Tuesday, December 15, 2015

அழிவுக்கு காரணம் ஆக்கிரமிப்புதான்

logo

ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தையே கருணையோடு தமிழ்நாட்டை பார்க்கவைக்கும் வகையில், கனமழை பெய்து வெள்ளம்... வெள்ளம் எங்கு பார்த்தாலும் வெள்ளம் என்ற அளவில், ஒரு சமுத்திரத்தை போன்ற தோற்றத்தை சென்னை உள்பட தமிழகத்தில் உருவாக்கிவிட்டது. ஏரிகள் எல்லாம் நிறைந்து கரைபுரண்டு ஓடி, தங்கள் பாதையைவிட்டு திரும்பிய இடத்திற்கெல்லாம் சென்று சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இயற்கையின் பேரிடருக்கு யாரையும் காரணமாக சொல்லமுடியாது என்றாலும், பல சேதங்கள் நிச்சயமாக ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்டதுதான் என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், அந்த பகுதியில் பொறுப்பாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சென்னையில் முன்பு மாநகராட்சி இணை ஆணையாளராக அபூர்வா இருந்தபோது பல ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றி ஆக்ஷன் அபூர்வா என்று பெயர் பெற்றார்.

சென்னையை அடுத்த முடிச்சூர் இப்போது வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. இந்த தண்ணீரை எப்படி வடிகட்டுவது, எங்கே போய்விடுவது என்று எல்லோரும் தவித்தனர். இந்த நேரத்தில் நிவாரண பணிகளை மேற்பார்வையிட அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா அதிரடி நடவடிக்கை எடுத்தார். அந்த வெள்ளத்துக்கு காரணமாக இருந்த அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களையும் ஜே.சி.பி. இயந்திரங்களைக்கொண்டு இடித்து அகற்றினார். ஆக, அதிகாரிகள் நினைத்தால் எந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றமுடியும் என்பதை இரு பெண் அதிகாரிகளும் நிரூபித்து விட்டார்கள்.

இவ்வளவு பெரிய சேதத்திற்கும் காரணம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புதான் என்பதை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிலையத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள நீர்நிலைகள், திறந்தவெளி இடங்கள் போன்றவற்றில் 4–ல் ஒருபகுதி கட்டிடங்களாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3,600 ஏரிகள் ஒருகாலத்தில் இருந்த நிலைமாறி, இப்போது 3 ஆயிரம் ஏரிகள்தான் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், 19 ஏரிகள் 1980–ம் ஆண்டுகளில் 1,130 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து, இப்போது 645 ஹெக்டேருக்கும் குறைவாக ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டது. இந்தநிலை சென்னையில் மட்டும் இல்லை, தமிழ்நாடு முழுவதுமே ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய இடமாக நீர்நிலையாகத்தான் இருக்கிறது. அரசாங்கங்களே பல நீர்நிலைகளில் கட்டிடங்களை கட்டிவிட்டன. பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் ரேஷன் கார்டு, மின்சார வசதி, பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள் நிச்சயமாக தண்டனைக்குரியவர்கள்தான். சென்னையிலும், முடிச்சூரிலும் இரு பெண் அதிகாரிகள் நினைத்தால் ஓரிரு நாட்களில் எல்லா ஆக்கிரமிப்புகளையும் இடித்து தள்ளமுடியும் என்றநிலை இருக்கும்போது, அதே சட்டத்தை கையில் எடுத்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்தால், பாதிக்கப்படப்போவது ஆயிரக்கணக்கானவர்கள் என்றாலும், பாராட்டப்போவது 7 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக்கொண்ட ஒட்டுமொத்த தமிழகமும்தான். ஆக, வெள்ளத்திற்கு மீட்பு, நிவாரணம் ஆகிய பணிகளுக்கு அடுத்து சீரமைப்பை மேற்கொண்டு இருக்கும் தமிழக அரசு, ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்ற அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட ஊக்குவிக்கவேண்டும். அதிகாரிகளையும் வெங்கையா நாயுடு சொன்னதுபோல, ஆக்கிரமிப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்க வேண்டும்.

Saturday, December 12, 2015

புதின் பருவமா, புதிர்ப் பருவமா 11: காளையை அடக்க என்ன செய்யலாம்?


  
1
ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
இளம் வயதில் சமூகவிரோதச் செயல்களைச் சார்ந்து இளைஞர்கள் தடம் புரள்வது பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இந்தப் பிரச்சினைகளுக்கான காரணத்தைப் புரிந்துகொண்டு, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இளைஞர்களிடம் எப்படி மாற்றத்தைக் கொண்டுவரலாம்?:
* வகுப்புகளில் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, ஒருவர் மாற்றி ஒருவரை தலைமைப் பொறுப்பை ஏற்கவைத்துப் பள்ளி சார்ந்த பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்கலாம். சிறுவயதில் தலைமைப் பண்பு வளரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
* பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகளைப் பாடமாக நடத்துவதைவிட சிறு குழு விவாதங்களாகவோ, நாடகங்களாகவோ (Role play) நடத்தலாம்.
* பள்ளிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை வேறுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அது அவர்களுடைய தனித்தன்மையைப் பாதிப்பதுடன் காழ்ப்புணர்ச்சியையும், தாழ்வுமனப்பான்மையையும் அதிகப்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும்.
* மற்றவர்களிடம் பேசிப் பழகும் திறன் (Interpersonal skills), இதுபோன்ற வளர்இளம் பருவத்தினரிடம் பெரும்பாலும் குறைவாகக் காணப்படும். சிறுவயதிலேயே, மனதில் தோன்றும் பிரச்சினைகளை ஆரோக்கியமான வார்த்தை வடிவில் வெளிப்படுத்தும் திறனை வளர்க்க உதவ வேண்டும். மேலும் பிரச்சினைகளை விட்டு விலகிச் செல்வதைவிட, அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* பொழுதுபோக்குக்காகச் சினிமா தியேட்டர்களை நாடி செல்வதைவிட ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு வளர்இளம் பருவத்தினரை அவ்வப்போது அழைத்துச் சென்று, மற்றவர்களுக்கு உதவக் கற்றுக்கொடுக்க வேண்டும். மனித உயிரின் முக்கியத்துவத்தை இது அவர்களிடம் உணர்த்தும்.
* Attention defecit and hyperkinetic disorder (ADHD) என்று அழைக்கப்படும் அதீதத் துருதுருப்பு, கவனக்குறைவு மற்றும் அதிக எழுச்சிக்கு ஆளாகும் குழந்தைகள் வளர்இளம் பருவத்தில் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், இப்படிப்பட்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகளை மனநல மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவது நல்லது.
* இது போன்றவர்களிடம் தீவிரக் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே போதைப்பொருள் பழக்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி இருக்கும்பட்சத்தில் ஆரம்ப நிலையிலேயே மனநலச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது, நிலைமை கைமீறிச் செல்வதைத் தடுக்கும்.
(அடுத்த முறை: வாழ்க்கை வாழ்வதற்கே)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா?- 10: தடம் மாறலாம்? தடம் புரளலாமா? - டாக்டர் ஆ.காட்சன்

