Thursday, April 2, 2015

பணம் கொடுத்தால் வேலை... வலை வீசும் மோசடிக் கும்பல்!



வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி விதம்விதமாக ஏமாற்றும் நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன. இதுமாதிரியான ஒரு மோசடிக் கும்பலிடம் சிக்கி, தப்பித்து வந்திருக்கிறார் சூரியகுமார். இந்த மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவத்தை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

வேலைவாய்ப்பு விளம்பரங்கள்!

“படித்து முடித்துவிட்டு, வேலை கிடைக்காத காரணத்தினால் நம்பிக்கை இழந்திருந்த எனக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்புக் கான அந்த விளம்பரம் என் கண்ணில்பட்டது. நம்பகத்தன்மையான வேலைவாய்ப்பு வலைதளத்தில் விளம்பரம் வந்திருந்ததால், அதில் குறிப்பிட்டிருந்த நபரைத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு பிரபல தொழிற்சாலையில் மனிதவள மேலாளர் என்று தன்னை சொல்லிக் கொண்டார். எனக்கு வேலை கிடைக்க உதவுவதாகவும், வேலை கிடைத்தப்பின் நான் அவருக்கு 2 லட்சம் ருபாய்த் தரும்படியும் கேட்டார். கடந்த ஆறு மாதங்களாக வேலை தேடி மிகவும் அவதிப் பட்டதால், பணம் கொடுத்து வேலை வாங்குவதில் விருப்பம் இல்லாதபோதும் வேறு வழி இல்லாததால் ஒப்புக்கொண்டேன்.



இரண்டு லட்சம் பணம்!

அவர் சொன்ன பெயரில் நிஜமாகவே ஒரு பெரிய நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் போலவே, ஒரு மின்னஞ்சலில் இருந்து என்னைத் தொடர்புகொண்டனர். தொலைபேசி மூலம் இன்டர்வியூ நடத்தப்பட்டது. அந்த இன்டர்வியூவிலேயே துறை சார்ந்த கேள்விகளை கேட்டு என்னைத் திக்குமுக்காட வைத்தார்கள்.

சில நாள் கழித்து, நான் அந்த இன்டர்வியூவில் தேர்ச்சியும் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனால், நேரில் பார்க்காமல் வேலைக்கான அப்பாயின் மென்ட் ஆர்டரை தரமுடியாது என்பதால் என்னை டெல்லிக்கு அழைத்தனர். டெல்லியில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கியவுடன் பேசியபடி பணத்தைத் தரவேண்டும் என்று கேட்டனர்.

கடைசி நேரத்தில்..!

டெல்லியில் அந்த நிறுவனத்தின் வாசலில் ஒரு பெண் என்னைச் சந்தித்தார். நிறுவனத்துக்குள் என்னை வரச் சொல்லாமல், வெளியில் சந்தித்ததால் எனக்குச் சந்தேகம் வந்தது. அவரைச் சந்தித்த சிறிது நேரத்தில் அவர்கள் வழங்குவதாகச் சொல்லியிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டர் என் மின்னஞ்சலுக்கு வந்தது. பேசியபடி பணத்தைத் தர டெல்லியிலுள்ள ஒரு இடத்துக்கு வரும்படி அழைத்தனர். என் சந்தேகம் வலுவடைந்ததால், முதல் வேலையாக செல்போனை அணைத்து விட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டேன்.

சிக்கியவர்கள் பலர்!

ஒரு மாதத்துக்குப் பிறகு ஃபேஸ்புக் மூலம் கிடைத்த தகவலின்படி, அந்த மோசடிக் கும்பல் 12 பட்டதாரிகளை ஏமாற்றியுள்ளதாகச் செய்தி கிடைத்தது. டெல்லியில் என்னைச் சந்தித்த பெண்ணின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அந்த மோசடிக் கும்பலைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் சமீபத்தில் என்னைத் தொடர்புகொண்டார். அவரும், அவரது நண்பர்கள் ஐந்து பேரும் அதே மோசடிக் கும்பலிடம் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில் ரூ.12.5 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். அதே மோசடிக் கும்பல் தொடர்ந்து இதேபோன்ற நூதன மோசடி வேலைகளில் ஈடுபட்டு வேலை தேடும் பட்டதாரி களின் வாழ்கையில் விளையாடி வருகின்றனர். வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள், இதுமாதிரியான மோசடிக் கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும். இந்த மாதிரியான மோசடிக் கும்பலிடம் இருந்து பட்டதாரிகளைக் காக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிற கோரிக்கையுடன் முடித்தார் சூரியகுமார்.



இளைஞர்கள் கவனிக்க!

இதுபோன்ற நூதனமான வேலை மோசடியில் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சென்னையிலுள்ள மனிதவள மறுமலர்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் மனிதவள ஆலோசகர் கே.ஜாபர் அலியிடம் பேசினோம்.

“ஒரு இளைஞன் பணம் கொடுத்து வேலை வாங்க முடிவெடுத்துவிட்டால், அவன் ஏமாறத் தயாராகிவிட்டான் என்று அர்த்தம். தனது திறமையை, அறிவைக் கொண்டுதான் வேலையைத் தனதாக்க வேண்டுமே தவிர, எந்தவொரு சூழ்நிலையிலும் இதுபோன்ற காரியங்களில் இளைஞர்கள் இறங்கவே கூடாது.

இன்றைய இளைஞர்கள் பலவிதமான நூதன வேலை மோசடிகளைக் கவனிக்க வேண்டும்.

ஏமாற்றும் விதம்!

1. இல்லாத நிறுவனம், அங்கு வேலை செய்யாதவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.

2. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள், இல்லாத வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.

3. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள் இருக்கும் வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி. ஆனால், இவர்கள் பலே கில்லாடிகளாக இருப்பார்கள். அவர்கள் சொன்னபடி வேலையையும் வாங்கித் தருவார்கள். ஆனால், அந்த வேலையானது ஓரிரு மாதங்கள்கூட இருக்காது அல்லது அங்கு ஓரிரு மாதங்கள்கூட ஒருவரால் தாக்கு பிடிக்க முடியாது.

4. பணம் வாங்கிப் பயிற்சி தந்துவிட்டு, அதன்பிறகு வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.

5. புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பவர் கள் வேலை கொடுப்பதாகத் தரும் வாக்குறுதி. இவர்கள், “நாங்கள் புதிதாக நிறுவனம் ஆரம்பித்திருக்கிறோம். எங்களால் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. மீதித் தொகையை இந்த நிறுவனத்தில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளலாம். நிச்சயமாக வேலை நிரந்தரமாகும்” என்பார்கள். இவர்களின் ஒரேநோக்கம் பணமாக மட்டுமே இருக்கும்.

முதலில், எந்தவொரு நிறுவனமும் ஆட்களை நேரில் பார்க்காமல் தொலைபேசி இன்டர்வியூ எடுத்து பணியாளர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள். அதுபோல, வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்கிறவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் மையம் அமைத்து அங்குதான் தேர்வு செய்வார் களே தவிர, பொது இடங்களுக்கு மாணவர்களை வரவைத்து இன்டர்வியூ நடத்த மாட்டார்கள். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மற்றும் எம்பிஏ முடிக்கும் மாணவர்களில் 15% பேர் மட்டுமே உடனடியாக வேலை செய்வதற்குத் தகுதியானவர் களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் நடத்தும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். மீதி இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்குத்தான் ஏமாற்று நிறுவனங்கள் வலைவிரிக்கின்றன.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை!

வேலைக்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றத்தைச் சந்திப்பவர்களில் பெரும்பாலும் சமூகத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தால், ஏதேனும் ஒருவேலை கிடைத்தால் போதும் என்று நினைத்து, சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இன்றைய இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு, பணம் கொடுத்தாவது பெரிய நிறுவனத்தில் அதிகச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்று முனைவதுதான். இன்றைய நிலையில் தரமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்குப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் தன்னைத் தேடிவரும் திறமையாளனை தவறவிடுவதே கிடையாது. அதே சமயம், தானாகத் தேடிப் போய்த் திறமையாளர் களை அழைத்து வருவதும் கிடையாது. அதனால், அதிக சம்பளம், பிரபலமான நிறுவனம் என்று மட்டும் வேலை தேடாமல் ஆரம்பத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் சேர்ந்து அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு சில ஆண்டு களுக்குப் பிறகு அதிக சம்பளத்துக்காக வேலையை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்.

இதை விடுத்து பணத்தைக் கொடுத்து வேலைக்குச் சேர முயற்சித்தால், வேலையில்லா பட்டதாரியாகவே நிற்கவேண்டும். தவிர, பணத்தைத் தந்து வேலை வாங்கும் பணியாளரிடம் சுயமதிப்பு என்பதும், தன்னம்பிக்கை என்பதும் இல்லாமல் போய்விடும். இந்த நிலையானது தொடரும்பட்சத்தில் வேலையிலாகட்டும், பொது வாழ்க்கையில் ஆகட்டும், வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளவே முடியாது” என்றார்.

மோசடி நிறுவனங்கள் தீவிரமாக வலைவிரித்து அலையும் இந்தக் காலத்தில் எச்சரிக்கை அவசியம் இளைஞர்களே!

விசாரித்த பிறகு களமிறங்குங்கள்!

வேலை வாங்கித் தருவதாக சொல்லும் மோசடி நிறுவனங்கள் பற்றி சைபர் கிரைம் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘இன்றைய நிலையில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று நிறுவனங்கள் முளைத்து வருகின்றன.இதைக் களைவதற்கான நடவடிக்கைகளை சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து எடுத்துவருகிறது. இதுமாதிரியான மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல், இன்றைய இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பணம் கொடுத்து வேலைக்குச் செல்லலாம் என்கிற மனநிலைக்கு வரவேண்டாம்.

இன்றைய நிலையில் பேருந்துகள், ரயில் வண்டிகள் எனப் பல இடங்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்க்கிறோம். இதைப் பார்த்ததும் நாம் நம்பிவிடுகிறோமா என்ன? அதுபோல, நம்பகத்தன்மையான வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்த்தாலும் அதுகுறித்து முழுமையாக விசாரித்து, அதில் உண்மைத்தன்மை இருக்கும்போது அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. வேலைகான வாய்ப்புகளை அந்தந்த நிறுவனங்களின் வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்களா என்பதையும் பார்ப்பது அவசியமாகும். மேலும், வேலை மோசடி குறித்த புகார்களுக்கு சென்னை எழும்பூரிலுள்ள மத்திய க்ரைம் குற்றப்பிரிவு கிளையை அணுகலாம்” என்றனர்.

செ.கார்த்திகேயன்

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக ஒப்பாரி போராட்டம்: இந்து அமைப்புகள் முடிவு!

cinema.vikatan.com

சென்னை: தி.க. சார்பில் நடக்கவிருக்கும் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக பெண்களை திரட்டி ஒப்பாரி போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

அம்பேத்கர் பிறந்த நாளான 14ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்படும் என கி.வீரமணி அறிவித்திருந்தார். இதில் கலந்து கொண்டு தாலியை அகற்ற விரும்பும் பெண்கள் செல்போன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள செல்போன் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும் என இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலமும் கண்டன குரல்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாளான ஏப்ரல் 14ஆம் தேதி இந்து அமைப்புகளின் பெண்களை திரட்டி, நூதன முறையில் எதிர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆயிரக்கணக்கான பெண்களை திரட்டி, பெரியார் திடல் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

'தாலி அகற்றுவதற்கும், மாட்டிறைச்சி உண்பதற்கும் சட்டம் இயற்றக் கூடாது!'

cinema.vikatan.com

மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் அண்மையில் தாலி வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்திய தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் திராவிடர் கழகம் சார்பில் கடந்த வாரம் இயற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்றாக, வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று தாலி அகற்றும் நிகழ்ச்சியையும், மாட்டுக்கறி விருந்தையும் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த விவாதங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் திராவிடர் கழகம் நிறைவேற்றி இருக்கும் தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒருசிலரிடம் நாம் கருத்து கேட்டோம்.


தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ''நாடு எவ்வளவோ முன்னேறிக் கொண்டிருக்கிறது. பெண்களும் பலவழிகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். வறுமை, வேலை வாய்ப்பு என நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. தாலியை அகற்றுபவர்களைப் பிற்போக்குவாதிகள் என்றே சொல்வேன். பொதுவாக இந்து மதத்தில், தாலி உணர்வோடும், உயிரோடும் மதிக்கப்படுகிறது என்பது ஒரு மருத்துவராக எனக்கு நன்றாகத் தெரியும். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தது முதல் இன்று ஹைடெக் மருத்துவம் வரை என் அனுபவத்தில் பலரையும் பார்த்திருக்கிறேன்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்களைத் தாலியை கழட்டச் சொன்னால்கூட அவர்கள், ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொண்டே பின்புதான், தாலியைக் கழட்டித் தருகிறார்கள். மதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது யாரும் சொல்லிக்கொடுத்தோ இத்தகைய செயலை எவரும் செய்யமாட்டார்கள். பெண்களுக்கு தாலியின் நம்பிக்கை அவர்களுடைய உயிரோடு, உணர்வோடு கலந்திருக்கிறது. பெண்கள் இனத்தை, உணர்வை யாரும் இழிவுபடுத்த முடியாது. இத்தகைய செயல் தமிழ்ப் பெண்களுக்கு அவசியமில்லாத ஒன்று. இயற்கையைப் புறந்தள்ளுவதோடு, இதற்காக தமிழ் மக்கள் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.



கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. டி.ராஜா,''என்னைப் பொறுத்தவரை தாலி அகற்றுவது என்பது வேறு அர்த்தத்தைக் கொண்டது. உணவு முறை, பழக்கவழக்கம், சீதோஷ்ண நிலை போன்றவற்றால் ஒவ்வொரு நாட்டிலும் உணவு வகைகள் வேறுபடுகின்றன. எந்த ஒரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட உணவைத்தான் உண்ணவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுவது கிடையாது. ராஜஸ்தானில் ஒட்டகப்பால் குடிக்கிறான். தமிழகத்தில் பசு, எருமை போன்றவற்றின் பால் சாப்பிடுகிறான்.

நில அமைப்பு, தட்பவெப்பம், இயற்கைச் சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டுக்கு இது எல்லாம் பொருந்தாது. மாட்டு இறைச்சியை சிலர், தாழ்வாகவும் இழிவாகவும் நினைக்கிறார்கள். ஆனால் லண்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் மாட்டு இறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிலர், ஆட்டிறைச்சி, மாட்டு இறைச்சியை ஒதுக்கிவிட்டு கோழிக்கறியைச் சாப்பிடுகின்றனர். சமூக உணர்வுகள் மாறி வருகிறபோதிலும் மத நம்பிக்கைகளை வைத்து கட்டாயப்படுத்தக் கூடாது. சட்டம் போட்டு இயற்றக் கூடாது'' என்றார்.

என்னதான் நாடுதான் முன்னேறினாலும், பெண்கள் புதுமையை விரும்பினாலும் இதுபோன்ற தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என்பதே பொதுவான கருத்தாகும்.

- ஜெ.பிரகாஷ்

பற்றெல்லாம் பற்றல்ல...

By அ. அறிவுநம்பி

பற்று. இந்தச் சொல் மூன்றே எழுத்துகளால் உருவாகியிருக்கலாம். ஆனால், அது தரும் பொருள் வானளவு பெரியது. இச்சொல்லினுடைய அடர்த்தியான அர்த்தம் புரியாததால்தான் மிகமிகச் சாதாரணமான ஆசை, விருப்பம், வேட்கை, தேவை, இச்சை, பிரியம் போன்றவற்றையும் பற்று எனத் தவறாகக் கருதுகின்றனர். கணவன் மனைவியிடம் காட்டும் அன்போ, பெற்றோர் தம் மக்களிடம் காட்டும் பாசமோ, மாணவர் தம் ஆசிரியரிடம் காட்டும் குருபக்தியோ பற்றாகாது.

உண்மையான பற்று எது? இலக்கு ஒன்றைப் பற்றிக் கொண்டு தன்னலம் மறந்து, தன் சுற்றம் துறந்து, தன்னையே மறந்து நிற்பதுவே.

மனிதர்களின் பற்றுகள் பலவகையாக அமையக்கூடும். அவற்றுள் மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப் பற்று ஆகியவை முதன்மையானவை. அதனாலேதான் பாரதி "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்று நிரல்படுத்திப் பாடம் தந்தான். ஒரு கட்டத்தில் இந்தப் பற்றுகள் பொலிவுடன், அணுக்க உணர்வுடன் மேற்கொள்ளப் பெற்றன.

எங்கோ, கண்காணாத வட்டாரத்தில் தன் இன மக்கள் அன்றாடம் காயம்படுகின்றனர் எனக் கேட்டறிந்தவுடன் கரும்புத் தோட்டத்துத் தமிழர்க்காகப் பாப் புனைந்தவன் பாரதி.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்' என்பது வள்ளுவவழி.

தன் இனமக்களின் அழிவுகளைக் கண்டு இனப்பற்று மீதூரத் தீக்குளித்தவர்களை எப்படிப் போற்றுவது? இன்னும் ஒரு படி மேலே போய்த் "தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இவ்வுலகை அழிக்கவும் முன்வருவோம்' என்ற முழக்கம் எழுந்தது இந்த மண்ணில்தானே!

தன் சுகம், குடும்ப வளம், உறவினர் நலம் போன்றவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு நாட்டு விடுதலைப் பற்றைத் தன் மனம், மொழி, மெய் எல்லாவற்றிலும் நிரப்பிக் கொண்ட தியாகிகள் பலர்.

வருமானந்தரும் வழக்குரைஞர் பதவியை உதறிவிட்டு மக்கள் நலனுக்காகச் சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனார், கொடிகாத்த குமரன் போன்றோரின் அருஞ்செயல்கள் அவர்களின் தேசப்பற்றை எடுத்தோதும்.

காலம் அவ்வப்போது மாற்றங்களை தரும். அவை நல்ல மாற்றங்களாக அமையின், உலகிற்குப் பயன் கிடைக்கும். மாறிப்போனால் மக்களின் வாழ்வியல் நெறி சிதிலமடையும். இந்தச் சேதாரம் எல்லாக் கூறுகளிலும் ஏற்படும். இன்றைய பற்றுகளை உற்றுநோக்கினால் பலவற்றை இனங்காண முடியும்.

