Monday, January 4, 2016

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது

சென்னை,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை

மத்திய கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அட்டவணை விவரம் வருமாறு:-

10-வது வகுப்பு தேர்வு

மார்ச் 1-ந் தேதி -பாதுகாப்பு, டைனமிக் ரீடெய்ல் உள்ளிட்ட தேர்வுகள்

2-ந் தேதி -அறிவியல்

3-ந் தேதி -தெலுங்கு, பிரெஞ்சு

5-ந் தேதி -ஓவியம்,

8-ந் தேதி -தமிழ்

10-ந் தேதி - சமூகஅறிவியல்

12-ந் தேதி - மனைஅறிவியல்

15-ந் தேதி -ஆங்கிலம்

19-ந் தேதி -கணிதம்

22-ந் தேதி -தட்டச்சு

28-ந் தேதி -ரஷ்ய மொழித்தேர்வு

12-வது வகுப்பு தேர்வு

மார்ச் 1-ந்தேதி-ஆங்கிலம்

5-ந் தேதி - இயற்பியல்

8-ந் தேதி -வரலாறு

9-ந் தேதி- வேதியியல்

11-ந் தேதி- தமிழ்

12-ந் தேதி -என்ஜினீயரிங் கிராபிக்ஸ்

14-ந் தேதி - கணிதம், மைக்ரோ பயாலஜி

17-ந் தேதி - அக்கவுண்டன்சி

18-ந் தேதி -அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல்

19-ந் தேதி -விவசாயம்

21-ந் தேதி -உயிரியல்

26-ந் தேதி-

கம்ப்யூட்டர் சயின்ஸ்

28-ந் தேதி- உடற்கல்வி

31-ந்தேதி-பொருளாதாரம்

ஏப்ரல் 2-ந் தேதி

- உளவியல்

4-ந் தேதி- சமூகவியல்

7-ந் தேதி - புவியியல்

12-ந் தேதி

- மனை அறிவியல்

16-ந் தேதி -தத்துவ இயல்

22-ந்தேதி-என்.சி.சி.தேர்வு

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி,

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரோக்கர்-ஆசிரியர் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 37). பிளஸ்-2 படித்துள்ள இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே எர்ரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். இவர் போலி சான்றிதழ் மூலமாக ஆசிரியர் பணிக்கு சேர்ந்ததாக வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முனியப்பன், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்ற புரோக்கரை சந்தித்ததும், அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரின் பெயரில் ஆசிரியர் பயிற்சி முடித்ததைபோல ஒரு போலி சான்றிதழ் தயாரித்து முனியப்பனை அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர்த்து விட்டதும் தெரியவந்தது. முதலில் நாமக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்த முனியப்பன், பிறகு வேலூர் மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆனார். இதையடுத்து முனியப்பன், புரோக்கர் ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலி சான்றிதழ்

இந்நிலையில் புரோக்கர் ராஜேந்திரன் மூலமாக போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக மேலும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் விவரம் வருமாறு:-

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பி.செந்தில்குமார். இவர் கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியாற்றி வருவதாக வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணி பதிவேடு மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த செந்தில்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கூச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர். கிருபா என்ற பெயரில் ஆதிதிராவிடர் என்று போலி சான்றிதழ் பெற்று சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியராக செந்தில்குமார் பணியில் சேர்ந்து, பிறகு மாறுதல் ஆகி தற்போது வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

விசாரணையில் அனைத்து சான்றிதழ்களும் புரோக்கர் ராஜேந்திரன் வழங்கியதும், அந்த சான்றுகள் வேறொருவருடையது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த செந்தில்குமாரை (37) போலீசார் நேற்று கைது செய்தனர். போலி சான்றிதழ் வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான செந்தில்குமார், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதாகி உள்ள 3 பேருக்கும் மேலும் சில மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தடையற்ற சான்றிதழ் கேட்ட பி.எட். கல்வி நிறுவனங்களின் விண்ணப்பம் மீது 4 வாரத்துக்குள் முடிவு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு


logo

சென்னை,

தடையற்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள பி.எட். கல்வி நிறுவனங்களின் விண்ணப்பம் மீது 4 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பம்

வேலூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளை, கே.டி. கல்வி அறக்கட்டளை, மதுரையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள், பி.எட். கல்வி தொடங்குவதற்காக அனுமதி கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திடம் விண்ணப்பித்தன.