Return to frontpage

என்னை அவன் அடிச்சிட்டான்மா...' என்று பெற்றோர்களிடம் புகார் பத்திரம் வாசித்த காலம் எல்லாம் மலையேறி, ‘மச்சி, அவன் என்னை அடிச்சிட்டான்டா. பதிலுக்கு நாம அவனுக்குச் செமத்தியா திருப்பிக் குடுக்கணும்டா' என்று நண்பர்களைப் பக்கபலமாகச் சேர்த்துக்கொண்டு அடிதடியில் இறங்கும் காலம் வளர்இளம் பருவம்.

சமீபகாலமாகப் பள்ளிகளில் வன்முறைச் சம்பவங்கள் பெருகிவருவது வளர்இளம் பருவத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய சவால்தான். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி ஏற்படும் கைகலப்புகளில் தொடங்கிக் கொலைச் சம்பவங்கள்வரை அடிக்கடி வன்முறை அரங்கேறி வருகிறது. சில நேரம் ஆசிரியர்களையே தாக்கும் அளவுக்குப் பிரச்சினை உருவாகிறது. மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கும்போதும் விபரீதங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

குற்ற உணர்ச்சியற்ற நிலை

எல்லா வளர்இளம் பருவத்தினரும், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கிடையாது. அதேநேரம், இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் அவ்வப்போது சில முன்னெச்சரிக்கை அறிகுறிகள் காணப்படும். இவர்களுடைய குடும்பச் சூழல் பெரும்பாலும் திருப்திகரமாக இருக்காது.

சிறிய பிரச்சினைகளுக்குக்கூட வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவது, ஆயுதங்களைப் பயன்படுத்துவது, மற்றவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பது, பழிவாங்கும் செயல்கள், தன் கையைக் கிழித்துக்கொள்வது அல்லது அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற தன்மைகள் காணப்பட்டால் நிச்சயம் அவர்கள் கவனத்துக்கு உரியவர்கள்.

சின்ன வயதில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதுதான், தற்போது நடக்கும் பல்வேறு ஆக்ரோஷமான சம்பவங்களுக்கு முக்கியக் காரணம். இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது, தான் செய்யும் தவறான செயல்கள் மற்றவர்களைப் பாதிக்கும் என்ற குற்றவுணர்ச்சி அற்ற மனநிலைதான். இது இளைஞர்களைக் கூலிப்படையினராக மாற்றும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது.

விதிமீறல்கள்

வளர்இளம் பருவத்தினர் அவ்வப்போது சில விதிமீறல்களில் ஈடுபடுவது சகஜம்தான். அது அவர்களுடைய வளர்ச்சியின் ஒரு பாகமாகவே காணப்படும். ‘இளம் கன்று பயம் அறியாது' என்று சொல்வது இதனால்தான்.

எதையும் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணம், புதிய விஷயங்களில் நாட்டம், விபரீதங்கள் மற்றும் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத தன்மை போன்றவை இவர்களைச் சில நேரம் சேட்டைகளில் ஈடுபடவைக்கிறது.

அதிலும் பலர் தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தச் சேட்டைகள் அதிகரிக்கும். எதிர்பாலினத்தைக் கவர்வதற்கு இவர்கள் எடுக்கும் சில முயற்சிகள், மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கலாம். அவர்களே சில வருடங்கள் கழித்து யோசித்துப் பார்த்தால், எத்தனை கோமாளித்தனமான செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்று புரியும்.

சமூகவிரோதச் செயல்பாடு

அதேநேரம் சில வளர்இளம் பருவத்தினரிடம், இந்த விதிமீறல்கள் எல்லை மீறிச் செல்லும்போது, அவர்களுடைய குணாதிசய உருவாக்கத்திலும் மாற்றம் காணப்படும். சமூகவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள் எல்லோரும் திடீரென்று ஒரே நாளில் உருவாகிவிடுவதில்லை. அதற்கான ஆரம்ப அறிகுறிகள், வளர்இளம் பருவத்திலேயே காணப்படும்.

பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இவர்கள் சிம்மசொப்பனமாகவே இருப்பார்கள். சின்ன வயதில் இவர்களுக்கு எத்தனை தண்டனைகள் கொடுத்தாலும், தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மாறாகப் பிரச்சினை தீவிரமடையும். இவர்கள் பின்னாட்களில் சமூகவிரோதிகளாக (Antisocial) உருவாக வாய்ப்பு இருக்கிறது.

