Friday, February 6, 2015

மனிதம், இனி மெல்ல வளரும்!





உலகில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்க்கும்போதும், கேட்கும் போதும் 'மனிதம் செத்துக்கொண்டிருக்கிறது' என்றுதான் பலரும் புலம்பித் தீர்க்கிறார்கள். பிரிட்டனில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டால், மனிதம் எப்போதும் சாகாது என்கிற நன்னம்பிக்கை அவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும்!


பிரிட்டனை சேர்ந்த 67 வயது ஆலன் பர்ன்ஸ், பிறக்கும் போதே பார்வைக் குறைபாட்டுடனும், வளர்ச்சிக் குறைபாட்டுடனும் பிறந்து, கஷ்டப்பட்டு தன் வாழ்நாளை நகர்த்தி வந்தார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி, இவரைத் திருடன் ஒருவன் தாக்க, அவரிடம் பணமேதும் இல்லை என்றதும், அப்படியே கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான்.

கழுத்திலும், கையிலும் அடிபட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலன் பற்றி, உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதைப் பார்த்த கேத்தி கட்லர் என்னும் இளம்பெண், முதியவர், அதுவும் பார்வையற்ற, தன்னை தற்காத்துக் கொள்ளும் திராணியற்றவர் என்றுகூட பாராமல் ஈவு இரக்கமின்றி நடந்துகொண்ட அந்த திருடனின் செயலில் அதிர்ச்சியுற்றார்.

'ஐயோ பாவம்’ என்று விலகிவிடாமல், உதவும்படி என்ன செய்யலாம் என்று அக்கறையுடன் யோசித்தார். இவரின் மெனக்கெடலுக்குப் பரிசாகக் கிடைத்திருக்கிறது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி!

பாதிக்கப்பட்ட ஆலனுக்கு உதவிடும் நோக்கில் இணையத்தில் ‘ஆலன் பர்ன்ஸ் ஃபண்டு’ என்ற பக்கத்தை ஆரம்பித்தார் கேத்தி கட்லர். இந்தப் பக்கத்தின் மூலம் குறைந்தது 500 யூரோவாவது நிதி திரட்டிட வேண்டும் என்று நினைத்திருந்த கேத்திக்கு, காத்திருந்தது ஆனந்த அதிர்ச்சி. அந்தப் பக்கத்தை தொடங்கிய நான்கே நாட்களில் 2,82,673 (இந்திய பண மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) யூரோ வரை நிதி கிடைத்துள்ளது.

அமெரிக்கா, கனடா, ஹாலந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா என உலகம் முழுவதும் இருந்து நீண்டிருக்கின்றன உதவும் கரங்கள். மேலும், அந்தப் பக்கத்தில் இவர்கள் அனைவரும் ஆலன் குணமடைய வேண்டி தங்கள் பிரார்த்தனைகளையும் சேர்த்துள்ளனர்!

மனிதம் வாழ்க!

- யதி

ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பயன்படுத்தினால் திங்கள் முதல் அபராதம்: தமிழக போலீஸ்

ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பயன்படுத்தினால் திங்கள் முதல் அபராதம்: தமிழக போலீஸ்

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, 'ஐ.என்.டி' என்ற, உயர் பாதுகாப்பு பதிவு எண் நம்பர் பிளேட், தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வரவில்லை. எனவே, இந்த வகை நம்பர் பிளேட்டை பொருத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக போக்குவரத்து மற்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

அனைத்து வாகனங்களிலும், உயர் பாதுகாப்பு பதிவு எண் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என, கடந்த 2011ல், மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. அதே சமயம் வேறு சில மாநிலங்கள் ஐ.என்.டி. நம்பர் பிளேட் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் போலி ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த வாரம் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் போலி நம்பர் பிளேட் தொடர்பாக விசாரிக்குமாறு கோயம்புத்தூர் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகள் உபயோகிக்கக்கூடாதென்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

தற்போது மாநில காவல்துறை, இது போன்ற நம்பர் பிளேட் வைத்திருப்பவர்களிடம் அதை மாற்றி விட்டு கோர்ட் உத்தரவுப்படி பழைய மாடல் நம்பர் பிளேட்டுகளை உபயோகப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து வரும் திங்கள் முதல் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை உபயோகிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பர் பிளேட்டில், எழுத்து, எண் வடிவங்கள் ஒரே சீராகவும், வாகன இன்ஜின் எண், வாகன உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய, 'ஹாலோகிராம்' முத்திரை இடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

லண்டன், பிப். 6-

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, தினமும் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் பொதுமக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்ளியா ரஸ்கின் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் க்ரீன் டீ பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

14 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு கிரீன் டீயில் உள்ள ஈ.ஜி.சி.ஜி. அடங்கிய கேப்சூலும் மற்றொரு குழுவிற்கு மருந்து இல்லாத கேப்சூலும் கொடுக்கப்பட்டது.

