Friday, December 19, 2014

மெளனத்தின் வலிமை

ஒரு ஊரில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். நேரத்தைச் செலவழிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் அவர். இந்த வேலையை இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும் என ஒரு கணக்கும் வைத்திருப்பார். அதனால் எப்போதும் கைக்கடிகாரம் அணிந்திருப்பார்.

ஒருநாள் அதை அணிந்தபடி தன் வயலுக்கு வந்து வேலையாட்களை மேற்பார்வை செய்வதில் மும்மரமாக இருந்தார். அப்போது திடீரெனக் கையில் ஏதோ குறைவது போலப் பட்டது. பார்த்தால் கையில் இருந்த கடிகாரத்தைக் காணவில்லை. எங்கே கழட்டி வைத்தோம் என அவருக்கு நினைவில்லை. கொஞ்ச நாளாகக் கடிகாரம் தொய்வாக இருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் எங்காவது நழுவி விழுந்திருக்குமா எனச் சந்தேகித்தார்.

பெரியவருக்குக் கைக்கடிகாரம் இல்லாமல் வேலையே ஓடவில்லை. அவருக்கு அது மூச்சுக் காற்று மாதிரி. வேலை ஆட்களைக் கூப்பிட்டுத் தேடச் சொன்னார். அவர்களும் வயல் வெளி, பெரியவர் வந்த வரப்பு, வீடு வரையும் தேடினார்கள். கடிகாரம் கிடைக்கவில்லை. வேலை ஆட்கள் சோர்ந்துவிட்டார்கள். மதியமும் வந்துவிட்டது. வேலை ஆட்கள் உணவு அருந்தச் சென்றுவிட்டார்கள்.

எல்லோரும் கிளம்பிச் சென்ற பிறகு ஒரே ஒருவன் மட்டும் வயலுக்கு அருகில் கண்ணை மூடி தியானம் செய்தான். பெரியவர் அவனை விநோதமாகப் பார்த்தார்

தியானத்தில் இருந்தவர் ஐந்து நிமிடங்களில் கைக் கடிகாரத்துடன் வந்தார். பெரியவர் ஆச்சரியமும் சந்தோஷமும் மேலிட அதை வாங்கிக்கொண்டு, “அவர்கள் அத்தனை பேர் சேர்ந்து தேடும்போது கிடைக்காத கடிகாரம் எப்படி உனக்குக் கிடைத்தது?” எனக் கேட்டார். அதற்கு அவன், எல்லோரும் சேர்ந்து தேடும்போது ஒரே கூச்சல் குழப்பமுமாக இருந்தது. மேலும் யாருக்கும் சிரத்தையும் இருந்திருக்காது. அவர்கள் சென்ற பிறகு சத்தம் இல்லை. கண்ணை மூடித் தியானித்தபோது அந்தக் கைக் கடிகாரத்தின் சத்தத்தைக்கூட உணர முடிந்தது. அந்த வைக்கோல் போருக்குள்தான் இருந்தது என்றான்.

40% COLLEGE STUDENTS CONSUME ALCOHOL

எதற்கும் எல்லை உண்டு

Dinamani

கடிதப் போக்குவரத்து முற்றிலும் குறைந்து, கைப்பேசிக் குறுந்தகவல் முறையும் பின்தங்கிவிட்டதாகத் தோன்றும் நிலையில், இப்போது பெரும்பான்மையானோரை இணைக்கும் பாலமாக இருப்பவை முகநூல், சுட்டுரை, வாட்ஸ்அப் - ஆகிய மூன்றும்தான்.

முகம் பாராமலேயே உயிருக்குயிராய்ப் பழகிய கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையாரின் "சங்க கால நட்பு', இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை உலகம் முழுவதும் பரவலாக இருந்த "பேனா நட்பு' ஆகியவற்றின் புதிய பரிமாணம்தான் இவை.

வங்கியில் கணக்கு இருக்கிறதோ இல்லையோ, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் கணக்கு இல்லையென்றால், நாம் நவீன அறிவியல் உலகில் பல படிகள் பின்னால் இருப்பதாகத் தோன்றிவிடும்.

உலக மக்கள்தொகையில் 126 கோடிப் பேர் முகநூல் பயன்படுத்துகின்றனர். அதாவது, 13 பேருக்கு ஒருவர் முகநூல் இணைப்பில் உள்ளார்.