ஓடிப்போவது

ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, சில வளர்இளம் பருவத்தினருக்கு வீட்டை விட்டு ஓடிப்போவது வாடிக்கையான விஷயமாக மாறிவிடும். அப்பா அடித்தாலோ, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலோ சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயாவது ஓடிப்போவது நடக்கும். இது ‘குணரீதியாக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்' எனப் பெற்றோருக்கு மறைமுகமாகச் சொல்லும் எச்சரிக்கை.

அதற்கு முன்னரே இரவில் அடிக்கடி வெளியில் தங்குவது, நண்பர்களுடன் குறிப்பாக வயதில் மூத்தவர்களுடன் ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவது வழக்கமாக இருக்கும். பள்ளிக்குச் செல்லாமல் அடிக்கடி படத்துக்குச் செல்வதும் கவனிக்கத்தக்க மாற்றம்தான்.

கும்பல் சேருதல்

உணவு இடைவேளையின்போது பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையிலோ, ஒதுக்குப்புறமான இடங்களிலோ இப்படிப்பட்டவர்கள் கூடுவார்கள். இதுதான் இளம் சமூகவிரோதிகள் உருவாகும் மையம். பல புதிய நட்புகளுடன் போதைப்பொருட்களின் அறிமுகமும் இங்குதான் கிடைக்கும். ஒன்றாகச் சேர்ந்து புகைப்பது முதல் கஞ்சா பயன்படுத்துவதுவரை கற்றுக்கொள்வார்கள். தன்பாலின உறவு ஏற்படவும் வாய்ப்புண்டு.

சில நேரம் இளம்வயதிலேயே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது, பிறரைக் காயப்படுத்திப் பார்ப்பதில் அலாதி இன்பம் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளும் காணப்படலாம். மனசாட்சி மரத்துப்போவது சில நேரம் குரூரச் செயல்களாக வெளிப்படும். அதற்காக இவர்கள் வருத்தப்படுவதும் இல்லை.

பொய் மூட்டை

அதேபோலச் சிலரிடம் அப்பாவின் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய் திருடுவதில் ஆரம்பிக்கும் பழக்கம், பூட்டை உடைத்துத் திருடுவதுவரை போகக்கூடும். அவர்களின் புத்தகங்களுக்குள் ரூபாய் நோட்டை வைத்தால் பத்திரமாக இருக்கும் அளவுக்கு, படிப்பில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. பொய் சொல்வதில் போட்டி வைத்தால், இவர்களுக்குத்தான் முதலிடம் கிடைக்கும்.

அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக எத்தனை பெரிய பொய்யையும் சாதாரணமாகச் சொல்லப் பழகிவிடுவார்கள். அதேநேரம் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ள, எந்த நிலைக்கும் இறங்கிவருவார்கள்.

காரணங்கள்

‘தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை' என்ற சொலவடையின்படி பெற்றோருடைய நன்னடத்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் குழந்தைகளைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் போதைப்பழக்கம் (அது சார்ந்த மற்றப் பழக்கங்கள்) உள்ள பெற்றோருக்கும் வளர்இளம் பருவத்தினரின் சமூகவிரோதக் குணமாற்றங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற சமூகவிரோத நடவடிக்கைகளில் சில நேரம் ஈடுபடலாம். போதைப்பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதனால் ஏற்படும் மனநோய்களும்கூட இதுபோன்ற அறிகுறிகளாக வெளிப்படும்.

கூடுதல் காரணங்கள்

குழந்தைப் பருவத்தில் அதிக அளவில் கார்ட்டூன் படங்கள் மற்றும் வீடியோ கேம்களில் ஈடுபடுவது பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் வரும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் அதிகத் துறுதுறுப்பை ஏற்படுத்துவதுடன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனையும் பாதிக்கும். மனிதர்களை உயிராகப் பாவிக்காமல், பொருட்களாகப் பாவிக்கும் மனநிலை ஏற்படும்.

மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையை இது பாதிக்கும். வளர்இளம் பருவத்தில் பல உறவுரீதியான சிக்கல்களையும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளையும் இது ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்டவை எல்லாம், இந்தக் குணநல மாற்றம் கொண்டவர்களைக் கொடூரர்களாக சித்தரிப்பதற்கு அல்ல. வளர்இளம் பருவத்தில்தான் இந்த மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், சாதகமற்ற குடும்பச் சூழல், சமுதாயச் சூழல் மற்றும் அவர்களுடைய மனரீதியான பிரச்சினைகளை ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

(அடுத்த முறை: காளையை அடக்க என்ன செய்யலாம்?)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

பார்வையைப் பறிக்கலாம், ஒரு சொட்டு! ................... மு. வீராசாமி கட்டுரையாளர், தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்



மருந்துக் கடையில் மருந்து வாங்கிக்கொண்டிருந்தபோது, தன் குழந்தைக்கு இரண்டு நாட்களாகக் கண்ணில் சிவப்பாக இருப்பதாகவும், அதற்குச் சொட்டுமருந்து கொடுக்குமாறும் பக்கத்தில் ஒருவர் கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

கடைக்காரர் கொடுத்தது ‘ஸ்டீராய்டு’ வகை சொட்டுமருந்து. மருந்தை வாங்கிக்கொண்டிருந்தவர் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையின் அதிகாரி என்று அவருடைய கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை சொன்னது.

அவரிடம் , "கண் சிவப்பாவதற்கு இதுபோன்ற ‘ஸ்டீராய்டு’ சொட்டு மருந்தைப் போடக்கூடாது, மருத்துவரிடம் காண்பித்து என்ன காரணம் என்று அறிந்து முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றேன். அவ்வளவுதான். ‘ஏன் சார்? மருந்து வாங்குனமா, போனோமான்னு இல்லாம, உங்களுக்கு ஏன் சார் இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம்’ என்று கோபமாகிவிட்டார். ஆனால், இப்படிச் செய்வதன் ஆபத்து அவருக்குத் தெரியவில்லை.

அலட்சியம் வேண்டாம்!

