Tuesday, March 10, 2015

ரூ.1,000-க்கு ஆண்டு முழுவதும் சினிமா: கோவில்பட்டி திரையரங்கின் புதிய முயற்சி



சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரூ.1000 சந்தா செலுத்தி ஆண்டு முழுவது சினிமா பார்க்கலாம் - கோவில்பட்டி சண்முக திரையரங்கம்" என்ற ஒரு விளம்பரம் அனைவரையும் கவர்ந்தது.

இது உண்மையா, எதற்காக ஆரம்பித்திருக்கிறார்கள் என திரையரங்க எண்ணைத் தொடர்புக் கொண்டு பேசினோம்.

"விளம்பரப்படுத்தும் பணிகள் எல்லாம் முடிந்து இன்று முதல் தான் அதற்கான வேலையை ஆரம்பிக்கிறோம். இப்போது திரையரங்கிற்கு மக்களின் வருகை என்பது பெருமளவு குறைந்து விட்டது. ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்தாண்டு மட்டும் 37 படங்களை வெளியிட்டு இருக்கிறோம். அதில் ஒருவர் 20 படங்கள் பார்க்கிறார் என்று வைத்துக் கொண்டால் கூட, அதற்கான செலவு அவருக்கு ரூ.1000-த்தை தாண்டிவிடும். ஆகையால் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துகிறோம். இம்முறைப்படி ரூ.1000 கட்டினால் கூப்பன் ஒன்றை கொடுத்துவிடுவோம்.

எங்கள் திரையரங்கில் வெளியாகும் படத்தை நீங்கள் இந்த கூப்பனைப் பயன்படுத்தி படத்தினைக் கண்டு மகிழலாம். கூப்பனில் ஒரு படத்தை ஒரு முறை தான் பார்க்க முடியும். ஒரு வேளை இந்த படத்தைப் பார்க்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர் யாராவது உங்களது கூப்பனை எடுத்துக் கொண்டு வந்து படம் பார்க்கலாம். அதற்கும் அனுமதிக்கிறோம்." என்றார்கள்.

"ஆரம்பிக்க காரணம் என்ன?" என்று கேட்டதற்கு "முன்பு எல்லாம் ஒரு படம் திரையிட்டால் மக்கள் கூட்டம் என்பது அதிகமாக இருக்கும். எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. தற்போது சினிமா தயாரிப்பு என்பது மிகப்பெரிய விஷயமாகி விட்டது. நடிகர்கள், நடிகைகள் என அனைவருமே சம்பளத்தை உயர்த்திவிட்டார்கள். அதுமட்டுமன்றி தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என எல்லாரையும் தாண்டி எங்களிடம் படம் வரும் போது அதன் விலை என்பது மிகவும் அதிகமாகிறது. அப்படி நாங்கள் கஷ்டப்பட்டு எடுத்து வெளியிட்டால் கூட மூன்று நாட்கள் தான் அதற்கு மதிப்பு. அதற்கு பிறகு கூட்டம் குறைந்துவிடும்.

இது ஒரு பிரச்சினை என்றால், அடுத்த பிரச்சினை திருட்டு டி.வி.டி. 80 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பதற்கு 30 ரூபாய் கொடுத்து டி.வி.டியில் வீட்டிலேயே படம் பார்க்கலாம் என்று மக்களும் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் ஒரு புதுமையாக விஷயம் பண்ணலாம் என்று ஆரம்பித்தோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்கள்.