இந்தியாவில் 9 கோடிப் பேர் முகநூலைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள்; 27 சதவீதம் பேர் பெண்கள். முகநூல் பயன்படுத்துவோரில் 24 சதவீதம் பேர் 14 முதல் 25 வயதுக்கு உள்பட்டோர்.

முன்னணி சமூக வலை தளங்களில் ஒன்றான சுட்டுரையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதக் காலத்தில் 25 கோடியாக அதிகரித்துள்ளது.

முகநூலில் ஒரு நிமிடத்தில் 24 கோடியே 60 லட்சம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றனவாம்.

முகநூலை தங்களது புகைப்படங்களின் தொகுப்பாகவும், அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை தாங்கள் செய்யும் பணிகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடவுமே பலர் பயன்படுத்துகின்றனர்.

அதேநேரம், பொது அறிவுத் தகவல்கள், விபத்து அல்லது நோயால் பாதிக்கப்பட்டோருக்கான ரத்தத் தேவை, வேலைவாய்ப்புச் செய்திகள் போன்ற பயனுள்ள செய்திகளும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

சில நாள்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த அவர் தனது 10-ஆவது வயதிலேயே சொந்த ஊரை விட்டு குடும்பத்துடன் கடலூர் மாவட்டத்துக்கு செல்ல நேரிட்டது. விவரம் புரியாத அந்த வயதிலிருந்த நண்பர்கள் குறித்த ஏக்கம் அவரை வாட்டி வதைத்தது.

இப்போதுதான், அவருடைய 39-ஆவது வயதில் தனது பால்யகால நண்பர்கள் பற்றியத் தகவல் தெரிந்ததாம். விரைவில் நண்பர்களைச் சந்திக்கவுள்ளதாகவும், 29 ஆண்டுகால தேடலுக்கு பலன் கிடைத்ததாகவும் தெரிவித்தார். இதற்குப் பேருதவி புரிந்ததாக அவர் குறிப்பிட்டது "முகநூல்'!

இவரைப்போல விட்டுப்போன நட்புகளையோ, உறவுகளையோ முகநூல் மூலம் சிலர் தேடிக் கண்டடைகின்றனர். முகநூல் மூலம் அறிமுகமாகி, நண்பர்கள் குழு அமைத்து, மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூக செயல்களிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், பகிர்வுத் திறனை வளர்க்கும் அளவுக்கு முகநூல், படைப்புத் திறனை வளர்க்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், எங்கிருந்தோ, யாரோ அனுப்புகின்ற ஏதோ ஒன்றை "பார்வர்டு' அல்லது "ஷேர்' அல்லது "லைக்' செய்யும் பணியே பெரும்பாலும் நடக்கிறது.

சிலர் பிறரது கருத்துகளைச் "சுட்டு' முகநூலில் உரைப்பதால், முகநூலே "சுட்டுரை'யாகவும் (டுவிட்டராகவும்) மாறிவிடுகிறது, சில நேரங்களில்.

சிலர் நாள் முழுவதும் முகநூலே கதி எனக் கிடந்து, உலகின் பல மூலைகளில் இருக்கும் முகம் தெரியாத பலரை நண்பர்கள் பட்டியலில் வைத்து அழகு பார்க்கும் நட்புப் பிரியர்களாக உள்ளனர்.

ஆனால், அத்தகையோர் அண்டை வீட்டுக்காரர்களுடனோ, அலுவலகத்தில் சக ஊழியர்களுடனோ, குடும்ப உறுப்பினர்களுடனோ அன்பை பரிமாறிக்கொள்கின்றனரா என்பது கேள்விக்குறியே.

கண்ணால் கண்டதை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதைப்போல, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் "கண்டதை'ப் பகிர்ந்துகொள்வதும் முகநூலில் அதிகமுள்ளது.

அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பது, பெண்களின் பெயர்களில் போலிக் கணக்குத் தொடங்கி மற்றவர்களை ஏமாற்றுவது, அரசியல்வாதிகள், நடிகர் - நடிகைகள் என பிரபலமானவர்களை நியாயமற்ற முறையில் விமர்சிப்பது, ஜாதி - மத மோதல்களைத் தூண்டும்விதத்தில் கருத்துத் தெரிவிப்பது, தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு திரட்டுதல் போன்ற போக்கும் அதிகரித்து வருகிறது.

