Friday, December 4, 2015

வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
2
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 4:15 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:20 AM IST
பூந்தமல்லி,
மழை வெள்ளம் காரணமாக வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
முடக்கம்தொடர் கனமழை காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவில் உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் குன்றத்தூர், மாங்காடு, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
வண்டலூரிலிருந்து மீஞ்சூர் செல்லும் சாலை வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் நிறைந்த தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
படகுகள் மூலமாக...திருமுடிவாக்கம் பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வெளிவட்ட சாலை மெரினா கடற்கரை போல் காட்சி அளிக்கிறது. தொழிற்சாலைகளுக்கு சென்ற ஊழியர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெறுகிறது. படகுகள் செல்ல முடியாத நிறுவனங்களில் உள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
திருமுடிவாக்கம் துணை மின் நிலையத்திற்குள் மழைநீர் அதிகளவில் புகுந்ததால், குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 30–க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று 3–வது நாளாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. அந்த பகுதி மக்கள் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சாலைகள் துண்டிப்புஅடிப்படை தேவைகளான தண்ணீர், பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லிக்கு வெளிவட்ட சாலை வழியாக சில அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
குன்றத்தூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர், போரூர், பூந்தமல்லி, தாம்பரம் செல்லும் முக்கிய சாலைகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ–வை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ–வை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
7
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:21 AM IST
பூந்தமல்லி,
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ–வை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மக்கள் அவதிதொடர் கனமழையால் சென்னை புறநகர் பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதில் குறிப்பாக போரூர், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, திருமுடிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம் உள்ளிட்ட முக்கிய ஊர்களும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.
மின்சாரம், குடிநீர், பால், உணவுகள் என அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் கடந்த 3 நாட்களாக கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிலை குறித்து தெரிந்து கொள்ளமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக விலைபெரும்பாலான பகுதிகளில் வீடுகளின் முதல்மாடி வரை தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகள் முற்றிலும் சேதமடைந்து இருப்பதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வசிக்க முடியாத சூழலால் மூட்டை முடிச்சுகளுடன் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் அகதிகள் போல் வெளியேறி வருகின்றனர்.
பால்கடை, பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம் சென்டர் போன்ற எல்லாஇடங்களிலும் பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. குறிப்பாக பால் அரை லிட்டர் ரூ.50, 20 லிட்டர் குடி தண்ணீர் ரூ.150–க்கும் விற்கப்படுகிறது. இதனை வாங்க முடியாமல் மழைநீரை குடித்தும், ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் உணவுகளை வாங்கி வைத்துக்கொண்டு சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டதால் பொதுமக்கள் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
முற்றுகைஇந்த நிலையில் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை பூந்தமல்லி எம்.எல்.ஏ. மணிமாறன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். பொதுமக்கள் கொந்தளிப்புடன் இருந்ததால் அவர்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள அவர் மோட்டார்சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார்.
மேலும் சில இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ளாத பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர் பகுதியில் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆலந்தூர் பகுதியில் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
3
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:21 AM IST
ஆலந்தூர்,
ஆலந்தூர் பகுதியில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்கவேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கைசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஆலந்தூர் பகுதியில் கடந்த 3 தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், குடிநீர் எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
ஆலந்தூரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தான் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது மின்சாரம் வழங்க வேண்டும் என கடந்த 3 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் ஆலந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.
2 மணி நேரமாவது....ஆனால் வேளச்சேரி, கிண்டி, தரமணி ஆகிய பகுதியில் மழைநீர் வடிந்தால் தான் மின்சாரம் வழங்கப்படும். உங்கள் கோரிக்கை எதுவும் ஏற்கமுடியாது என அதிகாரிகள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
பரங்கிமலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு பொதுமக்கள், தனியார் நிறுவனத்திற்கு 4 மணி நேரம் மின்சாரம் வழங்கிய அதிகாரிகள், பொதுமக்களுக்காக குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்க வேண்டும். 3 தினங்களாக நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம் என கூறினர்.
சாலை மறியல்ஆனால் உதவி பொறியாளர் செந்தில், உயர் அதிகாரிகள் மின்சாரம் வழங்க தடை விதித்து உள்ளதால், நான் எதுவும் செய்யமுடியாது என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர், பாலாஜிநகர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக அவற்றை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும் சென்னை புறநகர்வாசிகள் கத்திப்பாராவில் இருந்து தாம்பரத்துக்கு பஸ்கள் இயக்கம்

வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும் சென்னை புறநகர்வாசிகள் கத்திப்பாராவில் இருந்து தாம்பரத்துக்கு பஸ்கள் இயக்கம்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 5:00 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:21 AM IST
ஆலந்தூர்,
சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
வீடுகளை மழைநீர் சூழ்ந்ததுசென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மீனம்பாக்கம் குளத்துமேடு பகுதியில் உள்ள 500–க்கும் மேற்பட்ட குடிசைவீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
நங்கநல்லூர், பழவந்தாங்கலில் மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆலந்தூர் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். நங்கநல்லூர் நேரு காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. அந்த பகுதிகளை மண்டல குழு தலைவர் பரிமளா நந்தகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் என்.மகேசன், கவுன்சிலர் ஹேமா பரணிபிரசாத் ஆகியோர் பார்வையிட்டனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.
தண்ணீரை வெளியேற்றினர்ஆதம்பாக்கம் நிலமங்கை நகர், சக்தி நகர், பாலாஜி நகர், வேல் நகர், பாரத் நகர், சுரேந்தர் நகர், தில்லைகங்கா நகர், டி.என்.ஜி.ஒ.காலனி, ஆலந்தூர் ராஜா தெரு, கண்ணன் காலனி, புளியந்தோப்பு வேளச்சேரி, ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி, பெரியார் நகர், நேரு நகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
ஆதம்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாநகராட்சி கவுன்சிலர்கள் எம்.ஆர்.நரேஷ்குமார், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றினார்கள்.
வேளச்சேரி அம்பேத்கர் நகர், ஏ.ஜி.எஸ்.காலனி, நேதாஜி காலனி, தண்டீஸ்வரன் நகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. வேளச்சேரி நேதாஜி காலனியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ளவர்களை மீட்க மாநகராட்சி சார்பில் படகுகள் விடப்பட்டன.
சித்தாலபாக்கம்சித்தாலபாக்கம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பனையூர் குப்பம், துரைப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், நன்மங்கலம் வீரமணி நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த பகுதிகளை கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.
உள்ளகரம்–புழுதிவாக்கம் பகுதிகளில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கே.ஜெயசந்திரன், ஜெ.கே.மணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டனர்.
நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் அதிகமாக தேங்கி இருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றினார்கள்.
பெரும்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேறியதால் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இந்த பகுதியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் சுகாசினி ரங்கராஜன் ஆகியோர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேடவாக்கம்மேடவாக்கத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ப.ரவி தலைமையில் ஊராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் ராஜேஷ் நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருந்தது. நன்மங்கலம் பகுதியில் ஏரியில் இருந்து வெளியேறும் நீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மடிப்பாக்கம், மேடவாக்கம், கீழ்க்கட்டளை, முவரசம்பட்டு உள்பட புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் வீடுகளை சூழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியே வராததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சாலை மூடப்பட்டதுசின்னமலையில் இருந்து கிண்டி கத்திப்பாரா வரை சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அடையாறு ஆற்றில் அதிகமான தண்ணீர் சென்றதால் மணப்பாக்கம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடியிருப்பு, முகலிவாக்கம், நந்தம்பாக்கம் பர்மா காலனி, எம்.ஜி.ஆர்.நகர், உட்கீர்ட்கவுண்ட், கணபதிபுரம், பரங்கிமலை துளசிங்கபுரம் போன்ற பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டோண்மெண்ட் திருமண மண்டபம், பள்ளி கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. நந்தம்பாக்கம் காவல் நிலையம் நீரில் மூழ்கியது. இதனால் பரங்கிமலையில் இருந்து போரூர் செல்லும் பூந்தமல்லி–மவுண்ட் சாலை மூடப்பட்டது.
கத்திப்பாராவில் இருந்து தாம்பரத்துக்கு பஸ்கள்கிண்டியில் இருந்து ஈக்காட்டுதாங்கல், போரூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். தேனீர் விடுதி, சிறிய ஓட்டல்களில் கூட்டம் அலை மோதியது. ஆதம்பாக்கத்தில் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டவர்களுக்கு முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், மனோகரன் ஆகியோர் உணவு வழங்கினார்கள். மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் பகுதி மக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.சீனிவாசன் உணவு வழங்கினார். அத்தியாவசிய பொருட்களான பால் உள்பட எதுவும் கிடைக்காமல் பொதுமக்கள் அலைந்தனர்.
சின்னமலையில் இருந்து நடந்து கத்திப்பாரா வரை வந்த பொதுமக்களுக்காக மாநகர பஸ்கள் தாம்பரம் வரை இயக்கப்பட்டன. செல்போன் இணைப்புகள் சரிவர கிடைக்காததால் மக்கள் அவதிப்பட்டனர். தொலைபேசி நிலையங்களில் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பேசிச் சென்றனர்.