ஒருவருடைய கண் எப்போது வேண்டுமானாலும் சிவப்பாக மாறலாம். கண் எதற்காகச் சிவந்தாலும் மெட்ராஸ் ‘ஐ’ என்று பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். அது பெருந்தவறு. பல ஆபத்தான கண் நோய்களின் வெளிப்பாடாகவும் அது இருக்கலாம்.

அதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் மேலே சொன்ன சம்பவத்தில் வாங்கப்பட்ட ஸ்டீராய்டு சொட்டுமருந்துபோல ஏதாவது ஒரு மருந்தை, பிரச்சினை எதனால் என்று அறியாமலேயே பயன்படுத்துவது மிகமிக ஆபத்தானது. ஒருவேளை அது மெட்ராஸ் ‘ஐ’யாக இருக்கும்பட்சத்தில் ஸ்டீராய்டு சொட்டுமருந்தால் பார்வையே பாதிக்கப்படலாம்.

பின்னால் ஏற்படப்போகும் இது போன்ற விபரீதங்களை அறியாமலேயே, கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்குப் பலரும் இதுபோல் கண்ட கண்ட சொட்டுமருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ‘சரியாகாவிட்டால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனப்போக்குதான் இதற்குக் காரணம். சாதாரணச் சொட்டுமருந்து என்னவெல்லாம் பாடாய்ப்படுத்தும் என்பதைச் சில சம்பவங்களை நமக்குத் தெளிவாக உணர்த்தும்.

ஆசிரியரின் பார்வையிழப்பு

பள்ளியில் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்தபோது, அந்த ஆசிரியருக்குக் கண்ணில் திடீரென ஓர் உறுத்தல். சாக்பீஸ் துகள் விழுந்ததால் ஏற்பட்ட உறுத்தல் அது. தூசி விழுந்ததும் எல்லோரும் செய்வதைப்போல, உறுத்தல் காரணமாக அந்த ஆசிரியரும் கண்களை நன்றாகத் தேய்த்துவிட்டார்.

மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் கண் நன்றாகச் சிவந்து, நீர்வடிதலுடன் வலியும் அதிகமானது. அவசரத்துக்கு வீட்டில் இருந்த, அவருடைய பாட்டிக்குக் கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்திய, மீதம் இருந்த சொட்டுமருந்தை எடுத்துக் கண்ணில் விட்டார்

. அது ஸ்டீராய்டு வகை சொட்டுமருந்து. கண்ணை நன்றாகத் தேய்த்தது ஒருபுறம்; ஸ்டீராய்டு சொட்டுமருந்தை விட்டது இன்னொருபுறம். அது காலாவதியான, கெட்டுப்போன சொட்டுமருந்து. எல்லாம் சேர்ந்து கண்ணின் விழிப்படலத்தை (Cornea) மோசமாகப் பாதித்துவிட்டன.

எவ்வளவோ முயன்றும் கண்ணில் ஏற்பட்ட புண்ணை மட்டுமே குணப்படுத்த முடிந்தது. விழிப்படலம் கெட்டுப்போனதால் பார்வை கிடைக்கவில்லை. விழிப்படலப் புண்ணுக்கு ஸ்டீராய்டு சொட்டுமருந்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன் இதுதான்.

பார்வை மங்கலா?

ஒரு தொழிலதிபருக்குக் கண்ணில் ஒரு மாதமாகவே பார்வை மங்கலாக இருப்பதுபோலிருந்தது. கண்ணைக் கசக்கிப் பார்த்தார். தேய்த்துவிட்டுப் பார்த்தார். தெளிவின்மை சரியாகாததால் வழக்கம்போல் மருந்துக்கடையில் சொட்டுமருந்தை வாங்கி விட்டுப் பார்த்தார்.

அவருடைய ‘காண்ட்ராக்ட்’ வேலையில் மும்முரமாக இருந்ததால், ஒரு பாட்டிலுக்கு இரண்டு பாட்டிலாகப் போட்டுப் பார்த்தார். இத்தனைக்கும் அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரா என்றால், அதுவுமில்லை.

ஒருநாள் பார்வை பிரச்சினை அதிகமாகவே, வேறு வழியில்லாமல் கண் மருத்துவரிடம் சென்றார். கண் மருத்துவர் பார்த்துவிட்டு விழித்திரையில் ரத்தம் கசிந்து ‘நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு’ ஏற்பட்டுள்ளதாகவும், 50 சதவீதப் பார்வை ஏற்கெனவே இழக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லிவிட்டார்.

சுயவைத்தியம் வேண்டாம்

மருந்து கடையில் நாமாகவே வாங்கிப் பயன்படுத்தும் சொட்டு மருந்தால் ஏற்படும் இன்னொரு பிரச்சினையையும் பார்ப்போம். மனைவிக்குக் கண்ணில் ஏற்பட்ட லேசான உறுத்தலுக்கு, சொட்டுமருந்தைப் போடலாம் என்று நினைத்த ஒரு கணவர், மருந்துக் கடைக்கு விரைந்தார்.

இரவு நேரமாகிவிட்டதால் கடையை அடைத்துக்கொண்டிருந்தார்கள். வந்தவர் தன் மனைவியின் பிரச்சினையைச் சொல்லி, சின்ன பிதுக்கு மருந்து கொடுக்கும்படி கேட்டார். அவர் கேட்டது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சின்ன ‘அப்ளிகேப்ஸ்’ களிம்பு. கடைப்பையன்கள் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், முதலாளி மட்டுமே இருந்தார்.