எல்லை தாண்டாதவரை எதுவும் அபாயமில்லை என்ற கருத்து இந்தச் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்போருக்கும் பொருந்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

தற்கொலை ஒரு உணர்வுதான், குற்றமல்ல

தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம், பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையையொட்டி, ஒரு வழக்கு மொழி உண்டு. ‘‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’’ என்பதுதான் அது. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டது. அந்த வகையில், இந்தியாவில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்கள் இருக்கின்றன. இதில் பல சட்டங்கள் பயன்படுத்தப்படாமல், பயன்படுத்துவதற்கு தேவையில்லாமல், துருப்பிடித்துக்கிடக்கின்றன. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த சட்டங்கள் தேவையில்லாமல் இப்போதும் இருக்கின்றன. இப்படி தேவையில்லாத சட்டங்கள் பட்டியலில் உள்ள சில சட்டங்கள் வேடிக்கையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, 1861–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட போலீஸ் சட்டத்தின்படி, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் போலீஸ் அதிகாரிகள் தங்கள் தொப்பிகளை கழட்டிவிடவேண்டும். இப்போது இந்தியாவில் மன்னர் யாரும் இல்லாத நிலையில் இப்படி ஒரு சட்டம் தேவையில்லை.

இதுபோல, தேவையில்லாத 90 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்ய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ள மற்றொரு சட்டம், 1860–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் 309–வது பிரிவாகும். இந்த பிரிவு தற்கொலை முயற்சி தொடர்பான பிரிவாகும். இதன்படி, யாராவது தற்கொலை செய்ய முயற்சித்தால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, ஒரு ஆண்டுகாலம் சாதாரண சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டையுமே விதிக்க வழிஇருக்கிறது. இந்த சட்டத்தை ரத்துசெய்ய இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களும், 4 யூனியன் பிரதேசங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்கொலை முயற்சி என்பது பண்டைய தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. சீத்தலை சாத்தனார் எழுதிய, ‘மணிமேகலை’ காப்பியத்தில் ஆதிரை என்ற பெண், ‘‘நெருப்பு மூட்டி எழுது தீயும் கொல்லா, தீவினை யாட்டியேன்’’ என்று பாடியிருப்பார். அதாவது, தற்கொலை செய்ய தீயில் விழுந்தும் உயிர்பிழைத்த சம்பவம் தொடர்பான வரிகள் இது. தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கும் சட்டம், இங்கிலாந்து நாட்டில் விக்டோரியா ராணி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்ததால், இந்த சட்டம் இந்தியாவிலும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்கொலை முயற்சி என்பது ஒரு கிரிமினல் குற்றமல்ல. இதனால் வேறு யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஒருவன் திருடினாலோ, கொலை செய்தாலோ, தாக்கினாலோ அந்த பாதிப்பு அவனுக்கு கிடையாது, அவனால் வேறு ஒருவர்தான் பாதிக்கப்படுவார். எனவே, அந்த குற்றங்களைப்போல தற்கொலை முயற்சியைக் கருதக்கூடாது. மேலும் இது ஒரு உணர்வு.

வாழ்க்கையில் ஏதாவது சோதனைகள் ஏற்படும்போது, அதை தாங்கிக்கொள்ள முடியாத பலவீனமான மனதுடையவர்கள்தான், உயிர்வாழ பிடிக்காமல், அதை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இத்தகையவர்களுக்கு தேவை அவர்கள் மீது இரக்கமும், கருணையும், மனோரீதியான ஆறுதலும் தான். எப்படி வயிற்றுவலி வந்தால் டாக்டர்களிடம் போகவேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறதோ, அதேபோல தற்கொலை உணர்வுவந்தால் அதை தீர்ப்பதற்கு மனோதத்துவ சிகிச்சையை பெறவேண்டும் என்ற உணர்வை வளர்க்கவேண்டும். தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்துவிடுபவர்களை ஆறுதல் கூறி, அந்த உணர்வில் இருந்து மீட்க தைரியம் கொடுப்பதற்குபதிலாக, தண்டிப்பதன்மூலம் அந்த உணர்வை மேலும் வளர்ப்பது போலாகிவிடும். தற்கொலையை கிரிமினல் குற்றமாக்குவதை முதலில் பிரான்சு ரத்து செய்தது. தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்க நாடுகள் ரத்து செய்துவிட்டன. இப்போது மத்திய அரசாங்கம் இந்த சட்டத்தை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால், இந்த தற்கொலை முயற்சியை கிரிமினல் குற்றமாக கருதும் சட்டத்தை ரத்துசெய்வதோடு, அரசின் கடமை முடிந்துவிடவில்லை. இந்த உணர்வு மக்களுக்கு வராத அளவு, அப்படி வரும்பட்சத்தில், அதை போக்குவதற்கான வழிகளையும் ஆராய வேண்டும்.