இந்த நிலையில் அந்த கல்வி அறக்கட்டளைகளுக்கு கல்விக் குழுமத்தின் தென் மண்டல இயக்குனர் ஒரு நோட்டீசு அனுப்பினார். அதில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தடையற்ற சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்காததால், ஏன் உங்கள் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

கல்வி விதிகள்

இந்த நோட்டீசை எதிர்த்து 3 கல்வி அறக்கட்டளைகளும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தன. தடையற்ற சான்றிதழ் இல்லாமலேயே அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அவை கோரின.

இந்த வழக்கை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கல்வி விதிகளின்படி விண்ணப்பத்தோடு தடையற்ற சான்றிதழ் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வாரங்களுக்குள்

ஆனால் 3 கல்வி நிறுவனங்களும் நோட்டீசை பெற்றுக் கொண்டு அதற்கு பதில் சொல்லவில்லை. மாறாக, அந்த நடவடிக்கையை செல்லத் தகாததாக செய்வதற்காக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்த நோட்டீசுக்கு பதிலளிக்க கல்வி அறக்கட்டளைகளுக்கு 2 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுபோல தடையற்ற சான்றிதழ் கேட்டு கல்வி அறக்கட்டளைகள் கொடுத்துள்ள விண்ணப்பங்களை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் இன்னும் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு பிரதமரின் பரிசு

logo

பொதுவாக புத்தாண்டு தினத்தன்று எல்லோரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள். சிலர் புத்தாண்டு பரிசுகளை வழங்குவார்கள். ஆனால், இந்த 2016–ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்தாகவும், பரிசாகவும் இந்திய நாட்டு இளைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல அறிவிப்பை அதாவது, இனி மத்திய அரசாங்க குரூப்–3 மற்றும் குரூப்–4 பணிகளுக்கு இண்டர்வியூ என்று சொல்லப்படும் நேர்முகத்தேர்வு கிடையாது. அவர்கள் இனி தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருக்கிறார். அதாவது, அவர்கள் படித்த படிப்பின் இறுதித்தேர்வில் பெற்ற மார்க்குகள் மற்றும் எழுத்துத்தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த முடிவுக்கான ஒரு அடிப்படைக்கருத்தையும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார். இண்டர்வியூ என்றாலே பிரபலமானவர்களின் சிபாரிசு என்பதுதான் பொருள் என்று அனைவருக்கும் தெரியும். வலுவான பரிந்துரை இல்லாவிட்டால் தகுதி இருப்பவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது. இதனால்தான் குரூப்–3 மற்றும் குரூப்–4 பிரிவுக்கான பணிதேர்வுகளுக்கு இண்டர்வியூ வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

ஒருவர் தகுதி படைத்தவர் என்றால், அவருக்கு வேலை நியமனத்துக்கான உத்தரவு வீடு தேடி வரும். ஊழலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை இது. இந்த புதியமுறை ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது மத்திய அரசாங்க பணிகளோடு நின்று விடக்கூடாது, மாநில அரசுகளும் நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றாத இண்டர்வியூ முறையில் இருந்து வெளிவர வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். குரூப்–3 மற்றும் குரூப்–4 என்பது இளநிலைப்பணிகள்தான். இந்த பணிகளுக்குத்தான் ஏராளமானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்குமேல் உள்ள பணிகள் அதிகாரிகள் பணிகள். எனவே, இந்த குரூப்–3, குரூப்–4 பணிகளுக்குத்தான் இளைஞர்கள் கூட்டம் அலைமோதும். புதுமை இந்தியாவை படைக்கப் போகும் நுழைவு வாயில் இந்த பணிகள்தான்.