அவரும் வீட்டுக்குப் போக வேண்டிய அவசரத்தில் சின்ன அப்ளிகேப்ஸை வேகவேகமாக எடுத்துக்கொடுத்தார். கண்ணுக்குப் போடக்கூடிய சின்ன அப்ளிகேப்ஸும், ஆவி பிடிக்கப் பயன்படுத்தும் சின்ன அப்ளிகேப்ஸ் மருந்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அவசரத்தில் ஆவி பிடிக்கப் பயன்படுத்தும் அப்ளிகேப்ஸை அந்த முதலாளி எடுத்துக் கொடுத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்து கண்ணில் மருந்தைப் போட்டதும் மனைவியின் கதறலைக் கேட்டுத் துடிதுடித்துப் போய்விட்டார் கணவர். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தண்ணீரைக்கொண்டு கண்ணைக் கழுவிப் பார்த்தார், ஒன்றும் சரியாகவில்லை. மறுநாள் மருத்துவர் பார்த்துவிட்டு விழிப்படலம் (Cornea) கடுமையாகச் சேதமடைந்துவிட்டதாகவும், பார்வை முழுவதுமாகக் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லிவிட்டார்.

செல்போனில் ஏதாவது ஒரு சின்னப் பிரச்சினை என்றாலும் கடைகடையாகத் தூக்கிக்கொண்டு ஓடுகிறோம். ஆனால், வாழ்நாள் முழுவதற்கும் அவசியமான கண்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தரும் முக்கியத்துவம், இப்படித்தான் இருக்கிறது.

முறையான சிகிச்சை

கண் சொட்டு மருந்தில் பல வகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எந்த வகை சொட்டு மருந்தைப் பயன்படுத்துவது என்பதைக் கண் மருத்துவர்தான் சரியாகக் கூற முடியும்.

தொடக்கத்திலேயே மருத்துவரிடம் சென்று முறையாக மருத்துவம் செய்துகொள்வதன் மூலம், கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளை முழுவதுமாகக் குணப்படுத்திவிட முடியும். சுயவைத்தியம் செய்து தாமதமான நிலையில் மருத்துவரிடம் செல்லும்போது, ஒருவேளை பார்வையே இழக்கப்பட்டிருக்கலாம்.

அதேபோல மருத்துவச் சிகிச்சையின் கீழ் கண்ணில் பிரச்சினை சரியானதுமே, மீதமுள்ள சொட்டுமருந்தை - ‘காசு கொடுத்து வாங்கியது’ என்று நினைத்துப் பத்திரப்படுத்தாமல், தூக்கி எறிந்துவிடுவதே நல்லது. இதன்மூலம் வீட்டில் வேறு யாருக்காவது கண்ணில் பிரச்சினை ஏற்படும்போது, தவறுதலாக அதை எடுத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.

‘பார்வை பாதுகாப்பு’ என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சியோடு தொடர்புடையது என்பதை மனதில் கொள்வோம்.

- கட்டுரையாளர், தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

கணக்கெடுக்கும் பணி தீவிரம்: ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை- வங்கிக் கணக்கு தொடங்கவும் ஏற்பாடு; பயனாளிகள் மகிழ்ச்சி .... ப.முரளிதரன்

வெள்ள நிவாரண உதவி வழங்கு வதற்கான கணக்கெடுப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. நிவாரணத் தொகையை ஒரு வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் கூறுகின்றனர். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வீட் டுக்கே வந்து கணக்கு தொடங்க படிவம் வழங்கப்படுவதால் பய னாளிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
தமிழகத்தில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு ரூ.5 ஆயிரமும், குடிசை களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரண உதவி யாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இத்தொகை நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
இதுதவிர, ரேஷன் கடைகள் மூலம் 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.
பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்குவதற்காக, பாதிக்கப்பட்ட இடங்களில் கணக் கெடுப்பு பணியில் வருவாய் துறை யினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சென்னை புழல் பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட் டுள்ள வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வீடு வீடாக கணக்கெடுப்பு
வெள்ளத்தால் வீடு சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், உடைமைகள் சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இரண்டும் சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிவாரண உதவி சரியான பயனாளிகளுக்குச் சென்று சேரவேண்டும் என்பதற்காக வருவாய் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெயர், வீட்டு முகவரி, அடையாளச் சான்று போன்ற குறிப்பிட்ட தகவல்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன.
வங்கிக்கணக்கு இருந்தால்..
வங்கிக் கணக்கு வைத்திருந்து, அதற்கான ஆவணங்களை இழந் தவர்கள் தங்கள் பெயர், வங்கி கிளை ஆகிய விவரங்களை கூறினால் போதும். அதன் அடிப் படையில், குறிப்பிட்ட வங்கிக்குச் சென்று அவர்களது மற்ற விவரங்கள் பெறப்பட்டு, வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை போடப்படும்.
கணக்கு இல்லாவிட்டால்..
இதுவரை வங்கிக் கணக்கு தொடங்காமல் இருப்பவர்கள், புதிதாக கணக்கு தொடங்க நாங் களே படிவம் வழங்குகிறோம். இதை பூர்த்தி செய்து முன்னோடி வங்கியில் சமர்ப்பித்து, வங்கிக் கணக்கு தொடங்கலாம். கணக் கெடுப்பு முடிந்த ஒரு வாரத்துக்குள் இந்த நிவாரண உதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து முன்னோடி வங்கி அதிகாரிகள் கூறிய போது, ‘‘வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அருகே வசிக்கும் மக்களுக்கு வங்கிகளில் கணக்கு தொடங்குவது சம்பந்த மாக வங்கிகளுக்கும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. மழை வெள்ளத் தில் வங்கி பாஸ்புக் தொலைந்து விட்டாலும்கூட, அவர்களது வங்கிக் கணக்கில் பணம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
பயனாளிகள் மகிழ்ச்சி
இதுபற்றி புழல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித் தொழிலாளி கூறும்போது, ‘‘வெள் ளத்தில் என் குடிசை வீடு முழு வதுமாக சேதம் அடைந்துவிட்டது. எனக்கு எந்த வங்கியிலும் இதுவரை கணக்கு இல்லை. என் வீட்டுக்கு கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கித் தருவதாக கூறியுள்ளனர். மக்கள் சிரமப்படாமல், இருக்கும் இடத் துக்கே வந்து வங்கிக் கணக்கும் தொடங்கித்தந்து, அதில் நிவாரண பணத்தைப் போட நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது’’ என்றார்.

செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னை வெள்ளமும்! ................வி.தேவதாசன்

செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னை வெள்ளமும்!

வி.தேவதாசன்
COMMENT (3)   ·   PRINT   ·   T+  
சென்னையில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக முழு கொள்ளலவை எட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி. | படம்.ம.பிரபு.
சென்னையில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக முழு கொள்ளலவை எட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி. | படம்.ம.பிரபு.

அடுத்தடுத்து விமர்சனங்கள்.. அடுக்கடுக்காய் கேள்விகள்..

*
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எப்போது அதிக அளவில் உபரி நீரை வெளியேற்றுவது என்பதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இதுவே சென்னையின் வெள்ளப் பாதிப்புகளை அதிகமாக்கி விட்டது என்றும் பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.
குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி இரவு வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்று காலை நிலவரப்படி வெறும் 900 கன அடி மட்டுமே வெளியேற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி பிரதானமாக எழுப்பப்படுகிறது.
நவம்பர் 30, டிசம்பர் 1-ம் தேதி வாக்கில் கனமழை பெய்யக் கூடும் என உள்நாட்டு வானிலை ஆய்வு மையங் களும், சர்வதேச வானிலை நிறுவனங் களும் எச்சரிக்கை செய்தன. எனினும் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத காரணத்தால் செம்பரம்பாக்கம் அணையின் நீர் அளவை கையாள்வதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அணை நீர்மட்ட நிலவரம்
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. சென்னை குடிநீர் வடிகால் வாரிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி ஏரியின் நீர் இருப்பு வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் அடுத்த பத்து நாட்களிலேயே மூன்று மடங்கு அதிகரித்து, நவம்பர் 10-ம் தேதி 791 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்தது.
அதன் பிறகு பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. குறிப்பாக நவம்பர் 16-ம் தேதி வினாடிக்கு 9 ஆயிரத்து 717 கனஅடி, மறுநாள் 17-ம் தேதி 12 ஆயிரத்து 31 கன அடி என்ற அளவுக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. நவம்பர் 1-ம் தேதி 228 மில்லியன் கன அடி மட்டுமே இருந்த நீர் இருப்பு 17-ம் தேதி 3 ஆயிரத்து 197 மில்லியன் கன அடி என்ற அளவுக்குத் தண்ணீர் பெருகியது.
இதன் காரணமாக முதல் நாள் வரை வினாடிக்கு வெறும் 64 கன அடி வரை மட்டுமே வெளியேற்றப்பட்ட உபரி நீர் 17-ம் தேதி திடீரென 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அதன் பிறகு அணையின் நீர் இருப்பை 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் இருக்குமாறு பொதுப் பணித் துறையினர் பராமரித்து வந்தனர். நவம்பர் 25-ம் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 629 கனஅடி நீர்வரத்து இருந்த போது 5 ஆயிரம் கன அடியும், நவம்பர் 28-ம் தேதி 610 கன அடி நீர் வந்தபோது, 500 கன அடியும் வெளியேற்றினர். அதாவது ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப வெளியேற்றும் நீரின் அளவையும் பராமரித்தனர்.
இதற்கிடையே நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மிகக் கனத்த மழை பெய்யக் கூடும் என்ற வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தன. இந்த நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஏரிகள் முழுவதும் நிரம்பி இருந்தன. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைப் போலவே மழை பொழிந்தால் அந்த ஏரிகளில் இருந்து வினாடிக்குப் பல்லாயிரக்கணக்கான கனஅடி வீதத்தில் உபரி நீர் வெளியேறும் என்பதும், அவை யாவும் சென்னைக்குள்தான் புகும் என்பதும் எதார்த்தம். ஆகவே, அதே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் பெரிய அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டால் பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்பதும் நிச்சயம்.
ஆனால் இந்த ஆபத்தைச் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் கணிக்கத் தவறிவிட்டனர் என்பதே இப்போது பிரதான விமர்சனமாகக் கூறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய இணையதளத் தகவல்களின்படி, நவம்பர் 29-ம் தேதி வினாடிக்கு 570 கன அடி, நவம்பர் 30-ம் தேதி வினாடிக்கு 600 கன அடி என்ற அளவிலேயே நீர் வெளியேற்றம் இருந்துள்ளது.
பெரும் மழை பெய்த டிசம்பர் 1-ம் தேதி கூட முதலில் வினாடிக்கு 900 கன அடி என்ற அளவில் மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏரிக்கான நீர் வரத்து அதிகரிக்கவே, அதன் பிறகு வெளியேற்றும் நீரின் அளவையும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி அதிகபட்சமாக 29 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