Thursday, December 18, 2014

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி சொல்வோம் !



நாடகக்கலையின் தொடர்ச்சி தான் சினிமா .எல்லாவிதமான நாடகங்களிலும் நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள் .சினிமாவிலும் அப்படியே .பிரச்சனைகளுக்கு நடுவே வாழும் நம்மைச் சிரிக்க வைப்பது கடினம் . நகைச்சுவை நடிகர்கள் இதைச் சாத்தியப்படுத்தினார்கள் .தமிழ்த் திரையுலகில் பவனி வந்த நகைச்சுவை நடிகர்கள் ஏராளம் . T.S.பாலையா ,M.R.ராதா ,N.S.கிருஷ்ணன் ,K.A.தங்கவேலு ,காளி .N.ரத்னம் ,சந்திரபாபு ,V.K.ராமசாமி , நடிகர் கருணாநிதி,நாகேஷ் ,சுருளிராஜன் ,சோ ,என்னத்த கண்ணையா , தேங்காய் சீனிவாசன் ,கவுண்டமணி ,செந்தில் ,கல்லாபெட்டி சிங்காரம் ,S .S.சந்திரன் ,ஜனகராஜ் ,உசிலைமணி ,ஓமக்குச்சி நரசிம்மன் ,லூசு மோகன் , வெண்ணிறாடை மூர்த்தி , குமரிமுத்து , குண்டு கல்யாணம் , மௌலி ,விசு என்று பெரிய பட்டியல் உள்ளது .

T.S.பாலையாவும் , M.R.ராதாவும் அசாத்தியமான நடிகர்கள் .T.S.பாலையா,எந்தவிதமான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அலட்டிக்காமல் நடிக்கக்கூடியவர் . M.R.ராதா , தனது கலகக் குரல் மூலம் கதாநாயகன் , நகைச்சுவை ,வில்லத்தனம் என்று பகுத்தறிவு கருத்துக்கள் பரப்பியவர் .
காளி .N.ரத்னம் , M.G.R.ருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் . " சபாபதி " என்ற படத்தைப் பாருங்கள் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் .

N.S.கிருஷ்ணன் , சிரிப்புடன் சிந்தனைகளைக் கலந்தவர் . சிந்தனைகளை வழங்குவதிலும் ,செல்வத்தை வழங்குவதிலும் கடைசி வரை வள்ளலாக வாழ்ந்தவர் . சந்திரபாபு , சிறந்த பாடும் முறையாலும் ,நடனத்தாலும் வசீகரித்தவர் . அவர் பாடிய பாடல்கள் இன்று வரை பெருமளவில் ரசிக்கப்படுகின்றன . K.A.தங்கவேலு , தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் சிரிப்பாக மாற்றும் கலை இவருக்கு மட்டுமே வாய்த்தது . நடிகர் கருணாநிதி , வித்தியாசமான குரலாலும் ,உடல் மொழியாலும் சிரிக்க வைத்தவர் .

நாகேஷ் ,சிறந்த நடிகர் ,வித்தியாசமான உடல் மொழியால் நகைச்சுவையைத் தாண்டியும் நடித்தவர் .V.K.ராமசாமி , குணச்சித்திர நடிகரும் சிரிக்க வைக்கலாம் என்பதை உணர்த்தியவர் . தனது சிரிப்பால் நம்மைச் சிரிக்கவைத்தவர் .இவரை நினைக்கும் போதெல்லாம் இவரது சிரிப்பொலி ( க்கா கா கா க ) கேட்கிறது . அதுவும் V.K.ராமசாமியும் நாகேஷும் சேர்ந்துவிட்டால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது .சுருளிராஜன் , சுருட்டைமுடியுடன் வேறுபட்ட குரலாலும் ,உடல் மொழியாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் .

சோ , அறிவுப்பூர்வ அரசியல் வசனங்களாலும் , அலட்டிக்காத நடிப்பாலும் சிரிப்பை வரவைத்தார் .என்னத்த கண்ணையா , சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் பல காலமாக நடித்து வருபவர் ( வரு...ம் ஆனா வரா...து ) .தேங்காய் சீனிவாசன் , இழுத்து இழுத்து பேசியே நகைச்சுவையைத் தெளித்தவர் . கல்லாபெட்டி சிங்காரம் , எளிய தோற்றத்தாலும் ,குரலாலும் ,உடல் அசைவுகளாலும் சிரிப்பைக் கொடுத்தவர் ( டார்லிங் டார்லிங் டார்லிங் ).