பள்ளிக்கூட படிப்பு காலத்தில் இருந்தே நான் படித்து முடித்தவுடன், இந்த வேலைக்குத்தான் போவேன் என்று ஒரு இலக்கோடு மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடருவார்கள். அப்போது தொடங்கி கல்லூரி படிப்பை முடிக்கும்வரை அந்த லட்சியத்தோடு இரவு–பகலாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். படித்து முடித்து வேலைக்கு முயற்சிக்கும் போது, தகுதியுள்ளவனுக்கு வேலை கிடைக்காமல் பணம் கொடுத்து, சிபாரிசு பெற்று தகுதி இல்லாதவன் அந்த பணிக்கு தேர்வானால், அறிவாற்றல் மிக்க இளைஞர்கள் சோர்ந்து போய் விடுவார்கள். தகுதியற்றவனுக்கு வேலை என்பதோடு முடிந்து விடுவது இல்லை. பணம் கொடுக்க வசதி உள்ளவனுக்கே வேலை என்று வேலைவாய்ப்புகள் விலை பேசப்பட்டால், அரசு நிர்வாகத்தில் ஆற்றல் இல்லாமல் போய்விடும். இதுமட்டுமல்லாமல், பணம் கொடுத்து வேலைக்கு சேருபவன் கை சும்மா இருக்காது. வேலைக்கு சேர்ந்த நாள் முதல் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வரை அவன் லஞ்சம் வாங்கிக் கொண்டே இருப்பான். அவனால் அவன் பணியாற்றும் அலுவலகமே ஊழலின் ஊற்றுக்கண்ணாகி விடும். அந்த வகையில், தகுதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள இளைஞர் சமுதாயமும், அரசு நிர்வாகத்தில் ஊழல் இருக்கக் கூடாது என்று லஞ்சத்தை எதிர்ப்போரும் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறார்கள். ஆனால், வெறும் மதிப்பெண்கள் மூலமும், எழுத்துத்தேர்வு மூலமும் ஒருவரது திறனாய்வை, உடனடி முடிவெடுக்கும் ஆற்றலை, நடத்தையை, தோற்றத்தை, உடல் திறனை கண்டுபிடிக்க முடியாதே என்று சொல்வோரும் உண்டு. ஆனால், ஒவ்வொரு பணியிலும் தகுதி காண்பருவம் என்று அதிகபட்சம் 2 ஆண்டுகள் உண்டு. அந்த காலகட்டத்தில் ஒருவரது பணி நிறைவளிக்க வில்லையென்றால், அவரை நிறுத்திவிட முடியும். எனவே, இந்த புதியமுறை பலனளிக்கக்கூடியதே, இதன் வெற்றியைப் பார்த்து மாநில அரசு பணிகளிலும் பிரதமர் வேண்டுகோளின்படி நடைமுறைப்படுத்த வேண்டும்.

Saturday, January 2, 2016

புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமிதரிசனம்



புத்தாண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சிறப்பு வழிபாடு

திருவாரூரில் உள்ள புகழ் பெற்ற தியாகராஜ சாமி கோவிலில் நேற்று புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல காகிதகாரத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவில், கீழவீதியில் பழனியாண்டவர் கோவில், துர்வாசகர் கோவில் அமைந்துள்ள பாலஅய்யப்பன் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், சர்க்கரை விநாயகர் கோவில், காட்டூர் கீழத்தெரு மகா காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டு வழிபாடு நடந்தது. காலை முதல் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

பாத்திமா அன்னை ஆலயம் 

திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புத்தாண்டு தொடக்கத்தையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் பொதுமக்கள் வெடி, வெடித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

நீடாமங்கலம் 

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற சிறப்புடையது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. 

இதை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், கெஜலெட்சுமி சன்னதிகளில் வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டிருந்தது. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல்அலுவலருமான சாத்தையா, அறநிலைய உதவி ஆணையரும், கோவில் தக்காருமான சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளி உள்ள சங்கடஹர மங்கள மாருதி 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், குழந்தை பாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் புத்தாண்டு விழா மகிழ்ச்சியுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

ஏப்ரல் 1–ந் தேதி முதல் மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு


ஏப்ரல் 1–ந் தேதி முதல் மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு


புதுடெல்லி,

சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியம் நேரடியாக நுகர்வோர் வங்கி கணக்குக்கு செலுத்தும் திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மண்ணெண்ணெய் மானியமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.