நவம்பர் 30-ம் தேதியே மழை தொடங்கிவிட்ட போதிலும் செம்பரம் பாக்கம் அணையிலிருந்து அதிக அளவு உபரி நீரை வெளியேற்றாததன் காரணம் என்ன என்பதுதான் இப்போது விவாதத்துக்குரிய கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்துப் பொதுப் பணித் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
ஓர் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு நீரை வெளியேற்ற வேண்டும் அல்லது எவ்வளவு வரை நீரை தேக்கி வைத்திருக்கலாம் என்பதைத் துறைத் தலைவர்களாக இருக்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளால் கணிக்க இயலாது. பல ஆண்டு காலம் தொடர்ந்து அந்தந்தப் பகுதியிலேயே பணியாற்றி வரும் பொதுப்பணித் துறையின் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களால்தான் அதனைத் தீர்மானிக்க முடியும். அந்தந்தப் பகுதியில் பெய்யும் மழையின் அளவு, அணைக்கு வரும் நீர்வரத்து, அன்றைய நீர்மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அளவுக்கு நீரை அணையில் வைத்திருக்கலாம் மற்றும் எவ்வளவு உபரி நீரை வெளியேற்றலாம் என்பதை அவர்களால் தெளிவாகக் கணிக்க முடியும். இவ்வாறு அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்தும் நடைமுறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கிறது.
வெள்ள நீர் சூழ்ந்த மணப்பாக்கம் குடியிருப்பு பகுதி. | படம்: க.ஸ்ரீபரத்
ஆனால் அண்மைக் காலங்களில் இந்தப்போக்கு மாறியுள்ளது. சிறிய அணைகளில் கூட எவ்வளவு நீர் வெளியேற்ற வேண்டும் என்பதை உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பெற்றுச் செயல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மக்களுக்கு அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செம்பரம்பாக்கம் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு உபரி நீரைத் திறக்க வேண்டும் என்பது அணையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் பொறியாளர்களுக்கும், அங்குள்ள களப்பணியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்க நேர்ந்ததாலேயே முன்னதாகவே அதிக அளவில் உபரி நீரைத் திறக்காமல், திடீரெனப் பெருமளவு உபரி நீர் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படுவது உண்மையாக இருப்பின், சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு இவைதான் முக்கிய காரணம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
குடிநீருக்காக தேக்கப்பட்டதா?
சென்னையில் கடந்த ஜூன், ஜூலை தொடங்கி, நவம்பர் முதல் வாரம் வரை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. டிசம்பர் 1-ம் தேதி 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கும் மேல் இருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் நவம்பர் 1-ம் தேதி வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருந்தது. இதிலிருந்தே நவம்பர் முதல் வாரம் வரை எந்த அளவுக்குக் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சென்னைக்குக் குடிநீர் விநியோகம் செய்யச் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஒருகட்டத்தில் மழை வேண்டிப் பல கோயில்களில் வருணப் பகவானுக்குப் பூஜைகள் கூடச் செய்தனர்.
இந்தச் சூழலில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் தரும் ஏரிகளில் இருந்து அதிக அளவுக்கு உபரி நீரை வெளியேற்ற வேண்டாம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஒருவேளை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலக் கனமழை பெய்யாமல் போய்விட்டால், குடிநீருக் காகத் தேக்கி வைத்திருக்கும் பெருமளவு தண்ணீரை வீணாக்கி விடக் கூடாதே என்ற அச்சத்துடன் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அடுத்த நான்கைந்து மாதங்களில் வரப்போகும் சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது எனக் கருதி, அதிக அளவு உபரி நீரைத் தக்க சமயத்தில் வெளியேற்ற அதிகாரிகள் தயங்கினார்களா என்ற கேள்வியும் உள்ளது.
ஆக, காரணங்கள் எதுவாயினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் 29 ஆயிரம் கன அடி அளவுக்கு உபரி நீர் திறக்கப்பட்டது சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகி விட்டது.
நவம்பர் 17-ம் தேதி செம்பரம்பாக்கத் திலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டபோது அடையாற்றில் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் டிசம்பர் 1-ம் தேதி இரவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற ஏரிகளில் இருந்து அடையாற்றுக்கு சுமார் 40 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வந்து கொண்டிருந்த நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட 29 ஆயிரம் கன அடி உபரி நீரும் அதனுடன் சேர்ந்து கொண்டதால் பாதிப்புகள் அதிகமாயின.
ஆகவே, இனியாவது துல்லியமான நீர் மேலாண்மை என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதுவே எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளைக் குறைக்க உதவியாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Thursday, December 10, 2015