கவுண்டமணி , செந்திலுடன் இணைந்து நீண்ட காலம் நகைச்சுவை உலகை ஆட்சி செய்தார் . நையாண்டி வசனங்களால் கூட நடிக்கும் ஏறக்குறைய அனைத்து நடிகர்களையும் கிண்டல் செய்தவர் . குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதித்தவர் . விளம்பர வெளிச்சம் இல்லாமல் இன்றுவரை வாழ்பவர் .
செந்தில் , மிக எளிமையான ,கோமாளித்தனமான தோற்றத்தாலும் ,வித்தியாசமான கேள்விகளாலும் (அண்ணே அண்ணே )சிரிக்க வைப்பவர் . கவுண்டமணியுடன் இணைந்தும் தனித்தும் கலக்கியவர் .

ஜனகராஜ் , சிரிப்பின் மூலம் சிரிப்பை வரவழைத்தவர் . லூசு மோகன் , பேச்சின் நடுவே பிரேக் போட்டுக்கொண்டே சென்னைத் தமிழை நகைச்சுவையாக்கியவர் . வெண்ணிறாடை மூர்த்தி ,வாயால் வண்டி ஓட்டிக்கொண்டே ,இரட்டை அர்த்த வசனங்களால் புகழ் பெற்றவர் . மௌலி மற்றும் விசு ,வசனங்களால் பெயர் பெற்றார்கள் . S .S.சந்திரன் , அவ்வப்போது அரசியல் வசனங்கள் பேசியவர் . உசிலைமணி( " நரசூஸ் காபி பேஷ் பேஷ் நன்னா இருக்கு " இன்னும் காதில் கேட்கிறது ),ஓமக்குச்சி நரசிம்மன் , குமரிமுத்து மற்றும் குண்டு கல்யாணம் , தங்களது வேறுபட்ட உடல் அமைப்பால் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்கள் .

ஒட்டுமொத்தத்தில் நல்ல குரல் வளம் உடையவர்களும் , தங்கள் உடல் மொழியைச் சிறப்பாகப் பயன்படுத்தியவர்களால் தான் நம்மைச் சிரிக்கவைக்க முடிந்தது .வசனத்தை உச்சரிக்கும் விதத்திலும் ,வேறுபட்ட உடல் மொழியாலும் சிரிப்பைக் கொண்டுவருவதுதான் நகைச்சுவையாளர்களின் சாமர்த்தியம் .

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி சொல்வோம் !

பதில் சொல்லத் தெரியவில்லை

ஒட்டல்களில் சர்வருக்கு இனாம் வழங்குவது இப்போதெல்லாம் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. அதிலும் இப்போது பணத்துக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதால், ஐந்து ரூபாய்க்குக் குறைத்து "டிப்ஸ்" கொடுப்பது மிகவும் கௌரவக் குறைச்சலாகக் கருதப்படுகிறது.

பில் ரசீதை அவர்கள் ஒரு லெதர் ஃபோல்டரில் வைத்துத் தரும்போது, அதில் 2 ரூபாய் நாணயத்தை வைப்பதென்பது, சாப்பிடுபவருக்கே அவமானத்தைத் தரும்.

பல ஓட்டல்களில் என்ன சாப்பிட்டாலும் மொத்தத் தொகை, 5, 0 என்ற எண்களில் முடிவதாக இருக்கிறது. நீங்கள் 5 ரூபாய் நாணயத்தை வைக்கக்கூடாது என்பதற்காகவே இரண்டு 2 ரூபாய், ஒரு 1 ரூபாய் நாணயத்தையும் பத்து ரூபாய் தாள்களையும் வைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதன் பொருள், "மரியாதையாக பத்து ரூபாய் டிப்ஸ் வை' என்பதுதான்.

இனி, அந்த ஊர் பக்கமே தலை வைப்பதில்லை என்ற நிலைமை இருந்தால், எந்த கௌரவத்தையும் பார்க்காமல், பில்லை மட்டும் எடுத்துக்கொண்டு கவுண்டருக்குப் போகலாம்.

அப்படியே போனாலும், இந்த டிப்ஸூக்கு "கூட்டாளி'யான கேஷியர் உங்களை அவமானப்படுத்தாமல் பணத்தை வாங்கி கல்லாவில் போட மாட்டார்.

