான உணவு, ஆடை, அணிகலன்கள், அரண்மனை போன்ற அமைப்பு, அரச குடும்பத்தினருக்கான அறைகள் என அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

இப்படி சகல வசதிகளுடன் இந்தியாவின் பாரம்பரிய நகரங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்த "மஹாராஜா எக்ஸ்பிரஸ்' ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.

என்னென்ன வசதிகள்? இந்த ரயிலில் மொத்தம் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். 88 பேர் பயணம் செய்ய முடியும். இதில், 14 விருந்தினர் படுக்கைகள், 20 டீலக்ஸ் அறைகள், 18 ஜூனியர் சூட்டுகள், ஒரு பிரெஸிடன்ஷியல் சூட் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அனைத்துப் பெட்டிகளிலும் தட்பவெப்பநிலை கட்டுப்பாட்டு வசதி, "வை-ஃபை' இணைப்பு, சாட்டிலைட் சேனல்களுடன் கூடிய எல்.இ.டி. டிவி, தொலைபேசி, உணவு விடுதி, பார், விளையாட்டு, பொழுதுபோக்கு அரங்கங்கள் என்பன உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பயண விவரம்: இந்தச் சுற்றுலா ரயில் மூலம் ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா, இந்தியன் ஸ்ப்லென்டர், இந்தியன் பனோரமா, டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா, ஜெம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய 5 பயணத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தச் சுற்றுலா மூலம் இந்தியாவை ஆண்ட அரசர்களின் கோட்டைகள், அரண்மனைகள், உலகப் புராதனச் சின்னங்கள், ராஜஸ்தான் பாலைவனம், ஆன்மிக தலங்கள், மலைகள் ஆகியவற்றை கண்டு ரசிக்க முடியும் என்பதோடு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியப் பெருமைகளையும் உணர்ந்து கொள்ள முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

வருகிற 14-ஆம் தேதி "ஜெம்ஸ் ஆஃப் இந்தியா' என்ற பயணத் திட்டத்தின் கீழ் 4 நாள் சுற்றுப் பயணமாக தில்லி- ஆக்ரா- ரணதம்பூர்- ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

டிசம்பர் 27-ஆம் தேதி "தி இந்தியன் பனோரமா' பயணத் திட்டத்தின் கீழ் 8 நாள் சுற்றுப் பயணமாக தில்லி- ஜெய்ப்பூர்- ரணதம்போர்- ஃபதேபூர் சிக்ரி- ஆக்ரா- குவாலியர்- ஒடிஸா- கஜுராஹோ- வாராணசி- லக்னெü ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

தொடர்ந்து வருகிற 2017-ஆம் ஆண்டு வரை பல்வேறு சுற்றுலாப் பயணத் திட்டங்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசியாவிலேயே மிக அதிகக் கட்டணத்தைக் கொண்ட சுற்றுலா ரயில் இது என்றும் தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



எந்தெந்த ஊர்களுக்கு...



ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா:

மும்பை- அஜந்தா- உதைபூர்- ஜோத்பூர்- பிகானேர்- ஜெய்ப்பூர்-

ரணதம்போர்- ஃபதேபூர் சிக்ரி- ஆக்ரா- டில்லி.

இந்தியன் ஸ்ப்லென்டர்: டில்லி- ஆக்ரா- ரணதம்போர்- ஜெய்ப்பூர்-

பிகானேர்- ஜோத்பூர்- உதைபூர்- பலசினோர்- மும்பை.

இந்தியன் பனோரமா: டில்லி- ஜெய்ப்பூர்- ரணதம்போர்- ஃபதேபூர் சிக்ரி- ஆக்ரா- குவாலியர்- ஒடிஸா- கஜுராஹோ- வாராணசி- லக்னெü- டில்லி.

டிரெஷர்ஸ் ஆஃப் இந்தியா: டில்லி- ஆக்ரா- சவாய் மாதேபூர்-ஜெய்ப்பூர்- டில்லி.

ஜெம்ஸ் ஆஃப் இந்தியா: டில்லி- ஆக்ரா- ரணதம்போர்- ஜெய்ப்பூர்- டில்லி.