லால் பகதூர் சாத்திரி அமைச்சராக ஆகும் முன் கட்சிப் பேச்சாளராகத் திகழ்ந்தவர். கட்சிக் கூட்டங்களில் அவர் பேசுவதற்காக அந்தக் காலத்தில் அவருக்கு வழங்கப்பெற்ற மாத ஊதியம் ஐம்பது ரூபாய்.

ஒருமுறை மாதத்தின் கடைசி நாள்களில் திடீர்ச் செலவு ஏற்பட்டு அவர் திண்டாடியபோது, அவருடைய மனைவி ஐந்து ரூபாயை அவரிடம் நீட்டி, "கடந்த மாதம் மிகவும்

கடினப்பட்டு மாதச் சம்பளத்தில் இந்த ரூபாயை மிச்சம் பிடித்தேன்' என்று கூறியபோது மனைவியை அவர் பாராட்ட முன் வரவில்லை.

உடனடியாக "என்னுடைய மாதச் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் நாற்பத்தைந்து ரூபாயாக மாற்றிக் கொள்ளுங்கள்' எனக் கட்சித் தலைமைக்குக் கடிதம் அனுப்பினார். தன் இல்ல வசதியைவிடக் கட்சிப் பற்றைக் கருதிய சிலர் வாழ்ந்தனர் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி.

இன்றும் அரசியலில் ஒரு பற்று உண்டு. அதன்பெயர் நாற்காலிப் பற்று. இதையடைய அரசியல்வாதிகள் கொள்கைகளைக் காற்றில் விடுகின்றனர். அரசியல் நெறிகளை அடமானம் வைக்கின்றனர். போற்றிக்கொண்டிருந்த கட்சித் தலைமைகளைத் தூற்றி நிற்கின்றனர்.

"இலக்கு' என்பது "வருமானம் தரும் பதவி' என்பதால் பகையை நட்பாக்கிக் கொள்ளவும், நட்பைப் பகையாக்கிக் கொள்ளவும், இவர்கள் தயங்குவதேயில்லை. இது சுயநலப் பற்றாகும்.

அரசியல் உலகைப் போலவே பிற உலகிலும் சில உண்டு. நடிகர், நடிகை, விளையாட்டு வீரர் போன்றாரின் திறமைகளைப் புகழுவது என்பது சரி. அவர்களை இறைவன் நிலைக்கு உயர்த்துவதும் கோயில் கட்டுவதும் எப்படி உவப்பானதாகும்? உறுதியற்றவை இப்பற்றுகள்.

எப்படி ஒரு நடிகரின் பெயரைத் தன் பெயருக்கு முன்னால் முன்னொட்டாக்கும் இரசிகன் அந்த நடிகரின் "கட் அவுட்' எனப்படும் ஓட்டுமர உருவுக்குப் பாலாபிடேகம் செய்கிறான். அந்த நடிகரின் படம் சரியாக ஓடவில்லை என்றால் வேறொரு நடிகரின் பெயரைச் சூட்டிக் கொள்வதும், சுவரொட்டி ஒட்டுவதும் என அந்த இரசிகன் மாறிக் கொள்கிறான்.

ஒரே உணவகத்தில் உணவு உண்டு வந்த ஒருவர் அதே ஊரில் புதியதாக வந்த கடையில் நல்ல உணவு கிடைக்கும்போது கடையை மாற்றிக் கொள்ளுவதைப் போன்றது இது. இது நிலையற்ற பற்று.

இன்றைக்குக் கட்சி மாறுபவர்களின் கொடி வண்ணம், துண்டு வண்ணம், சட்டை வண்ணங்களை அலசினால் அவர்களின் சாயம் வெளுத்துவிடும். தனக்குப் பிடிக்காத ஒரு குறிப்பிட்டவண்ண ஆடையைக் கட்சி அல்லது இயக்கம் அல்லது அமைப்பின் கட்டுப்பாட்டுக்காக அணிபவர்கள் பலர். வேறு வழியில்லாமல் அந்த வண்ணத் துணிகளை அவர்கள் அணிய வேண்டியதாகிறது. மனம் ஒன்றாப் பற்று இது.

தந்தை ஒருவர் தன் மகனையோ மகளையோ நன்கு படிக்கவைப்பதும், நல்லவிதமாக வளர்த்து வருவதும் பற்றாகா. அவை அவரின் கடமைகள். "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' என்பது சங்கப் பா வரி.

முதல்நாள் போருக்குத் தந்தையை அனுப்பித் தந்தையை இழந்த ஒருத்தி இரண்டாம் நாள் கணவனை அனுப்பி அவனையும் இழக்கிறாள். கவலையில் சிக்காமல் அந்த மங்கை அடுத்த கட்டமாகத் தனக்குத் துணையாக எஞ்சியுள்ள மகனையும் மூன்றாம் நாள் போர்க் களத்துக்கு அனுப்பும்போதுதான் நாட்டின் மீதான அவளின் பற்று வெளிப்படுகிறது.

அண்மையில் தென் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது. மணமகனின் தம்பி அயல் நாட்டில் பணிபுரிகிறார். அவரிடம் வயது

முதிர்ந்த உறவினர் ஒருவர் "நம்ம நாட்டுக்கு எப்பப்பா வருவ படிச்ச படிப்புக்கேத்த வேலை இங்கயும் கெடைக்குமே' எனக் கேட்டார். "ஒங்க நாட்டைக் குப்பைல போடுங்க' இது

அந்த இளைஞரின் விடை.

பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கும் குடும்ப நண்பர் அந்த இளைஞர் முன்பாக "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நாட்டுக்காக நீ என்ன செய்தாய்' என்று யோசி எனக் கென்னடி சொல்லியிருக்கிறார் என ஒரு கருத்தைப் பரிமாறினார்.

இதற்கு அந்த இளைஞர் தந்த பதிலிது: "இந்த நாடு எனக்கு எதுவும் செய்யவில்லை நானும் அதற்கு எதுவும் செய்யவில்லை. எனவே இதுக்கும் அதுக்கும் சரியாய்ப் போயிற்று'.