நீங்கள் நூறு ரூபாய் பில்லுக்கு 100 ரூபாய் நோட்டையே தந்தாலும், வேற நோட்டு கேட்கிற அளவுக்கு உங்கள் மீது கடுப்பை உமிழ்வார். வேண்டுமென்றே நிற்க வைப்பார். மிகவும் கந்தலான நோட்டுகளை பொறுக்கி எடுத்து, பிச்சை போடுவதைப்போல மீதித்தொகையை உங்களிடம் கொடுப்பார். உங்களைப் பழி வாங்க இதுதான் அவர்கள் கையாளும் வழி.

டிப்ஸ் என்பது ஒருவரின் சேவையை மெச்சிக் கொடுக்கப்படும் பாராட்டுத்தொகை. ஆனால், இப்போது பார்சலுக்கே டிப்ஸ் கேட்கிறார்கள். பார்சல் சொன்னால் "உட்காருங்கள்' என்று நாற்காலியைக் காட்டுகிறார்கள்.

ஒருவர் பில்லை லெதர் ஃபோல்டரில் வைத்துக் கொடுக்கிறார். அதாவது, நாம் டிப்ஸ் வைத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். இது எந்த வகையில் நியாயம்?

இதற்கு மறுப்புத் தெரிவித்து, நாமே கவுண்டரில் பில் செலுத்தினால், பார்சலில் சட்னி இருக்காது அல்லது குறைவாக இருக்கும். சாம்பார் இருக்காது அல்லது சாம்பார் பாக்கெட் லூசாக கட்டப்பட்டிருக்கும். நீங்கள் வீட்டுக்குப்போவதற்குள்ளாக சாம்பார் கொட்டி களேபரமாகியிருக்கும்.

இதெல்லாம் ஒழிகிறது. சர்வர்களில் பலரும் இன்முகத்துடன் சேவை செய்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

நண்பருடன் ஓட்டலுக்குப் போயிருந்தேன். ரூ.145 பில் வந்தது. நான் லெதர் ஃபோல்டரில் ரூ.200 வைத்தேன். எனக்கு மீதித்தொகையாக 5 பத்து ரூபாய் நோட்டுகள், இரண்டு ரூபாய் நாணயம் இரண்டு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைக்கப்பட்டது. வேறுவழியின்றி ரூ.10}யை டிப்ஸாக வைத்துவிட்டு எழுந்தேன். நண்பர் அந்த பத்து ரூபாயை எடுத்து என் பாக்கெட்டில் வைத்துவிட்டு, "வா போலாம்" என்றார்.

"அது டிப்ஸ், நான் சேஞ்ச் எடுத்துக்கிட்டேன்' என்று அவருக்கு விளக்கினேன்.

அவர் கொஞ்சம் சத்தமாகவே பேசினார்: "சட்னி வேணுமா, சாம்பார் வேணுமான்னு ஆத்தா மாதிரி கேட்டுக் கேட்டு பரிமாறணும். பொண்டாட்டி மாதிரியே என் முன்னாடி வெச்சிட்டு உள்ளே போய், நான் கையக் கழுவினதும் எட்டிப் பாக்கறதுன்னா.... என்ன ம...வுக்கு நான் ஓட்டலுக்கு வர்றது' என்றார்.

அவர் சொல்வதில் நியாயம் இருந்தது (அதை சொல்லும் தைரியமும் அவருக்கு இருந்தது).

இன்னொரு நண்பர் இந்த விவகாரத்தில் ரொம்ப தாராளமாக இருப்பவர் (அவருக்கு சம்பளத்துடன் கிம்பளமும் கிடைப்பதால் அவர் எவ்வளவு தாராளமாகவும் இருக்கலாம்). அவர் பத்து ரூபாய் டிப்ஸ் கொடுத்தால் போதும் என்றாலும், ரூ.20 டிப்ஸ் கொடுப்பார். சர்வர் ஜொள்ளு ஒழுக தேங்க்ஸ் என்று அவரை வாசல் வரை வந்து வழியனுப்புவார்.

அவர்தான் சொன்னார்: "நம்ம ஊர்ல டிப்ஸ் கொடுத்தா தேங்க்ஸ் சொல்றாங்க. ஆனா ஃபாரின்ல, i appreciate என்பார்கள்'. சொல்ல முடியாது. அந்த நடைமுறை நம்ம ஊரிலும் வந்துவிடும்.