Sunday, March 8, 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மற்றும் கருணை அடிப்படையிலும் பணி நியமனம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், 2015-16-ம் நிதி ஆண்டில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் ஓய்வுபெற இருப்பதாக நிதித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

பொதுவாக, அரசுப் பணியில், 50 சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். இதற்காக டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அதிகளவில் பணி நியமனங்கள் நடைபெறும். இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

உத்தமவில்லன்', 'நண்பேன்டா' உடன் போட்டியிடும் 'சகாப்தம்'



ஏப்ரல் 2ம் தேதி 'உத்தமவில்லன்', 'நண்பேன்டா' ஆகிய படங்களுடன் வெளியாக இருக்கிறது சண்முக பாண்டியன் நடித்திருக்கும் 'சகாப்தம்'

விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. நாயகிகளாக ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நேகாவும், ‘மிஸ் பெங்களூர்’ பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள்.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். சண்முக பாண்டியனோடு சிங்கம் புலி, ஜெகன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், தேவயானி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிவடைந்தும் படம் எப்போது வெளியாகும் என்பதை அறிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது ஏப்ரல் 2ம் தேதி 'சகாப்தம்' வெளியாகும் என்று கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஏப்ரல் 2ம் தேதி கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் 'உத்தம வில்லன்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நண்பேன்டா' உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. அப்படங்களோடு பாக்ஸ் ஆபிஸில் மோதவிருக்கிறது 'சகாப்தம்'

அன்னமிடும் கை



சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் அந்த சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைகிறவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார் தாயம்மாள். 73 வயதாகும் தாயம்மாள், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வூதியம் மூலம் வரும் வருமானத்தில் ஓய்வெடுக்க விரும்பாத இவர், மகளிர் சுய உதவி குழு மூலம் சிற்றுண்டி உணவகம் நடத்தி வருகிறார். ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் கிராம மக்கள், அவ்வப்போது வரும் அலுவலக ஊழியர்களுக்கு மலிவு விலையில் அன்னம் வழங்குவதாலேயே இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

வழிகாட்டிய கல்வி

எப்போதும் இன்முகத்துடன் இருக்கும் இவர் கடந்து வந்த இன்னல்கள் ஏராளம். பசியின் கொடுமையை அறிந்ததால்தான் இப்படியொரு உணவகத்தை நடத்தி வருகிறார். திருநெல்வேலி அருகே இருக்கும் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த இவருக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. அந்த மண வாழ்க்கை எட்டு ஆண்டுகள் மட்டுமே

நீடித்தது. 1968-ல் எதிர்பாராத விதமாக அவருடைய கணவர் ராமசாமி இறந்துவிட, நான்கு பிள்ளைகளைக் கரை சேர்ப்பதொன்றே தாயம்மாளின் வைராக்கியமாக இருந்தது. காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பாடம் படித்து தங்கப் பதக்கம் பெற்றார். ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு, சிவகங்கையில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியப் பணியில் தனி முத்திரை பதித்த தாயம்மாள், ஓய்வுக்குப் பிறகும் தனக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஓய்வுக்குப் பிறகும் வேலை

சத்தும் சுவையும் நிறைந்த உணவுப் பொருட்கள், இவரது சிற்றுண்டிச் சாலையின் அடையாள.

“என்ன வேணும்னு கேட்டு எடுத்துவைம்மா” என உட்கார்ந்த இடத்திலிருந்து உபசரிக்கிறார் தாயம்மாள். கையில் காசில்லை என்றாலும் கடன் சொல்லியாவது சாப்பிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் காலடி எடுத்து வைக்கும் கிராமத்தினர் இவரது கடைக்கு வைத்திருக்கும் பெயர் ‘ஆத்தா மெஸ்’.

“ஓய்வுங்கற பேர்ல வீட்ல் உட்காராம ஏதாவது செய்யணும்னுதான் இந்தக் கடையை நடத்துறேன்.எனக்கு உதவியா இருக்கற ரேவதி, மையலுக்கு உதவி செய்யும் பெண்கள்னு கூட்டா சேர்ந்து இந்தக் கடையை நடத்திட்டு இருக்கோம்” என்று சொல்லும் தாயம்மாள், எதையும் சாதிக்க வயது தடையல்ல என்பதை நிரூபிக்கிறார்.

படம்: சுப. ஜனநாயகசெல்வம்

NEWS TODAY 14.06.2026