இந்த திட்டத்தை சில வடமாநிலங்கள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் செயல்படுத்த முன்வந்துள்ளன. அந்த பகுதிகளில் ஏப்ரல் 1–ந் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் அந்த பகுதிகளில் நுகர்வோர் வெளிமார்க்கெட் விலைக்கு ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்க வேண்டும். அதற்கான மானியம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்

logo

இந்தியா பண்டைய காலத்தில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கியிருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு, வடக்கே நாளந்தா பல்கலைக்கழகமும், தமிழ்நாட்டில் காஞ்சி பல்கலைக்கழகமும்தான். கி.பி. 5–ம் நூற்றாண்டில் இருந்து 12–13–ம் நூற்றாண்டுவரை நாளந்தா பல்கலைக்கழகம் பிரமாண்டமாக இயங்கியதற்கு சரித்திரச்சான்றுகள் இருக்கின்றன. இங்கு வெளிநாடுகளில் இருந்து எண்ணற்றோர் படிக்க வந்திருக்கிறார்கள். இதுபோல, காஞ்சீபுரத்தில் அதே காலகட்டங்களில் பல்கலைக்கழகம் இயங்கியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்படி கல்வியில் சிறந்து விளங்கிய இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க, வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் படையெடுத்து வந்த காலம் போய், இப்போது நிறைய மாணவர்கள் சிறந்த கல்வியை நாடி வெளிநாடுகளுக்கு அலை, அலையாய் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற தகவல், மத்திய–மாநில அரசுகளைத் தட்டியெழுப்பும் தகவலாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச கல்வி நிறுவனம், சர்வதேச கல்வி பரிமாற்றம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2014–15–ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கு படிக்க வந்த வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள் கூடுதலாக வந்த சதவீதம்தான் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கவந்த மாணவர்களின் எண்ணிக்கையைவிட, 29.4 சதவீதம் அதிகமாக வந்திருக்கிறார்கள்.

இந்த கணக்குப்படி, இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 888 மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில், 80 சதவீத மாணவர்கள் என்ஜினீயரிங், கணக்கு, கம்ப்யூட்டர் அறிவியல், வர்த்தக படிப்புகளைப் படிக்கவே சென்று இருக்கிறார்கள். அங்கு மட்டுமல்ல, ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளுக்கு படிக்கச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேப்போகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுக்கு படிக்கவரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பாக அண்டை நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. காரணம், கல்வித்தரம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்ற எண்ணம் வளர்வதாகும். வசதி படைத்தவர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமல்லாமல், வசதி இல்லாதவர்கள்கூட வங்கிக்கடனை பெற்று வெளிநாடுகளுக்கு படிக்கச்சென்றுவிடுகிறார்கள். சிறந்த கல்விக்கும், நல்ல வேலைவாய்ப்பு தரும் செயல்முறை பயிற்சிக்கும் வெளிநாடுகளில் சீரிய வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்கள்.

இந்த நிலையில், உடனடியாக உயர்கல்வியில் மேலான மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியில் இன்னும் தீவிரமாக மத்திய–மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். இந்தியாவில் 1992–ல்தான் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, இப்போதுதான் புதிய கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. உலகம் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டாலும், நமது கல்விக்கொள்கை மட்டும் மாற்றம் காணாமல் இருப்பது சரியல்ல. சர்வதேசதரத்துக்கு இணையான பாடத்திட்டங்களை இணைக்கும் வகையில், கல்லூரிப்படிப்பு இருக்கவேண்டும்.

ஒருகாலத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நான் மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவன் என்று சொன்னால் தனி மதிப்பு இருக்கும் என்பார்கள். அத்தகைய நிலை மீண்டும் தோன்றவேண்டும். சர்வதேச அளவில் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்கூட இல்லை என்பது வெட்கித்தலைகுனிய வைக்கிறது. அதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முதல் கல்லூரிகளில் உள்ள சோதனைக்கூட அட்டெண்டர்கள் நியமனம்வரை லஞ்சம் இல்லாத நியமனங்களாக, தகுதிபடைத்தவர்களாக நியமிக்கப்பட்டால், கல்வி நிச்சயமாக வளரும்.

தகுதிபடைத்த ஆசிரியர்கள், தரமான கல்வி என்றால் போதும், வெளிநாட்டுக் கல்வி இங்கேயே கிடைத்துவிடும். உயர்கல்விகளில் சிறந்த கல்வியாளர்கள் வேண்டும். கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தன்னாட்சி கொண்டதாக இருந்தால் நல்லது. புதிய கல்விக்கொள்கை இதையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

NEWS TODAY 21.12.2025