இந்த நண்பர் இன்னொன்றும் செய்வார். வாசலில் வண்டியை எடுக்கப்போகும்போது, காக்கி உடையில் நின்று வணக்கம்போடுகிற, வாகனங்களை "அங்கே நிறுத்துங்க', "இங்க நிறுத்துங்க' என்று விரட்டுகிற காவலாளிக்கும் டிப்ஸ் கொடுப்பார்.

அதற்கும் அவர் விளக்கம் சொன்னார்: "நீதான் எல்லா புஸ்தகமும் படிப்பியே... பாரடைஸ் லாஸ்ட் படிச்சிருக்கிறியா? அதுல மில்டன் சொல்றான்:They also serve, Those who stand and wait.

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

வாழ்த்து அட்டைகளும் குறுஞ்செய்திகளும்!



பரபரப்புகள் ஏதுமற்ற நம் பால்யத்தில் பண்டிகைகள் தொடங்கிவிட்டாலே புத்தாடை, பலகாரங்களைப் போலவே வாழ்த்து அட்டைகளும் விற்றுத் தீர்க்கும். ஆடை வாங்கக்கூட அத்தனை யோசிக்க மாட்டார்கள். ஆனால் மனம் விரும்பிய வடிவத்தில் வாழ்த்து அட்டை கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் சுணங்கித்தான் போவார்கள்.

தீபாவளியைப் போலவே பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளும் சக்கைப்போடு போடும். சுருள்முடி நெற்றியில் விழ, பெருமிதமாகச் சிரிக்கும் நடிகர் திலகம், கையில் சாட்டையுடன் பாட்டுப் பாடும் மக்கள் திலகம் தொடங்கி, ரஜினிகாந்த், கமலஹாசன் உருவப் படங்கள் அச்சிட்ட வாழ்த்து அட்டைகள் எல்லாம் கடைக்கு வந்த அன்றே காணாமல் போகும் மாயமும் நடந்திருக்கிறது.

இரு புறமும் செங்கரும்புகள் நிற்க, நடுவே பொங்கல் பானையுடன் மாடுகள் இருக்கும் வாழ்த்து அட்டையே பொங்கல் திருநாளின் மகத்துவத்தையும் மகிழ்ச்சியையும் சொல்லிவிடும். புத்தாண்டு வாழ்த்து அட்டைகளில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களையும் குழந்தைகளையும் பார்க்கலாம்.

இப்படித் தேடித் தேடி அட்டைகள் வாங்கி, பின்பக்கம் தங்கள் கைப்பட நாலு வார்த்தை எழுதி, அடியில் வீட்டில் இருக்கிறவர்களின் பெயர்களை எல்லாம் வரிசையாகப் பட்டியலிட்டு, மறக்காமல் ஸ்டாம்ப் ஒட்டி, தபால்பெட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது மனம் முழுக்கப் பரவுகிற மகிழ்ச்சி இருக்கிறதே அதை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. அதுவும் இளவட்டங்கள் தங்கள் முறைப்பெண் இருக்கும் வீட்டுக்கு வாழ்த்துச் செய்தியோடு, காதல் செய்தியையும் இலைமறை காய்மறையாக அனுப்புகிற வைபவமும் அரங்கேறும். பண்டிகைக்கு ஒரு வாரம் இருக்கும்போதே தபால்காரரின் சைக்கிள் மணி நம் வீட்டு வாசலில் ஒலிக்கிறதா, யாராவது வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கிறார்களா என்று காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. விஞ்ஞான வளர்ச்சி பெருகப் பெருக, வாழ்த்து அட்டைகள் அனுப்புவது குறைந்துவிட்டது.

'டேய் மாமா வீட்டுக்கும் பெரியம்மா வீட்டுக்கும் கார்டு போடணும்டா' என்று சொல்கிற பெரியவர்களும் அருகிவருகிறார்கள். வீட்டுக்கு வீடு தொலைபேசி வந்த பிறகு தொலைபேசியில் சம்பிரதாயத்துக்கு வாழ்த்து சொல்வதோடு நின்றுவிட்டோம். அதுவும் ஆளுக்கு இரண்டு செல்போன் என்ற நிலை வந்ததும், 'ஹாப்பி திவாலி'என்று குழுச் செய்தி அனுப்பிவிட்டு வேறு வேலை பார்க்கக் கிளம்பிவிடுகிறோம்.