வெளிநாடுகளில் பணிபெற்றுக் குடும்பம் நடத்துபவர்களில் பலபேர் தங்கள் மகளின் திருமணத்திற்கு வரன்தேடும்போது மட்டும் தாய் நாட்டைத் திரும்பிப் பார்க்கின்றனர்.

அதே வெளிநாட்டிலுள்ள இளைஞர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதே நடப்பியல்.

இங்கே வருந்தத்தக்க செய்தி எதுவென்றால் அவர்களின் மகள்கள் அந்தந்த அயல்நாடுகளிலே வாழ்க்கைபெற நினைக்கிறார்களே தவிரத் தாய் நாட்டிற்குத் திரும்ப ஆசைப்படவில்லை. பூர்வீகம், பாரம்பரியம், சொந்த ஊர், உறவின் முறை என்ற சொற்கள் யாவும் இன்று செல்லாக் காசுகளாக, உள்ளீடற்றவையாகக் காணப்படுகின்றன. திசை மாறிய பற்று இது.

பக்தி உலகிலும் வேரற்ற பற்றுகள் தென்படுகின்றன. இறைவனின் திருவடிப் பேறே தன் பற்று என முடிவு செய்தவர் காரைக்காலம்மையார். இதற்காகத் தன் இளமைக் கோலத்தைத் துறந்தவர். வாழ்வு நலத்தை இழந்தவர். பேயுருவாக அமர்ந்து ஈசனில் கரைந்தவர்.

இன்றைய நிலைக்கு வரலாம். மூன்று பெரிய ஆலயங்களில் கள ஆய்வு செய்தபோது ஆய்ந்து பெற்ற முடிவுகள் இங்கே பதிவாகின்றன. கோயிலுக்கு வருபவர்களில் அறுபது விழுக்காட்டினர் மட்டுமே மெய்யன்பர்கள். இருபது விழுக்காட்டினர் கோயிலுக்கு வருவதை ஒரு பகட்டு நாகரிகமாகக் கொண்டவர்கள்.

குழுக்களாக வருபவர்களில் பாதிப்பேர் பிறருக்குத் துணையாக வந்தவர்கள் என்பதையும் இதிலடக்க வேண்டும். மீதி இருபது விழுக்காட்டினர் பொய்யான பக்தியால் ஆலயத்திற்கு வருவோர். இது போலிப்பற்று.

நின்று உயரத்துடிக்கும் ஒரு முல்லைக்கொடி காற்றில் அலைந்து தவிக்கும்போது பக்கத்தில் இருக்கும் கள்ளிச்செடியில்கூடப் பற்றிப் படரும். அறிவுடைய மனிதர்கள் அப்படிச் செய்யலாமா? இவ்வுலகில் இருவகைப் பற்றுகள் உள.

முதலாவது, மெய்யை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு, தூய்மை நிறைந்ததாக, உண்மை மாறாமல் அமையும் முறையானபற்று. இது குன்றின் மீது செதுக்கப்பட்ட உருவங்களைப் போன்றது. காற்றின், மழையின், வெயிலின் வீச்சுகளால் அவை கலங்குவதில்லை.

இரண்டாவது, பொய்யை அடிநாதமாகக் கொண்டு, போலித்தனத்தை மூலமாக்கிக் கொள்ளும் விளம்பரப் பற்றுகள். இவை நீர்க்குமிழிகள் போன்றவை. இவை பார்க்க அழகாகத் தோன்றும் அடுக்கடுக்காய் வரும். ஆனால், நிலைப்புத் தன்மை இல்லாதவை.

இந்த இருவகையில் எந்தப் பற்றைப் பற்றிக் கொள்ளப் போகிறது உங்கள் பற்று?

தடம் மாறும் இளம் தலைமுறை

Dinamani

ஒரு தந்தை "என் மகன் தலையெடுத்துட்டான்னா, எனக்கு கவலையில்லை' என எண்ணுவார். ஓர் ஆசிரியர் "மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்' என்பார்.

ஒரு நாட்டின் தலைவர் "இளைஞர்களின் வலிமையால், எழுச்சியால் இந்த சமுதாயத்தையே மாற்றிக் காட்டுவேன்' என்று மேடைகளில் பேசுவார். இவ்வாறு நாட்டின் சாதாரண குடிமகனில் இருந்து, அந்நாட்டின் தலைவர் வரை இளம் ரத்தத்தைச் சார்ந்தே சிந்திக்கிறார்கள்.

உலக நாடுகள் அனைத்துமே தத்தம் நாடுகளின் வளர்ச்சியை இளைஞர்களின் சிந்தனை, செயலாற்றலைக் கொண்டே நிர்ணயித்து வருகின்றன.

கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அந்தத் துறையில் இளைஞர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.

இவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்களின் மீதான நம்பிக்கை வளர்ந்து வருவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இளைஞர்களின் எதிர்காலம் சிதைந்து வருவதையும் காண முடிகிறது.

குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கக் கூடிய மாபெரும் அழிவு சக்தியாக போதைக் கலாசாரம் பெருகி வருகிறது.

நாட்டையே உலுக்கிய தில்லி மாணவி மானபங்க சம்பவத்திலும், இன்னும் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட முக்கிய குற்றச் செயல்களுக்கும் ஊக்கியாக இந்த உற்சாக பானம் என்றழைக்கப்படும் மது இருந்து வருகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

முன்பெல்லாம் இளைஞர்கள், தெரிந்தவர்களோ, உறவினர்களோ பார்த்துவிடக்கூடாது என்பதற்காக புகைப்பதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்துக்கோ, குளத்துக்கரைக்கோதான் செல்வார்கள்.

இன்றோ கடையின் ஒரு பக்கம் நின்று தந்தை புகைத்தால், மறுபக்கம் நின்று மகன் புகைக்கும் அளவுக்கு, புகைப் பழக்கம் என்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. இதேபோலதான் மதுப் பழக்கமும்.

இதில், அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல், தற்போது மாணவர்களும் பெருமளவில் புகை, போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாகி வருவதுதான்.

முன்பெல்லாம் கல்லூரிக் கல்வி முடித்த பிறகு அல்லது திருமணத்துக்குப் பிறகுதான் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகும் நபர்களைக் காண முடியும். ஆனால், தற்போது 8}ஆம் வகுப்பு மாணவர்கள்கூட சாலைகளில் சர்வ சுதந்திரமாக தைரியமாக நின்று புகைப்பதைக் காண முடிகிறது.