தொடர்புக்கு: 91 9717635915, 011-23210321

இமெயில்: maharajas@irctc.com

இணையதளம்: http:www.irctctourism.com



கட்டணம் எவ்வளவு?



சுற்றுலாத் திட்டத்தை தேர்வு செய்வதன் அடிப்படையில் பெரியவர்களுக்கு (நபர் ஒருவருக்கு) குறைந்தபட்சம் ரூ.2.39 லட்சம் முதல் ரூ.14.75 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறியவர்களுக்கு (5 வயது முதல் 12 வயது வரை) ரூ.1.20 லட்சம் முதல் ரூ.7.40 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sunday, December 7, 2014

"என் படங்களுக்கு 'வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்"


"என் படங்களுக்கு 'வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்" என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

"இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது" என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.

விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம் கவனிக்கத் தொடங்கியது.

கம்பெனி கம்பெனியாக, வாலியின் திறமை பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியதன் பயனாக, வாய்ப்புகள் குவியலாயின.

"சாரதா" படத்திற்கு பிறகு டைரக்டராக பெரும் புகழ் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து ஒரு நாள் வாலிக்கு அழைப்பு வந்தது. வாலி அவரை சந்தித்தார்.

"எம்.எஸ்.வி. உங்களைப் பற்றி நிறைய சொன்னார். முதலில் இப்போது ஒரு பாட்டு எழுதுங்கள். மற்றதை பிறகு பார்ப்போம்" என்றார், கோபாலகிருஷ்ணன்.

"ரொம்ப நன்றி சார்!" என்றார் வாலி.

"எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு எழுதின ஏதாவது ஒரு பாட்டை சொல்லுங்கள்" என்று கே.எஸ்.ஜி. கேட்டார்.

"உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதை இருந்தால், கனவு என்றொரு முடிவிருக்கும்" என்ற பாடலை, மெட்டோடு வாலி பாடிக்காட்டினார். இது, "இதயத்தில் நீ" என்ற படத்துக்காக எழுதப்பட்ட பாடல்.

"ஓகே! பாடல் நன்றாக இருக்கிறது. ஒரு பானை சேற்றுக்கு ஒரு அரிசி பதம். நீங்கள் போய்விட்டு, நாளைக்கு வாருங்கள். கார் அனுப்புகிறேன்" என்றார், கோபாலகிருஷ்ணன்.

நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்க, கிளப்ஹவுசுக்குத் திரும்பினார், வாலி.

சொன்னபடி, மறுநாள் வண்டி அனுப்பினார், கோபாலகிருஷ்ணன். எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும், பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.

படத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை விவரித்து, அதற்கான தாலாட்டுப் பாடலை எழுதும்படி வாலியிடம் கோபாலகிருஷ்ணன் சொன்னார்.

"அத்தைமடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா" என்ற பல்லவியை எழுதி, விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை அவர் படித்துப் பார்த்துவிட்டு, கே.எஸ்.ஜி.யிடம் நீட்டினார்.

ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சிவிட்டு, பல்லவியை கே.எஸ்.ஜி. படித்துப் பார்த்தார். மகிழ்ச்சியுடன் வாலி முதுகில் ஒரு தட்டு தட்டினார்.

பாட்டு "ஓகே" ஆயிற்று.

கோபாலகிருஷ்ணனின் முதல் தயாரிப்பான "கற்பகம்" படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் வாலிதான் எழுதினார். அந்தப் படம், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது.

ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ், வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஒருநாள், எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய காரை வாலிக்கு அனுப்பி, சரவணா பிலிம்சுக்கு வரச்சொன்னார்.

வாலி உடனே புறப்பட்டுச் சென்றார். வாலியை வேலுமணிக்கு விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

சரவணா பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தின் முழுக் கதையையும் கதாசிரியர் சக்தி கிருஷ்ணசாமி சொன்னார்.

"வாலி! கதையைக் கேட்டுட்டீங்க! இந்தக் கதைக்கு ஐந்து எழுத்தில் வருவது மாதிரி ஒரு 'டைட்டில் சொல்லுங்க!" என்றார், வேலுமணி.