சுட்டி விகடன் - 15 Dec, 2015

"நான் சொன்னதும் மழை வந்துச்சா!"
தமிழ்நாட்டின்
ழைக்கு முன் மண் வாசனை வருதோ இல்லையோ... வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தொலைக்காட்சியில் வந்துவிடுவார். மழையால் விடுமுறையைக் கொண்டாடும் எங்களுக்கு, ரமணன் அங்கிள்தான்  சூப்பர் ஸ்டார். வட கிழக்குப் பருவ மழை கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த ஒரு நாள். சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வானிலை ஆய்வு மையத்துக்குப் படையெடுத்தோம். ‘வானிலையை எப்படி ஆராய்கிறார்கள்?’ என்பதை விஷூவலாகவே விளக்கிக் காட்டினார்கள் ஆய்வுமைய ஊழியர்கள். வானிலை ஆராய்ச்சிகளுக்குக் கணக்கிடப்படும் கருவிகளைக் காட்டியதோடு, செயல்முறை விளக்கமும் அளித்தார்கள். பிறகு, ரமணன் அங்கிளோடு நடந்த சந்திப்பில் நாங்கள் கேட்ட அடை மழைக் கேள்விகள்...
‘‘ஃபேஸ்புக்ல, வாட்ஸ்அப்ல உங்களைக் கிண்டல் பண்ணி போட்டோ போடுறது தெரியுமா அங்கிள்?’’
‘‘அது உங்க வரைக்கும் தெரிஞ்சுபோச்சா? ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதையுமே நான் பயன்படுத்துறது இல்லை. என்கூட வேலை பார்க்கிறவங்க சொல்வாங்க. நானும் ஜாலியா சிரிச்சுட்டு மறந்துடுவேன்.’’ 
‘‘வானிலை அறிக்கை என்றால் என்ன?’’
‘‘மழை பெய்யுறப்போ வெளியே எட்டிப்பார்த்து, ‘பெருசா மழை பெய்யுது’னு சொல்லலாம். அதையே ஆறேழு நாட்களுக்கு முன்னாடி சொல்வீங்களா? அப்படி மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கணிச்சுச் சொல்றதுதான் வானிலை அறிக்கை. செயற்கைக்கோள்கள், கருவிகள், கணக்குகள் அடிப்படையில் மழையைக் கணிச்சு சொல்லுவோம்.’’
‘‘சில சமயம் ‘கனமழை பெய்யும்’னு சொல்றீங்களே... மழைக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்?”
‘‘7செ.மீ அளவைவிட அதிகமா பெய்யுற மழையை கனமழைனு சொல்வோம். 13 செ.மீ அளவைவிட அதிகமா பெய்தால், அது மித கனமழை. 25 செ.மீ அளவைவிட அதிகமா பெய்தால், அது அதி கனமழை.’’
‘’இத்தனை செ.மீ மழை பெய்ததுனு  எப்படிக் கணக்கிடுறீங்க?”
‘‘நான் சொல்றதைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கோங்க. ஒரு சதுர கிலோமீட்டர் அளவுள்ள இடத்தில், ஒரு கோடி லிட்டர் தண்ணீர் கொட்டினா, தேங்கி இருக்கும் அந்தத் தண்ணீர்ல ஸ்கேலை வெச்சு அளந்துபார்த்தா, ஒரு செ.மீ அளவுக்கு இருக்கும். இதுவே, ஒரு செ.மீ கனமழை.’’
‘‘புயல் என்றால் என்ன?”
தண்ணி பள்ளத்தை நோக்கி ஓடுறமாதிரி, காற்று மேல்நோக்கி எழும்பும். ஈரமான காற்று மெள்ள மேலே எழும்பும். வெப்பமான காற்றாக இருந்தா, சீக்கிரமா மேலே போயிடும். இந்தக் காற்றின் நகர்வை, ‘சலனம்’னு சொல்வாங்க. மெள்ளப் போகிற ஈரக்காற்று ரொம்ப தூரத்துக்குப் போகாம, வானத்துலேயே தங்கும்போது, காற்றில் ஏற்படும் எதிர் சுழற்சிக்குப் (Anti clockvice) பெயர்தான் காற்றழுத்தத் தாழ்வு நிலை. இந்த நிலையில் காற்று சாதாரணமா 31 கி.மீ வேகத்தில் வீசும். அப்படி வீசாம, 61 கி.மீ வேகத்துக்கும் அதிகமா வீசினா அதுக்குப் பெயர்தான் புயல். கடும் புயல், மிகக் கடும்புயல்னு பல வகை இருக்கு.’’
‘‘புயல் உருவாவதை எப்படிக் கண்டுபிடிப்பீங்க?”
‘‘ ‘ஜெனிசிஸ் பொட்டென்ஷியல் பாராமீட்டர்’ங்கிற கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவோம். தமிழ்ல, ‘சாத்திய அலகு’னு சொல்லலாம். புயல் உருவாவதை முன்கூட்டியே கணிக்கும் கால்குலேஷன் இது. கடலின் வெப்பநிலை எப்படி இருக்கு? காற்று எந்தத் திசையில் வீசிக்கிட்டு இருக்கு? எந்தத் திசையில் வீசும் எனப் பல விஷயங்களைக் கணக்கிட்டு, ஏழெட்டு நாட்களுக்கு முன்னாடியே நமக்குக் காட்டும். அதைப் பார்த்துச் சொல்வோம்.’’
‘‘சில சமயம் மழை வரும்னு சொல்றீங்க. வெயில் அடிக்குது. வெயில் அடிக்கும்னு சொன்னா மழை பெய்யுதே அது ஏன்?”
‘‘நாம உட்கார்ந்துக்கிட்டு இருக்கிற இடத்துல இருந்து 36,000 கிலோ மீட்டருக்கு மேலே சுத்திக்கிட்டு இருக்கிற செயற்கைக்கோள்கள் அனுப்பும் சிக்னல்களின் அடிப்படையில் தகவல்களைத் திரட்டுவோம். அந்தத் தகவல்களின் அடிப்படையில், சில கணக்கு ஃபார்முலாவை அப்ளை பண்ணிப்பார்த்தோம்னா, ‘இந்தத் திசையில் புயல் வீசலாம். இந்த இடத்தில் கரையைக் கடக்கலாம்’னு முடிவு கிடைக்கும். ஆனா, கிடைக்கும் எல்லா முடிவுகளும் ஒரே மாதிரி இருக்காது. அதனால் சில கணிப்புகள் மாறும். பிறகு, கிட்டத்தட்ட ஒண்ணா இருக்கக்கூடிய முடிவுகளை மீண்டும் ஆராய்ச்சி பண்ணும்போது சரியான முடிவுகள் கிடைக்கும்.’’
‘‘கருமேகங்கள் என்றால் என்ன?”
‘‘மேகத்துல தண்ணீர் அதிகமா இருந்துச்சுனா, கறுப்பா தெரியும். அவ்வளவுதான். ‘நீருண்ட மேகங்கள்’னு அழகுத் தமிழ்ல சொல்லிக்கலாம்.’’
‘‘ஜோதிடத்தில் மழையை முன்கூட்டியே சொல்லியிருக்காங்கனு சொல்றாங்களே...’’
‘‘ஜோதிடத்தில் சொல்றதை உறுதிப்படுத்த முடியாது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல வர்ற செய்திகளை ஆராயாமல் நம்பக் கூடாது.’’
‘‘ எவ்வளவு செ.மீ அளவுக்கு மழை பெய்தால், பள்ளிகளுக்கு  விடுமுறை விடுவாங்க?’’
‘‘நானும் சின்ன வயசுல மழையினால் லீவு விட்டா ஜாலியா இருப்பேன். பள்ளிக்கு விடுமுறை விடுறது அரசாங்கம் எடுக்கிற முடிவு. ‘நாளைக்கு மழை வருமா?’னு மட்டும்தான் என்கிட்ட கேட்கணும். கொஞ்சம் விட்டா, நான்தான் மழையையே வரவைக்கிறதா சொல்லிடுவீங்களே’’ என ரமணன் அங்கிள் பதறி எழ, அரங்கம் முழுக்க இடிச் சிரிப்பு.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...