10}ஆம் வகுப்பு வரும்போது, இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது என அனைத்துக்கும் "பார்ட்டி' என்ற பெயரில் சிறுவர்களும் இளைஞர்களும் புகைப்பதையும், மது அருந்துவதையும் கண்கூடாகக் காண முடிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று 10 வயதுக்குள்பட்ட சிறுவர்கள்கூட விதவிதமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவலாக இருக்கிறது.

முன்பு பள்ளிகளில் எழுதப் பயன்படுத்தும் குச்சி, சாக்பீஸ் போன்றவற்றைச் சாப்பிடும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதையும், தண்டிப்பதையும் பார்த்திருப்போம்.

ஆனால், இன்று சிறுவர்கள், தங்கள் பெற்றோரின் இரு சக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்க்கை திறந்து, அதனை முகர்ந்து ஒருவிதமான போதையில் கிறங்கி இன்புறுகின்றனர்.

அதேபோல், பந்துமுனை பேனாவால் எழுதியதை அழிக்கப் பயன்படும் ஒயிட்னருடன் ஒருவித ரசாயனத்தையும் முகர்ந்து போதையில் லயிக்கின்றனர்.

மேலும், இருமல் மருந்தாகப் பயன்படும் டானிக்கை மருத்துவர் குறித்துக் கொடுக்கும் அளவுக்கும் மேலே பருகி, அதனால் ஏற்படும் போதையில் திளைக்கின்றனர். வலி நிவாரணியாகப் பயன்படும் ஒரு சில மாத்திரைகளை குளிர்பானங்களில் போட்டு அதைப் பருகி ஏற்படும் போதையில் மகிழ்கின்றனர்.

இவை தவிர, அரசால் தடை செய்யப்பட்ட பாக்கெட் புகையிலை, போதைப் பாக்குகள், கிளர்ச்சியூட்டிகள் என மாணவர்களை போதையின் பாதையில் தள்ளுவதற்கு ஏராளமான பொருள்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

இவற்றையெல்லாம் வெளியுலகுக்கும், தங்களது பெற்றோருக்கும் தெரியாமல் மாணவர்களும், இளைஞர்களும் பயன்படுத்தி போதையில் சுகம் (?) காணத் தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது மிகக் கொடூரமான முறையில் பாம்புக் குட்டியை வைத்து இளைஞர்கள் போதையேற்றிக் கொள்வது இணையதளம் மூலம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு முறை பாம்புக் கடி போதைக்கு ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.

இப்படி போதையில் மூழ்கி வீணாகும் இளைஞர்களையும், சிறுவர்களையும் மீட்டெடுக்க கேரள அரசு "கிளீன் கேம்பஸ்' எனும் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கி போதை குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான, மறுமலர்ச்சித் திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால்கூட நல்லதுதான்.

ஏனெனில், போதையின் பாதையில் இளைய சமுதாயம் தடுமாறி, தடம் மாறி போனால் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

By இராம. பரணீதரன்

சமையல் எரிவாயு நேரடி மானியத்திற்கு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி நேரடி மானியத்திட்டம் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் சிலிண்டர் மானியத்தொகை போடப்பட்டு வருகிறது.

இதனிடையே, சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனிடையே, வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அதில் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு கட்டாயம் என அரசு கூறுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த திட்டத்தில் சேர, அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக அரசு காலக்கெடு விடுத்துள்ளதாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார். ஆனால் இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரடி மானியம் பெறுவதற்கு இதுவரை 86 சதவீதம் நுகர்வோர்கள்தான் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டாள் யார்? - விடை சொல்லும் டிராபிக் ராமசாமி!

01.04.1934 அன்றுதான் இந்த அவதாரப் புருஷன் அவதரித்த நாள். ஆமாம்... அன்றைய தினம் முட்டாள்கள் தினம். ‘குற்றங்களையும் குணக்கேடுகளையும், சமூக அவலங்களையும் எவனொருவன் சகித்துக்கொள்கிறானோ அவனே முட்டாள்’ என உரத்துச் சொல்லும் இந்தக் கிழட்டுப்பயல், முட்டாள்கள் தினத்தில் அவதரித்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஊரே கூடும் அளவுக்கு ஒப்பாரி வைத்து புழுதி கிளம்பும் அளவுக்குப் பூமியை உதைத்த பிறகே நான் பிறந்தேன் என்றாள் என் அம்மா சீத்தம்மாள்.

புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில்தான் வீடு. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்குதான். என் அப்பா ரெங்கசாமி எங்கள் ஏரியாவில் பெரிய மனிதர். இங்குள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் பக்த சபாவின் தலைவராக இருந்ததால் ஏரியாவாசிகளிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. தீவிர காங்கிரஸ்காரர். நேர்மைமிகு ராஜாஜியின் பக்தர்.
நான் வீட்டுக்குத் தலைப்பிள்ளை. எனக்கு அடுத்து ஐந்து தம்பிகள், ஐந்து தங்கைகள். வீடு குழந்தைகளால் நிரம்பி வழிந்தது. வீட்டு வேலைகள் செய்யவும், அப்பாவுக்குப் பணிவிடை செய்யவுமே அம்மாவுக்குத் தலைசுற்றும். தம்பி, தங்கைகளைக் கவனிப்பதுதான் என் முதல் முக்கிய வேலை. அவர்களுக்கு ஆயா முதல் அம்மா வரை எல்லாம் நான்தான். பிறகுதான் படிப்பு, பள்ளிக்கூடம் எல்லாம். தம்பி தங்கைகளைப் பராமரித்தப் பிறகு, அவசர அவசரமாக பள்ளிக்குக் கிளம்பிப் போவேன். தெருவுக்குப் பக்கத்தில் இருந்த கார்ப்பரேசன் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியையும் முடித்தேன்.

அப்பா பெரம்பூர் பி.என்.சி. மில்லில் வேலை செய்தார். அவரின் வருமானம் மட்டும்தான். பிள்ளைகளின் தேவைகளைத் தீர்த்து வைப்பதற்குப் போராடுவார். நானும் வேலைக்குப் போனால் அப்பாவின் கஷ்டத்தைக் குறைக்கலாம் என்று எண்ணி ஒரு வேலையில் சேர்ந்துவிட முடிவெடுத்தேன்.