சென்னையில் டிசம்பர்-5 வரையில் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது

சென்னையில் டிசம்பர்-5 வரையில் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
131
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 03,2015, 3:50 PM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , டிசம்பர் 03,2015, 3:50 PM IST
சென்னை, 

சென்னையில் டிசம்பர்-5 வரையில் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சென்னை மின்சார ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம்- திருத்தணிக்கு ரெயில்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. 

எண்ணூர்-கும்மிடிபூண்டி மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரெயில் இயக்கப்படுகிறது. 

ரெயில்கள் ரத்து

இந்நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் சேவை வரும் 5-ம் தேதிவரையில் ரத்து செய்யப்பட்டது.
 
தொடர்ந்து கனமழை மற்றும் சென்னை, அதன் சுற்றவட்டாரப் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கிஉள்ளது. இதன் காரணமாக சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து அனைத்து ரெயில்களின் சேவையும் டிசம்பர் 5-ம் தேதி மதியம் 12 மணிவரையில் ரத்துசெய்யப்பட்டது என்று தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள், இவ்வழியாக செல்லும் சிறப்பு ரெயில்களின் சேவையும் டிசம்பர் 5-ம் தேதி மதியம் 12 மணிவரையில் ரத்து செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் மருத்து உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  மதுரை, திருச்சி ஆகிய ரெயில் நிலையங்கள் வரையிலும் மருத்துவ உதவிகள் விரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை ரெயில் நிலையங்களில் உள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வரையில் பாதுகாப்பு கூறுதிசெய்யும் மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பிறஉதவிகளை செய்யும் வண்ணம் ரெயில்வே போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

சென்னை வெள்ளம் அபாயகரமான சூழ்நிலை; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்

சென்னை வெள்ளம் அபாயகரமான சூழ்நிலை; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
29
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 5:15 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 1:38 AM IST
புதுடெல்லி,

சென்னை வெள்ள சேதம் மிக அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

பாராளுமன்றத்தில் விவாதம்

தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் முதல் விவாதம் நடந்து வந்தது. மேலும் புதுச்சேரி, ஆந்திரா வெள்ளச்சேதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

330 மி.மீ. மழை

சென்னையில் வழக்கமாக டிசம்பர் மாதம் முழுவதும் 250 மி.மீ. மழையே பெய்யும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டுமே 330 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்துள்ளது. அந்தவகையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் மழை பெய்துள்ளது. மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு கடும் மழை நீடிக்கும் என்று வானிலை இலாகா கூறியுள்ளது.

மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு சென்னை நகரம் ஒரு தீவாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல. நிலைமை மிக அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது.

269 பேர் சாவு

சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளதால், நிவாரண பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு வசதிகளை பொறுத்தவரை தரைவழி தொலைப்பேசி இணைப்புகள் 60 சதவீதம் வரையும், 40 சதவீதம் அளவுக்கு செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் தற்போது பெய்துள்ள மழையில் சுமார் 269 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 2 பேரும், ஆந்திராவில் 54 பேரும் இறந்துள்ளனர்.

மேலும் நிதியுதவி

மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளுக்காக கடற்படைக்கு சொந்தமான 12 படகுகள் மற்றும் 155 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவை சேர்ந்த 14 பிரிவு வீரர்களை விமானப்படையும் அனுப்பியுள்ளது.

தமிழக மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.8 ஆயிரத்து 481 கோடி நிதி வேண்டும் என மாநில அரசு கேட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.940.92 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அங்கு பார்வையிட்டு திரும்பியுள்ள மத்தியக்குழுவின் அறிக்கைப்படி மேலும் நிதியுதவி வழங்கப்படும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார். 

வெள்ள சேதம் காரணமாக மத்திய அரசு அறிவிப்பு; தமிழகம் முழுவதும் 11-ந்தேதி வரை சுங்கவரி வசூலிப்பு ரத்து

புதுடெல்லி,

வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் 11-ந் தேதி வரை சுங்கவரி வசூலிப்பதை மத்திய அரசு ரத்து செய்தது.

சுங்கவரி ரத்து

தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கவரி வசூல் மையங்களில் வருகிற 11-ந் தேதி வரை வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நேற்று தேசிய சாலைபோக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

நிவாரணப் பணிகளுக்காக...

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு முகமைகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

இந்த பணிகளை எளிமையாக்கும் விதமாக சுங்கவரி வசூல் மையங்களில் வரி வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

NEWS TODAY 18.12.2025