இதில் மாத்திரை எடுக்காதவர்களோடு ஒப்பிடும் போது மாத்திரை எடுத்தவர்களுக்கு 1.63 சதவீதம் உடல் எடை குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே க்ரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தினசரி சோதனையில் கொடுக்கப்பட்ட கேப்சூலில் இருந்த ஈ.ஜி.சி.ஜி.யின் அளவு 400 மில்லி கிராம். இதே அளவை தினசரி பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு ஏழு முறை காஃபின் நீக்கப்பட்ட க்ரீன் டீ அருந்த வேண்டும் என்றும் இவ்வாறு எடுத்து வந்தால் உடல் எடை குறைவது மட்டுமின்றி உடலில் செயலாற்றலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அக விலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 107 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயருகிறது. ஜனவரி 1 ஆம் தேதி கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் அடைவார்கள். ஜனவரி 30 இல் டிசம்பர் மாதத்திற்குரிய தொழில் துறை ஊழியர் திருத்திய நுகர்வோர் குறியீட்டு எண் வெளியானதன் அடிப்படையில் சரியான அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

DELHI GOES TO POLL TOMORROW


கேலி செய்தவங்க நல்லாவே இருக்க கூடாது: தற்கொலை செய்த மாணவி உருக்கம்!

திருவண்ணாமலை: என்னை கேலி செய்தவர்கள் நல்லாவே இருக்க கூடாது என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அடுத்த கீழ் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், இவருடைய மனைவி ராணி. கூலி தொழிலாளியான இவர்களுடைய மகள் லாவண்யா, ஜவ்வாதுமலையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், லாவண்யா மட்டும் அறையில் இருந்துள்ளார். மாணவிகள் குளித்துவிட்டு வந்து லாவண்யாவின் அறையை தட்டி உள்ளனர். ஆனால் அந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக மாணவிகள் எட்டிப் பார்த்தபோது, லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அவரும் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே போளூர் துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மற்ற மாணவிகளிடமும் விடுதி காப்பாளரிடமும் விசாரணை நடத்திய போலீசார், அந்த அறையை சோதனையிட்டபோது மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது.

அந்த கடிதத்தில், ''அம்மா என்னை மன்னிச்சிடு, எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. அதனால் வேறு உலகத்திற்கு போகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க ஒரு நாள் வருவேன். பாப்பா, தம்பி, அப்பா, ஆயா, மாமா, அக்கா, சொக்கநாதன் எல்லோரையும் பார்க்க ஒரு நாள் வருவேன்.

பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேருங்கள். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக் கூடாது. அவர்களை நான் சும்மாவிட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக் கொண்டேன்". எனக்கு உதவி செய்த தோழிகளுக்கு நன்றி. என் சாவுக்கு இந்த பள்ளிக்கும் விடுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது.

இதன் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால் தான் லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளதால், மாணவியை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வகுப்பை கட் அடித்து அஜீத் படம் பார்க்க சென்ற 17 மாணவர்கள் சஸ்பெண்ட்!


திருப்பூர்: வகுப்புகளை புறக்கணித்து விட்டு நடிகர் அஜீத் நடித்த "என்னை அறிந்தால்" படத்தை பார்க்க சென்றதாக கூறி 17 மாணவர்களை முதன்மை கல்வி அதிகாரி சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜீத் குமார் நடித்த "என்னை அறிந்தால்" படம் நேற்று தமிழகம் முழுவதும் ரிலீசானது. திருப்பூரில் இந்த சினிமாவை பார்க்க அரசு பள்ளி மாணவர்கள் பலர் காலை வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்து விட்டு, தாராபுரம் சாலையில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அவர்கள் தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பள்ளி சீருடை அணிந்து இருந்தனர்.

அதே நேரம் அந்த வழியாக காரில் வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகன், தியேட்டர் முன் பள்ளி சீருடையில் மாணவர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று, அங்கிருந்தவர்கள் உதவியுடன், அங்கு நின்றிருந்த 17 மாணவர்களையும் பிடித்து, தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் என்று தெரியவந்தது.

உடனே அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து, அனைவரையும் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகன் கூறுகையில், "தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வுகள் நெருங்கி விட்ட நிலையில், மாணவர்கள் வகுப்புக்கு வராமல் புறக்கணித்து விட்டு சினிமாவுக்கு சென்றதால் அந்த 17 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் அந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர்களை சந்திக்க வேண்டும் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சினிமா படம் பார்க்க சென்ற 17 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NEWS TODAY 11.06.2026