அப்பா வேலை பார்த்த பி.என்.சி. மில்லில் எனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தார். 1954ல், 48 ரூபாய் சம்பளத்தில் வீவிங் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று வருடம் ட்ரெய்னியாக வேலை. தேடும் நேரத்தில் கிடைக்கிற வேலை வயிற்றைப் பிடித்து இழுத்தபோது கிடைக்கிற ஆகாரத்தைப்போல். அதனால், அந்த வேலையில் மிகுந்த ஆர்வத்தோடு பணியாற்றினேன். இதுதான் வேலை, இத்தனை மணிக்கு வந்தால் போதும் என்கிற சுதந்திரத்தை எல்லாம் சட்டை செய்யாமல் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தேன். எவனொருவன் கடிகாரத்தைப் பார்க்காமல் உழைக்கிறானோ... அவனே கடமைக்காரன். வயிற்றுக்குப் படியளப்பவனிடம் வரையறைக் காட்டி உழைப்பது தவறு. வேலை முடிய இரவு எந்நேரமானாலும் அதுவரை இருந்து பணியை முடித்த பிறகே கிளம்புவேன். இந்தக் கடமை உணர்வு மில்லின் மேலாளர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. அதனால், என்னை விரைவிலேயே பாராட்டி பணி நிரந்தரம் செய்தார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்து இயங்கியதால் அந்த மில்லில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். எல்லா விதத்திலும் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். ஒரு மிலிட்டரி கேம்ப்போல் அந்த மில் இயங்கும்.

நேரம் எவ்வளவு நெகிழ்வானது, நேர்த்தியானது, நேரத்தின் நாடிபிடிக்கும் வித்தையை இங்குதான் கற்றுக்கொண்டேன். நேரத்தை நேர்மையாகச் செலவிடக் கற்றுக்கொண்டால் வாழ்வின் நேர்கோட்டுப் பயணத்தில் நாம் எந்த நெருடலுக்கும் ஆளாக மாட்டோம் என்பது என் எண்ணம்.

மில்லில் நல்லபடியான உத்யோகம்தான் என்றாலும், என் சமூக ஆர்வம் அடிக்கடி கண்விழித்து என்னை உசுப்பேற்றும். காக்கி யூனிபார்முடன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெறிப்படுத்துதலில் இயங்கும் போலீஸாரைப் பார்க்கும்போது அவ்வளவு ஆசையாக இருக்கும். எத்தகைய அர்ப்பணிப்பான பணி இது? காக்கி உடுப்பை உடுத்திக்கொள்ளும்போது எவ்வளவு பெருமிதமாக இருக்கும்? கைநிறையச் சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும், இந்த போலீஸ் அதிகாரிகளைப்போல் சமூகப் பொறுப்பு மிக்க மனிதனாக உருவெடுக்க முடியவில்லையே என்கிற உறுத்தல் எனக்கு மிகுதியாக இருந்தது.

வேலையை விட்டுவிட்டு போலீஸ் பயிற்சி, அதற்கான படிப்புகளில் இறங்கிவிடலாமா என்கிற எண்ணம் பெருக்கெடுத்து ஓடியது. காக்கிச் சட்டையின் மீது நான் கட்டி வைத்திருந்த காதல் அத்தகையது. எந்தக் காக்கி உடுப்பை விரும்பினேனோ... எதை அணிய முடியவில்லை என ஏங்கித் தவித்தேனோ... அந்தக் காக்கிச் சட்டைகளையே பிடித்து உலுக்கும் ஒருவனாக நான் உருவெடுத்தது காலத்தின் கோலம். இன்றைக்கு வேண்டுமானால் காக்கி உடுப்பின் மீது எனக்கு தீராதக் கோபமும், ஆத்திரமும் இருக்கலாம். ஆனால், அன்றையக் காலகட்டத்தில் நான் காவல்துறை மீது வைத்திருந்த மரியாதை சாதாரணமானது அல்ல.

‘போலீஸ் உத்தியோகம் பார்க்கிறோமோ இல்லையோ... அவர்கள் செய்யும் சேவையில் பாதியையாவது செய்தே தீருவது’ என முடிவெடுத்தேன். சனி, ஞாயிறு நாட்களில் மில் விடுமுறை என்பதால், ஊர்க்காவல் படையில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். அப்போது ஊர்க்காவல் படை, போலீஸுக்கு நிகராக இருந்தது. அதில் வேலைக்குச் சேர்ந்தது கிட்டத்தட்ட பாதி போலீஸ் அதிகாரி ஆனதற்குச் சமம்? அதனால், எனக்குப் பெருமை பிடிபடவில்லை. 1963ல் இருந்து 1971 வரை அதில் பணிபுரிந்தேன். 3 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள்.

கோவிந்தசாமி நாயுடு அவர்கள்தான் அப்போது ஏரியா கமாண்டராக இருந்தார். கடமையைக் கண்ணியத்தோடு செய்யக் கூடியவர். சனி, ஞாயிறுகளில் ஜெயின் ஜார்ஜ் ஸ்கூலில் (புத்தகக் கண்காட்சி நடக்குமே) ட்ரெய்னிங் இருக்கும். ட்ரெய்னிங்கில் உடற்பயிற்சி ஹெவியாக இருக்கும். டிராஃபிக் கிளியர் செய்வது எப்படி என்கிற பயிற்சியை இங்குதான் தெரிந்துகொண்டேன். போலீஸின் அதிகாரங்கள் என்னென்ன என்றும், அவர்களின் வேலை என்ன என்பதையும் விளக்கமாக அறிந்தேன்.

மில்லில் வேலை செய்வது, ஊர்க்காவல் படையில் பணியாற்றுவது என 24 மணி நேரமும் பிஸியாக இருந்தாலும், நிமிட நேரத்தைக்கூட வீணடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி ஜவுளி தொடர்பான உயர் படிப்பை (A.I.M.E.) அஞ்சல் வழியில் படித்து பாஸ் செய்தேன். டாடா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பம் அனுப்பிவிட்டு, பழைய மில் வேலையிலேயே தொடர்ந்தேன்.