உடனே "படகோட்டி" என்று சொன்னார், வாலி.

"பிரமாதம்" என்று கூறியபடி, தன் கதர் ஜிப்பாவில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வாலியின் கையில் திணித்தார், வேலுமணி.

"படகோட்டி"க்கு இரண்டு பாடல்கள் பதிவாயின. முன்பு இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராகரிக்கப்பட்ட "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், யாருக்காகக் கொடுத்தான்?" என்ற பாடலும் விஸ்வநாதன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பிரமாதமாக அமைந்தது.

"படகோட்டி" படத்துக்கு வாலி பாட்டு எழுதுகிறார் என்பது, அதுவரை எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. இரண்டு பாடல்கள் பதிவான பிறகு, அவற்றை ராமாவரம் தோட்டத்துக்கு வேலுமணி கொண்டு சென்று, எம்.ஜி.ஆருக்குப் போட்டுக் காட்டினார்.

பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போயின.

அன்று மாலை, பரங்கிமலையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர். பேசினார். "என்னுடைய படங்களுக்கு வாலி என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டுகள் எழுதுவார்" என்று அக்கூட்டத்தில் அறிவித்தார்.

இதுபற்றி, வாலி கூறியிருப்பதாவது:-

"அப்போது எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் நிறைய இடைவெளி ஏற்பட்டிருந்தது. என்னைக் கொண்டு அதை சரி செய்து கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். எண்ணினார். அவர் எண்ணத்திற்கேற்ப என்னுடைய வளர்ச்சியும் அமைந்தது.

'படகோட்டி'யின் பாடல்கள் பெரும்பாலும் பதிவாகிவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்யவேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் நான் கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன்.

வேலுமணி அவர்களுக்கோ, பாட்டு மிகமிக அவசரத்தேவை. உடனே ஒலிப்பதிவு செய்து மறுநாள் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைப்பது கடினம்.

இந்த ஒரு பாட்டை மட்டும், வேறு யாரையாவது வைத்து எழுதிவிடலாம் என்ற நிலை வந்தபோது, விஸ்வநாதன் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

"அருமையான பாடல்களை வாலி அண்ணன் இந்தப் படத்துல எழுதியிருக்காரு. இந்த ஒரு பாட்டுக்காக இன்னொருவரைத் தேடிச் செல்வது தர்ம நியாயமல்ல..." என்று வாதாடினார்.

ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பக்கவாத்தியக்காரர்களோடு என் வீட்டிற்கே வந்துவிட்டார்.

அப்போது நான் தனிக்கட்டை; திருமணமாகவில்லை.

படுக்கையில் படுத்தவாறே, விஸ்வநாதன் அவர்களின் வர்ணமெட்டிற்கேற்ப நான் வார்த்தைகளைச் சொல்ல, உதவி இயக்குனர் ஒருவர் அதை எழுதி முடித்தார்.

"அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்" என்பதே அந்தப்பாடல்."

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை விரல் சூப்புவது ஏன்?

பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தான் தெரியும். ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால் விளைவுகள் விபரீதமாகிவிடும். இதற்கு நல்லதொரு உதாரணம், குழந்தைகளிடம் காணப்படும் விரல் சூப்பும் பழக்கம்.

தாயின் கருப்பையில் இருக்கும்போதே, குழந்தை விரல் சூப்புகிறது. தாயின் கருப்பையில் பழகிய அப்பழக்கத்தை, வெளியுலகுக்கு வந்த பிறகும் தனிமையை உணரும்போது தொடர்கிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு இரண்டு வயதுவரை இப்பழக்கம் இருக்கும். அதன் பிறகு மறைந்துவிடும். சில குழந்தைகளுக்கு மட்டும் ஏழு வயதுவரை இது தொடரும். இதுதான் பல பெற்றோருக்குக் கவலை தரும் பிரச்சினை.

என்ன காரணம்?

விரல் சூப்பும் பழக்கம் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளைவிடப் புட்டிப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணமும் இருக்கிறது. குழந்தை ஆசைப்படும்வரை தாய் தன்னிடம் பால் குடிக்க விட்டுவிடுகிறார். குழந்தையும் தன் ஆசை தீரக் குடித்து, அப்படியே உறங்கிவிடுகிறது. விரல் சூப்ப நினைப்பதில்லை.