பண்டிகை தினத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பினால் அதிகமாகப் பணம் செலவாகும் என்று நான்கு நாட்கள் முன்னதாகவே குறுஞ்செய்தி அனுப்புகிற கனவான்களும் சீமாட்டிகளும் இருக்கிறார்கள். அனுப்புகிறவருக்கும் மகிழ்ச்சி இல்லை, வாழ்த்துச் செய்தியைப் படிக்கிறவருக்கும் புன்னகை இல்லை. வாழ்வின் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களையும் ஆனந்தங்களையும்கூடத் தொலைத்துவிட்டோம் என்பதே புரியாமல், வாழ்த்துகளைச் சொல்லித் திரிகிறோம். இரண்டு இயந்திரங்களுக்கு இடையே பரிமாறப்படுகிற தகவல்கள்கூட மனித மனங்களுக்கு நடுவே நிகழ்வதில்லை.

தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையைப் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு வந்து, யாரெல்லாம் அனுப்பியிருக்கிறார்கள், யார் பெயரையெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பரபரப்புடன் பார்க்கிற சுகத்தை இந்தத் தலைமுறை அனுபவித்திருக்கிறதா? பிறந்த வீட்டில் இருந்து வந்த அட்டையைப் படிக்க முடியாமல் மகிழ்ச்சியில் கண்கள் பளபளக்க எத்தனை பெண்கள் நின்றிருப்பார்கள்?

விடுமுறை விண்ணப்பம் தவிர வேறு எதற்கும் பேனா மூடியைத் திறக்காத இந்தத் தலைமுறை எதை மகிழ்ச்சி எனக் கொண்டாடுகிறது? அடித்துப் பிடித்து சொகுசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்துப் பெரிய பெரிய கடைகளில் வாங்கிய இனிப்புகளை அள்ளிக்கொண்டுச் செல்வதிலேயே பண்டிகை முழுமை பெற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறது.

உண்மையில் இதுவா கொண்டாட்டம்? இதுதானா மகிழ்ச்சி? ஒரு கிலோ இனிப்பைவிட ஒரு வரி வாழ்த்து உங்கள் மனதை அடுத்தவருக்குப் புரியவைத்துவிடாதா? உங்கள் கையெழுத்தின் நெளிவில் உங்கள் நேசம் புரிந்துகொள்ளப்படாதா? சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் கிராமங்களிலும் இதே நிலைதான்.

"என் சின்ன வயசுல நிறையப் பேருக்கு வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கேன். சில சமயம் அட்டை வாங்கக் கையில காசு இருக்காது. நானே தபால் கார்டுல படம் வரைஞ்சு அனுப்பியிருக்கேன். இப்போ சிலர் போன்ல வாழ்த்துச் சொல்றாங்க. இன்னும் சிலர் ஒரு மெசேஜ் அனுப்பிடறாங்க. என்ன பண்றது? காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாமே மாறிடுச்சு. அதுக்கேத்த மாதிரி சந்தோஷமும் குறைஞ்சுடுச்சு" என்று வருத்தத்துடன் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த அரங்கநாதன்.

திண்டுக்கல் சுப்பிரமணியத்தின் அனுபவமும் அதையேதான் ஆமோதிக்கிறது. "பண்டிகை வந்தா போதும் நான் என் தம்பிகளோட சேர்ந்து வாழ்த்து அட்டை வாங்கக் கிளம்பிடுவேன். யாருக்கெல்லாம் வாழ்த்து அனுப்பணும்னு அம்மா சொல்லுவாங்க. யாருக்கு அனுப்புறோமோ அதுக்கு ஏத்த மாதிரி வாழ்த்து எழுதுவோம். என் தம்பியோட கையெழுத்து அழகா இருக்கும். அதனால அவன்தான் நிறைய அட்டையில எழுதுவான். பொங்கல், தீபாவளி வந்தா சொந்தங்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவோம்னு சொன்னா என் மகன் ஆச்சரியமா பார்க்கிறான். அவங்களுக்கு போன்ல சொல்றது மட்டும்தான் வாழ்த்து. என்ன பண்றது? இந்தத் தலைமுறை மகிழ்ச்சிகளோட அறிமுகம் இல்லாமதான் வளருது" என்று நிதர்சனத்தைச் சொல்கிறார் சுப்பிரமணி.

இந்தத் தலைமுறைக்கு எதுவும் வாய்க்கவில்லை என்று சொல்வதைவிட அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தித் தரலாமே. நேரமில்லை என்று சப்பைக்கட்டுவதை விட்டுவிட்டு நாமே நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பினால், அந்த அன்பு நிச்சயம் எதிரொலிக்கத்தான் செய்யும்

NEWS TODAY 25.05.2026