நிர்வாகம் நடத்திய பதவி உயர்வுத் தேர்வுகள் பலவற்றை பாஸ் செய்து மேலாளருக்கு அடுத்த நிலையில் வந்து அமர்ந்தேன். பொறுப்பு அதிகரிக்கும்போது வேலைச்சுமையும் அதிகரிக்கத்தானே செய்யும். ஒருகட்டத்தில் 24 மணி நேரமும் போதாது என்கிற அளவுக்கு வேலைப்பளு. வேலையைப் பார்த்து அலுத்துக்கொள்கிற ஆள் இல்லை நான். ஆனாலும், வெளி உலகக் கவனிப்புகள் மீது ஆர்வம் பூண்டிருந்த என்னால் ஒரு கட்டடத்துக்குள் அடைபட்டுக் கிடக்க முடியவில்லை என்பதே உண்மை. பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நமக்குக் கீழே நான்கு பேர் கைக்கட்டி நிற்பதைப் பார்த்துப் பெருமிதப்படுவது என நம் எண்ணங்களுக்கு எதிரான சூழல் உருவாகிவிடுமோ... நாமும் அதற்குப் பழக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயம் எனக்குள் உருவானது. அதனாலேயே மில் வேலையில்  இருந்தப் பிடிப்பு மெல்ல மெல்லத் தகர்ந்தது. இருப்பது ஒரு வாழ்க்கை. இந்த வேலையிலேயே நம் ஆயுள் கரைந்து போய்விடுமோ என்கிற யோசனை என்னை விழுங்கத் தொடங்கியது. எப்போது நாம் பார்க்கின்ற வேலையில் நம் பிடி தளர்கிறதோ... அப்போதே அதில் இருந்து வெளியேறுவது நல்லது. நமக்கு மட்டும் அல்ல... நாம் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் அது நல்லது.
அதனால், மிக நல்ல பதவி, கைக்குப் போதுமான சம்பளம் என்கிற நிலையிலும் தைரியமாக ராஜினாமா கடிதம் எழுதினேன். மேல் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. ‘என்னாச்சு உங்களுக்கு?’ எனப் பதறினார்கள். 48 ரூபாயில் தொடங்கிய என் ஊதியம் 2,700 ரூபாயாக உயர்ந்து நிற்பதைச் சுட்டிக் காட்டினார்கள். அன்றைய காலகட்டத்தில் 2,700 ரூபாய் என்பது இன்றைய அரை லகரத்துக்குச் சமம். ‘இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்யணும்னு நினைக்கிறேன் சார். இந்த மில்லுக்குள் அடைந்து கிடந்தால் என்னால் ஏதும் செய்ய முடியாமல் போய்விடும். அதனால்தான் வெளியே போறேன்’ எனச் சொன்னேன். ஏதோ பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார்கள்.

வேலையை உதறிவிட்டு வீட்டுக்கு வந்தால்... டாடா மில்லில் இருந்து வேலைக்கான அழைப்பு வந்திருந்தது. எந்த வேலைக்காக நான் விண்ணப்பம் அனுப்பிக் கனவுகளோடு காத்திருந்தேனோ... அதே வேலை! உடனே கிளம்பி பம்பாய்க்கு வரச் சொல்லி இருந்தார்கள். சம்பளம் 4,500 ரூபாய். ‘அலுவலக வேலைகளே வேண்டாம்... இந்த சமூகம் சார்ந்த ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமே’ என்கிற எண்ணத்தைத் தவிடுபொடியாக்க எத்தனை விதமான தூண்டில்கள் என்னை மொய்க்கின்றன? எப்போதுமே எதை நாம் விட்டுவிட நினைக்கிறோமோ... அதுதான் நம்மை விடாப்பிடியாகத் துரத்தும். வேலை கேட்டு நாயாக அலைந்தபோது கிடைக்காத வேலை... அதைவிட்டுவிடத் துடிக்கிறபோது வீடு வரை துரத்தி வருகிறது. அதுதான் விதி. அதுவும் பெரிய அளவு சம்பளம் என்கிறபோது கொள்கையாவது கோட்பாடாவது என மனதைத் தோற்கடித்துவிடுகிறது புத்திசாலி மூளை.

நீண்ட நேரம் யோசனையில் இருந்தேன். 4,500 ரூபாய் அல்ல... நாலு லட்சமே சம்பளம் கொடுத்தாலும் அது எனக்குத் தேவை இல்லை என உறுதியாக முடிவெடுத்தேன். பம்பாய் டாடா கம்பெனியின் அழைப்புக் கடிதத்தை சட்டெனக் கிழித்துப் போட்டேன். காரணம், அது கையில் இருக்கும் வரை மனதும் சலனத்துடனேயே இருக்கும். எந்த முடிவையும் யோசித்து எடுப்பது நல்லதுதான். ஆனால், அந்த யோசனை ஒருபோதும் நம்மை சபலப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.

சமூகம் சார்ந்து இயங்க வேண்டும் என்கிற உந்துதல் ஒருபக்கம்... அதே நேரம் குடும்பத்தினரைப் பிரிந்து பம்பாய்க்குப் போய் வாழ்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை. இந்த ஒரு பிறப்பில் நம் உறவுகளாக வாய்த்தவர்களைப் பிரிந்துபோய் லட்சக்கணக்கில் சம்பாதித்துத்தான் என்ன புண்ணியம்? குடும்பத்தைப் பிரிந்து போனால் கோடி ரூபாய் லாபம் என்றாலும், அது நமக்கு வேண்டாம் என முடிவெடுத்தேன். அன்பின் கதகதப்பை இழந்து எதையும் சம்பாதித்துவிட முடியாது என்பது என் எண்ணம். ஆனால், எந்தக் குடும்பத்தைப் பிரியக் கூடாது என்றெண்ணி பம்பாய் வேலையை உதறினேனோ... அந்தக் குடும்பமே என்னை அநாதையாகத் தவிக்கவிட்டுப் போனதுதான் வாழ்க்கையின் விசித்திரம்!

- டிராஃபிக் ராமசாமி எழுதிய விகடன் பிரசுரத்தின் ‘ஒன் மேன் ஆர்மி’ நூலில் இருந்து...

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...