அதேவேளையில், குழந்தை புட்டிப்பால் குடிக்கும்போது, புட்டியில் பால் காலியானதும் தாய் அதை அப்புறப்படுத்திவிடுகிறார். இதனால் குழந்தைக்குச் சுவைக்கும் இன்பம் நிறைவடைவதில்லை. இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்ய குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.

குழந்தைக்குத் தூக்கம் வரும்போது தாயின் அரவணைப்பும் தாலாட்டும் கிடைக்காவிட்டால், விரல் சூப்பும் பழக்கம் ஏற்படுகிறது. சரியாகத் தூக்கம் பிடிக்காதபோது, சோர்வாக இருக்கிறபோது, போரடிக்கும்போது… இப்படிப் பல சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதுகாப்புக் கவசமாக நினைத்து, குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.

வளரும் பருவத்தில் தாய், தந்தையின் பாசத்தைக் குழந்தை எதிர்பார்க்கிறது. அதற்குப் பேச்சுத் துணை தேவைப்படுகிறது. மற்ற குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படுகிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்று குழந்தை விரும்புகிறது. இந்த வாய்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாதபோது, குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் உண்டாகிறது.

சில குழந்தைகள் பசி எடுக்கும்போதெல்லாம் விரல் சூப்பும். இன்னும் சில குழந்தைகள் பல் முளைக்கத் தொடங்கும்போது, ஈறுகளில் உண்டாகிற உறுத்தல் காரணமாக விரல் சூப்பத் தொடங்குவார்கள். பல் முளைத்த பிறகு பத்தில் எட்டுக் குழந்தைகள் இந்தப் பழக்கத்தை நிறுத்திவிடுகின்றனர். மீதி இரண்டு குழந்தைகள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடுகின்றனர்.

பயப்படும் குழந்தைகள் கவனம்!

பயம், பதற்றம், ஏமாற்றம், திகில், அதிர்ச்சி, கவலை, கோபம், பிரிவு, தனிமை, இயலாமை, புறக்கணிப்பு போன்ற மனம் சார்ந்த காரணங்களால் குழந்தை சிரமப்படும்போது அவற்றை மறைக்கவும், மாற்றவும், மறக்கவும் விரல் சூப்புகிறது.

பெற்றோரின் கவனம் இல்லாத குழந்தைக்கும் அதனால் பயப்படும் குழந்தைக்கும் விரல் சூப்பும் பழக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

விரல் சூப்பும் பழக்கத்தால் உளவியல் ரீதியாகத் தனக்குப் பிடித்தமான சூழலைக் குழந்தை உணருகிறது என்பதால், ஒரு வயதுவரை இந்தப் பழக்கத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு மேலும் இந்தப் பழக்கம் தொடருமானால், உடனே கவனிக்க வேண்டும்.

என்னென்ன பாதிப்பு?

எந்த நேரமும் குழந்தை விரல் சூப்பிக்கொண்டிருந்தால், நோய்க்கிருமிகள் உடலுக்குள் எளிதாக நுழைந்துவிடும். இதன் விளைவாக வாய்ப்புண், வாய்நாற்றம், குடல் புழுத்தொல்லை போன்றவை ஏற்படலாம். நான்கு வயதுவரை இந்தப் பழக்கம் இருந்தால், குழந்தையின் தாடை பாதிக்கப்படும். பற்களிலும் ஈறுகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தெற்றுப்பற்கள் முளைக்க இந்தப் பழக்கம் ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக, தாடைப் பகுதியில் காய்ப்பு காய்த்ததுபோல் ஆகி, நிரந்தரப் பற்கள் முளைத்து வெளிவருவது தடைபடும். அப்படியே பற்கள் முளைத்தாலும், முன்னால் இருக்கும் நான்கு பற்கள் தூக்கினாற்போல் ஆகிவிடும். முகத்தின் தோற்றமே மாறிவிடும்.

பள்ளியில் சக மாணவர்கள் கிண்டல் செய்தால், குழந்தை மனதளவில் மேலும் பாதிக்கப்பட்டு, தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம்.

இந்தப் பழக்கம் உள்ள குழந்தைகளுக்குப் பேச்சு தெளிவாக இருக்காது. இவர்களுடைய கவனம் விரல் சூப்புவதிலேயே இருப்பதால் சிந்தித்துச் செயலாற்றும் திறன் குறைவாகவே இருக்கும். விளையாட்டு, நட்பு, பாசம், சுயமுயற்சி போன்ற அனுபவங்கள் இவர்களுக்குக் குறைவாக இருப்பதால், மன வளர்ச்சியும் வயதுக்கு ஏற்றபடி இருக்காது.

விடுவிக்க என்ன செய்யலாம்?

விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவதற்குக் குழந்தையை அடிப்பதோ, மிரட்டுவதோ தவறு. இது உளவியல் ரீதியாகப் பாதிப்பை அதிகப்படுத்துமே தவிர குறைக்க உதவாது. மேலும், குழந்தைகள் விரல் சூப்பும்போது விரல்களை வலுக்கட்டாயமாக இழுப்பது, உங்கள் மீது வெறுப்பையே ஏற்படுத்தும். குழந்தையிடம் வெறுப்பாகப் பேசுவதைக் கைவிட வேண்டும். அதன் சின்னச் சின்ன ஆசைகளைப் புறக்கணிக்கக் கூடாது. மாறாக, அன்பான அணுகுமுறையால்தான் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியும்.

குழந்தையின் கவனத்தைத் திசைதிருப்புவதுதான் இதில் முக்கியம். குழந்தை எதன் மீது ஆசைப்படுகிறதோ, ஆர்வமாக இருக்கிறதோ அதைக் கொடுத்து, இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியும். குழந்தையைப் புரிந்துகொண்டு, அதன் ஏக்கத்தைப் போக்குவதற்கு ஏற்ப மகிழ்ச்சியான சூழலை உருவாக்கித்தர வேண்டும். முக்கியமாகச் சிறு குழந்தைகளை அவர்கள் போக்கில் விளையாட அனுமதிக்க வேண்டும். கண்களுக்கும் கைகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தும்படியான விளையாட்டுகளை ஊக்கப்படுத்தலாம். கைவிரல்கள் எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கும்போது, விரல் சூப்பத் தோன்றாது.

வழக்கமாகத் தூங்கப் போகும் நேரத்தில்தான் குழந்தைக்கு விரல் சூப்பத் தோன்றும். அப்போது அதன் கையில் புத்தகத்தைக் கொடுத்துக் கதை சொல்வது, அணைத்தபடி தூங்கவைப்பது, கைகளால் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்க வைப்பது… இப்படி அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தினால், குழந்தை மெல்ல மெல்ல இந்தப் பழக்கத்தை மறந்துவிடும்.

இரண்டு வயதுவரை குழந்தையைத் தனிமையில் விடுவதைத் தவிருங்கள். அந்தக் காலகட்டத்தில் குழந்தையுடன் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை அதிகப்படுத்துங்கள். அதிகம் பேசி, விளையாட்டுக் காட்டி உற்சாகப்படுத்துங்கள். நிறைய கதை சொல்லுங்கள். சில நாட்கள் குழந்தை விரல் சூப்பாமல் இருந்ததைப் பாராட்டிப் பரிசளித்து ஊக்கப்படுத்துங்கள். விரல் சூப்புவதை நிறுத்த ‘டெனடோனியம் பென்சோயேட்’ (Denatonium benzoate) எனும் திரவ மருந்து இருக்கிறது. இதைக் காலை, மாலை என இரு வேளைக்கு விரலில் தடவலாம். ஐந்து வயதுக்கு மேலும் குழந்தைக்கு இப்பழக்கம் தொடருமானால், இதை நிறுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட கருவியைக் கையாளுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

DENTAL COUNCIL OF INDIA PUBLIC NOTICE




Source: https://www.facebook.com/dciindia.org

INFORMATION SOUGHT UNDER RTI ACT



SOURCE   :https://www.facebook.com/dciindia.org

UGC RAISES GRANTS FOR Ph.D SCHOLARS

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...